நம் குரல்

கொல்வோம் அரசனை - 2




காதற்ற ஊசிகள்






வேறெப்போதையும்விட உரையாடலின் போது ஒரு தனி மனிதனின் ஆளுமையும் உள்நோக்கங்களும் எளிதில் புரிந்து விடுகின்றன. ஒரு பேராசிரியர் தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் அவர் சென்ற தேசங்களின் நிலவெளிகள் விரியும்படியான கதைகளையெல்லாம் சொல்லி முடித்தப் பின்பு மேலை நாடுகளின் ஆய்வு முறைகளையும் பல்கலைக்கழகங்களையும் பற்றிப்பேசினார். அங்குள்ள மாணவர்கள் படிக்கும் போது மிகுந்த ஆய்வுமனப்பான்மையுடன் இயங்குவதாகவும் படித்து வெளியேறியதும் அவர்களின் அடிப்படைச் சிந்தனையாக இன உணர்வு பீடித்துக்கொள்கிறது என்றும் கூறினார். வெள்ளையின மக்கள் கறுப்பின மக்கள் மீது காட்டும் வெறுப்புணர்வை அநியாயத்துக்குக் கடிந்து கொண்டார். இத்துடன் அவர் முடித்திருந்தாரென்றால் அவரைப்பற்றிய எனது எண்ணம் மாறியிருக்காது. தொடர்ந்து அவர் பேசியது அவரது ஆசிரியப்புலமையை எடுத்தியம்புவதாகவே இருந்தது. இந்தியாவில் சாதிக்கொடுமையென்றெல்லாம் ஏதுமில்லை. அநியாயத்துக்குக் கூப்பாடு போடுகிறார்கள். வேலைப் பாகுபாட்டின் வடிவத்தை சாதிப்பாடுபாடு என்று திரிக்கிறார்கள். நாயர் சமூகத்தைச்சேர்ந்த அவரின் மனக்கொதிப்பு பிரிட்டிஷார் மீது திரும்பி, அவர்களின் துப்பாக்கியால் எப்படி கூட்டம் கூட்டமாக நாயர்களை அவர்கள் கொன்று போட்டனர் எனப் புலம்பிக் கொண்டே வந்தார்.


ஒரே நெடுஞ்சாலையை மட்டும் கொண்டதன்று வரலாறு என்பது. பல கிளைச் சாலைகளையும் பல ஒரு வழிப்பாதைகளையும் கொண்டும் அவை பயணிக்கின்றன. ஆகவே அவர் அறியாத வரலாற்றையும் அவர் அறிய விரும்பாத வரலாற்றையும் நானும் என்னைப்போல பலரும் அறிய முயல வேண்டியிருக்கிறது. இருளடைந்த பக்கங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சவேண்டியிருக்கிறது. அவர் மீது மிகுந்த இரக்கம் ஏற்பட்டதுடன் நீங்கள் பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது என்று எடுத்துச்சொல்லவெண்டியிருந்தது.

மேலை நாட்டு கறுப்பின மக்களின் மீது அபரிமிதமான கரிசனம் காட்டும் அவருக்கு தமது நாயர் மக்களை, சாதி வன்மத்துடனும் அதிகாரத்துடனும் இயங்கிய அவர்களை பிரிட்டாஷார் கோபித்துக்கொண்டது எரிச்சலாக இருக்கிறது. இந்தியாவின் வர்ண பேதத்தை வேலைப்பகிர்வுக்கான ஏற்பாடு என்று தனது அறியாமையை வெளிப்படுத்தும் துணிவைத் தருகிறது. மலம் அள்ளும் வேலையை இவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் விட்டது பிரிட்டாஷார்களின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.


தமிழகத்தில் பல சுற்று உரையாடல்களும் பிரச்சாரங்களும் ஏற்பட்ட பின்பும் சாதிச்சட்டகத்தின் துலங்காத பக்கங்கள் இன்னும் நிறைய இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. அரசியலிலும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் அதன் விரிவான செயல்பாடுகளை எடுத்துப் பேசுவற்கான இயந்திரங்கள் செயலிழந்து போய்விட்டதாகவே தோன்றுகிறது. அரசியல் தளத்தின் மூர்க்கமான சக்கரங்களால் அரைபடும் நுண்ணிய உறுப்புகளுடைய வரலாறு பற்றி எவருக்குமே எந்த கவலையுமே இல்லை.





தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய புத்தகங்கள் கொண்டிருக்கும் நுண்ணிய மெளன இடைவெளிகள் காட்சிகளாகப் புரிந்து கொள்ள முடியாதவை. மேலும் தோற்றவர்களின் வரலாறுகளுக்கு அரசியலில் இடமில்லை என்பதும் கண்கூடு. இந்நிலையில் அரசு உருவாக்கத்தைக் கண்டு எள்ளி நகையாடாமல் இருக்கமுடியவில்லை. நுண்ணிய பிணக்குகளும் சுணக்கங்களும் கொடிய நஞ்சை நாளுக்கு நாள் இரத்தில் கலக்கும் பண்பாட்டின் விளைவுகள் அல்லாமல் வேறென்ன?


வரலாறு என்பது அரசுடையதும் அரசினைக் காபந்து செய்தவர்களைப் பற்றியதுமாக இருக்கிறது. பேணப்படும் போற்றப்படும் இலக்கியங்களும் அவ்வாறே. மற்றெல்லா சமூகத்தினரும் அரசின் உருவாக்கத்தில் கொள்ளும் பங்கேற்புகள் நேரடியானவை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு விலங்குகளைப்போன்ற இடம் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. அடக்கமுடியாத ஆத்திரங்கள் எல்லாம் அரசனோடும் அரசோடும் நெருக்கமான உறவு கொண்டோருக்கு மட்டுமே இருக்கிறது. அந்த ஆத்திரமும் அரசாங்க அதிகாரத்தில் தனக்கான பங்கு குறித்த சுயநலத்தோடும் பேராசையோடும் எழுந்த குரலாக இருக்கிறது.


