நம் குரல்

பிராண வேதனை






விடாது ஒலிக்கட்டும் பேச்சிழந்த குரல்கள்
புலமெங்கும் காற்றுவீச மரங்கள் உரச
ஒலிகள் மோதிக் கலந்து பற்றி எரியட்டும்
உனது மொழியின் பிராண வேதனை

திடும்மென எழுந்த வெப்பத்தின் அதிர்ச்சியில்
பொசுங்காதிருக்கட்டும் உனது இறக்கைகள்
மேலெழுந்து உடலை இலேசாக்கி
ஒரு விண்கலத்தைப் போல மிதவையாக்கிச் சுழல்

சுழன்றுகொண்டே இருக்கட்டும் உனது உடல்
நடனத்தில் மூர்ச்சையுற்றுக்
கீழே விழாதிருக்க வேகமாய்ப் பயணி
இப்பொழுதும் தீ அணையாதிருக்கட்டும்
விடாது ஒலிக்கட்டும் பேச்சிழந்த குரல்களின்
பிராண வேதனை





குட்டி ரேவதி

(தோழி பரமேஸ்வரிக்கு)


தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (கவிதைத் தொகுப்பு), 2003, பனிக்குடம் வெளியீடு, பக்கம்:49

ஒரு பெண் ஆணுக்குத் தன் எழுத்தை விற்கலாமா?



எழுத்தின் மீது அசுரத்தனமான நம்பிக்கைக் கொண்டவள் நான். அதற்காக, அதை முழுதும் தனதேயென உரிமை கொள்ளும் சுயநலம் எனக்கு அவசியம் இல்லை. எவரும் எழுத வரவேண்டும் என்பதும் அவ்வெழுத்துகளுக்கு மத்தியில் அறம் சார்ந்த பாகுபாட்டினால் முன்மொழியப்படும் எழுத்தும் மொழியும் சமூக மாற்றத்திற்கு உதவும் என்பதும் அடிப்படையான என் நம்பிக்கைகள். பல வருடங்களுக்குப் பின்னும் எனது இந்நம்பிக்கைகள் மாறாதவையாக இருக்கின்றன.



சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது இது. என்னை மிகவும் வேதனைக்கும் கவலைக்கும் உள்ளாக்கியது. அந்தப் பெண் எழுத்தாளரை சிலவருடங்களாக எனக்குத் தெரியும். மொழி ஆளுமையும் அழகியலும் மிக்க நிறைய படைப்புகளைத் தொடர்ந்து அளிப்பவர். புத்துணர்ச்சி மிக்க நவீன இலக்கிய உரைநடையில் அவரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு எழுத்தின் மீது தீவிரமான முனைப்பும் பெண்ணியச் சிந்தனைகளில் தெளிவும் மிக்கவர். இத்தகைய படைப்பாளி, இன்னோர் ஆண் எழுத்தாளருக்கு படைப்புகள் எழுதித் தருவதாகவும், அப்படி எழுதப்படும் படைப்புகள் ஆண் எழுத்தாளரின் பெயரால் அடையாளம் பெறுவதாகவும் அங்கீகாரம் பெறுவதாகவும் தெரிய வந்தது.


இது யாருக்கு நட்டம், தோழியரே? ஓர் அரங்கில் குழுமியிருக்கும் முன்னூறுக்கும் மேலான மாணவியரிடையே, எத்தனை பேரின் தாய்மார்கள் பள்ளி சென்று படித்திருக்கிறார்கள் என்று கேள்வியெழுப்பிய போது, அதில் ஆறுதலுக்குக் கூட ஒருவரும் கை உயர்த்தவில்லை. அத்தகைய தாய்மார்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வாய்ப்பைத் தானே, நாம் மொழியாகவும் எழுத்தாகவும் எட்டியிருக்கிறோம். இந்நிலையில் ஒரு பெண் ஏன் தன் எழுத்தை இன்னொருவருக்கு விற்கவேண்டும்?


உடலை பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தும் பெண்களுக்குச் சாதகமான நியாயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், ஒரு பெண் எதன் பொருட்டென்றாலும் தன் எழுத்தை இன்னொருவருக்கு வழங்குவதை கொடுமையானதொரு சமூக அவலமாகப் பார்க்கிறேன். இந்தியா போன்றதொரு நாட்டில் ஒரு பெண்ணுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதிலும் அத்தகைய கல்வியை வெறுமனே பொருளீட்டவும், திருமணம் - குடும்பம் மதம் போன்ற பெண்ணை ஒடுக்கும் நிறுவனங்களைக் கட்டியமைக்கவும் தன்னால் இயன்றவரை உழைத்துப் பங்களிப்பு செய்யும் மற்ற பெண்களுக்கு மத்தியில் ஒரு பெண், ‘எழுத்துஎன்பதை தனக்கேயானதொரு சமூகச் செயல்பாடாக ஏற்பது என்பதை மிக முக்கியமான சமூக, அரசியல், பண்பாட்டு நிகழ்வாக நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் ஒரு பெண் தன் எழுத்தை விற்பது என்பதை எவ்வாறு நாம் நியாயப்படுத்துவது?


காலங்காலமாக, தம் அறிவை, அறிவு முதலீட்டை ஆண்களுக்காக ஒத்திவைத்த, பொத்திவைத்த சமூகத்தில் பெண்கள் தங்கள் எழுத்து வழியாக அறிவாக்கப் பணியில் ஈடுபடுவது என்பது ஒரு புதிய சமூக எழுச்சி என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் எவருக்கும் இருக்க முடியாது. ஓர் ஆண் எழுத்தாளர் தன் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக எழுத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றால், பெண் எழுத்தாளர் அந்த அதிகார ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குவதற்காகப் பயன்படுத்துவது அவசியம். தான் பெறும் அதிகாரத்தில் அந்தப் பெண் எழுத்தாளருக்கும் பகிர்ந்தளிக்கிறேன் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளும் பெண் படைப்பாளியின் கையில் எழுத்து என்பது அவருக்கே கூட எந்தக் களிப்பையும் விடுதலை உணர்வையும் ஈட்டித் தரப்போவதில்லை என்பதை நான் திடமாகப் பதிவுசெய்து கொள்கிறேன். இன்னொருவருக்கு விற்கும் படைப்பில் தன் உண்மையான உணர்ச்சிகளையும் நியாயங்களையும் பொதிந்து கொடுத்தால் அவை யாரின் நியாயங்களாக அர்த்தம் பெறும் தோழியரே?


தர்மசங்கடமாக இருக்கிறது, எனக்கு. இனி அந்தத் தோழியின் படைப்பில், நான் மேற்குறிப்பிட்ட ஆளுமையையும் அழகையும் ரசிக்க முடியாது. அதிகாரப் பகிர்விற்காக சமரசம் செய்து கொண்ட பெண்ணின் எழுத்தில் எந்தவொரு பெண்ணுக்குமான, ஏன் அவருக்கேயான உலகைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அது அவரால் குறுக்கப்பட்ட, சுருட்டப்பட்ட ஓர் உலகாகவே மீண்டும் மீண்டும் சுழன்று வரும். பெண்ணின் கையில் விடுதலையின் குறியீடாய் துலங்கும் எழுத்தை, அதிகாரச்சுகத்தைக் காட்டி மடக்கும் ஓர் ஆணுக்கு விற்கலாமா, நீங்களே சொல்லுங்கள்?



குட்டி ரேவதி

கூழாங்கல் கவிதைகள் - 2




மீனுக்குள் கடல்


என் மனக்குரங்குக்கு

உடைகள் தைத்தே கை சலித்தோய்ந்தது

என் யாக்கையின் காலம்.

