நம் குரல்

நண்பர்களே, நாம் யாராகவும் இருந்துவிட்டுப்போவோம்.







ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, பணக்காரனாகவோ, ஏழையாகவோ, எழுத்தாளனாகவோ, எழுத்தாளரை வெறுப்பவராகவோ, அரசியல்வாதியாகவோ, அரசியலை எள்ளல்செய்பவராகவோ, நடிகராகவோ அல்லது நடிக்கவராதவராகவோ, கலைஞராகவோ கலைபால் எந்த மரியாதையும் அற்றவராக எவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போவோம்.

இந்தக்காட்சியும் அவலமும் இனியும் தொடராமல் இருக்க என்னசெய்யவேண்டுமோ அதை நோக்கிச் செயல்படுவோம். 

ஏனெனில், நாம் ஒட்டுமொத்தமாக எல்லோரும் வன்முறையிலிருந்தும் ஒடுக்குமுறையிலும் இருந்து விடுபடும் வரை, தனிமனிதர் எவரும் விடுதலையாக வாழ்வது என்பது அர்த்தம் ஆகவே ஆகாது! அது சாத்தியமும் இல்லை! 

ஒட்டுமொத்த மனித இனம், சாதி வெறியிலிருந்து விடுதலை பெறாதவரை, தனிமனித விடுதலை என்பதும், தனிமனித வாழ்வு என்பதும் போலியானது, மாயையானது!



குட்டி ரேவதி

பனிக்குடம் பதிப்பகமும் நூறு பெண்ணியநூல்களும்!





தமிழ்நவீன இலக்கியத்தின், தொடக்கக்காலத்தில் பெண் எழுத்திற்கு இருந்த எதிர்ப்பும் காழ்ப்பும் கடுமையானது. இன்றும் நிலைமை முற்றிலும் மாறவில்லை என்றாலும், முன்பு இருந்த அளவிற்கு மோசமாக இல்லை.

தமிழகத்தின் சமூக, அரசியல் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு பெண்ணியத்தையும், பெண்ணுரிமையையும் அணுக ஒரு பதிப்பகமும், நூறு பெண்ணிய நூல்களும் என்ற திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் என்று உணர்ந்தபொழுது தான் பனிக்குடம் பதிப்பகம் உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற மிதிலாவும் நந்தமிழ் நங்கையும் இணைந்து செயல்பட்டனர்.

பதிப்பகத்தின் முக்கியமான படைப்புகளாக உருவானவை, தமிழ்நதியின் சூரியன் தனித்தலையும் பகல் என்ற கவிதைத்தொகுப்பு மற்றும் பஹீமா ஜஹான் மற்றும் அனார் போன்ற பெண் ஆளுமைகளின் கவிதைத்தொகுப்புகளும் தொடர்ந்து அவர்களின் படைப்புச்செயல்பாடுகளும். இவர்கள் தம் மொழியாலும் கவிதையின் வீர்யத்தாலும் மொழிநடையின் போக்கை உண்மையாகவே மாற்றினார்கள். தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். 

எமிலி டிக்கின்சன் கவிதை நூலும் வெளிவந்தது. சாதி, பெண், உடல் மூன்றையும் இணைத்துப் புரிந்துகொள்ளும் கருத்தாகச் சிந்தனை குறித்த 'உடலரசியல்' என்ற நூல் சிவகாமி அவர்களால் எழுதப்பட்டது. 

பட்டியலில் இருந்த பிற நூல்கள்:

சிமோன் தி போவாவின், இரண்டாம் பாலினம் என்ற நூலின் முழு மொழிபெயர்ப்பையும் கொண்டு வருவதாக இருந்தது. மொழிபெயர்ப்பு நிறைவை எய்தி தயாராக இருந்தது.

சில்வியா ப்ளாத்தின் கவிதைகள் மொழி பெயர்ப்பு நூல்.

சர்மிளா ரேகே மற்றும் உமா சக்ரவர்த்தி போன்ற பெண்ணியலாளர்கள் எழுதியுள்ள இந்தியப்பெண்ணியம் குறித்த நூல்கள்.

லாரா முல்வியின் பெண்ணிய திரைக்கருத்தாக்கம் குறித்த நூல்.

பெண்களின் நாட்டுப்புறப்படைப்பாற்றல் குறித்த நூல்.

சாவித்ரி பாய் பூலேவின் செயல்பணி குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்.

இந்தியப்பெண்களுக்கு சாதி இல்லை, அது ஆண்களால் தரப்பட்டது என்பதை உணர்த்தும் அறிவியல் பூர்வமான முழுமையான ஆய்வு நூல்.

பழங்குடிப்பெண்களிடம் காணப்படும் பெண் உடல் பற்றிய சிந்தனையும், மண்ணுரிமை நம்பிக்கைகளும்.

என்றாலும், 'பனிக்குடம்' பதிப்பகத்தின் திட்டம் என்பது, அடிப்படையில் தொடர்ந்து பெண்ணிய நூல்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பது. 

காலந்தோறும் பரிணாமம் பெறும் கருத்தாக்கச்சிந்தனைகளுக்கு ஏற்ற நூல்களைப் பதிப்பதன் வழி, பெண்ணியச் சிந்தனையை இலக்கியவெளியிலும் சமூக வெளியிலும் கொஞ்சம் கொஞ்சமாக, அதே சமயம் நிலையான தீவிரத்துடன் ஏற்படுத்த முடிவதற்கான நம்பிக்கையை விதைப்பதே. அதே சமயம் நிலையான தீவிரத்துடன் பெண்ணியச்சிந்தனை வெளியை உருவாக்கமுடியும்.

இன்றும் அந்த இடம் வெற்றிடமாகவே உள்ளது. இன்றும் பதிப்பாளர்களுக்கு, பெண் இலக்கியவாதிகளை, படைப்பாளிகளை நல்ல சன்மானம் கொடுத்து படைப்புகளை வாங்கிப் பதிப்பிக்கும் துணிவில்லை என்று தான் சொல்லவேண்டும். இதற்குக் காரணம், ஒருவேளை, சுயபாதுகாப்பின்மை உணர்வோ என்று கூடத் தோன்றும்.

உண்மையிலேயே, பெரியார் தன் நூல்கள் வழியாகச் செய்தது போல பெண்ணியம் தொடர்ந்து எழுதப்படுவதும், பதிப்பிக்கப்படுவதும், பரப்பப்படுவதும் ஒரு பதிப்பகத்தின் தேவையைக் கோரும் அளவிற்குப் பிரமாண்டமானது. 

ஒட்டுமொத்த பெண் எழுத்தாளர்களையும் நல்ல சன்மானம் கொடுத்து அவர்களின் படைப்பாற்றலை சமூகத்திற்குப் பயன்படுத்துக்கொள்ளும் வழியும் இருக்கிறது. மேலை நாடுகள் இவ்விடயத்தில் பெருமளவு முன்னேறியிருக்கிறார்கள்.

ஒரு நல்ல பதிப்பாசிரியர், இதன் பொருள் உணர்ந்த பதிப்பாசிரியர், முதலீடு செய்யக்கூடிய பதிப்பாசிரியர் மிகுந்த தனித்துவமும் வேகமும் கொண்டியங்கக்கூடிய பதிப்பகம் ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்தலாம்.

