நம் குரல்

கண்ணை அவிழ்க்கும் கவிதை

சமீபத்தில் எம்.ஏ.நுஃமான் அவர்கள் தமிழாக்கம் செய்து தொகுத்திருந்த ‘பலஸ்தீனக் கவிதைகள்’ என்ற கவிதைக் தொகுப்பை வாசித்தேன். அப்போது என் மனதில் சிக்கிக்கொண்ட கவிதை இது:

கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து

நாளை கட்டை அவிழ்ப்பார்கள்
எனக்கு யோசனையாக இருக்கிறது
எஞ்சியிருக்கும் என் ஒற்றைக் கண்ணால்
ஆப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும்
தோடம் பழத்தின் ஒரு பாதியை மட்டும்
என் தாயின் பாதி முகத்தை மட்டும் தான்
என்னால் பார்க்க முடியுமா?

துப்பாக்கிக் குண்டை நான் பார்க்கவில்லை
என் தலைக்குள் வெடித்த
அதன் வலியை மட்டுமே உணர்ந்தேன்
பெரிய துப்பாக்கியுடன்
நடுங்கும் கைகளுடன்
கண்களில் ஒரு வெறித்த பார்வையுடன்
அந்த ராணுவ வீரன்
என் மனதில் அழியாதிருக்கிறான்
அதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக
அவனைப் பார்க்க முடியுமென்றால்
எங்கள் தலைகளுக்குள்ளே
நாம் இழக்கும் கண்களை ஈடுசெய்ய
ஒன்னும் ஒரு சோடிக் கண்கள் உள்ளன போலும்

அடுத்த மாதம் என் பிறந்த நாளுக்கு
முற்றிலும் புதியதோர் கண்ணாடிக்கண்
எனக்குக் கிடைக்கும்
சில வேளை பொருட்கள் நடுவில் தடித்தும்
வட்டமாயும் தெரியக்கூடும்
நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே
உற்றுப் பார்த்திருக்கிறேன்
அவை உலகத்தை வினோதமாய்க் காட்டும்

நான் கேள்விப்பட்டேன்
ஒன்பது மாதக் குழந்தை ஒன்றும்
ஒற்றைக் கண்ணை இழந்த்தாக

என்னைச் சுட்ட ராணுவ வீரன் தான்
தன்னை உற்றுப் பார்க்கும்
சின்னஞ்சிறுமிகளைத் தேடும்
ஒரு ராணுவ வீரன் தான்-
அவளையும் சுட்டானோ என்று
எனக்கு யோசனையாக இருக்கிறது

நானோ வளர்ந்தவள்
கிட்டத்தட்ட நாலு வயது
போதிய அளவு நான்
வாழ்க்கையைப் பார்த்துள்ளேன்
ஆனால் அவளோ சின்னக் குழந்தை
எதுவும் அறியாச் சின்னக் குழந்தை



-இது ஹனான் மிக்காயில் அஷ்ஹாவி என்ற பலஸ்தீனப் பெண்கவிஞரின் கவிதை.
இக்கவிதையின் பின் குறிப்பு இதோ:
றஷா ஹெவ்சிய்யே 1988 மார்ச் மாதத்தில் ஒரு கண்ணை இழந்தாள். இஸ்ரேல் வீரன் ஒருவன் றப்பர் குண்டுகளால் சுட்ட போது அவள் கண்ணை இழக்க நேர்ந்தது. அச்சமயம் றமல்லாவுக்கு அண்மையில் உள்ள அல்-பிறெஹ் என்ற ஊரில் தன் பாட்டியின் வீட்டு மாடியில் றஷா நின்று கொண்டிருந்தாள். அச்சமயம் அதே போன்று வேறு இரண்டு குழந்தைகளும் (இருவரும் 9 மாத வயது உடையவர்கள்) ஒவ்வொரு கண்ணை இழந்தனர். இன்ரிபதா இயக்கத்தின் ஏழாவது மாதத் தொடக்கத்தில் சுமார் 40 பேர் இதே போல் பாதிக்கப்பட்டனர்.