நேற்றிரவு வரை

மடங்காக் கத்தி

குரங்கின் கையில்

ஆப்பிள் நறுக்க என்றோ ஒரு

ஆதாம் கொடுத்தது.

மீனுக்குள் கடலின் அலை ஓய்ந்த மோன இரவு

ஏதோ விதமாய் ஓர் அசதியில்

கத்தி கை நழுவ குரங்கது

மெய் புதைத்துத் தூங்குகிறது

ஒரு விழிப்பின் தருணம் திடுமென

குரங்கின் கனவில் புகுந்துவிட நான்

கண்டேன் ஒருத்தியை

திரை இன்றி

இலை தழை கூட மேலின்றி நிறை

நிர்வாணத்தில் ஒளிரக் கண்டேன்

அவளே என் அம்மாவும் அவளே என்

தங்கையும் அவளே என் மனைவியும் அவளே

என் குழந்தையும் அவளே…

1987 – ல் வெளிவந்த ”மீனுக்குள்” கடல் என்ற பாதசாரியின் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற அத்தலைப்பிலே ஆன கவிதை இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’தமிழினி’ கலை இதழில் எழுத வந்தார், ’மன நிழல்’ எனும் தொடர்வழியாக. மேற்கண்ட கவிதையில் கண்ட அதே நயமும் தன்மையும் மாறாமல் இன்றும் தன் எழுத்தின் வன்மை சிறிதும் குறையாமல் எழுதுகிறார்.


என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு தான் பிற படைப்பாளிகளின் ஆக்கங்களை நாம் விரும்பி வாசித்தாலும் அவற்றின் மொழியோ கருத்தோ நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அதில் பொதிந்து கிடக்கும் இலைமறை காய்மறையான அறத்தெளிவுகள் தாம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், நம் நாளங்களில் தங்கியும் போகின்றன. இத்தகைய திறனில் வல்லவர் பாதசாரி எனும் என் நம்பிக்கை இன்று இன்னும் கூடுதலாய் ஆகியிருக்கிறது.



‘அறம்’ என்பதை எப்படி சித்திரப்படுத்துவது? சமகால எல்லா நவீன எழுத்தாளர்களின் நோக்கங்களும் பாதைகளும் சிதறுண்டு இருக்கும் போது பாதசாரி மட்டும் அதில் அதே கவனத்துடனும் பேணுதலுடனும் இருக்கிறார் என்று நம்புகிறேன்.



இதை வேறு எந்த எழுத்தாளரிடமும் என்னால் கற்றுக்கொள்ளமுடிந்ததில்லை. அறத்திற்கும் எழுத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எழுத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு இது: உற்பத்தி உறவு. எழுத்துப் பணியில் ஈடுபடுபவன் எங்கேயோ அதன் நியாயத்தையும் தன்னிடம் வளர்த்துக் காட்டவேண்டியிருக்கிறது.


அறம் பாராட்டாத எழுத்துகள் காலத்தின் முன்னும், அநீதிகளின் முன்னும் உருத்தெரியாது போகின்றன. ஆனால் அந்த அறத்தைப் பேணும் வழிகளைக் கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்க பாதசாரியின் எழுத்து முயல்வதை ‘மனநிழலில்’ உணரலாம். (தமிழினி இதழில் ‘பாதசாரி’ எழுத்தைத் தவிர வேறெதைப்படிக்கும் போதும் பேராசிரியர்களின் போதனையை வாசிப்பது போன்று தோன்றும்.)



ஆண்மை – பெண்மை என்ற பாலின பேதங்களின் முட்கள் இவரிடம் மீசையாவதில்லை. அதை ஓயாத தன் அறச்சீற்றத்தாலும் புதிய புதிய சொற்கோர்வைகளாலும் வென்றெடுத்துக் கொண்டே வருகிறார். நாம் காணத்தவறிய நெறிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதற்கான நிகழ்வுகளைப் பொருத்தமான சொற்களால் விவரிக்கிறார்.



இரு பாலினத்திற்குமான பொதுவான நியாயங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்களையும் தெளிவுகளையும் இவர் தனக்குப் பழக்கிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.



’மீனுக்குள் கடல்’ கவிதையில் கத்தி நழுவும் அந்தக் கணம் எனக்கு மிகவும் பிடித்தமான தருணம்.




குட்டி ரேவதி

பண்பாட்டுப் போர்: காலத்தின் கட்டளை








மக்கள் நலனுக்காக நிற்கும் அரசியல் இயக்கங்களும், சமுதாய அமைப்புகளும் தங்களது பாதையில் எதிர்கொள்ளும் முக்கியமான முட்டுக்கட்டை பண்பாட்டு சவால்கள்தான். இந்தியச் சூழலில் பண்பாட்டு சவாலின் மூலதாரம் என்ன? இதனை வெல்வது எப்படி? தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் பேராசிரியர் ஆர். சந்திரா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க துணைத் தலைவர் சிகரம் ச. செந்தில்நாதன், கவிஞர் குட்டி ரேவதி ஆகியோர் இங்கு விவாதிக்கிறார்கள்


செந்தில்நாதன்: பண்பாட்டுத் தளப் பிரச்சனைகளை மூன்று கண்ணோட்டங்களில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்று, தமிழ்நாட்டில் பிராமணீயமயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் இரண்டும் மையமாக நடந்துகொண்டிருக்கின்றன. இரண்டாவதாக இந்திய அளவில் பெண்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்களுடைய எதிர்ப்புக் குரல். மூன்றாவதாக, சர்வதேச அளவில் உலகமயமாக்கலோடு இணைந்து வருகிற தாக்குதல், ஏகாதிபத்திய கருத்தாக்கங்கள் நம்முடைய கருத்தாக்கங்களாக மாற்றப்படுதல்.




குட்டி ரேவதி: படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் இதற்கு முன்பு பிராமணீயக் கருத்தியல் கொண்டவர்களாகவும், பிராமணர்களாகவும் இருந்தார்கள். ஒரு இலக்கியப் படைப்பின் வடிவம், அதன் உள்ளடக்கம் பற்றிய சில நெறிகளை ஏற்படுத்தி வைத்துக்கொண்டார்கள். வேறு தளத்திலிருந்து, புதிய கண்ணோட்டங்களுடன் ஒரு படைப்பு வருகிறது என்றால், அந்த நெறிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து அது சிறந்த படைப்பில்லை என்று தள்ளிவிடுகிறவர்களாக அவர்கள் இருந்தார்கள். தலித் அரசியல் எழுச்சி என்பது உருவான பிறகு தலித் எழுத்தாளர்கள் கணிசமான அளவிற்கு உருவானார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள், நாவலாசிரியர்கள் உருவாகி அவர்களுடைய பிரச்சனை, இடவரைவியல், வாழ்க்கை முறைகள், போராட்டங்கள் எல்லாவற்றையும் படைப்புகளாக்கினார்கள். உடனே, அதை என்ன செய்தார்கள் என்றால், அதை தலித் இலக்கியம் என்று பெயர் சூட்டிப் பிரித்து, ஒரு பொதுமைத் தளத்திலிருந்து விவாதிக்காமல் ஒதுக்கி வைக்கிற போக்கு ஏற்பட்டது. அவர்களுடைய கட்டமைப்பிற்குள் நுழைந்து உடைப்பது என்பதைவிட, ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்குவது எப்படி என்பதே ஒரு படைப்பாளியாக என் முன் வருகிற சவாலாக இருக்கிறது. பூலே, அம்பேத்கர் ஆகியோர் புதிய அமைப்புகளை உருவாக்கியது போல, அந்தப் பழைய நெறிகளை குலைக்காமல் புதிதாகக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. புதிய தளத்திலிருந்து படைக்கிறபோது நீங்கள் படைப்பாளியாக அங்கீகரிக்கப்பட மாட்டீர்கள்! மாற்றுச் சிந்தனைகளை முன் வைக்கிற படைப்பாளி பெண்ணாக இருந்துவிட்டால், கருத்தின் மீதான தாக்குதலாக அல்லாமல், அந்த பெண்ணைப் பற்றிய, அவரது சொந்த வாழ்க்கை பற்றிய தாக்குதல்களும் தொடுக்கப்படுகின்றன. இந்த நிலைமையில் இப்போது மாற்றம் வரத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இணையத்தளம் என்பது அறிமுகமான பிறகு, புத்தகம் வெளியிட்டுச் சொல்ல முடியாத கருத்துகளை இணையத்தளத்தில் பதிவு செய்யமுடிகிறது. ஆனால், அங்கேயும் கருத்தை வெளியிட்ட பெண்ணுக்கு எதிரான அவதூறுகள் பல முனைகளிலிருந்தும் கிளம்பத்தான் செய்கின்றன.




