நம் குரல்

உடலுக்கே மண்





கூவிக் கூவிப் பெண்ணுடல் விற்கப்படும் தேசத்திலிருந்து வந்தவள் நான். பெண்ணென்ற என் ஒற்றை அடையாள முகமும் உனக்குப் போதாது என்றறிவேன். பிற அடையாளங்களும் உன்னால் வர்ணிக்கப்படுபவை. முலையின் அளவுகோல்கள், யோனியின் புனிதம், சருமத்தின் நிறம், வீடுறையும் தெரு, அப்பாவின் பூர்வீகம், என்னுடைய உடை நகை முரண் எல்லாமும். மண்ணை இயக்கும் துப்பாக்கிகளில் எதை நான் விரும்புகிறேன் என்ற அரசியலும். ‘விரைக்குறிகள்வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பொது நோக்குடையவை எல்லா ஆயுதங்களும். இதை அறியாதவள் அல்ல நான்.



பிரசவம் வளர்க்கிறேன் தினம் தினம் மண்ணைத் தின்று. மலம், மூத்திரம், உதிரம், விந்து நீர் சவைத்தூறிய மண் சுவைத்துத்தான் என்னுரிமைக்கருவைப் பேணுகிறேன். மண்ணுள் உறங்கும் என் அன்னையர், தந்தையர், மூதாதையர்களின் கொதிப்பான பிரக்ஞையால் என் பாதங்கள் கொப்புளிக்கின்றன. இப்படியாக மண்ணுக்கு அடியில் வேர்கொண்ட ரகசியங்களுடன் நீயறியாத சங்கேதங்களால் என்னால் பேசமுடியும். இது உனக்கு அதிர்ச்சியளிக்கலாம். யோனிக்குள் தம் அனுமதியின்றி நாக்கிறங்கிய அவமானத்தால் நாண்டுகொண்ட எம் தங்கையரும் அங்குதாம் உறங்குகின்றனர் என்பது உனக்குப் புதிய தகவல்.



என் கால்களை பதிந்தழுத்தி நடக்கும்பொழுது எலும்புகள் நொறுங்கும் சப்தங்களைக் கேட்கிறேன். வரலாற்றின் மாளிகைகளுக்குச் சல்லிகளானவை. ஆழம்வரை மண் சுமந்த உடல்பிதுங்கிக் குமிழிடும் உதிரச்சப்தமும். நெருப்புக்கு எரியூட்டப்படாமல் சூரியனுக்கு படுக்கையானவர்கள் உறங்கும் மண். வன்மம் சூப்பிய மாங்கொட்டைகளாய் எறியப்பட்ட யோனிகள் விருட்சங்களாய் எழும்பி நின்று கோடை வானிலையை மாற்றுகின்றன. நினைவுகளின் கைப்பாத்திகளில் நீர்ப்பாய்ச்சி வளர்க்கப்பட்ட மீன்குஞ்சுகளைப் போன்ற முலைகளோ சுடுகின்ற கரைக்கு ஏவப்பட்டதால் கண்விக்கித்து நிற்கின்றன. பாவம், மீன்களாகத் திட்டித்துவிடப்பட்டவை!



மண்ணை உண்டு வளரும் உடலில் பூக்கும் யோனிகளைத் தின்று வளர்கின்றன துப்பாக்கிக் குறிகள். படுத்தும் நின்றும் நிமிர்ந்தும் வான்நோக்கியும் விரைத்த அத்துப்பாக்கிகள் கண்டு கண்மூடிய எமதுடல்கள் மண்ணுக்குள் உறங்காது. உறங்கவே உறங்காது. பாதாளக்குகைகளாய் முனகும் கவிதைகளோ நம் குழந்தைகளுடையவை. பல தலைமுறைக் குழந்தைகள். இதழ்களுக்கிடையே நீவிர் ஆதுரமாய்ப் புகைத்துக் கற்பனைகளை எரிக்கும் சிகரெட் எனக்கென்னவோ யோனியின் மடல்களுக்கிடையே திணிக்கப்படும் துப்பாக்கி முனையையே நினைவூட்டும். இக்காட்சியை மட்டும் நினைவின் மின்னணுப் பலகையிலிருந்து நீக்கமுடிந்தால்...



