நம் குரல்

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 7

ஆழியாள் - ‘என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி’










நன்றி: கூடு; தமிழ் ஸ்டுடியோ

டில்லியில் கவிதை வாசிப்பு நிகழ்வு





26.03.2011 டில்லி சாகித்ய அகாடமியில்
பெண் கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழ்வு.
கவிதையில் ஆர்வமுடைய
டில்லியில் வசிக்கும் நண்பர்களை
அன்புடன் அழைக்கிறேன்.
நிகழ்ச்சி நிரலை இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி!










குட்டி ரேவதி

உடலின் வடிவம்



வீடு, கொதிக்கும் வெப்பத்தால் ஆனது என்று சொன்னால் நம்பும் பெண்களுக்குத்தான் இந்தச் சொற்களும். வீட்டைச் சுமந்து கொண்டு அலைய முடியாது, முதுகு முறிக்கும் கனத்துக்கிடையே அவதிப்படும் உங்களுக்கு இந்தச் சொற்கள் ஆறுதலை அளிக்கும் என்ற என் உத்திரவாதமும். ஏனென்றால், வீடு என்றால் ஆணின் குடும்பத்தை கட்டியெழுப்புவதற்கான கூடு என்று தான் பொருள். இந்நிலையில், பயணமூட்டையில் அடுக்கும் பொருட்களுக்கிடையே வீட்டையும் முடிந்து கொள்வது பலருக்குப் பழக்கமாக இருக்கலாம். அல்லது, வீடே பயணமூட்டையாக மாறி, பயணம் முழுக்க, அழுக்குக் களையப்படாத நினைவுகளாகத் தேங்கிக் கனக்கலாம். ஆனால், பயணம் என்பது வீட்டின் திறந்த வாயிலில் தொடங்குவது என்பது பெண்கள் பலரும் அறியாதது.



எந்த ஒரு புதிய நகரத்திற்குச் சென்றாலும், என் தனிமையே என் ஆளுமையாகி, அது வரை என் வீட்டளவிற்குச் சுருண்டிருந்த என் திசைகள் கைகளை நீட்டி விரிகின்றன. நகரத்தில் வேறு வழியில்லை. எல்லோரும் கட்டம் கட்டமாய்ச் சிந்திக்கிறார்கள். மூலைகளும், விளிம்புகளும், குறுக்கங்களும் அவர்கள் உடலின் வடிவங்களாகின்றன. நிலைத்து விட்ட நகர வீதிகளில் உடல்கள் கண்மூடிக்கொண்டு வேகமெடுக்கின்றன. நகரத்தின் ஆகாயம் அறையின் இடுப்பு நாடாவால் சுருக்கிக் கட்டப்பட்டிருக்கிறது.என்றாலும், இரவுக்குள் உறங்கும் நகரத்தின் தெருக்களில் நானும் அவனும் மீண்டும் மீண்டும் பயணித்து இரவையும் உடலையும் ஒரு பெருநகராக்குகிறோம். கண் கூசும் ஒளியின் திட்டவட்ட நடவடிக்கைகளால், கட்டுப்படுத்தப்பட்ட உடல் அசைவுகளும் கழிவுகளை அவசரமாக வெளியேற்றும் தீவிரங்களும் வன்மங்களும் இரவின் நகரத்துக்கு இல்லவே இல்லை.



வீடுகள் மூச்சடைத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் போதெல்லாம், அறை மனிதர்களை உந்தி வெளியே தள்ளுகின்றன. திசையின் வேகமெடுத்துச் சென்றுவிட்டு வா என்று முதுகை முட்டித்தள்ளுகின்றன. பயணம் என்பதே தனியாய்த் தொடங்குவது. அது தரும் எதிர்பாராத கடினமான தருணங்களை, முகம் சுளிக்காது கடந்து வருவது. அத்தருணங்கள் தாம் பின்னாளில் நாட்குறிப்பேடுகளில் மயிலிறகுகளாகின்றன. வழித்தங்கும் அறைகளையெல்லாம் பால்வெளி அளவுக்கு விரிப்பதும், காலத்தின் நூதனமான பருவங்களையெல்லாம் சுவைக்கும் வாய்ப்பெடுத்துக் கொள்வதும் தாம் மனிதப் பகுத்தறிவின் கொடை. அப்பொழுது, நான் எவரும் தீண்டமுடியாத உடல் வெளியைக் கொள்கிறேன். நீள்வட்ட வெளியில் நீந்துகிறேன். அப்பொழுதைய என் சிறகின் இழுவிசை எதிர்பாராத கடினமான தருணங்களால் கூடக் காயப்படுவதே இல்லை.



நீண்ட பயணத்துக்குப் பின்பு, ஒளியைக் கொத்திக் கொணர்ந்து பகிர்ந்து கொள்ளும் கணங்களையும் பாய்களையும் வீடு தான் கொண்டிருக்கிறது. என்றாலும், விட்டு விடுதலையான நீண்ட ஆசுவாசமான பயணத்திற்குப் பின்பு தான் அது சாத்தியமாகிறது. இப்பொழுது வீடு, நான் இல்லாத சமயத்தில் பறவைகள் வந்து இளைப்பாறிக் கழிந்த எச்சங்களின் தடங்களால் அழகுபெற்றிருக்கிறது. அதன் சோபையை, என்னிடம் பகிரமுடியாது தவித்த காலங்களாலும் அதன் வெவ்வேறு பருவங்களாலுமான என் காதலனுக்குப் பரிசளிக்கிறேன்! வீட்டின் முகட்டில் பெருத்த நிலவொன்று காய்த்திருக்கிறது இன்று!

குட்டி ரேவதி

பெண்ணியக்கவிதை


பெண்ணியக் கவிதை என்று எதைக் கூறுவது? அதை எப்படி அடையாளம் காண்பது? அதன் வலிமையான கூறுகள் என்னவென்று உலக அளவில் பெண் கவிஞர்கள் பலரின் கவிதைகளையும் எடுத்துக்கொண்டு விவரிக்கமுடியுமா? என்று என்னிடம் ஒரு பெண் கவிஞர் கேட்டார். பெண்ணியக் கவிதையை எப்படி வரையறுப்பது? பெண்ணின் அடையாளங்களைத் தொடர்ந்து எழுதியெழுதி சல்லடையாக்கிக் கொண்டிருப்பவர்கள், தன் பெயரைத் தவிர மற்றெல்லாவற்றிலும் பால்நிலை விலக்கிய ஒரு பொதுத்தன்மையைக் கொண்டிருப்பவர்கள், உச்சபட்ச புதிய பெண்ணிய அடையாளங்களை வருவித்து அதன் கனம் குறையாமல் வழங்குபவர்கள் எனப்பல வகையினராக பெண்ணியத்தைப் பெண் கவிஞர்கள் இயக்கி வருகின்றனர்.