ராசேந்திரன்: பார்ப்பணீயமயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் பற்றிச் சொன்னார் செந்தில்நாதன். ஆனால், சமஸ்கிருதமயமாக்கல் என்பது ஒரு தனிப் பண்பாடல்ல. மொழி சார்ந்த திணிப்புகள் இருக்கின்றன என்றாலும், அது மொழிக்கான செயல்பாடாக நடப்பதில்லை. அங்கேயும் சாதி சார்ந்த நடவடிக்கையாகத்தான் அமைகிறது. ஆகவே சமஸ்கிருதமயமாக்கல் என்பதற்கு பதிலாக பார்ப்பணீயமயமாக்கல் என்று மட்டுமே அதைக் குறிப்பிடலாம். பழைய கட்டமைப்பிற்குள் செல்லாமலே புதிய கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றி ரேவதி சொன்னார். இதில் இயக்கவாதிகளுக்கு ஏற்படுகிற பிரச்சனை என்னவென்றால், ஏற்கெனவே உருவாக்கப்பட்டு கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிற பண்பாட்டைத்தான் மக்கள் தங்களுடைய பண்பாடாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடையே பழைய பண்பாடு எப்படிப்பட்டது என்பதை விளக்கி அதிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டியிருக்கிறது. அதன் பிறகுதான் புதிய பண்பாட்டைக் கட்டமுடியும். அடிமைப் பண்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிற நிலையில், அதற்கு எதிரான உளவியல் ரீதியான, அறிவியல் ரீதியான ஒரு பண்பாட்டு யுத்தத்தை நடத்த வேண்டியிருக்கிறது. அதன் ஊடாக மாற்றுப் பண்பாட்டையும் வைத்து, இரண்டையும் இணைத்துக்கொண்டு போகிறபோதுதான் புதிய பண்பாட்டை நிலைநாட்ட முடியும். அந்த அடிப்படையில் இந்துமதப் பண்பாடு, சாதிப்பண்பாடு, இவற்றின் அடிப்படையிலான சடங்குகள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்த்து ஒரு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.





சந்திரா: பார்ப்பணீயமயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் என்று எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும், அந்தக் கருத்தாக்கங்கள் யார் ஆட்சியதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே உருவாகின்றன. ஆளும் வர்க்கமாக, ஆதிக்க சக்தியாக யார் இருக்கிறார்களோ அவர்களுடைய தேவைகளை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய கருத்தாக்கங்கள் ஆட்சியதிகாரத்தின் மூலமாகவும் பண்பாட்டுச் சாதனங்கள் மூலமாகவும் கீழ்நோக்கிப் பரவுகின்றன. அப்படி கீழ்நோக்கி வருகிற கருத்தாக்கங்கள் மக்கள் மனங்களில் ஆழமான, உறுதியான இடத்தை பிடித்துக்கொள்கின்றன. காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டி என்று வழிவழியாக வந்து இன்றைய தலைமுறையினரையும் அந்த கருத்தாக்கங்கள் கவ்வியிருக்கின்றன. ஆகவேதான், இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டிருக்கிற நவீன இளைஞர்களிடையே கூட முற்போக்குக் கருத்துகள் எளிதில் வேர் பிடிக்கமுடிவதில்லை. குறிப்பாக, பெண்ணுரிமை பிரச்சனைகளில் இதைக்காண முடியும். இன்னொரு பக்கம், எந்த மதமானாலும் எளிய மக்களிடையே தங்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கட்டப்பட்டிருக்கிறது. கிராமங்களுக்குச் சென்று பெண்களிடையே பணியாற்றும்போது, நீங்கள் ஏன் இப்படியே இருக்கிறீர்கள், என்று கேட்டால், என்ன செய்யிறது, எங்க தலையில இப்படித்தான்னு அழுத்தமா எழுதியிருக்கே, என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள். இதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக மிக அவசியமாகிறது.பழமைக் கருத்துகளை நவீன முறையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதில் ஊடகங்களின் செயல்பாட்டையும் நாம் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. மதம் சார்ந்த விசயங்களையும் மூடநம்பிக்கைகளையும் வளர்ப்பதில் மட்டுமல்ல, பெண்ணுரிமைச் சிந்தனைகளைத் தாக்குவதிலும் ஊடகங்கள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.





செந்தில்நாதன்: இந்தியச் சூழலில் மொழியைத் தவிர்த்துவிட்டு பண்பாட்டுப் போராட்டத்தை நடத்த முடியாது. உதாரணமாக, பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கிறவர்கள் கூட, தங்கள் வீட்டு விழாக்களில் சமஸ்கிருதம் சார்ந்த சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிராமணர் அல்லாதவர்களும் கோவிலுக்குச் செல்லும்போது, தங்களுக்கான பூசைகள் சமஸ்கிருதத்தில் செய்யப்பட்டால்தான் அது கடவுளிடம் போய்ச் சேரும் என்று நினைக்கிறார்கள். அலுவலகத்தில் தங்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது பிராமணர்கள்தான் என்கிற அளவில்தான் அவர்களுடைய எதிர்ப்பு இருக்கும்.






ராசேந்திரன்: இதற்குக் காரணம், மேல்நோக்கிச் சென்று ஆதிக்கம் செலுத்துகிற நிலையில் இருக்கிற பண்பாடுதான் சிறந்த பண்பாடு என்று அதைப்பற்றிய ஒரு சமூக மதிப்பீடு இருக்கிறது. அதிகாரத்துடன் இருப்பதால் அதை நோக்கிச் செல்கிற நோக்கம் அடித்தட்டு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், மேல்நோக்கி செல்லவிரும்புகிற ஒவ்வொரு சமூகமும் தனக்கு கீழே உள்ள சமூகங்களை அடக்கி வைத்திருக்கக் கூடாது என்று எண்ணுவதில்லை. தான் இன்னொருவரை அடிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும், ஆனால், தான் இன்னொருவருக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையான பார்ப்பணீய எண்ணப்போக்கு இது. அதிலிருந்து மக்களை விடுவிக்க தீவிரமான ஒரு கலாச்சாரப் போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.






