நம் குரல்

தேநீர்க்கோப்பை




கோழிகளின் கழுத்தைத் திருகித் திசையெங்கும் குருதி தெளித்த சடங்கின் பின்பானதொரு நம் அதிகாலையில் அதன் வரலாறு தொடங்குகிறது. முன்னிரவு முழுதும் உறக்கமற்றுப் போன மயக்கம் நிறைந்த கண்களில் சூடேற்றப் பருகப்படும் பானம் அது. கொதிக்கும் வெந்நீரின் தளதளப்பில் இலைகள் சுருண்டெழுந்ததைப் போல இரவு உயிர்கொண்ட வாழ்க்கை நமது. மலையின் கூதிருக்கு அடங்க மறுத்த நம் பெருங்கனவுகள் தாம் அவ்விலைகளுக்கு உதிரம் தந்தன. வெயிலின் ஒளி உத்திரங்கள் சரிந்த குன்றுகளின் மீது வண்ண இறகுகள் புடைத்த பறவைகளைப் போல அதிகாலை ஏகிச் சேர்ந்த நம்மை தேயிலைப் புதர்கள் இடுப்பை அணைத்துக் களித்தன. தளிரிலைகள் பனிப்பொழுதின் உதடுகளாகி நடுங்குவது கண்டு நாம் பதற்றமுற்றோம். மதிய வேளை மலையாகி அசந்தோம் ஆவியெழும் அப்புதர்கள் மீது. வானம் கண்ணில் நிறையவும் மேக மதலைகள் நம் உடல் மீது தவழவும். பருகத் தயாராய் இருக்கும் கொதி தேநீர் தளும்பும் கோப்பையாய் இருந்த மாலையொன்றில் மலையை விட்டிறங்கி பாலிதீன் இரவுக்குள் மீண்டும் குடிபுகுவோம்.


குட்டி ரேவதி

ஒரு தொட்டிச்செடியும் இன்னொரு தொட்டிச்செடியும்

ஒவ்வொரு முறை பெண்ணுரிமை குறித்து எழுதும்போதும், ‘ஏன் ஆண்களைத் திட்டுகிறீர்கள்? பெண்ணுக்குப் பெண்ணே தான் எதிரி!’ என்ற அர்த்தத்தில் நிறைய எதிர்வினைகளை எதிர்கொள்கிறேன். இதன் பின்னணியில் இருக்கும் அதிகாரக் கட்டமைப்பையும் பெண்களுக்கெதிரான சூழ்ச்சிகளையும் புரிந்துகொண்டால் உண்மையில் மாமியார் என்பவர் யார் என்பதும் அவர் ஒரு பெண்ணாக இருந்தபோதும் ஆணாதிக்கச் சமூகத்தில் என்ன விதமான அதிகாரப்பங்கை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதும் விளங்கும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய இளம் வயதிலிருந்தே திருமணம் தான் அவள் வாழ்க்கையின் இலக்கு என்று சொல்லி வளர்க்கப்படுகிறது. அதற்கான தயாரிப்புகள் அவள் சூழலிலும் அவள் மனநிலையிலும் அவள் வளர்க்கப்படும் விதத்திலும் வெகுவாகத் திணிக்கப்பட்டு அல்லது ஏற்கெனவே சமூகம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டு அவள் எப்பொழுதும் அதற்கான காத்திருப்பில் வைத்திருக்கப்படுகிறாள். உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய சமூக உரிமைகளைப் பெற்றாலும் முன்குறிப்பிட்ட அந்த இலக்கு மாறப் போவதில்லை என்பது அவளின் மனதிலும் அவளின் சகோதர சகோதரிகள் உற்றார் உறவினர் எல்லோரின் மனதின் அடியாழத்திலும் பதிந்திருக்கின்றன. ஒரு பெண் எப்பொழுதுமே ஒரு தொட்டிச்செடியாக வளர்க்கப்படுகிறாள் என்று நான் கூறுவதுண்டு. வாழ்க்கையின் முன்பகுதியில் இன்னொரு வீட்டில் வாழச்செல்பவள் என்பதற்காய் தொட்டிச் செடியாக மாற்றப்பட்டவள். அவ்வாறே அவள் திருமணத்திற்குப் பின் கடத்தப்படுவதற்கு வசதியான தொட்டிச்செடி. என்றாலும் கணவரின் வீட்டிலும் அவள் வேர்விட முடியாத இன்னொரு வீட்டிலுருந்து வந்த ‘தொட்டிச் செடி’ .


மாமியாருக்கு வருவோம். மாமியார், தனது மகனின் மனைவியாக ஏற்றுக்கொண்ட பெண்ணிடம் ஒரு வித சந்தேகத்துடன் தான் அணுகுகிறாள். ஏற்கெனவே மாமியார் என்றான பெண் தன் குடும்பத்திற்கான அமைப்பில் வேறு இடத்திலிருந்து தொட்டிச்செடியாக வந்தவள். அவளுக்கு தன் கணவர் இன்ன பிற உறவினரிடம் இருந்து தன் நிலைக்கான உறுதித்தன்மையைப் பெற மிகவும் போராட வேண்டியிருந்தது. கணவரின் அதிகார ஆதிக்கத்தில் தன் சுயத்தை இழந்தவள், தன் மகனின் வரவாலும் அவன் மீது செலுத்தும் இடையறா அன்பாலும் தன் இருப்பை நெருக்கடிக்கிடையே சாத்தியப்படுத்திக் கொண்டவள். அந்த மகனின் திருமணத்தின் வழியாக உள்ளே நுழைந்த இன்னொரு தொட்டிச் செடியான மருமகளை அவள் அச்சுறுத்தும் சக்தியாகப் பார்க்கிறாள். மகனுக்கு எல்லாமும் தன்னிடமிருந்தே அளிக்கப்பட்டாலும் மனைவியிடம் அவன் பகிர்ந்து கொள்ளும் காதலும் காமமும் கலந்த உறவு அவளுக்கு தன் இருப்பில் நிலைகுலைவை ஏற்படுத்துகின்றன. ஆகவே மாமியார்கள் எச்சரிக்கையாகிறார்கள். தாங்கள் ஏற்கெனவே பாதுகாத்துவைத்திருந்த சொற்ப அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் புதிய தொட்டிச் செடியின் மீது வெந்நீராய் ஊற்றி இயக்கத்தொடங்குகின்றனர்.


