நம் குரல்

ஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும்


(சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு எழுதிய அணிந்துரை) 




நேரடியாகத் தமிழகத்தின் ‘பெண் எழுத்து’  அரசியலுக்குள் செல்லலாம். பின்பு, சிவகாமியின் கவிதைகளுக்குள்ளும் அவை பேசும் அரசியலுக்குள்ளும்!



இலக்கியத்தின் முந்தைய தலைமுறை பெண் படைப்பாளிகளால், பெண் என்ற ஒற்றைப் பரிமாண அரசியலையே உருவாக்கமுடிந்தது! அது, அவர்கள் ‘பெண் என்ற தனித்த அடையாளம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று தங்களுக்குத் தாங்களே வலியுறுத்திய போதும், அப்பொழுதும் எப்பொழுதும் பரவலாக எழுதி வரும் ஆண் படைப்பாளிகளின் படைப்பியக்க அடையாளங்களுடன் தம்மைப் பொருத்தி இணைத்துக் கொண்ட போதும்!



‘பெண்’ என்ற ஒற்றை அரியணை போதும்!’ என்ற ஏற்றத்தாழ்வின்றி, எல்லா பெண்களும் அந்த ஒற்றைப் பரிமாண பெண்ணிய அரசியலை முன்மொழிந்த போது கல்வி, சமூக, மதிப்பீடுகளில் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்த சமூகத்தின் பிற பெண்களுக்கான சிறந்த இடங்களை மறுத்துள்ளனர். ஆனால், இந்த இடைப்பட்டக் காலத்திற்குள், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் தன்னையே வருத்திக் கொண்ட, அழுத்தமான, நீண்ட, போராட்டங்களினால் எழுத்தை நோக்கி தம்மைத் தாமே உந்தித்தள்ளிக்கொண்டனர்.  எழுத்து என்னும் சமூகத்தின் வலிமையான குரலெடுப்பை, அதன் பரவசத்தை  முதன்முறையாக உணர்ந்த முதல் தலைமுறைப் பெண்களின் உள்ளார்ந்த வல்லமை கண்கூசும் ஒளியுடன் எழுத்தில் பரிணமித்தது. இன்று, அவர்கள் முன்வைக்கும், ‘அறிவார்ந்த சிந்தனை’களுக்கு முன், சென்ற காலத்தின் கற்பனைகளும், இலக்கிய ஜோடனைகளும் தம் ஒளிமங்கிப் போனது தவிர்க்கமுடியாததும் ஆனது.



ஏனெனில், இவர்கள் மட்டுமே உடலின் மொழியை எழுத்தாக்கினர். இன்று வரை மொழி என்பது, இவர்களுக்குத்  தம் உடலுக்குள், குமைந்து கிடந்த கண்ணீரின் துளிகளாகவோ, கனன்று கொண்டிருந்த கனல் துண்டங்களாகவோ, இசைக்க மறந்திருந்த பாடலாகவோ இருந்திருக்கவேண்டும். அல்லது, வாய்மொழிக் கதையாடல்களாய் இருந்திருக்கவேண்டும்! எழுத்தின் வெளிப்பாட்டால் உணர்ந்த பரவசநிலை, மண்ணோடு மண்ணாக அழுத்திப் புதைக்கப்பட்ட தம், ‘சுய வரலாறு’களின் படிமங்களைத் தேர்ந்தெடுத்த கவிதைச் சொற்றொடராக்கத் தூண்டியது.  ‘உடலின் மொழி’ என்றால், அது பாவனைகளைக் குறிப்பிடுவது அல்ல என்ற புரிதலுடன் நாம் முன்நகரலாம்!



அதற்கு முன்பு வரை எழுதிக்கொண்டிருந்த ஆதிக்க சாதிப் பெண்களின் உணர்நரம்புகள் தொட்டாற் சிணுங்கிகளைப் போல் உள்ளிழுத்துக் கொண்டன. அல்லது புதியதாக எழுதப்பட்ட சொற்களின் அர்த்தம் புரியாததைப் போல மலங்க மலங்க விழித்தன அல்லது இயல்பாகவே, இவ்வெழுத்தின் மீது உருவான தம் வெறுப்பை, ‘நாகரிகம்’ என்ற பெயரில் மறைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு, சமூகத்தில் இதை விட முக்கியம் வேறெது என்று தேடும் பாவனையில் தம் உருப்பெருக்கிக் கண்ணாடிகளை அங்கும் இங்கும் திருப்பி நோக்கின!  வேறேதும் கிட்டவே இல்லை!