ஏனெனில், இன்றும் தொடக்க நிலையிலே இருக்கும் பெண்ணியப்பிரச்சனைகள், சாதிய பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் நாளொரு வண்ணத்துடன் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தடுத்து நிறுத்த, விழிப்புணர்வை ஏற்படுத்த 'புற்றீசல்கள் போல' நூல்களே தேவை.

அந்த இடம் வெற்றிடமாகவே உள்ளது.

குட்டி ரேவதி

அம்மன் படங்களும் அம்பேத்கரும்


சத்யஜித் ரே, இந்திய சினிமாவின் தந்தை என்று உணரப்பட்டவர். கலாப்பூர்வமான வெளிப்பாட்டைக் கொண்டவர் என்று கொண்டாடப்பட்டவர். இன்றும் அவரது பெண் கதாபாத்திரங்களின் ஆளுமையும் நேர்த்தியும் ஒரு முழுக்கதையையும் கற்பனையையும் விரித்துக்கொடுக்கப் போதுமானவையாக இருக்கின்றன.

பெண்களைப் பற்றிய இந்திய படங்கள் பெரும்பாலும் அபத்தமான முதிர்ச்சியை அடையாளமாக்கி வசூல் செய்துவிடும். தமிழ்நாட்டின் அம்மன் படங்களுக்கு விசித்திரமான குணநலன்களும், தாலியை இறுக்கமாகக் காப்பாற்றிக்கொள்ளும் வித்தைகளைக் கற்றுக்கொடுக்கும் பாடங்களும் உடையவை.

சத்யஜித் ரேயின் "தேவி"யில், இந்தப்பெண்ணுக்குத் தெய்வத்தின் அருள் உள்ளது போல கனவு கண்ட அவளுடைய மாமனார் அவளைத் தெய்வமாக்கி, ஊரில் எல்லோரையும் அவளை வணங்க வைக்கிறார். வெளியூர் சென்ற கணவன் அறிந்து அவளை இந்தச்சிக்கலிலிருந்து மீட்க நினைக்கிறான். ஆனால், அதற்குள், தேவி தான் தெய்வமில்லை; சாதாரணபெண் தான் என்ற நம்பிக்கைக்கும், இல்லை இல்லை தான் தெய்வசக்தி படைத்தவள் என்ற நம்பிக்கைக்கும் இடையில் சிக்கி இரட்டை மனநிலைகளை அடைகிறாள். ஊரில் உள்ள நோயுற்ற குழந்தையை அவள் காப்பாற்றுவதாக ஊர்மக்கள் நம்பிக்கொண்டிருக்கையில், அவளுடைய உறவினர் குழந்தையையே காப்பாற்ற முடியாமல் போகிறது. இதனால், அவள் புத்தி பேதலிக்கிறது. இந்த இரட்டைத்தன்மை, அவள் சிந்தனையின் தெளிவைக் கிழிக்கிறது.

ஒரு சமூக அக்கறையுள்ள படம் தான். உயர்சாதி ஆண்கள் எந்த அளவிற்கு மூடநம்பிக்கையும், அதன் பெயரால், பெண்களைத் தெய்வநிலைக்கு உயர்த்துவதாக எண்ணி, தெய்வநிலையை உயர்ந்தநிலை என்றெண்ணி வாழ்ந்தார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சொல்கிறது. இதனால், உரிமையான வாழ்வும் இயல்பான ஆசைகளும் எண்ணங்களும் மறுக்கப்பட்ட பெண்கள் எத்தகைய மனச்சித்ரவதைக்கு ஆளானார்கள் என்பதையும் உணரமுடிகிறது.

தமிழின் அம்மன் படங்கள் இந்த நிலையைப்பேசுவதில்லை. கண்மூடித்தனமான தாலி நம்பிக்கைகள் அதிலும், கணவனின் உயிர்க்கயிறு தன் கழுத்தில் தொங்குவதான அபத்தங்கள் கற்பிக்கப்படும் கலைப்படைப்புகளாகத்தான் தமிழ் அம்மன் படங்கள் இருக்கின்றன. இதில் பெண்கள் கையாளும் கொடுமையான விரதமும், தன்னைத் தானே வருத்திக்கொள்ளுதலும் எந்த அளவுக்கு பெண்களுக்கு உடல் நல ஆரோக்கியத்தைக் கெடுத்துள்ளது, வாழ்க்கையைச் சீர்குலைத்துள்ளது என்பது நாம் விவாதிக்கவேண்டியது. ஆனால், இவ்விடத்தில் நாட்டுப்புறப்பெண் கதையாடல்கள் விடுபட்ட ஒன்றாகவும் மதிப்பிழந்த ஒன்றாகவும் இருக்கின்றன.

ஆனால், சத்யஜித் ரே போன்றோர் எடுத்துள்ள இப்படங்களுக்குப் பின்னாலும் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது. கைம்பெண் மறுமணம், பால்யத் திருமணம் போன்றவை சமூகச்சீர்த்திருத்தமாகக் கருதப்பட்ட இந்தியாவின் காலம் உண்டு. இத்தகைய சமூகச்சீர்திருத்தம் உண்மையில், உயர்சாதிக்குடும்பங்களைத்திருத்தவே அன்றி, சமூகத்தின் சாதிக்கொடுமையின் விளைவாகக் கருதப்பட்டு சீர்திருத்தம் செய்யப்படவில்லை என்கிறார், அம்பேத்கர். ஆகவே, தான் சமூகம் முழுமைக்கும் இது பயன்படாமல் உயர்சாதியினரின் வெளிப்பாடெல்லாம் கலைவெளிப்பாடு என்று கொண்டாடப்பட்டுள்ளது என்பதை உணரமுடிகிறது. 

"உயர்சாதி இந்துக்கள் சாதியை ஒழிக்கப்போராடுவதற்கான அவசியத்தை உணர்ந்திருக்கவில்லை; அல்லது அதற்காகப் போராடுவதற்கான துணிச்சல் பெற்றவர்களாகவும் இல்லை. ஒவ்வொரு மேல்சாதி இந்துக்குடும்பத்திலும் கட்டாய விதவைக்கோலமும், குழந்தையிலேயே திருமணம் செய்யும் கொடுமையும் இருந்தது. தனிப்பட்ட முறையில் அவர்கள் உணர்ந்த இந்தத்தீமைகளை ஒழிப்பது, அவர்களின் போராட்டம் என்பது குடும்பச்சீர்திருத்தத்தையே முன்மொழிந்தது" - அம்பேத்கர்

கலைத்தன்மை படங்களின் முன்னோடி என்று சொல்லப்பட்ட சத்யஜித் ரே, தன் கலைவெளிப்பாட்டுச் செயல்பாட்டில், ஒரு சமூக அக்கறை சார்ந்த கருப்பொருளை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்? 
சமூக அங்கீகாரத்திற்காகவா இல்லை, கலையின் மூலம் அது தான் என்று உணர்ந்தா?
அப்படியே என்றாலும், அவர் செய்தது அரும்பெரும் கலைப்பணியாகக் கொண்டாடப்படும் போது, ஏன் மற்ற சாதியினர் தம் கலைச்செயல்பாட்டின் வழியாக சமூக மாற்றத்தைச் சொல்லும்போது, அது கலைஅங்கீகாரம் தரப்படாமல், வெறுமனே சமூகச்சீர்திருத்தப்படம் என்றும் கலைப்படம் என்பதைக் கீழாகவும் ஏன் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கலைத்தளத்தில் இயங்கும் சூழ்ச்சிகளும் இந்திய சினிமாவரலாறும் உணர்ந்தோர் ஒரே சமயத்தில் சத்யஜித்ரேயை ரசிக்கவும் முடியும், இத்தளத்தில் இயங்கமுடியாமல் கலை ஊடகங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்ட கலைச்சிந்தனையாளர்களுக்காகத் துக்கிக்கவும் முடியும்!



