நம் குரல்

பாலியல் அரசியல் கவிதை - 5




உடலை விட்டு எப்படி வெளியேறுவது?



பகல் இரவு என்றில்லாது
எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட
ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன
கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை 
வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே
நூறாண்டுகள் ஆயிற்று
இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது
இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை
புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி
தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து
எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே
வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும்
கடக்க வேண்டியிருந்தது
மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும்
செய்து கொள்ளமுடிந்தது
கங்குகள் விரித்த பாதைகள் எங்கும்
வரலாற்றின் பொதிகளைச் சுமந்து வந்திருக்கிறேன்
இன்னும் இன்றும் கூட
யாக்கை என்பது வாக்கிற்கும் உன் தீண்டலுக்கும்
வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருவறைச் சிற்பம்
நீ உருவி எடுத்த பின்னும் உன் குறியை மறந்து
சிந்தித்துக் கொண்டிருக்கும் கலையைச் 
செய்து கொண்டிருக்கும் உடல்
உன்னுடன் வெளிகளுக்கிடையே
வேகமாய்ப் பயணித்தும் கொண்டிருக்கும்
நீ நினைப்பது போல உடல் சொற்பமுமன்று 
நான் நினைத்திருப்பது போல
அது அற்புதமாய் இல்லாமலும் போகலாம்
அற்பங்களால் கட்டியெழுப்பப்பட்ட உடலை
இன்னது இதுவென சுட்டிக்காட்ட நான் மட்டுமே 
எஞ்சியிருக்கிறேன்
என் காலடியில் உடலை எறிந்து விட்டு எட்டப் போ
அல்ல அதற்கு உன் யாக்கையை அறிமுகப்படுத்து
உன்னால் இப்பொழுது இயலாது என நான் அறிவேன்
இன்னும் உனக்கும் ஒரு நூறு ஆண்டுகளேனும் ஆகும்
ஆகட்டும் அதற்குள் என் உடலுக்கு

சில நூறு வானங்களையேனும் விரிக்க வேண்டும்.




குட்டி ரேவ

பாலியல் அரசியல் கவிதை - 4

4. எத்தகைய பேருடல் இது!



எத்தகைய பேருடல் எனது என வியக்கிறேன்.
எத்தனை ஆண் உடல்களை நான் சுகித்திருக்கிறேன்
எத்தனை பெண் உடல்களை சீரணித்திருக்கிறேன்
மில்லியன் வருடங்களுக்குப் பின்னாலும் இதோ
என் யோனி வற்றாத முப்பெருங்கடலாய் அலைபாய்கிறது

இன்று என் பேருடல் காற்றில் படபடக்கும்
ஒரு வெள்ளைத்தாளைப் போல அலைகள் மீதூற
மடிந்து விரிகிறது
வெற்றுடலாய் இருக்கிறது

தேவதைகளின் வார்த்தைகளால் நிரம்பிய
முதுமையான தாழி 
இறக்கைகளை விரித்து தனக்கே வானம் 
செய்து கொள்ளும் பேரூந்து பெரும்பருந்து

இனி எப்பொழுதுமே சாவமுடியாது
யோனி மறைந்து அழிந்து காற்றாகி இன்னொரு
யோனியாகப் பூக்கும்
பல யோனிகளின் ஆதி வாயிலாகும்



குட்டி ரேவதி

பாலியல் அரசியல் கவிதை - 3





3. தட்டாமாலை


என் உடலை ஒவ்வொருமுறையும் காலியாக்குகிறேன்
மதுவின் சேகரத்தில் சுழலத் தொடங்கும் போதெல்லாம்
உடலை உனக்குள் கவிழ்க்கிறேன்
உடலுக்குள் மீண்டும் மதுவின் சுரப்பு அமிழ்தத்தின் வேலை
நாளங்களில் அதன் பாய்ச்சல் 
வேட்கையுடன் உன்னைத் தேடி 
உடலை உனக்குள் கவிழ்க்கிறேன்
நீ மதுவைப் பருக மட்டுமே இயன்றவன்

தட்டாமாலை சுழலும் உடலில் கைகோர்க்கத்
தயங்கியவனிடம்
மது வேலை செய்வதில்லை வெறும் கண்ணீரைப் போன்றதே
அமிழ்தச் சுவையுடையது பெண்ணின் மதுவும்
கைகோர்த்துக் கொள் மதுவின் வெப்பம் உன்னிலும் பரவி
நீயும் சுழலுவாய்
மெல்ல நீயும் நானும் தரையிலிருந்து உயருவோம்
உறுப்புகள் ஒன்றையொன்று கவ்விக் கொள்ள
அனுமதிப்போம்
மதுவின் ஊற்று அடர்ந்து வேகமாய்ச் சுரக்கும் கணத்தில்
நீ பருகும் வேகமும் உன் பவளவாய்ச் சிவப்பும்
கொள்ளை கொள்ளும்  காட்சியாகும்

நீ மது தேடி வீதிகளில் அலையும் 
ஒரு மகா குடிகாரன்
தாடைகளில் வளர்ந்த புல்வெளியிலும் 
மார்புகளில் மண்டிய புதர்களிலும்
தேடி அலைந்து கிடைக்காமல் போனதன்
சோகங்கள் பூத்துக் கிடந்து சருகாகும்
நூலாம்படை படரும்

மதுவைக் குடிக்க அலைபவன் நீ
மது சுரக்கும் உடல் அற்றவன் நீ
மதுக் குடுவைகளும் பானைகளும் தாழிகளும்
தேடித் தேடி ஒவ்வொரு உடலாய்த் தேடி
தோற்றுப் போவாய் நீ
அதற்கு ஒரு யோனி செய்யவேண்டும்
அதுவே மதுக்குடுவை மதுவின் தாழி
மதுவின் கடல்


குட்டி ரேவதி

பாலியல் அரசியல் கவிதை - 2

2. ஃபக்கிங் என்ற பிசினெஸ்




ஃபக்கிங் என்ற பிசினெஸ்
ஆண்கள் பெண் பாலியல் உறுப்பை
எரிச்சலுறுத்தும் ஒரு திராவக வார்த்தை
அல்லது
மனித இனத்துக்கே
ஃபக்கிங்கை கேடுகெட்டதாக அறிய வைக்கும்
ஒரு விடாமுயற்சியுடைய பிசினெஸ்
அப்படி ஒன்றும் அவர்கள் ஃபக்கிங் செய்யாமல் 
இருப்பதில்லை
காலையும் மாலையும் இரவும் கற்பனையிலும்
எந்த வயதுப் பெண் என்றாலும் அவளைக் கீழே வீழ்த்தி
நவ நாகரீகக் குளிர்பானத்தைக் குப்பியிலிருந்து
பருகிய சுகத்தை அடைவது போல
எளிதாகக் கடந்து செல்வார்கள் 
மனம் குமட்டும் ஒரு காட்சியை 
ஆற்றிக்கொள்ளுவது போல
கழிந்து விட்டு நகர்ந்து செல்வது போல
ஃபக்கிங் செய்யும் தொழில் நுட்பமே ஆண்மை 
எனப்படுவது
அவர்கள் செய்வதையே அவர்கள் எள்ளுகிறார்கள்
என்று கொள்ள முடியாது
பெண்ணின் மலர் போன்ற உறுப்புடன்
சம்பந்தப்பட்டது என்பதால்
ஃபக்கிங் என்பது ஒரு கெட்ட வார்த்தையாகும்
தகுதியைப் பெற்றது

 ஃபக்கிங் என்ற வார்த்தைகளை 
உதிர்க்கும் ஆணின் பிஸினசையே 
பெண்களும் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்
என்று அறிய ஆர்வமாக இருக்கிறேன்
எங்கெங்கும் ஃபக்கிங் என்ற சொல்
எதிரொலித்த போது
இருபாலின் உறுப்புகளையும் ஏலமிட்டது


ஏலங்களுக்குப் பெறப்படும் இவ்வுறுப்புகள்
இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில்
ஃபக்கிங் என்பது பிசினெஸாகும்
இயந்திரமே எல்லாவற்றையும் செய்வதில்