இம்மண் எனது. உனது என்பதும் எனது. காதலனே, எனதுடலே நான். மண்ணில் வேர்களூன்றி நின்று கைகள் மலர்த்தும் தாவரமும் நான். மண்ணுக்கு மழை வேண்டும். மழையின் கூதிரில் குடைவிரித்து நிற்கும் வானம் நான். மண்ணுக்குச் சூரியன் வேண்டும். ஓயாத ஆலையென்ற எனதுடலால் உரக்கப்பாடும் விடுதலை யான். மண்ணுக்கு நான் வேண்டும். அடுக்கடுக்கான யோனிகளால் தலைமுறை உடலெனும் பூங்கொத்தேந்தி வரும் பெண் யான். உடல் மண்ணுக்கு இல்லை. என்னுடலுக்கே மண்.





குட்டி ரேவதி

மே 15 2010

(இக்கவிதை என் தோழி கோகிலவாணிக்குச் சமர்ப்பணம்)

4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள்


ருமேனிய திரைப்படம்



4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள் என்றொரு திரைப்படம். பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரே அறையில் வசிக்கும் இரு தோழியருக்கு இடையில் நடக்கும் கதை. கதை என்பது ஒரே நாளின் பகலில் தொடங்கி இரவில் முடிந்து விடுகிறது. கபிதாவின் கருவைக்கலைக்க அவளின் தோழியான ஒடிலியா ஒத்துழைப்பதும் அதற்காக நிறைய ஏற்பாடுகளைச் செய்வதுமென தொடங்குகிறது கதை. 1987 ன் ருமேனியாவில் கருக்கலைப்பு என்பது சட்ட விரோதமான செயல். அந்நிலையில் எவருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் இறங்கிய தோழியரைப் பதற்றமும் பயமும் தொற்றிக்கொள்கின்றன. கருக்கலைப்பு செய்வதற்கான தொகையையும் இவர்களால் சமாளிக்க இயலாமல் ஒடிலியா அவளின் காதலனிடம் கடன் வாங்குகிறாள். மேலும் அன்றைய ஒரு நாள் ஹோட்டலில் தங்குவதற்கான பொருள் தேவையையும் பணத்தேவையையும் மற்றவர்களிடமிருந்து பெறுகின்றனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்யும் ஓர் ஆளையும் நியமித்துக் கொள்கின்றனர். அவன், கபிதா கருவுற்றிருக்கும் காலம் தோழிகள் கூறியது போல 3 மாதங்கள் இல்லை, 4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள் என்ற உண்மையைக் கண்டறிகிறான். அந்நிலையில் கருக்கலைப்பு செய்வது அபாயகரமானது என்று பின்வாங்குகிறான். அவன் கேட்கும் தொகையைக் கொடுப்பதாகக் கூறி அவனைச் சமாதானம் செய்கின்றனர். பின் அவன் கருக்கலைப்பிற்கான ஏற்பாட்டில் இறங்குகிறான். மருந்தூட்டப்பட்ட சலாகை ஒன்றை அவளின் கருவாய்க்குள் செலுத்தி, கரு வெளிப்படும் உணர்வு ஏற்படும் வரை அசையக்கூடாது என்று கூறிவிட்டுச் செல்கிறான்.



இதற்கிடையில் ஒடிலியா அவளது காதலனுடைய அம்மாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொள்வதாக உறுதியளித்திருக்கிறாள். ஆகவே கபிதாவை ஹோட்டல் அறையில் விட்டுவிட்டுச் செல்கிறாள். பிறந்த நாள் விழாவில் முழுமனதுடன் அவளால் கலந்துகொள்ள முடியவில்லை. அரைகுறை மனதுடன் ஈடுபடுகிறாள். மேலும் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மருத்துவர்களாய் இருக்கின்றனர். அவர்களின் உரையாடல் வேறு ஒடிலியாவைத் துன்புறுத்துகிறது. அங்கிருந்து கபிதாவினைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள். இயலவில்லை. அவசரமாக ஹோட்டல் அறைக்குத் திரும்புகிறாள். அங்கு கபிதாவின் கரு வெளிப்பட்ட நிலையில் சுருண்டு படுத்திருக்கிறாள். பின் ஒடிலியா சிதைக்கப்பட்ட கருவை ஒரு துணியில் சுருட்டி எடுத்துக்கொண்டு தனது பையில் எடுத்துச் சென்று அப்புறப்படுத்துகிறாள். ஹோட்டலுக்குத் திரும்பும் ஒடிலியாவிடம் கபிதா கருவை என்ன செய்தாய் என்று கேட்கும்போது, ‘இனி நாம் அதைப் பற்றி எதுவுமே பேசிக்கொள்ளவேண்டாம் என்று கூறுவதுடன் படம் முடிகிறது.