இவை எல்லாமே பெண்ணியத்தின் பகுதிகள் தாம். ஒரு பெண் தன் சிந்தனையை எழுத வரும்பொழுதே தன் இருப்பை நியாயப்படுத்துவதற்கான துணிவைப் பெற்றுக்கொண்டாள் என்று தான் பொருள். இன்றைய பட்டியலை நிறைக்கும் ஸில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன், ஏட்ரின் ரிச், எமிலி டிக்கின்ஸன் போன்றோருக்கெல்லாம் மூலவராக இருப்பவர் எலிசபெத் பாரெட் பிரெளனிங் என்ற ஆங்கிலக்கவிஞரே. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவரது வார்த்தைகளும் வரிகளும் பெண்கள் மீதான அநீதிகளை எதிர்த்து அழுத்தமான குரல் கொடுப்பன. ஓவியர் ஃப்ரைடா காலோவைப் போலவே முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் அறைக்குள்ளேயே தன் நீண்டகாலத்தைத் தனிமையில் கழிக்க நேர்ந்தவர். ராபர்ட் ப்ரெளனிங்குடன் காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். இன்றும் இவ்விருவரும் உலகின் மிகச்சிறந்த காதலராக மதிக்கப்படுகின்ற அளவுக்கு தம் உறவைப் போற்றி வாழ்ந்தனர். எலிசபெத் தனது காதல் கவிதைகளிலும் கூட தன் இருப்பைத் தீராததாக ஆக்கும் படியான காதலையே எழுதினார்.



பெண்ணியம் என்பது கரடுமுரடான முதுகுடைய விறகைப் போல படைக்கப்பட்டு, பெண்களின் இயக்கத்திற்கு எரிபொருளாக்கப்படுகிறது. அதில், பெண்ணியக் கவிதையின் பங்கு பல திசைகளிலிருந்தும் மூர்க்கமாகப் பற்றிக்கொள்ளும் தீயின் நாக்குகள் ஆகின்றன. உலகெங்கிலும் பெண்ணியக் கவிதை என்பது இயக்கமாகவே வளர்ந்து உருப்பெற்றிருக்கிறது. தீவிரமான பெண்ணியக் குரல்களெல்லாம், மேற்குறிப்பிட்ட வகைகளாக மாறித்தான் தீப்பிழம்பினாலான சொற்களாகியிருக்கின்றன.

கவிதைக்குள் நுழையும் ஒவ்வொரு சொல்லும் தன் இருப்பையும் தன்னினப் பெண்டிரையும் கூக்குரலிட்டு அழைக்கவேண்டும் என்பதாகத்தான் எலிசபெத்தின் கவிதைக் குரலும் தொனிக்கிறது. அவரது கவிதைகளைப் போலவே அவரின் மேற்கோள்களும் என்னை ஈர்த்தன. அசைபோடச்செய்தன. இன்றைய முழு பொழுதும் அவற்றின் சுவை நாவில் தித்திப்பாய் ஒட்டியிருந்தது.




முதல் முறையாக அவன் என்னை முத்தமிட்டான். ஆனால், அவன் இந்தக் கையின் எந்த விரல்களைக் கொண்டு எழுதுகிறேனோ அங்கு தான் முத்தமிட்டான். அப்பொழுதிருந்தே அது இன்னும் தூய்மையாகவும் வெண்மையாகவும் வளர்ந்தது.



இன்றைய நாளால் நாளையை ஒளியாக்கு!



நீ என்னவாக இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே உன்னை நான் நேசிக்கிறேன் என்றில்லை. உன்னை எதனால் ஆக்கிக்கொண்டிருக்கிறாய் என்பதற்காகவும் இல்லை. நீ, என்னுடைய எதனால் ஆக்கப்பட்டிருக்கிறாய் என்பதற்காகத்தான். நீ எனது எந்தப்பகுதியை வெளிக்கொணர்கிறாய் என்பதற்காகவும் தான் உன்னை நேசிக்கிறேன்.



முந்தைய இரவு ”ஆம்” என்று உனக்குப் பதிலளித்தேன். இந்தக் காலையில் “இல்லை” என்று உன்னிடம் சொல்கிறேன். மெழுகுவர்த்தியால் காணப்பட்ட வண்ணங்கள் பகலிலும் அதே போலத் தோன்றுவதில்லையே.



நான் பொறுமையுடன் பணியாற்றினேன். அதுவே, ஏறத்தாழ, என் வல்லமை என்று அர்த்தமானது.



குழந்தைகளை வளர்க்கும் வழிகள் பெண்களுக்குத் தெரியும். இடுப்பைச் சுற்றி அலங்கார உடையைக் கட்டிவிடவும், குழந்தைகளின் காலணிகளை மாட்டிவிடுவதற்கும் எளிமையான, மகிழ்ச்சியான, கனிவான நெளிவு சுளிவும் தெரியும். அர்த்தமெழுப்பாத அழகான வார்த்தைகளை சரமாக்கவும். வெற்றுவார்த்தைகளாகும் முழுமையான அர்த்தங்களை முத்தமிடவும். அத்தகைய அற்பங்களே வாழ்வைப் பொறிப்பதற்கான பவழங்களாக இருக்கின்றன,




ஐவிப்புதர்கள் வளர்வதற்கு முன் சுவர்கள் அந்தப்பருவநிலைக்கான கறையைப் பெறுவது இன்றியமையாதது.





குட்டி ரேவதி

கவிதைச் சோழிகளும் காட்டுப்பூக்களும்





படிமை, தமிழ்ஸ்டுடியோவின் கனவு பயிற்சித் திட்டத்திற்காக, இரு நாட்கள் நவீனக்கவிதை பயிற்சிப்பட்டறையை நடத்தித்தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இரு நாட்கள் போதுமானவை இல்லை என்றாலும், இன்னொரு கட்டப்பயிற்சிக்கு மாணவர்களை உந்திச்செல்லும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் வகுப்பறையில் நுழைந்தேன். மாணவர்கள் பலருக்கு வெகுஜனக்கவிஞர்கள் தவிர வேறு எவரும் தெரிந்திருக்கவில்லை. நாளிதழ்களில் வரும் துணுக்குக் கவிதைகள் மட்டுமே அறிமுகமாகி இருந்தன. சமூக நலனுக்கு கவிதை தேவை இல்லை என்ற அபிப்ராயமும் சிலருக்கு ஆழமாக வேரூன்றி இருந்தது. கவிதை பற்றிய பாடத்தை அதன் அடிப்படை நிலையிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதும் எனக்கு உறுதியானது. மேலும், கவிதை பற்றிய வகுப்புகளுக்குப் பின் நீங்கள் கண்டிப்பாக கவிதைகள் எழுதியே ஆகவேண்டும் என்ற வரத்தை விட, மலிவான கவிதைச் சோழிகளுக்கு இடையே கவித்துவம் கனிந்ததொரு கவிதையைக் கண்டுபிடிப்பதற்கான திறனை தனக்குள் ஒருவர் கண்டடைவதே அவசியம் என்பது என் எண்ணம்.



