ஒவ்வொரு முறை பெண்ணுரிமை குறித்து எழுதும்போதும், ‘ஏன் ஆண்களைத் திட்டுகிறீர்கள்? பெண்ணுக்குப் பெண்ணே தான் எதிரி!’ என்ற அர்த்தத்தில் நிறைய எதிர்வினைகளை எதிர்கொள்கிறேன். இதன் பின்னணியில் இருக்கும் அதிகாரக் கட்டமைப்பையும் பெண்களுக்கெதிரான சூழ்ச்சிகளையும் புரிந்துகொண்டால் உண்மையில் மாமியார் என்பவர் யார் என்பதும் அவர் ஒரு பெண்ணாக இருந்தபோதும் ஆணாதிக்கச் சமூகத்தில் என்ன விதமான அதிகாரப்பங்கை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதும் விளங்கும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய இளம் வயதிலிருந்தே திருமணம் தான் அவள் வாழ்க்கையின் இலக்கு என்று சொல்லி வளர்க்கப்படுகிறது. அதற்கான தயாரிப்புகள் அவள் சூழலிலும் அவள் மனநிலையிலும் அவள் வளர்க்கப்படும் விதத்திலும் வெகுவாகத் திணிக்கப்பட்டு அல்லது ஏற்கெனவே சமூகம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டு அவள் எப்பொழுதும் அதற்கான காத்திருப்பில் வைத்திருக்கப்படுகிறாள். உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய சமூக உரிமைகளைப் பெற்றாலும் முன்குறிப்பிட்ட அந்த இலக்கு மாறப் போவதில்லை என்பது அவளின் மனதிலும் அவளின் சகோதர சகோதரிகள் உற்றார் உறவினர் எல்லோரின் மனதின் அடியாழத்திலும் பதிந்திருக்கின்றன. ஒரு பெண் எப்பொழுதுமே ஒரு தொட்டிச்செடியாக வளர்க்கப்படுகிறாள் என்று நான் கூறுவதுண்டு. வாழ்க்கையின் முன்பகுதியில் இன்னொரு வீட்டில் வாழச்செல்பவள் என்பதற்காய் தொட்டிச் செடியாக மாற்றப்பட்டவள். அவ்வாறே அவள் திருமணத்திற்குப் பின் கடத்தப்படுவதற்கு வசதியான தொட்டிச்செடி. என்றாலும் கணவரின் வீட்டிலும் அவள் வேர்விட முடியாத இன்னொரு வீட்டிலுருந்து வந்த ‘தொட்டிச் செடி’ .
மாமியாருக்கு வருவோம். மாமியார், தனது மகனின் மனைவியாக ஏற்றுக்கொண்ட பெண்ணிடம் ஒரு வித சந்தேகத்துடன் தான் அணுகுகிறாள். ஏற்கெனவே மாமியார் என்றான பெண் தன் குடும்பத்திற்கான அமைப்பில் வேறு இடத்திலிருந்து தொட்டிச்செடியாக வந்தவள். அவளுக்கு தன் கணவர் இன்ன பிற உறவினரிடம் இருந்து தன் நிலைக்கான உறுதித்தன்மையைப் பெற மிகவும் போராட வேண்டியிருந்தது. கணவரின் அதிகார ஆதிக்கத்தில் தன் சுயத்தை இழந்தவள், தன் மகனின் வரவாலும் அவன் மீது செலுத்தும் இடையறா அன்பாலும் தன் இருப்பை நெருக்கடிக்கிடையே சாத்தியப்படுத்திக் கொண்டவள். அந்த மகனின் திருமணத்தின் வழியாக உள்ளே நுழைந்த இன்னொரு தொட்டிச் செடியான மருமகளை அவள் அச்சுறுத்தும் சக்தியாகப் பார்க்கிறாள். மகனுக்கு எல்லாமும் தன்னிடமிருந்தே அளிக்கப்பட்டாலும் மனைவியிடம் அவன் பகிர்ந்து கொள்ளும் காதலும் காமமும் கலந்த உறவு அவளுக்கு தன் இருப்பில் நிலைகுலைவை ஏற்படுத்துகின்றன. ஆகவே மாமியார்கள் எச்சரிக்கையாகிறார்கள். தாங்கள் ஏற்கெனவே பாதுகாத்துவைத்திருந்த சொற்ப அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் புதிய தொட்டிச் செடியின் மீது வெந்நீராய் ஊற்றி இயக்கத்தொடங்குகின்றனர்.