மனிதவிலங்கு பூரித்துப்போகலாம்


குட்டி ரேவதி

பாலியல் அரசியல் கவிதை - 1





1. விறைத்த குறிகளாலான மாலை


விறைத்த குறிகளை அரிந்து வந்து
மாலைகளாக்கவேண்டும்
மைக்கின் முன்னால் காமிராவின் முன்னால் 
மக்கள் கூட்டத்தின் முன்னால்
போராளிப் பெண்கள் முழக்கமிடுகிறார்கள்
குழுமியிருக்கும் முதல்முறை போராளிப்பெண்கள்
சிரிக்கிறார்கள் கைதட்டுகிறார்கள் வரவேற்கிறார்கள்
பெண்களைப் பேசவிட்டு சற்று தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கும் ஆண்கள்
முழங்கும் பெண்களின் யோனிப்பாகங்களைப் பற்றி
கிசுகிசுக்கிறார்கள்
அகராதியின் கனதி கருதி
பதிவாகாமல் போன 
'தேவடியா!' போன்ற வார்த்தைகளை
உதடுகளால் சுகித்துப்பார்க்கின்றனர்
முதல்முறையாக பகிரங்கப்படாமலேயே பகிரங்கமாவது
பெண்ணுறுப்புகள் தான் 
சுரந்து கொண்டிருந்த பெண்ணுறுப்புகள்
சுரப்பு நின்று போயிருந்தன
ஆண்மைக்குறைவினால் பதற்றப்பற்றவன்
படுக்கையறையில் 
தன் வன்முறையை நிரூபிக்கமுடியாமல் தோற்றுப்போனதில்
கத்திகளால் கனவுகளைச் செதுக்கிக்கொண்டிருக்கிறான்
இரவின் சுவரெங்கும்
அவன் தோன்றிய யோனிக்குழிகள்
எவரிடம் இருந்தன அவளிடமே இருந்த போதும்
விரைகள் தோன்றி வந்த உடல்களிடம்
ஏன் அவள் இத்தகைய போரை நிகழ்த்தவேண்டியிருக்கிறது?


நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?



குட்டி ரேவதி

உயிர்வலி – சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட திரையிடல்

நீதியரசர் கிருஷ்ணய்யர் 99வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணய்யர் விருதுகள் 2013
உயிர்வலி – சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட திரையிடல்
23/11/2013 சனிக்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு
சர். பிட்டி தியாகராயர் அரங்கு, ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர்

கிருஷ்ணய்யர் விருதுகள் 20131915ம் ஆண்டு பிறந்து மெட்ராஸ் மாகாணத்தின் சமூகநீதி வழக்குரைஞராக பணியாற்றி,பிறகு கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டதுறை, உள்துறை, நீர்வளம் மற்றும்மின் துறை அமைச்சராக பதவிவகித்து; பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்றநீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். தன்னுடைய99வது வயதிலும் நீதி, மனித நேயம், மனித 
உரிமைகள் என தொடர்ந்து போராடிவரும்மரணதண்டனை எதிர்ப்பு போராளி கிருஷ்ணய்யரின் 
பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவதுவருடமாக கிருஷ்ணய்யர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில்விருதுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட 
இருக்கின்றார்கள்.
கிருஷ்ணய்யர் மரணதண்டனை எதிர்ப்பு விருது
மரணதண்டனையை தத்துவார்த்தரீதியாக எதிர்த்து அதன் ஒழிப்பிற்காக பங்காற்றி; இந்தஉயரிய 
நோக்கத்தின் நியாயத்தை மக்களிடையே பரப்பி வரும் செயலுக்காக வழங்கப்படுவது. 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர் மும்பை வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி
2013ம் ஆண்டுக்கான கிருஷ்ணய்யர் மரண தண்டனை எதிர்ப்பு விருது திருமதி மகாசுவேதாதேவி – 
வங்காள எழுத்தாளர்
கிருஷ்ணய்யர் மனித நேய விருது
இனம், மொழி பூகோள எல்லைகளை கடந்து மனித நேயத்தை மட்டுமே உயர்த்தி பிடிக்கும்உதாரண 
செயல்களையும், அச்செயலாற்றியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்படும்விருது 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர் நடிகர் மம்முட்டி
2013ம் ஆண்டுக்கான கிருஷ்ணய்யர் மனித நேய விருது
திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் – சமூக சேவகர்
செங்கொடி விருது
கொண்ட நோக்கத்தில் வழுவாமை, தியாகம் வீரம் எனப் போற்றுதர்குரிய குணங்களைவெளிப்படுத்தும் செயற்கரிய செயல்களை செய்த பெண் செயல்பாட்டாளர்களுக்குவழங்கப்படும் விருது. 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர்கள் சென்னை வழக்கறிஞர்கள்வடிவாம்பாள்அங்கயற்கண்ணி 
மற்றும் சுஜாதா
2013ம் ஆண்டுக்கான செங்கொடி விருது
இடிந்தகரை பெண்கள் சுந்தரிசெல்விசேவியரம்மாள்
உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்படம்
மரணதண்டனையை கருப்பொருளாக கொண்டு மாறிவரும் சமூக கலாச்சார சூழலில்இத்தண்டனை   குறித்து ஆழமாக அலசி ஆராயும் ஒரு ஆவணப்படம். இந்த ஆவணப்படம்பேரறிவாளன் என்ற ஒரு மரணதண்டனை சிறைவாசியின் வாழ்வை ஆதாரமாக கொண்டுஅதனூடாக பயணித்து இத்தண்டனையின் 
தேவையை கேள்விகுள்ளாக்கும் ஒரு வரலாற்றுஆவணம். பல வெளிவராத வரலாற்று உண்மைகளை 
உள்ளடக்கி இருக்கும் இந்தஆவணப்படம் நீதித்துறை வல்லுனர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், 
சமூகவியலாளர்கள்,திரைத்துறையினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்க திரையிட்டு 
வெளியிடப்படஉள்ளது. 
மரணதண்டனை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையப்போகும் இந்நிகழ்வில்அனைவரும் பங்குகொள்ளவும்
மேலும் இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் மரண தண்டனை 
எதிர்ப்புகூட்டமைப்பு தங்களை அன்புடன் அழைக்கின்றது




மரணதண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு – 9884021741, 8883930017

நிகழ்சி நிரல்
நேரம்நிகழ்வு
4.00 வரவேற்புரை
4.15தலைமையுரை – விடுதலை ராஜேந்திரன்
4.45விருதுகள் அறிமுகம்விருது பெறுவோர் அறிமுகவிருதுகள் வழங்குதல்
5.30உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட வெளியீடு
படத்தை வெளியிடுபவர் பாரதிராஜாஜனநாதாதன் ஆவணப்படத்தை பெற்றுக்கொள்பவர் ஒளிவண்ணன்.
அமீர்வெற்றிமாறன்சேரன்
6.15தேநீர் இடைவேளை
6.30திரைப்படம் வெளியீடு
7.30சிறப்புரை
இரா.நல்லகண்ணு
பழநெடுமாறன்
வைகோ
புலமைபித்தன்
ஜி.ராமகிருஷ்ணன்
தொல்.திருமாவளவன்
செந்தமிழன் சீமான்
கோ..மணி
கோவை இராமகிருஷ்ணன்
பண்ருட்டி வேல்முருகன்
மருத்துவர் கிருஷ்ணசாமி
தனியரசு
முனைவர் ஹாஜா கனி
தெஹலான் பாக்வி
பெமணியரசன்
தியாகு
ஹென்றி டிபேன்
9.50நன்றியுரை – அன்பு தனசேகரன்


அழுகையற்ற மரணம்






அன்று மாலை, அந்த வீட்டு முன்னால் என்றும் காணாத வகையில் பத்து பேர் கூடியிருந்தார்கள்.

சிலர் வந்தார்கள், சிலர் போனார்கள். அங்கே நின்றவர்களும் கைபேசியைக் காதில் ஒட்டவைத்துக் கொண்டு நின்றார்கள். சத்தமே இல்லாமல் பேசினார்கள்.