எப்பொழுதுமே பெண் எழுத்தின் வாயில், ஆதிக்கச் சிந்தனைப் பெண் எழுத்தின் வழியாகவே திறக்கப்படுவதால்,  அதிலும் ஆண்டாள் போன்ற பெயர்கள் அலுக்கும் வரை உரத்தக் குரலில் உச்சரிக்கப்படுவது எமக்குச் சலித்துப் போய்விட்டதால், அடுத்த வீட்டு வாசல் வழியாக எம் வீட்டிற்குள் நுழையாமல், இங்கு நேரடியாகவே சிவகாமியின் கவிதைகளுக்குள் செல்லும் படி அழைக்கிறேன்!  ஏனெனில், ஆதிக்கச் சிந்தனையின் பின்னிருக்கும் இறைஞ்சுதல் தொனி, பக்தியாக அடையாளப்பட்டுப் போயிருக்கிறது! அதிகாரத்தைப் பிச்சையெடுத்தேனும் வாங்கிச் சுகிக்கும் அடிமை மனோநிலை தானே அது?



எது கவிதை? என்று அறியப்படாமலேயே, தமிழகத்தின் வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கேள்வி, சிந்தனையின் வெளியில் பல பிளவுகளையும் சேதங்களையும் நிகழ்த்திவிடும் என்பதலாயே, அக்கேள்வி, வசதியாய்ப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அது, நவீன அரசியல் காலக்கட்டத்தில், ‘சுயம்’ பற்றிய தத்துவ விளக்கத்தையும் கோரும் என்பதே அதற்கு முதன்மையான காரணம். ’சுயம்’ என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல கவிதையில் அன்றி வேறெந்த இலக்கிய வடிவிலும் துலங்குவதில்லை. அதிலும், நவீனத்தின் உரத்த குரலாயிருக்கும் கவிதை மொழி, ஒரு சிந்தனையாக, விவாதவெளியாக இன்னும் விரிக்கப்படாமலேயே அதன் அதிர்வுகள் செரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றைய படைப்பாளியின், ‘சுயம்’ ரசிக்கத் தக்கதாயில்லை!



ஒரு தனித்த படைப்பாளியின் கிரீடங்கள் மண்ணில் உருண்டு, பரிகாசங்களின் வாய் பொத்திய மொழிகள் ரகசியங்களாக உலா வருவதும்,  அத்தகைய படைப்பாளிகள், மன நோயாளிகளைப் போல திறந்த வெளியில் திரிவது கண்டுப் பரிவுடன் அவர்களை விட்டு விலகுவதும் வழக்கமாயிற்று. பழகிப்போயிற்று. இன்று ஒரு படைப்பாளி, தன் படைப்புகளின் வழியாக, தன் சுயத்தின் பொலிவுடன் சமூகத்தின் எந்தெந்த மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறான் என்பதும், சிந்தனையின் தீரா இயக்கத்தை எவ்வளவு துணிவுடன் தொடர்ந்து இயக்குகிறான் என்பதும் மிக மிக முக்கியமாகிறது. இது இயலாது, தன் சுயம் கண்டு மிரண்டு போனவர்கள், தனி மனிதச் சுமைகளுடனும், அதன் கிரீடங்களுடனும் அடையாளம் பெறும் நிலையிலிருந்து, ‘சிந்தனைப் பருவம்’, நகர்ந்து வந்துவிட்டது. ஏனெனில், அத்தகைய கிரீடங்கள், அதிகாரம் செய்து பழகியவர்களுக்கும், ஆதிக்கச் சிந்தனையை எழுத்தாக்கியவர்களுக்கும் தாம் தேவைப்பட்டது. அவர்களின், சிந்தனை, நடை, ஊக்கம் தளர்ந்ததை இன்று நாம் கண்ணெதிரேயே காணமுடிகிறது.




கதவடைப்பு


தமிழில் இயல்பாகவே, தம் சாதி, மதம், பால் அழுத்தங்களைப் புறக்கணித்தவர்கள் உடலின் மீதான, அவற்றின் அழுத்தங்களைப் பேசாமல் இல்லை. விட்டு விடுதலையாகிய உணர்வை உடலுக்கு ஊட்டிய சிட்டுக்குருவிகளாக இருந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியை இலக்கியத்தின் வேறு வேறு முகங்களாய் எங்கெங்கும் நாம் கண்டுணரமுடியும். பகுத்தறிவுச் சிந்தனையின் ஊற்று, உடலில் தான் பிறக்கிறது! புத்தன் அதை செம்மையாகத் திருந்தச் செய்து வைத்தான்! காலந்தோறும் யாரேனும் அதைத் தன் உடலுக்குள் ஊதிப் பெரிதாக்கி, அதன் வெக்கையை வெளியிலும், பரப்பினர். இவ்வாறு தன் உடலைப் பகுத்தறிவுச் சிந்தனையின் உலையாக்கியவர் சிவகாமி.