ஆனால் இது முழுக்க முழுக்க பெண்களாலேயே நிகழ்வதில்லை. மேலே குறிப்பிட்டவாறான பெண்ணசைவு என்பது ஆணின் அதிகார நுகர்ச்சிக்காவும் பயன்பாட்டுக்குமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறந்த வீட்டில் பெண், கணவரின் வீட்டில் பெண், தன் மகனுக்குத் திருமணமான பின்பான பெண் என்ற மூன்று நிலைகளிலும் பெண் தற்காலிக பாதுகாப்புணர்வாலும் பதற்றத்தாலும் மட்டுமே தன் சுயத்தைப் பேணக்கூடியவளாக வைத்திருக்கப்படுகிறாள். ஒரு மண்ணில் காலூன்றி வேர்விடுவதற்கான வாய்ப்பு எப்பொழுதுமே அவள் வாழ்வு முழுக்க பெண்ணுக்கு வழங்கப்படுவதே இல்லை. பிறந்த வீட்டின் அதிகாரம் தந்தையையும் சகோதரர்களையும் தலைமையாகக் கொண்டது. கணவன் வீட்டிலும் இதே நிலை தான். இந்நிலையில் மாமியாரும் மருமகள் என்றானவளும் ஆணின் அதிகார ஆதிக்கத்துடன் போராட இயலாமல் தங்களின் இருப்பு சார்ந்த அதிகாரத்திற்கே போட்டியிடுபவர்களாக மாற்றப்படுகின்றனர். இதன் பின்னால் இருக்கும் இன்னொரு சூழ்ச்சி, தங்களுடையதான இருப்பை நிலைப்படுத்தும் போராட்டத்தில் ஆண்களின் அதிகாரத் தகர்ப்பைச் செயல்படுத்த முடியாமல் போகின்றனர் இரு வகையான பெண்களும்.

‘தாயா தாரமா?’ என்ற கேள்வியுடன் இன்றும் பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. மாமியார் – மருமகள் பற்றிய நகைச்சுவைகள் மின்னணுக்களாகவும் மாறிவிட்டன. மிகவும் வேதனைக்குரியது. தாயும் தாரமும் வேறுவேறு பண்புகளை வேறுபட்ட சமூக நிலைகளில் எடுக்கும் பெண்கள். ஒரே பண்புடைய இரண்டினை ஒப்பு நோக்கலாம். இவ்விருவரையும் சமூகத்தின் தராசுத்தட்டில் நிறுத்துப் பார்ப்பது அபத்தம். மாமியாரும் மருமகளும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் அவசியமில்லை. தங்கள் தங்கள் தொட்டிகளிலிருந்து இறங்கி வந்து நிலத்தில் காலூன்றி நிற்பதே குடும்ப அமைப்பின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்கான விடுதலை உனர்வின் முதல்கட்டமாக இருக்க முடியும்!


குட்டி ரேவதி

நான் ஒரு வெகுசன எழுத்தாளர் அல்லேன்! - நேயர்களுக்கு ஒரு கடிதம்

நான் ஒரு வெகுசன எழுத்தாளர் அல்லேன். வெகுசனங்களுக்கான கனவுகளையும் புனைவுகளையும் மட்டுமே சொல்ல வேண்டிய அவசியத்தை நான் சிந்திப்பதில்லை. ஆனால் வணிகச் சந்தையில் தங்கள் கருத்துகளை சமரசம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆகவே அப்படியான வாசகர்களும் இருக்கிறார்கள். சிற்றிதழ்ப் பண்பாட்டில் வேர்விட்ட எழுத்தாளரான எனது பார்வைகளையும் எழுத்துக்களையும் தமிழ்மணத்தில் முன்வைப்பதும் அதற்கான வாசகரைக் கண்டடைவதும் சிரமம் என்று எண்ணியிருந்தேன். என்றாலும் நான் எழுதிய ஒவ்வொரு பத்தியையும் கூர்மையாக வாசித்து உடனுக்குடன் கருத்துரை வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
ஒவ்வொருக்கும் உடனடியாக மதிப்புரை வழங்க இயலவில்லை. மூன்று நாட்கள் பயணத்தில் இருந்தவாறே பதிவுகளை இடவேண்டியிருந்தது. இருப்பினும் பதில் எழுதிய ஒவ்வொருவரின் கருத்தையும் நான் மிகவும் மதிக்கிறேன் என்றும் ஒவ்வொருவரையும் அவரவர் கருத்துரை வழியாக நன்கு அறிந்து வைத்திருக்கிறேன் என்றும் எழுதிக்கொள்கிறேன். இன்னும் ஒரு நாள் நட்சத்திரப்பதிவராக இருப்பேன். அதற்குப் பின்னும் என்னுடைய வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவேன். தோழியரும் தோழர்களும் தொடர்ந்து தங்கள் கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்தும் வெளியாக அதைப் பயன்படுத்தலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


பொங்கல் விழாவின் உண்மையான மகத்துவத்தை நகரத்தை நோக்கி நகர நகர இன்னும் பெருவாரியாக உணரமுடிகிறது. முற்றத்தில் பொங்கலிட்டு மகிழும் காலத்திலிருந்து நகர்ந்து சமையலறையில் பொங்கலைப் பொங்க விடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரு காலத்திற்கு நாம் நாகரிகமடைந்து விட்டது எதையோ இழந்துவிட்டது போல் இருக்கிறது. தொலைக்காட்சியில் செல்வராகவன், தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் என்று மாறிமாறித் தோன்றி தமிழர்களுக்கு அருள்புரிந்துகொண்டே இருந்ததின் அலுப்பு மறைய நல்ல வேளையாக நிறைய நூல்கள் இருந்தன. அந்த நான்கு நாட்களும் தொலைக்காட்சிகளுக்கும் விடுப்பு கொடுத்துவிட்டால் நன்றாயிருக்கும். சென்னையின் புறநகர்ப்பகுதிகள் இன்னும் கிராமங்களாய் இருப்பதன் அடையாளமாய் பொங்கலின் தொடர்க்கொண்டாட்டங்களை அங்குள்ள மக்கள் வடிவம் மாறாமல் கொண்டாடித் தீர்ப்பதிலிருந்து அறிய முடிந்தது. பண்டிகைகள் தாம் தனிமனிதனை சமூகத்துடன் இசைவான வகையில் பின்னுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.


ஏற்கெனவே எழுதியிருந்தது போல் நிலக்கோட்டையில் நடந்த மனித அவலமும் திருநெல்வேலியில் எல்லோர் முன்னிலையிலும் காவல்துறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் கொலை செய்யப்பட்ட நிகழ்வும் இவ்வருடத்தின் கறை படிந்த படிமங்களாய்ப் பதிந்திருக்கின்றன். என்ன மாதிரியான நாடு, அரசு, மக்கள் என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள சமயம் எடுத்துக்கொள்ளலாம். இது போன்ற படிமங்களை மாற்றியமைக்க தனிமனித இடத்திலிருந்து சிறிது உழைக்கலாம். இது போன்ற பண்டிகைகளின் அர்த்தம் இன்னும் மிகுந்திடும். அதுவே மிகச் சிறந்த சமூகப்பணி!