அந்த நகரைக் காவல் காக்கும் காவல்காரர் அவர்களிடமிருந்து தள்ளி நின்று கொண்டிருந்தார். என்னவென்று கேட்டபொழுது, அந்த வீட்டில் இருந்த ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றார்.

இரவு நடுநிசி வரையிலும் எவர் எவரோ வந்தார்கள், போனார்கள். என்றாலும் ஒரு சிலரே வந்தார்கள் போனார்கள். மனித நடமாட்டமாய் இல்லாமல், மளிகைக்கடைக்கு வருபவர் அளவே கூட்டமும், பதட்டமும்.

மறு நாள் காலை, வெளியூரிலிருந்து கூட்டமாய்  வந்து  இறங்கினார்கள். உறவினர்களாக இருக்கவேண்டும்.

வீட்டின் முன்னால் முந்தைய நாள் கண்டதைப் போலவே பத்து பேரே கூடியிருந்தார்கள். 

அவர் இறந்து போய், முழு இரவும் கடந்த பிறகும் எதிர்வீட்டுக்குக் கூடத் தெரியாமல் இருந்தது. கதவைத் தட்டி நான் தான் சொன்னேன்.

மதியவேளையில், இறந்தவரின் உடல் கழுவி, திருநீறு பூசி முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது. ஐம்பது வயதுக்குக் குறைவாகவே இருக்கும். அவரைச் சுற்றிலும் அடித்து அழுவார் என்றோ தள்ளி நின்று அழுவார் என்றோ எவருமே இல்லை.

உடலைத் தூக்கிச் செல்கையிலும் எந்தச் சந்தடிச்சத்தமும் இல்லை. என் கவனம் மாறியிருந்த வேளையில் இது நடந்திருந்தது.


ஆனால், அவரை நினைத்து அழும் வேளைகளும் நினைவுகளும் எவருக்கும் வாய்க்காமல் இருக்கும், இல்லாமல் போகும் என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்.



குட்டி ரேவதி

கவிதையும் அவமானங்களும்



எப்படியோ இப்பொழுதும் கவிதை தான் காப்பாற்றி விட்டது.

அருகே அருகே நகர்ந்து வந்து என்னைச் சுவைத்துப் பார்க்கத் திட்டமிருந்த, ரத்தச்சுவை கேட்கும் பிடாரிகளிடம் இருந்து மொழியின் வேட்கை தான் விரட்டியது.

கைக்கு எட்டாத தூரம் செல்லும் வித்தையைக் கவிதை தான் கொடுக்கிறது.

கவிதையிடமிருந்து, மனிதனின் மூளைச்சுவரின் மடிப்புகளில் கூட எந்த நஞ்சையும் மறைத்து வைக்கமுடியாது. பூஞ்சையைப் போல்
அது தன்னையே கொல்லும், என்னையே கொல்லும் என்று சொல்லும் அன்பைக் கவிதை மட்டுமே தந்துவிடுகிறது.

தனிமை தான் எவ்வளவு பாதுகாப்பானது. கண் முன்னே பரத்தி அடுக்கப்பட்டிருந்த எந்தப்புதியப் புத்தகமும்
ஈர்க்காத படிக்கு தனிமையின் பெருங்காட்சி கண்களை நிரப்பிக் கொண்டே இருக்கிறது.

யார் என்னை தம் அன்பின் செம்புக்குள் நிறைத்து வைத்து 'இது தான் நீ, இது மட்டுமே நீ' என்று சொல்வதில்
நான் பூரித்துப் போக முடியும்.

அன்பின் உச்சம் என்று சொல்லிய மறு கணம் எப்படி அவமானத்தைத் தந்து போகிறார்கள். 

அய்யோ, தப்பித்தேன். கவிதை, பிச்சைக்கார உடையில் இருக்கும் என்னை, மனதில் மேகங்கள் போல எண்ணங்கள் பறந்து கொண்டிருக்கும் என்னை கடலுக்குள் இழுத்துச் செல்கிறது.

நான் அலையாகக் கொந்தளிக்கச் செய்கிறது. கரையையும் இடிக்கக் கற்பிக்கிறது.

அவமானம். எல்லாமும் கையில் தந்ததாய்க் காட்டிக் கொண்ட பின், கடைசியாய் பரிசளிக்கப்படுவது ஓர் அவமானம். கவிதை அப்படிச் செய்வதே இல்லை. உச்சம். உச்சத்தின் பரவசம். இது மட்டுமே கவிதைக்குத் தெரியும். கவிதைக்குத் தெரிந்தது எல்லாம் இதுவே.

இலைகளை உதிர்த்து உதிர்த்து துளிர்க்கும் சுரவேகம், கவிதை தந்தது. உங்கள் காலடி நிழல் உங்களுக்கே. அதில் என்னையும் தங்கச் சொல்லுதல் என்னை அவமானம் செய்யும்.

கவிதை பெரிய குடை. அதில் நீயும் அடங்குவாய். நானும் நிற்பேன். எல்லை என்று ஏதும் இல்லை. அடுத்தடுத்த கணத்திற்கு இழுத்துச் செல்லும் நாயின் விளையாட்டு, கவிதையிடம் உண்டு.

மனிதர்கள் போல், 'இவ்வளவு தான் உனக்கு, எனும் அவமானம் செய்தல் இல்லை அதனிடம்'. நான் நாயையும் சொல்கிறேன். கவிதையைத் தான் சொன்னேன்.

எப்படியோ, இப்பொழுதும் ஒரு முறை தப்பித்தேன். எவரிடமும் சிக்காமல் கவிதை கிணற்றிலிருந்து ஒரு வாளி வழியாக என்னை இறைத்து வெளியே கொட்டியது. நான் பாய்ந்தோடி பயிர்களைக் கண்டேன்.

இதோ ஓடுகிறேன், வரப்பின் வழியே, வாய்க்கால் வழியே, கண்டபடியெல்லாம் தாறுமாறாக.



குட்டி ரேவதி




விடுதலை யான் .... கவிஞர் குட்டிரேவதி

(என் முதல் ஐந்து கவிதை நூல்களுக்கு மதிப்புரை செய்திருக்கிறார் தோழர் பெரியார் குமார். சரியான கவிதைகள் வழியாக என் நோக்கத்தைத் தொட்டிருக்கிறார். நன்றிகள்.)



 மரபை மீறும் பயணத்தின் போது அகத்தே தன்னை கடந்து செல்லும் எதுவும், புறத்தே நின்று கவனிப்பதைஅறிந்தே இப்படி தொடங்குகிறார் கவிஞர் குட்டிரேவதி  “கூவிக் கூவிப் பெண்ணுடல் விற்கப்படும்தேசத்திலிருந்து வந்தவள் நான்என்று.

      யானுமிட்ட தீ
      உடலின் கதவு
      முலைகள்
      பூனையைப் போல அலையும் வெளிச்சம்
      தனிமையின் ஆயிரம் இறக்கைகள்

 என ஆய்ந்து கவிதை தொகுப்பின் வழி கட்டமைக்கப்பட்டுள்ள ஆண் மையப்புனைவை உடைத்துச்சிதைத்து சிறகசைத்துப்  பறக்கிறார் கவிஞர் குட்டிரேவதி.

  “பெண்கள் பிள்ளை பெரும் எந்திரங்களல்ல என்றார் தந்தை பெரியார். இயற்கையில் கர்ப்பப்பையேவலையாகி பெண்ணுடலை சிறைபிடித்திருப்பதை ஆய்ந்துணர்ந்த தந்தை பெரியார் பெண்ணுடலைவிடுவிக்க  கர்ப்பப்பையையே வெட்டி எறியச் சொன்னார்.

  ”ஆணைப் பெற்றது பெண்சரி / பெண்ணைப் பெற்றதும் பெண்ணா? / என்ன அநியாயம்”. என்றுஇயற்கையே பெண்களுக்கு எதிராக இருப்பதை கேள்வியாக்குகிறார் குஞ்ஞிண்ணி.

துடைத்தகற்ற முடியாத / இரண்டு கண்ணீர் துளிகள் / முலைகள்,”  என்று குட்டிரேவதியும் இவர்கள்வழியில் இயற்கையிலேயே பெண்ணுடல் வஞ்சிக்கப்பட்டுள்ளதை கண்டடைகிறார்.

