நம் குரல்

சரோஜா என்றொரு பெண்

சரோஜாவைப் பற்றி நிறைய எழுதலாம் என்றாலும் அவளைப் பற்றிய இந்த ஓர் அறிமுகமே போதுமானது. அவள் எனக்கு என்ன உறவு என்பது கூட முக்கியமில்லை. அவள் என் வயதொத்த ஒரு பெண் என்பது மட்டுமே அவளை அறிமுகப்படுத்தப் போதுமானது. சென்னையில் நானும் அவளும் தனியே சில வருடங்களைக் கழிப்பது என்று முடிவெடுத்தோம். நான் என் தொழில் நிமித்தமும் அவள் அவளின் கலை நிமித்தமும். அவள் ஒரு ரஷிய பாலே நடனக்காரி. ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்நடனத்தைக் கற்றுக் கொண்டதுடன் குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியருக்கும் சென்னையில் உள்ள ஒரு நடனப்பள்ளியில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நடனத்தின் மீது அவளுக்கு இருந்த விருப்பும் ஈர்ப்பும் தீராதது என்பதை நான் அறிவேன்.


காலையில் அவள் எழுந்ததுமே பாவாடையை அள்ளி முழங்கால்களுக்குள் இடுக்கிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து முந்திய நாள் வாங்கி வந்த ஆப்பிள் பழங்களைத் தின்னத் தொடங்குவாள். பல் துலக்குவது அன்றைய காலைக் கடனின் கடைசிப் பணியாக இருக்கும். சில ஆப்பிள்கள் உள்ளே இறங்கியதும் அன்று உடுத்த வேண்டிய ஆடைகளுக்கான தேர்வில் ஈடுபடுவாள். அதில் பீரோவில் இருக்கும் மொத்த துணியும் தரைக்கு வந்து அறையை நிரப்பியிருக்கும். பின் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்குப் பொருத்தமான உள்ளாடைகளைத் தேடி எடுக்கும் போது பெரும்பாலும் அவை அழுக்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. அவற்றை சோப்பு நீரில் அலசி வீட்டின் பின்னாலிருக்கும் வாகை மரத்தின் கீழே கட்டப்பட்டிருக்கும் கொடியில் மிகுதியான வெயில் படும்படியாக உலரப் போட்டுவிட்டு வந்து டிவியின் முன்னமர்ந்து சில திரைப்படப் பாடல்களைக் கேட்கத் தொடங்குவாள். பார்ப்பாள். உற்சாகம் பீறிட்டு நடனமும் ஆடத் தொடங்குவாள். மற்றவரின் இருப்பு குறித்த பிரக்ஞையே அவளுக்குப் பெரும்பாலும் இருக்காது என்று தான் தோன்றும். அதற்குள் நான் புறப்பட்டு வெளியே வந்திருப்பேன்.


எனக்கு அவளைக் குறித்த கவலை மேலிட பத்து மணி வெயிலின் சாலையில் என் இரு சக்கர வண்டியினை ஓட்டத் தொடங்குவேன். நிறைய சம்பாதிப்பாள். எந்தப் பொறுப்பும் எடுத்துக் கொள்ள மாட்டாள். அவள் குடும்பத்திலிருந்து யாரேனும் தானே முன்வந்து அவளிடம் பேச முற்பட்டாலோ அவர்களுக்கு நிறைவளிக்கும் சில உற்சாகமான பதில்களை அளித்து விட்டு முடித்துக் கொள்வாள். இந்த உலகில் அவள் தனியாக வாழ்வதைப் போன்ற நிலையை முழுமையாக நிலைநிறுத்திக் கொள்பவள் போன்ற பிரமையும் மயக்கமும் அவளைச் சூழ்ந்திருக்கும். பின் அந்த நாளைய அலுவல்கள் என் கழுத்தை இறுக்க அவளை முற்றிலும் மறந்து போயிருப்பேன்.