குட்டி ரேவதி

பெருநகரப் பொழுதுகள்




அவனது உடலிலிருந்து ஊறும் மானுடத்திற்கான பேருவகை சொல்லி மாளாதது. ஆகவே தான் அவன் இரவு ஒவ்வொன்றையும் ஒரு பெரு நகரமாக்குகிறேன். தூங்கும் நகரைத் துளாவி வரும் துணிவார்ந்த வாகனங்களில் பாய்கிறேன். ரகசியங்களின் அறைகளைச் சூறையாடுகிறேன். எனது பருவ முதிர்ச்சிகளை அவன் சுவைக்காத போதும் நகரம் விழாக்கோலம் பூண்டு கொண்டேதானிருக்கிறது. சமுத்திரத்தின் கரையில் இருக்கும் அந்நகரம் ஒரு பாய்மரக்கப்பலைப் போல எப்பொழுதும் காத்திருக்கிறது அதிகாலை நீரிறங்கும் பேரவாவுடன். அலைகளைப் பின் தள்ளி தீ கனலும் தொலை தூரப்பரப்பில் நீந்தித் திளைத்திட. பின் அவன் வனப்பையெல்லாம் தொண்டைக்குள் அதக்கிக் கொண்டு கிளர்ந்தெழுகிறது நகரின் இரவு. மின்விளக்குகளின் மங்கிய பிரகாசங்களூடே ஆள்தடமற்ற தார்ச்சலையில் குதிரைச் சப்தங்கள் மட்டுமே கேட்கின்றன. பேருவகையின் பயனாய் பின்னொரு நாள் அணையாத பகலாகி துயிலறுக்கும் போது அவனையும் அப்பெருநகராக்கி ஆளலாம்.




குட்டி ரேவதி

உடலும் உடலும்

விளம்பரப்பலகைகளிலும் திரைப்படச் சுவரொட்டிகளிலும் உடலின் தட்டையான பிம்பங்களை பார்த்துப் பழகிவிட்ட நாம் உடலின் உள் இயக்கங்களிலிருந்தும் எண்ணங்களின் தொடர் ஓட்டங்களிலிருந்தும் வெகுதூரம் நிறுத்தப்படுகிறோம். இன உற்பத்திக்கும் காம வெளிப்பாட்டுக்கும் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் நவீன மாதிரிக்குமான பொருளென்று உடலை ஆக்கியிருக்கிறோம். உடலின் வளர்ச்சி உயிர்ப்பான எண்ணங்களூடே நிகழ்கிறது என்பதை மறுக்கிறோம். ஆணுடலோ பெண்ணுடலோ இரண்டுமே வேறுவேறாய் இருக்கும் சமமானவை தாம். ஒன்றுக்கொன்று பொருந்திப் போகக்கூடியவை தாம். ஆனால் பூட்டும் சாவியும் போல இருப்பதை எதிரெதின்று நோக்கும் நம் சிந்தனை இரு உடலையும் ஒன்றோடொன்று பொருந்தாததாக ஆக்கியிருக்கிறது. இன உற்பத்தியில் பெண்ணுடலைப் போலவே ஆணுடலும் பங்குபெற்றபோதும் பெண்ணுடல் மட்டுமே அதற்கான தொடர்ப் பராமரிப்பில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறது. பெண்ணுடலும் காம வெளிப்பாட்டை தனது இயல்பாய்க் கொண்டிருந்தாலும் அது செயற்கையாயும் அதற்குத் தகுதியில்லாததாயும் முடக்கப்பட்டிருக்கிறது.



எல்லாவற்றையும் விட காதல் என்னும் சமூக வெளிப்பாடும் ஆணுக்கு மட்டுமே நியாயமென்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் உடலைப் பொருளாதார உற்பத்திக்கான மூலதனமாய் பயன்படுத்தும் பெண் பாலியல் தொழிலாளர்கள் தம் உடலை மேற்சொன்ன வரையறைகளுக்குள் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அதாவது பெண்ணின் உடல் இன உற்பத்திக்கு மட்டுமேயானது, ஆணின் உடல் காமத்தை வெளிப்படுத்தும் வசதிகளும் வாய்ப்புகளும் உடையது என்ற இரு வரையறைகளுமே ஆதிக்கம் பெறும் சமூகச் சந்தை பாலியல் தொழில். உடல் இன்னும் இன்னும் தட்டையாக்கப்படும் இடம் அது.




இன்று ஆணுடலை பெண்ணுடலாக்கலாம். பெண்ணுடலை ஆணுடலாக்கலாம். அறிவியலும், சமூகமும் அதற்கான ஏற்பாடுகளையும் உரிமைகளையும் பெருவாரியாக வழங்கியுள்ளன. இந்த நிலையில் பெண்ணுணர்வு ஆணுணர்வு ஆகியவற்றை எப்படி வரையறுக்கலாம்? மென்மையான உணர்வுகள் எல்லாம் பெண்மை என்று கூறப்பட்டதை பெண்ணுடலாக மாறிய ஆணுடலில் எப்படி ஊன்ற முடியும்? என்ன இருந்தாலும் பதியனிட்ட உணர்வுகள் தாமே அவை? ஆக பெண்மை ஆண்மை என்பவை கூட கட்டமைக்கப்பட்டவை. வற்புறுத்தப்படுபவை.


பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் சொல்லியது நினைவுக்கு வருகிறது. ‘ஏதோ நம்ம உடம்புக்குள்ள இன்னொரு உடம்பு நுழைந்து வருவதாய் நாம நினைச்சுக்கிறோம். ஆனா, ஒரு சட்ட மாதிரி மாத்திக்கிற உணர்வு தான் எனக்கு இருக்கு. இதுல எனக்கு காமமும் இல்ல. அந்த உடம்பால என்ன கட்டுப்படுத்தவும் முடியாது’. எனில் ஒரே ஒரு குறிப்பிட்ட உடம்புடன் கொள்ளும் உறவும் அதற்கான கட்டுப்பாடுகளும் தாம் சமூகத்தில் அடிமைத்தனம். இது குடும்பத்தின் வரையறை. நீங்கள் கேட்கலாம், பாலியல் தொழிலும் சமூக அடிமைத்தனமில்லையா என்று. கண்டிப்பாக அது ஓர் ஒடுக்குமுறையின் வேறுவடிவம். ஆனால் திருமணத்தின் குடும்பத்தின் ஊறிப்போன கொத்தடிமை இல்லை. இரண்டிலும் பெண்ணுடல் அடிமைத்தனத்தின் முள்ளில் புரண்டு எழ நேரிட்டாலும் குடும்பத்துக்குள் ஆணுக்கான இன உற்பத்திக்கு ஒத்துழைத்தல், ஆணின் காம வெளிப்பாட்டுக்கு உதவுதல் என்ற பேரத்துக்குள் அடங்குதலாகிறது. பாலியல் தொழிலில் அதே பெண்ணின் காம உணர்வு பொருட்படுத்தப்படுவதில்லை. இன்னோர் ஆணின் இன உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த நுட்பமான வேறுபாடுகள் நாம் வாழும் சமூகத்தின் பாலியல் ஒடுக்குமுறைகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவலாம்.


ஓர் ஆணுடல் எந்தப் பெண்ணுடனான உறவையும் நினைவாக்கி தன் உடலில் பத்திரப்படுத்த வேண்டியதில்லை. அந்தப் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணைப் போன்றே ஒரு சட்டையைப் போல கழற்றி எறிந்து விடலாம். இன உற்பத்தியை ஒரு நினைவாக்கிக் கொள்வதான கருப்பை பெண்ணுக்கு மட்டுமே இருக்கிறது என்பது பெண்ணுடலுக்கான வாய்ப்பு. ஆனால் அதை சமூக விலக்குக்கான காரணமாக்கியதும் அதையே பாலியல் தொழிலில் தனது காமவெளிப்பாட்டுக்கான வெளியாக ஆண் கண்டறிவதும் ஏனோ நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.