 மனிதர்கள் வர்ணாஸ்ரமப் பாகுபாட்டின் ஜதிகளாகப்பகுக்கப்பட்டு, அதிலும் தெருகூட்ட, மலம் அள்ள,அழுக்கை வெளுக்க என்று தனத்தனி ஜாதிகள் உருவாக்கி, அந்த வேலைகளை செய்வர்களை இழிவானவர்களாக ஆக்கி அவர்கள் ஒடுக்கப்பட்டு கிடப்பதை நாம் அறிவோம்.

  இப்படி ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் வேலைப் பிரிவினையாக கருதப்படும் கூட்டுவது, மலமள்ளுவது,அழுக்கை வெளுப்பது போன்ற அனைத்து வேலைகளையும் குடுப்பத்தின் பெயரால்  பெண்ணுடல் மீதுதிணிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்..? இப்படி சொல்லலாம் ஒடுக்குதலின் ஒட்டு மொத்த வடிவத்தின்பெயர்பெண்என்று....

  இந்த மண்ணின் எற்கனவே நிருவப்பட்டுள்ள ஜாதி, சமய, குடும்ப,பண்பாட்டு அமைப்புகளை கெளரவம்குறையாமல் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்லும் தொடர் சங்கிலியாகவே இங்கேபெண்ணுடல் பிரசவிக்கப்படுகிறது.

  இந்த சூழலில் பிரசவிக்க மறுத்து இயற்கையாகவும், வலிந்து கட்டமைக்கப்படும் பெண்மையின் குரலாகபெருங்குரலெடுத்து

     ”இந்த மண்ணுக்காக அல்ல எனதுடல்
     எனது உடலுக்காகத்தான் இந்த மண்

 என்று அறிவித்து விடுதலைப் பறவையாகப் பறக்கிறார் குட்டிரேவதி.

எவற்றையும் மறக்க முடியாது ஊமையாகிப் போன பெண்ணின் உள்தனிமையை இப்படிகவிதையாக்குகிறார்.

      “ தனிமையில் மட்டும்
       கசியும் உள் தனிமை
       பெருங்கடலாய் உருவெடுத்து
       அலையெழுப்பும்
       வேறு மனித வாசனை வீச
       ஒரு துளியாய் திரண்டு விழி நிரப்பும்”.
      கோள நீர்ப்பரப்பில்
      காட்சியாகும் உள்தனிமை
      காலச்சரிவில் உருண்டுடோடிப்
      பழுத்தப் பாறைகளைப் போல
      பாரமாய் விடும் கண்ணீர்த்துளிகளை
    ஏந்த வழுவுண்டா உன் கைகளுக்கு”?

தனிமையில் சுரக்கும் எண்ணங்களின் ஒரு துளியும். அது தன்னுள் சுரந்தாலும், பெருங்கடலெனபல்லாயிரம் ஆண்டுகளாக பிறமனிதவாசனையே நிறைந்த  கிடப்பதை கண்டு, அந்தத் துளியை ஆணாதிக்கம் இருகிக் கிடக்கும்  பெரு மலையாக உதிர்த்து விட்டு, இதை தாங்க இங்கே எவனுக்கடாசக்தி உண்டு? என்று கேட்கும் பதில்கள் அனேகமாக மெளனமாய்த் தானே இருக்க முடியும்.

 எவ்வளவு கனமான துளுகளை கண்ணிராக உதித்தாலும் கவலையின்றி பெண்ணுடலை தனதாக்க  இந்தசமூகம் செய்து வைத்துருக்கும் அத்தனை மயாவித்தைகளையும் கண்டுணர்ந்த குட்டிரேவதி, எதிர்மந்திரக் காரியாகிதன் எரி சக்தி கவிதையில்.

எரி சக்தி
வலிகளை உச்சரிக்கத் தெரியாத
வழிகளைத் தேடியலையாத
புடைவை ஒதுக்கி நடக்கும்
பெண்களைத்தான் உனக்கு பிடிக்கும்
அனால் உணர்வுகளின் குவியல் நான்     
ஒளி தேசத்தில் வாழவிரும்பும்
விடுதலைப்பறவை.....
ஒரே பிறப்பில் 
அழவும், சிரிக்கவும்,ரசிக்கவும்
பொழியவும் எரிக்கவும் மகிழவும்
அழியவும் ஜனிக்கவும் பூத்தவள்...
மண் வாசனையும் மலைத்திமிரும்
நதியேட்டமும்
என்னுள் கிளர்ந்தெழுவதைக்
கட்டுப்படுத்த இயலவில்லை
நவதுவாரங்களின் வழியாகவும்
கனவுகள் பீறிடுகின்றன
ஜனங்கள் திரளும் நிஜக்காட்டில்
வேட்கை பெருகப் பெருக
வேட்டையாட அலைகின்றேன்
கன்னத்தில் உருண்டு உதிரும்
கண்ணீர்த்துளிகளைச் சாட்சியாக்கி
உன்னிடம் கருணை சம்பாதிப்பதில்
எனக்கு பெருமை யேதுமில்லை
                                  பூ..வெளிச்சம்

என்றுதன்னுடல் தனக்கேஅல்லதுபெண்ணுடல் பெண்ணுக்கேஉரிமைப் போர் முழங்குகிறார்.

  ஆசைகள், கனவுகள், கோபம், நேசம், துயரம், சிறகுகள், விடுதலை என அனைத்தும் ஊறி நிற்கும்உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகிய உடலே சிறையாக்கி, சிறையே உடலாகி இடம்பெயரமுடியாத மரமாய்கிடப்பதை தனதுஅரசமரம்கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.

"ஆணியால் அறையப்பட்ட
பட்டாம் பூச்சிகளாய்ப்
பதறுகின்றனவா அதன் இழைகள்?
வெளிச்சச் செதில்களோடு
கிளைத்துக்
காற்றின் வெளியில்
நிந்தத்  துடிக்கிறதா அதன் உடல்?"
                                         பூ..வெ.29(பக்)
         
தனே நிர்வாணமாய்க் கிடந்து கருவாக்கி பிரசிவித்த ஆண்மை தன்னையெடுக்க விரட்டி வரும் பாதையில்நேருக்கு நேர் நின்று, இனி நாங்கள் ஓடுவதில்லை அன அறிவித்து, சூரியனின் தோல்களில் கை கோர்த்துவாருங்கள் தோழர்களே என எரித்து சாம்பலாக்க அழைக்கின்றார்.

                  யானுமிட்ட தீ -2

  அவளை அப்படியே விட்டிருக்கலாம் நீங்கள்
முட்டும் இரவைக் கானகத்தின் முதுகென்றும்
மெல்லத்திரளும் உதிரப்பெருக்கை கடலென்றும்
கனலும் காமத்தைக் காயும் நிலவென்றும்
உங்களுக்கான பிரபஞ்சா நீள்வலையைப் பயணத்தை
  மறுக்கிறாள்
மெளனிக்கிறாளென்பதைக் கூரிக்கொள்கிறேன்
உடலெங்கிலும் அயுதம் புதைத்த வனமாகியவள்
என்னறியாமல் அம்பெய்திய உங்கள் கைகள்
வழியெங்கும் சமிக்ஞைகளால்
அவள் எம்பிய வேட்டை அம்புகளால்
கிடங்குகளுக்குள் சேகரப்படுத்திய
வெடி மருந்துருண்டைகளால்
உம்முடல் வெடித்துச் சிதறலாம்
எதிர்பாராத காலையில்
தொடைகளுக்கு இடையில் விரியும் கானகப்பாதை
பால் வெளியாக நீளும் என்று
அவள் வானம் வரைந்தாலும்
உருண்டுருண்டு ஒடும் கோள்களின் கன்னி வலையில்
எந்நெரமும் சிக்கிக் கொள்ளலாம்
உமது குறிகள் என்றாலும்
நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் தோழர்களே
இரை கண்ட
காட்டு மிருக மொன்றின் பாய்ச்சலாய்
திமிறிக் கொண்டிருக்கிறது
யோனியைக் பதுக்கி வைத்திருப்பவள்
மரங்கள்முற்றா முகிழ்  முலைகளாகிப் 
பூத்துக் கொட்டும் பிரதேசமொன்றை
நிர்வாண உடலுமாக்கியவள்
யானுமிட்ட தீ ஈதன்று சூரியனைச் சுட்டும் போது
நம்பித்தான் ஆக வெண்டும் தோழர்களே!

