நம் குரல்

தமிழகப் பெண்ணிய இயக்கங்கள்

தமிழகத்தில் பெண்ணிய இயக்கங்களே இல்லை என்று சொல்வதினும் அவை வேறு வேறு பரிமாணங்களை அடைந்து விட்டன என்று சொல்வது மிகப் பொருந்தும். கட்டிடத் தொழிலாளர்களுக்காக உழைக்கும் பெண்ணியப் போராளி கீதாவைப் போன்றவர்கள் முழுமையும் அவர்களின் உரிமைகளுக்காகவும் பிரச்சனைகளுக்காகவும் உழைப்பவர். அர்ப்பணிப்பு மிக்கவர். அவ்வாறு ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருக்கும் ஒருங்கிணைக்கப்படாத பெண்களுக்காகத் தொடர்ந்து உழைக்கும் போது தான் அவர்களின் உள்ளார்ந்த புரையோடியிருக்கும் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டு அதற்காகப் போராட முடியும். இவ்வாறு மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களையும், சமூகத்தில் அடிப்படை உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்களையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் தொண்டு நிறுவனங்கள் தனித்த, காலத்திற்கேற்றவாறான, உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விவாதிக்கப்படுகின்ற பெண்ணுரிமைப் பிரச்சனைகளை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கின்றன. தமிழக அளவில் அவற்றைத் தீர்த்து வைப்பதான திட்டங்களுடனும் நிதி ஒதுக்கீடுகளுடனும் தொடங்குகின்றன. ஆனால் அத்திட்டங்கள் மிகவும் குறுகிய பார்வையுடன் வரையறுக்கப் படுவதாலும், ஒதுக்கிய நிதி முடிந்து போகும்போது திட்டங்கள் முடிவுக்கு வந்து விடுவதாலும் அவர்களின் பெண்ணியச் செயல்பாடுகள் நிறைவை எட்டாத பணிகளாகவே இருக்கின்றன.