ஒரு வித்தியாசமான பார்வைக் கோணத்தில் அஷ்ஹாவி இக்கவிதையைச் செதுக்கியுள்ளார். இராணுவ பயங்கரவாதத்தின் அவலத்தை ஒரு நிகழ்வின் வழியாகச் சொல்லும் போது அது வெறுமனே நிகழ்வைப் பற்றிய வர்ணனையாக இல்லாமல் அதன் காட்சி வெளிக்குள் நுழைவது அதன் அவலத்தை இன்னும் நுட்பமாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
குறிப்பாக,
‘ஆப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும்’

‘என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக
அவனைப் பார்க்க முடியுமென்றால்
எங்கள் தலைகளுக்குள்ளே
நாம் இழக்கும் கண்களை ஈடு செய்ய
இன்னும் ஒரு சோடிக் கண்கள் உள்ளன போலும்’

‘சில வேளை பொருட்கள் நடுவில் தடித்தும்
வட்டமாயும் தெரியக்கூடும்
நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே
உற்றுப் பார்த்திருக்கிறேன்’

போன்ற வரிகளின் ஊடாக கண்ணின், பார்வையின் விஞ்ஞானப் பரிமாணம் சித்திரம் பெற்றுத் தொடர்கிறது. நகை முரணாயும் யதார்த்தமாயும் காயத்தை விடுவிக்கும் இவரது சொற்கள் காயமுற்று ஒற்றைக்கண் பறிபோன நான்கு வயது குழந்தை கண்ட, காணும், காண்பதாய் கற்பனை செய்து கொள்ளும் உலகமாகிறது. வெளிப்படையான அல்லது மேலோட்டமான எதிர்ப்புணர்விலோ காட்சிச் சித்திரத்திலோ கவிதை உயிர்கொள்வதில்லை. மாறாக, உணர்வின் அடியாழங்களுக்குள் நீந்தும் திடகாத்திரமான பயணத்தை மேற்கொள்ளும் கவிஞரால் தான் கவிதைக்கு உயிர் தர முடிகிறது.

பல சமயங்களில் கவிஞர்கள் உணர்வுகளின் மோலோட்டமான ஒழுக்குகளோடு மட்டுமே பயணித்துவிட்டு கவிதையை எழுதும் போது அது வெறுமனே ஓர் அதிகாரத்தை எதிர்க்கும் பிரச்சாரமாக மட்டுமே முடிந்து விடுகிறது. இடையறாத உணர்வுகளின் பெருக்கத்தில் நீச்சலடித்து அகவெளி காணுவோரின் கவிதைகளில் இம்மாதிரியான மாயாஜாலங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இக்கவிஞர்கள் ஆகவே கவிதைகளைப் படைப்பதில் சோர்ந்து போவதேயில்லை.

நிகழ்வுக்கும் அனுபவத்திற்கும் இடையில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தினாலும் நிகழ்வையும் அனுபவத்தையும் விட இக்கவிதையில் கவிஞர் பயன்படுத்தும் ஒப்புமைகள் மிகுதியான அதிர்ச்சியை அளிக்கின்றன. அதே சமயம் அவ்வதிர்ச்சி என்றென்றும் அழியாயதாய் பொதியப்பட்டு காலந்தோறும் இடந்தோறும் படிக்குந்தோறும் துல்லியமாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் வழங்குவதாயும் வடிக்கப்பட்டுள்ளது.


இப்பொழுது மீண்டும் இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள்.




நன்றி: ‘அடையாளம்’ வெளியீடு


குட்டி ரேவதி

பரு

தழல் மேனி கட்டியணைத்து ஒரு கணமும் ஆசுவாசமாய்
அன்பை தின்னாதோரெல்லாம் உடலை ஒரு பருவாய் எண்ணி,
ஓடியோடி கண்ணாடி முன் நின்று கிள்ளிப்பார்க்கும் அருவருப்பாய்
ரகசியமாய் அவதியுறுகின்றனர்.

