நம் குரல்

டென்மார்க் பயணம் 4 - தனிமையின் சாலையும் நோக்கமிலாப்பயணமும்!


சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் சந்தித்தப் பெண்ணிய எழுத்தாளர், Mette என்பவரை டென்மார்க்கில் இந்தப்பயணத்தின் பொழுது மீண்டும் சந்தித்தேன். இங்கு மிகவும் புகழ்பெற்ற, ஊக்கமிக்கப் பெண்ணியலாளர். எந்த வேண்டுகோளையும் முன் வைக்காமலேயே, அவரே முன் வந்து, பல இடங்களுக்கும், கலைக் கண்காட்சிகளுக்கும் அழைத்துச்செல்கிறார். என்னுடைய ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாகக் கழிகிறதா, இந்தக்குளிரை நான் எவ்விதம் தாங்குகிறேன் என்று அக்கறை எடுத்துக்கொள்கிறார். என் பயணம் முழுதும், வெவ்வேறு இடங்களில் பெண்ணிய விவாதத்தையும் கவிதை வாசிப்பையும் ஒருங்கிணைத்து, அவற்றை சிறப்புற வடிவமைத்துள்ளார். குறிப்பாக, பிளாக் டைமண்ட் நூலகத்தில் அவர் ஒருங்கிணைத்திருந்த கூட்டமும் உரையாடலும் பொருளுடையதாக இருந்தது.
நேற்று ஒரு நாள் முழுதும், இருவரும் கோபன்கேஹனின் மையச் சாலைகளில் எந்த நோக்கமுமின்றி அலைந்து திரிந்தோம். குளிர் மிகுந்த அறைகளில் இருந்து, சூரிய ஒளி வீசும் மையச்சாலைகளில் திரிவதும், சூடான பானங்களையும் பருகித்தீர்ப்பதும் அருமையான அனுபவமாக இருந்தது. நீளமான உரையாடல் கொள்ள ஏதுவாக இருந்தது. ஒரு பெரிய எழுதுபொருள் கடைக்குச் சென்று அங்கு விற்பனைக்கு இருக்கும் எல்லா நுட்பமான எழுது பொருள்களையும் பார்த்தோம். டேனிஷ் பண்பாட்டின் கலைத்தன்மை சார்ந்த வரைபொருட்களாக அவை இருந்தன. பொதுவாக, இம்மாதிரியான வெளிநாட்டுப்பயணங்களில் சந்திக்கும் அயல்நாட்டுப் படைப்பாளிகளை, வாழ்க்கையில் மீண்டும் சந்திப்பது என்பது அரிதாகிவிடும். அதற்கான பொதுப்புள்ளிகளும் இருக்காது. ஆனால், இவரை மீண்டும் சந்திக்க வாய்த்தது, எழுத்தின் பொதுத்தன்மையை உணர்த்துவதாக இருந்தது.
மிகவும் பழமையான Gyldendal Publishing House - க்குச் சென்றோம். அது, அவர் தன் நூல்களுக்காகப் பணியாற்றிய இடம். ஒரு தொழிற்சாலையைப் போல் இருக்கிறது. டென்மார்க்கில் உருவாக்கப்படும் நூல்களுக்கு மையமான இடம். அதன் இயக்குநர் Johannes Riis அவர்களைச் சந்தித்தேன். டென்மார்க் நூல்பதிப்பு வெளியில், மிகவும் முக்கியமான மனிதர் என்று கூறினார்கள். Mette - வும் நானும், பதினெட்டாம் நூற்றாண்டின் கட்டிடங்கள் இன்னும் சிதைவுறாமல் இருக்கும் பல சாலைகள் வழியே நடந்து சென்றோம். அயல்நாடுகள் மீது பெரிதான வியப்பு என்பது எப்பொழுதுமே இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், என் கவனமும் எண்ணமும், நம் நாட்டிற்கும் இந்த நாடுகளுக்குமான இடைவெளி என்ன என்பதில் தான். அப்படிப்பார்த்தால், பொருளாதார நிலையிலும் சுகாதாரத்திலும் அவர்கள் உயர்வாக இருப்பதாகத் தெரிந்தாலும், பல வகைகளில் அது உண்மை இல்லை. நாம் அன்றன்று சமைத்து உண்பவர்களாக இருக்கிறோம். உடல்நலப்பண்பாட்டின் வேர் இன்னும் நம்மிடம் இருக்கிறது. ஆனால், இங்கு பெரும்பாலான உணவுப்பொருள்கள், பதப்படுத்தப்பட்டவையாக அதற்கான ரசாயனங்கள் சேர்ந்தவையாக இருக்கின்றன.
வியப்பை ஊட்டும் ஒரே விடயம், தொன்னூறு சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் சைக்கிள் பயன்படுத்துவது தான். இது, கண்டிப்பாக, சுற்றுச்சூழல் அக்கறையினால் இல்லை. அவர்கள், பண்பாடு, நாகரிகம் என்று நம்புவதன் குறியீடாக சைக்கிள் மாறியிருக்கிறது. தினமும், தோராயமாக, முப்பது கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்டுவதாக என் தோழி கூறினார். இங்கு சராசரி ஆயுள் 90 வயது வரை இருக்கலாம் என்று கூறினார். இன்னொரு முக்கியமான விடயம், இங்கு எங்குமே ஆங்கிலத்தில் எந்தப்பெயர்ப் பலகையையும் அறிவிப்பையும் பார்க்க இயல்வதில்லை. டேனிஷ் மொழியில் தான் முழுமையும்.
திருவண்ணாமலையிலிருந்து டென்மார்க் வந்திருந்த பிரியமான நண்பர் ஜேபி -யை, அவருடைய சகோதரி பிரியா வீட்டில் சந்தித்தேன். பிரியா, சுடச்சுட கோழிபிரியாணியும் எலுமிச்சம் ஊறுகாயும் தயார்செய்துவைத்திருந்தார். சற்றும் எதிர்பாராதது. அதுவரை, இத்தகைய உணவை எதிர்பார்த்திராத நான், அதை உண்ணும்பொழுது தான் மீண்டும் உயிர்கொள்வதைப் போல உணர்ந்தேன். இன்னும் சில நாட்களைக் கடத்துவதற்கு, வீட்டை மறந்து இருப்பதற்கு இது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அரிசி உணவு இல்லாமல் வாழ்வது, நம் நினைவுகளுக்குக் கூடச்சாத்தியமில்லை போல. இங்கே ஒவ்வொரு நாளும் இருக்கும் ஒவ்வொரு விதமான காலநிலை, நம் தமிழ்ப்பருவத்திற்குக் கொஞ்சம் அசாதாரணமானது தான். எதிர்பாராமல் திடீரென்று மழை அல்லது அதிகக் குளிர் அல்லது சுள்ளென்று வெயில் என்று காலத்தை மூடிக்கொள்கிறது. ஆனால், பரந்த வானமும், மேகமும், ஒளியின் தன்மையும், நீண்ட பகலும் புத்தம்புதியது. இங்கே கோடைக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாம். இப்பொழுது, அவர்களே கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி ஒரு மணி நேரத்தைக் குறைத்துக்கொண்டு எதிர்வரும் பருவத்தைத் தொடர்வார்கள் என்று சொல்லும் பொழுது, ஒட்டுமொத்த இந்த வாழ்வும், ஒரு புனைவிற்குள் நழுவிச் சென்ற உணர்வு ஏற்பட்டது. காலம், மனிதன் உருவாக்கிக்கொள்வது.
இன்று தனியே சாலையில் இறங்கித் திரியும் யோசனை தலையெடுத்துள்ளது. ஏற்கெனவே அப்படி சென்று இரண்டு முறைகள் தொலைந்து இருப்பிடம் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்று மீண்டும் தொலைந்து போகும் திட்டம்!



குட்டி ரேவதி

டென்மார்க் பயணம் 3 - இரவும் உறக்கமும் காலக்குழப்பமும்!





மார்க்வெசின் 'தனிமையின் நூறாண்டுகள்' நாவலிலும், யசுனாரி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகளின் இல்லத்திலும்' வரும் தூக்கத்தனிமையும் இரவும் தூக்கமின்மைப் பழக்கமும் சேர்ந்த கலவையான உணர்வுகள், அந்நாவல்களின் புனைவுலகங்களுக்கு ஆதாரமாகின்றன. 'நேஷனல் ஜியோகிரஃபிக்' பத்திரிகை சில வருடங்களுக்கு முன், தூக்கம் பற்றிய ஒரு சிறப்பான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், தூக்கமே வராத இரு மெக்சிகோ சகோதரிகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது. இக்கட்டுரை தரும் அனுபவத்தையே, 'தனிமையின் நூறாண்டுகள்' நாவலிலும் என்னால் நுகரமுடிந்தது. தூக்கம், ஒரு மரபணுப்பழக்கமா அல்லது தனிமனிதக் குணமா என்று கேட்டால் பெரும்பாலும் தனிமனித வழக்கம் தான் என்று தோன்றுகிறது.