தமிழக அரசியல் வீழ்ச்சி காலந்தோறும் ஒரு சீரிய வகையினால் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்துவச்செறிவு அற்ற ஒரு அரசு நிறுவப்படுவதும் காலப்பொருத்தமற்ற பாங்குகளுடன் அந்த அரசு இயங்குவதும் அந்த வீழ்ச்சியை நிலைப்படுத்துகின்றது. பிராமணிய எதிர்ப்பை தனது ஒரு நீண்ட கால அரசியல் இலட்சியமாகக் கொண்டிருந்த தமிழகத்தில் இன்று கெட்டிப்பட்டுபோயிருப்பது இடைநிலை சாதிகளின் அதிகாரமயமாக்கமே. சாதி ஒழிப்பு என்பது வெறும் கண்துடைப்பு என்பது புரிந்து விட்டது. பிராமணிய ஆதிக்கம் இவர்களுக்கு எரிச்சலைக்கொடுத்தது அவ்வகையான வன்கொடுமையை தான் இழைக்கும் அதிகாரம் தனக்கு இல்லாமல் போனதால்தான் என்பது வெளிப்படையாகிறது. இந்நிலையில் ஓர் அரசன் மிக எளிதாக முளைத்து விடமுடிகிறது. அவனால் மேற்சொன்ன பேராசிரியரைப்போல தனது அறியாமையைக் காலந்தோறும் கொண்டாடியதைப் போலவே கொண்டாட முடிகிறது. அவர்களின் உரையாடல்களில் எப்பொழுதும் ஒரு புனைவு கைகால்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது தன்னை அரசனின் சேவகனாக இந்த மண்ணின் மைந்தனாக நாட்டுப்பற்று உடையவனாக அப்படி இருப்பது வெறுமனே ஒரு பழக்கமாக வெளிப்படுத்திக் கொள்கிறது.
இருள் முற்றிப்போன காலங்களையெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உயிர்ப்பான சிந்தனையாலும் பூமியில் புதையுண்ட வேர்களாகவும் எதிர்கொண்டு தங்களைத் தற்காத்துக்கொண்டிருக்கின்றனர். நியாயமாக அரசனைக்கொல்லும் அதிகாரமும் அரசனாகும் அதிகாரமும் இவர்களுக்கு கிடைக்கவேண்டும். இளைத்த அரசர்களாக ஆகிவிட்டனர் அதிகாரவர்க்கத்தினர். அவர்களின் வரலாறும் அரசியலும் பண்பாடும் உரையாடலும் தந்திரங்களால் மலிந்து அவர்கள் நசுங்கிய பிளாஸ்டிக் பொம்மைகளாக இருக்கின்றனர். அவர்களின் உரையாடலில் விரவிக்கிடக்கும் பூடகங்களும் வெளிப்படையான சாமார்த்தியங்களும் தன்னளவில் தான் ஓர் அரசனாகப் பரிணமிப்பதிலேயே இருக்கிறது. அதற்கான எந்த ஒரு தகுதியையும் பண்பாட்டையும் தாம் பெற்றிராமல் அரசியல் வித்தகர்களாக தங்களை மாற்றிக்கொள்ளும் சூழ்ச்சி தொடந்து கொண்டேயிருக்கிறது.
நாம் வேகவேகமாக உரையாடலின் போக்குகளை மாற்றிக் கொள்ளவே வேண்டியிருக்கிறது. நமது சொற்ப வெற்றியால் ஆதிக்க அதிகாரத்தை நாம் கழுத்தைப் பிடித்து நெறித்துவிட்டதாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். அவர்களின் மெளனம் நம்மை அவ்வாறு ஆற்றுப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் தங்களின் உரையாடல்களை சதிகளாக மாற்றிக்கொண்டார்கள். வரலாற்றின் நுணுக்கங்களைத்தேடிப்பிடித்து புனைவுகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவை கடந்த கால அரசர்களின் வரலாறுகளாக இருக்கின்றன. அந்த அரசர்களின் பராக்கிரமங்களை வல்லமைகளை மீண்டும் ஒருமுறை எழுதிவைக்கத் துடிக்கிறார்கள். அதே அரசர்களின் இடங்களில் தங்களை அமரவைத்துப் பார்த்து எல்லோரின் கழுத்தையும் தாமும் நெறித்துப்பார்க்கும் கற்பனைத்திறன் அவர்களிடம் மிகுதியாக இருக்கிறது. ஒரு வரலாற்றுக் கல்வெட்டையும் கல்தூணையும்கூட அவர்கள் விடுவதாயில்லை. அவற்றின் இடுக்குகளுக்கிடையே ஏதேனும் அரசன் ஒளிந்திருக்கின்றானா எனத் தேடிப்பார்க்கின்றனர். இப்படியாக அவர்கள் தங்களை உறக்கமில்லாமல் வைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு தேடியலையும் காலக்கட்டத்தில் அவர்களுக்கு உணவுப்பற்றாக்குறையே ஏற்படுவதில்லை.


ஒரு நாட்டின் பருவத்தைத்தீர்மானிப்பவனாக அரசன் இருக்க வேண்டியதில்லை. மக்களின் பண்பாடும் சமூக எழுச்சியுமே அதைத் தீர்மானிக்கின்றது என்பதையும் அரசனுக்கு நாம் உணர்த்தவேண்டியிருக்கிறது. ஒடுக்குமுறையை செயல்படுத்தும் ஆண்மை மட்டுமே ஓர் அரசை நிறுவப் போதுமானதென்ற கற்பனை நொறுக்கப்படவேண்டும். அந்த ஆண்மையைக் கட்டமைக்கும் அரச சாதனம் பெரும்பாலும் வரலாற்றிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. அந்த வரலாற்றினால் இன்றைய இந்த மண் உயிர்த்திருக்கவில்லை என்பதை வரலாறாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆண்மையைக் கொன்று பார்க்கலாம் அதற்கு. ஒரு தற்காலிக நெருக்கடியையேனும் அதற்கு கொடுக்கமுடியுமெனில் அது வெற்றி தான். புலம் பெயர்ந்த இலங்கைக்கவிஞர் பானுபாரதியின் கவிதை அதைச்செய்ய முடியுமென சொல்கிறது.