இப்படம் ஒரு நேர்க்கோட்டுக்கதை. காமிராவைக் கையில் தூக்கிச் சுமந்து நகரும் தன்மையுடன் படம் பிடிக்கப்பட்ட காட்சியமைப்பு. எந்த வகையிலும் நேரடியாகத் தொனிக்காமல் அரசியலின் நுணுக்கமான சமூக ஊடாட்டங்களை விவரிக்கும் திரைக்கதை. நீள நீளக்காட்சிகள். இயல்பான உரையாடல். இதுவரையிலும் வேறு எந்தத் திரைப்படத்திலும் இத்தகைய உரையாடலைப் பார்த்ததில்லை, திரைக்கதையில் இணைத்தது இல்லை எனும் அளவிற்கு இயல்பான மிகை இல்லாத ரகசியமாகப் பதிவுசெய்யப்பட்டதைப் போன்ற உரையாடல்கள். நமது தமிழ்ப்படங்களில் என்றால் ‘வசனம்என்று டைட்டில் கார்டு போடுவோமே அது தான். சட்டத்திற்குப் புறம்பான ஆனால் மனித வாழ்விற்கு இயைபான ஒரு விஷயத்தை இரு பெண்கள் கையாள்வதில் உள்ள அச்சம் நிறைந்த பார்வையும் அவலத்தின் கடைநிலைக்கும் தம்மைக் கொண்டு செல்ல நேர்வதும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் கனிவும் கதையோடு நெய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒடிலியா கபிதாவின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க நேர்வதும் அதற்கான மனித அறமும் தான் அவளை கபிதாவுக்கு ஆதரவாக இருக்கத் தூண்டுகிறது. இதை ஒடிலியா தனது காதலனுடான உரையாடலில் விவரிக்கிறாள். தான் கருவுற்றிருந்தால் அவன் என்ன செய்யக் கூடும் என்பதை விவாதமாக்குகிறாள்.


1987- ல் ருமேனிய கம்யூனிச கட்சியின் ஜனாதிபதியாக இருந்த நிகோலே செயுஸெஸ்குவின் ஆட்சியில் இருந்த அடக்குமுறையின் நுட்பமான பிரதிபலிப்பு தான் இப்படம் என்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் முங்கியு. இந்தக் கதை யாரோ என்றோ இயக்குநரிடம் பகிர்ந்து கொண்ட ஒரு கதையின் இழை தான். மேலும் முடிவெடுக்கும் தருணங்களில் எல்லாம் மனிதர்கள் நடைமுறைக்கொத்த, தர்க்கப்பூர்வமான முடிவெடுப்பதில்லை என்பதையும் உச்சபட்சமாகவும் உடனடியாகவும் மனிதர்கள் என்ன செய்யக்கூடும் என்பதையும் மனதில் வைத்தே இக்கதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தேன். இத்தகைய மனிதத்தன்மை தான் புனைவுக்கு வழிவகுக்கிறது என்கிறார். தீவிர கம்யூனிச அரசின் கீழ் செயல்பாட்டில் இருந்த கருக்கலைப்பு தடை என்பதன் விளைவுகள் நுட்பமில்லாமல் இருந்ததையும் அதே சமயம் அது சமூகத்தில் மறைமுகமான அச்சத்தை விளைவித்துக் கொண்டிருந்ததையும் கதையாக்க விழைந்திருக்கிறார். அது போலவே அவ்வாறான கருக்கலைப்பு இன்ன பிற சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனிதர்கள் அறம்சார்ந்த கேள்வியற்றவர்களாய் இருந்தது அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக இருந்ததே அன்றி பிரச்சனைகள் தீர்க்கவில்லை. 2007 ம் ஆண்டின் கேன் திரைப்படவிழாவில், ‘தங்கப்பனைவிருதை வென்ற இப்படம் ருமேனிய சினிமாவின் புதிய அலை என எல்லா விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. பார்வையாளர்களையும் திரைக்கதைக்கு உள்ளே இழுக்கும் நுட்பமான திரைக்கதை வடிவம் இவரது சிறப்புத்தன்மை எனப்படுகிறது. திரைப்படத்தின் கடைசிக்காட்சியில் ஒடிலியா தனது முகபாவனைகளுக்கிடையே பார்வையாளர்களை நோக்கித் திரும்புவதுடன் படம் முடிகிறது. அந்தக் கணத்தில் பார்வையாளர்கள் எல்லோருமே திரைக்கதைக்குள் வாரி உள்ளிழுக்கப்பட்டுவிடுகின்றனர். இது சினிமாவிற்கு முற்றிலும் புதிது.