உடலுக்கான உணர்வுகள் உற்பத்தியாகும்போது விடுதலையான தன்மையுடன் இருக்கையில் அவற்றின் வெளிப்பாட்டின் மீது மட்டும் தடைகளை இயக்குவது ஏன்? உடலும் உடலும் சமரசங்களற்று இசைவாய் இணையும் வடிவமென்பது இந்தப் பேருலகின் மீச்சிறு வடிவம் என்று கொள்ளலாம்
தானே?’


குட்டி ரேவதி

இரு நிகழ்வுகளும் ஒரே பொருளும்

சென்ற வாரம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் வே. ஆனைமுத்து அவர்கள் ‘இட ஒதுக்கீடு’ பற்றி உரையாற்றினார். முதிர்ந்த பெரியாரியவாதியும் சாதி மறுப்பாளருமான அவர் ஆற்றிய இரண்டு மணி நேர உரை நிறைய உண்மைகளை மாணவர்க்கு நேரடியாக எடுத்துரைப்பதாக இருந்தது. பொதுவாக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் சாதி மறுப்பு பற்றி விவாதிப்பதும் எடுத்துரைப்பதும் புலிப்பால் கறக்கும் வித்தை தான். அப்பொழுது தான் கல்லூரியில் நுழைந்த வயதினரே என்றாலும் ‘சாதி’யை சமூகத்தில் இயக்குவதில் எல்லோரும் கைதேர்ந்தவராயிருப்பதும் கண்கூடாகத் தெரிகிறது. சாதியைக் கற்பிக்க பல்கலைக்கழகமேதும் தேவையில்லை. அந்த அளவிற்கு எல்லா குடும்பத்திலும் பெற்றோர் செவ்வனே அதைக் கற்பித்திருக்கின்றனர்.





ஆனைமுத்து அவர்கள் சாதி ஒடுக்குமுறையின் துல்லியமான வரலாற்றுத் தகவல்களோடும் அரசியல் போக்குகளோடும் உரையாற்றியதையே மிக முக்கியமான சமூக நடவடிக்கையாக உணர்ந்தேன். அவர் மேற்கொண்ட விவாத வடிவம் இன்றைய நவீன ஒடுக்குமுறைக்கு முற்றிலும் பொருத்தமானதாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் மாணவர்களை நோக்கி அவர் கேட்ட கேள்வி, ‘எத்தனை பேரின் தாய் பட்டப்படிப்பு முடித்திருக்கின்றனர்?’ என்று. எவருமே கை உயர்த்தவில்லை. பின், ‘எத்தனை பேரின் தாய் உயர்கல்வி முடித்திருக்கின்றனர்?’ என்று. ஒரு சிலர் தாம் கை உயர்த்தினர். இந்த கேள்விகளுக்குப் பின் ஏன் அவர்கள் பட்டப்படிப்பு பெற முடியாமல் போனது என்றும் இட ஒதுக்கீட்டுச் சட்டம் எவ்வாறு பார்ப்பனியத்தால் பந்தாடப்பட்டதும் என்று கூறினார்.


மார்க்ஸும் மெக்காலேவும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ‘மேல் வருணத்திற்குப் பணிசெய்வதே மோட்சத்திற்கு வழி என்று நம்பும் இந்தியாவில் அனுமான் என்ற குரங்கை வணங்கும் மூடர்கள் வாழும் நாட்டில் எப்படி ஒரு பண்பாட்டுப் புரட்சி எழும்’, என்று மார்க்ஸால் தான் சந்தேகத்தை எழுப்ப முடிந்தது. மனுநீதி மக்களின் மனநிலையை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருக்கிறது என்றால் மனுநீதிச் சோழன் என்ற பட்டத்தைப் பெறுவதற்காகவே சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற ‘சமூக நீதியை’ செயல்படுத்தியிருக்கின்றனர். இந்த ‘சமூக நீதி’ என்ற வார்த்தை அமைப்பு பார்ப்பனியத்தால் வடிவமைக்கப்பட்டது. சரிசமமாக எல்லோருக்கும் எல்லாமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பார்ப்பனிய வேண்டுகோள் சமூகம் பொருளாதாரம் அரசியல் என எல்லா தளங்களிலும் ஏற்றத்தாழ்வுகளை மறைக்கும், மனுநீதியின் சமூகநீதியைச் செயல்படுத்துவதாகும்.




ஏன் மீனவர்களோ தாழ்த்தப்பட்டவர்களோ பழங்குடிகளோ மற்ற சமூகத்தினரைப் போல கல்வியைப் பெறமுடியவில்லை என்ற சமூக நிலைக்கும் நீளவிளக்கம் தந்தார். கடலுக்குச் சென்று ஆண்கள் பிடித்துவரும் மீன்களை ஊர்ஊராகச் சென்று விற்கும் வேலையை பெண்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் குடும்பத்தையும் குழந்தைகளின் கல்வி இன்னபிற தேவைகளையும் நிறைவேற்ற முடியாத வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்கள் பொதுப்போட்டியில் பங்குபெறும் தகுதியைப் பெறமுடிவதில்லை.




இவ்வாறெல்லாம் பேசியவர் ‘இட ஒதுக்கீடு’ அதாவது இடத்தை சாதி வாரியாக ஒதுக்கிக்கொடுப்பது என்பதே பார்ப்பனிய அணுகுமுறை என்றும் அந்த வார்த்தை அதன் சரியான அர்த்தத்தில், ‘இடப்பங்கீடு’ என்றே இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதாவது ‘விகிதாச்சார பிரதிநிதித்துவம்’ என்பதே ஆளப்படவேண்டும் என்பதற்கான அவரது வரலாற்றுப் பூர்வமான நிறுவுமுறையும் அரசியல் தத்துவமும் அனைத்துப் பிரிவு மாணவருக்கும் எழுச்சியூட்டுவதாக இருந்தது. என்னுடைய பார்வையில் இன்றும் சாதி சமூகத்தில் இயங்கும் முறையை எல்லா படைப்பாளிகளும் குறிப்பாகப் பெண் எழுத்தாளர்களும் பேசவேண்டும். அதை அதன் எல்லா நிலைகளிலும் நசுக்குவதற்காகத் தொடர்ந்து பேசவேண்டும். அப்பொழுது தான் இந்திய மண்ணில் பெண்ணியத்திற்கான தத்துவத்தையும் கண்டடைய முடியும் என்பது என் அணுகுமுறை.