எருமையின் முதுகுதோலில் துளையிட்டு
உட்புகுந்த மழைத்துளிபோல்
எனது வார்த்தைகள்
உனது ஆண்மைக்குள் புகுந்து குடைகிறதென்பதை
நீ தூக்கம் தொலைந்து
இரவுகளை
புகை வளையங்களால் நிரப்பிக்கொள்வதிலிருந்து
புரிந்து கொள்ள முடிகின்றது
எறிகணையின் வலிமையோடு
எறியப்படும் உனதொவ்வொரு வார்த்தைகளும்
தோற்றுப்போய் விழுகின்றன நேர்மை வயப்படாத்தினால்


வானம் நீலமென்கிறாய்
கடல் உப்பென்கிறாய்
முத்தம் இனிப்பென்கிறாய்
வியர்வை சூடென்கிறாய்
விந்து குளிரென்கிறாய்
ஆண்மை அதுவே, அதற்கே அனைத்துமென்கிறாய்

நல்லது
போதனைக்கு நன்றி
ஆண்மை அரியாசனத்திலிருந்து இறங்கிவர
நீ மறுக்கும் ஒவ்வொரு கணமும்
கலவியின் உச்சநிலையில் சோர்ந்து சூம்பிக்கிடக்கும்
ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது

வோட்கா நிரப்பப்பட்ட
உனது கண்ணாடிக்குவளையில்
எலுமிச்சைச்சீவல்கள்
எனது கனவுகளோடு வாழ்வும்
கரைந்து போனதேன் என்ற
எனதொரு கேள்விக்கு உன்னிடமும் விடையில்லை
உன்னைப்படைத்த
உன்னப்பனின் ஆண்மையிடமும்
விடையிருக்கப்போவதில்லை


அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்
சிதறு தேங்காய்போல்
உனதாண்மை நொறுக்கப்படும்போது
வோட்காவிலும் பியரிலும்
கரைந்துபோன கணங்களிலிருந்து
எனக்கான பதில் கண்டடையக்கூடும்

அல்லது
இரத்தமும் வியர்வையும் தெறித்துச்சிதற
ஆண்மையை
அறுத்தெறியும் திராணியுண்டாயின்
வா பேசுவோம்
சுதந்திரமான வார்த்தைகளின் அக்களிப்போடு



குட்டி ரேவதி





நன்றி: உன்னதம் இதழ்

கொல்வோம் அரசனை 1


செங்கோல் தரும் வலி


அரசனின் உருவகங்கள் பூமியில் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. அவை ஏற்கெனவே இலங்கிய அரசர்களின் பிரதிகளாயோ அல்லது அந்த அரசர்களின் பிரதிகளை தோற்கடிக்கும் நகல்களாயோ துலக்கம் பெறுகின்றன. அரசர்களின் குணநலன்களைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் பெரிய வித்தியாசமிருப்பதில்லை.

வரலாற்றிலும் வாழ்க்கையிலும் அத்தகைய அரசர்களின் உருவகங்களைக் கண்டடையும் முயற்சியையும், அவற்றை விமர்சிக்கும் பண்பாடும், யதார்த்தம் மீறுகையில் அவ்வுருவகங்களைக் களையும் தீரமும் தேவைப்படுவதை புறந்தள்ள முடியாது. ஏனெனில் அரசர்கள் மாய்ந்தாலும் காலங்களுக்குப் பின்னும் அவர்களை அழிக்க முடிவதில்லை. அவர்களின் கொடுஞ்செயல்கள் உறக்கம் பெறுவதில்லை. பூமியின் அதிகார சட்டகத்தில் அரசர்கள் அறையப்பட்ட ஆணிகளாய் ஆகிவிடுகின்றனர்.

வரலாற்றில் முன்னோக்கி நகர்ந்தாலும் பின்னோக்கிச் சென்றாலும் அரசன் எனும் அதிகார பிம்பம் எங்கெங்கும் எதிரொளியாய் நெளிந்து கொண்டிருக்கும். அதிகாரப் பூர்வமான பேரரசுகள் எல்லாமே வீரத்தாலும் தந்திரத்தாலும் பலத்தாலும் வெல்லக்கூடிய ஓர் ஆணால் உருவாக்கப்பட்டதாகவே நமக்குக் கதைகளும் வரலாறுகளும் வழங்கப் படுகின்றன. அத்தகைய ஓர் ஆணே அரசன் எனப்படுகிறான். ஆனால் பேரரசின் எல்லா அறைகளிலும் பாதைகளிலும் மூலை முடுக்குகளிலும் வாசற்படிகளிலும் ஜன்னல் வெளிகளிலும் பெண்கள் இருந்து கொண்டே இருந்தனர் என்றாலும் அரசன் எனும் பிம்பமே காலந்தோறும் உருவாக்கப்பட்டதும் நிறுவப்பட்டதும். பின்னும் அத்தகைய பிம்பங்களுக்கு வார்ப்புகளாகிப் போவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


அரசன் எனப்படுவோன் இங்கே ஒரு நாட்டை சிற்றரசை பேரரசை ஆட்சி செய்வோனாக மட்டுமில்லை. பலவீனமான மக்கள் குழுமத்தை இன்னும் ஒடுக்கும் அதட்டி சிறுமைப்படுத்தும் ஒரு செங்கோலைக் கொண்டிருப்பவனாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கு விதவிதமான எல்லைகள் உண்டு. ஒரு நாட்டின் பூகோளத்தின் வரவெல்லை மட்டுமேயன்றி ஒரு குறிப்பிட்ட பண்புக்கு இயங்கு சக்தியாக இருக்கும் மக்கள் குழுமமே கூட அவனது வரவெல்லை என்றாலும் அவன் செலுத்தும் ஆட்சி சாதாரண பலம் கொண்டதன்று. பல நிலைகளில் நோக்கும்போது ஒரு பெண்ணின் மனவெல்லை கூட அவன் பேராட்சி செய்ய வரைவெல்லையாகிவிடும்.