சந்திரா: மொழி என்பது ஒரு இனத்தையும் அதன் பண்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. ஆனால், முதலாளித்துவத்தின் இன்றைய வளர்ச்சியில், உலகமயச் சூழலில் மொழியும் பண்பாடும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஏராளமான மொழிகள் இன்று அழிந்து வருகின்றன என்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரு மொழி அழிகிறது என்றால் ஒரு இனம், அதன் பண்பாடு அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். இந்தியாவில் கூட உலகமயமாக்கலோடு இணைந்ததாக, வட்டார மொழிகளை விழுங்கிக்கொண்டு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதை பார்க்கத் தவறக் கூடாது. ராசேந்திரன் சொன்னது போல கீழ்நிலையில் உள்ள சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மேல்நோக்கி செல்ல முயல்கிறபோது ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்கு உடன்பட்டு தங்கள் மொழியை இழக்கிறார்கள் என்பதும் நடப்பு உண்மை.






ராசேந்திரன்: அதிகாரத்திற்கு வருகிறவர்கள் கூட பார்ப்பணீயக் கலாச்சாரத்திற்கு உட்பட்டு அதன் கருத்தாக்கங்களையே பரப்புகிறார்கள். ராஜராஜ சோழன் பிறந்த ஆயிரமாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அவர் பார்பணீயப் கருத்துகளைத்தானே பரப்பினார்? இன்று ஒரு திராவிடக் கட்சியின் ஆட்சி இருக்கிறது என்றாலும், பார்ப்பணீயப் பண்பாட்டைத்தானே வளர்க்கிறது?
பண்பாட்டுச் சீர்குலைவுகளுக்கு ஊடகங்களை மட்டும் பொறுப்பாக்குவது எளிதான இலக்காகிவிடும் என்று நினைக்கிறேன். அந்த ஊடகங்களுக்குப் பெண்ணடிமைக் கருத்துகளைக் கற்பிப்பது பார்ப்பணீயம்தான்.






செந்தில்நாதன்: அந்த ஊடகங்களை முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்தோ, வர்க்கப் பின்னணியிலிருந்தோ பிரித்துப் பார்க்க முடியாது. வர்க்கச் சுரண்டலுக்குப் பார்ப்பணீயம் மிகவும் சாதகமாக இருப்பதால்தான், ஆளும் வர்க்கங்களின் கருவியான ஊடகங்கள் இந்த வேலையைச் செய்கின்றன. பண்பாட்டு யுத்தம், மொழிப் பாதுகாப்பு, சாதிய எதிர்ப்பு இவற்றை வர்க்கப்போராட்டத்திலிருந்து பிரித்து வைக்க முடியாது. ஆனால், தலித் எழுத்தாளர்கள் சிலர், வர்க்கப் போராட்டம் பற்றி எழுதினாலே நீ தலித்தியவாதி அல்ல என்று நிராகரிக்கிற போக்கு இருக்கிறதே! ஒரு தலித் எழுத்தாளரே, தன் மக்களின் வாழ்க்கையை எழுதுகிறபோது வர்க்கப் பிரச்சனையையும் எழுதிவிட்டால், அவரை இவர்கள் தலித் எழுத்தாளர் வரிசையிலிருந்து விலக்கிவிடுகிறார்கள்.





குட்டி ரேவதி: ஆதிக்கப் பண்பாட்டோடு மோதிக்கொண்டிருப்பதை விட, அடையாளம் அழிக்கப்பட்ட பண்பாடுகளை மீட்டெடுத்து அதுதான் நம் பண்பாடு என்று உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பது என் கருத்து. புதிய பண்பாடு என்பதை நான் இவ்வாறு மீட்டமைப்பதோடு இணைத்தே சொல்கிறேன். அரசுக்கு எதிராகப் போராடுவது என்பதை விட, அடித்தட்டு மக்களுக்காக அவர்களோடு இணைந்து போராடுவது, அவர்களுடைய பண்பாட்டை முன்னிலைப்படுத்துவது இரண்டுமே முக்கியம். வர்க்கப் போராட்டம் பற்றி எழுதுகிறவர்களை தலித் எழுத்தாளர்கள் சிலர் ஏற்பதில்லை என்பதற்குக் காரணம் இடதுசாரிகள் வெகு காலமாக தலித் பிரச்சனைகளைக் கையில் எடுக்கவில்லை என்பதால் இருக்கலாம்... அண்மைக் காலமாகத்தான், தலித் அரசியல் மேலோங்கி வந்ததற்குப் பின்னர்தான் இடதுசாரிகளும் தலித் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினார்கள்...





சந்திரா: அண்மைக்காலத்தில்தான் கம்யூனிஸ்ட்டுகள் தலித் பிரச்சனைகளுக்காகவும் போராடுகிறார்கள் என்பது தவறான பிரச்சாரம். தஞ்சை மண்ணில் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளிகளையும் திரட்டி நடத்திய போராட்டங்கள், அங்கே சாதியத்துக்கு எதிரான வலுவான போராட்டங்களாக இருந்தன என்பதை மறுக்க முடியுமா?





ராசேந்திரன்: ஒரு காலத்தில், வர்க்கம் அடிக்கட்டுமானம், சாதி மதம் போன்றவை மேல் கட்டுமானம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அடிக்கட்டுமானத்தைத் தகர்த்துவிட்டால் மேல்கட்டுமானம் தகர்ந்துவிடும் என்று கருதிய நிலை இருந்தது. இன்று மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்றே ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி, சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு மையப் பொருளாக்கியிருப்பது சிறப்பானது. ஆனால் தஞ்சையில் அன்று சாதியத்துக்கு எதிராகவும் ஆற்றல் மிக்க போராட்டங்களை நடத்தியவர்கள் இடைக்காலத்தில் பொருளாதாரப் போராட்டங்களோடு நிறுத்திக்கொண்டார்கள்தானே...






செந்தில்நாதன்: சாதிப் பிரச்சனை எங்கேயெல்லாம் கூர்மையாக வந்ததோ அங்கேயெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் போராடி வந்திருக்கிறார்கள் என்பதே வரலாறு. இன்னொரு புறம், இந்து மதக் கலாச்சாரத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கிய திராவிட இயக்கம், அந்த அளவுக்கு வலுவாக வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான பொருளாதாரப் போராட்டங்களை நடத்தவில்லை. இந்தியச் சூழலில் இந்த இரண்டு போராட்டங்களும் பிரிக்க முடியாதவை, சமதளத்தில் நடைபெற வேண்டியவை என்பதே மார்க்சியவாதிகளின் நிலைபாடு.





சந்திரா: அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒதுக்கிவிட்டு பண்பாட்டுப் போராட்டத்தை நடத்திவிட முடியாது... மதவாதச் சிந்தனைகள் எந்த அளவிற்கு மீண்டும் மீண்டும் கிளப்பப்படுகின்றன, அதற்கு நமது நிர்வாக அமைப்புகள் எப்படி உடன்படுகின்றன என்பதற்கு உதாரணம்தான் அண்மையில் மும்பை பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம். ஒரு புத்தகத்தை பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இந்துத்துவா ஆட்கள் ரகளை செய்கிறார்கள். பல்கலைக்கழகத் துணை வேந்தரும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றமால் அந்தப் புத்தகத்தை விலக்க ஆணையிடுகிறார். எந்த அளவிற்கு கல்விக்கூட வளாகத்திற்குள் பிற்போக்குச் சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைத்தானே இது காட்டுகிறது?






குட்டி ரேவதி: அரசுக்கு எதிரான போராட்டம் தேவையில்லை என்று நான் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற பொருளில் சொல்லவில்லை. ஆனால் இன்று எல்லா ஊடகங்களும் அரசின் பிடியில் இருக்கிறபோது, அந்தப் பெரிய சக்தியோடு நேரடியாக மோதிக்கொண்டிருப்பதை விட, அடித்தட்டு மக்கள் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நடத்துகிற போராட்டங்களோடு இணைவதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றே சொல்கிறேன். ஆதிக்கப் பண்பாட்டிற்கு எதிராக கிராமக் கோவில்களின் பாரம்பரியமான வழிபாட்டு உரிமைகளுக்கான போராட்டங்களோடு இணைந்திருக்க வேண்டும் என்கிறேன்.