மேற்குறிப்பிட்ட, சமூகச் சூழலைப்  பின்னணியாகக் கொண்டு தான், சிவகாமியின், ‘கதவடைப்பு’ என்னும் கவிதை நூலை அணுக வேண்டும். அவர் எழுத்துக்குப் புதியவர் அல்ல. ‘இந்தியாவின் முதல் தலித் இலக்கியம்’ என்று வரையறை செய்தாலும், ‘இந்தியாவில் பெண் உடலின் சிந்தனை எழுச்சிகளை முதன் முதலாகப் பதிவு செய்தவர்’ என்று ஆராய்ந்து பார்த்தாலும், சிவகாமியின் எழுத்தனுபவமும் முதன்மையும் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. என்றாலும், அவர் எழுத்தின் முதல் புள்ளியிலேயே நின்றுவிடவில்லை. அங்கிருந்து, விடுதலை, வேட்கை, நீதி போன்ற  உணர்வுகளின் திசைகளை நோக்கி அயராது ஓடியவர். அத்திசைகள், அவருக்கானவையாக மட்டுமே இருந்தவை என்று எவரும் தவறாக நினைத்துவிடவேண்டாம். அதில், அவர் பின்னால், எப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும், பிற பெண்களும் கூட ஓடிவர முடியும் என்று அவர்களுக்காகவும் சிந்தித்தவர். சமீபத்தில் ஒரு சமூக இயக்கத்தின் தலைவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘பிற சமூகத்திலிருந்து, தீண்டாமைக்காகவும் சமூகத்திற்காகவும் ஒருவர் உழைத்தால், அது கொண்டாடப்படுகிறது. ஆனால், தீண்டப்படாத நிலைக்குத் தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து ஒருவர் தன் சமூகத்தின் மீது படிந்து கிடக்கும் கருமையான போர்வையைக் களைய வந்தால், அவரை அழித்தொழிக்கும் திட்டம் தீட்டப்படுகிறது!’ என்று. இதுவும் தீண்டாமையைச் செயல்படுத்தும் ஒரு சமூகத்தின் ஆதிக்க உத்தி தான்! இலக்கியத்திலும் அது தான் நிகழ்ந்திருக்கிறது.



நவீன இலக்கியத்தின் நெடுஞ்சாலை, சென்று சேரும் ஊர் இன்றி ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், இரண்டு முக்கியமான சிந்தனைத் தெறிப்புகளை முன் வைக்கிறார், சிவகாமி. ஒன்று, ‘பெரியார், ஒடுக்கப்பட்ட மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் இல்லை!’ என்பதும் ‘தாழ்த்தப்பட்டவர்களால் படைக்கப்படுவது மட்டுமே, தலித் இலக்கியம்!’” என்பதும்! இரண்டுமே, பெரிய அதிர்வுகளையும், மடைமாற்றங்களையும் கவனக்குவிப்புகளையும் நிகழ்த்தின என்பதாலேயே, மேற்குறிப்பிட்டது போல், நவீன இலக்கியமுகாமில், இலக்கியத்தின்  புதிய சிந்தனை முறைகள் விவாதிக்கப்படாமலேயே காலங்கள் கழிந்தன. இவ்விரண்டு, கூக்குரல்களும் எழுப்பப்படவில்லையென்றால், இன்று இலக்கியத்தின் திசை கண்டிப்பாக, தறிகெட்டுப் போயிருக்கும், அல்லது இலக்கியத்தின் இன்றைய நவீனத்துவம் சாத்தியப்பட்டிருக்காது!




சிவகாமியின் கவிதைகளுக்குள் வருவோம்! தன் தேசத்தை, தாய் நாடு என்று போற்றும் மக்களிடையே தன் உடலை ஒரு தேசத்தின் நிலப்பரப்புடன் விரித்துப் புரிந்து கொள்ளும்  முழு வேகத்தையும் வேட்கையையும் அவர் இங்கு பதிவு செய்துள்ளார்! தோலின் வார்களால் இழுத்து, இறுக்கிக் கட்டப்பட்ட உடல் மட்டுமே அன்று, இந்த உடல்!’ என்பது ஒவ்வொரு  சொற்றொடரின் பின்னாலும் கூக்குரலிடுவது, கேட்கிறது. இது ஓர் அசாதாரண நிலை. தன் உடலையும்  சிந்தனையையும் தானே உந்தி உந்தி ஓடும், அகால நிலை.