எனில் அரசன் என்போன் உருவாகும் அரசியலை மானுட வரலாற்றின் வழியாக ஊடுருவிக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அரசன் சார்ந்த சமூகத்தின் குற்றங்கள் எனப்படுபவை அரசனின் அன்றாட வழக்கங்களாயும் மக்களுக்கு அவை தண்டனைகளைப் பெற்றுத்தரும். குற்றவுணர்வை விடாது கிளறிக்கொண்டேயிருக்கும் அசம்பாவிதங்களாகவும் மாறிவிடுகின்றன. அரசனை வரையறுப்பதென்பது தடித்த சப்தங்களுடன் அதிரும் ஆதிக்கக் காலணிகள், எவரோடும் சமதையற்ற அரியணை, இயல்பான உடல் அசைவுகள் வெட்டி நீக்கப்பட்ட தோரணைகள். தலைக்குக் கனமேற்றும் கிரீடம், எல்லோரையும் பொம்மையைப் போல ஆட்டுவிக்கும் செங்கொல் இவற்றுடனான அதிகாரத்திற்கான விசையை உடலாகக் கொண்டிருக்கும் ஒரு மனித உயிர் என்பது.

இப்படியான அரசன் வரலாறு முழுமையும் ஓர் ஆணாகவே இருந்ததன் பொறாமையேதும் நமக்கில்லை. ஆனால் அவன் அதன் வழியாக செதுக்கிக்கொண்ட ஆண் எனும் சமூக உயிரி, ஆணாதிக்கம், அதிகாரம், அரசியல், ஆட்சியெல்லை என்பவை முற்றிலும் பெண்ணினத்துக்கும் நலிந்தோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் எதிராக இருந்து கொண்டேயிருக்கிறது. அடிப்படையில் இப்படியான பேரரசுகளும் பேரரசர்களும் உருவாக பெண்களின் இரக்கமும் உழைப்பும் ஆற்றலும் மிகுந்த பேராசையுடன் குடிக்கப்பட்டிருக்கிறது. அரசர்களின் மறு உற்பத்திக்கு பெண்கள் தாதிகளாக இருக்கப் பணிக்கப்படுகின்றனர். ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். பேரரசின் விரிவாக்கங்களுக்கு பெண்களின் ஆளுமைகளைச் சிதைப்பது என்பது ஒரு தொற்று நோயாக இருந்து கொண்டேயிருக்கிறது.

இத்தகைய பேரரசு உருவாக்கத்தாலும் அவற்றின் விரிவாக்கத்தாலும் பல வருடங்களாகத் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கும் ஒற்றைப் படித்தான பெண்களாக நமது மூதாதைப் பெண்கள் மாற வேண்டியிருந்தது. அது குறித்த அவமானத்தையும் ஆற்றாமையையும் சுமக்க வேண்டியிருந்தது. ஓர் அரசனின் மறு உற்பத்திப் பணிக்கெனவும் பாலியல் ஆதிக்கத்தை நிரூபிக்கவும் பெண்களைத் தொடர்ந்து வழங்குவது என்பது கூட அவனது பேரரசின் அதிகாரத்தை மறு உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றே. 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் நாடு கடத்தப்பட்ட முன்னூற்றுக்கும் மேலான பெண்கைதிகள் கரையிறங்கும்போது அவர்கள் அனைவரும் ஆண்களின் நுகர்வுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படும் விபச்சாரிகளாகவே அணுகப்பட்டனர். அவர்கள் காலிறங்கிய காலனி முழுதும் ஒரு விபச்சார விடுதியாகவே மாறியது. பெண்ணின் விருப்பத்திற்கு எதிரான பாலியல் நடவடிக்கையை இங்கே நாம் விபச்சாரம் என்றே கூறுவோம். ஏற்கெனவே நாடு கடத்தப்பட்ட பெண்கைதிகள் என்ற நிலையிலும் விபச்சாரிகள் என்ற நிலையிலும் இரண்டடுக்கு அதிகார நசிவிற்கும் இழிவிற்கும் பெண்கள் உள்ளாவதை உணர இயலும்.



இவ்வாறு பெண் என்பவள் பேரரசனின் மனைவியாக இருந்தாலும் ஒரு கடைநிலை குடிமகனின் மனைவியாக இருந்தாலும் இரண்டு எதிரெதிர் அதிகார நிலையிலிருக்கும் ஆண்களுக்குமே பெண் என்பவள் கையகப்படுத்தப்படும் ஓர் உயிர்ப்பொருள். அதன் மீது தான் மேலதிகமான உரிமை கொள்ள முடியும் தனது அதிகாரத்தைச் செலுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து வேறுபட்ட சமூக உறவு நிலைகளை மேற்கொண்டு அதாவது தந்தை, கணவன், அதிகாரி, தலைவன், அரசன் என அதிகார நிர்வாகத்தை எடுத்துக் கொள்கிறான். ஓர் அரசன் என்போனும் தந்தை என்போனும் ஆணே என்றாலும் இருவருமே பெண் மீது செலுத்தும் அதிகார முறைகளும் அதன் தொழில் நுட்பமும் வேறு வேறானது என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தான் முழுமையான சமூக மாற்றம் சாத்தியமாகும்.