வீட்டுக்கு களைப்புடனும் இரவு உணவுக்கு ஏதேனும் சமைக்க வேண்டுமென்ற திட்டத்துடனும் வாயிற் கதவைத் திறந்த ஒரு நாள் வரவேற்பறையில் ஐந்தாறு முயல்கள் ஒவ்வொன்றும் சில கேரட் துண்டுகளுடன் ஆங்காங்கே சிதறி ஓடின. நான் வீறிட்ட உணர்வில் இருந்தேன். என்ன நடந்திருக்கிறது என்று நானே யூகிப்பதற்கு சில நிமிடங்கள் எடுத்தன. சரோஜா மாலை நேரத்தில் வீட்டிற்கு அந்த முயல்களை வாங்கி வந்திருக்கிறாள். பசிக்குக் கொறிக்க கேரட் துண்டுகளையும் போட்டு விட்டு மீண்டும் வகுப்பெடுக்கப் போயிருப்பாள். அவள் வர இரவு பத்து மணிக்கு மேலாகும். அவள் வரும் வரை ஒன்றும் செய்ய ஓடாமல் அந்த முயல்குட்டிகளைப் பார்த்த வண்ணமே கழித்தேன். முயல் குட்டிகள் ஏற்படுத்தும் கவிச்சை அந்த அறையை நிறைத்திருந்தது. ஜன்னல் கதவுகளைத் திறக்கவும் பயமாக இருந்தது. ஏற்கெனவே வீட்டுச் சொந்தக்காரிக்கு எங்கள் மீது ஒரு ஜாக்கிரதை உணர்வும் தீவிரக் கண்காணிப்பும் இருந்தது. இரு பெண்கள் தனியே வாழ்வது அவளுக்கு எப்பொழுதுமே கேள்விக்குறியான விஷயமாகவும் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் எங்களைத் துருவித் துருவிக் குடைந்து எங்கள் அன்றாடப் பணிகளை அறிந்து கொள்வதும் அந்த அம்மாவுக்கு கைவந்த கலையாக இருந்தது. சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்த முயல்குட்டிகள் பின்பு ஏதோ அவற்றின் இடத்தில் நான் ஒண்ட வந்த்து போல என்னைப் பொருட்படுத்தாது கேரட்டைக் கொறித்துக் கொண்டும் ஒன்றையொன்று கொஞ்சிக்கொண்டும் இருந்தன. எனக்கு எரிச்சலாகவும் அசெளகரியமாகவும் இருந்தது. என் மனதிலிருந்து அவற்றின் நினைப்பை உதறி விட்டுப் பணியில் ஈடுபட முடியும் என்று தோன்றவில்லை. அன்றைய நாளின் பணிச்சுமை கூடியதாயும் இன்னும் முடியாததாயும் உணர்ந்தேன்.


இம்மாதிரியான வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிப்பதற்கான பக்குவம் எனக்கு எப்பொழுதுமே இருந்ததில்லை. நினைத்த பொழுது நினைத்த ஊருக்குக் கிளம்பிச் செல்லும் பழக்கம் இருந்ததுடன் நான் அப்படி வாழவே மிகவும் விருப்பமுடையவளாக இருந்தேன். இதற்கிடையில் என்னால் இம்மாதிரியான பிராணிகளை கவனிப்பதென்பதோ ஏன் ஒரு தொட்டிச் செடியை வளர்ப்பதென்பதோ கூட மிகவும் சிரம்மாமன விஷயமாக இருந்தது. சரோஜாவின் நிலை இன்னும் மோசம். காலை பத்து மணிக்குக் கிளம்பிச்சென்றாளானால் இரவு பத்து மணிக்கு மேல் தான் வருவாள். இந்நிலையில் எதற்கு இம்மாதிரி வேண்டாததையெல்லாம் தலையில் இழுத்துப் போட்டுக் கொள்கிறாள் என்று என் எரிச்சல் பொங்கியது.


நானும் அவளும் அதிகமாக உரையாடிக்கொள்ள நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தோம். சனி, ஞாயிறுகளில் கூட தோழிகளைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு மாலையில் கிளம்பிப் போய் இரவில் நடுநிசியில் ஆட்டோவில் வந்து இறங்குவாள். அக்கறையின் பேரில் அவளிடம் ஏதாவது கேட்டால் கூட என்ன பதில் கிடைக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். என்னை அவள் மதித்தாலும் அவள் விஷயங்களில் யார் மூக்கை நுழைப்பதையும் அவள் விரும்பியதே இல்லை.





ஒரு முறை செஞ்சிக்கோட்டைக்கு இருவரும் சுற்றுலா செல்லலாம் என்று கிளம்பிச் சென்றோம். போய்ச் சேரும் வரை பேருந்தில் தூங்கிக் கொண்டே வந்தாள். இறங்கியதுமே ஒரு ஹோட்டலைத் தேடி உணவை முடித்துக் கொண்டோம். பின் செஞ்சிக்கோட்டையின் அடிவாரத்தில் இருந்தப் பெரிய புளிய மரத்தினடியில் பாறைகளில் தலை சாய்த்து உறங்கிப் போனாள். அவள் தூக்கம் விழிக்கும் வரை நான் மரத்தினூடான வானத்தை அளந்து கொண்டிருந்தான். பின் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எழுந்ததும் பசிக்கிறது என்றாள். உணவகம் சற்று சொலைவில் இருந்ததால் நடப்பதற்கு மாச்சப்பட்டுக் கொண்டு அங்கேயே அருகில் கிடைத்த மாங்காய்த் துண்டுகளை வாங்கிக் கடித்தாள்.