யா.தீ. பக் 75

மூடுண்டை பெண்ணுடலை காம்ம் வழியாக குதற பயிற்சி பெற்ற விழிகளுக்கு தன்னுடலை நிர்வாணமாக்கிநின்று காட்டி அதிச்சியூட்டுகிறார். வெறும் சதைப்பிண்டமாக இல்லாமல் முலைகள் தன்னை வீழ்த்தும்எதிரியாக, காதலாக,தாய்மையாக, நேசமாக, தோழனாக தன்னோடு தொடர்வதை தன் 'முலைகள்'கவிதையில்
 " முலைகள் 
சதுப்பு நிலக் குமிழிகள் 
பருவத்தின் வரப்புகளில்
மெள்ள அலை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்
எவரோடும் ஏதும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை
மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை
தவத்தின் 
திமிறிய பாவனையும் 
காமச் சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும் 
சிசுகண்ட அதிர்வின்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன
ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
      இரு கண்ணீர்த்துளிகளாய்
      தேங்கித் தளுப்புகின்றன

         முலைகள்பக் 15

    என்று குட்டிரேவதி  விவரிக்கும் போது பெண்ணுடலை கமப்பசியாற்றும் சதையாக, வெற்றுடலாகபார்த்து வந்த நமது பார்வைகள் இயல்பாகவே மறுபரிசீலனையாகின்றன
.

    பெண்மை தன்னைத் தானே கையாள்வதற்குத்தான் எத்தனை தடைகள், மெளனமாக கண்ணீர்உருத்துக்கொண்டிருக்காமல் தன்னைத்தானே அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்திற்கு எதிராக, கற்களல்லநாங்கள் தேவதைகள். இனி உங்கள் வார்த்தைகளுக்குள் அடங்கிக் கிடக்கப்போவதில்லை எனவரங்களை தனதாக்குகிறார் தன் 'கற்கள்' கவிதையில்.

கத்தி கத்தி என் செவி திருப்பமுடியாமல்
வாயடங்கிக் கூடைகளில் பழங்களைப் போல்
கனிந்த மெளனத்துடன்
நினைவுகளால் பயனென்ன
தேவதையின் கனத்த தனங்கள்
அழுகிக் கொண்டிருக்கின்றன
வதங்கிய பூவிதல்போல் யோனி
புன்னைகை உதிர்த்து ஆவியாகிறது
என்றாலும்
தேவதைகள் அழக்கூடாது
      உடலின் கதவுபக் 113

காலனியாதிகம், ஏகாதிபத்தியம், இன, மொழி ஒடுகுதலுக்கும் எதிரான விடுதலைப் போராட்டங்களை,விடுதலை வீர காவியங்களை போற்றுகின்ற சமூகம், அதே சுதந்திரத்தை பெண் தனக்காக கோரி நிற்கும்போது கோரமாகி பழமை சமூகம் காட்டுவதைவார்த்தையின் அரசியல்கவிதையில்அம்பலப்படுத்தி,அஞ்சாமல் சுதந்திரத்தின் தோள் பற்றி பயணிக்கிறார் கவிஞர் குட்டிரேவதி.

நான் அந்த வார்த்தையை தேர்ந்தெடுத்த போதுதான்
அதை அணிருந்த அரசியலெல்லாம்
தீப்பிடித்துக் கொண்டன.
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடல்
சல்லடையாகித்
துவாரங்கள் வழியாகப் பீரங்கிகள் நீள்கின்றன.
எழுந்து நடக்கும் போது
கண்காணிக்கும் கேமராக்கள்
அங்கும் இங்கும் அசைந்து இல்லாத ஒன்றைப்
பதிவு செய்ய பறக்கின்றன
அந்த வார்த்தை தனது கருத்து புடைத்த தோல்
நோக்கும் இரு விழிகள்
வெண்மையான பாதங்களுடன்
கனத்த புத்தகத்திலிருந்து துள்ளி யொழுந்து
புதைத்துக் கறுத்த இதழ்கள்
வக்கிரங்கள் தோய்ந்த முலைகள்
இரவை மதியாத இதயங்கள்
சாவித்துளை வழியாகக்
கண்களை நீட்டும் பொய்கள்
வழியாக வெல்லம் பயளித்துக்
தீயைப் பரப்பியது"..
அந்த வார்த்தையை
அவர்கள் அணியாமல் இருந்திருக்கலாம்
தீப்பிடித்துக் கொண்டன
போர்களையோ தற்கொலை களையோ
கிஞ்சித்தும் பொருட்படுத்தாத அந்த வார்த்தை
தன் மீது பறந்த வந்து வீழ்ந்த சாம்பலை
உதறிவிட்டுத்
தன் பயனத்தின் மீது ஏறியது

தனிமையின் ஆயிரம் இரவுகள் – 11


    தன்னை ஒரு சக உயிரியாக மதிக்கக் கோரி ஆண் மையத்தை நெருக்கி நெருக்கி உறவாடமுயற்சிக்கிற பெண்மையை, ஆண்மையம் தொடர்ந்து விளிப்பு நிலைக்குத் தள்ளுவதை உணர்ந்துகொண்ட குட்டிரேவதி இப்படி எழுதுகிறார்.

குகைக்குள் நுழைந்த பறவை
இருளின் பாறையுடலில் மோதி
சிற கொடிந்தது 
கணக்கிலா முறைகள்.
ஒளியைத் தருவிக்க விரும்பாது
எதிர்திசையில் வெளியேறியது.”

  என்று தீர்க்கமான முடிவோடும், தன் கவிதைச் சிறகுகளோடும் ஆண்மையத்தின் நேர் எதிர்திசையில்பயணிப்பதை வாசகர்கள் அவரது தொகுப்புகளை வாசித்து உணரலாம்.

 தமிழ்க் கவிதையுலகம் பயன்படுத்தத் தயங்கும் வார்த்தைகளை, பேசத்தயங்கும்  பொருட்களைதிணிச்சலாகப் பேசுகிறார் கவிஞர் குட்டிரேவதி. தமிழ் இலக்கிய உலகில் காத்திரமான இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களாலேயே கவிஞர் குட்டிரேவதியைஜீரணிக்க முடியவில்லை என்பது நாம் அறிந்ததே.

  அனைத்தையும் தாண்டி பெண்ணிய அறிவுச் சூழலில் கவிஞர் குட்டிரேவதியின் கவிதைகள் மிகமுக்கியமாக விளைவுகளை ஏற்படுத்தித்தான் தீரும் என்பது திண்ணம்.

இந்த உரையை கவிஞர் குட்டிரேவதியின் வரிகளிலேயே முடிக்கலாம் என நினைக்கிறேன்.

   ”இம்மண் எனது. உனது என்பதும் எனது. மண்ணில் வேர்களுன்றி நின்று கைகள் மலர்ந்தும் தாவரமும்நான். மண்ணுக்கு மழை வேண்டும். மழையின் கூதிரில் குடைவிரித்து நிற்கும் வானம் நான். மண்ணுக்குச்சூரியன் வேண்டும். ஓயாத அலையென்ற எனதுடலால் உரக்கப்பாடும் விடுதலை யான்.”
        யா.தீ – 78

         நன்றி


பெரியார்குமார்
53 .கே.டி.ஆர் காய்கறி மார்கெட்
இராசபாளையம்

செல். 9976904384

நவபாடினியம் 2013



நான் அறிந்த மட்டில் பல வருடங்களுக்குப் பின்பு இப்படியான ஒரு முழு நாள் நிகழ்வு. முழுதும் பெண் கவிஞர்களால் ஆன நிகழ்வு. 

சென்னை கிறித்தவக்கல்லூரியின் கம்பன் மன்றம் இக்கருத்தரங்கத்தையும் கவியரங்கத்தையும் ஒருங்கிணைத்துள்ளது. 