பெண்ணினத்தை மிதமிஞ்சிய அளவுக்குப் போகிக்கும் பேரரசு வர்க்கமும் அவ்வினத்தின் மீது தமது அதிகாரக் குறியீடுகளாலும் ஆதிக்கக் கருவிகளாலும் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டேயிருக்கின்றது. தனது பாலியல் நுகர்வுக்கும், இச்சைக்கும் பலியாகும் பெண்ணை வேசி என்று இழிவு அடையாளம் தருவதும் செவ்வியல் பெண் பிம்பங்களை அவர்கள் வாழ்ந்த காலங்களோடு தொடர்புப்படுத்தி நோக்காது தம் குடிப் பெண்கள் மீது திணிப்பதும் அரசனின் ஆதிக்க சூழ்ச்சிகளாக இருக்கின்றன. அந்த செவ்வியல் பெண்பிம்பங்களே மிகுதியும் போலிமைகளால், அரசனின் கற்பிதங்களால் செதுக்கப்பட்டவளாயிருப்பாள்.


இலங்கைக் கவிஞர் அனாரின் ‘உரித்தில்லாத காட்டின் அரசன்’ எனும் கவிதை அரசனின் கவர்ச்சியான பிம்பத்தையும் அதற்கு இரையாகும் பெண்ணின் பிம்பத்தையும் எதிர் வைத்துப் பேசுகிறது.
”மலைகளுக்கப்பால்
சூரியனுக்குப் பதிலாக நீ எழுந்து
வளர்கிறாய்
பனிமூடிய முகடுகளை
விலக்கி அமர்ந்திருக்கிறாய்
கடும் பச்சை நிற, சுருண்ட தலைகளுடன்
அடர்ந்திருக்கிறது என் காதல் காடு
காட்டின் அரசனாகப் பிரகடனப்படுத்தி
ஒளிர்வுக்கிரணங்களால் நுனி வேர்வரை ஊடுருவி
தழுவிச் சிலிர்க்க வைத்து ஆட்சி செய்கிறாய்
வளைந்த பாதைகளில் நதியைப் போல இறங்கி உருள்கிறேன்
உன்னிடம் இறக்கைகள் இருக்கின்றன
எல்லா இடுக்குகளிலும்
என்னைக் கவ்விப் பறக்கிறாய்
காடு முழுவதிலும் மேய்கின்றன
நம் கவிதைகள்
உள் நுழைந்தவனின்
பிரகாசமும் பாடலும்
ரகசியப் பூட்டுக்களை திறக்கின்றன
இனி
அரசன் கீறிவிட்ட காயங்கள்
என் காடெங்கும் பூப்பெய்யும்
கமழும் அஸ்தமனம் வரை”

இக்கவிதையில் பேசும் பெண்ணின் குரல் காதலால் கவ்வப்பட்ட பெண்ணினுடையது மட்டுமன்று. தன் மீது ஆளுகை செய்யும் ஆணின் கவர்ச்சியை இயற்கை மீது ஏற்றிக்கூறும் நுட்பமும் மிக்கது. இங்கு அரசன், தன்னை அரசனாகவே பிரகடனப்படுத்திக் கொள்வதோடு அத்தகைய ஆட்சிக்கான எல்லா அம்சங்களையும் கூட தன்னகத்தே கொண்டிருக்கிறான்.
’கொல்வோம் அரசனை’ என்ற இக்கட்டுரைப் பயணத்தில், நாம் சிக்குண்டுள்ள அரசனின் கொடுங்கனவுகளிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள தொடர்ந்து முயலலாம். ஏனெனில் நமது சமகாலமும் சமவாழ்வும் கூட அரசனின் பிம்பங்களால் சூறையாடப் பட்டிருக்கின்றன. மேலும் தனது வாரிசுகளை அப்பிம்பத்தின் வார்ப்புகளாகவும் ஆக்கிக் கொள்கிறான் அந்த அரசன்.

அரியணையைச் சூடேற்றுகின்றன அவனது பிட்டங்கள். அவனது சூதாட்டங்களில் இடையறாது வெட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன நமது கனவுகள். நலிந்த, ஆதிக்கச் சுமைகளுக்குக் கீழே அழுந்திய மனிதனை மரணப்படுக்கையில் உறங்கச் சொல்கின்றன அவனது அறிக்கைகள். அவனது செங்கோல் தரும் வலி அளவிலாதது.




குட்டி ரேவதி

நன்றி: உன்னதம் இதழ்

கவிதையினும் ஆயுதம் இல்லை





ஒன்பது வருடங்களாகத் தமிழில் கவிதையெழுதி வரும் எனக்கு, இன்றும் ஒரு கவிதையை எழுதி முடிக்கையில் ஈடேறும் இன்பத்தினும் எதுவும் பெரிதில்லை. ஆனால் சில பல சோதனைகளை தமிழகத்தில் கவிதையெழுதுவோர் சந்திக்கத்தான் இருந்தது. அவையெவையுமே கவிதையியலின்பாற்பட்டது அன்று என்பது ஒரு கொடுங்கனவு. ஆகவே அக்கவிதை எழுச்சி முழுமையான ஓர் அரசியல் செயல்பாடாக மாற முடியாமல் போனது இலக்கிய சாபமே. ஆனால் இன்றும் கவிதையை ஓயாமல் சிந்தித்தும் கவித்துவ உணர்வில் தோய்ந்தும் வாழ்ந்தும் எழுதியும் கொண்டிருக்கும் கவிஞர்கள் மைய நீரோட்டத்திற்கு வருவதேயில்லை. புகழின் வெளிச்சம் அவர்களுக்கு ஒரு பொழுதும் சூரியனாவதில்லை. அத்தகையவர்களுடனான எனது உறவு இன்று வரை தொடர்வதாலோ என்னவோ கவிதையைப் பற்றிய எனது அபிப்ராயங்கள் இன்னும் ஆழமாகிக் கொண்டேயிருக்கின்றன. கவிதையை அன்றாட இயக்கமாக மாற்றிக்கொண்டவர்களின் கவிதைகள் தம்முள் ஒரு பேராற்றையும் நீர்ச்சுழலையும் ஒரு சேரக்கொண்டிருக்கின்றன.