மென்று விழுங்கியவாறே, ‘காதலைப் பத்தி நீ என்ன நெனைக்கிற?’
‘யாரப்பத்தியாவது நெனக்குறதுன்னா நெனைக்கலாம். காதலைப் பத்தி என்ன நெனைக்குறது?’.
‘’கடிக்காத....என்ன சொல்லு?’ என்றாள்.
‘இன்னும் வரல எனக்கு. அதுக்கு நேரமே இல்லாம சந்தர்ப்பமே இல்லாம இருக்கே’
‘எனக்கு வந்துருச்சு போல இருக்கு’
‘யார் மேல?’
‘நேத்து நானும் அவரும் ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டோம்’ என்றாள்.


எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அல்லது அவளும் அதைப் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தது எனக்கு ஒரு வித ஏமாற்றத்தைத் தந்த்து.




நான் வீட்டு வாசலுக்கு வந்து வீட்டின் முன் நீளும் தெருவின் முனை வரை வந்து அவள் வருகிறாளா என்று காத்திருந்தேன். அந்தத் தெரு வெறிச்சோடி சில நாய்கள் ஆங்காங்கே நடுத்தெருவில் அயர்ந்து கிடந்தன. எனது அணக்கத்தில் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு ’நீதானா?’ என்ற அர்த்தத்தில் மீண்டும் தரைக்கு தலையைக் கிடத்தின. அந்தத் தெருவில் எல்லோருக்கும் சரோஜா மிகவும் பிரசித்தம். எவ்வளவு தாமதமாக வந்தாலும் எந்த வீட்டின் உள்ளிருந்தோ குரல் கேட்கும், ‘என்ன சரோஜா? இப்பத் தான் வர்றியா? ஒரு வாய் சாப்பிட்டுப் போ?’, என்று. நாய்கள் வாலை ஆட்டி அவள் பின்னால் வரும். மிக நிச்சயமாய் ஒரு பாக்கெட் பிஸ்கெட் வாங்கி வருவாள் என்று அவை அறிந்திருக்கும். இன்னும் வரவில்லை. எனக்குக் கவலை மேலிட்டது. அந்தத் தெருவின் வளைவைக் கடந்து அடுத்த தெருவின் தொடக்கத்திற்கு வந்திருந்தேன். ‘மாம்பூவே, சிறு மைனாவே, மச்சானின் பச்சைக்கிளி’ என்று கொஞ்சம் அதிகமான குரலுடன் பாடிக்கொண்டே வந்தாள். இருட்டில் அவள் குரல் மட்டும் கேட்டதே அன்றி அடையாளம் தெரியவில்லை. பாடல் தொடர்ந்தது. மெல்ல குரல் அருகில் கேட்டது. அவள் கையில் ஒரு கூண்டு கிளியுடன் ஆடிக்கொண்டிருந்த்து. அதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு முட்டிக் கொண்டுவந்த்து.




தோன்றுவதையெல்லாம் செய்து பார்ப்பதில் அவளுக்கு நிகர் அவள் தான். அவை ஒரு பொழுதும் சாகசங்களாகத் தோன்றியதேயில்லை. அவள் சூழலுடன் ஒரு விதமான கிறக்கம் கசியும், உண்மை ஊற்றெடுக்கும் உறவை மட்டுமே தக்கவைத்துக் கொண்டிருந்தாள். அவளை யாருமே கடிந்து ஒரு வார்த்தைப் பேசமுடியாத அளவுக்கு பிரியத்தையும் அதற்கான நேர்மைகளையும் வைத்திருந்தாள். தனிமையுடனான இயற்கையின் சம்பந்தங்களையும் அவள் கற்றுத் தேர்ந்திருந்தாள். அது புறவயமான வெளிப்பாடாக இல்லாமல் அவளது ஆளுமையின் உடையாக மாறியிருந்தது. சமூகத்தின் சட்டைகளைக் கழற்றி விடுகிறாளோ என்று தோன்றும் அளவிற்கு அசாத்திய இருப்பாக அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.