பெண் கவிதையில் நடந்த வழிகளும் தொலைந்த வழிகளும் குறிந்த அடர்ந்த ஒரு நாள் நிகழ்வு.

நவீன இலக்கியப் பார்வை தொனிக்கும் படியாக நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் இதன் சிறப்பு என்று சொல்லவேண்டும்.

கவிதையின் மீது ஆர்வம் கொண்டோரும், நண்பர்கள் எல்லோரும் இந்நிகழ்வைத் தவறவிடாது கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்.






குட்டி ரேவதி

உதிர்த்த வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாது! சிவகாமி அவர்கள் கருத்தின் மீதான விவாதத்தை முன்வைத்து....







அன்புமிக்க நண்பர்களுக்கு, சிவகாமி அவர்கள் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் விடுதலைப்புலிகளில் பெண்புலிகள் பற்றிய தவறான தகவலை முன் வைத்துள்ளது பெரும் உரையாடலைக் கிளப்பி விட்டுள்ளது.

டெல்லி பாலியல் வழக்கில், 'மரண தண்டனை'யைத் தீர்ப்பாக பெற்றுள்ள இச்சூழலில், இந்தியாவையும் அதன் புவியியல் பரப்பில் நடைபெறும் எல்லாமும் சாதியமயமாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நுண்ணோக்கியை வைத்துப் பார்த்தால் தான் இது புரியும், தெரியும். தமிழகத்தில் தொடரும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்களிலும் விடுதலைப் புலிகளின் ஈழவிடுதலைப்போராட்டத்திலும், கணிசமான போராளிகள் ஒடுக்கப்பட்டவர்களாயும் தாழ்த்தப்பட்டவர்களாயும் இருந்துள்ளனர்.

இந்திய அரசு, தமிழக அரசு, சிங்கள அரசு மூன்று ஆதிக்க அரசுகளும் வெவ்வேறு திசையிலிருந்து ஒடுக்குமுறையின் ஆயுதங்களை நம்மீது எய்து வெற்றியை அடைந்து கொண்டிருக்கின்றனர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் நிறைந்த வெவ்வேறு முகங்களுடையவை இவை மூன்றுமே.

இந்தச் சாதியச் சூழ்ச்சிகளை அறியாது, புரிந்து கொள்ளாது தனித்தமிழ் தேசிய வாதிகளும், பெண்ணியலாளர்களும், பிற உரிமை இயக்கங்களும் தொடர்வதன் விளைவுகளை நாம் இன்னும் இன்னும் தொடர்ந்து சந்திக்கப்போகிறோம் என்றே தோன்றுகிறது.


தனித்தமிழ் தேசிய இயக்கங்கள் இங்குள்ள தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பாமல் தொடர்ந்து அவர்களை தம் சாதியதிகார நிலையிலிருந்துப் புறக்கணித்தும் ஒடுக்கியும் வரும் நிலையில் தலித் மக்களின் கோபம் ஈழவிடுதலைப் போராட்டங்கள் மீது திரும்புகிறது. இரண்டுமே, மிகவும் உண்ணிப்பாய் ஆராய்ந்து நிவர்த்தி செய்யப்படவேண்டியவை.

இது வரை தோன்றிய எல்லா அரசியல் கட்சிகளும் இவ்விரு பிரிவினருக்கும் இடையே பெருத்த பகைமையை ஊட்டி, எரியச் செய்து அதில் அதிகாரக் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.

தீவிரப் பெண்ணிய இயக்கங்கள் எழும்பி இன்றைய அன்றாட பெண் பாலியல் பிரச்சனைகள் நோக்கி எந்தக்  கேள்வியும் எழுப்பப்படாமல் இருப்பதற்கும் காரணம், பெண்களுக்கு இடையே நிலவும் சாதி வேறுபாடுகள், கருத்தியல் அதிகாரத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளும் தான்.

மேற்கொண்ட விஷயங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு தான் சிவகாமி அவர்களின் கருத்துக்கும் எதிர்வினை ஆற்றுவது மதிநுட்பம் வாய்ந்த செயலாகும். ஏனெனில், இதுவே சுயவிமர்சனங்களும், அவர் மீதான விமர்சனங்களை எழுப்புவதற்கும் நம்மை அழைத்துச் செல்லும்.

இந்தப் புரிதலுக்கு உட்படாது, அவர் மீது அவதூறுகளையும் தவறான வார்த்தைகளையும் பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எவர் அவ்வாறு தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க அவருக்கு எல்லா உரிமைகளும் அதிகாரமும் இருக்கிறது. அவர் சார்பிலும் எவரும் தொடுக்கலாம். 

உரையாடலுக்கும் விவாதத்திற்குமான பண்பும் அறமும் தான் நமக்கான நியாயங்களை நோக்கியும் நகர்த்தும்.

அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகள் பற்றிக் கூறியுள்ள இந்த வாக்கியங்கள், ஒடுக்கப்பட்டோர் இடத்திலிருந்து பெண்ணியம் பேசுதலுக்கும், அதை நோக்கிய நம் முன்னகர்விலும் பெருத்தப் பின்னடைவே என்று நினைக்கிறேன். 

புவியியல் சார்ந்த அரசியல் கருத்தாக்கங்களுக்கு இடையே முரண்பாட்டையும் கவனச்சிதறலையும் ஏற்படுத்துதல் இந்திய நிலப்பரப்பில் நாம் தொடுத்துள்ள மண்ணுரிமைப் போராட்டங்களுக்கும், மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கும் எந்த வகையிலும் உதவப்போவதில்லை. (உ.ம்.) பெளத்தம் இந்திய நிலப்பரப்பில் ஒரு விடுதலைக் குறியீடு. ஈழத்தைப் பொறுத்தவரை அது ஓர் இனஒடுக்குமுறைக் குறையீடு

அந்த அளவிற்கு ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக சூழ்ச்சிகள் நிறைந்தன, இந்திய அரசும், தமிழக அரசும், பிற அரசியல் கட்சிகளும்.

பெண்கள் பாலியல் தொழிலாளர்களாகவே இருந்தாலும், அவர்களை ஆண்களுடன் இணைத்துப் புரிந்து அதிகாரமும் சுகமும் பெற்றவர்களாகச் சொல்வது கண்டனத்துக்குரியது. இந்த சமூக மாற்றத்தைக் கூட  நாம் பெருத்த முயற்சிகளுக்குப் பிறகு தான் அடையமுடிந்தது.

சிவகாமி அவர்கள் அளவிற்கு பொது வெளியில் நின்று, ஒடுக்கப்பட்டோருக்காகவும் பெண்களுக்காகவும் போராடிய பெண் ஆளுமை தமிழகத்தில் கிடையாது. அவர் அளவிற்கு "அதிகார இயங்கியல்" குறித்தப் புரிதலும் இலக்கிய வெளியில் வேறு எவர்க்கும் கிடையாது.

இந்நிலையில் பல வகையிலும் உடல் அறங்களையும் பெண்களுடனான உறவு அறங்களையும் பேணிய இயக்கத்தில் இருந்தப் பெண்கள் மீதான அவருடைய இந்த அவதூறு வேதனை செய்கிறது.

ஒரு மாதத்திற்கு மேல் இலங்கை முழுதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அக்கறைக்கு உட்பட்ட நிலப்பரப்பான "ஈழம்" முழுதும் பயணம் செய்து வந்தவள் என்ற முறையிலும், தொடர்ந்து அந்த நிலப்பரப்பில் தோன்றிய பெண்கள் கவிதை இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து ஆய்வு செய்து வருபவள் என்ற முறையிலும், தமிழ்ப்பெண் கவிதை என்பதே கூட, ஈழப்பெண் கவிதைகளின் அரசியல் தாக்கத்தில் உண்டான மலர்ச்சி என்பதைத் தொடர்ந்து விவாதத்திற்கு வைத்து வருபவள் என்ற முறையிலும், அவர் சொன்ன வார்த்தைகள் திரும்பப்பெற முடியாத அளவிற்கு எதிர்மறையான பொருள் அடர்ந்தவை.