தமிழ்ப் பெண் கவிதையைப் பலவாறான திசைகளிலிருந்து அணுகி விமர்சித்து ஓய்ந்த காலங்களில் அதுவரை அவை பேசி வந்த அரசியலையும் பெண்மொழியையும் கையிலெடுத்துக்கொண்டதுடன் அவற்றின் நுட்பத்தையும் விரிவையும் பேசத்தொடங்கியவை ஈழப் பெண்களின் கவிதைகள் தாம். ஈழப் பெண் கவிதையென்றால், இன்று அந்தப்போர் வெக்கை மூண்ட நிலத்திலிருந்து எழுதுவோரும், புலம் பெயர்ந்து வேறுவேறு நிலங்களில் வாழ நேர்ந்தாலும் தாய்மொழியை தாய் நிலமாக உணர்ந்து எழுதுவோருமென எல்லோரையும் தாம் குறிப்பிடுகிறேன். வெறுமனே அவை துக்கப்புலம்பலாக இல்லாமல் அரசியலை பேசும் தெளிவோடும் கவிதை வடிவை அழகுற ஆயுதமாக மாற்றும் வல்லமையோடும் உருவாகி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் தமிழகப் பெண்கவிதையின் நீட்சியாகவும், அவை தொட முடியாமல் போன கவித்துவ உச்சத்தையும் தமிழின் ஈழச்சுவையையும் அதன் அரசியலையும் கலந்து அளித்து கொண்டிருப்பதும் ஒரு கவித்துவ வெறி நிறைந்த அனுபவம்.

இனவாதத்தால் சிதறுண்டு உலகெங்கும் விரவிக்கிடக்கும் தமிழினத்தின் ஒட்டு மொத்தக் குரலாக ஒலிப்பது இன்று ஈழப்பெண் கவிதைகளே. வேறு வேறு அரசியல் விஷயங்களைப் பேசும் போது கூட, நுட்பமான கருத்தியலை பேச முடியாத அளவிற்கு முன் அபிப்ராயங்களையும் அவை சார்ந்த வெறுப்பையும் உக்கிரத்தையும் கொண்டு இயங்கும் மனித மனத்திலிருந்து விலகியிருக்கும் இவர்களின் கவித்துவ மனம், புரையோடியிருக்கும் புண்ணுக்குச் சொற்களால் மருந்திட்டு ஆற்றுவதாக உள்ளது. அவை நவீனமும் வடிவமும் அழகும் குன்றாமல் ஓர் அரசியல் போரைத் தங்கள் கவிதைகள் வழியாக நடத்தத் தொடங்கியிருக்கின்றன. கருத்தியல் - அரசியல் நுட்பங்களையும் தவறவிடுவதில்லை. துப்பாக்கிக்கு அடிபணிவதில்லை. தாய் நிலத்தை நிதந்தோறும் முத்தமிடும் கவிதைகளாக வடிவெடுக்கின்றன.

ஈழப் பெண் கவிதை, செல்வி-சிவரமணியின் கவிதையின் விழியாக எனக்கு அறிமுகம். சிவரமணியின், ’தூக்கியெறியப்பட முடியாத கேள்வியை’த் தொடங்கி தூக்கியெறிய முடியாத கவிதைகள் ஈழப் புலத்திலிருந்து வந்த வண்ணம் இருந்தன. பின்பு பனிக்குடம் பதிப்பகத்திற்காக ஃபஹீமா ஜஹான் மற்றும் தமிழ்நதியின் கவிதைத் தொகுப்புகளை தொகுக்கும் வாய்ப்பு கிட்டியது. கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் நின்றியங்கும் ஓர் இலக்கிய அமைப்பிற்காக எனது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண்ராமன் அவர்களுடன் இணைந்து தமிழ்ப் பெண் கவிதையின் நவீனக்குரலை தொகுக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது பரவலாகவும் ஒருமுனைப்பட்டும் ஈழக்கவிதைகளைத் தொடர்ந்து வாசித்தேன். நிலவும் போர்ச் சூழலில், பதைபதைக்கும் மனித இதயத்திற்கு நம்பிக்கையையும் தெளிவையும் வழங்கக்கூடிய குரலை அவை கொண்டிருந்ததோடன்றி முழுமையும் அரசியல் கவிதைகளாகவும் கவிதையியலின் நவீனத்தோடும் அவை இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை உணர முடிந்தது. ஓர் இனத்தின் மொழி கவிதை வழியாகவே புதுப்பிக்கப்படுகிறது என்று நம்புகிறேன்.


அனாரின் சமீபத்திய தொகுப்பான ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பில் இரண்டு விதமான கவிதைகள் சுழன்று கொண்டிருக்கின்றன. காதலும் அவற்றின் கனிவும் கசியும் கவிதைகளும் போருக்கு மத்தியில் உயிர்வாழத் தகித்துக் கொண்டிருக்கும் கவிதைகளும் நிரம்பியிருக்கின்றன. சிமோன்தி மற்றும் தில்லையின் கவிதைகளை ஊடறு இணைய இதழில் கண்டடைந்தேன். அவர்களின் கவிதைகளில் நவீனம் பீடிக்கப்பட்ட பெண்ணுடலும் மரபார்ந்த ஒடுக்குமுறை வடிவங்களும் இசைவோடு கவிதையாகியுள்ளன. கவிதை எனும் இலக்கிய வடிவம், தனக்கு மறுக்கப்பட்ட ஒரு நிலவெளியையே தனக்குள் சுமந்து செல்லமுடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அதைப் பெண்கள் தாம் தமது மொழியால் சுமந்து கொண்டிருக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்துமில்லை.
ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் பல்முனைகளிலும் வடிவெடுக்க வேண்டிய போராட்டமென்று நான் அங்கலாய்த்துக் கொள்வதுண்டு. வெறுமனே ஓர் இயக்கத்தின் போராட்டமாக மட்டுமன்றி எல்லா சமூக அரசியல் பண்பாட்டு இலக்கிய வடிவங்களிலும் அவை முகிழ்க்க வேண்டிய தேவையிருக்கின்றது. போராட்டத்தின் பன்முகத்தன்மை தான் விடுதலையை ஈட்டித்தரும் சாத்தியமிக்கது. குறிப்பாக, நாவல், சிறுகதை போன்ற புனைவிலக்கிய வடிவங்களுக்கு இடையே கவிதை ஓர் ஆரம்ப நிலை இலக்கிய வடிவமாகவே கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், கவிதை எத்தைகையதோர் ஓர் இலக்கிய ஆயுதமாக மாற முடியும் என்பதை ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளை கூர்ந்து அவதானிக்கையில் தான் புலப்படும். இந்தச் சிறிய பத்தி நம்மையெல்லாம் அக்கவிதைகளை வாசிக்கச் செய்வதற்கான ஓர் ஆயத்தமே.