பொங்கல் அன்று விஜய் தொலைக்காட்சியில் நடிகர் ‘சூர்யாவின் ஒரு கோடி ஒரு தொடக்கம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் அவர் தனது அகரம் அமைப்பின் மூலம் ஏழை மாணவர்க்குக் கல்வி வழங்கும் திட்டமான ‘விதை’ பற்றிப் பேசினார். இரண்டு மணி நேரம். நிறைய மாணவ மாணவிகள் வரவழைக்கப்பட்டுத் தாம் உயர்கல்வி தொடர முடியாமல் போன வறுமை நிலையைப் பற்றிக் கூறும் படிக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். சூர்யாவும் இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பற்றி அநியாயத்திற்குக் கவலைப்பட்டார். ஆனால் எங்குமே நமது தற்பொழுதைய அந்நிலைக்கான காரணங்கள் விவாதிக்கப்படாமலேயே விடப்பட்டன. இந்தப் புரவலர்களும் மறைமுகமாகக் கல்லூரி நிறுவனர்களுக்குத் தான் உதவுகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்கள் மேல்வர்க்கத்தினரையும் மேல்சாதியினரையும் வரவேற்பதற்கே இருக்கின்றன என்பது யாரும் அறியாததா என்ன? மேலும் பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு அடிப்படையான காரணம் சாதிப் படிநிலையே என்பதை விளங்கிக் கொண்டாலும் அதைப் பொதுத்தளத்தில் பேசுவதற்கான தயக்கமென்ன? தமது சாதி அதிகாரத்தையும் அதன் வழியாகப் பெற்றுக் கொண்டிருக்கும் சமூக மதிப்பையும் இழக்க நேருமோ என்ற தயக்கமா? வழியெங்கிலும் அகற்றப்படாத முட்கள்.




இன்னொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன். மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியின் தத்துவத்துறை ஏற்பாடு செய்திருந்த, ‘சனநாயகத்திற்கான அறங்களும் நடத்தையியலும்’ பற்றிய இரு நாள் கருத்தரங்கு. அத்துறை மாணவர்கள் யாவரும் பாதிரியார்களாகப் போகிறவர்கள் என்றாலும் அத்துறைத் தலைவர் முனைவர். லூர்துநாதன் அவர்கள் இந்திய ஆன்மீகத் தத்துவங்கள் தீண்டாமை, சமூக விலக்கு, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எப்படி உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன என்பதையும் அவை எவ்வாறு மக்களின் மனோபாவமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பதையும் ஆராய்ந்து முற்போக்கான பார்வைகளை மாணவர்களுக்கு அன்றாடக் கல்வியாக்கிக் கொண்டிருப்பவர்.


இக்கருத்தரங்கில் கிறிஸ்துதாஸ் காந்தி அய்.ஏ.எஸ் அவர்களும் ஆவணப்பட இயக்குநர் அமுதன் அவர்களும் ஆற்றிய உரைகள் தத்துவவியல் துறை மாணவர்க்கு முறையே அம்பேத்கர் வரையறுத்த சனநாயகம் மற்றும் ஊடகங்களின் சனநாயமும் அறமுறைகளும் என்பதாய் இருந்தன. எனது உரை இந்தியாவின் பெண்ணியத் தத்துவம் என்பதைப் பற்றியதாய் இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட சான்றோர்களின் இரு நாள் கருத்துரைகளுக்குப் பின்னும் மாணவர்களின் கேள்விகள், ‘அது அவர்களின் பிரச்சனை. அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?’, ‘அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்குறாங்க. எப்படிங்க சாதி ஒழியும்?’ ‘காந்தி அவர்களைக் கடவுளின் குழந்தைகள் என்றல்லவா குறிப்பிட்டிருக்கிறார். வேறென்ன அவர்களுக்கு வேண்டும்?’ என்கிற அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்குமே அந்தச் செய்தி வந்து சேர்ந்திருந்தது, முந்தைய நாள் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை என்ற ஊரில் உள்ள பெரிய கோவில்பட்டி என்ற கிராமத்தில் ஒருவர் வாயில் மலம் திணிக்கப்பட்டிருந்தது. இனி பேச வந்தக் கருத்தை எங்கிருந்து தொடங்குவது, நீங்களே சொல்லுங்கள்?




குட்டி ரேவதி

தமிழகப் பெண்ணிய இயக்கங்கள்

தமிழகத்தில் பெண்ணிய இயக்கங்களே இல்லை என்று சொல்வதினும் அவை வேறு வேறு பரிமாணங்களை அடைந்து விட்டன என்று சொல்வது மிகப் பொருந்தும். கட்டிடத் தொழிலாளர்களுக்காக உழைக்கும் பெண்ணியப் போராளி கீதாவைப் போன்றவர்கள் முழுமையும் அவர்களின் உரிமைகளுக்காகவும் பிரச்சனைகளுக்காகவும் உழைப்பவர். அர்ப்பணிப்பு மிக்கவர். அவ்வாறு ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருக்கும் ஒருங்கிணைக்கப்படாத பெண்களுக்காகத் தொடர்ந்து உழைக்கும் போது தான் அவர்களின் உள்ளார்ந்த புரையோடியிருக்கும் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டு அதற்காகப் போராட முடியும். இவ்வாறு மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களையும், சமூகத்தில் அடிப்படை உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்களையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் தொண்டு நிறுவனங்கள் தனித்த, காலத்திற்கேற்றவாறான, உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விவாதிக்கப்படுகின்ற பெண்ணுரிமைப் பிரச்சனைகளை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கின்றன. தமிழக அளவில் அவற்றைத் தீர்த்து வைப்பதான திட்டங்களுடனும் நிதி ஒதுக்கீடுகளுடனும் தொடங்குகின்றன. ஆனால் அத்திட்டங்கள் மிகவும் குறுகிய பார்வையுடன் வரையறுக்கப் படுவதாலும், ஒதுக்கிய நிதி முடிந்து போகும்போது திட்டங்கள் முடிவுக்கு வந்து விடுவதாலும் அவர்களின் பெண்ணியச் செயல்பாடுகள் நிறைவை எட்டாத பணிகளாகவே இருக்கின்றன.





