நம் குரல்

ஒரு தமிழ்சினிமாவிற்கான நடிகை தேடும் படலம் இன்னும் ஓயவில்லை!

நம்பர் 1 நடிகைகள் யாரும் நம் சுயமான, அசலான கற்பனைக் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. ஸ்மிதா பட்டேல், தன் 31 வயதுக்குள் ஒரு நடிகையாகச் செய்த சாதனைகள் அபாரமானவை. தான் நடித்த கலைப்படங்கள் வழியாகவும் வணிகப்படங்கள் வழியாகவும் இந்தியப் பெண் ஆளுமையையும் மனோபாவத்தையும் திரைக்குக் கொண்டு வந்ததில் இவர் ஒருவருக்கே முதன்மையான இடம் என்று சொல்லலாம். இருவகை சினிமாவையும் தன் ஒட்டுமொத்த ஈடுபாட்டால் நேர்மையாகக் கையாண்டவர், ஸ்மிதா பட்டேல்

ஆனால், இன்று இந்தியப்பெண்களின் உளவியலை சற்றும் தொடாத வணிகப்படங்களுக்கு இடையே நாம் உழன்று கொண்டிருக்கிறோம். தமிழ்ப்படங்களின் நிலை இன்னும் அவலமானவை. இன்றும் தமிழ்ப்படங்களில் நடிக்க, தமிழ் பேசத்தெரிந்த, தமிழ் சமூகவியலை அடிப்படை அளவிலேனும் உணரக்கூடிய, உடலிலும் உடல் மொழியிலும் பன்முகப்பெண் ஆளுமையை ஏற்கக்கூடிய, நம் வெயில் காய்ந்த தோலின் நிறமுடைய, நடிப்பு என்பதன் சிறுமைகளை மீறி ஓங்கி நிற்கக்கூடிய நடிகைகளுக்குப் பஞ்சம் தான். இத்தகைய தேவைகளுக்கெல்லாம் நம்மிடம் இருக்கும் ஒரே மைல் கல், ஸ்மிதா பட்டேல் தான்.
முதல் விடயம்: தமிழ்ச்சமூகத்திலிருந்து தமிழ்க்குடும்பங்களிலிருந்தெல்லாம் பெண்களை நடிப்புத்துறைக்கு அனுப்புவதில்லை. இதற்கு நாம் பயன்படுத்தும் இழிவான ஒரே வார்த்தை, அது 'கூத்தாடி'த் தொழில் என்பதே. உண்மையில், திரையில் மற்றும் திரைத்துறையில் ஒரு பெண் நடிகையாக இயங்குவதற்கு பெரும் ஆற்றல் தேவைப்படுகிறது. அவ்வாறு இருப்பதற்கான சவால்கள் சகமனிதராகக் கூட, நாம் இன்னும் அறியாதவை. அதன் உடல் அரசியலும் எதிர்கொள்ளவேண்டிய ஆண்மைய புரிதலும் வேறு எந்தத்துறையை விடவும் அதிகமானவை. பெண் உடல் அரசியலை முழுமைப்படுத்தும் பெண்ணியமும் பெண்உரிமையும் அங்கே தான் முளைத்துவர வேண்டியிருக்கிறது.
இரண்டாவது விடயம்: ஒரு பக்கம் நடிகையை இழிவுபடுத்திய படியே, அவர்களை மிகையான வெளிச்சத்தில் நிறுத்திவைக்கும் வணிக ஃபார்முலாக்களின் அங்கமாகவும் நாம் தான் இருக்கிறோம். இன்று, நமக்கு (எனக்கு)த் தேவை, ஸ்மிதா பட்டேல் போல ஒரு நடிகை. முழுமையான மனவெழுச்சியும் தொழில்சார்ந்த அக்கறையும் உள்ள பெண்களை மற்ற மொழிகளிலிருந்து கண்டிப்பாக இறக்குமதி செய்யமுடியாது. வணிகமும், அங்கீகாரமும், சிந்தனையும் மொழி சார்ந்ததாக இருக்கும்பொழுது 'பாவனை'யை மட்டும் மற்ற மொழிநடிகைகள் வழியாக எப்படி இறக்குமதி செய்யமுடியும்?
நம் வெப்பப்பிரதேசத்தின் கனன்ற தோல் கொண்ட, கருத்த முடியும் பெரிய, கூர்மையான விழிகளும் கொண்ட, நம் ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் மீதான பரிவைக் கொண்ட நடிகை யாராக இருந்தாலும் அவர் அடுத்த 'ஸ்மிதா பட்டேல்' ஆகக்கடவர். ஸ்மிதா பட்டேலின் பெருமைகளைப் பேசிப்பேசியே, அங்கேயே பெண் நடிப்பின் சவாலை நிறுத்திவிடமுடியாது. தமிழ்த்திரைத்துறை ஒவ்வொரு நடிகை வழியாகவும் நிறைய கற்பனைகளையும் புனைவுகளையும் முன்வைக்கத் தயாராக இருக்கிறது.



குட்டி ரேவதி