குட்டி ரேவதி
("யரல வழள" திரைக்கட்டுரைத் தொகுப்பிற்காக...2)

'பொம்மக்கா திம்மக்கா கதையும் ஸ்னோ ஒயிட் கதையும்'







சமீபத்தில் The Snow white & the huntsman என்ற படம் பார்த்தேன். இது அடிப்படையில் ஒரு ஜெர்மானிய தேவதைக்கதையை அடிப்படையாக வைத்து எடுத்தது. இக்கதையை, பல இயக்குநர்கள், பல்வேறு வடிவில் வெவ்வேறு காலகட்டங்களில் படமாக்கியுள்ளனர்.
வீட்டில், பாட்டி பேரக்குழந்தைகளுக்குச் சொல்லும் ஒரு கதைச்சரடைத் தளமாக வைத்து அதன் அடுக்கடுக்கான கதைகளை வைத்து ஒரு பிரமாண்டமான படமாக ஆக்கியிருக்கிறார்கள்.



Frozen படமும் இந்த ஸ்னோ ஒயிட் கதையினை ஒட்டியே எடுக்கப்பட்ட படம் என்பதை இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். 'உண்மையான அன்பு' எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதை நோக்கியே இரு கதைகளும் அலையும்.


The Snow white & the huntsman படத்தில் வியக்கத்தக்க அளவில் அனிமேஷன் மற்றும் கற்பனை விடயங்களை நுட்பமான அழகியல் வெளிப்பாட்டுடன் எடுத்திருப்பார்கள். Frozen படத்தில் அக்கா தங்கைக்கு இடையே இருக்கும் உண்மையான அன்பு, உயிர் காக்கும் வல்லமை உடையது என்பதைக் கூறியிருப்பார்கள். பொதுவாகவே, 'தேவதைக் கதைகள்' சொல்லும் நீதி, வாழ்வின் அளவை விடப் பெரியதாக இருக்கும். அப்படித்தான் இரண்டு படங்களிலுமே.

இந்த இரு படங்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பிற்கிடையே, தமிழில் 'கொலைக்களங்களின் வாக்குமூலம்' என்ற நூலையும் வாசிக்கநேர்ந்தது. நந்தன், காத்தவராயன், மதுரைவீரன், முத்துப்பட்டன் ஆகிய பஞ்சம வரலாறுகள் குறித்து களஆய்வு செய்யப்பட்ட நூல். புனைவைப் போன்றே ருசிகரமாக இருக்கிறது. அருணன் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு வீரனின் கதைப்பின்னணியும், அதில் நிறைந்திருக்கும் சாதியத்திற்கு எதிரான, தீண்டாமைக்கு எதிரான உண்மையான போராட்டங்களும் கதைப்படங்களுக்கு சாத்தியம் அமைக்கக் கூடியன. குறிப்பாக, முத்துப்பட்டன் கதையில், 'பொம்மக்கா, திம்மக்கா' என்ற சக்கிலியச்சகோதரிகளைப் பார்ப்பனன் மணந்து கொள்ள மேற்கொள்ளும் போராட்டமும், காதலியரின் தந்தை அவனுக்கு விடுக்கும் சவால்களும் இன்றைய சாதியச்சிந்தனை வரை எல்லா படைப்பு சார்ந்த முன்முடிவுகளையும் கேள்விக்கு உள்ளாக்குவன. 

என் நோக்கம் இது தான். ஏன் இங்கு இருக்கும் இம்மாதிரியான துடிதெய்வங்கள் மற்றும் வீரர்களின் கதைகள் படமாக்கப்படாமல் இருக்கின்றன. காலந்தோறும் வடிவம் கொடுக்கப்படாமல் முடக்கப்படுகின்றன. கதையில் சுவாரசியத்திற்கும், வீரத்திற்கும், திருப்புமுனைகளுக்கும் பஞ்சமில்லை. அதேசமுயம், வணிக ரீதியான போக்கையும் கதைகள் கொண்டிருக்கின்றன. ஆனால், நம்மவர்கள் கதை தேடி அலைகளையில் வெளிப்படும் வறட்சி விந்தையாக இருக்கிறது.

உண்மையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை புராணக்கதைகள் என்பதற்காக, அதேமாதிரி புராணத்தன்மையுடன் எடுக்கவேண்டியதில்லை. இராமாயணம், மகாபாரதம் போன்ற அடிமைமுறை, மனித சூழ்ச்சிகள் நிறைந்த கதைகளையே மீண்டும் மீண்டும் சொல்லி வளர்ப்பதற்குப் பதிலாக ஏன், இம்மாதிரியான நேர்மையான, பிரமாண்டம் உணர்த்தும் கதைகளை நம்மவர்கள் நம் குழந்தைகளுக்கு, நம் மக்களுக்குப் படமாக்குவதில்லை. The Snow white & the huntsman படத்தை அயல்நாட்டவர்கள் அத்தனை புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி நவீன வடிவம் கொடுத்து, இன்றைய கதையாக்கி விடுகிறார்கள்.

நம் படைப்பாளிகள் மனதில் மறைந்திருக்கும் அடிமை முறை, இதுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. சுவாரசியம் தேடும் நோக்கில் செயற்கையாகக் கதைகளைத் தயாரிக்கிறோம். அவை மனதில் ஒட்டாமல், படைப்புகளையும் மக்களையும் பிரித்து வைத்திருக்கின்றன. 

நமக்கு யாரையேனும் அடிமைப்படுத்தி வாழவேண்டும். அல்லது, யாருக்கேனும் அடிமையாகி வாழவேண்டும். இந்தவெளிகளுக்குள்ளேயே நம் கற்பனைகளைக் குறுக்கிக் கொள்ள விரும்புகிறோம். நம்மிடம் மண்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களின், கதைக்களங்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. 

குட்டி ரேவதி
"யரலவழள"திரைக்கட்டுரை தொகுப்பிற்காக

இது கால்டுவெல்லின் 200 - வது ஆண்டு!





நேற்று, வடபழனி, அறிஞர் அண்ணா நூலகப்படிப்பு வட்டத்தில், சுப.வீரபாண்டியன், 'கால்டுவெல்லும் திராவிட இயக்கமும்' என்ற பொருளில் சிறப்புரை ஆற்றினார். மிகவும் சிறப்பாக இருந்தது.



பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி முதல் இன்று வரையிலான தமிழ் மொழியின் வரலாறு குறித்த தகவல்கள் நிறைய சாதியத்திருட்டுகளை அம்பலப்படுத்தின என்று சொல்லவேண்டும்.



கால்டுவெல் எழுதிய நூலின் முதல் பதிப்பு, மிகவும் சுருக்கமான வடிவில் இருந்தது. பின், அவரே அதை விரிவுபடுத்தி 1875-ல் இரண்டாம் பதிப்பைக் கொண்டு வந்தார். 1913-ல் வெளிவந்த அதன் மூன்றாம் பதிப்பில், இரண்டாம் பதிப்பில் இருந்த குறிப்பிட்ட சில பகுதிகளை அப்பொழுதைய சாதி இந்துத்தலைகள் நீக்கியுள்ளனர்.

அப்பகுதிகளாவன: 'பறையர்கள் திராவிடர்களா? 
நீலகிரியின் தோடர்கள் திராவிடர்களா?

பறையர்களையும் தோடர்களையும் தம்முடன் சேர்த்துப்பார்க்க விரும்பாத சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் சைவவெள்ளாளர்கள் இந்த இரண்டு பகுதிகளையும் நீக்கிப்பதிப்பித்துள்ளனர். பின், 133 ஆண்டுகளுக்குப் பிறகு, கவிதாசரண் அவர்கள் இதைக் கண்டுபிடித்து பெரும் பொருட்செலவில், இதை தற்பொழுது பதிப்பித்துள்ளார் என்பது வரலாறு.

என்னுடைய கேள்விகள்: இத்தகைய புரட்டினால், 133 ஆண்டுகள் மொழியின் வரலாறு திரிக்கப்பட்டு, அதனால் நிகழ்ந்திருக்கும் சாதிய வேட்டைகளையும் வன்கொலைகளையும் எப்படித் திருத்தி எழுதுவது?

அம்பேத்கர் எழுதிய பல ஆயிரம் பக்கங்களும் இன்னும் பதிப்பிக்கப்படாமல் இருப்பதன் உள்நோக்கமும் இதனுடன் பொருந்திப்போவது இல்லையா?

சைவசித்தாந்தக்கழகங்கள் சித்தமருத்துவத்தில் செய்த தத்துவக்கலப்பின் விளைவுகள் என்னவென்று நாம் அறிவோமா?

பார்ப்பனியத்தைப் பின்பற்றுவதில், கட்டிக்காப்பதில் பார்ப்பனர்களுக்கு நிகராக, சைவவெள்ளாளர்கள் அல்லது பிற சாதியினர் செய்துள்ளது ஏன் வரலாற்றில் மறைக்கப்பட்டு வருகிறது?

தமிழ்த்தேசியச்செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்போர் ஏன் இதுபோன்ற மொழி வரலாறு வழியாகக்கற்பிக்கப்பட்டிருக்கும் தீண்டாமைகளை அகற்றுவதில் ஈடுபடுவதில்லை? நம் மக்களைக் காக்க, மொழியுணர்ச்சி மட்டுமே போதுமா? சமூக நீதி காக்கவேண்டாமா?

கால்டுவெல்லின் சாதனைகளைப் பற்றிப்பேச நிறைய இருக்கிறது. தொடர்ந்து பேசுவோம். உண்மையில், நம் குருட்டுக்கண்களைத் திறந்து கொடுக்கத் தேவையான அத்தனை அரும்பணிகளையும் அவர் ஆற்றியுள்ளார்.

குட்டி ரேவதி

அம்மாக்கள்




இந்நாளில் எல்லோரிடமும் நிரம்பி வழியும் தாய்ப்பாசம் என்பது ஒரு பழையமரபின் தொடர்ச்சியாகவே தொனிக்கிறது. குறிப்பாக, ஆண்களிடம் அது மிகையாகவே இருக்கிறது. 



தாய் என்பது பெரும்பான்மையான ஆண்களுக்கு, அவர்கள் அன்பின் அடிமை தான். எவ்வளவோ தாய்மார்கள் ஏழ்மையிலும் வாழ்வின் இருட்டறையிலும் நோயிலும் குமைந்து செத்துப்போயிருக்கின்றனர். மொழிபெயர்க்கவே முடியாத தனிமையும் பெருமூச்சுகளும் நிறைந்த குறுகிய அறையே அவர்களின் முழுநீளவாழ்வாகியிருக்கிறது. வெறும் பாசம் அவர்களுக்கு ஒரு போதும் மகிழ்ச்சி அளித்ததில்லை.

பசியை நீக்க எப்படி ஒரு முத்தம் போதுமானது.

தாய்மார்களும், "மகன்களை" ஆண்பால் இனமாகவே பார்த்து வளர்த்து, ஆண் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற மாதிரிகளையே உருவாக்கியிருக்கின்றனர். மனிதர்களை அல்ல.

மனைவி, தாய் என்பதை எதிரெதிராக நிறுத்திப் பார்க்கும் வாய்ப்புகளைப் பெரும்பான்மையான ஆண்கள் தமக்கு ஆதரவாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். அங்கே தாய்ப்பாசம், தன் மனைவிக்கு எதிரான ஆயுதமாக மாறி அவளைக்காயப்படுத்தப் பயன்படுகிறது.

ஆனால், கணவனை இழந்து, சிறிது பொருளாதாரபலம் வாய்த்து, தன் மகன் / மகளைச் சார்ந்திராது தனியாக வாழக்கிடைத்த தாய்மார்கள் என்னைப் பொறுத்தவரை, உண்மையிலேயே நல்வாழ்வு பெற்றவர்கள். தினந்தோறும் பதறிப்பதறி, காபி முதல் படுக்கை வரை தயார்செய்யவேண்டிய அவசியம் இருக்காது. இப்படியான வாழ்வு வாழக்கிடைத்தவர்கள், நீண்ட நாட்களுடன் ஆண்களின் தொல்லை இன்றி பேரமைதியுடன் வாழ்வதைப் பார்க்கிறேன்.

இளமையும் திருமணவாழ்வும் ஆண்களின் கைப்பிடிக்குள் இறுகிக்கிடந்திருக்க, முதுமை நோக்கி நகரும் போது அது அவர்களின் பிடியிலிருந்து நழுவக்கிடைத்த வாய்ப்பு எவ்வளவு சுகமானதாக இருகும் என்று விளக்கவேண்டியதில்லை.

மற்றபடி, தாய்ப்பாசம், தந்தைப்பாசம் எல்லாமும் வழிபாட்டுக்குரிய மரபுகளாகவே இருக்கிறதே அன்றி, அதன் அடிப்படையான புரிதல்களையும், பொறுப்புகளையும், தேவைகளையும் யாரும் உணர்ந்தால் போல் தெரியவில்லை. 

இந்தத்தேசத்தில், அம்மாக்கள் எப்பொழுதுமே பலியாடுகளுக்கு நிகரான குறியீடுகள். 