சதத் ஹசன் மாண்ட்டோவின் ஒரு சிறுகதையில், பாலியல் தொழிலை ராப்பகலாகத் தொடர்ந்து செய்யவேண்டியிருக்கும் ஒரு பெண், ஒரு கட்டத்தில் அவளை நிர்வகிப்பவனே வந்து அவளை அழைக்கும் போது, அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து அவனைத் தலையில் அடித்துக்கொன்று போட்டுவிட்டு நிம்மதியாக உறங்குவாள். காலக்குழப்பம், முதலில் தாக்குவது உடலைத் தான். 'ஸ்பேஷ் ஷிப்பில்' பயணித்துப் பார்த்தல், இந்தத் தாக்கத்தை இன்னும் அதிகமாக உணரமுடியும் என்று நினைக்கிறேன்.

என்னை ஒட்டி இருக்கும் சென்னை நண்பர்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்குத் தான் திட்டமிடுகிறார்கள். அதன் பின் வாழ்க்கை இரவு 2 மணி வரை நீளும். அதிகாலையில் பெரும்பாலும் இவர்கள் யாரையும் தொலைபேசியிலோ ஏன் நேரிலோ கூடப் பிடிக்கமுடியாது. இரவு நேரங்களில் தீவிரமாகவும் மிக விழிப்புடனும் கவனத்துடனும் வேலை செய்யும் படைப்பாற்றல் மிக்கவர்களுடன் வேலை செய்ததில் அறிந்தது, அவரவர் உடல் நலத்திற்கும் வேலைசெய்யும் முறைக்கும் ஏற்ற தூக்கம் அவசியம் என்பதே. அதுவே, அவரவரின் படைப்பாற்றலுக்கு ஆதாரமாக இருக்கிறது. விமானப்பயணம் தரும் உடலியங்கியல் குழப்பத்தைத் தவிர்க்க, வந்து தரையிறங்கியது 'முதல்' பகல்வேளையைத் தூக்கமின்றிக் கடப்பது தான். பகல் நேரம் நீளமானதாக இருப்பதால், தூக்கத்தைத் தவிர்ப்பது சிரமமாக இருக்கும். என்றாலும், இரண்டொரு நாள்களில், காலமாறுபாட்டைப் பழக்கிக் கொண்டால், தனியாக இயங்குவது எளிதாகிவிடும். 

கோபன்கேஹன் கவிதை விழாவை ஒருங்கிணைத்த பெண்கள், நிகழ்வும் விருந்தும் முடிந்த அந்த இரவு, தூங்குவதற்காக அவரவர் இடம் நோக்கி விரைந்ததைப் பார்க்க தூக்கத்திற்கான பசி போன்று அது இருந்தது. தூக்கம், மனதின் பாதாளம் போன்றது. கண்டுபிடிப்புகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் கவிதைக்கும் புனைவிற்கும் கற்பனைகளுக்கும் தூக்கம் தான் மூலம். மனித மனதின் சிக்கலான வெளிகளின், உலைவுகளின் அழுத்தத்தை, அவரவர் கனவுகளில் காணும் படிமங்கள் வழியாகவே தீர்த்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். மனித மனவெளி, அந்த அளவிற்கு, தன்மயமானது. 

என் பள்ளி நாட்களில், குறிப்பாக, பரீட்சைக்குப் படிக்கும் நாட்களில் என் அம்மா தான் நான் தூங்கும் நேரத்தைத் தீர்மானிப்பவராக இருந்தார். அதிகாலையில் எழுப்பிவிடுவது அல்லது பரீட்சை முடிந்த நாட்களில் தூங்கும்பொழுது, இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்வது என்று. இன்று, என் தூக்கத்தை நான் ஒருவரே முடிவு செய்யும் விடயமாக, மிகவும் விடுதலையான ஒன்றாக மாறிவிட்டது. பல சமயங்களில், தொடர்ந்து வேலை செய்துவிட்டு, திட்டமிட்டு நேரம் ஒதுக்கித் தூங்குவதும் உண்டு. பெரும்பாலும், இரவு தான் எழுத வசதியானது. இரைச்சலற்ற சூழல், எழுத வசதியாக இருக்கும். கனவின் வெளி போல மெளனமாக, குரலற்று இருக்கும். இப்பொழுது நான் தங்கியிருக்கும் Amagerbro என்ற இடம், சிறிய சத்தமும் இல்லாமல் இருக்கிறது. எப்பொழுதும் இரவு போல் இருக்கிறது. சூரியனும் பறவைகளும் சத்தமில்லாமல் வந்து போகின்றன. இப்பயணத்தில் ஒரு நாள், கடலின் கரை சென்று பார்க்கவேண்டும், அலைகளாவது சத்தமிடுகின்றனவா என்று.



குட்டி ரேவதி

டென்மார்க் பயணம் 2 - உணவும் சுவையும்!





உணவு என்பது பசியாற்ற மட்டுமே இல்லை, தகவமைவிற்கான விடயமும் கூட. டென்மார்க்கில் நடுத்தர வசதியானவர்களுடன் தங்கியிருக்கிறேன் என்பதால் அவர்கள் உண்ணும் உண்ணவும் காணவும் வாய்ப்பிருக்கிறது. பிரெட், பேக்கரி வகைகள், பழச்சாறு, பழத்துண்டங்கள், முழுக்காய்கறிகள், அவித்த முட்டை, தேநீர், காபி, சாசேஜுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சித்துண்டங்கள் என பரவலான வகையை உண்ண வேண்டியிருக்கும். இங்கு இப்பொழுது உள்ள குளிருக்கு, அதிகப் புரதச்சத்துத் தேவைப்படும் உணவு தேவைப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் தரங்கம்பாடியில் சந்தித்த டேனிஷ் எழுத்தாளர் மெதே என்பவரை மீண்டும் இங்கு சந்தித்தேன். கவிதை குவித்த விவாதத்திற்குப் பின், அந்த விவாதம் அருமையான ஓர் உணவைக்கோருகிறது என்று கூறி உடனிருந்த கவிஞர்களையும் அழைத்துச்சென்று விருந்து அளித்தார். அராபிய வகை உணவுக்கடை. பின்னணியில் அராபிய இசை ஒலிக்க, உணவருந்தினோம். அராபிய உணவு வகைகள், இதர ஆங்கில உணவு வகைகளைப் போல தட்டையான சுவையுடன் இருப்பதில்லை. விரும்பும் படியான புளிப்பும், உவர்ப்பும் கலந்து காய்கறிகளும் கலவையாக்கப்பட்ட தழைகளும் கோழி இறைச்சியும் இருந்தது. வெவ்வேறு வகையான உணவு வாங்கிப்பகிர்ந்து கொண்டோம்.

இந்நகரத்தில், உணவின்றி வருந்துபவர்களை நான் இன்னும் பார்க்கவில்லை. இதற்கு நகரத்தின் வேறுபக்கத்திற்குப் போகவேண்டும் என்று நினைக்கிறேன். பொதுவாக, பணக்கார வீடுகள், இருக்கும் பகுதிகளில் குடிசைகள் இருப்பதையோ வறியவர் இருப்பதையோ அரசுகள் விரும்புவதில்லை. பணக்காரர்களின் காட்சிகளில் கூட ஏழைகள் தென்படக்கூடாது என்பதற்காக, சென்னையில் எத்தனை சேரிகள் அழிக்கப்பட்டன என்பதை நாம் பார்த்திருக்கிறோம் தானே! இங்கு அரிசி உணவை அரிதாகவே உண்ணுகின்றனர். என்றாலும், நேற்று கவிதை விழா அரங்கில், உணவு சமைத்த நண்பர் ஓடிவந்து, தமிழ்நாட்டின் சாம்பாரை முயற்சித்திருக்கிறேன். சுவைத்துவிட்டுச் சொல்லுங்கள் என்ற ஆவலுடன் சொன்னார். நிறைய சோயாபீன்சு, பீன்சு, உருளைக்கிழங்கு போன்றவற்றுடன் பல வகை பருப்பு கலந்து செய்யப்பட்டிருந்தது. நமது வகை மசாலாவின் சுவை இல்லாமல் இருந்தது. அத்துடன் வறுத்த முந்திரிப்பருப்புகளும் கலந்து இருந்தது.

