நம் குரல்

எங்களுக்குப் பெண்ணியம் கற்றுக்கொடுக்க விரும்பும் ஆண்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்!




அன்புமிக்க ஆணாதிக்க நண்பர்களே! பெண்கள் குறித்த எல்லா பிரச்சனைகளையும், ஒரே குடுவையில் போட்டு எங்களுக்கு நீதி சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


எழுத்தாளர்கள் சிவகாமியும் பாமாவும், சாதி மறுப்புப் பெண்ணியம் குறித்த அடிப்படைப் புரிதலை பலமுறைகள் அழுத்தமாகச் சொல்லியும், மீண்டும் பாலபாடத்திலிருந்து தொடங்க வேண்டியிருப்பது வேதனை தான்
என்றாலும், வேறு வழியில்லை! எனக்கும் இதைத்தவிர வேறு வேலையில்லை!

தாழ்த்தப்பட்ட பெண்கள் எப்பொழுதும், மூன்று விதமான மனிதர்களால் ஒடுக்கப்படுகின்றனர். வன்முறைக்கு உள்ளாகின்றனர். ஆதிக்கசாதி ஆண்கள், ஆதிக்கசாதிப்பெண்கள் மற்றும் தம் சாதி ஆண்கள். இங்கு அவர்கள் ஆதிக்கசாதிப் பெண்கள் என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது!

களப்பணிக்குச் சென்று ஒடுக்கப்பட்ட பெண்களுடன் வேலைசெய்தவர்களுக்கும், அம்பேத்கரை நுட்பமாக வாசித்திருப்பவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்த பெண்ணாய் இருப்பவர்களுக்கும் மட்டுமே, மேலே குறிப்பிட்ட, 'ஆதிக்கசாதிப் பெண்கள்' எந்த சாதிய மனோநிலையில், ஒடுக்கப்பட்ட பெண்களிடம், தாழ்த்தப்பட்ட பெண்களிடம் நடந்து கொள்கிறார்கள் என்பது புரியக்கூடும்!

மடிக்கணியினை வைத்துக் கொண்டு சிந்திப்பவர்களுக்கும், தன் தலைக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் பெண்களுக்கிடையேயான பாலியல் அரசியலை புரிந்து கொள்வது கடினம்!

எங்களுக்குப் பெண்ணியம் கற்பிப்பவர்கள் எப்பொழுதும் ஆதிக்கசாதியைச் சேர்ந்த ஆண்களாகவும் பெண்களாகவும் இருக்கும் பட்சத்தில், எங்களுக்குப் பெண்ணியம் கற்பிப்பதை நீங்கள் நிறுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.

எங்கள் ஆண்களுடனான பெண்ணுரிமைப் பிரச்சனைகளை அணுகுவதற்கும் வெல்வதற்கும் எங்களிடம் இப்பொழுது இருக்கும் கருத்தியலும் அரசியல் தெளிவும் எல்லாவகையிலும் போதுமானது! தலித் ஆண் தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகள், தலித் பெண்கள் பற்றிய பாலியல் குற்றச்சாட்டுகளை நாங்களே எங்களுக்குள் அணுகிக்கொள்கிறோம். அதில் உங்கள் நாட்டாமையும் தீர்ப்பும் அவசியம் இல்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

அம்பேத்கர் புரிந்து கொண்டதை, நீங்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது மிகையாக இருக்கலாம்! இருப்பினும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்குப் பெண்ணியம் கற்பிக்கும் உங்கள் ஆசான் வேலையை நிறுத்தச்செய்வது தான் எங்களின் முதன்மையான பெண்ணிய உரிமையாக இருக்கும்!

















குட்டி ரேவதி