ஓயாத கண்ணீரும் கம்பலையும் அடிவயிற்றில் நிரந்தரமான அச்சமும் குடிகொண்ட கல்குகையும் கொண்ட அம்மாக்கள்!



குட்டி ரேவதி

பெண்ணுக்கு இத்தகைய கல்வி எதற்கு?



பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில், மாநில அளவில் பெண்கள் தாம் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி அடைந்ததாகவும், அதிக அளவில் வெற்றிபெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் முழங்குகின்றன.


இந்தப் பெண்களில், எத்தனை பேர் மேல்நிலைப்படிப்புக்குப் போவதற்கான சூழ்நிலை இருக்கிறது? இத்தேர்வில் ஆண்களை வெல்லும் பெண்களால், இதற்குப் பின்பு ஏன் பாலியல் ஏற்றத்தாழ்வுகளை வெல்லமுடிவதில்லை? பொதுச்சமூகப்பணிகளில் எத்தனை பேர் பொறுப்புணர்வுடன் பங்கேற்கிறார்கள்? இந்தப்பெண்களில் எவ்வளவு பேர், குறைந்தது தன் வாழ்வையும் தன்னையும் பேணும் திறனாவது கொண்டிருக்கிறார்கள்? அதிக அளவில் தேர்ச்சிவிகிதமும், மதிப்பெண் விகிதமும் கொண்ட கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பெண்கள் மீதான குடும்பவன்முறையும் பெண்கள் மீதான சமூக வன்முறையும் ஏன் அதிகமாக இருக்கிறது? பள்ளிக்கல்விக்கும் தனிப்பட்ட பெண்கள் வாழ்விற்கும் ஏன் இவ்வளவு இடைவெளி? சாதியின் வாள்களையும் அலங்கார அணிகலன்களாய்க் கொண்டு அலையும் பெண்களாகத் தாம் உற்பத்திசெய்யப்படுவதை அறிவதற்கான வாய்ப்புகளையும் விழிப்புணர்வையும் ஏன் இவர்கள் பெறுவதில்லை? இத்தகைய கல்வியை வைத்துக்கொண்டு, ஒரு பெண் தன் மீது வீசப்படும் அமிலத்தையோ, எரியும் தீக்குச்சியையோ, தூக்குக்கயிற்றையோ ஏன் தடுத்துக்கொள்ள முடிவதில்லை? ஏன் இப்பொழுதைய வெற்றி நெடுந்தொலைவு வருவதில்லை? அடிமைகளாய் வாழ்வுகளைத் தொடர்வதற்கான ஒப்பந்தமா, இந்த மதிப்பெண்களும், கல்வியும்? எனில், இக்கல்வியினால் ஆகும் பயன் என்ன? ஆன பெருமை தான் என்ன?

இன்றைய நாளில், கல்வி என்பதே எல்லோருக்குமே கண்கள் இரண்டையும் புண்களாக்கும் வித்தைதான்! கற்றதையெல்லாம் மறக்கவும், தனக்குத்தானே அழித்துக்கொள்ளவும் வேண்டியிருக்கும் சமூகச்சூழலில், நாம் முன்பொரு காலம் பெற்ற மதிப்பெண் வெற்றிகளே அற்பமாயும் கேலிக்குரியதாகவும் இருக்கின்றன. கல்வியாம் கத்தரிக்காயாம்!



குட்டி ரேவதி

வாசக மனோநிலையின் அடிப்படையிலான ஒரு பார்வை - குமரகுருபரன்







குட்டி ரேவதியின், சிறுகதைத்தொகுப்பு "நிறைய அறைகள் உள்ள வீடு " பற்றி, சென்ற மாதம் மதுரை 'கூழாங்கற்கள்' நிகழ்வில் குமரகுருபரன் அவர்கள் வழங்கிய மதிப்புரை இது!