குட்டி ரேவதி

பிரசவம்





நீர்ப்பாத்தியில் நிழலேதும் வேண்டாது

தாவர இச்சையின் மிடுக்குடன் எழும்

திரண்ட கவர்ச்சியின் வாழை யான்

குலைதள்ளும் நாளில்

வெட்டிச் சாய்த்தது உமது அரிவாள்

தோலுரித்தது உடல் கிழித்தது

என்றாலும் காலைச் சுற்றிலும்

கணுக்கால் உயரத்தில்

மீண்டும் மீண்டும் முளைத்தெழும்

என் கம்பீரத்தோகைகள்




குட்டி ரேவதி

நன்றி: ‘புது எழுத்து’ இலக்கியச் சிற்றிதழ்

மகத்தான அனுபவம்










இரவுகள் தாம் மகத்தான அனுபவத்துடன் வருகின்றன. மெலிந்த ஒருவரின் முத்தத்திற்கும் இரையாகாத இவ்வுடலை ஏனோ பெருங்காதலின் கடலில் நீந்தவிடுகின்றன. கனவுகளால் புடைத்த இருள்வெளியில் என் கற்பனைகளும் எல்லையிலாததாக ஆகின்றன. அவனை இதுவரை கண்டிலேன். அங்க அடையாளங்களே அறியாத போதும் உடலை வருடும் தளிரிலைகளாய்... வியர்வையூட்டும் உடலின் நெருக்கடியான இடங்களுக்கு குளிரளிக்கும் மென்மையான காற்றாய்... அவன் நினைவால் நிறையும் மதுக்குடமும் இரவு தான். வேறொரு காதலியை அவன் தீண்டுவானோ என சந்தேகம் கிளைக்காத வெளிநோக்கி மதர்த்தெழுந்து நிற்கிறது காலம். முள்ளடர்ந்த புதர்களாய் கண்கள் ஒன்றையொன்று நெருக்கிக்கொண்டிருக்கின்ற கண்டங்கள் கடந்த ஒரு பார்வையை சொற்களாக்கி இரையும் மின்னஞ்சல். கடலின் நுழைவாயிலில் கட்டப்பட்ட கலமாய் அலைந்து கொண்டிருந்தாலும் கடலுக்குள் பயணிக்காத தாபத்துடன் இரவைக் கடக்கின்றன எம்முடல்கள். வெளிறும் வானத்தைக் கனத்த இமைகளால் பார்க்கையில் வெற்றியின் அர்த்தமின்மைகளால் வெளிறிப்போகும் காலையின் முன் இரவு தன்னை ஒரு மகத்தான அனுபவம் என்கிறது.







குட்டி ரேவதி
நன்றி: ‘எதிர்முனை’ இலக்கியச் சிற்றிதழ்

தெரு விளக்கு







உடலைத் தெருவில் கிடத்திப் பார்ப்பதில் நிபுணன் அவன். எரியும் தெருக்கம்ப விளக்காக்கி அவன் புறப்பட்டுச்சென்றான் வழிநெடுக இருள் பரவ. ஆகவே அவனுடல் தந்த இன்பங்களையும் தொலைக்கமுடியாது அதன் நாவுகள் அந்த இன்பத்திற்கான தாகங்களால் நீள்கின்றன துடிக்கின்றன அலைகின்றன. நல்லவேளை பாறையாக இறுகிய சொற்கள் சில என்னிடமுமுண்டு. அவற்றின் வழியாக வெடித்துக்கொள்கிறேன். என் கண்களின் கிணறுகளில் சுடரும் நிலவை எங்கெங்கும் விரவிநின்ற இருளால் வளரச்செய்த இரவே என் தூக்கத்தால் ஒருபோதும் உன்னை இழக்கமாட்டேன். காதலை ஒரு தீராத நோய்க்கு இழுத்துச் செல்லும் திட்டத்தில் ஆழ்ந்திருக்கிறான் எனக் கண்டதும் என் இமைகள் சேராததாகிவிட்டன. என் உறுப்புகளின் வளர்ச்சியெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பொழுதுகளும் ஒன்றோடொன்று கலவாமல் தனித்த கதவுகளுடன் திறந்தன. நிந்திப்பது என்றால் எந்தக் குற்றத்திலிருந்து தொடர்வது யாருடையது முதலின் என்பதும் காலத்தின் கைப்பிடியிலிருந்து மணலைப் போல நழுவி மறைகிறது துல்லியமாக அறியமுடியாமல். பழுத்து வீழ்ந்த பின்னும் இலைகளின் உரத்தால் கால் ஊன்றி நிற்கும் மரத்தைப் போல தினவுற்று இருக்கும் பழையகாலங்களின் நிகழ்வுகள். அடர்ந்து செறிந்த மரங்களால் ஆன காடுபோல தெளிவற்ற வெளி அக்காலம். தெருவிளக்கென எரிந்து கொண்டிருக்கிறது நிலவு பகல் விரிந்த பின்னும்.