நூல் பிடித்து வானுக்கு ஏறுவது போன்று சாகசங்கள் நிறைந்தது, தமிழகத்தில் இருந்து கொண்டு சாதி மறுப்புப் போராட்டங்களை நடத்துவது என்பது. என்றாலும், அவர் தன் கருத்துகளால் உருவாக்கியுள்ள இந்த நெருக்கடியான விவாதநிலை பெண்கள் மீதான பாலியல் திறமும் அறமும் குறித்த மதிப்பீடுகளை நிலைப் பெறச்செய்ய உதவும்.  

எந்த ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் பாலியல் ஆற்றலும், வரலாற்றில் மிகுந்த நேர்மையையும் அறங்களையுமே பேணப் போராடியுள்ளன என்பதுதான் ஆதிக்க சமூகத்திற்கு எதிராக இன்று நம்மிடம் இருக்கும் ஒரே அம்பும் தெம்பும்.


குட்டி ரேவதி

'இடிந்த கரை' நூல் குறித்த மதிப்புரை - நறுமுகை தேவி






ஒருமுறை கூட்டத்திற்காக வெளியூர் சென்றிருந்தேன்..கூட்டம் முடிந்தவுடன் என்னை வழியனுப்பி வைக்க ஒரு பிரபல எழுத்தாளர்,நண்பர் வந்திருந்தார்..மிகவும் சீரியஸ் ரைட்டர் என்று அறியப்பட்டவர் அவர்.நாங்கள் ரயிலடியில் பேசிக்கொண்டே காத்திருந்த போது வேறு இரயில்கள் எங்களைக் கடந்து சென்றன.ஒரு குழந்தையைப் போல வெகு குதூகலத்துடன் அவர் அதை ரசித்துப் பார்த்தார்..அவர் ரசிப்பதை,அவரின் குதூகலத்தை நான் வெகுவாக ரசித்தேன்.அவர் சொன்னார்..இந்த நிலம் அதிர்கிறது இல்லையா?அப்பாரயில் எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பா இருக்குதில்ல?அப்போது அவரிடம் ஒரு சீரியஸையும் என்னால் பார்க்க முடியவில்லை..ஆனால் அவர் அவருக்கு உண்மையாகத்தான் இருந்தார்.பேசினார்..அது தான் மனித மனம்..அதே போலத்தான் கடல்..
கடல் அசையுமா?அசையும்../கடல் அசைக்குமா?அசைக்கும்../கடல் நனையுமா/நனையும்…../கடல் நனைக்குமா?நனைக்கும்…/கடல் நகருமா?நகரும்..

ஆம்..கடல் நகரும்..நகர்ந்து நகர்ந்து வந்து குட்டி ரேவதி மாதிரியான தனக்குப் பிடித்தவர்களின் எழுத்தில் ஒளிந்து கொள்ளும்..தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் மீண்டும் அழைத்துப் போய் விடுவார்கள் என்ற அச்சத்தில் அது கவிதைகளுக்குள் ஒளிந்து வாழும்

எத்தனை வர்ணனைகளுக்கோ,எத்தனையோ எழுத்தாளர்களின் பேனா மையினுள்ளோ அலையடித்த கடல் தான் இது..ஆனாலும்,தன் அத்துணை அந்தரங்கத்தையும் நேர்மையாகச் சொல்லும் பதிவுகளுக்குள் சென்று அடைக்கலமாகி விடுவதில் தான் அது தன் வாழ்வாதாரத்தைக் காண்கிறது..
தேவதையென்றோ.அரக்கியென்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள் அதற்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை..அது தான் குட்டிரேவதி..போகிற போக்கில் பூ உதிர்த்து விட்டுப் போகிற பூமரமல்ல அவளது எழுத்துகள்..அது தேவைக்கேற்பப் பூத்துக் காய்க்கிற கனிமரம்..
காதல்,காமம்.அரசு,மக்கள்,போராட்டங்கள்,திருநங்கைகளின் நிலை எனப் பரவலான விரிந்த மற்றும் செறிந்த பார்வையுடன் அகன்றகடலென விரிகிறது இத்தொகுப்பு.

இவருடைய இந்த இடிந்தகரை தொகுப்புக்குக்குள் சென்று திரும்பும்  யாவரும் முழுக்க முழுக்க கடலின் உவர்நீரில் மூழ்கி தொப்பல் தொப்பலாக நனைந்து விடுவார்கள் என்றால் அது மிகையில்லை.
 கடலில் நனைந்து,விளையாடி,கரையில் நண்டுகளோடு கூட ஓடி,சிப்பி பொறுக்கி,கட்டுமரமேறி,மீன்கள் பிடித்து,கலங்கரை விளக்கின் வெளிச்சப்புள்ளியில் நகர்ந்து, யாரையும் ஒரு நெய்தல் நிலத்து மனிதர்களாக்குகின்றன இக்கவிதைகள் .

.நெய்தலின் பூச்சூடி,நெய்தலின் அதிகாலையில் அவள் காதலனுக்காகக் காத்திருந்த வேளையிலே தான் அரசர்களின் ஆணைகளுக்கேற்ப அவளுக்கான நிலத்தைப் பறித்து அவளை,அவளின் காதலனை தேசத் துரோகியாக்கி  நாடகமாடுகிறது அதே அரசு எனும் இயந்திரம்
மார்க்கச்சைகளில் கடல் மணல் நிறைகிறது/யோனிகளில் பூக்கள் வளர்கின்றன/உடலிலோ உப்பு பூத்து நீறெனச் சேர்கிறது/ஒரு கடலையே குடித்து விட்டவளிடம்/ஒரு கை நிரள்ளி இது தான் கடல் எனாதே/உடலுக்குள் ஒரு கடலையே நிரப்பிச் சுமப்பவளிடம்/ஒரு சூரியன் ஒரு குளிர் நிலவு வந்து சேர்ந்த பெரு நதிகள்/எல்லாம் இருக்கின்றன

இங்கிருந்து துவங்குகிறது குட்டி ரேவதியின் இடிந்தகரைக்கான கவிதைப் போராட்டம்..
அணு உலை தொடர்பான கவிதைகளும்,அது குறித்த போராட்டங்களின் செய்திகளும் செறிவாய் அடர்ந்திருக்கின்றன.இந்தப்போராட்டத்தில் பெண்களின் உணர்வும்,தீவிரமும் வார்த்தைகளில் சொல்லி நிரப்ப முடியாத அளவுக்கான ஆழமானவை என்பதை இவரது கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன..தொகுப்பு முழுவதும் விதவிதமான உணர்வுகளின் கலவையாகவே மிளிர்கின்றது.பெண்ணுடலை ஒரு கடலாகவே விரித்துப் பார்க்கும் ரேவதியின் பல வரிகள் மிகவும் பளிச்!பளிச்!
கடலை இழந்த சங்கு போல-என்ற கவிதையில் ஒரு வரி/கடலை உடலுக்குள் சுமந்து திரியும் பெண்ணுக்கு/குரல் வளர்வதில்லை/சொற்களை அவள் வளர்ப்பதில்லை.” மிக மிக அழகான வரிகளாகத் தோன்றிற்று எனக்கு.
அரசாங்கத்தை மக்கள் மீதான அதன் அலட்சியத்தைக் கடுமையான வார்த்தைகளால் சுட்டுகிறார் அவர்.’தமிழகத்தைத் தேசம் என்கிறோம் நாங்கள் என்ற கவிதையில்கொலைகளை ஒத்திகை பார்க்கும் அரசுச் சமூகம்/எங்கள் பிள்ளைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்/லத்திகளால் வரைபடத்தைத் தெளிவாக வரைந்து விட முடியும் என்று நம்புகிற ஓர் அரசுஎன்கிறார்.
அரசியின் சாட்டை என்ற கவிதையில்,அரசியாகப்பட்டவள் சூன்யக்காரியைப் போல நடந்து கொள்பவள் என்று துவங்கிவன்மத்தை சாக்லேட்டுக் கட்டிகளாக்கித்/ தோழியுடன் தின்று ருசித்த வனவாசக் காலங்களிலும் கூட /தன் கண்களில் மண்டிய சூன்யத்திலிருந்து மீள/அவள் கற்றுக் கொண்டதேயில்லைஎன்கிற வரிகளை வாசிக்கிற போது சமகால அரசியலும் உடன்பிறவாத் தோழிகளும் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை..