புத்தனும் அப்படித்தான் உடலை இயக்கச் சொல்கிறான். பகுத்தறிவுச் சிந்தனை வேரூன்றிய நம் மண்ணில், நம் உடலும் அதில் வேர்விட்டிருக்கும் சிந்தனைகளும் எப்படி, தனிமைப்பட்டுப் போயின. அன்னியப்பட்டுப் போயின, எப்படி விதையெழும்பாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன என்று தொடர்ந்து அவன் உடலும் தீயாகக் கனன்றது. அப்படியாகக் கனலும் உடலின் பெருவெளியை, சிந்தனையின் உற்பத்தியிடமாக ஆக்கித் தந்திருக்கிறார், சிவகாமி.


எளிமையான சொற்களுடனும், அதிகார இயங்குமுறைகளைப் புதிய சொற்கோர்வைகளாக்கிய எழுச்சியுடனும் அவர் மொழியும் சிந்தனைகளும் கவிதைகளாகியிருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்களாக, இம்மண்ணில் தன்னை உயிர் தக்கவைத்துக் கொள்ளப்போராடும் சிந்தனையின் கருவாய், சிவகாமியின் சிந்தனை உயிர் நீர்ப் பாய்க்கிறது. அதே சமயம், அது சுணையாகவும் இருக்கிறது! புற வடிவில் தன்னைச் சுருக்கிக் கொண்டு, தன் அந்தரங்கத்தின் மறைவிடங்களில் ரகசியமாய் நீங்கள் வருடுகையில் அது உங்கள் சதைகளில் ஏறி சுணையைப் போலவே கடுக்கும்! நினைவுக்குள் பழுக்கச் செய்யும்! பிடுங்கியெறிய நீங்கள் போராட வேண்டியிருக்கும்! நினைவுகளுக்கு ஒருபொழுதும் சுகமளிக்காது! புண்ணுக்குச் சொறிந்து கொடுக்கும் சுகம் போல இருக்கவே இருக்காது!



கதவடைப்பு என்பது, ஒரு குறியீடாக இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மனத்தையும் குறிப்பிடுகிறது. அறைக்குள், காகிதத்தின் குறுகிய பக்கங்களுக்குள் அடைந்து கிடக்காது, சமூகத்தின் திறந்த வெளிகளில், சேரிகளில், நெடுஞ்சாலைகளில் ஒற்றையடிப்பாதைகளில் மனிதர்களை நோக்கிய அவரது பிடிவாதமான பயணங்கள் கொண்டு சேர்த்த உண்மைகள் இன்னும் அவர் ஒரு நூறு புத்தகங்கள் எழுதினாலும், தீராது என்பதை நான் அறிவேன். தமிழகத்தில், கடந்த காலத்தின் ஐம்பது வருடங்களில் அவரளவிற்கு மக்களை நோக்கிப் பயணம் செய்தவர் யாரும் இருக்கமுடியாது  என்பது இலக்கியவாதிகள் மறைத்து வைக்கும் உண்மை.  




இருந்தாலும், இத்தனிமனித விடயத்திலிருந்து புதிய குரல் தொனிக்கும் இலக்கியத்தின் தளத்தில் சிவகாமி அவர்கள் சொல்லவந்ததன் பொருளும், குரலும் இன்றைய இலக்கியத்தின் எந்தெந்தக் கதவுகளை உடைத்துத் தள்ளுகிறது என்று பார்க்கலாம்.

விடாது மழையிலும்
அடாது தொடர்வோம்
நாம் பேசிக்கொண்டிருந்ததையே
ஏனெனில்
வேலியின்றி விரிந்திருக்கிறது
நிலம்

தனிமனிதர்கள் அழிந்து போய்விடுகின்றனர். எழுத்தாளர் என்னும் முத்திரை நம்மைச் சுற்றிச்சுற்றி வரும் ஒரு நூறு பேருக்கு முக்கியமாகப் படலாம். அதுவே நமக்கும்  முக்கியமாகப் படலாம். அல்லது, ‘காலம் தாண்டி என் எழுத்தும், என் பெயரும் நிற்கும்’, என்ற நம்பிக்கையில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எழுதும் போதே சமூகத்திற்கும், சக மனிதனுக்கும், தனக்கும் உற்ற துணையாகி வெளிச்சத்தைக் காட்டாத எழுத்தினால் பயனென்ன?

சூல் எழுத்து என்ற கவிதையில்,
சூல் பதரென நல்லுழவன்
பிரித்தறிவானெனினும்
தற்காலிகமாகவேனும் தன்னை
நிலைநாட்டிக்கொண்டே உளது பதர்

…….   ……….  …………………  ………….
நனைத்து முகம்புதைக்கும்
காலத்தாவரங்களின் உணர்கொம்பு
வெறுப்பு குமிழ்கள் உடைய
ஒளிப்பூக்களென நெற்றி வருடும்
அவ்வெழுத்தின் கரங்களை
வாருங்கள் முத்தமிடுவோம்


களவு போன நீல ஆடைகளும், கானகமும் கவிதையின் உள்ளே முதிர்ந்த இந்திய அரசியலின் குறியீடுகள் காட்சி பெறுகின்றன. சிறிய சிறிய சொற்களால் அரசியலைக் கவிதைகளில் சொல்வதென்பது சாதாரணமான விஷயமில்லை. எழுதி எழுதிப் பார்த்துப் பல கவிதைகளுக்குப் பின் தான், ஆயிரம் சொற்களை இறைத்து விரயமாக்கியப் பின் தான் ஓர் அரசியல் நுணுக்கத்தைச் சொல்லில் ஆளும் திறனை அடையும் நவீன தமிழ்க் கவிதைக்கு மத்தியில், சிவகாமியின் கவிதை நேரடியாக ஒரு சொல்லையும் அதன் பின்னால் காலங்காலமாகப் புதைந்து கிடக்கும் நிழல் வரலாறுகளையும் அரசியல்களையும் உடைகளாகக் கவர்ந்து வரும் வீரியத்தைக் கொண்டிருக்கிறது.

அரசியல் கொட்டடிகளில்
பூந்தேக நரம்புகள் துடிதுடிக்க
செலுத்தப்படுகின்றன அபின் ஊசிகள்
போதையின் முதுமையில்
அழிகின்றது கானகத்து பசுமை


கவிதையோடு படிக்கும்போது, ‘போதையின் முதுமையில் அழிகின்றது கானகத்து பசுமை’ என்பதன் வரிகளில் அடங்கியிருக்கும் இழப்பின் திடமும் உருவமும் கனமானது! சிவகாமி தன் வரிகளில் சொல்லும் அதே அழுத்தத்துடன் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எனக்குத் தலைதூக்குகிறது.



கவிதையின் கூக்குரல் தனிமையானது தான்! தனிமையின் தீனமான குரல் அவருடைய எல்லா கவிதைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தன் இருப்பின், தனது சாத்தியப்பாடுகளின் முழுமையைக் கண்டுணரும் முயற்சியில் உருவாகும் மோனமே தனிமையாகிறது! அவர் சொல்ல வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகளுக்குள் ஒளிந்து கிடக்கும் காலாதீதத்தை, தன் சொற்களுக்குள் பொதிந்து கொடுக்க, இவர் விரிக்கும் தனிமை பெரிதும் உதவுகிறது. இந்த தனிமை பொதுவாகவே, பெண்கள் மீது திணிக்கப்பட்ட சாபம் என்றாலும், அத்தனிமையின் வேர்களையும் கிளைகளையும் கண்டுணர்ந்தவர்களுக்கு அது சாபமில்லை. தன் வாழ்வின் மீதான போதம், அது! அதை ஒளி குன்றாமல் வைத்துக் கொள்ளும் போராட்டத்தில் சிவகாமியின் எழுத்து கவிதை வழியாகவே தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது!  ’ஆம் என்றொரு உரையாடல்’, அவர் வாழ்க்கையின் அன்றாடத் தனிமையைச் சொல்லும் ஒரு கவிதை. அகத்தனிமையைப் பாதுகாக்கவும், புறத் தனிமையைச் சுட்டெரிக்கவும் செய்கிறது! அகத் தனிமையை அவரின் ‘விதையின் பிரசவம்’ கவிதைக்குள் உணரலாம். ‘விதையெழுப்புதல்’ பலரால் பலமுறை எழுதி சலித்துப் போன நிலையில், புதிய அர்த்தங்களுடன் உருப்பெற்றிருக்கும் இக்கவிதை, இத்தொகுப்பிற்கு விளக்காய் இருக்கிறது!


சதை திரட்சி விலகி கனி உலர்ந்தது
நிர்வாணத்தின் கரை தொலைவிலில்லை
மலரசம் காய்ந்த விதை
உலர்தலின் வருத்தமின்றி உதிர்கிறது
இறந்தவரின் தடயத்தை உரக்குழியாக்கி
விதைப்பையிலிருந்தும் விலகி
திடமான உதிரக்கட்டி உருள்கிறது
முளைத்தலில் பரவசம் ஆட்கொள்ள
உந்தி சுழன்று நிகழ்கிறது உற்சவம்
பிறவியின் துயர நடனம்
சூளுரை எதுவுமின்றி
தடித்த தடுப்பின் மறைவில்
கிளர்ச்சி கொந்தளிப்புடன்
வினையுடன் எழுகிறது உயிர்
மாமிச இரவு விழிப்புடன் அரவணைக்கிறது
மண் இளகி வழிவிட
ஆகாயம் ஈரத்துடன் விசிறிக்கொடுக்க
பெருமுளைப்பு நிகழ்ந்தது
பச்சைக்கனவு பலிதமென
சுற்றுச் சூழல் வாழ்த்த
நிர்வாணத்தின் கரை தொட்ட களிப்பில்
படர்கிறது நிழல் தரும் கிளை
மரம் வளர்த்த பேருவகையில்
கசிகின்றேன் நான்



