விளம்பரப்பலகைகளிலும் திரைப்படச் சுவரொட்டிகளிலும் உடலின் தட்டையான பிம்பங்களை பார்த்துப் பழகிவிட்ட நாம் உடலின் உள் இயக்கங்களிலிருந்தும் எண்ணங்களின் தொடர் ஓட்டங்களிலிருந்தும் வெகுதூரம் நிறுத்தப்படுகிறோம். இன உற்பத்திக்கும் காம வெளிப்பாட்டுக்கும் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் நவீன மாதிரிக்குமான பொருளென்று உடலை ஆக்கியிருக்கிறோம். உடலின் வளர்ச்சி உயிர்ப்பான எண்ணங்களூடே நிகழ்கிறது என்பதை மறுக்கிறோம். ஆணுடலோ பெண்ணுடலோ இரண்டுமே வேறுவேறாய் இருக்கும் சமமானவை தாம். ஒன்றுக்கொன்று பொருந்திப் போகக்கூடியவை தாம். ஆனால் பூட்டும் சாவியும் போல இருப்பதை எதிரெதின்று நோக்கும் நம் சிந்தனை இரு உடலையும் ஒன்றோடொன்று பொருந்தாததாக ஆக்கியிருக்கிறது. இன உற்பத்தியில் பெண்ணுடலைப் போலவே ஆணுடலும் பங்குபெற்றபோதும் பெண்ணுடல் மட்டுமே அதற்கான தொடர்ப் பராமரிப்பில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறது. பெண்ணுடலும் காம வெளிப்பாட்டை தனது இயல்பாய்க் கொண்டிருந்தாலும் அது செயற்கையாயும் அதற்குத் தகுதியில்லாததாயும் முடக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றையும் விட காதல் என்னும் சமூக வெளிப்பாடும் ஆணுக்கு மட்டுமே நியாயமென்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் உடலைப் பொருளாதார உற்பத்திக்கான மூலதனமாய் பயன்படுத்தும் பெண் பாலியல் தொழிலாளர்கள் தம் உடலை மேற்சொன்ன வரையறைகளுக்குள் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அதாவது பெண்ணின் உடல் இன உற்பத்திக்கு மட்டுமேயானது, ஆணின் உடல் காமத்தை வெளிப்படுத்தும் வசதிகளும் வாய்ப்புகளும் உடையது என்ற இரு வரையறைகளுமே ஆதிக்கம் பெறும் சமூகச் சந்தை பாலியல் தொழில். உடல் இன்னும் இன்னும் தட்டையாக்கப்படும் இடம் அது.
இன்று ஆணுடலை பெண்ணுடலாக்கலாம். பெண்ணுடலை ஆணுடலாக்கலாம். அறிவியலும், சமூகமும் அதற்கான ஏற்பாடுகளையும் உரிமைகளையும் பெருவாரியாக வழங்கியுள்ளன. இந்த நிலையில் பெண்ணுணர்வு ஆணுணர்வு ஆகியவற்றை எப்படி வரையறுக்கலாம்? மென்மையான உணர்வுகள் எல்லாம் பெண்மை என்று கூறப்பட்டதை பெண்ணுடலாக மாறிய ஆணுடலில் எப்படி ஊன்ற முடியும்? என்ன இருந்தாலும் பதியனிட்ட உணர்வுகள் தாமே அவை? ஆக பெண்மை ஆண்மை என்பவை கூட கட்டமைக்கப்பட்டவை. வற்புறுத்தப்படுபவை.
பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் சொல்லியது நினைவுக்கு வருகிறது. ‘ஏதோ நம்ம உடம்புக்குள்ள இன்னொரு உடம்பு நுழைந்து வருவதாய் நாம நினைச்சுக்கிறோம். ஆனா, ஒரு சட்ட மாதிரி மாத்திக்கிற உணர்வு தான் எனக்கு இருக்கு. இதுல எனக்கு காமமும் இல்ல. அந்த உடம்பால என்ன கட்டுப்படுத்தவும் முடியாது’. எனில் ஒரே ஒரு குறிப்பிட்ட உடம்புடன் கொள்ளும் உறவும் அதற்கான கட்டுப்பாடுகளும் தாம் சமூகத்தில் அடிமைத்தனம். இது குடும்பத்தின் வரையறை. நீங்கள் கேட்கலாம், பாலியல் தொழிலும் சமூக அடிமைத்தனமில்லையா என்று. கண்டிப்பாக அது ஓர் ஒடுக்குமுறையின் வேறுவடிவம். ஆனால் திருமணத்தின் குடும்பத்தின் ஊறிப்போன கொத்தடிமை இல்லை. இரண்டிலும் பெண்ணுடல் அடிமைத்தனத்தின் முள்ளில் புரண்டு எழ நேரிட்டாலும் குடும்பத்துக்குள் ஆணுக்கான இன உற்பத்திக்கு ஒத்துழைத்தல், ஆணின் காம வெளிப்பாட்டுக்கு உதவுதல் என்ற பேரத்துக்குள் அடங்குதலாகிறது. பாலியல் தொழிலில் அதே பெண்ணின் காம உணர்வு பொருட்படுத்தப்படுவதில்லை. இன்னோர் ஆணின் இன உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த நுட்பமான வேறுபாடுகள் நாம் வாழும் சமூகத்தின் பாலியல் ஒடுக்குமுறைகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவலாம்.