ரேவதியின் கவிதைகள் முழுதும் கடுமையான அரசியல் விமர்சனத்தை உள்ளடக்கியே இருக்கின்றன.கூடங்குளம் விவகாரம் துவங்கிய நாள் முதலாய் இன்றுவரை நடை பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றிய விவரிப்பும்,அரசு இயந்திரம் அதை ஒடுக்க மேற் கொள்ளும் அத்தனை தகிடு தத்தங்களையும் இக்கவிதைகள் அறம் பிறளாமல் பேசுகின்றன.

அரசியல் சாராத கவிதைகள் அல்லது அரசியல் இல்லாத கவிதைகள் இருக்க முடியாது..ஒவ்வொரு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு அரசியல் சார்ந்தே இருக்கவேண்டும்.அவ்விதத்தில் பார்த்தால் ரேவதியின் அரசியல் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கான ஆதரவுக் குரலாக ஒலிக்கின்றது.மக்களுக்குத் துரோகம் செய்யும் மக்களாட்சி முறையில் ஏற்பட்டுள்ள அவலத்தினை,அரசுகளின் ஆதிக்க மனோபாவத்தை அது கடுமையாகச் சாடுகின்றது.
எங்களுக்காகப் போராடிய ஆண்களின் காயங்களை/முத்தமிட்டு அவர்களை எம் கண்ணீரின் சேலைகளுக்குள்ளே/அணைத்துக் கொள்ளவும் அறிந்து கொண்டோம்/………………………..குடிசைகளில் ஒளித்து வைத்திருந்த காதலை/இதயத்தில் புதைத்துக் கொள்ளவும்/கற்றுக் கொண்டோம்-என்று போராட்டக்களத்தில் மிளிர்கின்ற கிராமியக் காதல் சொல்கிறார்..


கடலுக்குள் இறங்கி நடந்தவனைப் போலவே தான் இவனும் என்றாலும் இவன் கிறிஸ்து அல்ல.கிறிஸ்து அல்லவே அல்ல/கடலில் மூழ்கிய நிலவின் வட்டத்தைக் கால்களால் கலைத்தனர்/அதன் புனிதப் பாதையைத் தம் நடையால் அழித்தனர்/ என்று சொல்லுவதன் மூலம் மக்கள் போராட்டங்களை/அப்போராட்டங்களை வழிநடத்துபவர்களை வெறும் புனிதர்களாக்கிக் கடந்து போகிறவர்களை உலுக்குகிறார்.அவர்களைப் புனிதர்களாக்கி நீங்கள் தப்பித்துப் போகாதீர்கள்.உங்கள் கடமையைச் செய்யத்தவறாதீர்கள் என்கிறார்.


நாம் வாழும் பூமியில்,சொந்த நாட்டில்,சொந்த ஊரில் அந்நியர்களாக்கப்படுவது எவ்வளவு கொடுமையான விசயம் தெரியுமா?நம் கண்ணெதிரே நாம் வாழ்ந்த மண் நம்மிடமிருந்து களவாடப்படுவதும்,அதைக் கை பிசைந்து வேடிக்கை பார்க்க நேர்வதும் ஆறாத ரணம்.அதிலும் கடலும்,அதைச் சார்ந்த தொழிலும் உள்ள மக்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது காலவரையறையற்ற முறையில் இப்போராட்டத்தை நீட்டித்திருப்பது இந்திய வரலாற்றில் முதல்முறை மட்டுமல்ல யாராலும் மாற்றவே முடியாத நிதர்சனமான உண்மை.நீரால் வேலியமைத்து,நீர்சூழ நின்று தொடரும் இப்போராட்டத்தின் மிக முக்கிய குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் எந்தவொரு அரசியல் கட்சியும் இப்போராத்திற்குத் தலைமை வகிக்கவில்லை என்பதே..சமீபமாக நாட்டில் அதிகரித்து வரும் மக்களின் தன்னெழுச்சியான பல போராட்டங்களில் இடிந்தகரைப் போராட்டம் எல்லாத்தரப்புகளையும் சற்றே மிரளச்செய்திருக்கிறது என்றால் அது  மிகையில்லை எனலாம்.இந்த முறை இப்போராட்டங்களில் பெண்கலின் எண்ணிக்கையும்,பங்கேற்பும்,தீவிர அர்ப்பணிப்பும் மிக முக்கியமான ஒன்றாகவே கருத்தப்படுகிறது.பெண்வழிச் சமூகமாக,தாய்வழிச் சமூகமாக இருந்த காலமும்,கொற்றவை என்னும் பெண் தய்வ வழிபாடும் நினைவில் வருகின்றன.போராடக்களத்தில் பல பெண்கள் எல்லோருமே கொற்றவையாகப் பரிணமிக்கின்றனர்..இதை அழகாகச் சொல்லுகின்றது 
இவரது கொற்றவை கவிதை 
அதேபோல்,
ரேவதியின் காதல் பேசும் சில கவிதைகள் நம்மை மலைப்புக்குள்ளாக்குகின்றது.மழை பெய்கிறது என்ற கவிதையில்கழிகளில் அசையாமல் நிற்கும் கொக்குகளின் வேதனை மீதும் பெய்கிறது/இரக்கமற்ற பிரிவைக்கொடுக்கும் இரவின் நிலவிலிருந்து/குளிரால் வதைக்கப் பெய்கிறது/எம் மர்ம உறுப்புகளை குளிர் தன் கைகளால் தொட முயலும் இவ்விரவினில் உறங்காத என் கனவுகள் மீது பெய்கிறது/ஆண் என்று எவரும் அற்ற கற்பனைகள் இல்லாத/என் கண்களிலிருந்து பெய்கிறது/ -இதில்  ஆண் என்று எவரும் அற்ற கற்பனைகள் இல்லாத/என் கண்களிலிருந்து பெய்கிறது என்ற வரியை நான் மிக உச்சமாகக் கொண்டாடுகிறேன்..

ஆண்மை பெண்மைக்கு ஏங்குகின்றது.பெண்மை ஆண்மைக்கு ஏங்குகின்றது.மென்மை என்பது திண்மைக்கும்,திண்மை என்பது மென்மைக்கும் தவிக்கின்றது.இதுவே உலகியலின் உயிரியலை இயக்குகின்றது.ஒரு அலட்சியப் போக்கில் காதலைச் சொல்லி விட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கச் செய்ய அதுவே போதுமானதாக இருக்கிறது.ரேவதியின் எழுத்துகளில் அதைப் பார்க்க முடிகிறது..

ஒரு கவிதையில் சொல்கிறார்-புவி ஈர்ப்புவிசையை இழந்து விட்ட இருவரும் பூவைப் போலச் சுழன்றோம் வெளியில்/நிர்வாணம் ஒன்றையொன்று பார்த்து/அகம் மலர்ந்து கொண்டது/விலகிச் சென்றதும்/வெட்கித்துத் துணியைத் தின்றதுஅழகான வரிகள்..தேன் கூடு,ஆடை போன்ற கவிதையில் உண்மையிலேயே காமரசம் சொட்டுகிறது.

திருநங்கைகள் பற்றிய கவிதைகள் மனதின் ஆழம் பார்ப்பவை.மாயக்குதிரை,உன்னிடம் உண்டா ஒர் அரண்மனை,அரைப் பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள் என்ற கவிதைகள் பாலினத்திரிபும்,அதன் அவஸ்தையும் பேசுவன.அடன் வலியை நம்மை உணர வைக்கின்றது.@(வாசிக்கஅரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்)

இப்படி,கலவையாக இருக்கிறது இத்தொகுப்பு.ஆனாலும்,அதில் அதிகமாக இடிந்தகரையும்,அதன்போராட்ட மக்களும்,கடலும் மட்டுமே அலையாடிக்கொண்டிருக்கிறார்கள் நம் மனமெங்கும்….



நறுமுகை தேவி