என்றாலும், உணவு குறித்த என் மனத்தடைகள் அகன்றது இருளர்களுடனான பயணத்தின் பொழுதும், களப்பணியின் பொழுதும் தாம் என்று வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்கிறேன். அவர்கள், வாழ்க்கை போகும் வழியில் கிடைக்கும் உயிரினங்களை, கிழங்குகளை அவித்து உண்ணுவார்கள். உணவென எது கொடுத்தாலும் உண்ணும் வழக்கம் அவர்களிடமிருந்து வந்தது. என்றாலும், அயல்நாடுகளின் கடைகளில் பார்க்கும் காய்கறிகள் அளவுக்கு மீறிப் பெருத்து, ஏதோ வடிவவைத்து செய்துவைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இதை உண்ணும் மனிதர்களும் அவ்வாறே ஊதிப்பெருத்து, மரபணு ஊட்டம்பெற்று, சொந்தமாய் இயங்கும் தகுதிகளை, மனிதக்கூறுகளை இழந்தவர்களாக ஆகின்றனர் என்று தோன்றுகிறது. உணவின் மீதான நம் விருப்பமும் மனத்தடையும் நம் பண்பாட்டு வழக்கம் என்றாலும் பலவகைகளில் அது அதிகாரம் சம்பந்தப்பட்டதும் கூட!

ஒருமுறை, பயணத்தின் பொழுது கண்டெடுத்த ஃபேஷன் பத்திரிகையில், ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ஒரு கண்ணாடிக்கோப்பையில் துண்டித்துவைக்கப்பட்டிருந்த மனிதக் கட்டை விரல். அது ஒரு புதியவகையான சீமைச்சாராயத்தில் ஊறிக்கொண்டிருந்தது. அதன் விலை, பல இலட்சங்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. முதலாளித்துவத்தின் அடிமைச்சிந்தனைக்கான குறியீடாகக் கண்டேன். உணவின் சுவையும் பெருத்த அரசியல் அடிமைச்சிந்தனையின் ஊக்கம்பெற்றது தான். உலகமயமாக்கலுக்குப் பின், எல்லா வகையான உணவுகளையும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பெறமுடிகிறது. தனிப்பட்ட, பண்பாட்டு உணவை ருசிக்க, இங்குள்ள தூர ஊர்களில் இருக்கும், உலகமயமாக்கலின் கைகள் எட்டாத ஊருக்குத்தான் சென்று பார்க்கவேண்டும்!



குட்டி ரேவதி

அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்!


அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்.
அவர்களுக்கு ஆதாயங்கள் தரும்
வாயில்களின் கதவுகளை அடைக்கும் முயற்சியை
ஒருபொழுதும் நான் செய்யமாட்டேன் என்று சொல்லுங்கள்

எவருடைய அதிகாரங்களையும் அங்கீகாரங்களையும் ஆதாயங்களையும்
நான் அபகரித்துக்கொள்வது என்பது எனைப்போன்ற ஒருவரால்
இந்தத்தாய்த்திருநாட்டில் சாத்தியமே இல்லை என்பதால்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

எனது ஆதாயங்கள் லட்சங்களோ கோடிகளோ நெடுஞ்சாலைத் தட்டிகளோ இல்லை என்பதாலும்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்

நான் ஒரு தனிப்பெண் என்றும்
எனக்கு அதிகாரமாகி நின்று எவரையும் எதிர்க்கும் குடும்பமோ, சாதிக்குழுவோ, குருமடங்களோ
வாசகர்வட்டமோ இருந்துவிடுமோ என்றும்
எனைக்குறித்து அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

உலகின் எண் திசைகளை நோக்கியும்
ஏராளமான விமானங்கள் பறக்கின்றன என்பதால்
எத்திசை நோக்கியும் பறப்பதற்கான தொற்றலை
அவர்கள் செய்துகொள்ளளலாம் என்பதால்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

எனது பாதை மிகவும் அற்பமான சிறிய மைல்கல்களே கொண்ட
ஒற்றையடிப்பாதை என்பதால்
அவர்கள் ஏன் என் வழியில் நடக்கவில்லை என்று இறைஞ்சும்
தர்க்கமோ கேள்வியோ என்னிடம் இல்லை என்பதாலும்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

மேலும் எவருக்கும் நான் மனைவியோ தாயோ இல்லை என்பதால்
எவர் சொற்களுக்கும் செவிமடுத்து
எப்பொழுதேனும் வழக்கறிஞர் காகிதத்துடன் வந்து நின்று
என் வாழ்க்கை நிமித்தம் இவர்களிடம் என் நேரத்தைச் செலவிடுவேன் இல்லை என்பதாலும்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

எல்லோரின் பயணமும் ஒரே திசை நோக்கி இருக்கவேண்டியது இல்லை என்பதாலும்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்
பொறாமையை வெளிப்படுத்தும்போது
அதை அழகாய் நாகரிகத்துடன் வெளிப்படுத்தவும் தெரிய வேண்டும் என்பதால்
அவர்களின் பதற்றத்தை வெளியே காட்டவேண்டாமெனச் சொல்லுங்கள்

மனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மூளை இருப்பதாலும்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மூளை இருப்பதாலும்
ஒரே மூளை வழியாக ஒட்டுமொத்த மனிதக்கூட்டமும் சிந்திக்கவேண்டிய அவசியமில்லை என்பதால்
அவரவர் மூளை வழியாகச் சிந்திக்கும் பொறுப்பை மட்டுமே அவரவர் எடுத்துக்கொண்டால்
அவர்கள் நலமாய் இருப்பார்கள் என்பதால்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

இப்பதற்றத்தின் மூலம் எனை எதிர்க்க இருக்கும் சிறிய தகுதியையும்
அவர்கள் இழந்துவிடுகிறார்கள் என்பதால்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்

இப்பொழுதெல்லாம் ஒருவரை அழிக்க நீங்கள் கொல்லவேண்டியதில்லை
கொன்றால் அவர் இன்னும் புகழ் மிக்கவராக, அழியாதவராக ஆகிவிடுவார் என்பதால்
எது குறித்தும் அவர்களைப் பதற்றமின்றி இருக்கச் சொல்லுங்கள்

எவர் அளவிற்கும் நான் புகழ் அடையவிரும்பவில்லை என்பதாலும்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச் சொல்லுங்கள்
இது எல்லாவற்றிற்கும் அப்பாலும்
தத்தளிக்கும் கொந்தளிக்கும் மனித மனவெளிகளுக்கு அப்பாலும்
இசையின் தந்திகள் அதிர
செவ்வனே நேர்த்தியாய்
உலகம் அழகாய் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதாலும்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்!