ஓர் ஆணுடல் எந்தப் பெண்ணுடனான உறவையும் நினைவாக்கி தன் உடலில் பத்திரப்படுத்த வேண்டியதில்லை. அந்தப் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணைப் போன்றே ஒரு சட்டையைப் போல கழற்றி எறிந்து விடலாம். இன உற்பத்தியை ஒரு நினைவாக்கிக் கொள்வதான கருப்பை பெண்ணுக்கு மட்டுமே இருக்கிறது என்பது பெண்ணுடலுக்கான வாய்ப்பு. ஆனால் அதை சமூக விலக்குக்கான காரணமாக்கியதும் அதையே பாலியல் தொழிலில் தனது காமவெளிப்பாட்டுக்கான வெளியாக ஆண் கண்டறிவதும் ஏனோ நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
உடலுக்கான உணர்வுகள் உற்பத்தியாகும்போது விடுதலையான தன்மையுடன் இருக்கையில் அவற்றின் வெளிப்பாட்டின் மீது மட்டும் தடைகளை இயக்குவது ஏன்? உடலும் உடலும் சமரசங்களற்று இசைவாய் இணையும் வடிவமென்பது இந்தப் பேருலகின் மீச்சிறு வடிவம் என்று கொள்ளலாம்
தானே?’
குட்டி ரேவதி
2 கருத்துகள்:
பெண்ணீய வாதிகள் இளம்பெண்களைக் குழப்புகிறீர்களோ என்று நான் நினைப்பதுண்டு. பாலியல் தொழிலாளியின் சுதந்திரம்,மனைவிக்கான அடிமைத்தனம் என்று உறவுகளைக்கூறுவது நன்மையா?
கல்வி,பொருளாதார சுதந்திரம்,பொது வெளிகளில் சம உரிமை இவை போதாதா? மரபுகளைத் தன் மூளையின் அணுக்களில் சுமந்து திரியும் சந்ததிகளின் மனம் பாதிக்கப்படுவதை கலாச்சார சீரழிவில் இருக்கும் எமது வாழ்விடத்தில் காண்கிறோம்.
அன்புடன்,
க.நா.சாந்தி லெட்சுமணன்
Ms Revathi!
நான் படிக்கும் தமிழில் நீங்கள் முந்தைய பதிவில் எழுதினீர்கள். இப்பதிவுத் தமிழ் என் தலைக்கு எட்டாதது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எதையும் நேராகவே புரியும் சக்தியுள்ள நான் உங்களைப் புரிவது கடினம்.
இருக்கட்டும். உங்கள் கருத்துகளில் சில எனக்கு எட்டுகின்றன. அஃதாவது, உடல் தொடர்பு விடயங்களில், ஆணுக்குப் பெண் சமமாக வைத்து பார்க்கப்படவில்லை.
என்னைப் பொறுத்தவரை, சமனிலை என்றுமே வராது. அனைத்துச் சமூகங்களிலும், it is for man to propose, for woman to accept or reject. This formula takes the freedom of choice for a woman. Although she likes to propose to a man whom she fancies, she cant. The formula forbids her.
இது ஆண்களால் வரையறை செய்யப்பட்ட சமூகம். என்றுமே.
முதலிரவிலே முன்னுக்குவரத்துடிக்கும் உணர்வுகளை பெண் காட்டிவிட்டால், அவள் கணவன் அரண்டுபோய் விடுவான். ”இது பெண்ணா அல்லது பேயா? இவள் என்னோடு திருப்தி அடைவாளா?”
அவள் வாழ்க்கை அம்போ!
முடிவே இல்லாத கதையிது. ஏற்றுத்தான் தீரவேண்டும். வாழ்ந்துதான் தீரவேண்டும்.
It is better to make the best of a worst world.
கருத்துரையிடுக