கவிதை வகுப்புகளுக்கான செம்மையான பாடத்திட்டத்தைத் தயார் செய்திருந்தேன். குறிப்பாக, சிறந்த கவிதை என்பதன் கட்டமைப்பு, நவீன இலக்கிய வரலாறு, அதன் விமர்சனப்பாதை, உலகக்கவிதைகள், அரசியல் கவிதைகள் என பல பிரிவுகளாக ஆக்கிக்கொண்டேன். கவிதை மற்றும் கவிஞர்கள் பற்றிய திரைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்தேன். பொதுமக்கள், பல சமயங்களில் கவிதைகளை வெகு எளிதாக, தவிர்த்துவிட்டுக் கடந்து போகிறார்கள், சாலையில் நிகழ்ந்த ஒரு சிறு விபத்தைக் கடந்து செல்வது போல. உள்ளே அழைத்துச் செல்லும் வழிமுறைகளோ திறவுகோல்களோ வழங்கப்படாததால் தாம் கவிதைகளைக் கடந்து போயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. உலகின் சிறந்த கவிதைகள் எனப்பட்டவை எல்லாமே பிரித்து அடுக்குவதற்கும், சிறகுகளைப் பிய்த்து காற்றில் எறிந்து பறவையாவதற்குமான உயிர்த்துவத்தைக் கெட்டியாகக் கொண்டிருப்பதைத்தான் இந்தக் கவிதை வகுப்பின்போது உணர்ந்தேன். அத்தகைய கவிதைகளை ஒவ்வொன்றாய் தொட்டு எடுத்துக் கொண்டு, குழந்தைகள் கலைத்து அடுக்கும் செங்கற்களைப் போல அடுக்கிப் பரவசப்பட்டு நுவுரக் குடித்த மதுவின் பித்தமேறித் திளைத்தோம். கவிதைகள் வகுப்பறைக்குள் நுழைந்து காடியானதொரு வாசனைத் திரவியத்தைப் போன்று அவர்களின் நரம்பு மண்டலத்தை மெல்ல மெல்ல பீடிக்கக் கண்டேன்.



நான் செய்ததெல்லாம், ஒரு நவீனக்கவிதையை எப்படி வாசிப்பது என்பதை விளக்கியதே. இது சுலபமான வித்தையாகவும் கைப்பிடித்து அழைத்துச் செல்வதற்கான எளிதான சாலையாகவும் இருந்தது. கவிதை அளிக்கும் களி வெறியில் பங்கேற்றவர்கள் இன்னும் இன்னும் கவிதைகள் கேட்டனர். நவீனக் கவிதையை முறையான வாசிப்புக்கு இன்னும் அறிமுகப்படுத்தாமல் ஒரு தலைமுறை அதைக் கடந்து செல்வது, கல்லூரிகள் வழங்கும் சாபமா இல்லை, சமூகத்தின் மீது இடப்பட்ட சாபமா? வந்திருந்தவர்களில் ஒருவர் கேட்டார்: இப்படியெல்லாம் கவிதையை வாசித்துப் பொருளுணர்ந்து மகிழமுடியும் என்பதை தமிழிலக்கிய மாணவனான எனக்கு ஏன் எவரும் சொல்லிக்காட்டவில்லை. பாப்லோ நெருதாவின் ‘போஸ்ட் மேன்’ திரைப்படத்தைத் திரையிட்டுக் காட்டினேன். கவிதை என்றால் என்ன? என்பதையும் கவிஞன் என்பவன் யார்? என்பதையும் கவிஞர், கவிதை இரண்டின் தாக்கத்தாலும் ஒரு தனிமனிதனின் பரிமாணம் எப்படி வளர்சிதை மாற்றமடைகிறது? என்பதையும் ஒரே சமயத்தில் தெளிவாக்கும் படம். இப்படத்தைப் பார்த்த பின்பு, கவிதை என்றால் என்ன என்பதான மலிவான கேள்வியை எவரும் எழுப்பவே முடியாது.



ஒரு நல்ல கவிதை, வாசிப்பவரைக் கிறங்கடிக்கிறது, நெருஞ்சி முட்களைப் போல ஏறிய இடத்தில் இருந்து துன்புறுத்துகிறது, அருளேற்றி ஆட்டுகிறது, சுய மடமையைக் கிள்ளிவிட்டுக் கடிந்து கொள்கிறது, புதைத்து வைத்திருக்கும் துயரத்தை கண்ணீரின் நதியாக்குகிறது, தூக்கமின்றி படுக்கையில் புரளவைக்கிறது, தனக்குத்தானே ஒரு காதலைப் பரிசளித்துக் கொள்கிறது, ரகசியச்சீழை வெளியேற்றி ஆசுவாசப்படுத்துகிறது, வாசிப்பவருக்குள்ளேயே மெளனமாய் பழையவொரு காதலைப் போல தங்கிவிடுகிறது. உடலையும் மனத்தையும் நிர்வாணமாக்குகிறது. தடையின்றி, செழிக்கச் செழிக்கப் பூத்துக் கொண்டே இருக்கின்றன நல்ல கவிதைகள், காட்டுப்பூக்களைப் போலவே! எல்லோருக்கும் அத்தகைய நல்ல கவிதைகளையே வாசிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்!



குட்டி ரேவதி

தியேட்டர் லேப்பின் ஆறாவது ஆண்டுவிழா


வைக்கம் முகமது பஷீர் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டோருடன்...














குட்டி ரேவதி

வேட்கையும் இச்சையும்

இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள் - நூல் அறிமுகம்



மூர்க்கமான இச்சையிலிருந்து மொழியும் தீரா வேட்கையிலிருந்து கவிதையும் பிறக்கின்றது. மூளும் சொற்களுக்கிடையே உண்மை ஒளிர்கின்றது. ‘இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்’ என்ற நூல் இம்மூன்றையும் பிணைத்த வடிவமாய் எழுந்திருக்கிறது.



லாவோட்ஸ் எழுதிய எண்பத்தியொரு கவிதைகள் அடங்கிய நூல் தாவோ தே ஜிங். ’தாவோ’ தத்துவத்தை உட்பொருளாகவும் நோக்கமாகவும் கொண்டு எழுதப்பட்ட கவிதைகள். லாவோட்ஸ் மொத்தம் எண்பத்தியொரு கவிதைகள் தாம் எழுதினாராம். மேலும், இவை ஒரே இரவில் எழுதப்பட்டனவாம். இவரது காலம், கி.மு. ஆறாம் நூற்றாண்டு.



இந்நூலை பதிப்பித்திருக்கும் தோழர் அலெக்ஸ் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். தாவோ தத்துவம் பற்றிய சிறிய உரையாடலையும் நிகழ்த்தினார்.



வாள்கள் தமது உறையை விட்டு வெளிவரக்கூடாது என்பதைப் போலவே மீன்கள் தங்கள் ஆழங்களை விட்டு வெளியேறக் கூடாது என்ற வரி இன்னும் ஆழத்திற்குள் என்னை செலுத்துகிறது. வேட்கையையும் இச்சையையும் நான் இந்நூலில் இன்னும் அதிகமாய் விளங்கிக்கொண்டேன்.