குட்டி ரேவதி

நன்றி: எதிர்முனை


எதிர்முனை, புதிய இலக்கியச் சிற்றிதழ்








http://ulurai.blogspot.com





குட்டி ரேவதி

பானுமதியின் உடைமை

முதல் சந்திப்பிலேயே என் கைகளை வந்து கோர்த்துக்கொண்டாள் பானுமதி. ஒரு வெளியூர்ப் பயணத்தின் போது தன் நண்பர் குழுவினருடன் வால்பாறை வந்திருந்தாள். அது எனக்குப் பணி நிமித்தமான பயணம் என்பதால் அவளிடம் நிறைய நேரம் செலவிட முடியவில்லை. மழை தூறத் தொடங்கியதும் நான் புகைப்படக் கருவிகளை அணைத்ததும் மீண்டும் என் அருகில் வந்து பேசத் தொடங்கினாள். அவள் கண்களில் இடையறாத ஒரு குறுகுறுப்பு ஒளிர்ந்து கொண்டேயிருந்தது கருத்த அவளின் தேகத்திற்கு பொலிவும் களையும் சேர்த்துக் கொண்டிருந்தது. ஜீன்ஸ் உடை அவளின் பெருத்த உடலுக்குச் சற்று பொருத்தமின்றி இருந்தாலும் தன் நடை மற்றும் பாவனைகளால் அந்த உடையைத் தனக்குப் பொருத்தமாக்கிக் கொண்டிருந்தாள்.


பொது இடங்களில் ஆண்கள் என்னை வசீகரிப்பதே இல்லை. மாறாக பெண்களின் உடல் மொழிகள் அவர்களின் குணச்சித்திரத்தை எடுத்து இயம்புபவையாக உள்ளன. சிறுமிகளோ கிழவிகளோ இச்சமூகம் தரும் தொடர்ந்த நெருக்கடியில் அவர்களின் இருப்பைப் பாந்தமாக வடிவமைத்துக் கொள்கின்றனர் என்று தோன்றும். அதிலும் அடித்தட்டுப் பெண்களுக்கு இது இன்னும் சவாலாக இருப்பதால் அவர்களின் குணச்சித்திரங்கள் எடுப்பானவையாகவும் கதைத்தன்மையும் புதிர்வெளிகளும் நிறைந்தவையாகவும் இருக்கின்றன. அவர்களின் மொழியும் அவற்றைத் துல்லியமாய் எடுத்தியம்பும் அழகும் ஈடுயிணையில்லாததாக இருக்கின்றன. பானுமதி, நான் நின்று கொண்டிருந்த தாழ்வாரத்திற்கு எதிர்த்திசையிலிருந்து சில கனத்த துளிகள் அவள் தலையை நனைக்க வந்து சேர்ந்தாள்.