சந்திரா: கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், தலித் மக்களின் வழிபாட்டு உரிமைக்காகப் பல இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் உட்பட நடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து நடத்திவருகிறார்கள்.





ராசேந்திரன்: கிராமக் கோவில்களின் வழிபாட்டு உரிமைகளுக்கான போராட்டங்களை ஆதரிப்பது பார்ப்பணீய எதிர்ப் பண்பாட்டுக்கான போராட்டம்தான் என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அந்த வழிபாட்டு உரிமைகளுக்கான போராட்டங்களும், வழிபாட்டு உரிமைகளும் எதிர்ப் பண்பாடு என்ற கருத்தாக்கத்தை அந்த மக்களிடையே உருவாக்கியிருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. கிராமக் கோவில் என்று ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாகத்தானே இருக்கிறது?





செந்தில்நாதன்: சாதியப் பிடிப்பு வலுவாக இருப்பதற்கு, இங்கே நிலப்பிரபுத்துவம் தகர்க்கப்படவில்லை என்பதும், அதனோடு முதலாளித்துவம் சமரசம் செய்துகொண்டது என்பதும் ஒரு முக்கியக் காரணம். ஆகவே ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்திலிருந்து சாதிய எதிர்ப்புப் போராட்டத்தைப் பிரிக்க முடியாது. மாற்றுப் பண்பாடு பற்றிப் பேசுகிறபோது, அதற்காகப் போராடுகிறவர்களுக்கிடையே ஒரு குறைந்தபட்ச ஒருமித்த கருத்துடன்பாடு என்பது தேவை. முதலிலேயே நான் சொன்னது போல, வர்க்கப் பிரச்சனை பற்றிப் பேசுகிறவரை தலித் எழுத்தாளராக ஏற்க மறுப்பது போன்ற போக்குகள் மாற வேண்டும்.





சந்திரா: படைப்பு சார்ந்த பிரச்சனையில் மட்டுமல்ல, சமூக இயக்கத் தளத்திலும் இந்தப் பிரச்சனை வருகிறது. தலித் மக்கள் பிரச்சனைகளுக்காக கம்யூனிஸ்ட்டுகள் ஏன் போராடவில்லை என்று கேட்கிறார்கள்; அப்படியொரு பிரச்சனையைக் கையிலெடுத்தால் நீ ஏன் வருகிறாய் என்று கேட்கிறார்கள்!





குட்டி ரேவதி: என்னைப் பொறுத்தவரையில், தலித் போராட்டம் வர்க்கப் போராட்டம் இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒரே போராட்டத்தின் வேறு வேறு கிளைகள்தான். ஏனென்றால் ஒடுக்கப்பட்டவர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் ஏழைகளாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும்தான் இருப்பார்கள்.கிராமங்களில் சாதிக்கொரு கோவில் இருப்பது உண்மை. ஆனால், கிராமத்துக் கலைகளில் ஆதிக்க எதிர்ப்பு என்ற கருத்து அடியிழையாக இருக்கும். இன்று சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கிராமக் கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறபோது, அந்த எதிர்ப்புக்கூறை அழித்துவிட்டே மேடையில் ஏற்றப்படுகிறார்கள். அந்தக் கலைகளின் உண்மைத் தன்மைக்காகப் போராட வேண்டிய தேவை எழுகிறது.





செந்தில்நாதன்: மார்க்சியம் என்பது வளர்ந்துகொண்டே இருக்கிற விஞ்ஞானம். அதை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தவர்களில் ஒருவர் கிராம்ஸ்கி. அவர் மேல் கட்டுமானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியிருக்கிறார். அதை உள்வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடுதான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்களின் வளர்ச்சி.





ராசேந்திரன்: எங்களுடைய கள அனுபவங்களிலிருந்து கிடைத்த அனுபவம் என்னவென்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பிற சமூகங்களின் மக்களும் எந்த அளவுக்குத் தங்களை இணைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அங்கே நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்பதுதான். அதே போல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நடத்துவது தலித்துகள் மட்டும்தான் என்றில்லாமல், அந்தந்தப் பகுதியின் ஜனநாயக அரசியல் இயக்கங்கள் அந்தப் போராட்டங்களை நடத்துகிற நடத்துகிற நிலை வரவேண்டும். இத்தகைய உணர்வுகளை வளர்க்கவும் ஒருங்கிணைக்கவும் இடதுசாரி-பெரியார்-தலித் இயக்கங்களுக்கிடையே ஒரு புரிதல் என்பது தேவைப்படுகிறது.





செந்தில்நாதன்: அது காலம் நமக்கிட்டிருக்கிற கட்டளை.





நன்றி: ’தீக்கதிர்’

தொகுப்பு: அ. குமரேசன்

மின்வெளி




திரைப்பரப்பை ஒளியூட்டி கடவுச்சொற்களை அனுப்பியதும்
மெல்லிய முனகலுடன் அவ்வுலகின் கதவுகள் திறந்து கொள்ளுகின்றன
தட்டையான உடலுடைய சிட்டுக்குருவிகள்
பறந்து பறந்து கொத்தித்தின்னும் தானியச்சொற்கள்
விளம்பரமாகின்றன


உடலை எப்பொழுதோ அவ்வெளியில்
மிதந்தலைய விட்டிருந்தேன்
நீள்வட்டப்பாதைகளில் இயங்கும் பால்வெளிக்கோளைப்போல
ஓயாத துடிப்புடன்
எந்தவொரு எரிநட்சத்திரத்தையும் தின்றுச் செரித்துவிடும்
வேட்கையுடன் மினுமினுப்புடன்


பசுமாட்டின் கனத்த முலைகளைப் போல
விரல்களால் காமம் கறப்பதற்காய் மட்டும்
தொழுவத்தில் தொங்கவில்லை
ஆண் பெண் இரு சுனைகளையும்
எனதேயாக்கி என் பிரக்ஞை சுடர்விட்டெரிய


மிதந்தலைகிறேன் ஒரு பால்வெளிக்கோளென


நீ வேவு நோக்கும் செயற்கைக் கோளின் காமராவில்
என் புகைப்படமோ என் பூங்குரலோ கூட
பதிவாவதேயில்லை. தனித்த கிரகம்.
என் உடலின் வேகம் கீறலை
உன் முகத்தழும்பாக்கிக் கடக்கும்


தானியச் சொற்களை மீண்டும் மீண்டும்
கொத்தியலையும் அசீரணச் சிட்டுக்குருவிகள் இருந்தனவே
அவற்றின் சிற்றுடலை காண நேர்ந்ததைப் போல
நீயெனைக் கண்டடைய முடியாது.
உன் முழுவாழ்விற்குமான
குற்றவுணர்வினாலும் மறதியினாலும்


பால்வெளியில் விண்கோள் என மிதந்து சுழல்கிறேன்.