இன்று தனிப்பட்ட அளவிலோ பொது வெளியிலோ பாதிக்கப்படும் பெண்களின் பிரச்சனைகளை விவாதிக்க, போராட என்று சமூக இயக்கங்கள் எதுவும் இல்லை. மீனவர் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற ஒட்டுமொத்தமாகத் தமது ஆற்றலை எல்லாம் திரட்டிப் போராடினாலும் அவர்களை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் அல்லது சமரசப்படுத்தவும் அரசியல் இயக்கங்கள் அல்லது கட்சிகள் இருக்கின்றன. இஸ்லாமிய மதப் பெண்களுக்காகப் போராடிவரும் புதுக்கோட்டையிலிருந்து இயங்கிவரும் ஷெரீஃபா தன்னால் இயன்ற வரை அப்பெண்களின் மீதான ஒடுக்குமுறையைத் தளர்த்துகிறார். அவர் மட்டுமே போதாது. அவரைப் போல நிறைய பெண்கள் மத ஒடுக்குமுறைக்கான இயக்கத்தைச் சமைக்க வேண்டியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட பெண்களுக்காவே போராடும் இயக்கங்களும் தேவைப்படுகிறது. அவர்களின் உண்மையான சமூக நிலையையும் எந்தெந்த உரிமைகள் அவர்களை இந்தக் கட்டுகளிலிருந்து விடுவிக்கும் என்று அறிந்த பெண்ணிய இயக்கமும் தேவைப்படுகிறது. அன்றாடம் ஊடகங்களில் வெளியாகும் பெண்களைப் பற்றிய தவறான கோணமும் மொழிதலும் உடைய செய்திகளை எதிர்த்துப் போராடவே இயக்கமொன்று தேவைப்படுகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் பெண்களை வெறுமனே தம் கொள்கை அதிகாரத்தின் கீழே செயல்படும் மந்தைகளாகவே நடத்துகிறது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில் தமிழகத்தில் நடந்த கூட்டங்களும் போராட்டங்களும் பேரணிகளும் ஆணாதிக்கச் சிந்தனையைத் தழுவியதாகத்தானிருந்தன. படுகொலையின்போது பெண்களின் மீது இராணுவத்தாலும் அரசு இயந்திரங்களாலும் நிகழ்த்தப்பட்ட பாலிய வன்முறையின் அரசியல் சூழ்ச்சித்திறனை, இயக்கத்தன்மையை ஒரு பேச்சாக்குவது கூட இங்கு சாத்தியம் இல்லாமல் இருந்தது. இவ்வாறு வேறுவேறு தளங்களில் நின்றும் அந்தந்த தளங்களுக்கான கருத்தியலை நுட்பமாக்கியும் அதைச் செயல்படுத்துவதான இயக்கங்கள் தாம் நமக்கு தேவையாக இருக்கிறது. நிறைய பெண்ணியப் போராளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால் நான் சிவகாமியையும் வ. கீதாவையையும் குறிப்பிட்டதும் அவர்கள் மீதான என் ஈர்ப்பும் பெண்ணியச் சிந்தனைத் தளத்தில் தான். எனக்கு அவர்கள் கருத்தியலுடன் வேறுபாடுகள் இருந்த போதும் அவர்கள் தொடர்ந்து ஊக்கமுடன் இயங்குவதும் உழைப்பதும் பிடித்தமானதாக இருக்கிறது. இயக்கமாய் பணியாற்றிக் கொண்டிருப்பதுடன் இயக்கத்திற்கான கருத்தியல் தத்துவத்தை வகுப்பவராகவும் சிவகாமி இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இன்றைய சூழலில் பெண்கள் எல்லோரும் ஒரே குடையின் கீழ் வந்து நின்று போராடமுடியாது. அது தேவையுமில்லை. வேறுவேறு மதம், சாதி, வர்க்கம் சார்ந்தவர்களாக இருக்கிறோம். உலகெங்கும் வேறுவேறு நிலங்களில் வசிப்பவர்களாகவும் அங்கங்கு நிலவும் அரசியல் சிந்தனைகளின் தாக்கம் நிறைந்தவராகவும் இருக்கிறோம். வேறுவேறு துறை சார்ந்த அறிவையும் அவற்றிற்கான அறிவுப்பெருக்கத்தில் ஈடுபடுவதிலும் முனைப்பாய் இருக்கிறோம். இந்நிலையில் அந்தந்த வட்டத்திற்கான பெண்ணுரிமைகளைப் பேசுவதில் தொடங்கிப் பின் விரிவான பிரச்சனைகளைப் பேச பொதுக்களத்திற்கு வரலாம். இயக்கங்கள் அடிப்படையான சிறிய உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினால் தான் சமூக அளவில் ஏற்றத் தாழ்வற்ற பெண்ணுரிமைகளைச் சாத்தியமாக்க முடியும். அதாவது தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் தன்னளவில் வெற்றி பெற்ற பெண்கள் அவர்கள் தமது சமூக மரியாதைகளுடன் மேன்மேலும் முன்னேறிக் கொண்டிருப்பதை வைத்து சமூகத்தில் எல்லா தரப்பு பெண்களும் முன்னேறிவிட்டனர் என்று கூறுவது அபத்தம். வறுமையினாலும் சமூக ஒடுக்கு முறைகளாலும் இன்னும்இன்னும் சமூகத்தின் கீழ்நிலையை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இருக்கும் வரை அந்த வெற்றி பெற்ற பெண்களின் வெற்றி முழுமையானதென்று அர்த்தமாகாது.




குட்டி ரேவதி

இரண்டடுக்குச் சிந்தனை - 3

உடலெங்கும் இறகுகள் நிரப்பப்பட்டதாகி விடுகிறது காதலெனும் உறவில். அதனால் தான் நேர தூரங்களை எளிதாகக் கடக்க முடிகிறது.

பெரும்பாலும் வீட்டின் கூரைகளைத் தவிர்த்த கூரைகளின் கீழேயே உறங்க நேர்வதால் வீட்டிலேயே விழித்தாலும் கூரையின் முகம் வேறாய்த் தெரிகிறது.

கடலின் விளிம்பைப் போல் தனிமையில் கொண்டு சேர்க்கிறது, மீண்டும் மீண்டும் ஒரே பதிலையே அளிக்க தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் ஒற்றைக் கேள்வி.

பண்டிகை நாட்களின் மதியத்தில் தூக்கம் வழியும் கண்களின் முன்னே கொடியில் காய்ந்து கொண்டிருக்கிறது வெயில்.

இரைந்து கொண்டேயிருக்கும் இதயத்துடன் இருந்த அந்தப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணீர்த் துளிகளாகி உருண்டோடி கடலின் மறு எல்லை சேர்ந்தன.

பியர் நிறைந்த கோப்பையில் நுரைத்திருக்கும் கசப்பினுடன் தான் ஆண்களின் உறவில் ஈர்ப்பும்.

நரகத்தின் எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரிப்பதைப் போல இருக்கிறது வாழ்க்கை என்கிறாள் தோழி. வேறெங்கே நரகம் இருக்குமென்று நம்புகிறாள் அவள்?

அடிக்கடி தனக்குத் தானே அன்பளிப்பு கொடுத்துக் கொள்பவர்களாய் மாற வேண்டும் தோழிகள். அதில் முதலாவது காதல்.

அந்தக் கவிஞனின் வரிகளில் மறு உலகங்கள் பிறக்கின்றன. அப்படித் தானே இன்னோர் உலகுக்குள் நுழைய முடியும்.

நீண்ட இடைவெளி கழித்து இன்று அவரைக் காண நேர்ந்தது எனைக் கடந்து சென்ற போது. வாய்ப்பிருந்தால் தொடக்கத்திலிருந்தே உறவைத் தொடங்கலாம்.

பாலைவன வெளியில் இரு புறமும் திறந்து கொள்ளும் ஒற்றைக் கதவைப் போல அர்த்தமற்றது திருமணம் எனப்படுகிறது.

அடர்ந்த புல்வெளியையும் நதியோடும் வண்டல் கரையையும் உன் கண்ணோரம் கண்ட பின் எப்படி அதன் வழியே நடவாமல் தவிர்ப்பது?

மனிதர்களுடன் பேசமுடியாத தூரங்களில் இறுகிப் போயிருக்கும் மலைகளை வருடுவதற்கே இருக்கின்றன மேகங்கள்.

ஒரே மின்னஞ்சலில் ஓர் இனப்படுகொலைக்கான வார்த்தைகளைப் பொதிந்து அனுப்ப முடிவதான காலகட்டத்திற்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம்?

குட்டி ரேவதி

'தேரா மன்னா!’ என்றாள் கண்ணகி.