முகர்ந்து குடித்தலையும் முந்திச்செல்லுதலையும் பாய்ந்தோடுதலுக்கும் தேவையான வாயிலை இந்நூல் திறந்து கொடுக்கிறது.



தாவோ தத்துவம், சித்தர்களின் தத்துவத்துடன் இணையும் புள்ளிகளையும் குறிப்பிட்டார். பதினெண் சித்தர்களில் போகர் என்னும் சித்தர், சீனர் என்பதையும் வ்விடம் இணைத்துப் புரிந்து கொள்ளலாம்.



வெவ்வேறு சிந்தனை மரபுகள் தாம், தத்துவங்களாகி மனிதனுக்கு அக வெளிச்சம் காட்டுகின்றன என்பது எனது அடிப்படையான புரிதல். அந்தச் சிந்தனை மரபுகள் ஒன்றொடொன்று பொருத்தம் பெறும் அல்லது இணையும் வாயில்களை உணர்வதும் முழுவதும் தனிமனித அனுபவத்தின்பாற்பட்டது என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.



நாம் எந்த அளவிற்கு ஒரு சிந்தனை சார்ந்து நம்மைப் பயிற்சிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இது கருத்தில் கொண்டது. பெளத்தத்தின் பகுத்தறிவுச் சிந்தனை, தாவோ சிந்தனை, சித்தர் சிந்தனை இவையெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் பரிணாம அளவில் வேறுபட்டிருக்கின்றன என்றாலும் நோக்கம் ஒத்ததாகவே இருக்கின்றன.



கவிதைகளுக்கு வருவோம். லாவோட்ஸின் தாவோ தே ஜிங்’கை மலர்ச்சி பிரபாகரன், தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். தட்டையான மொழியில் அன்றி, நவீனக்கவிதைகளுக்கான புத்துயிர்ப்பான மொழியிலும் செறிவான அர்த்தங்கள் பொதித்த சொற்களுடனும் தந்திருக்கிறார்.



எந்த ஒரு கவிதையையும் எந்தத்தருணத்தில் வாசித்தாலும் அக்கவிதையில் நிறைந்திருக்கும் வெளிச்சம், இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருளையும் அழிக்கவல்லதாக இருக்கிறது.



ஒவ்வொரு கவிதையும் வேறுபட்ட ஒவ்வொரு மனித உளவியலோடும் இரசவாதம் கொண்டு வேதியியல் வினைபுரிய வல்லது.



லாவோட்ஸ், நீர் எருமை மீது, ஏறிப்பயணம் செய்து மேற்குத்திசையில் உள்ள காட்டுக்குச் சென்றது பற்றிய குறிப்பு அவர் பற்றிய ஓர் அபூர்வமான காட்சிச் சித்திரத்தைத் தருகிறது



எனக்குத் தென்பட்ட குறை, ‘வழி’ என்ற சொல் ஆளப்பட்ட இடங்களில் மட்டும் ‘நெறி’ என்று வந்திருக்கலாமோ என்பது தான். நெறி எனும் போது, வழி என்னும் ஒற்றைப் பரிமாண வார்த்தை பன்பரிமாணம் கொள்வதாகத் தோன்றுகிறது.



அந்நூலிலிருந்து சில கவிதைகள்:

தனித்தன்மை

எனது வார்த்தைகள்

புரிவதற்கு எளிதானவை;

எனது செயல்கள்

செய்வதற்கு எளிதானவை;

இருந்தும்,

எவராலும்

புரிந்துகொள்ளவும் முடிவதில்லை;

எவரும்

செய்வதும் இல்லை.



வழிக்கு வா

பெண்மையில் இருந்து கொண்டு

ஆண்மையைப் பயன்படுத்துங்கள்;

இதுவே, இவ்வுலகின் நுழைவாயிலாய் இருக்கின்றது.

நீங்கள் இசைவைத் தழுவி

பிறந்த குழந்தை போலாகிவிடுங்கள்;

பலமின்மையில் இருந்து கொண்டு

பலத்தைப் பயன்படுத்துங்கள்;

இதுவே, இவ்வுலகின் வேராய் இருக்கின்றது.

நீங்கள் இசைவுக்குள் மொத்தமாய் மூழ்கி

செதுக்காத மரத்துண்டு

போல் ஆகுங்கள்;

இருளாய் இருந்து கொண்டு

ஒளியைப் பயன்படுத்துங்கள்.

இதுவே, இவ்வுலகமாய் இருக்கின்றது.

நீங்கள் நேர்த்தியான இணக்கமாகி

வழிக்குத் திரும்புங்கள்.




சித்தர்

நேர்மையான மனிதர்

கவர்ச்சியாகப் பேசுவதில்லை;

கவர்ச்சியான மேடைப்பேச்சு

நேர்மையானது இல்லை;

விவேகமான மனிதர் பண்பட்டவர் அல்லர்;

பண்பாடு விவேகம் ஆகாது.

நிறைவடைந்த மனிதர் செல்வந்தர் அல்லர்;

செல்வங்கள் நிறைவு ஆகாது;

எனவே, சித்தர்

தனக்கென எதுவும் செய்வதில்லை.

அவர் மற்றவர்களுக்கு

அதிகம் செய்ய செய்ய

அதிக திருப்தி அடைகின்றார்;

பிறர்க்கு அதிகம் கொடுக்க கொடுக்க

அவர் அதைவிட அதிகம் பெறுகின்றார்;

ஒருத்தரின் தயவிலும்

இயற்கை செழிப்பதில்லை.

எனவே, சித்தர் எல்லோருக்கும் பயன்படுகின்றார்;

யாருடனும் போட்டி போடுவதில்லை.



குட்டி ரேவதி

கிருஷ்ணகிரி பயண அனுபவம்


எப்பொழுது செல்போனில் அலாரம் வைத்தாலும் அது ஒலிப்பதற்கு முன்பாக விழித்துவிடுவது என் பழக்கம். அதிகாலை 2.45 – க்கு அலாரம் வைத்திருந்தாலும் அதற்கு முன்பாக விழித்திருந்தேன். ஜோலார்ப்பேட்டை சந்திப்பை ரயில் நெருங்கிக்கொண்டிருந்தது. பல் துலக்கி முடிக்கவும் ரயில் நிலையத்தை அடைந்திருந்தது. இறங்குவதற்குத் தயாராக பெட்டியுடன் கதவைத்திறக்க முயல தொடர்ந்து இரண்டு பெட்டிகளிலும் கதவைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டேன். உதவிக்குப் பெட்டியில் ரயில் ஊழியர்களும் இல்லை. பயணிகள் எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். என்றாலும், பிளாட்ஃபாரமிற்கு எதிர்த்திசையில் இருந்த கதவு திறந்து கொண்டது. துணிந்து இறங்கினேன். ரயில் எந்நேரமும் நகரத்தொடங்கிவிடும். எதிர்த்திசையில் இறங்கி ப்ளாட்ஃபார்ம் ஏறுவதற்கும் ரயில் நகர்வதற்கும் சரியாக இருந்தது. கூதல் காதைச் சுற்றியது.



