நம் குரல்

வாசகனும் எழுத்தாளனும்: புத்தகக் கண்காட்சிவழக்கம் போல சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒரு கொண்டாட்டமான நிகழ்வு தான். கண்காட்சியின் பொழுது அரிதாகவே புத்தகம் வாங்குவேன். ஆனால் ஒவ்வொரு பதிப்பகமும் என்னென்ன புத்தகங்களை வெளியிட்டுள்ளது, ஒவ்வோர் எழுத்தாளரும் என்னென்ன புதிதாக எழுதியுள்ளனர் என்பதை முழுதுமாகத் தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த நாட்களைப் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வகையில் ஆயிரக்கணக்கிலான பக்கங்களை உடைய நூல்களை எழுதுவதும் ஒரே எழுத்தாளரே பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிடுவதும் அவற்றில் பெரும்பாலும் அந்த எழுத்தாளரின் வலைப்பதிவில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பாய் இருப்பதும் புத்தகக்கண்காட்சி முடிவதற்குள் கடைகளில் இடம்பெற வேண்டுமென்ற அவசரக் கோலத்தில் வடிவம் பெறுவதுமென இருந்தது இந்தப் புத்தகக் கண்காட்சி. ஒவ்வொரு பதிப்பகமும் காலப்போக்கில் அவ்வவற்றிற்கான தனித்தன்மையைக் கண்டடைந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் புரிந்தது. அதாவது முழுக்க முழுக்க அரசியல் அல்லது இலக்கியம் அல்லது அரசியல் இலக்கியங்கள் என வேறு வேறு வகைமையான நூல்களையே தொடர்ந்து பதிப்பிப்பதால் அவ்வகையான நூல்கள் தேவைப்படும்போது அந்தந்தப் பதிப்பகத்தில் போய்ப் பெற்றுக் கொள்வது வசதியாக இருக்கிறது.
வடிவமைப்பிலும் நூல் நேர்த்தியிலும் நவீன இலக்கிய பதிப்பகங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் அடையாளம், க்ரியா, ஆழி, தமிழினி போன்றவை அந்நூலின் உள்ளடக்கத்தினை வெளிப்படுத்தும் புற அழகையும் தன்மையையும் சேர்ப்பதில் அதிகக் கவனமும் அக்கறையும் எடுத்துக் கொள்வது அந்நூல் சொல்லும் படைப்புக்குள் நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்வது போன்றதாக இருக்கிறது. இது, அந்த நூல் ஒரு புனைவு எனில் அதைத் தொகுக்கவும் திருத்தவும் படைப்பாசிரியரினும் இன்னொருவர் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம். அவசர கதியில் நூல்கள் வரும்போது அவற்றின் அழகும் கருத்தும் சிதறுண்டு இருப்பதாகத் தோன்றுகிறது.
அபூர்வமாகத் தான் எழுத்தாளர்களைச் சந்திக்கிறேன். அதிலும் சந்திக்க எளிமையானவர்களை நேரடியாகக்சென்று நெருங்கிப் பேசுவேன். எழுத்தாளர் அழகிய பெரியவனை அவ்வாறு சந்தித்தேன். அவரை எங்குச் சந்தித்தாலும் அணுகுவதும் பகிர்ந்துகொள்வதும் மிகவும் இலகுவான அனுபவமாக இருக்கும். எல்லா எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் கூட அவரை நேரில் சந்திப்பதென்பது இத்தகைய அனுபவமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். எழுத்தாளர்களில் என்னைப் பொறுத்தவரை பிரபலமானவர் பிரபலமற்றவர் என்ற வரைமுறை கிடையாது. சமூக இறுக்கங்களினின்று விடுபடுவதற்கான வழிமுறைகளைச் சொல்லுபவர்கள் நல்ல எழுத்தாளர்கள். அதனுடன் தானும் சமரசமாகி வாசகர்களையும் சமரசம் செய்யத் தூண்டி அதற்கான மயக்க மருந்தை எழுத்தாக்கி அளிப்பவர்கள் மோசமான எழுத்தாளர்கள். எழுத்தாளர்கள் தமது பிரபலத்தை, வாசகர்களின் எண்ணிக்கையைக் கொண்டும் விற்கப்படும் தமது நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டும் அளவிடுவது அபத்தம் என்றே தோன்றுகிறது. அதையெல்லாம் மீறி படைப்பாளி ஒரு வாசகனுக்குத் திறந்து விடும் கதவுகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் வைத்து அளவிடலாம். ஆனால் அத்தகைய அளவீடோ சாத்தியமில்லை.
பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தினர் தாம் புத்தகங்கள் மீதான பெருத்த அபிமானத்துடன் வருகின்றனர். அவர்களின் அன்றாடச் செலவில் புத்தகங்களுக்கும் பணம் ஒதுக்கும் அவர்களின் ஊக்கத்தைக் காணமுடிந்தது. தான் வாசிக்க, தன் குழந்தைக்கு இந்தப் புத்தகம் அவசியம் எனப் பெண்களும் வந்து குவிந்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை இக்கண்காட்சி, வீடு, உறவினர் வீடு, பேருந்து நிலையம், அலுவலகம், காய்கறிச் சந்தை போன்ற மற்ற இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வெளியாகவும் எழுத்தாளர்களுடனான நேரடி அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பாகவும் இருக்கின்றது. தீவிரமான சில பெண் வாசகர்கள் பின்னாளில் மெல்ல மெல்ல தன்னையும் படைப்புத் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டதை நானறிவேன்.
எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாசகர்கள் ஏமாற்றம் அடைவதான குறிப்பை நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். வாசகர்களுக்கு மட்டுமன்று. எழுத்தாளர்களுக்கும் இதே அனுபவம் தான். இப்புத்தகக் கண்காட்சியில் எனக்குப் பிடிக்காத அனுபவமும் இல்லாமல் இல்லை. சில பல வருடங்களுக்குப் பின் ஒரு கவிஞரை இப்பொழுது தான் இப்புத்தகக் கண்காட்சியில் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் எனக்கான இரு விஷயங்களைப் பேச இரண்டு கொடுக்குகளைப் போல வைத்திருந்தார். ‘ஒன்று: என் நூல்களின் அட்டை ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கின்றன? இரண்டு: அந்தக் குறிப்பிட்ட நடிகருக்கு நீங்கள் உதவியாளராக வேலை பார்க்கிறீர்களாமே?’. என்னிடம் தெளிவான பதில்கள் இருந்தன. ‘உங்கள் பார்வைக்கு என் அட்டைகள் அப்படித் தோன்றியிருக்கலாம். என்றாலும் அட்டையை விட உள்ளடக்கம் முக்கியமில்லையா? மேலும், அந்த நடிகருக்கு நான் உதவியாளராக வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு வேலை பார்க்க அவரது மனைவி இருக்கிறார்’ என்றேன். ஏற்கெனவே என் மீதான கடுப்புகளை தனது விஷக்கொடுக்குகளில் சேமித்து வைத்திருந்தார் போலும். எனது நூல் அட்டைகள் மோசமானவையாக இல்லாமல் பார்த்துக் கொள்வதில் வெகுவாக மெனக்கெடுவேன். நூலை வாசித்தவர்கள் அறிவர். ஒரு புத்தகத்தைத் தொடுகையில் அதன் உயிர்ப்பை அந்தப் புத்தகத்தின் அட்டை தக்கவைத்திருக்க வேண்டும். இன்னொன்று ஒருவரைக் கேள்வி கேட்கும் அணுகுமுறை. எவ்வளவு தவறான கேள்விகளாய் இருந்தாலும், அதற்கான முறையும் பக்குவமும் இருக்கின்றன என்பதும் என் பார்வை. அந்த எழுத்தாளர் மீது எனக்கு மிகுந்த பரிதாபம் ஏற்பட்டது, அந்த விஷத்தை அவர் தன்னுள் எவ்வளவு காலம் சேமித்துச் சுமந்து வைத்திருந்தாரோ என்று. ஓர் எழுத்தாளன் எதையும் எவரையும் வாசக மனோபாவத்துடன் அணுகும் முறை உடையவராய் இருக்கவேண்டும். ஒரு நல்ல படைப்பாளி என்பவர் முழுமையான வாசகனும் கூட. ‘நாம் எழுதிய நூல்களுக்கு வெளியிலும் நமது வார்த்தைகள் உலவுகின்றன’, என்பதை கவிஞர் தேவதேவனிடம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.குட்டி ரேவதி

