நம் குரல்

கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு!



கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்பவர்கள், புதிதாய் எழுத வரும் கவிஞர்களின் கவிதைகள் வரை தேடித்தேடி தொடர்ந்து வாசிக்கவேண்டும்.

கவிதைகள் புரியாமல் போவதற்கு முதல் காரணம், நீங்கள் இன்னும் கவிதை வாசிக்கப்போதுமான மொழி அறிவைப் பெறவில்லை என்பது தான்.

கவிதைகளுக்குள்ளே, சங்கம், சித்தம், கலப்பு, சனாதனம், நவீனம், பெண்மொழி, ஒடுக்கப்பட்டோர் மொழி, நாட்டுப்புற மொழி, ஈழம் என காலந்தோறும் நிலந்தோறும் தோலுரித்து வளர்ந்த 'மொழியின் பருவம்' அடர்ந்து இருக்கிறது.

கவிதைகளை வாசிக்க அறிந்து கொள்ளல் என்பது, மொழியின் வெவ்வேறு காலத்தையும் அறிந்திருத்தல் என்பதாகத்தான் அர்த்தம்.

புரியாமல் போகும் பட்சத்தில் அக்கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்தல் அவசியம். அப்பொழுது, அடிமனதில் தடதடக்கும் அந்தக்கவிதையின் மொழி லயம், கவிதை புரிவதற்கு உதவக்கூடும்.

சில சமயங்களில், கவிதையின் தலைப்பையும் கவிதையையும் கூட்டித்தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, கவிதை என்ன சொல்ல வருகிறது எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
முற்றுப்புள்ளிகள், அரைப்புள்ளிகள், காற்புள்ளிகள் வாசிப்பை இடறி, நவீனக்கவிதை மொழியையும் பொருளையும் உணரமுடியாமல் தடுக்கும் வேகத்தடைகள். ஆகவே, தான் செய்யுள் வடிவம் நவீனம் அடையும் போது இவற்றையெல்லாம் இழந்தது என்று நினைக்கிறேன். என்றாலும், கவிதைகளுக்குள் இவையெல்லாம் ஒளிந்து மறைந்து இருப்பதையும் உணரமுடியும்.
கற்பனையின் விடுதலையும் சிந்தனையின் விடுதலைப்பூர்வமான பயனமும் தான் கவிதையின் இலக்கு. கவிஞர் எழுதாத நோக்கத்தையும், அர்த்தத்தையும் கூட நுட்மாக வாசிக்கும் வாசகனும், உருப்பெருக்கிக் கண்ணாடி வழி நோக்கும் விமர்சகரும் கண்டறிந்துவிட முடியும். இது, கவிதைக்குக் கூடுதல் சிறப்பே.

ஒவ்வொருவரும் உறக்கத்தில் காணும் கனவினைப் போல அவரவரால் அர்த்தம் பெறும், 'மொழி அடுக்கு' தான் கவிதை.

ஃபேஸ்புக்கில், நகைச்சுவை துணுக்குகளையும், வரி மடிப்புகளையும், உரைநடை அங்கதங்களையும் கவிதை எனும் பெயரில் பதிவிடும் போது, கவிதையின் நல்லதொரு வாசகர், சிரித்துவிட்டு அதைக் கடந்து போகமுடியும்.

மேலும், "ஜர்னலிஸ" மொழியைத் தாண்டவிரும்பாதோர் மற்றும் தட்டையான ரசனையுடையவர்கள், ஒரு கவிதை புரியவில்லை என்று சொல்லும் போது அந்தக் கவிதை ஒன்றும் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

கவிதை அந்தந்தக்காலத்தில் கருக்கொண்டு பொரிந்து முட்டையிலிருந்து வெளியேறி சிறகு விரிக்கும் பறவை. பறவையின் சிறகசைப்புக்கு ஈடுகொடுத்துப்பறக்கும் வலுப்பெற்றோர், தன் மனித வாழ்க்கையை உணர்ந்து வாழ்கிறார் என்று பொருள்.

ஊடகங்களும் மொண்ணையான சிந்தனையுடையோரும் அழகியல் உணர்வற்றோரும் கவிதை கடினமானது, புரியாதது என்றே சொல்லிச்சொல்லி கவிதையைப் புறக்கணித்துவிட்டார்கள்.

கவிதையைப் போல தனிமனிதனின் இதயத்திற்கு நெருக்கமான கலை வடிவம் ஏதுமில்லை!





குட்டி ரேவதி