(1)
நீட்டிக்க முடியாது என்கிற புரிதலுடன் அல்லது நீட்டிக்கக் கூடாது என்கிற சுய கண்டிப்புடன் நிகழும் கதை சொல்லலையே நான் சிறுகதை எனப் புரிந்து கொள்கிறேன்.அதனாலேயே சிறுகதைகள் இக் காலத்தின் அதிகம் பயன்படுத்தப் படும் ஒரு இலக்கிய அல்லது படைப்பு வடிவமாக இருக்கின்றன.
அதிகம் என்பது நாம் வாழும் காலத்தின் யதார்த்தமாக ஆகிப் போயிருக்கிறது.அதீதம் என்றால் அது நம் கால கட்டம் தான்.எங்கும் எதிலும் அதீதம் என்பது வாழ்வின் குணமாகியிருக்கிறது.ஒலியில் அதை நான் சொல்ல முயற்சிக்கும் போது உரத்த என்கிற தமிழ் வார்த்தை சரியாகப் பொருந்துகிறது.
ஆனால்,நாம்,உரத்த வின் அதீதமான இரைச்சலின் காலத்தில் இருக்கிறோம்.
என் முதல் பிரச்னை இரைச்சலில் எனக்கான ஒரு மெல்லிய பாடலைக் கேட்க முனைவதில் ஆரம்பமாகிறது.
வாசிப்பில் ஈடுபாடு குறையா யாதொரு வாசகனுக்கும் தான்.
எங்கே என் பாடல்? எங்கே என் இசை? எங்கே என் சிறுகதை? எங்கே என்னை இழுக்கும் அந்த இலக்கிய,கலை அனுபவம்?
இவ்வளவு இரைச்சலில் எங்கே அதை உணர்வது?
என் முன் மிகப் பெரிய வியாபார சந்தை இருக்கிறது.
என் முன் மிகப் பெரிய சமூக ஊடகம் இருக்கிறது.
என் முன் மிகப் பெரிய படைப்பாளிகள் கூட்டம் இருக்கிறது.
என் முன் மாறிக் கொண்டே இருக்கிற ரசனையின் அளவுகோல்கள் பூதாகரமாக வளர்ந்து நிற்கின்றன.
என் வீட்டு அலமாரியில்,இச் சந்தையில் இருந்து நான் கொணர்ந்த இவை எல்லாவற்றிலும் ஆன என் ரசனை அடுக்கி வைக்கப் பட்டிருக்கிறது.
வெறும் பெயர்களால் ஆன தேர்வு.சில முன் மதிப்பீடுகள் மூலம் நான் கணிக்க முடிந்த தேர்வு.
இவற்றில் எது நான் முதலில் படிக்க வேண்டியது? எது நான் முதலில் கேட்க வேண்டியது?
எது சிறந்தது? 
எது என்னை அதனுடன் மூழ்கடிக்க இருப்பது?
எதை நான் மற்றவர்களுக்கு இது உங்களின் ஆன்மாவை மூழ்கடிக்கும் அனுபவம் என்று பரிந்துரைக்க?
வருடத்துக்கு பத்து கோடிக்கும் மேல் வியாபாரமாகும் தமிழ்ப் புத்தக சந்தையில் எந்தப் புத்தகத்தை நான் காலத்தின் அவசியம் என உணர,உணர்த்த இருக்கிறேன்?
காலத்தின் அவசியம் என்கிற அந்த ஒற்றைச் சாவி மேற் சொன்ன எல்லா புதிர்களைத் தீர்க்க உதவும் என்று நம்புவதில் நிறைய அறைகள் உள்ள வீடு என்கிற குட்டி ரேவதியின் சிறுகதைத் தொகுப்புக்கான என் வாசிப்புணர்வு அனுபவம் ஆரம்பிக்கறது. 
இரண்டு லட்சம் ரூபிள்களுக்காக,பதினைந்து வருடம் தனிமைச் சிறையில் இருக்க சம்மதிக்கும் ரஷ்ய இளைஞனின் கதையைச் சொல்லும்,அன்டன் செகொவின் பந்தயம் சிறுகதையில் ஒரு சுவாரஸ்யமான பகுதி,காலத்தின் அவசியம் என்கிற வார்த்தையை மேலும் விஸ்தரித்து விடக் கூடியது.
தேவையான புத்தகங்கள்,மது இன்னும் என்ன என்ன வேண்டுமோ,அத்தனையும் கிடைக்கும்,அவனுடைய வீட்டை விட்டு வெளிவராமல்,அவன் தன்னுடைய வாழ்க்கையை க் கழிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத் துடன் தன் தனிமை வாழ்வை ஆரம்பிக்கும் அந்த இளைஞன்,முதல் வருடத்தில் படித்த புத்தகங்கள் பெரும்பாலும் ஜனரஞ்சகமானவை.காதல் கதைகள் என்று வைத்துக் கொள்ளலாம்.இரண்டாவது வருடம் அவன் இலக்கிய நூல்களைப் படிக்கிறான்.நடுவில் மூன்று,நான்கு வருடங்கள் மது அருந்துவதிலும்,வயலின் வாசிப்பதிலும்,அவனாக சில நீண்ட கடிதங்கள் எழுதுவதுமாகப் போகிறது.ஆறாவது வருடம் அவன் மொழி குறித்த நூல்களைக் கற்க ஆரம்பிக்கிறான்.அடுத்த,நான்கு வருடங்கள் அவன் அறுநூறுக்கும் மேற்பட்ட அது சார்ந்த புத்தகங்களைப் படிக்கிறான்.பத்தாவது வருடம் அவன் வெறும் பைபிளை மட்டுமே மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருக்கிறான்.கடைசி,இரண்டு வருடங்கள்,அவன் பைரன்,ஆன்மிகம்,ரசாயனம்,மருத்துவம் என்று வகை தொகை இல்லாமல் வாசிக்கிறான்.
கடைசியில்,அவன் எல்லாவற்றையுமே வெறுக்கிறான்.அறிவையும் இந்த உலகத்தின் ஆசியையும் வெறுக்கிறேன் என்பதாக அதைக் குறித்துச் சொல்கிறான்.
காலத்தின் அவசியம் என்பது அவனைப் போலவே நம் ஒருவருக்கும் வேறு வேறாய் இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது.விழிப்பு மன நிலை,ஆழ் மன நிலை என்ற இரு விசயங்களின் அடிப்படையில் இதை அணுகலாம்.என்னுடைய வாசிப்பு என்பது,காலத்தின் அவசியம் என்கிற நிலைப் பாட்டில்,விழிப்பு மற்றும் ஆழ்மன நிலையில்,எனக்குத் தேவை இருக்கிற சில வாழ்வியல்,தத்துவ,மொழி,கற்பனாவாதம் சார்ந்து அமைகிறது.இவற்றை எதிர்பார்த்தே,நான் வாசிக்க விரும்பும் புத்தகங்களின் தேர்வும் அமைகிறது.இந்த அடிப்படையில்,சமீபத்தில் நான் வாசிக்க முற்பட்ட சிறுகதைத் தொகுப்பு, குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு.

(2)
1.காலத்தின் அவசியம் 
2.வாழ்வியல் 
3.தத்துவம் 
4.மொழி 
5.கற்பனாவாதம் 
என்கிற வாசக மனோநிலையின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைந்த ஒரு படைப்பு எப்படி இருக்கக் கூடும் என்பதை,ஒரு புனைவின் துளியில் இருந்தே,நான் ஆரம்பிக்கிறேன்.
ஆல்பெர் காம்யுவின் எழுதி முடிக்கப் படாத,நாவல் ஆக்கமான "முதல் மனிதன்"தமிழ் மொழிபெயர்ப்பின்,முதல் பாரா இது.என்னைச் சந்திக்கும் நிறைய தோழர்களிடம் இதை நான் வாசித்துக் காண்பித்திருக்கிறேன்.அதற்கடுத்த வாசிப்பை மேற்கொள்ள வைக்காமல்,அங்கேயே என்னைச் சுழல வைக்கும் விவரணை இது...
" கருங்கல் ஜல்லி நிரம்பிய அந்தப் பாதையில் ஓடிக் கொண்டிருந்த குதிரை வண்டிக்கு மேலே வானத்தில் அடர்த்தியான பெரிய மேகங்கள் பொழுது சாயும் வேளையில்,கிழக்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தன.மூன்று நாட்களுக்கு முன்னால்,அட்லாண்டிக் கடலுக்கு மேல் அவை உருவாகத் தொடங்கி,மேற்கே இருந்து அடிக்கும் காற்றுக்கு காத்திருந்து,முதலில் மெதுவாக நகர்ந்து,பிறகு சிறிது சிறிதாக வேகம் பெற்று,இலையுதிர் கால ஒளியில் ஒளிரும் நீர்ப் பரப்பின் மேல்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலப் பரப்பை நோக்கி நேராகச் சென்று,மொரோக்கோவின் மலை உச்சிகளில் இழைஇழையாகப் பிரிந்து,மீண்டும் அல்ஜீரியப் பீடபூமியின் மேல் மந்தையாகச் சேர்ந்து,இப்போது துனிசியாவின் எல்லை மீது மத்தியதரைக் கடலின் மேற்குப் பகுதியை அடைந்து,கரைந்து போக முயன்று கொண்டிருந்தன.வடக்கே,ஓயாது வீசும் கடலலைகளுக்கும்,தெற்கே உறைந்து பரந்திருக்கும் மணலலைகளுக்கும் இடைப்பட்ட பிரமாண்ட தீவு போன்ற நிலப் பரப்பின் மீது பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்த பிறகு,பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேரரசுகளும்,மக்கள் கூட்டமும்,இந்தப் பெயரற்ற பிரதேசத்தை க் கடந்து சென்ற அதே வேகத்தில்,இந்த மேகங்கள் கடந்து,பிறகு உத்வேகம் சற்றுக் குறைந்து,சில மேகங்கள்,ஏற்கனவே இங்குமங்கும் பெரும் மழைத் துளிகளாக,நான்கு பயணிகள் இருந்த அந்த வண்டியின் கான்வாஸ் கூடு மீது சடசடக்கத் தொடங்கியிருந்தன."
நான்கு பயணிகள் இருந்த அந்த குதிரை வண்டியையே நான் காலத்தின் அவசியம் எனக் கொள்கிறேன்.அவர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள்,அவர்களுக்குள் என்ன நிகழ இருக்கிறது என்பதையும்.
பொருளாதாரம்,சித்தாந்தம்,அரசியல்,ஆன்மிகம்,அறிவியல் குறித்தான அத்தனை பார்வைகளையும் தாண்டி,ஆண் பெண் உறவுச் சிக்கலில் தான் இன்னமும் உலகம் மையம் கொண்டிருக்கிறது. மற்றவை எல்லாம் மேகங்கள் போல,அதன் மேல் உலவிக் கொண்டிருக்கின்றன என்று உறுதியாக நம்புகிறேன்.பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்று எனது முன்னோர்கள் அறியக் காட்டிய சிரத்தையைக் காட்டிலும்,அதிக சிரத்தையை இக் காலத்தில் ஆணாக,நானும்,எனது சக சிந்தனையாளர்களும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.பெண்களின் மனமொழி இன்னமும் அதீத மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருந்து கொண்டிருக்கிறது எனினும்.குட்டி ரேவதியை பெண்களின் மனமொழியை வெளிக் கொணர விரும்பும் ஒரு படைப்பாளியாக அவரது கவிதைகள்,உடல் அரசியலைக் கட்டுடைத்த கவிதைகள் மூலம் வாசித்து அறிந்திருக்கிறோம்.அவரது சிறுகதைத்தொகுப்பு அதன் அடிப்படையில் மிக முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அடுத்து இன்னொரு எதிர்பார்ப்பு அவரது மொழி.கவிஞர்களின் புனைவு நடை குறித்து ஆர்வமும்,அவநம்பிக்கையும் இலக்கிய உலகில் ஒரு சேர நிலவுகிறது.குட்டி ரேவதியின் கவிதை மொழியின் வீரியம் நாம் அறிவோம்.அவரது புனைவு? அதுவும் மற்றொரு எதிர்பார்ப்பு.