இன்னொரு பிரபஞ்சத்தின் எரிகோள் நான்.
சுடர் பெருக எரிகிறேன்.
ஆழ்கடலுக்குள் குதித்த சூரியனை
இரவெல்லாம் மூச்சடக்கித் தேடாதே தேடாதே


குட்டி ரேவதி

பதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர் ஆவணப்படம்


‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’





அரசு தபால்களை அனுப்பும் போது அதன் மீது, ‘கமுக்கம்’ என்று அச்சிட்டுத் தருவார்கள். அதாவது அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான ரகசியம் பொதிந்தது என்று பொருள்படும். அடித்தட்டுப் பெண்களிடமும் அத்தகைய சில சிறப்பான குணங்கள் உண்டு. துயரங்களை கமுக்கமாக வைத்துக் கொண்டு அந்தத்துயரத்தின் எல்லைகளை தாமே தனியே நின்று அசாதாரணமாகக் கடந்துவிடுவார்கள். மத்தியதர வர்க்கத்துப் பெண்களைப் போலவோ மேல்தட்டுப்பெண்களைப் போலவோ, ஆதிக்கசாதிப் பெண்களைப் போலவோ பெருங்கூச்சலுடன் ‘இதோ பார்! தாவுகிறேன் பார்!’ என்று கூவுதல் அவர்களிடம் கிடையாது. அவர்கள் பெற்றிருந்த கல்வியும் சூழல்களும் அப்படி அவர்கள் கூக்குரல்கள் எழுப்பினாலும் பொதுத் தளங்களைச் சென்றடையும் வாய்ப்புகளை அவர்கட்கு வழங்குவதே இல்லை. இதைப் பெண்ணிய விவாதத்தின் ஒரு முக்கியமான புள்ளியாக வைத்துக் கொண்டு பேசினால் தான் பெண்ணியம் என்பதின் குறுக்குவெட்டுகள் புலப்படும்.



‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ எனும் ஆவணப்படம் பதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுப் பதிவு. இதற்கான பணிகளை சென்ற ஏப்ரல் மாதம் தொடங்கினேன். என்னுடன் பணியாற்ற கோகிலா, கணேசன், சூர்யா, ஆட்டோ ராஜா ஆகியோரும் இணைந்து கொண்டனர். இந்தியாவின் சிகப்பு மாயக்கம்பளமாக இருக்கும் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் சுவர்களுக்குள்ளே நடக்கும் அநீதியைப் பற்றியது இது. இங்கு வேலைபார்க்கும் கடைநிலை ஊழியர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்துவதில் அரசு நிறுவனம் எவ்வளவு தூரம் தேங்கிப்போயிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முயற்சியும்.


இந்நிறுவனத்தைச் சேர்ந்த கடை நிலை ஊழியர்கள் பணியில் இருக்கும்பொழுதே விபத்தாலோ பிற காரணங்களாலோ மரணம் எய்தினால், அதற்குப் பின் அவர்களின் குடும்பத்தினரை அந்நிறுவனம் என்ன மாதிரியான மரியாதைகளுடன் நடத்துகிறது என்பது அந்நிறுவனத்தின் பெயருக்குச் சற்றும் பொருத்தமில்லாதது. அதாவது, அந்த பணியாளர் உயிருடன் இருக்கும் பொழுது மற்ற பணியாளர்கள் அவருடன் ஒரு வேளை தேநீரையாவது பகிர்ந்திருப்பார். அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் மனைவி மக்களின் கையால் விருந்து உண்டு மகிழ்ந்திருப்பார். ஆனால் அவர் இறந்த பின்பு தன்னை நண்பராக மதித்த அந்தப் பணியாளரின் மனைவியை அதே அலுவலகத்தில் ‘கருணை வேலை’ என்ற பெயரில் கழிப்பறைத் தூய்மை செய்பவராகப் பணியில் அமர்த்துகின்றனர். அந்தப் பணியை நிரந்தரப்படுத்துவதற்குக் கூட எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் அவர் குடும்பம் என்னென்ன கஷ்டங்களைக் கடக்கிறதோ அதற்குக் கொஞ்சமும் கருணை முகம் காட்டாது கணவனை இழந்த பெண்ணையும் தந்தையை இழந்த மகளையும் மகனையும் இன்னுமின்னும் இழிநிலைக்குத் தள்ளும் நெறியற்ற வேலையையும் செய்கின்றனர். இந்தக் கழிவறைத் தூய்மை செய்யும் பணியும் நிரந்தரப்படுத்தப்படாமல் இருபத்து மூன்று வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படுகிறது.



இந்தப் பணிக்குச் செல்லும் பெண்களின் கடந்த காலக் கதைகள் வழமையாகப் பெண்களுக்கு திணிக்கப்படுவதைப் போன்ற திருமண வாழ்க்கையே. குறைவான கல்வித் தகுதியுடன் குறுக்கப்பட்டு குடும்பவாழ்வை நோக்கி அனுப்பப்படுகின்றனர். கணவனுக்கான பணிவிடையிலும் பிள்ளைகளே கதி என்ற வாழ்க்கையிலும் திருப்தி கொண்ட பெண்களாய் வாழ்ந்த இவர்களை, திடீரென்று நிகழும் கணவனின் மரணம் கண்ணைக் கட்டிக் காட்டில் விடுகிறது. அவர்களுக்கு உரிமையான கருணைப் பணி வழங்கப்படும்போது அதை ஒரு முதன்மையான ஆதரவாக எண்ணித்துணிந்து அவ்வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வழங்கப்படும் வேலை கழிவறைகளைத் தூய்மை செய்வதே. கணவன் எத்தகைய மேலான பணியில் இருந்தாலும் கழிவறைப் பணியே கருணை வேலையாக வழங்கப்படுகிறது. பெண்ணென்றாலே தூய்மைசெய்தல், அதிலும் தாழ்த்தப்பட்ட பெண்கள் என்றால் கழிவறைத் தூய்மை என்று அரசு நிறுவனங்களும் சாதிய ஒடுக்குமுறையைச் செயல்படுத்துகின்றன. இவர்களில் ஒருவர், படிக்காததினால் தானே தனக்கு இந்த வேலை என்று மிகவும் சிரமப்பட்டுப் பயின்று மேலும் தன் கல்வித்தகுதியை உயர்த்திக் கொண்ட போதும் இன்னும் அதே வேலையைத் தான் அவர் செய்யவேண்டியிருக்கிறது.



இந்தப்பட உருவாக்கத்தில் ஈடுபட்ட அனைவருக்குமே அவர்களின் தன் வரலாற்றுப் பதிவு என்பது வேதனை நிறைந்ததோர் அனுபவமாக இருந்தது. கணவனை இழந்த இப்பெண்கள் துயர் மிகுந்த ஏழைமையான காலத்தைத் தம் முதுகின் மீது சுமந்தவாறே தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு தம் இருண்ட மனக்குகையிலிருந்து வெளியேறுகின்றனர். திருமணத்தினாலும் அதன் கட்டுப்பாடுகளாலும் தாங்கள் இழந்த சுயத்தை மீண்டும் வருவித்துக் கொள்ளும் பயணமாகவும் இது இருக்கிறது. கணவனை இழந்த இவர்கள் தமக்குப் பாரமாகிவிடுவார்களோ என்று இவர்களின் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் படக்குழுவினரைப் பார்த்ததும் பெறும் உற்சாகம் அளவிலாதது. ஒவ்வொரு நாளும் எவருடைய வீட்டில் படப்பிடிப்பு நடக்கிறதோ அங்கு தான் எங்களுக்கு உணவு. அவர்களுடைய உணவுதான் எங்களுடைய உணவும்.