குட்டி ரேவதி

புறமுதுகு



வெயில் விறைத்திருக்கும் உச்சிவேளையிலிருந்து
இலையொன்று சுழன்று மாலைக்குள் ஒதுங்குகிறது

காரில் நகரத்தெருக்களைக் கடக்கையில்
அவசரமாய் ஓடி மறைகிறது
பழைய காதலின் புறமுதுகுப்பிம்பம்

அது அவனாயிருக்கலாம்
பேராச்சியின் உடலில்
மதர்த்துக்கிடக்கும் காமப்பூக்களை
முகர்ந்து பார்த்தவன்

பிறகொரு நாள் அவனைச் சந்திக்க நேரலாம்
தனது மூளைக்குள் நெளியும் நினைவுப் புழுக்களை
நசுக்குவது எப்படியென எப்படியும்
அவன் ஆலோசனை கேட்கலாம்

அல்லது
உறங்கவிடாது
கண்களுக்குள் கள்ளிச்செடிகளை வளர்க்கும்
தோட்டக்காரனாய் அவன் இருந்ததை
நான் இடித்துக் காட்டலாம்

உஷ்ணமுட்கள்
வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன


குட்டி ரேவதி

ஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி - 2




ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வடிவில் மதம் என்பது பெரும் ஆயுத வடிவமாகவும் அரசியல் வெளிப்பாடாகவும் இருந்துள்ளது. ஏன் பெரிய போர்களுக்குக் கூட காரணமாக இருந்திருக்கிறது. இந்தப் பத்திகள் வழியாக இலங்கையைப் பொறுத்தவரை எப்படி மதம் அரசியல் ஆதிக்கம் மிக்கதாக உள்ளது என்பதை ஒரு பகுத்தாய்வு செய்ய விரும்புகிறேன். இன்று ஈழப்போராட்டம் அடைந்துள்ள நிலைக்கான காரணங்களை அறிவதற்கான ஒரு சிறிய மீளாய்வு இது. இதுபோலவே மொழிப்போர், தொன்ம ஆதாரங்கள், தமிழக அரசியல், இந்திய அரசின் நிலைப்பாடு, சிங்கள அரசின் தந்திர நடவடிக்கைகள் என பல திசைகளிலிருந்து இவ்வினவொழிப்பு நடந்தேறியதற்கான ஆய்வையேனும் நாம் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். வெறுமனே உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இப்பிரச்சனையை அணுகிவிட முடியுமென்றோ, சிங்கள அரசு மற்றும் அதற்கு உதவியாக இருக்கும் நாடுகளின் சூழ்ச்சித்திறன்களை வெல்ல முடியுமென்றோ நான் நினைக்கவில்லை. ஈழத்திற்கு ஆதரவாக இனவாதத்திற்கு எதிராக உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் உண்மையில் நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை ஒரு சிலரேனும் கருத்தியல் ரீதியாகப் பகுத்தாய வேண்டியிருக்கிறது.


மதம் என்பது தனிமனிதனுக்கானது; அரசியலுக்கானது அன்று. அரசியலும் மக்களுக்கானதே அன்றி மதத்தின் ஆதாயத்துக்கானது அன்று. ஆனால், இலங்கையில் சிங்கள-பெளத்த பிணைப்பு என்பது 1972ம் ஆண்டிலிருந்தே இலங்கையின் அரசியல் சட்ட அமைப்பில் சிறப்பான மரியாதைகளைப் பெற்றுவந்துள்ளது. இதனால் தாம் இலங்கையின் எல்லா பெளத்தமத சங்கங்களும் அரசியல் சட்ட அமைப்பினூடாகவே அரசியல் செயற்பாடு மேற்கொள்வதற்கு ஏதுவானது. 1986-ம் ஆண்டு, இருபதுக்கும் மேலான பெளத்த அமைப்புகள் இணைந்து ”தாய்நாட்டுப் பாதுகாப்புப் படை” என்பதை உருவாக்கின. இந்த அமைப்பின் பெயரிலேயே அது என்ன நோக்கத்திற்கானது என்பது புலனாகும். அந்த நாடு, அவர்களுக்கான தாய்நாடு என்பதான அர்த்தம் கொள்கிறது. இவர்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துச் செல்வதற்கான ஒரு பெருவழியாக இந்த அமைப்பு இருந்தது. இவர்கள் எல்லோரும் ஓர் அமைப்பாக ஒன்றிணைந்தது இனரீதியான மாகாண சபைத்தீர்வினை எதிர்ப்பதற்காகவே.