இன்று தனிப்பட்ட அளவிலோ பொது வெளியிலோ பாதிக்கப்படும் பெண்களின் பிரச்சனைகளை விவாதிக்க, போராட என்று சமூக இயக்கங்கள் எதுவும் இல்லை. மீனவர் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற ஒட்டுமொத்தமாகத் தமது ஆற்றலை எல்லாம் திரட்டிப் போராடினாலும் அவர்களை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் அல்லது சமரசப்படுத்தவும் அரசியல் இயக்கங்கள் அல்லது கட்சிகள் இருக்கின்றன. இஸ்லாமிய மதப் பெண்களுக்காகப் போராடிவரும் புதுக்கோட்டையிலிருந்து இயங்கிவரும் ஷெரீஃபா தன்னால் இயன்ற வரை அப்பெண்களின் மீதான ஒடுக்குமுறையைத் தளர்த்துகிறார். அவர் மட்டுமே போதாது. அவரைப் போல நிறைய பெண்கள் மத ஒடுக்குமுறைக்கான இயக்கத்தைச் சமைக்க வேண்டியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட பெண்களுக்காவே போராடும் இயக்கங்களும் தேவைப்படுகிறது. அவர்களின் உண்மையான சமூக நிலையையும் எந்தெந்த உரிமைகள் அவர்களை இந்தக் கட்டுகளிலிருந்து விடுவிக்கும் என்று அறிந்த பெண்ணிய இயக்கமும் தேவைப்படுகிறது. அன்றாடம் ஊடகங்களில் வெளியாகும் பெண்களைப் பற்றிய தவறான கோணமும் மொழிதலும் உடைய செய்திகளை எதிர்த்துப் போராடவே இயக்கமொன்று தேவைப்படுகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் பெண்களை வெறுமனே தம் கொள்கை அதிகாரத்தின் கீழே செயல்படும் மந்தைகளாகவே நடத்துகிறது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில் தமிழகத்தில் நடந்த கூட்டங்களும் போராட்டங்களும் பேரணிகளும் ஆணாதிக்கச் சிந்தனையைத் தழுவியதாகத்தானிருந்தன. படுகொலையின்போது பெண்களின் மீது இராணுவத்தாலும் அரசு இயந்திரங்களாலும் நிகழ்த்தப்பட்ட பாலிய வன்முறையின் அரசியல் சூழ்ச்சித்திறனை, இயக்கத்தன்மையை ஒரு பேச்சாக்குவது கூட இங்கு சாத்தியம் இல்லாமல் இருந்தது. இவ்வாறு வேறுவேறு தளங்களில் நின்றும் அந்தந்த தளங்களுக்கான கருத்தியலை நுட்பமாக்கியும் அதைச் செயல்படுத்துவதான இயக்கங்கள் தாம் நமக்கு தேவையாக இருக்கிறது. நிறைய பெண்ணியப் போராளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால் நான் சிவகாமியையும் வ. கீதாவையையும் குறிப்பிட்டதும் அவர்கள் மீதான என் ஈர்ப்பும் பெண்ணியச் சிந்தனைத் தளத்தில் தான். எனக்கு அவர்கள் கருத்தியலுடன் வேறுபாடுகள் இருந்த போதும் அவர்கள் தொடர்ந்து ஊக்கமுடன் இயங்குவதும் உழைப்பதும் பிடித்தமானதாக இருக்கிறது. இயக்கமாய் பணியாற்றிக் கொண்டிருப்பதுடன் இயக்கத்திற்கான கருத்தியல் தத்துவத்தை வகுப்பவராகவும் சிவகாமி இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இன்றைய சூழலில் பெண்கள் எல்லோரும் ஒரே குடையின் கீழ் வந்து நின்று போராடமுடியாது. அது தேவையுமில்லை. வேறுவேறு மதம், சாதி, வர்க்கம் சார்ந்தவர்களாக இருக்கிறோம். உலகெங்கும் வேறுவேறு நிலங்களில் வசிப்பவர்களாகவும் அங்கங்கு நிலவும் அரசியல் சிந்தனைகளின் தாக்கம் நிறைந்தவராகவும் இருக்கிறோம். வேறுவேறு துறை சார்ந்த அறிவையும் அவற்றிற்கான அறிவுப்பெருக்கத்தில் ஈடுபடுவதிலும் முனைப்பாய் இருக்கிறோம். இந்நிலையில் அந்தந்த வட்டத்திற்கான பெண்ணுரிமைகளைப் பேசுவதில் தொடங்கிப் பின் விரிவான பிரச்சனைகளைப் பேச பொதுக்களத்திற்கு வரலாம். இயக்கங்கள் அடிப்படையான சிறிய உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினால் தான் சமூக அளவில் ஏற்றத் தாழ்வற்ற பெண்ணுரிமைகளைச் சாத்தியமாக்க முடியும். அதாவது தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் தன்னளவில் வெற்றி பெற்ற பெண்கள் அவர்கள் தமது சமூக மரியாதைகளுடன் மேன்மேலும் முன்னேறிக் கொண்டிருப்பதை வைத்து சமூகத்தில் எல்லா தரப்பு பெண்களும் முன்னேறிவிட்டனர் என்று கூறுவது அபத்தம். வறுமையினாலும் சமூக ஒடுக்கு முறைகளாலும் இன்னும்இன்னும் சமூகத்தின் கீழ்நிலையை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இருக்கும் வரை அந்த வெற்றி பெற்ற பெண்களின் வெற்றி முழுமையானதென்று அர்த்தமாகாது.
குட்டி ரேவதி

7 கருத்துகள்:

குப்பன்.யாஹூ சொன்னது…

கண்ணகியை நாம் முன் உதாரணமாக கொள்ளலாமா


ஒரு மன்னன் தவறான தீர்ப்பு கொடுத்தான் அல்லது தன கணவன் இறப்பிற்கு காரணம் என்பதால், சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு அந்த ஊரையே அழித்தது எந்த வித நியாயம் எனக்கு புரிய வில்லை.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