குட்டி ரேவதி

டென்மார்க் 1 - இளம்வெயில்





டென்மார்க் பயணம், ஒரு சர்வதேச கவிதை விழாவிற்காக நிகழ்ந்தது. கோபன்கேஹனில் நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்கும் செல்ல, முப்பது நிமிடம் நடக்கவேண்டும். செல்லும் வழியெங்கும் பழம்பொருள் விற்கும் கடைகள். நவீனமயமான நகரத்தில் இத்தகைய கடைகள், பழங்காலத்தின் மீதான சொற்ப வியப்பைத் தக்கவைத்துக்கொள்வது போல் தோன்றுகிறது. நடைவழியின் ஒரு புறம் பெரிய ஏரி, ஒன்று இருக்கிறது. அதன் கரை வழியே நடந்து REVERSE International Copenhagen Poetry Festival நடைபெறும் மோலிகேட் என்னும் பகுதிக்கு வந்துசேருவேன். பேருந்திலும் வரலாம் என்றாலும், நான் கிளம்பி அறையிலிருந்து வெளியே வரும் நேரத்தில் பேருந்து இருக்காது. காத்திருக்கவேண்டியிருக்கும். குறைந்த அளவிலான பேருந்துகள் தாம் இருக்கின்றன. எப்பொழுது பார்த்தாலும் பெண்களும் ஆண்களும் அங்கும் இங்கும் சைக்கிள்களில் வேகவேகமாகச் செல்வதே நகரத்தின் பரபரப்பானதொரு காட்சி. லண்டனிலும் இதைக் காணமுடிந்தது. மக்கள் சைக்கிள் பயன்படுத்துவது, அதிகமாகி இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பையும் மனிதனின் ஆரோக்கியத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது, மனிதக்கூட்டம் ஒட்டுமொத்தமாகச் சைக்கிளுக்குத் திரும்புவதே சரியென்று தோன்றுகிறது. சைக்கிளுக்கென தனியாக ஓடுபாதை போட்டிருக்கிறார்கள். நடக்க நடைபாதையும் சைக்கிளுக்கு ஓடுபாதையும் பேருந்து மற்றும் நான்குசக்கரவாகனங்களுக்கு என தனியான சாலையும் ஒரே சமயத்தில் மக்கள் சிக்கல் இல்லாமல் இயங்குவதற்கு வாய்ப்பாக இருக்கிறது.
சென்னை போன்ற நகரத்திலும் பெரிய அளவில் சைக்கிளை நோக்கித் திரும்புவது அவசியம் என்று தோன்றுகிறது. ஆனால், நகரக் கட்டமைப்பு மிகவும் சிக்கலாக இருக்கிறது. போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகைகளை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். என்ன தான் புதிய பாலங்கள், சாலைகள் என்று வந்தாலும், நகரத்தின் போக்குவரத்தை ஒட்டுமொத்தமாக வடிவமைக்கும் பார்வையும் முயற்சியும் தாம் இச்சிக்கலைத்தீர்க்கும். மக்களுக்கு எளிதாகத்தரும் பணியை இன்னும் மாநகராட்சி செய்யவில்லை என்பதே நமது பிரச்சனை. ஆனால், தமிழ்நாட்டின் வாழ்வியல் முறைக்கும், நமது பொருளாதார நிலைமைக்கும் ஏற்ற வாகனம் 'சைக்கிளாகத்'தான் இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. கோடம்பக்கத்தில், காலையிலும், மாலையிலும் இளைஞர்கள் தங்கள் சைக்கிள்களில், சென்னை புறநகர்ப்பகுதிகளில் இருந்து நகரமையத்தை நோக்கியும் அங்கிருந்து வெளியேறிரும் விரைவதைப் பார்க்கமுடியும். நெருக்கடியான பேருந்து, கார்களுக்கு இடையே அவர்கள் சரசரவென்று தம் உழைப்பின் வெளியை நோக்கி இயங்கிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மட்டுமே பெருவாரியாக, சைக்கிளைப் பயன்படுத்துபவர்கள் என்று நினைக்கிறேன்.
பகலில் நடுக்கும் குளிர் இல்லை என்றாலும் இரவு கதகதப்பு தேவைப்படுகிறது. வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் கவிஞர்கள், அவரவர் நாட்டின் பருவநிலைகளைப் பற்றிப் பேசுகையில், டென்மார்க்கின் குளிர் போதாது, புழுக்கமாக இருக்கிறது என்கிறார்கள். நம் நாட்டின் கோடைப்பருவத்தை அவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்துக்கொண்டேன். பொதுமக்கள், சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அமர்ந்து காபி அருந்துகின்றனர். நேரடியான சூரியவெளிச்சம் அவர்களுக்கு உவப்பாக இருக்கிரது. வந்திருக்கும் கவிஞர்களில் பெரும்பாலோனோர், இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டதை நினைவுபடுத்துகின்றனர். அவர்கள் மேற்கொண்ட தமிழகப்பயணத்தையும் பேருந்துப்பயணத்தையும் குறிப்பிடுகிறார்கள். மெட்ராசும் மதுரையும் அவர்கள் அறிந்த இடங்களாக இருக்கின்றன. தமிழகத்தின் நிலக்காட்சிகளை வியப்புடன் வர்ணிக்கிறார்கள். கிறிஸ்டின் என்ற ஐஸ்லாந்து எழுத்தாளரும் நானும் எங்கள் எழுத்துப்பணிகள் குறித்து உரையாடல் நிகழ்த்தினோம். பார்வையாளர்களின் கேள்வியில் முக்கியமான ஒன்று: ஏன் உங்கள் நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை இவ்வளவு அதிகமாக இருக்கிறது?
பொதுவாகவே, இம்மாதிரியான வெளிநாட்டுப்பயணங்கள், அங்கு நமக்கு தமிழ் நண்பர்கள் இல்லை எனில், அவர்களுடன் நாம் தங்கவில்லையெனில், வேற்றுகிரகத்திற்கு வந்துவிட்ட மனநிலையையே கொடுக்கும். ஆனால், இது அமெரிக்கா, லண்டன், டென்மார்க் போன்ற மேலை நாடுகளில் தான் இம்மாதிரியான மனநிலை ஏற்படும். ஏனெனில், நகர வளர்ச்சியில் அவர்களுக்கும் நமக்கும் அப்படி ஓர் இடைவெளி. இன்னும் வளர்ச்சியைக் காணாத நாடுகளுக்குப் பயணிக்கும்பொழுது, என்னுடைய இந்த எண்ணம் மாறலாம். ஏதோ ஒருவகையில் அவர்களை நம்முடன் இணைத்துப் பார்த்துப்புரிந்து கொள்ளமுடியும்.


குட்டி ரேவதி

"ஹைவே"யும் பெண் விடுதலைப்படங்களும்!





வேலைப்பளு மிகுந்த ஒரு நாளுக்குப் பின் ஓடிவந்து விமானத்தில் ஏறியது போல் இருந்தது. இரவு என்பதால் நீள் தூக்கம். பின் விழித்தால், விமானம் தரையிறங்க, இரண்டு மணி நேரமே மிச்சம் இருந்தது. இது போன்ற பொழுதுகளில், திரையரங்கில் காணத்தவறவிட்ட படங்களைப் பார்த்துவிடுவதுண்டு. படங்களின் பெரிய பட்டியலில், 'ஹைவே' படத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து முடித்தேன்.

மிகவும் வசதியான குடும்பத்தில் இருந்து, அது மூச்சுமுட்டும் தருணத்தில் வெளியேறும் பெண் கடத்திச்செல்லப்படுகிறாள். அவள் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும்பொழுது,  இந்தியாவின் பிற நகர் வெளிகளில் கிடைக்கும் அனுபவம் அவளுக்குப் புது உற்சாகத்தைத் தருகின்றது. கடத்தப்பட்டவனின் மீதே காதல் கொள்கிறாள். 

கடத்தப்பட்டவனின் மீதே காதல் கொள்ளும் கதை, பழையது தான் என்றாலும், ஒரு பெண்ணின் அனுபவத்தை விடுதலையாகப்பார்க்கும் விதத்தில் இந்தப்படம் மாறுபடுகிறது. அவர்களுக்கு இடையேயான காதலும் மென்னயம் குறையாமல் ஒரு காவியப்பண்பை அடையும்படியாக, நுட்பமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

சமீபத்தில், நிறைய இளம் இயக்குநர்கள், பெண் கதாநாயகிகளை மையமாக வைத்த கதைகளைக் கைவசம் வைத்திருக்கின்றனர். ஒரு முக்கியமான காரணம், கதாநாயகர்களை வைத்து முதல் படத்தை இயக்குவது, இளம் இயக்குநர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. இரண்டாவது காரணம், நவீனப் பெண்களின் ஆளுமையைத் திரையில் காணுவது, புத்துயிர்ப்பான அனுபவமாக இருப்பதாகவும் இயக்குநர்கள் சொல்கிறார்கள்.

இரண்டு காரணங்களுமே முக்கியமான காரணங்கள் தான். ஆண்களை கதையின் நாயகர்களாக வைத்துச்சொல்லும் போது வலிந்து திணிக்கப்படும் கதாநாயகத்தன்மை, போலி உணர்வுகளும் வெளிப்பாடுகளும் கலந்த கதை வெளி என்று வீணே அலட்டிக்கொண்டு, தன் விரலைச்சுட்டுக்கொள்ளவேண்டியதில்லை.

பெண்களை மையமாக வைத்துச் சொல்லப்படும்போது, இயல்பாகவே யதார்த்தத்தை விட்டு விலக முடியாத திரைக்கதையை அது கோருகிறது. வலிமையும் புத்திக்கூர்மையும் கொண்ட பெண்களைத்தான் உண்மையாகவே ஆண்கள் விரும்புகிறார்கள் என்பதை இனியும் திரைத்துறையிலிருந்து புறக்கணிக்கமுடியாது. 

சமீபத்தில், இந்தியாவின் எல்லா மொழிகளிலும் கையாளப்படும் பெண் கதாபாத்திரங்கள் வெகுவாகவே மாறியுள்ளன.

இதற்கு அப்பால், நான் சொல்ல விரும்பும் விடயம்: இப்படத்தில் பணக்காரப்பெண்ணின் விடுதலையாகக் காட்டப்படும் விடயங்கள் எல்லாமே, இன்று நடுத்தரவர்க்க மற்றும் அடித்தட்டுப்பெண்கள் இயல்பாகவே அனுபவிக்கும் விடுதலை வாய்ப்புகள் தாம்.
எனில், நடுத்தரவர்க்க மற்றும் அடித்தட்டுப்பெண்களுக்கான விடுதலை என்பது என்னவாக இருக்கும் என்பதை ஏன் திரை இயக்குநர்களால் ஏன் கையாளமுடிவதில்லை?  