‘ஒங்களுக்கு ஆட்சேபணையில்லன்னா ஒரு சிகரெடி பிடிச்சுக்கிறேனே?என்றாள். என் புன்னகையை அவள் நன்றியாக்கிப் புகைக்கத் தொடங்கினாள். சில நீண்ட நிமிடங்கள் இருவருமே பேசாமல் நின்று மழையின் சலசலப்பை அவதானிக்கத் தொடங்கியிருந்தோம். என்னை அடையாளம் கண்ட நிமிடத்திலிருந்து அவளிடம் தென்பட்ட ஒன்று, அவள் என்னிடம் சொல்ல விரும்பியதைச் சொல்லும் வரை என்னை விட்டு விலக மாட்டாள் என்று தோன்றியது. மழை சிறு தூறலாகியதும், புகைப்படக்கருவிகள் இன்ன பிற பொருட்களைப் பாதுகாக்க விரும்பி நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினோம். சில மீட்டர் தூரத்தில் தான் அறைகள் இருந்தன. பானுமதி, ‘நானும் ஒங்ககூட வருகிறேனே’, என்று கூறிவிட்டு எதிர்த்திசையில் அவளுக்காகக் காத்திருந்த தன் நண்பர்களுக்குக் கையசைத்து விட்டு என்னுடன் அறைக்கு ஓடிவந்தாள். அறையைச் சேரும் முன்னேயே மழை வலுத்திருந்தது.


என் தனித்த அறையில் ஆளுயர கண்ணாடி இருந்தது. அறையில் நுழைந்ததுமே அவளை அந்தக் கண்ணாடி ஆட்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.அந்த அறையில் அவளுடைய அசைவுகள் எல்லாமே அந்தக் கண்ணாடியைக் கருத்தில் கொண்டும் கனவில் கொண்டும்தாமிருந்தன. நான் உடைமாற்றிக் கொண்டு வரும்போதே அரை நிர்வாணத்தில் இருந்தாள். நனைந்த உடைகளை உலர வைக்கும் தருணம் போலும். பொதுவாகவே உடல் சார்ந்த என் பிரக்ஞைகள் ஆராயும் நோக்குக் கொண்டவை. உடல் மீதான கவர்ச்சி எனது மருத்துவ கல்விக்குப் பின் முற்றிலும் மாறிவிட்டது. அதன் நோய்த்தன்மைகள், மருத்துவச்சிக்கல்கள், நம் நாட்டின் மருத்துவத்தரம், பெண்களால் எளிதில் அனுபவிக்க முடியாத ஆரோக்கியம் என்று எனது புரிதல்கள் உடல் என்பதன் பாலிமை ஈர்ப்பை முற்றிலுமாகக் குலைத்துவிட்டன. பானுமதிக்கு என் இருப்பை அசைக்கும் நோக்கம் இல்லை என்பது அன்றைய நாள் முடிகையில் எனக்கு உறுதியானது. பானுமதியின் இயல்பே அப்படித்தான்.


இப்படித்தான் அவளுடைய உரையாடல் தொடங்கியது; ‘நிறைய ஆண்களோட நான் பழகிட்டேன். ஆனாலும் நான் விர்ஜின் தான். ஆம்பிளங்க, பொம்பிளங்க ஒடம்ப மதிக்கிறதுக்கு நாம இன்னும் கத்துக்கொடுக்கவே இல்ல. சமூகம் சொல்லித்தர்ற மாதிரி தான் அவங்க நம்ம ஒடம்புக்கிட்ட நடந்துக்கிறாங்க. மொத தொடுகையே அதுல பிரியம் இல்லாதத சொல்லும் போது எனக்கு எவ்வளவு தேவை இருந்தாலும் நான் அதுக்கு மேல சம்மதிக்கறதே இல்ல’. பெரும்பாலான பெண்கள் இப்படிப் பேசக் கூட வாய்ப்பில்லை தான். ஆனால் உடல் பற்றியும் அதனுடனான தனது மன ஓட்டம் பற்றியும் பானுமதியால் இயல்பாக உண்ணும் உணவைப் போலவே கண்ட காட்சியைப் போலவே பேசமுடியும். அன்று பகல் முழுக்க இரவு விடிய என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள். இத்தகைய நீண்ட உரையாடல் இரவைத் தின்றது இது தான் முதல் முறையென்று வேண்டும்.