பெண்களின் அடிப்படை சிந்தனைகளில் மாற்றம் வராத போது அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை பெண்ணியவாதிகள் கொண்டு வரமுடியாது.இஸ்லாம் இனம்,"பெண்களை ஒரு கட்டுக்கோப்பான முறையில் வைத்திருக்க வேண்டித்தான் பர்தா அணியச்செய்கிறோம்" என்று கூற அதை வழிமொழிபவர்கள் படித்த பெண்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.இவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அதே இனப்பெண்கள் அதே இனத்தாலேயே விமர்சிக்கப்படுவதை,அவர்கள் யாருக்காக போராடுகிறார்கள் என்று உணராத அந்தப்பெண்களின் அறியாமையை யாரிடம் முறையிடலாம்.பெண்ணடிமை தீரப் பெண்கள் முயல்வதுதான் இன்றைய பெண்ணினத்திற்கு முதல் தேவை என்பது எனது கருத்து.

அன்புடன்,
க.நா.சாந்தி லெட்சுமணன்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் சொன்னது…

கட்டுரை அருமை. பாமர மக்களை படித்த சுயநலவாதிகள் ஏமாற்றுவதைப்போலத்தான் பெண்களையும் இந்தச் சமூகம் பாமரர்களாகப் பழக்கி/பாழாக்கி வைத்திருக்கிறது! படிப்பறிவும் பகுத்தறிவும்தான் பெண்களின் நிலை உயர்த்தும். அல்லாதவரை, மனைவியை பெண் கவுன்சிலராக்கிவிட்டு பின்னாலிருந்து இயங்கும் ஆண் அரசியல்வாதிகளைப் போலத்தான் பெண்களின் சமூக முன்னேற்றம் போலியாக வெளிப்படும்.

Salahuddin சொன்னது…

இன்றையச் சூழலில், பெண்ணியம் அல்லது பெண்ணுரிமை என்பது இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் மாறுபட்டதாக இருக்கிறது. மேற்கத்தியர்களின் பார்வையில் பெண்ணுரிமையாகத் தென்படும் ஒன்று இந்தியர்களின் பார்வையில் அப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அடிப்படையான சில விஷயங்கள் எல்லா இடங்களிலும் காலங்களிலும் பொதுவானதாக இருக்கும். உதாரணமாக, பெண்ணாக பிறக்கும் உரிமை, ஆணுக்குச் சமமாக வாழும் உரிமை, கல்வி கற்பது, சுயமாக பொருளீட்டுவது போன்ற உரிமைகளைக் குறிப்பிடலாம்.

இதுபோன்ற அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், அவை அனைத்துமே இஸ்லாமியப் பெண்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டிருப்பதைக் காண்பீர்கள். மேற்கத்திய உலகிற்கு 'பெண்ணியம்' என்ற வார்த்தைகூட அறிமுகமாகியிருக்காத காலத்தில் இது நிகழ்ந்தது. ஆனால் இவற்றை நடைமுறைப் படுத்துவதில் இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

//இஸ்லாமிய மதப் பெண்களுக்காகப் போராடிவரும் புதுக்கோட்டையிலிருந்து இயங்கிவரும் ஷெரீஃபா தன்னால் இயன்ற வரை அப்பெண்களின் மீதான ஒடுக்குமுறையைத் தளர்த்துகிறார். அவர் மட்டுமே போதாது. அவரைப் போல நிறைய பெண்கள் மத ஒடுக்குமுறைக்கான இயக்கத்தைச் சமைக்க வேண்டியிருக்கிறது.//

இஸ்லாமியப் பெண்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர் என்றால் அதற்கு இஸ்லாமிய மார்க்கம் காரணம் அல்ல. மாறாக இஸ்லாமிய விழுமியங்களை சரிவரப் புரிந்துக் கொள்ளாத, அல்லது அவற்றை நடைமுறைப் படுத்த விரும்பாத சில இஸ்லாமியர்களே இதற்குக் காரணம்.