அவ்வாறே இவரது இலக்கிய ஆக்கத்திற்கான கற்பனைகள், கற்பிதங்கள் காற்றாக அடைக்கப்பட்ட பலூன்களோ அல்லது நினைவுகளின் வெற்றிடங்களில் எழும்பி, கண் முன் அலையும் குமிழிகளோ அல்ல. தீராத வேட்கையினால் அயராது ஓடுகையில்  இவர் முன்னே விரியும் காட்சிகளும், முற்றி முதிர்ந்த பயிர்களுமே அவை! அக்கற்பனைகளைக் கடந்து போகும் நிர்ப்பந்தத்தையும் பந்தயத்தையும் தனக்குத் தானே வழங்கிக்கொள்கிறார்! இவர் பந்தயம், தன்னுடன் யாரும் ஓடிவருகிறார்களா என்று கடைக்கண்ணால் நோக்கும் வன்மமும், பின்னால் யார் யார் ஓடிவருகிறார்கள் என்று புறக்கண்களால் அளக்கும் அவநம்பிக்கையும் அற்றது.  தூய கற்பனைகளும் தரிசனங்களுமே இவர் ஓட்டத்தின் கால்களுக்கு ஊக்கமருந்துகள்!    


ககனப்பறவை


தமிழ் எழுத்தில் பல பெண் உடல்கள் பிறந்திருக்கின்றன. ஆண் படைப்பு மனோ நிலை ரசித்த, காமம் தோய்ந்த கண்களுடன் கண்டுணரப்படும் பெண் உடல்கள், பெண் படைப்பாளிகள் தம் உடலைக் கொண்டாட்டமாகவும் அதிகார ஆற்றலாகவும் மாற்றிக் கொள்ளத் துடித்த பெண் உடல்கள், கொண்டாட்டத்திற்கான வியப்பை நோக்கிக் காத்திருந்த பெண் உடல்கள், ஆண் அனுபவித்துக்கொண்டிருந்த அதிகாரக் கொண்டாட்டத்தையும், வன்ம மொழிகளையும் தம் உடலுக்கும் வரிந்து கொண்ட பெண் உடல்கள், போலியான, கற்பனையான ஆற்றல்களை உடுத்திக் கொண்ட பெண் உடல்கள், படிமங்களாகிப் போன, உயிரிழந்த பெண் உடல்களைத் தோண்டித் துருவி எடுத்து தற்காலப் பெயரைத் தனக்குச் சூட்டி மகிழும் பெண் உடல்கள் இவை எல்லாவற்றிற்கும் அப்பால், புதிய வலிமையான உடல்களை, தன் நுட்பமான சிந்தனையின் வடிவமைப்பினால், சிவகாமி, தன் ‘கதவடைப்பில்’  உருவாகியிருக்கிறார்.


சக மனிதனின் உடலிலிருந்து அதிகாரத்தின் கயிற்றால் தொடர்ந்து உழைப்பை இறைக்கும் உடல்களாக, இயல்பூக்கம் நிறைந்த உடல்களாக, வன்மங்களைச் செய்து பயிலும் உடல்களை அடையாளம் காட்டும் உடல்களாக… என உடலின் மாண்பை முற்றிலும் எதிர்த்திசையில் சொல்கிறது. உடலை வெளிச்சப்படுத்தும் சரியான தருணத்திற்கு எழுத்தைக் கொண்டுவந்து சேர்ந்திருக்கிறார்! வெளிச்சம் விழவேண்டிய உடல்கள் இங்கு, இவர் வரிகளில் அணிவகுத்து நிற்கின்றன!


அடையாள நெடுங்கதவுகள்
………  ……… ………….
தனக்கான சாயலற்ற அடையாளம் கேட்டு
பூட்டியிருக்கும் அதிகாரக் கதவுகளை
பிறந்த குழந்தையின்
தலை முட்டிக் கொண்டேயிருக்கிறது



இன்றைய விடுதலை உணர்வின் அடிப்படையான கேவல் தான் இது! ‘அடையாள அரசியல்’ காயடிக்கப்பட்டு, பதராகிப் போனதொரு இன்று, இந்த வரிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.  