அல்லது
காடெல்லாம் களிப்போடு ஓடி வெறிகொண்டு திமிறும் நதியாய்
இரவுக்குள் தலைதெறிக்க இன்னோருடலை முத்தமிட்டு
வேகத்துடன் வாயிற்படியில் காசுவைத்து திரும்பிப்பாராது காலையைத்தொடுவர்




குட்டி ரேவதி

கண்ணீர்

அந்த அறை கொந்தளித்தது
தரையிலிருந்து எழும்பிய காற்று நெளிய
திரைகளை விரித்த பின்னும்
ஒளி சீறிக்கசிந்து
அலைகள் எழும்பியடங்கிய வண்ணம்
கரையில் எவருமிலாததாய் அறை
உறைந்த நாற்காலிகள்
வியர்த்து ஒழுகின
அந்தரத்தில் பறவைகளற்ற
ஓர் இறுக்கமான வானத்தை
எவ்வளவு நேரம் சுமப்பது?
பின்னொரு மழையை அழைத்தேன்
அறை குளிர




குட்டி ரேவதி

கவிதைக்கான பண்பாட்டு வெளி

சென்னையின் பண்பாட்டு வெளிகள் பற்றிய ஒரு விவாதத்தையும் கூட்டத்தையும் நிகழ்த்தியது சென்னை மாக்ஸ் முல்லர் பவன். எப்பொழுதேனும் இப்படிக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஒரு மன நிறைவோடு திரும்ப முடிவது ஆச்சரியமான விஷயம் தான். எட்டு உறுப்பினர் கொண்ட குழுவின் விவாதம் மூன்று மணி நேரம் நீடித்தது. ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்க் கவிஞர்களும், நாடக இயக்குநர்களும், கட்டிடக்கலைஞர்களும் என தமிழர்களும் ஜெர்மானியர்களுமாக இருந்த அக்கூட்டத்தில் தொடங்கிய விவாதம் இரவு உணவின் போதும் நீடித்தது.


பண்பாட்டு வெளி என்பது சென்னையில் நீங்கள் உங்கள் கலை அடையாளங்களையும் வெளிப்பாடுகளையும் நிகழ்த்துவதற்கான வெளி என்ற அர்த்தத்திலே தொடங்கியது. கவிதை வாசிப்பதற்கான வெளி என்பதைக் கண்டடைய சென்னையில் கவிஞர்களின் முயற்சிகள் எந்தெந்த வடிவில் இருக்கின்றன என்பதாகவும் அரசின் ஆளுகைக்குள் எப்படி அவை சிதைவுற்றும் பொருந்தா வடிவம் கொண்டும் எழுகின்றன என்பதும் என்னுடைய விவாதப் பொருளாக இருந்தது. நகரத்தின் மையத்திலிருந்து புறப்பட்டு தொலைதூர வெளிகளுக்கு இலக்கிய நுகர்வுக்காகச் செல்லும் இலக்கியவாதிகள் தம் சுயப்பிரச்சனைகளால் எப்படி இலக்கிய விவாதம் என்பது ஒரு பண்பாட்டு வெளியைக் கண்டடையாமலேயே போகிறது என்பதும் அதன் உட்பொருள். வேறுவேறு கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்நிகழ்வுகளின் போதாமை என்பதை கவிதை குறித்த நம் சமூகத்தின் அவமதிப்பைச் சுட்டுவதாகவே உணர்ந்தேன். சில சமயங்களில் பிரபல புத்தகக் கடைகளிலும் நவீன உணவகங்களிலும் காபிக் கடைகளிலும் நிகழ்த்தப்பட்ட கவிதை வாசிப்புகள் கூட அந்தந்த சூழலுக்குப் பழக்கமான ஓசைகளுடன் கரைந்து போயின.