சரியாக மூன்று மணிக்கு ரயில் நிலையம் வந்துவிடுவதாகக் கூறிய அமிர்தவள்ளி இன்னும் வந்து சேரவில்லை. அரைமணி நேரம் அவருக்காகக் காத்திருந்த பின், தொலைபேசியில் அழைத்தேன். அவர் வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாகவும் கூறினார். ரயில் நிலையத்தின் விசாரணைக்கவுண்டர் முன்பு இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். நீண்டநேரம் காத்திருக்க நேர்ந்தது. ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த ஆங்கில மகளிர் தின சிறப்பு இதழ்களைப் புரட்டி முடித்தேன். நவநாகரிகப் பாணிகளில் இருக்கும் ஆதிக்க மனநிலையை இம்மாதிரி இதழ்களில் காணமுடியும். ஃபேஷன் துறையில் எனக்கு இருக்கும் ஆர்வம் வடிவமைப்பும் அழகியலும் ஒன்றுக்கொன்று பங்காற்றிக்கொள்வது குறித்தது என்பதால் இவற்றைத் தீவிரமாக அவதானித்து வருகிறேன். அதற்குள், இரண்டு முறைகள் ரயில்வே மாஸ்டர் என்னருகே வந்து நான் எந்த ரயிலுக்காகக் காத்திருக்கிறேன் என்று கேட்டார். என் தோழிக்காகக் காத்திருக்கிறேன் என்று கூறியதும் தற்காலிக ஆறுதலுடன் திரும்பிச்சென்றார். அநியாயத்துக்குச் சர்க்கரையை அதிகமாகக் கலந்த காபி ஒன்றை வாங்கிப் பாதியைப் பருகி விட்டு மீதியை எறிந்தேன். டில்லி செல்லும் ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகள் பெருத்த மூட்டைகளுடன் அங்குமிங்குமாகச் சிதறி ஓடி ரயிலுக்குள் மறைய ரயில் அவர்களைச் சுமந்து கொண்டு நிலையத்தை விட்டு நகர்ந்தது. ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையம் சம்பந்தப்பட்ட எனது அத்தனை கடந்த கால நிகழ்வுகளும் வந்து மறைந்தன. ரயில் நிலையம் குளிராலும் இருளாலும் போர்த்தப்பட்டிருந்தது. ஐந்து மணிக்கு அமிர்தவள்ளி பதற்றத்துடன் வந்தார். கார் டிரைவர் வழி மாறி எங்கோ செல்ல, மீண்டும் வழியைக் கண்டுபிடித்து வரத்தாமதமாயிற்று என்றார்.




அமிர்தவள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் சிறுமிகள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆராய்வதிலும் அவற்றைத் தடுப்பதிலும் முனைந்திருக்கிறார். முப்பத்தைந்து வயது பெண்ணுக்கான வேறு எந்த லோகாயதச் சிந்தனையும் இல்லாமல் முழு முனைப்புடன் இயங்கிவருகிறார். ஒற்றையாளாய் காவல் நிலையத்திற்கும், வழக்குமன்றங்களுக்கும், கொலைசெய்யப்பட்ட சிறுமிகளின் கிராமங்களுக்கும் சென்று வருவது அவரது அன்றாடப்பணிகள். கிருஷ்ணகிரி மாவட்டம் பற்றிய நெடிய ஆய்வைச் செய்தவர் போல மாவட்டம் பற்றிய எல்லா விவரங்களையும் பிரச்சனைகளையும் அக்கறையுடன் உரையாடிக்கொண்டே வந்தார். கிருஷ்ணகிரி இன்னும் விழிக்காமல் இருந்தது. பூ விற்கும் பெண்கள் பெரிய பெரிய சாமந்திப்பூக்களால் தொடுத்த மாலைகளையும் மல்லிகைச் சரங்களையும் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். இருளடர்ந்த அதிகாலையில் கூடைப்பூக்களை வைத்து வரிசையாக அமர்ந்து விற்கும் அப்பெண்களைப் பார்ப்பது அச்சூழலுக்கு ஓர் அமானுஷ்ய உணர்வைத்தந்தது. அமிர்தவள்ளி தனது தோழி வந்தனாவின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு உறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார். அறைக்குள் நுழைந்த உடனே உறங்கிப்போனோம். இரண்டு மணி நேர உறக்கத்திற்குப் பின் விழித்துப் புறப்பட்டோம்.




அமிர்தவள்ளி இரண்டு முக்கியமான பணிகளை எனக்குக் கொடுத்திருந்தார். ஒன்று அவர் முதல்முறையாக ஏற்பாடு செய்திருக்கும் ’பெண் நேயக் கண்காட்சியை’ப் பார்வையிட்டு கருத்துரை சொல்வது, பின், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு கலைக்கல்லூரியில் மாணவியர் முன்பாக மகளிர் தின உரையாற்றுவது. கண்காட்சிக்காக, அமிர்தவள்ளி, தோழர் அலெக்ஸ் இருவரும் காட்டியிருந்த உழைப்பு மலைப்பைத் தந்தது. இக்கண்காட்சி, தற்போதையை பெண் எழுத்தின் முகத்தையும் அதன் காத்திரத்தையும் தெளிவுபடுத்துவதாய் இருக்கிறது. தமிழகம் முழுதும் பயணம் செய்யவும் முயன்று வருகிறார்கள். அருமையான தேர்வும் சேகரிப்பும்!





கல்லூரிக்குச் சென்றோம். மதியம் மூன்று மணிக்குள் சேலம் சென்று சேரவேண்டியிருந்ததால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களையும் பேராசிரியர்களையும் அவசரப்படுத்தினேன். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்கள் ஆண் பேராசிரியர்கள். தொகுத்து வழங்கியவர்கள் பேராசிரியைகள். எனக்கு முன்பு உரையாற்றிய பேராசிரியை, தொடர்ந்து பெண்களுக்கு எதிராகப் பேசிக்கொண்டே சென்றார். பேருந்தில் மாணவன் அருகில் உட்கார்ந்து பயணிக்கும் பெண்ணைச் சாடிய அப்பேராசிரியை, அதே வேகத்தில், மனைவியின் பிரசவத்தின் போது வெளியே நின்று மனம் குமைபவர் கணவர் என்று சம்பந்தமில்லாமல் ஆண்களை உள்ளிழுத்ததுடன் அவர்களைப் பொத்தாம் பொதுவாகப் பாராட்டிப் பேசினார். பெண்களின் பிரச்சனையை, ஏன் தன் பிரச்சனையையே உணராத உரையாக அவருடையது இருந்தது, என் உரைக்கான பேசுபொருளைத் தேர்வுசெய்துகொள்வதற்கு எளிதாக இருந்தது.