ஆனால் இது முழுக்க முழுக்க பெண்களாலேயே நிகழ்வதில்லை. மேலே குறிப்பிட்டவாறான பெண்ணசைவு என்பது ஆணின் அதிகார நுகர்ச்சிக்காவும் பயன்பாட்டுக்குமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறந்த வீட்டில் பெண், கணவரின் வீட்டில் பெண், தன் மகனுக்குத் திருமணமான பின்பான பெண் என்ற மூன்று நிலைகளிலும் பெண் தற்காலிக பாதுகாப்புணர்வாலும் பதற்றத்தாலும் மட்டுமே தன் சுயத்தைப் பேணக்கூடியவளாக வைத்திருக்கப்படுகிறாள். ஒரு மண்ணில் காலூன்றி வேர்விடுவதற்கான வாய்ப்பு எப்பொழுதுமே அவள் வாழ்வு முழுக்க பெண்ணுக்கு வழங்கப்படுவதே இல்லை. பிறந்த வீட்டின் அதிகாரம் தந்தையையும் சகோதரர்களையும் தலைமையாகக் கொண்டது. கணவன் வீட்டிலும் இதே நிலை தான். இந்நிலையில் மாமியாரும் மருமகள் என்றானவளும் ஆணின் அதிகார ஆதிக்கத்துடன் போராட இயலாமல் தங்களின் இருப்பு சார்ந்த அதிகாரத்திற்கே போட்டியிடுபவர்களாக மாற்றப்படுகின்றனர். இதன் பின்னால் இருக்கும் இன்னொரு சூழ்ச்சி, தங்களுடையதான இருப்பை நிலைப்படுத்தும் போராட்டத்தில் ஆண்களின் அதிகாரத் தகர்ப்பைச் செயல்படுத்த முடியாமல் போகின்றனர் இரு வகையான பெண்களும்.
‘தாயா தாரமா?’ என்ற கேள்வியுடன் இன்றும் பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. மாமியார் – மருமகள் பற்றிய நகைச்சுவைகள் மின்னணுக்களாகவும் மாறிவிட்டன. மிகவும் வேதனைக்குரியது. தாயும் தாரமும் வேறுவேறு பண்புகளை வேறுபட்ட சமூக நிலைகளில் எடுக்கும் பெண்கள். ஒரே பண்புடைய இரண்டினை ஒப்பு நோக்கலாம். இவ்விருவரையும் சமூகத்தின் தராசுத்தட்டில் நிறுத்துப் பார்ப்பது அபத்தம். மாமியாரும் மருமகளும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் அவசியமில்லை. தங்கள் தங்கள் தொட்டிகளிலிருந்து இறங்கி வந்து நிலத்தில் காலூன்றி நிற்பதே குடும்ப அமைப்பின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்கான விடுதலை உனர்வின் முதல்கட்டமாக இருக்க முடியும்!
குட்டி ரேவதி
3 கருத்துகள்:
மாமியார்,மருமகள் என்று நமது வாதம் விரிந்துவிட்டால் அதுவே பெரிய அபத்தம். சில வீடுகளில் ஆண்களை வெறும் பணம் எடுக்க உபயோகிக்கும் அட்டையாய் நினைத்து அவர்களை அம்மாவும்,மனைவியும் படுத்தி ஆணின் நிம்மதியைப் பறித்து அலையவிட்டு அதைப்பார்க்கும் மற்றவர்கள், திருமணம் புதைகுழி என்று பயந்து ஓடும் நிலை இருக்கிறது.சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் பெண்கள் - கல்வி,பொருளாதார விடுதலையற்று சுரண்டல்களைக்கூட அறியாத,கேளிகள் புரியாத பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் தான் பரிதாபத்திற்குரியவர்கள்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் சாந்தி லெட்சுமணன் சொல்வது போல தற்காலத்தில் பல இடங்களில் ஆண்களின் நிலையும் பரிதாபத்திற்குரியது தான் என்பதில் சந்தேகம் இல்லை. கணவன் மனைவி குழந்தை என இருக்கும் பல இடங்களில் மனைவின் சொல்லே முதன்மையானதாக பல இடங்களில் இருக்கிறது. கணவன் சம்பாதித்துவந்தாலும் கூட மனைவியின் அதிகாரமே ஓங்கியிருக்கிறது என்பது கண்கூடு. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது பல ஆண்கள் இதுபோன்ற பெண்களின் ஆளுமையை விரும்புகிறார்கள் என்பதுதான்.
பெண்களின் ஆளுமையை ஆண்கள் விரும்புகிறார்கள் என்றால் அது இயல்பானது. எனெனில் ஆட்சி என்பது பெண்களுடையதே.
ஆனால் மாமியார, மருமகளா யார் ஆட்சி என்பதே பிரச்சன்னை. இதை சற்று உற்று நேக்கினால் புரிந்துகொள்ளலாம்.
கருத்துரையிடுக