ரேணுகாவின் கணவர் ஜமதக்னி முனிவர்.ஒவ்வொரு நாளும் கணவர் செய்யும் பூஜைகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஆற்றின் மண்ணைக் குழைத்து அன்றன்று செய்யப்படும் பானையில் நீர் கொண்டு வரவேண்டும். அவ்வாறு ஒரு நாள் ஆற்றங்கரை நிற்கையில் அதன் கண்ணாடி போன்ற நீர்ப்பரப்பில் வானில் மேகங்களூடே மிதந்து சென்ற தேவனின் பிம்பத்தைக் காண்கிறாள். அவனின் அழகில் ஒரு கணம் மயங்கிய அவள் பின் தெளிந்து பானை செய்ய ஈடுபடுகையில் பானை செய்ய வரவில்லை. இதை தனது பிரக்ஞையால் அதாவது தனது ஞான திருஷ்டியால அறிந்த அவளுடைய கணவர் ஜமதக்னி முனிவர், தனது மகன் பரசுராமனிடம் அவன் அம்மாவின் தலையை வெட்டி வரும்படி உத்தரவிட்டார். பரசுராமனும் என்ன் ஏதென்று கேட்காது உடனே சென்று ரேணுகாவின் தலையை வெட்டுகிறான். தன் மகன் தன் ஆணையை உடனே நிறைவேற்றியது கண்டு மகிழ்ந்து என்ன வரம் வேண்டுமெனக் கேட்கிறார் ஜமதக்னி. தன் தாய் உயிருடன் வேண்டுமென்று கேட்க வரமளிக்கப்படுகிறது. இக்கதையின் ஊடே நெய்யப்பட்டுள்ள செய்தி, ‘இன்னொரு ஆணின் புற அழுகைக் கண்டு ரசித்தாலும் உனக்கான மந்திர சக்தியான அல்லது பானை வனையும் இயல்பான திறன் என்றாலும் அது அழிந்து போகும். நீ என்னிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் இந்த எச்சரிக்கை நிறைந்த பிரக்ஞையுடன் இருக்கவேண்டும். என் மகனென்றாலும் அவனும் இவ்விதிகளின் வாரிசு தான். உன் தலையை வெட்டி வா என்றாலும் கொண்டு வருவான்’, என்பதே. இது ஒரு கதை. பெண் சமூகத்தின் மீதே விடுக்கப்படும் எச்சரிக்கை. இது போன்று ஆயிரக்கணக்கான கதைகள் உரையாடல்களூடேயும், புனைவுகளூடேயும், கற்பனைகளூடேயும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு பெண்களின் பிரக்ஞையில் விதைக்கப்பட்டிருக்கின்றன. இவை மற்ற தாய்வழிச் சமூகக் கதைகளையும் பெண்ணை முதன்மைப்படுத்திய கதைகளையும் கூட தாக்கின.


இன்றைய நமது நம்பிக்கைகள் நினைவுகளின் குவியல்களாய் இருக்கின்றன. புனைவுகளோ, கேள்விப்பட்டவையோ, கற்பனைகளோ, கனவுகளோ ஏன், நம் ஆசைகளோ கூடத்தான் நம்பிக்கைகளாக மாறி நம்மிடம் தங்கிப் போகின்றன. அப்படித்தான் கற்பு பற்றியதும். பல சமயங்களில் சாத்தியங்கள் அற்றவையாகக் கூட இருக்கின்றன அப்படி நாம் சேர்த்து வைக்கப் பணிக்கப்பட்ட நம்பிக்கைகள். ‘பெய்க மழை, பெய்க!’ என்று கூறும் போது பெய்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இம்மாதிரியான மிகைகளோடு பெண் வாழ்வை இணைக்கும் கதைகள் பத்தினித் திறத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டவை. அவை சனாதனத்தின் விதிகளைப் பெண்களும் தமது வாரிசுகளும் மீறாமல் இருப்பதற்காகக் கற்பிக்கப்பட்டவை.


கண்ணகியின் முக்கியமான பிம்பமான, அநீதியின் போது கோபமாய்ச் சீறிய தலைவிரி கோலமான பெண் என்பது மறைக்கப்பட்டு கோவலன் மாதவியிடம் தன் முழு செல்வத்தையும் இழந்து வரும்வரை பொறுத்திருந்ததும் அவள் பத்தினித் தெய்வமானதும் தான் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. இளங்கோவடிகள் இக்காப்பியத்திற்கு பத்தினித் தெய்வம் என்று பெயரிடவில்லை. சிலப்பதிகாரம் என்று தான் பெயரிட்டிருக்கிறார். ஒரு பெண்ணின் வர்க்க அடையாளமான சிலம்பை வைத்தே நீதிக் கேட்கும் கதைப்பாங்கை உருவாக்கியிருக்கிறார். அநீதி இழைத்த அரசு அதிகாரத்திற்கு எதிராக ஒரு சாதாரணப் பெண் நீதிக் கேட்கப் பொங்கியெழுந்த திறம் தான் கதையின் கயிறு. அது மட்டுமன்றி சிலப்பதிகாரம் தொடக்கத்திலிருந்தே சோழ அரசின் புகழைப்பாடி வந்ததுடன், இடையிடையே அந்நாட்டு மக்களின் இயல்பையும் அறத்தையும் பேசியதாகவும் இருந்தது. பாண்டியன் மண்ணைச் சேர்ந்ததும் முற்றிலும் எதிரான சூழ்நிலை விவரிக்கப்படுகிறது. கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலனுள்ளம் கவர்ந்தன என்று தன் ஊடலுள்ளம் உள்கரந்தொளித்துத் தலை நோய் வருத்தந் தன் மேலிட்டுக் குலமுதல் தேவி கூடாதேக....(சிலப்பதிகாரம்) என்ற நிலையை எதிர்கொள்கின்றனர் கண்ணகியும் கோவலனும். கோவலன் கொலையுண்டதும் அரற்றும் கண்ணகியின் பக்கம், தன் நாட்டு மன்னனால் ஒரு கொடுமையைச் சுமக்க நேர்ந்த பெண்ணின் பக்கம் தாமும் நிற்பவராக மதுரையின் மக்கள் கூடியிருக்கின்றனர். கண்ணகி தான் அறிந்த அறங்களுக்கெல்லாம் அந்நியமானதாகப் பாண்டிய மன்னனின் ஆட்சிமுறையைக் உணர்கிறாள். அறம் பேசுகிறாள். ‘ஆராய்ந்து அறியாத மன்னனே, நான் யாரென்று கூறுகிறேன்!’ என்று மன்னனை முறையிட அழைக்கிறாள்.


இப்படிப் பேச, வழக்குரைக்க கற்புக்கரசியாக, பத்தினித் தெய்வமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முறையான நீதி நெறிமுறைகளை, அறங்களை அறிந்திருத்தலும் அதைப் பேசும் திறமுமே போதுமானது. ஆக, மேற்சொன்ன ரேணுகா போன்றோரின் கதையை கண்ணகி போன்றோரின் கதைகளுடன் பொருத்திப் புரிந்து கொள்ள வற்புறுத்தும் ஆண்களின் வாதம் தான் பத்தினித் தெய்வமும் கற்பும். அரசனின் அதிகார நிழலிலேயே நடந்துசெல்ல விரும்பும் கோழைகளின் வாதம் தான் பத்தினித் தெய்வமும் கற்பும். அவ்வாதங்கள் எல்லாம் அழிந்து போகும்படியாக ஒலிக்கட்டும் எண்திக்கும், ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்ற கண்ணகியின் அறச்சீற்றம்!