அவசரமாய் உரையாற்றி முடிக்கவேண்டிய அவசியமில்லை என்று தோன்றியது. என் உரையை மிகவும் எளிதாகவும் நேரடியானதாகவும் ஆக்கிக்கொண்டேன். பெண்கள் தங்களை வல்லமைப்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை உதாரணங்களுடன் கூறினேன். பெண்கள் கண்ணில் சுடர் தெறித்தது. அவர்கள் உள்ளே கனன்று கொண்டிருந்த ஆர்வமும் தெளிவும் வெளியே உரையாடல்களாய் விரிந்து கொண்டே இருந்தன. எனது உரையும் சிறப்பாய் அமைவதற்கு அவர்கள் உரையாடல்கள் உதவின. எனக்கு அது நிறைவைக் கொடுத்தது. கல்லூரிப் பேராசிரியர்கள் மீது இன்னும் இன்னும் மரியாதை குறைந்து கொண்டே போகிறது. அவர்களின் மடமை, பெண்களின் பிரச்சனைகளின் போது இன்னும் வீர்யமாய் வெளிப்படுவது காணச்சகிக்கவில்லை. சமீப நாட்களில் நிறைவானதொரு பயணமாயும், அமிர்தவள்ளியைச் சந்தித்திப்பதற்கான வாய்ப்பு ஊக்கம் கொடுப்பதாயும் இருந்தது.

இம்மாதம் இறுதி தேதி வரை இந்தியாவின் வடக்கு, மேற்கு என வேறு வேறு திசைகளுக்குப் பயணம் செய்கிறேன். இதில் சில, மகளிர் தினத்தை ஒட்டிய கூத்துகள். ஆமாம், கூத்துகள் என்று தாம் சொல்லவேண்டும். மற்ற நாட்களில் எல்லாம் அவ்வடையாளத்தைப் பயன்படுத்தாமல், மகளிர் தினப்பொழுதின் போது மட்டும் பெண் ஆளுமைகளை வரவழைத்து சிறிய பரிசுத்தொகையோ, அல்லது அன்பளிப்பாக சோப்பு டப்பாவோ கொடுத்து கல்லூரியின் கணக்கு வழக்கைச் சரிக்கட்டி, ஆண்டுக்கணக்கை முடித்துக்கொள்ளலாம் இல்லையா? என்றாலும், பெண்களின் உலகம் பற்றி எனக்குப் பேசக்கிடைக்கும் சிறியதொரு வாய்ப்பையும் நான் ஒருபொழுதும் புறக்கணிக்கப் போவதில்லை.




குட்டி ரேவதி

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மகளிர் தின வாழ்த்துகள்!

















நன்றி: நெல்லை லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மேலாளர் அவர்கள்.

வெங்காயமும் பெண்ணியமும்




உமா சக்கரவர்த்தியின் ‘ஒரு பெண்ணியப்பார்வையில் சாதியும் பால்நிலைப்பாகுபாடும்’ நூலை முன்வைத்து…




உமா சக்கரவர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய, ‘Gendering Caste: Through A Feminist Lens” என்ற நூல் வ.கீதா அவர்களால் ஒரு பெண்ணியப்பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்‘ என்று தமிழ் மொழியாக்கம் பெற்று பாரதி புத்தகாலயத்தால் வெளியீடு பெற்றிருக்கிறது. சாதி மறுப்பு விவாதங்கள் அரசியல், வரலாறு, பண்பாடு சார்ந்து ஊக்கம் பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில், சாதிப்பாகுபாட்டை பெண்ணியப் பார்வையில் அணுகும் இந்நூல் மிகவும் முக்கியமானது. இத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் உமா சக்கரவர்த்தி, இந்நூலில் சாதி, பெண்நிலைப் பாகுபாட்டை நிறுவுவதில் எங்ஙனம் வெற்றி கொண்டது என்பதை காலம் மற்றும் அதன் வேறுபட்ட படிநிலைகளினூடாகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்தியாவில் பெண்ணியத்தின் வேறுபட்ட தத்துவார்த்த விவாதங்கள் களத்திலும் அறிவார்ந்த துறைகளிலும் ஏற்கெனவே நிலைபெற்று இருந்தாலும், அவை சாதியைச் சார்ந்த விவாதிக்கப்படாமலேயே விடுபட்டதன் புதிர்கள் இந்நூல் வாசிப்புக்குப் பின் எவருக்கும் புரியக்கூடும்.



தொடக்கத்தில் சாதி என்பது உயர்சாதிப் பெண்களின் பாலியல் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தான் உருவமைப்புப் பெற்றிருக்கிறது. அதிலும், அவர்களின் கருவுறும் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதன் வழி, உயர்சாதியினரின் சமூக மதிப்புப் பேணப்படும் என்ற நம்பிக்கை சாதியமைப்பினுடையது. இத்துடன் நின்றுவிடவில்லை. பிறசாதிப் பெண்களுக்கும் இம்மாதிரியான சாதியின் வேறுபட்ட முறைமைகளை நிர்ணயிப்பதன் வழி, அதன் ஏற்றத்தாழ்வைத் தொடர்ந்து பேணமுடியும். இதிலிருந்து முற்றிலும் சமுதாய அமைப்பினால் விலகியிருக்கும் பழங்குடிப்பெண்களையும், இச்சாதிக்கட்டமைப்பு உள்ளிழுக்கும் தன் சமன்பாடுகளால் சாதியடையாளம் வழங்கமுடியும். அவர்கள் தாங்கள் ஏற்கெனவே பழகிவந்த பண்பாட்டு முறைகளுடன் இச்சாதி முறைமையையும் பின்பற்றலாம். இதனால் அவர்களும் இச்சாதி ஏணியில் பங்குபெற்றவராகிறார். இவ்வாறு, வெவ்வேறு குலப்பெண்கள் சாதி அடையாளம் பெறுவதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது.



எல்லாப் பெண்களும் ஒரே வகையான பெண்களல்ல என்பதும் வெவ்வேறு பெண்களின் பிரச்சனைகள் வெவ்வேறாகத்தான் இருக்கமுடியும் என்பதும் இந்நூலில் அழுத்தம் பெறுகிறது. குறிப்பாக, பெண்களின் பண்பாட்டுப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், உயர்சாதிப் பெண், பிறசாதிப்பெண் என்ற பேதம் பாராது வழங்கப்படுவது, இன்னும் இன்னும் பெண்களின் பிரச்சனைகள் சிக்கலுடையதாயும், நிரந்தரமாகத் தீர்வற்ற நிலையை நோக்கித் தள்ளப்படுவதாயும் இருப்பது சாதிய முறைமைகளின் தந்திரம் என்பது இந்நூலில் பட்டவர்த்தனமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. ‘கற்பு’ என்பதே ஆதிக்க உயர்சாதிப் பெண்களுக்காக விதிக்கப்பட்டது, என்ற நிலையில் இதற்கான தீர்வுகளை முன்மொழிந்து பிறபெண்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வாக்குவதன் அபத்தமும் புலப்படுகிறது. மேலும், இது சாதியப் புரிதலை புறம் தள்ளிய தீர்வாக இருத்தலையும் உறுத்தலையும் உறுதிசெய்கிறது.