அவள் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. அவ்வப்பொழுது இலக்கியங்களை வாசிப்பாள். அம்பையின் ‘வற்றும் ஏரியின் மீன்கள் வாசித்து விட்டு உடலற்ற நூலாக இருக்கிறது என்றாள். நான் அதை மறுத்தேன், ‘நாம் உடலற்றுத் தானே இருக்கிறோம், பானு என்றேன். ‘இல்லை, என் ஒடம்பப்ப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அதுக்குப் பசிக்கும்போது எப்படி சாப்பிடனும்னு நினைக்கிறேனோ காமத்தின் குரலுக்கும் காது கொடுக்கனும்னு நெனக்கிறேன். நெருங்கிற ஒவ்வொரு ஆம்பிளயும் தனிச்ச உடலோட தான் வராங்க. உடல்களுக்குப் பொதுத்தன்மங்கிறதே இல்லயோன்னு தோணுது. உடம்பப் பத்திய ஒரு நீள பயணமா தான் இந்த வாழ்க்கை. கொழந்தையிலிருந்து கிழவியாக வளர்றது வரைக்கும் ஒடம்போட இருக்குற ஒரு நீண்ட பயணம் என்று ஒரு விரிவுரையே நிகழ்த்தி விட்டாள். நான் அதை இன்னும் நுணுக்கமான விவாதத்திற்குக் கொண்டு செல்லத் தயாரானேன். மீண்டும் ஓர் இரவை முழுவதுமாய் விழுங்கும் விவாதமாக மாறி, ஒரே உடலின் இரு பக்க நியாயங்களைப் பற்றியதாக முடிந்தது. அம்பை எழுத்துக்குள் வைக்கும் உடலும் நவீனத்தின் ஒரு வடிவம் தான். பானு சொல்லும் உடலும் அதன் இன்னொரு பரிணாமம் தான்.



சென்ற வாரம் ஒரு நாள் இரவு ஒரு மணி இருக்கும். ‘நான் என் கன்னிமையை அனுபவிச்சுட்டேன் என்று போனில் கூவினாள். ‘அப்படின்னா..என்று அரைகுறைத் தூக்கத்தில் நான் வினவ, ‘நான் என் கன்னிமையை இழந்துட்டேன்னு சொன்னாத் தான் ஒங்களுக்குப் புரியுமா?என்று செல்லமாகக் கோபப்பட்டாள். ஒடம்புக்கான கனவு தான் இரவு போல. எனக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. அவளை நினைக்கும்போதெல்லாம் அருகே யாருமின்றியும் எனக்கு நானே சிரித்துக்கொள்வது வழக்கமாயிற்று. பானுமதிக்கு எப்பொழுதுமே உடல் ஒரு சவாலாகவும் அதைக் கையாளுவது ஒரு சாதனையாகவும் இருப்பது எனக்கு வியப்பாயில்லை.



குட்டி ரேவதி

யானுமிட்ட தீ




அவளை அப்படியே விட்டிருக்கலாம் நீங்கள்

முட்டும் இரவைக் கானகத்தின் முதுகென்றும்

மெல்ல திரளும் உதிரப்பெருக்கைக் கடலென்றும்

கனலும் காமத்தைக் காயும் நிலவென்றும்

உங்களுக்கான பிரபஞ்ச நீள்வட்ட வலயத்தை

மறுக்கிறாள் மெளனிக்கிறாலென்பதைக் கூறிக்கொள்கிறேன்

உடலெங்கிலும் ஆயுதம் புதைத்த வனமாகியவள்

என்றறியாமல் அம்பெய்தின உங்கள் கைகள்

வழியெங்கும் சமிக்ஞைகளால் அவளெழுப்பிய வேட்டை அம்புகளால்

கிடங்குகளுக்குள் சேகரப்படுத்திய வெடிமருந்துருண்டைகளால்

உம்முடல் வெடித்துச்சிதறலாம் எதிர்பாராத ஒரு காலையில்

தொடைகளுக்கு இடையே விரியும் கானகப்பாதை

பால்வெளியாக நீளும் என்றுஅவள் வானம் வரைந்தாலும்

உருண்ருண்டு ஓடும் கோள்களின் கண்ணியில்

எந்நேரமும் சிக்கிக்கொள்ளலாம் உமது குறிகள் என்றாலும்

நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் தோழர்களே

இரை கண்ட காட்டு மிருகமொன்றின் பாய்ச்சலுடன்

திமிறிக்கொண்டிருக்கும் யோனியை பதுக்கிவைத்திருப்பவள்

முற்றா முகிழ்முலைகளாகி மரங்கள் பூத்துக்கொட்டும்

பிரதேசமொன்றை நிர்வாண உடலுமாக்கியவள்

‘யானுமிட்ட தீஈதென்று சூரியனைச் சுட்டும்போது

நம்பித்தான் ஆகவேண்டும் தோழர்களே!




குட்டி ரேவதி