(3)

காதலைப் பெறுவதற்கும்,அதிகாரத்தை எதிர்ப்பதற்கும்,உரிமைகளை வெல்வதற்கும் தம் உடலை ஆயுதமாகப் பயன்படுத்திய நம் சமகாலப் பெண்டிருக்கும்,மூதாதைப் பெண்டிருக்கும் சமர்ப்பிக்கப் படுவதாக ஆரம்பிக்கும்,நிறைய அறைகள் உள்ள வீடு சிறுகதைத் தொகுப்பில் பதிமூன்று சிறுகதைகள் இருக்கின்றன.
முடிவு என்கிற ஒன்று இல்லாத அல்லது வலியுறுத்தப் படாத தன்மை எல்லாக் கதைகளிலிலும் இருக்கிறது.ஒரு பெண்ணின் மனதைப் போல,மறுபடி மறுபடி சுழலும் முடிவற்ற அவளின் மன மர்மங்களைப் போல.முடிந்த இடத்திலேயே ஆரம்பமும் இருப்பது சிறுகதை வடிவின் அற்புதமான சாத்தியம்.நிறைய விஷயங்கள் சொல்லாமல் விடப் படுகிற தன்மையும் குட்டி ரேவதியின் அநேக சிறுகதைகளில் காணப் படுகிறது.சொல்லாமல் விடப் படுகிற அந்த இடங்களில் வாசகனின் யூகம்,மற்றும் தன்னை இருத்திக் கொள்ளல் ஆகியன நிகழும் சாத்தியங்கள் ஆர்மபிக்கின்றன.மிகவும் அடர்ந்த காமத்தை,விரக்தியை,வன்மத்தை,எள்ளலை,கொண்டாட்ட மனோபாவத்தை வெளிப் படுத்துகிற விதமாய்,குட்டி ரேவதி சிறுகதைகளின் புனைவு மொழி அமைந்திருக்கிறது.காணும் விசயங்களும்,சிந்தனைகளும்,உரையாடல்களுக்குள் அடங்காத ஒரு தன்மையையும் கவனிக்க முடிகிறது.சிறுகதையைத் தாண்டிய விஷயங்கள் சிறுகதை வடிவத்திற்குள் பேசப் படுகிற அழுத்தமும் வாசிப்பின் போது வந்து போகிறது.ஒரு சிறுகதை வாசித்து முடிந்த உடனே ஒரு மொபைல் கேம் விளையாட வேண்டும் என்று தோன்றுகிற அளவுக்கு இந்த சிறுகதைத் தொகுப்பில் வருகிற பெண்களின் சிந்தனைகளும்,உரையாடல்களும் இருக்கின்றன.குளிர் என்கிற சிறுகதையை இதற்கு முழு உதாரணமாகச் சொல்ல முடியும்.
"கற்பனையும்,புனைவும்,பாலியல் ஆற்றலும் இணைந்த பெருவெளியும்,அதில் தீவிரமாக பயணிக்கும் உடலும் கொண்டவள் நான் என்பது தான் சிறுகதை எழுதுவதைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படை"என்பதாக,ஏன்,சிறுகதை வடிவைத் தேர்ந்தெடுத்தேன் என்று,குட்டி ரேவதி,அவரது முன்னுரையில்,சொல்லும் விசயத்தில் மேற்சொன்னவைகளுக்கான பதில் இருக்கிறது.
முத்தம் இடப் படாத வறண்ட காமத்திற்கு மனம் துவளும்,எதிர்ப்பைத் தெரிவிக்கும்,ஒத்துழைக்க மறுக்கும் உடல் கொண்ட பெண்களின் உலகம் நிறைந்ததாக இருக்கிறது நிறைய அறைகள் உள்ள வீடு சிறுகதைத் தொகுப்பு.இடுப்பிற்குக் கீழே மட்டும் இயங்கும் ஆண்களின் பாவனையான மன நிலையை நகைப்புக்கு உள்ளாக்குகிற பெண்களின் திட்டமிட்ட எதிர்கொள்ளலும் இருக்கிறது.பிங்க் வோட்கா இவ் விதத்தில்,இதுவரை எழுதப் படாத,இதுவரை நாம் கிசுகிசுத்துக் கொண்டு மட்டுமே இருக்கிற,பெண்களின் ஒரு பால் ஈர்ப்பு,பெண்களின் பாலியல் கற்பனைகள்,பெண்களுக்கு நடுவே நிகழும் ஆண் சார்ந்த பாலியல் விவாதங்கள்,ஆணின் பாவனையான காம அழைப்பை எதிர்கொள்ளும்மனநிலை குறித்து சொல்லும் கதையாய் விரிந்திருக்கிறது.காமத்தைக் குறித்த பெண் மனதை ஆணின் முகத்தின் மேல் விசிறடிக்கும் கதை என்றால் இன்னும் நேரடியாக இருக்கும்.இதைப் படித்த பிறகும் நிறைய ஆண்கள் வீடியோ கேம் விளையாட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.அல்லது ஒரு சிகரெட்டாவது தேவைப் படும்.
உண்மையில்,காமத்தை உடைப்பதில்,ஆண்களுக்கும் பெண்களுக்குமான முக்கியமான சிந்தனை வேறுபாட்டை இச் சிறுகதைத் தொகுப்பு உணர்த்துகிறது.குட்டி ரேவதியின் நாயகிகள் அவரது சிறுகதைகளில் முன்வைக்கும் மிக முக்கியமான விவாதமும் அதுதான்.
வெறும் ஏக்கங்களாக ஆண்களின் பார்வையில் அணுகப் பட்டிருக்கும் காமத்தை,உடலரசியலை,பாலியல் மனோபாவங்களை முழுமையாகக் கட்டுடைக்கும்,அணுத் துகள் ஒன்றின் ஆற்றலைக் கொண்டிருக்கும் அவரது கதைப் பெண்களின் புனைவுகள் மூலம் ,ஆண்களின் பாவனைகளைத் தூளாக்கும் மிக முக்கியமான சம கால சிறுகதைத் தொகுப்பு குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு,என்று நான் பதிவு செய்கிறேன்.யோனியின் உதடுகள் என்கிற சிறுகதை முத்தம் முகிழ்த்தும் காமத்தை,பெண்ணின் உடலை,அவளின் மனதை ஆண்களுக்கு உணர்த்தும் மிக முக்கியமான புனைவு.பெண் என்ன எதிர்பார்க்கிறாள் ஆணிடம் இருந்து என்று குறிப்பாகச் சொல்லும் இக் கதையில் முடிவு என்கிற ஒன்று அரிதாக நிகழ்ந்திருக்கிறது.அந்த முடிவில்,ஆண்களின் பெண் பற்றிய புரிதல் ஆரம்பிக்கக் கூடும்.