ஆணாதிக்கமும் சாதியாதிக்கமும் ஒன்றையொன்று சார்ந்தும் பேணியும் உருத்திரட்சி பெற்றவை என்று சொல்லும் உமா சக்கரவர்த்தி, ஆதிகால சமூகப்பெண்ணின் நிலை எவ்வாறு படிப்படையாக பண்பாட்டு மாற்றமடைந்து தற்காலப் பெண்ணின் நிலையாகியிருக்கிறது என்பதை வரிசைக்கிரமமாக விளக்கியிருக்கிறார். இது இன்று பெண்கள் மீது செயல்படும் ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுவதுடன் பெண்ணடிமைத்தனத்திற்கு தந்தைமையச் சமுதாயம் எவ்வாறு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதையும் விளக்குகிறது. பெண்ணின் பாலியல் ஆற்றலும் கருவுறுதல் ஆற்றலும் வெகுவாகப்பிரமிக்கப்பட்ட நிலையிலிருந்து, பெண்ணின் பாலியல் ஆற்றல் மெச்சப்படுதல், அக்கறைப்படுதல், ஒழுங்குபடுத்துதல், கண்காணித்தல், கட்டுப்படுத்துதல் என்ற வேறுவேறு நிலைகளுக்குப் பெண்ணடிமைத்தனம் பரிணாமமடைந்து இன்றைய நவீனப் பெண்ணடிமைத்தனத்தை அடைந்துள்ளதாகக் கூறுமிடத்து அதன் பின்புல, ஆணாதிக்க சாதியச் செயல்பாடுகளையும் விளக்குகிறார். இவ்விளக்கங்களிலிருந்து பெறும் புரிதலால், பெண்-ஆண் சமத்துவம் பெறுவதற்கான செயல்திட்டங்களை சாதி மறுப்புப்பணிகள் வழியாகவே நாம் கொண்டு வரமுடியும் என்பது தெளிவாகிறது.



சாதியமைப்பின் விரிவாக்கம் எப்படி இந்திய மண்ணில் செயல்படுத்தப்பட்டது என்ற அத்தியாயத்தில், தொடர்ந்து பார்ப்பனர்களால் கையாளப்பட்ட அரசுருவாக்கம், விவசாய விரிவாக்கம், அதன் வழியாகப் பரவலாக்கப்பட்ட வருணக்கொள்கை என்று தொடங்கி, எப்படி கருத்து மேலாண்மையிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பது வரை ஓர் ஆய்வை நிகழ்த்தியிருக்கிறார், உமா. சமூக நீதி என்பது கூட பார்ப்பனர்களுக்கான சாய்வுநிலைகளுடன் தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, இது வரை வழங்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, ஒவ்வொரு பெண்ணையும் கண்காணிக்கும் பொறுப்பை அவள் கணவனுக்குக் கொடுத்திருப்பது போல, அந்தப் பெண் நடத்தை மீறும்போதெல்லாம் தண்டிக்கும் பொறுப்பு அரசனுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட முறைமையின் மூலம், எப்படி, தனி மனிதப் பெண்ணைக் கணவனும், அரசனும் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.



இந்நூலின், மிக முக்கியமான அத்தியாயம், சாதிக்கொரு (ஆணாதிக்க) நீதி. இவ்வத்தியாயத்தில் பார்ப்பனர்களின் உடைமைகளுக்கு நேரடியான அடிமைகளாக இல்லாதவர்களுக்கு அளிக்கப்பட்ட திருமண நிர்ப்பந்தங்களும் பாலியல் ஒடுக்குமுறைகளும் அவர்களை நேரடியாகப் பார்ப்பனர்களுடன் பிணைத்த விதம் தான் சாதியத்தின் மிக முக்கியமான முறைமை. இது தான் பெண்கள் இனத்தையும் பல பிரிவினராகப் பேதப்படுத்துவது. அதே சமயம் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த ஆணுக்குமான ஆதிக்கப் பணியும் அதிகாரமும் வேறுவேறாய் இருக்கின்றன என்பதையுன் சொல்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணத்தையும் குறிப்பிட்டிருக்கிறார், உமா. அதாவது ராஜபுத்திரப் பெண் ஒருத்தி திருமணமாகிச்செல்லும் போது, அப்பெண்ணுடன் அவ்வூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தியும் அனுப்பப்படுகிறாள். ஆனால், இந்தத் தாழ்த்தப்பட்ட பெண் நேரடியான திருமண உறவுக்குள் செல்லமுடியாதென்றாலும், ராஜபுத்திரப் பெண்ணை மணந்து கொண்ட ஆணின் பாலியல் தேவைக்கு அவன் அழைக்கும் போதெல்லாம் இணங்கவேண்டும். இம்மாதிரியான நூதனமான பாலியல் சூத்திரங்கள் பெண்ணினத்தையே பேதப்படுத்தியதுடன், ராஜபுத்திரப் பெண், தாழ்த்தப்பட்ட பெண் இருவர் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் வேறுவேறு வடிவில் நியமம் பெற்றிருப்பதையும் சொல்கிறது. மேலும், இது முழுதும் பெண்ணின் பாலியல் ஆற்றல் சார்ந்த ஒடுக்குமுறையாக இருப்பதால், பெண்ணின் அடிப்படை ஊக்கமான பாலியல் ஆற்றலும், கருவுறுதல் ஆற்றலுமே சுரண்டப்படுவது இங்கு விளக்கம் பெறுகிறது. மேற்கண்ட உதாரணத்தில், தாழ்த்தப்பட்ட பெண் அதே இன ஆணை மணந்து கொள்ளலாம் என்றாலும், அவனுடன் பாலுறவு வைத்துக்கொள்ள உரிமை கிடையாது என்பதால் தாழ்த்தப்பட்ட ஆணுக்கான நீதி முற்றிலும் மறுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.




இதனால், ஆதிக்கசாதிப்பெண்ணின் பாலுறவுச்சார்ந்த அதிகாரம் இன்னும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. உயர்வகுப்புப் பெண்களிடம் சாதி மதிப்பீடாக இருக்கும் பாலியல் ஆற்றல், ஒடுக்கப்பட்ட பெண்களிடம் உழைப்பாக மாற்றப்படுகிறது. இவ்வாறு இந்து மதம் தன் வருணக்கொள்கையின் வழியாக வெவ்வேறு நிலைகளில் கட்டமைத்து வந்த பாலியல் ஏற்றத் தாழ்வை நுணுக்கமாகவும் உதாரணங்களுடனும் அத்தியாந்தோறும் தெளிவுபடுத்தும் உமா, பெளத்தம் சனாதன விஷயங்களுடன் முரண்பட்ட இடங்களையும் அதே சமயம், பாலியல் ஏற்றத்தாழ்வை இயல்பாகவே பயின்ற இடங்களையும் முன்வைக்கத்தவறவில்லை. அறிவை ஒடுக்கும் முறைகளை எதிர்க்கப் பெண்களுக்குப் பெளத்தம் தான் துணை நின்றது என்றாலும் இது பெண்களின் பாலியல் ஆற்றலை விலக்கிய சமூக விடுதலையைத்தான் முன்வைத்தது என்பதால் அவ்விடுதலை முழுமையற்றதாய் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்.