கேமராவை இயக்கத் தொடங்கினாலே அவர்களின் நினைவுச் சக்கரம் கடந்த காலத்தை நோக்கி இயங்கத் தொடங்கிவிடும். அவர்களால் கட்டுப்படுத்த முடியாத கண்ணீரின் கடல் அவர்களின் கதைச்சுருளாய் பெருக்கெடுத்துப் பாயும். கதை நிறைவுக்கு வருகையில் படப்பிடிப்புக்குழுவினர் அனைவரின் கண்களையும் அக்கதை கண்ணீர் அலைகளால் மூழ்கடித்திருக்கும். அதிகாரத்தின் நாவுகள் அவற்றிற்கான இச்சைகளை உச்சரிக்கும் போதெல்லாம் அது தனது சொற்களை சாதி ஆதிக்கத்தின் பெயரால் தான் பொருள் விளங்கிக் கொள்கிறது என்பதை ஏர் இந்தியாவின் அனுபவம் மட்டுமல்ல எந்த ஓர் அரசு நிறுவனமும் இதே விதமான அதிகார ஒழுங்குகளைத் தான் கொண்டிருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.



‘நல்லா தான இருக்க. புருஷன் போனதுக்கு அப்புறம் ஒனக்கெதுக்கு காசு தேவைப்படுது’ என்று சொல்லும் போதும் சரி, ‘ஒங்களுக்கு என்ன ஆபீஸ் வேலை கேக்குது. போய் டாய்லெட்டை க்ளீன் பண்ணுங்க’ என்று சொல்லும் போதும் இந்தியாவின் சாதிய பாலின ஒழுங்கு முறையை இப்பெண்கள் தனித்து நின்று குலைக்கமுடியாத இயலாமையை மறைக்க முடிவதில்லை. இரண்டு தலைமுறைகள் தொடர்ந்து துயர் தாங்கிய இப்பெண்கள் இழந்தவை, கற்பனைக்கெட்டாதவை. விமானத்தில் பறக்கும் ஒரு வாய்ப்பை இழந்தது போன்றதோர் அற்பமான சுகம் மட்டுமேயன்று.



இந்தப் படத்தை நான் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே முதலில் திரையிட எண்ணியுள்ளேன். பகிரங்க உரையாடல்கள், திரையிடல்கள் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த ஆவணப் படத்தைப் பார்க்க விரும்பும் பத்திரிகை நண்பர்களுக்கு இப்படத்தினை திரையிட்டுக் காட்ட விரும்புகிறேன். தனித்த ஒருவருக்கு என்றாலும். தனித்திரையிடல்கள் என்றாலும் எனக்குச் சம்மதமே. இப்படம் 33 நிமிடங்கள் ஓடக்கூடியது. ஒளிப்பதிவு: ஆர். கணேசன், படத்தொகுப்பு: பி. தங்கராஜ், உதவி இயக்கம் மற்றும் கருத்தாக்கம்: கோகிலவாணி, தயாரிப்பு: ஓஹோ புரொடக்‌ஷன்ஸ், வடிவம் & இயக்கம்: குட்டி ரேவதி.



இப்படத்தை நீங்கள் ஒரு முறையேனும் பார்ப்பது என்பதும் உங்கள் நண்பர்களுக்கு இப்பிரச்சனையை முன்வைப்பது என்பதும் அவர்கள் துயரத்தில் நீங்களும் பங்கு கொள்வது என்பதாய் இருக்கலாம். அல்லது அவர்களுடன் இணைந்து அவர்களின் துயர் களைவதற்கான உங்களுடைய முனைப்பாயும் இருக்கலாம். அவர்களின் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை உங்களுக்கும் பிறருக்கும் ஏற்படுத்திக் கொள்வதாய் இருக்கலாம். அதிகார அமைப்பைக் குலைக்கும் ஒற்றை முயற்சி, சமூகத்தின் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் தொடங்கலாம். இப்படத்தினுடனான எனது தனிப்பட்ட உரிமை என்பது பெயரளவில் மட்டுமே.


தொடர்பு மின்னஞ்சல்: kuttirevathi@gmail.com


குட்டி ரேவதி


பின் குறிப்பு: ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ - கவிஞர் பிரமிளின் கவிதை வரி

கடலும் உடலும் மகோன்னதமிக்க பொக்கிஷங்கள்

(குட்டி ரேவதியின் “உடலின் கதவு” கவிதைத் தொகுப்பு. வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம், 137(54), இரண்டாம் தளம், ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014, விலை ரூ.80.)


விட்டு விடுதலையாதல் என்பது மானுட உரிமை சார்ந்தது மட்டுமல்ல, ஒரு கவித்துவ அம்சமாக அனைத்து வித எழுத்துகளிலும் எடுத்தாளப்பட்டு வருகிறது. குட்டி ரேவதியின் “உடலின் கதவு’ கவிதைத்தொகுப்பில் ஆதிக்கத்திலிருந்து பிதுங்கி வெளியேறத்தவிக்கும் தவிப்பின் குரல்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் கனன்று கொண்டிருப்பதைக் காண முடியும். அதே சமயத்தில் பெண்மையின் கம்பீரம் கூச்சங்களை முறியடித்து விட்டு வீறுநடை போடுவது ஊடுபாவெனப் பின்னி ஒரு சரித்திரத்தை நெய்வதாகத்தான் தோன்றுகிறது.


இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகளில் கடல், உடல், விதை, கனி போன்ற சொற்கள் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருக்கின்றன. கடலும் உடலும் விதையும் கனியும் மானுட வாழ்வின் மகோன்னதமிக்கப் பொக்கிஷங்கள். மனிதனுக்கு அவை வழங்கிய அழகுகள் எண்ணிலடங்காதவை. சிதைப்பது இதன் செயல்நோக்கம் என்ற வகையில் அழகுகளை அனுபவிக்கத் தெரியாமல் சிதிலங்களில் திளைக்கிறது. சிதைவுகளை எண்ணித் தளர்ந்து விடாமல் அழகுகளைச் சிருஷ்டிக்கும் கலையில் கவனமுடனும் கலகத்தன்மையுடனும் முகிழ்க்கிறது உடல்.


இவற்றை போர், உடல், திணை, யுத்தத்தின் கொதிப்பு, மற்றும் கடலை வரைந்தவள் கவிதைகளில் காணலாம். உடல் குறித்த பிரயோகங்கள் மானுட ரகசியங்களிலிருந்து பகிரங்கமாக வெளியேறி அமைப்பாக்கம் பெற்றாலும் பெண்மையின் வாசனையை சொற்களினுள் ஒளித்து வைத்துள்ளன.


மெத்தென தமது உடலைப் பஞ்சணைக்கு எப்பொழுதோ விரித்தவை – என்னும்போது ஓர் ஒடுக்குதலின் துயரம் பீறிடுவதை வார்த்தை வெளி நமக்குள் காட்சிப்படுத்தி விடுகிறது. வெளவாலின் பிடிவாதமாய் ஒவ்வொரு உடலாய்த் தாவியமர்ந்து தாகமாற்றும் – என்று சொல்லும் போது, முழுநிலவின் இரவுகளில் உடலைப் பிணமெரியும் வாசனையோடு மலர்த்தினாள் என்று சொல்கிற பொழுதும் ஒரு திடுக்கிடலும் அச்சம் கலந்த துயரமும் அவலத்தின் பின்னணியை நமக்குக் காட்சிரூபமாக விளக்கிவிடுகிறது. சமூகக்கட்டமைப்பு மீதான ஒரு பெண்ணிய அடையாளம் தாக்கம் பெறுவதைக் காணமுடிகிறது.