கருணை

………………… ………….. …….
விந்துக்களின் தடயமின்றி
துப்புரவாய் கழுவப்பட்டுள்ளது
கர்ப்பவாசலும் கருவறையும்
அசாதாரணமாக
விரிய திறந்திருக்கும்
அவ்வாசல் வழி
வந்து சென்றவர் யாரென
துப்பேதும் கிடைக்கவில்லை



கோயில் வடிவமைப்புகள், சாதி அதிகார வடிவமைப்புகளை நேரடியாகக் குறிப்பிடுவன. ’கருணை’ கவிதையில் அவர் சொல்வதும், பெண் உடலின் மீது செலுத்தப்படும் அதிகார வன்முறையை கோயில் வடிவமைப்பிலேயே சொல்லியிருக்கிறார். கோயிலை, பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண் உடலாக ஆக்கியிருக்கிறார்.



பெண்கள்
உடலின் ஒரு பகுதிக்கு
தீ மூட்டிக் கொண்டாள் அவள்
இதயத்திலிருந்து கொங்கைக்கு மாற
எரிந்தது மதுரை வானவர் வாழ்த்து
பின் வந்து சேர்ந்தது

உடல் துறக்கிறாள் வேறொருத்தி
உதயணன் விசை தவறி
பசிப்பிணி சாக்காடறுக்க
கரம் சேர்கிறது ஆபுத்திரனின்
அமுத சுரபி

சுட்ட பழத்தை ஊதி பசியாறி
அறநெறி அரசனுக்குக் கற்பித்து
உப்புக்கும் பருப்புக்கும் பாடிய
மக்கள் கவிக்கு பரிசு
அதியமான் கனி

அன்பே
அந்தியின் சோபையற்ற கண்களால்
குப்புறப்படுத்து வானம் பார்க்க விழையும்
உன் அசைவுகள் கவனித்தும்
மேலும் எரிந்து கொண்டு தான் உளது
இச்சிறு மெழுகுவர்த்தி



இதில் சிறு மெழுகுவர்த்தி தன்னிடம் தக்கவைத்திருக்கும் தீயை, மீண்டும் முதல் வரிக்கும் சென்று, அங்கு அவர் குறிப்பிட்டிருப்பது போல,   ’உடலின் ஒரு பகுதிக்குத் தீ மூட்டிக்கொள்ளும், அது பின் அவள் கொங்கைக்கு மாறும். பின் அது விசை தவறி வேறிடம் பாயும். அது அதியமானிடம் கனியாகும்!’  இதுவே அவர் தன்னிடம் காத்து வைத்திருக்கும் தீயாகச் சொல்வதும்! அது ஒரு பொதுவான தீ தான்! குப்புறப்படுத்து வானம் பார்க்க விழைபவர்கள் சுரணை கொள்ளும் போது, இச்சிறு மெழுகுவர்த்தியிலும் இருந்து தீ, பரவும்!’


அதிகாரத்தின் அசைவுகள்
பீறிட்டெழும்
விலங்குணர்ச்சிகளால் ஆனவை
அதிகாரத்தின் அசைவுகள்

-----  ------ -------
உருவிக்கொள்ள இயலாதவாறு
ஊசிகளின் காதுகளில்
நுழைக்கப்பட்டு விட்டோம்
பொருந்தாத போட்டிகளில்
விதிக்கப்பட்ட வரிசைகளில் இருந்து
இலக்கற்ற இலக்கணத்துடன்
வாட்களை உருவுகின்றோம்
அஹிம்சை  இம்சை
வேறுபாடின்றி

-------- --------- -------
அதிகாரத்தின் விதிகளையும் அது இயங்கும் முறைகளையும் மொழிப்படுத்த இப்படிக் கவிதைகளில் ஆக்கிவைத்தால் தான் அது நிரந்தரத்தன்மையை அடையும் போலும்! கட்டுரைகளிலும் புனைவுகளிலும் எழுதி எழுதி வாசித்துப் புரிந்து கொள்ளாத  மரத்துப் போன ஆதிக்க மண்டைகளிடம், ‘ஊசிகளின் காதுகளில் நுழைக்கப்பட்டுவிட்டோம், உருவிக்கொள்ள இயலாதவாறு!’ என்ற வரியாவது புரிதலை ஏற்படுத்தி, அவர்களின் நினைவுச் சடவுகளின் கணங்களிலேனும் பொறி தட்டிக் கலங்கச் செய்யட்டும்!