சாதியமைப்பை எதிர்க்கத் தோன்றிய பக்தி இயக்கக் காலம், காலனியாட்சிக் காலம், தேசியப் போராட்டக்காலம், தற்காலம் என வெவ்வேறு காலங்களினூடாகப் பயணம் செய்தவாறே சாதியாதிக்கம் வரையறுத்த ஆணாதிக்கத்தையும், அது செயல்படுத்திய பெண்ணடிமைத்தனத்தையும் தெளிவுபடுத்துகிறார். இந்நூலை, 1989, மண்டல் குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்ட பின்பான ஆதிக்கசாதிப்பெண்களின், ‘வேலையில்லாத கணவர்கள் எங்களுக்கு வேண்டாம்’ என்ற வாசக அட்டைகளுடன் நடத்திய போராட்டத்திலிருந்து தொடங்குகிறார். அவ்விதமே முடிக்கும்போதும், 1971- ல் ராஜஸ்தானில் ஆதிக்க சாதியினருக்கும், சந்தால் ஆதிகுடிகளுக்கும் இடையே நடந்தப்போராட்டத்தில் ஆதிக்கசாதிப்பெண்கள் அவர்கள் சாதி ஆண்களின் ஆண்மையை அடையாளங்காட்டிப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதைக் குறிப்பிடுகிறார். இரண்டு நிலைகளிலுமே ஆதிக்க சாதிப் பெண்களின் மனநிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இம்மாதிரியான, சாதிவாரியான உரிமைகள் என்று வரும்போது மட்டும் தங்களின் பெண் என்ற அடையாளத்தை இழந்தவர்களாக, தங்களின் ஆண்களின் ஆதிக்கத்திற்கு இன்னுமின்னும் வலு சேர்ப்பவர்களாக ஆகிநிற்கின்றனர், ஆதிக்கசாதிப்பெண்கள். இந்நிலையில், இந்தியத் தளத்தில் பாலியல் பாகுபாட்டை பெண்-ஆண் என்ற அளவில் மட்டுமே ஆராய்வது முட்டுச்சந்தில் கொண்டு தான் நிறுத்தும் என்பது தெளிவாகிறது.



இவ்வாறு, பார்ப்பன மேலாண்மை பெண்களின் திருமணம், பாலுறவு, சமுதாய உறவுகள், சமுதாய முறைகள், அவர்களின் ஆண்கள், அவர்கள் பெண்கள் மேல் செலுத்த வேண்டிய கண்காணிப்புகள், பார்ப்பனர்களுக்கு அரசு செய்யவேண்டிய மரியாதைகள், அரசை நிர்வகிக்க அரசு பார்ப்பனர்களை சார்ந்து நிற்கவேண்டிய கட்டங்கள், ஆண்கள் பெண்களைச் சரியாகக் கண்காணிக்கிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கும் அரசின் வேலை என்று தொடர்ந்து சாதி உருப்பெற்று இருக்கிறதா என்பதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்து வருவதை இதுபோல் தெள்ளத் தெளிவாக விளக்கும் நூல் தமிழில் இல்லை. மேலும், ப.சிவகாமி, உமா சக்கரவர்த்தி, சர்மிளா ரெகே போன்றோர் தொடர்ந்து சாதி மறுப்புப் பெண்ணியத்தை நடைமுறைப்படுத்தும் முறைமைகளைச் செயல்படுத்துவதில் முனைப்புடன் இயங்கி வருகின்றனர். இதுகாறும், பெண்ணியம் என்பதை மேலைத்தேயத்துப் பெண்ணியமாகவே விளக்கிவந்த ஆதிக்க சாதிப்பெண்களின் சித்தாந்தங்களுடன் முற்றிலுமாக முரண்பட்ட இந்தியத்தளத்தில் பெண்விடுதலைக்கான பாதையில் இந்நூல் புத்தொளி பாய்ச்சுகிறது.




இந்நூலை வ.கீதா அவர்கள் சிறப்பான மொழியாக்கத்துடன், ஆங்காங்கே தமிழக அளவிலான பொருத்தமான உதாரணங்களுடனும் வழங்கியிருக்கிறார். பெண்கள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் வைப்பதற்கான எல்லா சிறப்பான தகுதிகளையும் இந்நூல் கொண்டுள்ளது. ப.சிவகாமியின் ‘உடலரசியல்’ போன்ற நூல்கள் ஒத்த வரிசையில், சாதியடிப்படையிலான பால்நிலைப்பாகுபாட்டை ஆய்வு செய்யும் இன்னுமொரு நூல், இது. இதற்கு அடுத்தக் கட்டமாக, ஆதிக்கசாதிப்பெண்கள் தாங்கள் இதுகாறும் பெற்ற கல்வி, பொருளாதார வாய்ப்புகள், சமூக மரியாதை வழியாகவெல்லாம், ஒடுக்கப்பட்ட பெண்களின் மீதான பால்நிலைப்பாகுபாட்டையும் கணக்கில் கொண்டு முன்னெடுக்கும் பெண்ணியப் போராட்டத்திற்கான தேவையையும் அதற்கான வழிமுறைகளையும் கூட உமா சக்கரவர்த்தி முன்வைப்பார் என்று நம்புகிறேன்.




சாதியாதிக்கத்தை மேன்மேலும் புரிந்து கொள்ளும் தோறும், அதன் ஆதிக்கச் சமன்பாடுகளும் உருவமைப்பு முறைகள் விளங்கினாலும், அவை புற்றீசல்களாகத் தொடர்ந்து கொண்டே இருப்பது, புரையோடிப்போன சாதியாதிக்கம் மற்றும் பெண்ணடிமைத்தனம் பற்றி நாம் ஆற்ற வேண்டிய விவாதங்கள் மற்றும் அவற்றிற்கு எதிராக நாம் வகுக்கவேண்டிய திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்த மலைப்பைத் தான் தருகிறது. மேலும், சாதியாதிக்கம்-ஆணாதிக்கம் தொடர்பான புரிதல் புவியியல் பரப்பிற்கும் அங்கு மேற்கொள்ளும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஏற்றபடியும் எல்லைகளற்று விரிந்து கொண்டே இருப்பது, வெங்காயத்தைத் தொடர்ந்து உரித்துக்கொண்டே இருப்பதான மனநிலையையும் அளிக்காமல் இல்லை. இதைத்தான் பெரியார், ’வெங்காயம்! வெங்காயம்!’ என்றாரோ என்னவோ!





குட்டி ரேவதி

நன்றி: ‘புத்தகம் பேசுது’