எனக்குத் தோன்றும் ஒரே காரணம்: இயக்குநர்கள், சமூகத்தின் மேட்டிமை குணங்களுடன் தாம் தம்மையும் இணைத்துப்பொருத்திப் பார்த்துக்கொள்கின்றனர் என்று தோன்றுகிறது. 
சமூக இயக்கங்களுடன் வெளிப்பாடுகளை, 'கிரியேட்டிவ்வாக' திரையில் கையாள, பரந்து பட்ட அனுபவமும் பக்குவமும் தேவைப்படுகிறது.

'வழக்கு எண்' படம் போன்ற படத்தை இங்கு கவனத்தில் இருத்தவிரும்புகிறேன்.


குட்டி ரேவதி

ஜாதியை ஒழிக்கும் வழி!


டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் "The Annihilation of Caste" நூல் மீண்டும் விவாதத்திற்கு வருகிறது.
இணை எழுத்தாளர் என்று எழுத்தாளர் அருந்ததிராயின் பெயர் போடப்பட்டு விற்கப்படுகிறது.
காலந்தோறும், ஒடுக்கப்பட்டவர்களின் அறிவாற்றலும் படைப்பாற்றலும் சூறையாடப்படுவதும் சுரண்டப்படுவதும் மறைக்கப்படுவதும் வழக்கம் தான்.
இன்னும் விட்டால், அம்பேத்கரின் போராட்டவரலாறு கூடத் தாங்கள் அறிந்ததே சரி என்று வாதிட்டு எழுதுவார்கள்.
என்றாலும், இந்நூல் விடயத்தில் இவ்வாறு நடக்கக்காரணம், இந்நூலை சமூகத்திற்குத் தேவைப்படும் அளவிற்கு நாம் பரவலாக இதை வழங்கவில்லை என்பது தான்.
அது பள்ளிப்பாடமாக இருக்கவேண்டிய மிகவும் அடிப்படையான சமூகவியல் நூல். சாதிச்சமூகம் என்ன மனநிலையுடன் இயங்கும், அது எப்படி மனிதர்களிடையே பிரிவினைகளை மட்டுமே ஆதரிக்கும் என அதில் அம்பேத்கர் முன் வைத்திருக்கிற தர்க்கமும் ஆய்வு விளக்கமும் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் போய்ச்சேரவேண்டியது.
இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கவேண்டிய நூல்.
கடந்த ஆண்டுகளில், கடந்த காலத்தில் எத்தனை இலக்கிய இயக்கங்கள், அமைப்புகள் இந்நூலை அச்சாக்கி வெளியிட்டு மக்களிடம் பரவலாக்கியுள்ளார்கள். எத்தனை படைப்பாளிகள் இதைப்பற்றிப்பேசி, எழுதியிருக்கிறார்கள். சாதி ஒழிப்பு பேசும் அமைப்புகள் கூட, இந்த நூலை ஒரு கள ஏடாகப் பயன்படுத்தியிருக்க முடியும்.
இந்நூலை அதிகமாக அச்சிட்டு வெளியிட்டது, 'தலித் முரசு' இதழ் மட்டுமே.
இவ்வாறு நமக்கான கருவூலத்தை நாமே செவ்வனே பயன்படுத்தத் தவறும்போது, இப்படியான சமூகத்தவறுகள் நடக்க நாமே வாய்ப்பாகிவிடுகிறோம் என்று தோன்றுகிறது.
நூலுக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடியாதபடி, நாமே அந்தூலை சமூகமயப்படுத்தி, பொதுவுடமையாக்கவேண்டும்! இதுவே இம்மாதிரியான சூழ்ச்சிகளை வெல்லும் வழி!



குட்டி ரேவதி

மனித உடல் பற்றிய அறிவு!


நாம் அறிந்திருக்கும் மனித உடல் பற்றிய நம் அறிவு போதாது.
ஆனால், முழு வாழ்வும் இந்த உடலிலேயே கழிக்கவேண்டியிருப்பதால், உயிர் கொண்ட உடல் இயங்குவதை அறிந்திருப்பது மருத்துவர்களின் பணி மட்டுமே இல்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமாகும்.
தனி மனித வாழ்வியல், உடலைத் தாக்கும் வகையறிந்து வாழ்வது இன்றைய சூழலில் மிக மிக அவசியமாகிறது.
மாசு சூழ்ந்த சுற்றுச்சூழல், போட்டி மனப்பான்மை, இலட்சிய வெறி கொண்ட வாழ்வு, தறிகெட்ட வாழ்க்கை முறை, அவசரமான பாதை, தன்னை வருத்துதல் போன்றவை முதலில் தாக்குவது உடலைத் தான். உடல் வழியாக, எல்லாவற்றையும் தான், நம்மைச்சுற்றியுள்ள எல்லோரையும் தான்.
உடல் இயங்குவதை அறிவது, எல்லா மனிதனுக்கும் தேவையான அடிப்படை அறிவாகவே இருக்கிறது. ஆனால், நம் நினைவில், அது 'ஊத்தைக்குழி' என்றும் 'மாயை' என்றும் சொல்லப்பட்டு உடல் அழித்தல் பெரிதும் போற்றப்படும் ஒன்றாக இருக்கிறது. இது ஓர் அடிமை அறிவு.
உடல் காத்தேன், உயிர் காத்தேன் என்பதே இன்றைய நம் முதன்மையான கடமையாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
அவரவர் உடலைப்பற்றி அறிந்திருத்தலும், அதைப் பேணலும், போற்றலும், ஊக்கப்படுத்துதலும் நம் அன்றாடக் கலையாக மாறவேண்டும்.
தமிழ் மருத்துவம், இதையே மீண்டும் மீண்டும் பல்வேறு திசைகளில் நமக்குச்சொல்ல முயன்றது.


குட்டி ரேவதி

நிலம் - ஃபஹீமா ஜஹானின் கவிதை



(இது, ஈழக்கவிஞர் ஃபஹீமா ஜஹானின் ஒரே தலைப்பின் கீழான தொகுப்புக்கவிதை.
நெடுநாளாகவே  இவருடைய கவிதைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று நினைத்திருந்தேன். புதுவகையான கவிதை அனுபவத்தையும் கற்பனைகளையும் நல்குபவை. எப்பொழுது வாசித்தாலும் புதிய கற்பனைகளைத் தூண்டக்கூடியவை, இவருடைய கவிதைகள். தேநீர் வேளையோ, நீண்ட பணி நேரத்திற்குப் பின்பான மாலையோ,  ஆறுதலான நேரத்தை எடுத்துக்கொண்டு வாசியுங்கள். 

குட்டி ரேவதி)

1)

ஆற்றின் மடியூறிச் சேற்று வெள்ளம்
பாய்ந்தோடும் கார் காலங்களில்
தண்ணீருக்காக அலைந்து நொந்தவள்
தன்னந்தனியாக நிலத்தை அகழ்ந்து
தெள்ளிய நீர்க் கிணறொன்றை உருவாக்கினாள்
அவளாக மண் குலைத்துச் சுமந்து
குளிர்ந்த நிழலை வைத்திருக்கும்
குடிசையொன்றையும் கட்டியெழுப்பினாள்
ஓய்வற்ற காலங்கள் அவள் கரங்களில் வந்தமர்ந்து
நிலமெங்கும் அவளைத் திரிந்து வருந்திடச் செய்தது 

2)

கிணற்றிலிருந்து வீடு வரைக்கும்
நிழலைப் பரப்பும் கனி மரங்கள் வரிசையில் நிற்கும்
வெற்றிலையும் மிளகும் ஆங்காங்கே சுற்றிப் படர்ந்திருக்க
இராசவள்ளி, பீர்க்கு, புடோல், பாகல்
கொடிகளில் அசைந்தாடும்
ஒரு வாளித் தண்ணீர் கொடிகளுக்கும்
ஒரு குடம் தண்ணீர் வீட்டுக்கும் என
மர்மக் குரலொன்றுக்குக் கட்டுப்பட்டவளாக
நீர் சுமந்து
நிலத்தின் மேனியை அலங்கரித்தாள் 

தனது கட்டளைக்கு இணங்கி வராத நிலத்தைப்
பண்படுத்திப் பண்படுத்திப் பயிர்களை நட்டிருந்தாள்
வசந்த காலங்களில் செந்நிறப் போர்வை போர்த்தும்
முள்முருங்கைகளை நெருக்கமாக நட்டு
பயிர் விளையும் பூமியைப் பாதுகாத்தாள்
வியர்வையையும் நீரையும் பருகிப் பருகி
அவளைச் சூழப் புதிது புதிதாய்
செழித்தது நிலம்.