இந்த அமைப்பு 1986-ல் வெளியிட்ட அறிக்கை இவர்களின் உள்நோக்கங்களையும் அந்த அறிக்கையில் அவர்கள் பிரயோகித்த வார்த்தைகள் அடிப்படையான அவர்களின் எதிர்ப்புணர்வையும் பட்டவர்த்தனமாக்குகின்றன. சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் தலையீட்டையும் சமாதானப் பேச்சுவார்த்தையையும் ’நமது தாய்நாட்டைப் பிரிப்பதற்கான சூழ்ச்சி’ என்று முறையிட்டனர். அதுமட்டுமல்லாது இந்த மாகாண சபைத்தீர்வு கூட ’நாட்டைத்துண்டாடும்’ சதி என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டனர். அவர்கள் ஈழ இனவாதத்தையும் ’ஈழக் கொலைகார வாதம்’ என்றே குறிப்பிடுகின்றனர். அம்மண்ணின் அடிப்படையான உரிமைகள் சம அளவில் கொடுக்கப்படாதிருந்த நிலையில், மேற்குறிப்பிட்ட, ’ஈழக் கொலைகார வாதம்’ என்ற சுட்டுதலுடன் அந்நாட்டின் எல்லா வளங்களும் சமமாக ஏற்கெனவே பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடுவதும் நகைப்புக்குரியது. மேலும் அந்த அறிக்கையில் தமிழர்களின் நிலையினை குறிப்பிடும் எந்தக் கருத்து வாதமும் இல்லை.
மாகாண சபைத்தீர்வை அவர்கள் எதிர்ப்பதற்காகக் கூறிய காரணங்கள் இரண்டு: ஒன்று, அது ஒரு தேசத்துரோக நடவடிக்கை. மற்றொன்று, அது ஓர் ஈழக் கொலைகார வாதம். மேலும் தாய்நாட்டுப் பாதுகாப்புப் படை, தங்கள் இலட்சியங்களாக வலியுறுத்தும் இறையாண்மை என்பதும் ஒற்றுமை என்பதும் அதற்கான இலச்சினைகளும் அர்த்தப்படுத்துவது, பெளத்தத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்று பட்டிருக்க வேண்டும் என்பதே. அவர்களின் இறையாண்மை என்பது கூட முழு அதிகாரமும் பெளத்தத் தலைமையை மையமாக்கியதாக இருக்கவேண்டும் என்பதே. இந்தக் கட்டத்திலிருந்தே தொடர்ந்து அத்தாய்நாட்டுப் பாதுகாப்புப் படைக்கு ஆதரவான பிரச்சாரங்களையும் போரட்டங்களையும் ஓர் இராணுவம் போலவே பெளத்த சங்கத்தினர் செயல்படுத்தி வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சிங்கள அரசே கூட இந்த பெளத்த அமைப்பின் ஆதரவைக் கோரிப்பெற வேண்டிய தேவை இருந்துவந்துள்ளது.



தா.பா.ப-வின் இரண்டாவது அறிக்கை அவ்வியக்கத்தினை நிர்வகிக்கும் முறையைக் குறித்ததாக இருக்கிறது. மூன்றாவது அறிக்கையின் வழியாக அவர்கள் சிங்கள அரசு, தமிழீழ வாதிகளுடன் பேச்சு வார்த்தைக்குச் செல்வதையே கூட கண்டித்தனர். ஏக சத்தா, அதாவது; ஒரு குடையின் கீழ்’ என்ற சிங்கள–பெளத்த மேலாதிக்கத்தீன் கீழ் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறியது மூன்றாவது அறிக்கை. ஆனால் இந்த ’ஒற்றுமை’ என்பதும் ‘இறையாண்மை’ என்பதும் ஒரு மாய வாதத்தைப் பேச்சளவில் குறிப்பிடும் சொற்களே. அல்லது அவற்றிற்கான அர்த்தங்கள், ’எங்களின் கீழ் நின்று செயல்படுங்கள் என்பதே’. மேலும், மரபார்ந்த ஒற்றுமை, இறையாண்மை போன்றவற்றை வேண்டும் தேசத்தின் கொடியும் பாடப்படும் தேசிய கீதமும் சிங்கள இனத்தினை மட்டுமே நாட்டோடு இணைத்துப்பார்ப்பதாக இருந்தது. (இது இன்னொரு விவாதத்திற்கானது.) ஆக, கருத்தியல் அளவில், உடல், பொருள் அல்லது எல்லா இருப்பு சார்ந்த அளவிலும் இனவாதத்தை மக்களிடம் தொடர்ந்து திணித்துக் கொண்டே இருந்தனர். 1980-களில் நிகழ்ந்த இவை தாம் இன்று இனவாதம் இத்தகைய பேருரு எடுப்பதற்கு பெரிய அளவில் அடிப்படையாகவும் அரசியல் காரணியாகவும் இருந்து வந்துள்ளன.


பெளத்தமத சங்கங்களின் இத்தகைய அரசியல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருப்பது அவர்களின் அதிகார விழைவும் அதிகாரத்தின் மீது இருக்கும் பேராசையுமே. ஏற்கெனவே அவர்களின் சங்கங்களுக்குள்ளேயே இம்மாதிரியான, அதிகார கட்டமைப்பிற்கான நடவடிக்கைகளுக்குப் பெருத்த முக்கியத்துவம் இருந்து வந்திருக்கின்றது. அவற்றில் சொத்துக்களைச் சேகரிப்பதும், உடைமைகள் தலைமுறைகளூடே வழிவழியாகச் சென்று சேர்வதைக் கண்காணிப்பதும் முதன்மையானவையாகும். மண்ணின் மீதான அதிகார ஈர்ப்பை அவர்கள் பெளத்த சங்கங்களிலிருந்தே உருவாக்கிக்கொள்கின்றனர். சொல்லப்போனால் பெளத்த குருமார்களே அந்நாட்டை ஆள்கின்றனர். என்றென்றும் ஆள விரும்புகின்றனர். உண்மையில் பெளத்தம் சொல்லும் அறத் தத்துவங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வகையான பொருத்தப்பாடும் இல்லை.




குட்டி ரேவதி