(4)
காமம் என்கிற பொது இழையைத் தாண்டி, வாசகனை ஈர்க்கிற,புதிய வாசிப்பனுபவங்களைத் தரக் கூடிய சிறுகதைகள் நிறைய அறைகள் உள்ள வீடு தொகுப்பில் இருக்கின்றன.அலைதல் அல்லது பயணம் கதைகளின் நடுவே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.இயற்கை குறித்த,வாழ்வியல் குறித்த நுட்பமான விவரணைகள் சிறுகதைகளில் வியாபித்திருக்கின்றன.சமகால வாசகனுக்கு மிகவும் தேவையாய் இருக்கக் கூடிய விசயங்கள் இவை.தைலக்காரி என்கிற சிறுகதை,மலையை ஒரு பெண்ணின் கோணத்தில் நமக்கு விரிவிக்கிறது.மலையின்,மூலிகைகளின்,மர்மங்களை மென்மேலும் முடிச்சிடும் ஆண் ஸ்பரிசம் அறியா,ஒரு தைலக் காரியின் அனுபவம், கற்பனாவாதம் கலந்து மிகவும் புதிதான உணர்வுகளை வாசிப்பின் போது ஏற்படுத்துகிறது.பாம்புகளைத் தேடி அலையும் இருளர் குடும்பம் ஒன்றின் பயணத்தைச் சொல்லும் கட்டு வீரியன் என்கிற கதை நெளிந்து வளைந்து நீளும் பாம்பு ஒன்றின் நகர்வைத் தன் கதை சொல்லலில் கொண்டிருக்கிறது.எனினும்,பயணத்தின் உச்ச அனுபவத்தை,ஒரு மாய மனநிலையில்,சன்னத மொழியில் சொல்லும் மாஇசக்கி இச் சிறுகதைத் தொகுப்பின் மிக முக்கியமான சிறுகதை என்கிற அந்தஸ்தைப் பெறுகிறது.ஜெயமோகனின் மாடன் மோட்சம் தரும் அனுபவத்திற்கு நிகராக இருக்கிறது மாஇசக்கி.பெண் சிறு தெய்வம் ஒன்றின் பயணம் தான் மாஇசக்கி.அந்தப் பயணத்தின் முடிவு " இரத்தம் தா இரத்தம் தா சூடான இரத்தம் தா,
ஆண் இரத்தம் சுவைக்கும் பெண் இரத்தம் வேணாம்,
பெண்ணின் இரத்தம் குடித்த ஆண் இரத்தம் வேணும்,
நீ தா உன் இரத்தம் தா சூடாகத் தா " என்பதாக நிகழ்கிறது.
ஆனால்,அந்தப் பயணமும்,அப் பெண்சிறுதெய்வத்தின் பயண மன ஓட்டங்களும்,நேரடி அனுபவங்களும் சொல்லப் பட்டிருக்கும் புனைவு மொழி அபாரமான ஒன்று.சன்னத நிலையில் வெளிப் பட்டிருக்கும் மொழி.சாமி வந்தேறிய மனம் ஒன்றின் குறிசொல்லல்,மற்றும் அசைவை வார்த்தைகளில்,வரிகளில் உணர வைக்கும் புதிய அனுபவம் மா இசக்கி.கவிதை ஒன்றின் படைப்புத் தருணம் விழிப்பு மனநிலையில் கட்டமைக்கப் பட்டு,நிகழ்கிறதா,அல்லது ஆழ்மன நிலையில் ஒரு சன்னத அனுபவமாக நிகழ்கிறதா என்கிற விவாதம் இன்றைய இலக்கிய உலகின் மிக முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன்.இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கட்டமைக்கப் பட்ட,விழிப்பு மன நிலையில் உருவாகும் ஒரு படைப்பின் நுட்பங்களை விட சன்னத சாமியேறிய ஆழ்நிலை மன நிலையில் உருவாகும் படைப்பின் மொழி மற்றும் அனுபவ நுட்பங்கள் மிக மேலாக உன்னதமாக இருக்கின்றன என்கிற விவாவதத்தையும் முன் வைக்கிறேன்.மா இசக்கி குறித்து குட்டி ரேவதியிடம் இன்னமும் உரையாட வில்லை எனினும்,அக் கதை சன்னத மொழி கொண்ட புனைவாகவே படுகிறது.குட்டி ரேவதியின் கவிதைகள் மேல் அவருக்கு இருந்த ஆளுமையை விட பன்மடங்கு மேலான புதிய நுட்பமான அனுபவத்தை அவரது சிறுகதைத் தொகுப்பான நிறைய அறைகள் உள்ள வீடு தருவதாக உணர்கிறேன்.அவரது புனைவின் மொழி அதற்கு மிக முக்கியமானதொரு காரணமாக இருக்கக் கூடும்.அப் புனைவு மொழி மறுபடி மறுபடி அவரது சில சிறுகதைகளை வாசிக்கத் தூண்டுகிறது.
நீட்டிக்கும் வாய்ப்பை படைப்பு வடிவத்தில் கொண்டிராத சிறுகதை ஏற்படுத்தக் கூடிய அசாத்தியமான அனுபவம், சிந்தனை ரீதியான, தர்க்க ரீதியான நீட்டித்தல் தான்.குட்டி ரேவதியின் சிறுகதைகள் ஏற்படுத்தும் எண்ணங்களும் சிந்தனைகளும் அது குறித்தான தர்க்கங்களும் அவற்றை மறுபடி மறுபடி வாசிக்க வைக்கும் நீள் அனுபவமாக இருக்கின்றன.அந்த அனுபவத்தை இக் காலகட்டத்தின் அவசியம் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகள் குட்டி ரேவதி.