3)

முட்டைகளைக் காவி எறும்புகள்
திட்டையேறும் நாட்களில்
விறகுகளை வெட்டியடுக்கி
மழைக் காலத்தை எதிர் கொள்ளத் தயாராகுவாள்
வெள்ளத்துக்கு அஞ்சும் பொருட்களையெல்லாம்
பரண்மீது பத்திரப்படுத்தியிருப்பாள்
தண்ணீரின் குரலைக் கேட்டவாறு
தலை சாய்த்துக் கிடக்கும் இரவுகளில்
ஆற்றின் கரையேறி வெள்ளம்
அவள் முற்றத்துக்கு வந்துவிட்டதாவென்று
கைவிளக்கையேந்தி நொடிக்கொருதரம்
கதவு திறந்து பார்ப்பாள்
நிலம் அவளது கால்களின் கீழே ஈரலித்துக் கிடக்கும் 

4)
மணல் நிறைந்து
மடிகொதித்துக் கொண்டிருக்கும்
கோடை காலங்களில்
அவளது ஆற்றின் ஊற்றுக்கள் வற்றியதேயில்லை
அவள் தோட்டத்துப் பட்சிகள் தொலைபுலம் செல்லவுமில்லை
நிலத்தின் கருணையை நம்பியிருந்தாள் 

5)

மணக்க மணக்க வேகும் நெல்லை
வெண்ணிறக் குருத்தோலைப் பாய்களில் காயவிட்டு
பட்சணங்களை அள்ளிக் கொடுத்து
அந்தச் சிறுமியைக் காவலிருத்தியிருப்பாள்
நெல்மணி பொறுக்க வரும் பறவைகளை விரட்டத்
தளவாடியொன்றையும் கொடுத்துவைப்பாள்
நிலத்தின் விளைச்சல்களைக் களஞ்சியங்களில் சேகரித்தாள் 

6)

ஆற்றோரத் தோப்பிலே பழுத்த தென்னையோலைகள்
பாடலொன்றை உதிர்த்தவாறு வீழ்வதைக் கேட்டபடி
மதிய உணவை உண்பாள்
அந்தி வேளையில் அவற்றைச் சேகரித்து
ஆற்றிலே ஊறவைத்துத் திரும்புவாள்
பலாமரங்களில் படர்ந்து தொங்கும்
பழுத்துச் சிவந்த மிளகுக் கதிர்களையும்
அடுத்த நாள் சமையலுக்கான காய்களையும் கிழங்குகளையும்
சேலை மடியில் சேகரித்து வருவாள்
நிலத்தை இன்னொரு துணையெனக் கொண்டாள்.

7)

இடைவேளைகள் ஏதுமற்ற
நிகழ்ச்சி நிரலொன்றைத் தினந்தோறும் வைத்திருந்தாள்
பன்புல், தென்னை , பனை, தாளை என
ஏதோ ஓரோலை கொண்டு
பாய், தட்டு, கடகங்களில்
தனது படிமங்களை இட்டு நிரப்பி
இரவுகளை இழைத்துக் கொண்டிருப்பாள்
அன்றேல்,
சிரட்டைகளைச் சீவித் துளையிட்டு
சீரான காம்புகளில் பொருத்தி அவற்றால்
இருளை அள்ளிக் கொட்டுவாள்
நிலத்தின் சூழ்ச்சிகளிலிருந்து தன்னை விடுவித்தாள் 

8)

சேவல் கண்விழித்துக் கூவும்
அதிகாலையில் எழுந்து
கிணற்றிலிருந்து முதல்வாளித் தண்ணீரை
அள்ளியெடுத்து வருகையில்
சுவர்க்கத்தின் தென்றல் அவளைத் தழுவும்
இரவில் வீழ்ந்த மாங்கனிகள் பரவியிருக்கும்
முற்றத்திலிருந்து இராப் பறவைகள் நீங்கியிருக்கும்
புற்று மண்தேடிப் பூசிமெழுகியிருக்கும்
சமையலறையைப் பரபரவெனக் கூட்டித்
தண்ணீரைக் கொதிக்க வைத்துத்
தேனீர் மணம் வீடெங்கும் பரவிடப்
புதிய நாளைத் தொடங்குவாள்
அதிகாலைத் தொழுகை முடித்து
காலை உணவைத் தயாரிக்கையில்
இரகசியக் கிளைகளில் துயின்ற பறவைகள்
கலகலத்துப் பறக்கும்
நிலத்தின் ஒளி அவளிடமிருந்து உதித்தது 

9)

கோப்பிப் பூக்களின் சுகந்தம் படிந்திருக்கும்
அவள் முற்றத்தில்
சூரியக் கதிர்கள் பரவத் தொடங்கும் நேரம்
கால் தடங்கள் ஏதுமின்றி முற்றத்தைப் பெருக்கிவைப்பாள்
அந்தத் தூய முற்றத்தில்
ஓரிரவு முழுதும் ஆற்றில் ஊறிய
ஓலைகளை எடுத்து வந்து பரப்புவாள்
இரண்டாகக் கிழித்து நெய்து
கிடுகுகளை அடுக்கிய பின்
அழுக்கு நீங்கக் குளித்து வருவாள்
புதுத் தெம்புடன்
நிலத்துக்கு நிழல் வழங்கவும் அவளே உழைத்தாள் 

10) 

சிறுமி விரும்பும் உணவுகளைத் தனது
கைச்சுவையையும் அன்பையும் கலந்து சமைத்துப்
பள்ளிக் கூட மணியோசை கேட்கும் வரைக் காத்திருப்பாள்
உரலிலே மாவிடித்த படியோ
அரிசியைப் புடைத்த படியோ
அவளது நிலம் நகர்ந்து கொண்டேயிருந்தது 

11)

அடுக்கடுக்காகக் கிடக்கும் மண்பானைகளுக்குள்
சிறுமிக்கான பட்சணங்களைத் தயாரித்து வைத்திருப்பாள்
‘பிடிஅரிசி”ப் பானை’ தனில்
இரண்டு பிடிகள் சிறுமியின் கையால்
அல்லது
பாட்டியின் கையால் தினமொரு பிடியுமென
வாசல் வரும் யாசகருக்காக
அரிசிபோட்டு வைத்திருப்பாள்
வழங்கும் கரங்களை நிலத்திடமிருந்தே அவள் பெற்றிருந்தாள் 

12)

ஆறு தேங்காய்களுக்கு ஒரு போத்தல் எண்ணெய் என்ற
தப்பாத அவள் கணக்கின் படி
காலையிலே தேங்காய்களைத் துருவி வேகவைப்பாள்
பிற்பகலில் பாலைப் பிழிந்து கொதிக்க வைத்து
மிதந்து வரும் எண்ணெய்யை
அகப்பையால் பக்குவமாய்ச் சேகரிப்பாள்
மீண்டும் அதை அடுப்பில் வைத்து
எண்ணெய் கொதித்து மணக்கும் வேளையில்
தென்னங்கீற்றுகளினூடாக நிலவையழைத்துக் கொண்டு
இரவு அவள் வாசலுக்கு வந்துவிடும் 

13)

குரக்கன் கதிர்களை அறுத்தெடுக்கும்
குளிர்காலங்களில்
வெண்ணெய்க் கட்டிகள்போல
என்றென்றும் மணம்வீசும் எண்ணெய்
உறைந்து கிடக்கும் அதிசயத்தைச்
சிறுமிக்குக் காண்பிப்பாள்
வயல் வெளிமீது
பனிப்போர்வை மூடிப் பதுங்கியிருக்கும் நிலம் 

14)

தனிமையை இழைத்து இழைத்து நெய்தவள்
கடின இருளைத் துளையிட்டு
அகப்பைகளில் பூட்டியவள்
அந்த வீட்டின் மாபெரும் மௌனத்தைக்
கலைக்க முடியாது தவித்தாள்
கணவன், மகள், கடைசியில் சிறுமியும்
திரும்பி வராமற் போன பின்னர்
அவர் தம் நினைவு துலங்கும் பொருட்களையெலாம்
தடவித் தடவித் தினமும்
காலத் தீர்ப்பின் வலியினால் நொந்தாள் 

இறுதியில்
ஓயாது அழைத்துக் கொண்டிருந்த
அரூபக் குரலொன்றுக்குப் பதில் அளித்து
அவள் போனாள்
புற்களையும் செடிகளையும் வளரவிட்டு
அந்த நிலம்
அவளைப் பத்திரப் படுத்திக் கொண்டது.

கவிஞர்: ஃபஹீமா ஜஹான்

* * *

அரசு பேருந்துப்பயணம்!

அரசுப்பேருந்தில் பயணிக்கும்பொழுது கிடைக்கும் அனுபவம் வேறெதிலும் கிடைப்பதில்லை. ஒரு நீளமான, யூக்கிக்கமுடியாத திரைப்படம் தான் அது.