6 கருத்துகள்:

ஜெரி ஈசானந்தா. சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்.

PPattian : புபட்டியன் சொன்னது…

கனமான தொகுப்பு.. நன்றி

மகேந்திரன்.பெ சொன்னது…

உங்கள் படைப்புகள் பலவற்றை எனது வலையில் பதிந்துள்ளேன் உங்களுக்கு முன்பாகவே :)
http://mahendhiran.blogspot.com

Romeoboy சொன்னது…

அழகிய பெரியவனை நானும் சந்திதேன். சிறிது நேரம் தன அவரிடம் பேசினாலும் ரொம்ப நெருக்கமான நண்பரிடம் பேசியதை போன்று இருந்தது .

உங்களின் புத்தகங்களின் பெயர்களையும் பதிப்பகத்தின் பெயர் சொல்ல முடியுமா.

தமிழ்நதி சொன்னது…

ரேவதி,

ஏறத்தாழ அனைத்து நாட்களும் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன். அப்படிக் கூப்பிடும் மாயவசீகரம் புத்தகங்களுக்கு இருக்கவே இருக்கிறது. எனக்கும் சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. அவற்றை எனது வலைத்தளத்தில் பகிரர்ந்துகொள்ளலாமென்றிருக்கிறேன். மற்றபடி, நினைத்துப் பார்த்தால் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே டிசம்பர்-ஜனவரி மாதங்களில் சென்னையில் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.

துபாய் ராஜா சொன்னது…

'கனியிருப்ப காய் கவர்ந்தற்று' என்பதை அறியாதவரெல்லாம் கவிஞரா...