திருமணத்திற்குப் பின் சில வருடங்கள் கழிந்து தோளில் குழந்தையுடன் கொட்டும் மழை, அவள் குழந்தையின் மீது போர்த்தியிருந்த துண்டை நனைத்திருந்ததுடன் என் வீட்டு வாயில் வந்து நின்றாள்.
‘ஒன்னோட கொஞ்ச நாள் வந்து தங்கிக்கலாமா?’ என்றாள்.


நான் பதில் சொல்லும் முன்பே என் கைகள் அவள் குழந்தையை வாங்கிக் கொள்ள நீண்டன. அவளையும் இந்த வாழ்க்கை பரிசோதனை செய்யத் தொடங்கிவிட்டது என்பது உறுதியாயிற்று.






குட்டி ரேவதி

12 கருத்துகள்:

Raju சொன்னது…

எக்ஸலண்ட்.

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

//அவளையும் இந்த வாழ்க்கை பரிசோதனை செய்யத் தொடங்கிவிட்டது என்பது உறுதியாயிற்று.//


வலியான வரிகள்......ம்ம்ம்....

சந்தனமுல்லை சொன்னது…

வாசித்து முடித்ததும் மனம் ஒரு மாதிரி வெறுமையாக இருக்கிறது..

Nice write up!

தமிழ்நதி சொன்னது…

முழுவதுமாக வாசித்து முடிக்கத் தோன்றும் நடையும் கதையும். சரோஜா திருமணத்தின் முன் இயல்பாகவே இருந்தாள். அது பழக்கப்பட்ட சமூகமனதிற்கு இயல்பு மீறிய பிறழ்நிலையாகவே தோன்றியிருக்கும். திருமணத்தின்பின் அவள் தனது சுயத்தை இழந்திருப்பாள். திருமண முறிவின் பின்னும் அவளால் தன்னை மீட்டெடுக்கமுடியாத நிலைக்கு, குழந்தை என்ற பந்தம் கொண்டுவந்துவிட்டிருப்பதை அழகாகச் சொல்லியிருந்தீகள். சரோஜா எவ்வளவு வேகமோ அவ்வளவு வேகம் கதையின் முடிவிலும்…. சடக்கென்று முடிந்துபோனது மாதிரி எனக்குத் தோன்றியது… உங்களுக்கு…? ஒருவேளை அப்படித்தானோ உண்மையும்?

CS. Mohan Kumar சொன்னது…

அற்புதமான இடுகை ரேவதி. சரோஜா என்ற பெண்ணை நன்கு அறிய முடிந்தது.. வாழ்த்துக்கள். ஒரு நல்ல சிறுகதை வாசித்த உணர்வு

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

நீரோடை போல் அழகாக இருக்கிறது!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

Muruganandan M.K. சொன்னது…

"சமூகத்தின் சட்டைகளைக் கழற்றி விடுகிறாளோ என்று தோன்றும் அளவிற்கு அசாத்திய .."

அவள் வாழ்வு திருமண முறிவினால் முற்றுப் பெறவே முடியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.

துபாய் ராஜா சொன்னது…

எத்தனையோ சரோஜாக்களின் வாழ்க்கையை காலம் இப்படித்தான் சருகான ரோஜாக்களாக மாற்றிவிடுகிறது. :((

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்!
நல்லாருக்குங்க.. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

எனக்கு ஒரு சந்தேகம் சகோதரியே...கணவன் ‍ மனைவிக்கு இடையே தகறாரு, பிரிவு என்று வரும்போதெல்லாம், தாய்மார்கள் மட்டுமே குழந்தையை பாதுக்காக்கும்/வளர்க்கும் பொருப்பை எடுத்துகொள்கிறார்கள்..ஏன் ஒரு ஆணும் உதாரணத்துக்குகூட இப்படி குழந்தையை தன்னோடு வைத்துகொள்வது கிடையாது...நடமுறை பிரச்சனைகள் இருப்பதாலா...இதனை வீராப்பு பேசும் ஆண்கள் ஏன் சிரத்தை எடுக்க கூடாது..குழந்தை என்றால் இருவருக்கும்தானே...பெண்களே ஆணின் அழகிலோ பேச்சிலோ மயங்காதீர்கள்..அப்படி மயங்கினால்..பிரிவுக்கு எப்பவும் தயாராக இருங்கள்...அதே சமயத்தில் கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் இன்று கூடுகிறதை மனதில் கொள்க..

v.pitchumani சொன்னது…

சரோஜாவுக்கு அவளுடைய திருமணம் முயல் கிளி வளர்ப்பு போல் தான் என நினைக்கிறேன். அதற்காக திருமண முறிவுக்காக அவள் வருத்தப்படுவாள் என நான் நினைக்கவில்லை. வே.பிச்சுமணி