விட்டேத்தியான ஒரு பயணமும் கூட. எப்பொழுது கிளம்பும் என்று தெரியாது. சொன்ன நேரத்திற்குச் சென்று சேரும் என்றும் சொல்லமுடியாது.

மிகவும் நிதானமான, நீளமான, முடிவற்ற பயணம் போல் இருக்கும். மற்றெல்லா வாகனங்களும் முந்திச்செல்ல அனுமதித்து தன்பாட்டுக்கு ஓடும்.

நாமும் கொஞ்சம் கொஞ்சமாக, பயண எல்லை குறித்தப் பதட்டம் இழந்து, ஒரு நிதானத்திற்கு வந்திருப்போம்.

பயணக்கட்டணமும் சொற்பமே.

இரவுப்பாடல்களின் காட்டுக்கத்தல் ஸ்பீக்கர் இல்லை.

அருகில் இருப்பவரும் பயணத்தின் ஏதோ ஒரு கணத்தில் நமக்கு அன்னியோன்யமாகிவிடுவார்.

நிலவின் ஒளியில் காயும் வானத்தை உங்கள் கண்களும் முயற்சியும் எட்டும் வரை பார்க்கலாம். அத்தகைய இரவு வானம் மனதிற்கு அளிக்கும் விடுதலை உணர்வு இவ்வளவு என்று சொல்லிமாளாது.

தூங்கலாம், தூங்காமல் கற்பனை செய்யலாம், கற்பனையின் கயிற்றை எங்கேனும் அறுத்தெறிந்துவிட்டு யதார்த்தத்திற்கும் இறங்கலாம்.

மெதுவான, மிக மெதுவான பயணங்கள் தரும் இளைப்பாறுதலும், அவை தரும் அனுபவங்களும் எல்லோருக்கும் தேவைப்படும் காலம் இது.




குட்டி ரேவதி

புத்தகப்பட்டியலும் சூயிங் கம்மும்!




ஒருவழியாகப் புத்தகப்பட்டியல் இடுவதை முடித்து, எல்லோரும் வேறு பக்கம் திரும்பியாயிற்று. 

எவர் பட்டியலும் சமகாலச் சிந்தனைக்கு அல்லது வாசிப்பிற்குத் தேவையான நூல்களை முன்மொழியவில்லை.

படிக்க அவசியமான நூல்களில், இன்னும் அன்னா கரினீனாவும் வெண்ணிற இரவுகளும் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தன. சொல்லிச்சொல்லி, முக்கியமான நூல்களாக ஆகிப்போன முந்தைய தலைமுறை, தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களும் பெரிய அளவில் இடம்பிடித்திருந்தன.

முகநூலில் சமகால அரசியல் மற்றும் சமூகம் சார்ந்து தீவிரமாகப் பதிவுகள் இடுவோர் கூட, சாதிமறுப்பு, வேளாண்மை, சுற்றுசூழல், அணு உலை எதிர்ப்பு, பெண்ணியம், ஆணியம் என்று இயங்குவோர் கூட, தனக்குப் பிடித்த நூல்கள் பட்டியல் என்று வரும் பொழுது, தம் "முன்முடிவு" நூல் பட்டியலுடனேயே வந்திருந்தது வருத்தத்தை உண்டாக்கியது.

இன்றைய தலைமுறையின் கட்டுரை நூல்களும் சென்ற ஆண்டில் வெளிவந்திருந்த முக்கியமான நூல்களும் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

புரையோடிப்போன பழம்புனைவுகள் இன்றைய நம் வாழ்க்கைக்கு எதுவுமே வழங்குவதில்லை, சிறிய அளவு சொகுசைத் தவிர. மேலும், இந்த சொகுசை நம் சொந்த வாழ்வில் ஒரு பொழுதும் நாம் எட்ட முடிவதில்லை. காரணம், சமூக ரீதியாக, நாம் அந்த சொகுசுகளிலிருந்து புறந்தள்ளிவைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதால் தான் அவை நமக்கு சொகுசாகத் தெரிகிறது.

ஒவ்வொருவரின் புத்தகப்பட்டியலையும் வாசிக்கையில், எனக்கு சூயிங் கம்மை மெல்லுவது போன்ற உணர்வு ஏற்பட்டது!

என் கையில் சமீபத்தில் வெளியான சில நூல்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்துமுடித்திருக்கிறேன். தமிழின் மிகவும் இளம்தலைமுறையின் நூல்கள் அவை. புனைவோ மொழியோ சிந்தனையோ அரசியலோ அவற்றை ஊக்கத்துடன் முன்னகர்த்தும் தீவிரம் இந்த நூல்களில் இருக்கிறது.

ஒவ்வொன்றைப்பற்றியும் எழுத நிறைய இருக்கிறது.


குட்டி ரேவதி

இசைப்பாடல் தொகுப்பு!


இசைப்பாடல் தொகுப்பு!

இது இசைப்பாடல்தொகுப்புகளுக்கான (Album) காலம் போலும். இதுவரை ஐந்து ஆல்பங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளேன். 



'கர்நாடக இசை'க்கூட்டத்திற்கு வெளியே இருந்த சமூகத்தின் ஒரே மன உணவு, சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் திரை இசையாகத்தான் இருந்திருக்கிறது. 

நம் சமூகத்தைத் திரைஇசை பீடித்த அளவிற்கு வேறு கலை வடிவம் செய்திருக்குமா என்று தெரியவில்லை. பால்ய பருவத்தை நினைவூட்டவும் காதல் பருவத்தை வளமூட்டவும் நம் தத்துவ வெளிகளை நலப்படுத்தவும் 'திரை இசை', சினிமாவெளியிலிருந்து தொடர்ந்து உரையாடல் செய்திருக்கிறது. 

ஆனால், உயர்ந்ததாகக் கருதப்பட்ட 'கர்நாடக இசைக்கு' வெளியே நிறுத்தப்பட்ட 'திரை இசை', காலப்போக்கில் அதற்கு எதிரானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. சினிமா சம்பந்தப்பட்ட எதுவுமே தவறானதாகக் கருதப்பட்ட ஒரு காலத்தையும் நாம் கடந்திருக்கிறோம்.

இன்று நிறைய இளைஞர்கள், இசைப்பாடல் தொகுப்பு உருவாக்குவதில் ஈடுபடுகின்றனர். சமூக மையக் கருத்துகளை முதன்மையாக வைத்தும், சினிமா இலக்கணங்களுக்குள்ளும் கதைக்கட்டுகளுக்குள்ளும் அடங்காத உருவம் கொண்டும் பாடல்களை உருவாக்குகின்றனர்.

வெளிநாடுகளில் இத்தகைய பாடல்தொகுப்புகள் பெருவாரியாக உருவாகுவதற்குக் காரணம், இசை ஒரு பொது அறிவாகவும் கலைப்பழக்கமாகவும் இருப்பது தான். 

நம் நாட்டிலும் நாட்டுப்புற இசை பொதுச்சமூகத்தை நோக்கி நகர்தலும், நவீன இசை பரவலாகி சமூகமைய விடயங்களுக்குப் பயன்படுவதும் இனி தவிர்க்கமுடியாததாகும் என்று தோன்றுகிறது.



குட்டி ரேவதி

கணினி என்பது முகநூல் திறக்க மட்டுமே அன்று!




கணினி இன்றைய அன்றாட வாழ்வின் முக்கியமான அங்கமாகிவிட்டாலும் அதைப்பயன்படுத்தும் விடயத்தில் நாம் இன்னும் முனைப்போடும், சமூக அவசியங்களை உணர்ந்தும் இயங்கவேண்டும்.

புத்தகங்கள் காகிதத்தில் அச்சிடப்படுவதை அறவே நிறுத்தி, இணையம் வழியாகப் பரவலாக்குவது மிகவும் அவசியமாகும். மின் நூல்கள், இன்றைய சுற்றுச்சூழல் அரசியலுக்கும் நியாயம் சேர்க்கும்.

இன்னும் சொல்லப்போனால், இயக்கங்கள், போராட்டங்கள், களப்பணிகளுக்கும் கூட களப்பணியாளர்களும் போராளிகளும் இதை அதிகமாகப் பயன்படுத்த அறிந்திருக்கவேண்டும்.

அன்றாடப் பயன்பாட்டில் இன்னும் அதிகமாக, கணினியின் பயன்பாடுகள் அறிந்து அதை ஈடுபடுத்தும்போது, விஞ்ஞான ரீதியான நம் புரிதல் பலப்படும்.

குறுகிய மனச்சண்டைகள் எல்லாமே ஒரு விடயத்தின் பரவலான எல்லைகள் மற்றும் ஒரு துறை சார்ந்த விரிந்த அறிவும் இல்லாமையால் உண்டாவதே.