கவிதையை எழுதுவதும் அக்கவிதையை பிறிதொரு கவிஞருக்கு வாசித்துக்காட்டுவதும் அதன் இயலில் உட்புகுந்து திளைத்து அதன் சிக்கல்களைக் களைவதுமான அனுபவத்திற்காக நான் மிகவும் ஏங்கியிருக்கிறேன். என்றாலும் தமிழகத்தில் கவிதை என்பது ஒரு மலிவான, நடுவாந்திரமான இலக்கிய வகையாக திரிபுற்று அரசியல் நாற்காலிகளுக்குக் கால்களாகி நிற்கின்றது. அவ்வண்ணமே அதிகாரத்தின் இருக்கையைப் பிடிக்கவும் ஏதுவாகிறது. இந்நிலையில் வெகுஜனப் புலத்திலிருந்து விலகி நின்று எல்லாவற்றையும் உள்வாங்கும் மனோபாவமே செவ்வியதொரு கவிஞனின் மனோபாவமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதற்கு நிறைய மூத்த கவிஞர்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் படைப்பாக்கத் தீவிரமும் எனக்கு உந்துசக்திகளாக இருக்கின்றன.


கவிதை வாசிப்பு இன்று எல்லா இலக்கிய அரசியல் நிகழ்வுகளிலும் கட்டாயமான ஒரு நிகழ்வாக இருப்பதே அதைக் காயடிக்கும் விஷயமாக மாறுவதையும் உணரமுடிகிறது. கவிதையை வாசித்தல் என்பது அது நிகழும் வெளிக்கேற்ற அர்த்தங்களை எடுப்பதாகவும் உணர்கிறேன். இந்நிலையில் அரசியல் கூட்டங்களின் கவியரங்கங்கள் துதிபாடல்களாக வார்த்தைத் தோரணங்களாக தொங்குகின்றன. கவிதையியல் என்பது ஒரு விவாதமாகவும் உரையாடலாகவும் எழும்பாத சமூகத்தில் இப்படி கவிதை என்பதும் கவிஞர் என்பவரும் மலிந்த அர்ததங்களோடு தான் அணுகப்படுவர் என்றும் எண்ணுகிறேன்.



சமீபத்தில் ‘உள்ளுறை’ என்ற கவிதை இதழை வாசிக்க நேர்ந்தது. கவிதையியல் குறித்த தொடக்கப்புள்ளிகளை அதில் பதிவு செய்துள்ளதைக் கண்டு மிகவும் உற்சாகமானேன். அதில் இடம்பெற்றிருந்த கவிதையியல் பற்றிய சீரிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஒரு பெரிய அனுபவத்தையும் இன்னும் இன்னும் மைய நீரோட்டத்திலிருந்து விலகி எழுத வேண்டும் என்ற உந்துதலையும் தந்தன. கவிதையின் அகழாய்வு தீராதது என்பதும் உறுதியாயிற்று. அந்த இதழைத் தேடிப்படித்துப் பாருங்களேன். எனது அபிமானத்திற்கு உகந்த கால. சுப்ரமணியனும் மோகன ரவிச்சந்திரனும் அதன் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்கள். இந்த இதழின் வழியாகக் கூட கவிதைக்கான ஒரு புதிய பண்பாட்டு வெளி விரிவதாக நான் உற்சாகமாகிறேன்.








குட்டி ரேவதி

கருவறை

கருவறையின் இருட்டில்
ஒளிர்கிறது எரியும் தனிமை
தீண்டா இருளும்
தனித்து விட்ட சடங்கும்
பின்னிரவு நேரமும்
மூழ்கடிக்கும் நிசப்தத்தில்
பீடத்தோடு தரித்தது வேர் ஆணி
பூமிக்கிழுத்த நின்றமேனி கனத்தில்
எதிரில் வந்து நின்றோனின்
கண்ணொளி வாயில் தாண்டி இழுக்க
கரம் பற்றி கருவறை கடக்க நினைத்தேன்
அவனோ என்னோடு நிலைப்பானில்லை
என்னையும் அவனோடு அழைப்பானில்லை
இரவிலும் சூரிய பீடம் வேகிறது
தொடை பிளந்து வழிகிறது
தேக்கி வைத்த சினக்குருதி
‘கருவறைக்குள் முளைக்காதே
கண் திறந்து சிசுவே
தெய்வமற்றுப் போகட்டும் இக்கருவறை’யென்று
நிலை வாயில் தாண்டினேன்
கருவறையைச் சூன்யமாக்கி





குட்டி ரேவதி