நீங்கள் குறிப்பிட்ட சகோதரி ஷெரிஃபாவும் கவிஞர் சல்மாவும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து பேசினர். 'மதங்களில் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்படுகிறதா?' என்பது தலைப்பு. 'இல்லை' என்ற தரப்பில் இருவரும் பேசினர். எதிர் தரப்பிலிருந்த ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர் அதை மறுத்து, இஸ்லாமில் பெண்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பற்றி விளக்கினார். சகோதரிகள் இருவருமே அதை ஒப்புக் கொண்டு, பிரச்னை இஸ்லாமில் இல்லை, மாறாக சில முஸ்லிம்கள்தான் அவ்வாறு நடந்துக் கொள்கின்றனர் என்ற முடிவுக்கு வந்தனர்.

இஸ்லாமில் பெண்ணுரிமையைப் பற்றி பேச நிறைய விஷயங்கள் உள்ளன. வாய்ப்பிருந்தால் அதைப் பற்றி நீங்கள் ஆராயலாமே?

Salahuddin சொன்னது…

//இஸ்லாம் இனம்,"பெண்களை ஒரு கட்டுக்கோப்பான முறையில் வைத்திருக்க வேண்டித்தான் பர்தா அணியச்செய்கிறோம்" என்று கூற அதை வழிமொழிபவர்கள் படித்த பெண்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.//

தவறான புரிதல். பர்தா முறை என்பது இஸ்லாம் வகுத்துத் தந்திருக்கும் ஆடை முறை. ஒரு Dress Code! இதை ஏதோ இஸ்லாமிய ஆண்கள் எல்லோரும் சேர்ந்து இஸ்லாமிய பெண்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குவது தேவையற்றது.

கமலா சுரையாவைத் தெரியும்தானே? அவரைப் போல முற்போக்குச் சிந்தனையும் செயல்பாடுகளும் கொண்ட பெண்மணிகளை இந்தியாவில் காண்பது அரிது. அவர் இஸ்லாமிய வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தபோது அதன் முக்கிய காரணமாக பர்தாவைத்தான் சொன்னார். அவரது இறுதி நாள் வரை பர்தாவிலேயே இருந்தார். அவரை யாராவது கட்டாயப் படுத்தினார்களா?

பிரிட்டனைச் சேர்ந்த யுவான் ரிட்லி என்றொரு பத்திரிக்கையாளர், சிலகாலம் தலிபான்களால் சிறைப் பிடிக்கப் பட்டிருந்து விடுவிக்கப் பட்டார். அவர் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமலேயே தானாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். இன்றளவும் அவர் பர்தா அணிபவராகவும் அதன் பெருமைகளைப் பேசுபவராகவும் இருக்கிறார்.

தேவைப்பட்டால் இதற்கான சுட்டிகளைத் தேடித் தருகிறேன்.

பர்தாவை ஒரு கண்ணியமான ஆடையாகவோ, பெண்ணடிமைத்தனத்தின் குறியீடாகவோ பார்ப்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், பர்தாவை விரும்பி அணியும் பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் இதை பெண்ணடிமைத்தனமாக கருதுவதில்லை. அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவும் தயங்குவதில்லை.

இரத்தின புகழேந்தி சொன்னது…

அந்த காலத்திலேயே அஞ்சலையம்மாள் போன்றவர்கள் அதிகம் படிக்காமலேயே போராடியிருக்கிறார்கள். பெண்ணியம் என்ற பெயரில் இல்லாமல் இருக்கலாம்.

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

தமிழக பெண்ணிய இயக்கங்கள் பற்றி பலவும் அறிய முடிந்தது.

இன்றைய சூழலில் பெண்கள் தத்தமது சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப போராடுகையில் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது போலத் தோன்றினாலும் அடிப்படை இலக்கு ஒன்றுதான்.