முகநூல் மட்டுமன்றி, புகைப்படங்கள் எடுத்தல், அவற்றை ஆவணப்படுத்தி வைத்தல், இணையத்தில் அவற்றை ஏற்றி அதன் அவசியம் குறித்துப் பதிவு செய்தல் போன்றவை நம் வரலாற்று, அரசியல் விடயங்களுடன் இன்றைய நம் செயல்பாட்டை இணைக்க மிகவும் உதவும்.

கணினி என்பது இனியும் ஓர் அந்நிய உபகரணம் இல்லை. நவீனக்கருவிகளை சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் பயன்படுத்துவதன் வழி, நம் மொழி வழி, சிந்தனை வழி உரையாடல்களை உலகளாவிய உரையாடல்களாக விரிக்க முடியும்.

அழிந்து கொண்டிருக்கும் அல்லது நாம் மறந்து கொண்டிருக்கும் நம் மொழி தொடர்பான துறைகளை இதன் வழியாக புதுப்பிக்கமுடியும்.

கணினியின் பயன்பாட்டு சாத்தியங்கள், தெரியாமலேயே அதை ஒரு மலிவான கருவியாகப் பயன்படுத்துகிறோமோ என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன். 

பலமுனை அறிவுக்கும், செயல்பாட்டிற்கும் இதைப்பயன்படுத்துதலே நம் பழமைவாதச் சிந்தனைகளை உதிர்க்க உதவும்.

உடல் உழைப்பை மட்டுமே சிறந்த உழைப்பாக எண்ணுதல் நம்மைப் பின்னடையச் செய்யும்.

காலங்காலமாக, உண்மைகளும் நியாயங்களும் சென்று சேராமல் இருந்த சமூகம் எழுந்துவர, கைப்பற்றி வெளியுலகிற்கு வர கணினியே நல்லதொரு வழியாக இருக்கும்!





குட்டி ரேவதி

என் நூல்கள்!




1. "நிறைய அறைகள் உள்ள வீடு", சிறுகதைத் தொகுப்பு, முதல் பதிப்பு, 2013, பாதரசம் பதிப்பகம்

2. "அகவன் மகள்", கவிதைகள், முதல் பதிப்பு, 2013, புது எழுத்து பதிப்பகம்

3. "இடிந்த கரை", கவிதைகள், முதல் பதிப்பு, 2012; ஆதி பதிப்பகம்.

4. "ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள்", தமிழ் நவீனப்பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த மீளாய்வுக் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2011, நாதன் பதிப்பகம்.

5. "முத்தத்தின் அலகு", ஆசிரியர் எழுதிய காதல் கவிதைகள், முதல் பதிப்பு 2011, ஆழி பப்ளிஷர்ஸ்.

6. "நிழல் வலைக்கண்ணிகள்", சாதியையும் பாலியலையும் ஆராயும் பெண்ணியக் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2011, வம்சி புக்ஸ்.

7. "மாமத யானை", கவிதைகள், முதல் பதிப்பு, 2011, வம்சி புக்ஸ்.

8. "முள்ளிவாய்க்காலுக்குப் பின்", ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த கவிஞர்களின் ஈழ இனப்படுகொலை பற்றிய நினைவுக்கவிதைகள், முதல் பதிப்பு, 2011, ஆழி பப்ளிஷர்ஸ்.

9. "காலத்தைச் செரிக்கும் வித்தை", தமிழ்ப் பெண்ணிய விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2010, ஆழி பப்ளிஷர்ஸ்.

10. "யானுமிட்ட தீ", கவிதைகள், முதல் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.

11. "உடலின் கதவு", கவிதைகள், முதல் பதிப்பு, 2006, பனிக்குடம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்

12. "தனிமையின் ஆயிரம் இறக்கைகள்", கவிதைகள், முதல் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; இரண்டாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.

13. " முலைகள்". கவிதைகள், முதல் பதிப்பு, 2002, தமிழினி வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; மூன்றாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.

14. "பூனையைப் போல அலையும் வெளிச்சம்", கவிதைகள், முதல் பதிப்பு, 2000, தமிழினி வெளியீடு; இரண்டாம் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; மூன்றாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.




குட்டி ரேவதி

'அவன் காட்டை வென்றான்'



ஒரு சிறிய பயணத்தில்  'அவன் காட்டை வென்றான்' நாவலை  மீண்டும்  ஒரு முறை வாசித்து முடித்தேன். கேசவரெட்டியின் நூல். தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

இந்திய இலக்கியப்பரப்பிலும் சுற்றுச்சூழலியல் பரப்பிலும் காட்டின் நிலப்பரப்பை விரிவாக எழுதிச்சென்ற நாவல்கள் பல. ஆனால், இது பலவகையில் தனித்து நிற்கிறது.

நிறைமாத பன்றி ஒன்று தன் பிரசவத்திற்காக, காட்டிற்குள் ஒதுங்கிவிட காணாமல் போன அதைத் தேடிச்சென்று காட்டில் அதைக் குட்டிகளுடன் கண்டறியும் கிழவரின் கதை.

காடு என்பது விஞ்ஞானப்பூர்வமான நிலக்காட்சி. மனிதனுக்கு வேண்டுமானால், அங்கே எது நடந்தாலும் தற்செயலான ஒன்றாக நடப்பதாகத் தோன்றலாம். ஆனால், இந்தக்கிழவனின் காட்டில், ஒரு சிட்டுக்குருவி இடையறாமல் கத்துவதும், பன்றி பிரசவத்திற்காக ஒரு புதருக்குள் ஒதுங்குவதும், வாசனையை முகர்ந்து கூட்டங்கூட்டமாகத் தேடிவரும் நரிகளும், குட்டிகளைக் காப்பாற்ற அவற்றுடன் தாய்ப்பன்றி மூர்க்கமாகச் சண்டையிடுவதும் கிழவனின் முழு இரவுத்தங்கலும் மனஎண்ணங்களும் அவன் போராட்டமும் என முழு நாவலும் இந்தியாவில் காடு பற்றிய நம் சிந்தனையை நம்பிக்கைகளை அறிவுப்புலத்தை வளப்படுத்தகூடியது.

பல இடங்களில், ஒரு தனிமனிதனின் அனுபவச்சித்திரத்தின் வழியாக, அவனது உணர்வுகள் வழியாக மானுடத்தின் அரும்பெரும் தருணங்களை எடுத்துரைக்கும் எளிமை தான் இந்த நாவலின் பலம்.

இது நாம் இதுவரை பார்த்த காடுகளோ, படித்த காடுகளோ இல்லை. மன எழுச்சியின் வழியாகவே நிலக்காட்சியின் கற்பனையை முழுமையாக எழுப்பும் வேறு காடு என்ற சித்திரத்தைத் தரக்கூடியது. மேலும், ஓர் ஆணின் தாய்மைச்சிந்தனையும் ஒரு பன்றியின் தாய்மைச்சிந்தனையும் இரண்டின் முரண்பாடுகளும் என இந்த நூல் முழுக்க பெருங்கருணையின் நுட்பமான கதிர்வீச்சை உணரமுடியும்.

நம் மூதாதையர்கள் இந்த மண்ணை, இந்த நாட்டைக் காடாக உணர்ந்து அதன் பகுதியாக வாழ்ந்தவர்கள். ஒவ்வோர் உயிர் இயங்கும் முறையையும் தம் வாழ்வோடு பின்னிப்பிணைத்து உணர்ந்து கொண்டவர்கள். அதுவே ஒரு சிந்தனை மரபாகவும் அதன் நீட்சியாகவும் கிளர்ந்தெழுந்து மானுட விடுதலைக்கான குறியீடாகிறது. 

மனிதனின் விடுதலைக்கடியில், பல ஆயிரம் வகை உயிர்களும், அதனதன் உயிர் அனுமதிக்கும் வாழ்வை வாழ்வதற்கான விடுதலையும் பொதிந்திருக்கிறது.  ஒரு கட்டத்தில், தாய்ப்பன்றி பேறு கண்ட குட்டிப்பன்றிகளைப் பாதுகாக்க அந்தத்தாய்ப்பன்றியையே கொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் கிழவர். 

மனிதனின் பழங்குடி மனநிலை, இந்த நாவலின் அடிப்படையானது. அதே சமயம், பழங்குடி மனநிலை என்றால் அது பழமையானது என்ற கடைந்தெடுத்த அழுக்கான நாகரிகத்தையும் வெல்லக்கூடிய, முற்போக்கும் நவீனமும் தொனிப்பது. மனிதச்சிந்தனை முறையை பல ஆயிரம் வருடங்கள் முன்னோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் முயற்சியை அந்தக்கிழவர் வழியாக நாவலாசிரியர் செய்திருக்கிறார். 

"அவர் காட்டை வென்றார்!" 




குட்டி ரேவதி