எனதாயிராத உடல்

எனதாயிராத என்னுடலை
விக்கிரமாதித்தனென சுமப்பதில்
மரங்களிலிருந்து மலர்கள் உதிர்கின்றன
எப்போதும் கத்தியில் நடப்பது போல்
கவனமாய் வகைபிரிக்க இயலாமையால்
வார்த்தைகளின் தடுமாற்றங்களில்
உடைகிறது இவ்வூன் குடம்

செப்பனிடும் வசதி குறைவினால்
மிருகத்தின் பிளிறல் மிக அருகில் கேட்டு
பதறுகிறது பிறப்பித்த உடல்
என் பேச்சு கேட்குமாறு என்னுடலை
எவ்வளவு வற்புறுத்தியும் அது
எனக்கெதிராகத் திரும்பியிருப்பதை
அறிவிக்கிறது கொம்பு முளைத்த தலை

முழுதும் என் படைப்பல்லாத உடலை
நான் மட்டுமே சுமக்கும் படி
சபிக்கப்பட்டிருப்பது கண்டு
வியந்து தான் போகின்றேன்


இத்தொகுப்பின் நிறைவுக் கவிதை, இது!  ‘முழுதும் என் படைப்பல்லாத உடலை, நான் மட்டுமே சுமக்கும் படி..’ என்ற வரிகள் போதும், சிவகாமி அவர்கள் எம்மாதிரியான உடலைப் படைப்பு உடலாக ஆக்க முயல்கிறார் என்பதற்கு!



ஏனெனில், பெண் பாலியல் சுரப்பிகள் வற்றிப் போகும் அளவிற்கு அதற்கு பாலுக்கம் தந்த எழுத்துக்களையும், இன்றைய பெண்படைப்பாளிகள் தன் பாலின உறுப்புகளுக்கு மொழியின் வழி கட்டுக்கடங்கா இன்பத்தைத் தானே கொடுத்துக்கண்ட  எழுத்துக்களையும், ஊசி போன்ற இவரின் கூர்மையான எழுத்து முனை, போலியான உடலரசியலையும், செயற்கையாகச் செய்யப்பட்ட உடலரசியலையும் ஓர் அறுவை மருத்துவரின் கத்தியைப்போல அம்பலப்படுத்துகிறது.



உடலரசியலின், புதிய பாதையென இக்கவிதைகளைத் தெரிவுசெய்ய கொள்ளவேண்டும்! முள் மண்டி அடைத்துக் கொண்டிருக்கும்   தற்கால உடலரசியலின் பாதையை, செம்மைப்படுத்துகிறது, இவரது பார்வை! பெண்ணியம் இந்தியாவில் ஒரு பெரும் இயக்கமாக மலராததற்குக் காரணம், இப்பார்வை இன்மை என்பது எந்தத் தருணத்திலும், படைப்பாளிகளின், இயக்கவாதிகளின் அனுமானமாகக் கூட இருந்ததில்லை! இந்நிலையில், சிவகாமியின் இக்கூக்குரல், தமிழகத்தின் பெண் உடலரசியலை முற்றிலும் நேர்மாறாக்குகிறது! சிவகாமியிலிருந்து திரும்பி பின்புறமாகப் போகலாம்! அல்லது, பெயர் பட்டியலை தலைகீழாக்கலாம்! இதை ஒரு தரமாணியாக வைத்துக் கொள்ளலாம்! அல்லது, இங்கிருந்து தொடங்கலாம்!



கவிதைகளுக்கு மத்தியில், ஆங்காங்கே சிந்திக் கிடக்கும், பொட்டுப் பொட்டாய் மலர்ந்து நெஞ்சின் வெளியில் துடிக்கும் காதல் கவிதைகள், அன்பைக் கடலாக்கி அதன் மத்தியில் நம்மை இருத்துகின்றன! உலகின் ஒட்டுமொத்த தனிமைச் சாகரத்தில் தீங்காதலினும் சிறந்த தோணி எது என்பதை அதன் ஒட்டுமொத்த அழகும் குலையாமல் வழங்குகின்றன!



இத்தொகுப்பில் சிவகாமி, ஒரு ககனப்பறவையென தன் குரலை எழுப்பியிருக்கிறார்.   அடர்த்தியான அதன் அதிர்வுகள் மனித மனங்களை ஊதலென ஊடுருவி, ககனத்தின் எதையும் பொருட்படுத்தாமல் பேரலையென எல்லாவற்றையும் சரித்து, தன்னந்தனியே நீந்துகிறது!  அதன் மெளனமான  குரல், இதயத்தை வாளாய் அறுக்கிறது! ஊர்க்குருவிகளோ கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன!





குட்டி ரேவதி

சென்னை
27.09.2011