நம் குரல்

அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப்பூக்கள்







அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்




என் அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்
வேலியின் முட்கம்பிகளுக்கு இடையே 
அதன் கிளைகள் சிக்கிக் கொண்டிருக்கவில்லை
அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்களை 
நீர் ஓவியங்களாய் வரைந்திருக்கிறேன்
உடல் வளர வளர அரைப்பாவாடையில் பூக்களும் 
அதிகமாக முகிழ்க்கின்றன
என்னுடல் ஆணாய் இருப்பதும்
நீங்கள் என்னை பெட்டை என்று அழைப்பதும்
பூக்களற்ற உடையாக்குகின்றன என் அரைப்பாவாடையை
நீங்கள் இருந்து விட்டுப் போங்கள்
ஆண் உடலில் அறையப்பட்டதால் ஆணாகவும்
பெண் உடலில் புகுத்தப்பட்டதால் பெண்ணாகவும்
என் அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்கள்
சுழன்றாடுகையில் பாவாடை காற்றில் மிதக்க
செம்பருத்திப் பூக்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றன.
ரகசியங்கள் சருகுகளாய் சரசரக்கின்றன
உடலின் எல்லைகளை பெயர்களால் வரையாதீர்கள்
அல்லது குறிகளால் குறிக்காதீர்கள்
உடல் முழுக்க போதையுடன் இச்சையுடன் எழுந்து 
பறக்கிறது செம்பருத்திப் பூக்கள் பூத்த அரைப்பாவாடை
அவ்வுலகத்தின் மையமாகிச் சுழல்கிறேன் நான்







மாயக்குதிரை



நண்பனுக்கு உடல் என்பது காட்சிப்பொருள்
தொடரும் ஒரு புதிர், தங்கைக்கு
அம்மாவுக்கு அது நிரந்தரப் புனிதம், கடவுளின் அழுக்கு
அப்பாவுக்கு பாதுகாத்து சேமிக்க வேண்டிய நாணயம்
ஊர்க்குளத்தில் உடலைக் கொத்தும் மீன்களிடம்
சிக்கிக் கொண்டபோது திறந்து கொண்டது என் உடல்
உறுப்பை அவை திருடிச் சென்று தாமரையின் இலைகளில்
உருட்டி உருட்டி விளையாடின வைரக்குமிழ் என்றன
பாட்டி சொல்லியிருக்கிறாள் உடல் அவளுக்கு அணிகலன்
புலிக்கு அதன் உடலே கானகம்
என்னுடைய மழலைக்கு அது ஓர் அணையாத சூரியன்
காதலனுக்கு தாமரைகள் பூக்கும் தடாகம்
எனக்கோ என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
எந்த உறுப்பிலும் என் சுயம் இறுக்கிப் பூட்டப்படாமல்
நிதம் தோன்றும் உணர்வுப் புரவியேறி விடுதலை காணும்
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பறந்து போன உறுப்புகளை பறந்து கொணர
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பெண்ணுமில்லை ஆணுமில்லை பெண்ணிலுமில்லை
ஆணிலுமில்லை நான் வளர்க்கும் மாயக்குதிரை






உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?


ஒவ்வொரு நாளும் அவன் 
ஒரு பெண்ணாக மாறிக்கொண்டே இருந்தான்
பெண்ணின் அடையாளங்களை முதலில்
புற உடலில் வரைந்து கொண்டான்
உடலின் வரைபடத்தில் நீர் ஓவியத்தைப்போல
காமத்தின் எழுச்சிகளும் வரையப்பட்டிருந்தன
கண்குழியில் ஆழக்கடலின் ரகசியங்களை
பொதிந்து கொண்டான்
உணர்ச்சியின் நீரோட்டங்களை
ஆறாகப் பெருக விட்டான் உடல் சமவெளியில்
விறைத்த குறியை அதன் ஆண்மைய முட்களை
அறுத்தெறிந்து சமனப்படுத்திக் கொண்டான்
இப்பொழுதிருந்து அவனை அவள் என்றே
அழைக்கலாம் என்று அறிவித்துக் கொண்டாள்

நம்பிக்கையின் தாரகைகள் முளைத்து
உடல் ஒரு வானமாக எழுந்தது
அதன் உயரத்திற்கு சிறகுகள் விரித்து
பறந்து கொண்டேயிருக்கும் அனுபவத்தைப்
பேசி பேசியே தன் குஞ்சுகளையும் வளர்க்கிறாள்
இப்பொழுதும் அவள் என்னைக் கண்டால் கேட்பது
என்னிடம் போல் உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?




குட்டி ரேவதி



இக்கவிதைகள், 'ஸ்மைலி' என்கிற லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு....