நம் குரல்

தேநீர்க்கோப்பை




கோழிகளின் கழுத்தைத் திருகித் திசையெங்கும் குருதி தெளித்த சடங்கின் பின்பானதொரு நம் அதிகாலையில் அதன் வரலாறு தொடங்குகிறது. முன்னிரவு முழுதும் உறக்கமற்றுப் போன மயக்கம் நிறைந்த கண்களில் சூடேற்றப் பருகப்படும் பானம் அது. கொதிக்கும் வெந்நீரின் தளதளப்பில் இலைகள் சுருண்டெழுந்ததைப் போல இரவு உயிர்கொண்ட வாழ்க்கை நமது. மலையின் கூதிருக்கு அடங்க மறுத்த நம் பெருங்கனவுகள் தாம் அவ்விலைகளுக்கு உதிரம் தந்தன. வெயிலின் ஒளி உத்திரங்கள் சரிந்த குன்றுகளின் மீது வண்ண இறகுகள் புடைத்த பறவைகளைப் போல அதிகாலை ஏகிச் சேர்ந்த நம்மை தேயிலைப் புதர்கள் இடுப்பை அணைத்துக் களித்தன. தளிரிலைகள் பனிப்பொழுதின் உதடுகளாகி நடுங்குவது கண்டு நாம் பதற்றமுற்றோம். மதிய வேளை மலையாகி அசந்தோம் ஆவியெழும் அப்புதர்கள் மீது. வானம் கண்ணில் நிறையவும் மேக மதலைகள் நம் உடல் மீது தவழவும். பருகத் தயாராய் இருக்கும் கொதி தேநீர் தளும்பும் கோப்பையாய் இருந்த மாலையொன்றில் மலையை விட்டிறங்கி பாலிதீன் இரவுக்குள் மீண்டும் குடிபுகுவோம்.


குட்டி ரேவதி

1 கருத்து:

மாற்றுப்பிரதி சொன்னது…

இப்போதுதான் உங்கள் வலைத்தளம் பார்த்தேன்.அருமை. மாற்றுப்பிரதிகளை எமது வலைத்தில் சந்திக்கலாம்.www.maatrupirathi.tk