கடந்த வரலாற்றில் தொலைந்த உடலை இன்றைய போரில் மீட்டெடுப்போம் – இது ஒரு நம்பிக்கையின் குரலாக ஒலிக்கிறது. விதைக்கவோ வளர்க்கவோ யாருமேயிலாது பாழ்நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது உடல் – என்ற இடத்தில் ஒரு துயரத்தின் குரலாக மாறுகிறது. நீ என் உடல் திறந்த கணம் வீறிட்டு அழுதது பனி – இந்த இடத்தில் ஒரு பிரவாகம், ஒரு முகிழ்த்தல் என கவிதையின் குரல் அழுகிறது.


இது ஒரு விரிவாக்கப்பட்ட விரிவாகப் பரந்த மொழியின் ஒரு தொலை தூரத்தோற்றம். அது அர்த்தங்களை உற்பத்தி செய்வதற்காக வேர்நிலைச் சாத்தியப்பாடுகளை வழங்குகிறது. இவற்றில் ஒரு கவித்துவத்தை, ஓர் உடைந்த கவித்துவச் சொல்லாடலைக்காண நேரும்பொழுது ஒரு விமர்சன ரீதியான பெண்ணிய வரலாற்றையும் படைத்து விடுகிறது. இங்கு எழுத்தின் எல்லைகள் மீறப்படுவதோடு திறந்த வடிவங்கள் உடைக்கப்படுகின்றன. அனுபவமும் தொலைதூரப்பார்வையும் மாறும் பொழுது வடிவங்களும் மாறுதல் அடைகின்றன. கவிதையின் சுய தர்க்கம் அமைப்பாக்கம் பெறும் இடம் இது. பெண்ணிய மனதும் உடலும் பன்முகப் பரிமாணம் கொள்ளும்பொழுது இக்கவித்துவ மொழி மலர்கிறது.

இங்கு உடல் திணை கவிதை,
கடலின் கொந்தளிப்புக்குள் தவறி வீழ்ந்த பின்னர்
ஒரு தோணியாக அலைகளையெல்லாம் வரிக்க முடியும்
உடலெங்கும் விளையும் கதைகளைப்
பருவம் மாற மாறப் பொலபொலவென்று உதிர்த்து
முதுமையின் நீர்மையை நுனிவிரல்களால் தொட்டுணர்ந்தவாறே
ஒரு நீர்த்தாவரமாய் உள்ளிறங்கி
அதன் பரப்பெங்கும் பல்கிப் பெருகவும் முடியும்

என நிறைவு பெறுகிறது. உடல் ரீதியான எல்லைகள் தாண்டி மொழியியலாக, உளவியலாக, கலாச்சாரமாக பிரவகிக்கும் பெண்மையின் நர்த்தனம் ஒவ்வொரு வரியிலும் ஊக்கம் பெறுவதைக் காண முடிகிறது. பெண்மையின் அழகியல் ஒரு கலைப்படைப்பாக உருவெடுக்கிறது.

ஓர் அதிகாரத்துவ மனப்பாங்கு, சமூக பெளதீக அரசியலாக மாறும் வித்தையை ஸில்வியா பிளாத்தின் கவிதைகளில் பார்த்திருக்கிறோம். குட்டி ரேவதி வேறு பல எல்லைகள் தாண்டி பெண்மையின் உண்மையை நமக்கு விவரிக்கிறார். எனது உடல் அவர்களுக்கு ஒரு கூழாங்கல் என பிளாத் கூறுவார். ஆனால் இங்கு உடலின் கதவைத்திறந்து பொக்கிஷங்கள் காண்பிக்கப்படுகின்றன. எப்படியிருந்தாலும் உள்ளீடு ஒரு விடுதலை தான் என கவிஞர் அறிவித்து விடுகிறார்.


உடல் குறித்த கவிதைகள் ஓர் ஒழுக்கவியலாக, ஒரு நேர்மையாக ஒரு திறந்த நிலையின் பொருத்தமான பாணியாகக் கட்டுடைக்கப்படுகின்றன. உணர்வதும் அரூபமானதுமான இரட்டை நிலைகள் பின்பற்றப் படுகின்றன. இவை ஒரு முரண்பாடு மிக்க தேவையாக உள்ளன. இருத்தலிலிருந்து விடுதலை பெறும் விருப்பத்தைக் காட்டிலும் இருத்தலை மென்மையானதாக மாற்ற விரும்புவதே சிறந்ததாக உடல் பற்றிய கவிதைகள் பேசுகின்றன.

இங்கே ஒரு கவிதை,
கடலை வரைந்தவள்
அவளுக்குள்
உயிருள்ள கடலொன்றை வரைந்திருக்கிறாள்.
எதிர்நோக்காப் பொழுதொன்றில் கொந்தளித்து
உறங்கும் நகரத்தின் கரைகளை விழுங்கிவிடுகிறது
கூந்தலின் அலைக்குள்
மீன்கள் குதூகலமாய்க் கொந்தளிக்கின்றன
பவளப்பாறைகளின் மடிப்புகளில்
புனைவுகளில் விளையும் காலம் உறங்குகின்றது
அவளது இதழ் நீலஒளி கீறிய புன்னகையுடன்
இரவினை முத்தமிடுகின்றது
உடலெங்கும் படர்ந்திருக்கிறது
பெளர்ணமியின் ஈரஒளி
அவளின் வனாந்தரத்தில்
சங்குப்பூச்சிகள் மேய்கின்றன
காலத்தின் சிந்தனையேயிலாது
கடல் ஆமைகள் ஊமைப்பெண்களாய்
அழகு சிந்த நோக்குகின்றன
பார்வைக்குள் அடக்கியிருக்கும் பாடல்களை
விடுவிக்க முடியாத ஏக்கம் ததும்ப
அவளது கடலுக்குள் ஏகி
எண்ணிக்கை மீறுகின்றன காலையும் மாலையும்
ஒரு பார்வையில்
கடலையே அவளால் சுருட்டிக்கொள்ள முடியும்
கம்பளத்தைப் போல
ஆனால் நெருப்பின் கங்குவளையத்தினூடாக ஒரு பயணம்
தகிக்கும் சூரியனைத் தலையில் சுமத்தைப் போல
ஓய்தலின்றித் தவிக்கிறாள்
அவளுக்குள் ஒரு கடலையல்லவா எழுப்பியிருக்கிறாள்.


இந்தக் கவிதைத் தொகுப்பின் உஷ்ணத்தை இந்த ஒரு கவிதை மட்டுமே தன் மடியில் கட்டிக் கொண்டிருக்கிறது. இதை ஒரு வகைமைப்பாடாகச் சிறுமைப்படுத்திவிட முடியாது. ஒரு நிரந்தரமற்ற மொழியின் செழிப்பான சுவையை உணர்வது ஒரு புறம் இருக்கட்டும். இந்தக் கவிதையின் ஒரு சமன்செய்யும் செயலைக் கவனிக்கலாம்.


ஒரு மாபெரும் பிரக்ஞையின் வெளிப்பாடு ஒரு மெய்மையின் ஒளி அலையை மிக மிக மென்மையாகத் தூவுகின்றது. ஒரு நீல ஒளி கீறிய புன்னகையும், நெருப்புக் கங்குவளையத்தினூடாக ஒரு பயணமும் என வாழ்வையும் மரணத்தையும் அவலத்தையும் குதூகலத்தையும் நல்லதையும் தீயதையும் உடல் மற்றும் கடல் போன்ற பிம்பங்களின் நிதர்சனத்தையும் நிச்சயமின்மையையும் ஒரு சமன் செய்யும் போக்காக கவிதையின் மொழி வீறிடுவதையும் மெளனம் வகிப்பதையும் ஒரு புதிய பிரத்யேகத்தை நோக்கிச் செல்வதையும் காண முடிகிறது.


மோகன ரவிச்சந்திரன்
நன்றி : உள்ளுறை