குட்டி ரேவதி

பெண்ணிய அறிவுஜீவிகள்



தமிழ்ப் பெண்ணிய அறிவு ஜீவிகள் முக்கியமான இருவரின் கருத்தியல் மொழிகளை உள்வாங்கிக் கொள்வதில் நான் தீவிரமாயிருந்திருக்கிறேன். எழுத்தாளர் சிவகாமி மற்றும் வ. கீதா. தமிழகத்தில் நிலவும் அரசியலையும் அது சார்ந்த அதிகாரமயமான நிகழ்வுகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பெண்ணியக் கருத்தாக்கத்தை உருவாக்கி வளர்த்தெடுப்பதிலும் அதை விவாதத்திற்கு உட்படுத்துவதிலும் இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை எடுத்துள்ளனர். அறிவுத் தளத்தில் இவர்கள் இருவருமே சமூகத்தின் வேறு வேறு விஷயங்களைப் பேசினாலும் தனிமனித அளவில் தம் சிந்தனைச் செழுமையின் மீது தனியே நின்று தொடர்ந்து இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.





தமிழகக் கிராமங்கள் எங்கும் இரு வருடங்கள் சிவகாமியுடன் தொடர்ந்து பயணித்துப் பெண்களைக் கூட்டம் கூட்டமாகச் சந்தித்து பெண்ணுரிமை குறித்தும் பெண்கள் ஒருங்கிணைவதன் அவசியம் குறித்தும் பேசி வந்திருக்கிறோம். அவரின் சிந்தனையின் மூலம் எதுவாக இருந்தாலும் அது வெளிப்படும் அணுகுமுறை அழகியல் பூர்வமானது. நுட்பமானது. முழுமையானது. ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதால் தான் இத்தகைய ஆளுமையும் போராட்ட உணர்வும் அவருக்குச் சாத்தியப்பட்டதுடன் அவருடைய தொடர்ப்பணியும் அதற்குக் காரணம் என்று வியக்கிறேன். பொது வாழ்விற்கு வரும் பெண்கள் பெறும் விடுதலை உணர்வு, விடுதலை வெளிச்சத்திற்கு வராத பெண்ணினத்தின் மற்ற பகுதியினருக்கும் ஆதரவான குரலாக இருந்தால் தான் நாம் செல்லும் திசையை நோக்கி மற்ற பெண்களும் நகர்வர் என்று அவர் அடிக்கடி கூறுவார். அல்லது நாம் தொடங்கிய பாதையே நம்மைப் பின் தொடரும் எவரும் பயணிக்க லாயக்கற்று கல் முள் மூடிய வெளியாகிவிடும் என்பது அவர் முன்வைக்கும் செயல்பாட்டு மாதிரி. சாதியையும் அது ஒடுக்கும் பெண்ணின் உடலையும் இணைத்து நுணுக்கமான அரசியலாக்கிப் பேசியதில் இந்தியாவிலேயே அவர் அளவுக்கு யாரும் இருக்க முடியாது. அவரின் ‘உடலரசியல்’ என்ற நூலை வாசித்தவர்கள் அறிவர்.


வ. கீதா, பெண்களுக்கான எந்தப் போராட்டம் என்றாலும் அந்தக் குழுவில் ஒருவராய் முன்னணியில் நின்று அப்போராட்டத்திற்கான தர்க்கத்தை விளக்கி அதற்கான நியாயத்தைப் பேசுவதில் தயங்கமாட்டார். தொடர்ந்து பெண்ணிய வாதங்களை முன்வைத்துக் கொண்டே இருக்கும் அவர் இம்மண் சார்ந்த பெரியாரின் தத்துவத்தை அறிவுப்பூர்வமாகவும் களப்பூர்வமாகவும் உள்வாங்கியவர். மேற்குறிப்பிட்ட இருவருமே தாம் ஆற்றிய பல வருட களப்பணிகளுக்குப் பின்பே பெண்ணுரிமைக்காகப் பேசும் எழுச்சிமிக்க இடத்திற்கு நகர்ந்துள்ளனர். இத்தனைக்கும் சிவகாமி ஓர் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர். நவீன இலக்கியத்தின் நெருக்கமான தொடர்முனையில் இருந்து வருபவர் பின்னவர்.


ஆனால் இன்று பெண்ணியம் பேசுவோரும் பெண்ணியலாளர்களும் தகுந்த தத்துவப் பின்புலமின்றி வாதங்களில் ஈடுபடுவது ஏற்கெனவெ ஆணாதிக்கச் சிந்தனைமயமாக இருக்கும் சமூகத்திற்கு இன்னும் பலவீனமான பெண்ணிய முகத்தையே காட்டுவதாக இருக்கும். அது மட்டுமன்றி இது வரை பல காலங்களிலும் வேறு வேறு பெண்ணியலாளர்கள் வென்றெடுத்துத் தந்த விடுதலை உணர்வைத் தக்கவைத்தவாறே தான் அடுத்த கட்டங்களுக்கு நாம் நகரமுடியும். நமது பெண்ணியச் சிந்தனைகள், நம்மைப் போன்று சமூகத்தின் பொதுவெளிக்கு வந்து பகிர்ந்து கொள்ளாதவர்களுக்குமான குரல்கள் தான் என்று உணர்ந்து செயலாற்றும் கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. இல்லையெனில் தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும்.




இன்று இணையம் எங்கிலும் ‘உடலரசியல்’ பேசும் கவிதைகள் தீவிரமாக விமர்சிக்கப்படுகின்றன. ஏற்கெனவே இம்மாதிரியான கவிதைகளுக்கான அரசியலைப் பேசி வென்றெடுக்கும் நமது முயற்சி இன்னும் முதிராத நிலையிலும் அதற்கான விரிவான உரையாடல் மொழியை உருவாக்காத நிலையிலும் இம்மாதிரியான கவிதைகள் தமக்கு உரித்தான நியாயங்களை சரியான சிந்தனைப் பின்புலமில்லாமையால் பெறாமலேயே போகின்றன. பாலியல் விடுதலை உணர்வை மொழிவதும் அது குறித்த கவிதைகளை எழுதுவதும் அவரவர் உரிமை. பெண்ணியத்தின் எழுச்சியில் அவை நவீன வடிவங்கள் எடுத்துக்கொண்டே தானிருக்கும். ஆனால் அக்கவிதைகள் எழுதப்படும்பொழுதும் விமர்சிக்கப்படும் பொழுதும் அதை எதிர்கொள்ளும் அவரவர் சார்ந்த விவாதத்திற்கான வாதத்தையும் தர்க்கத்தையும் கூட முன் வைக்க வேண்டியிருக்கிறது. மேலும் வெறுமனே பெண் எழுத வருவதே ஒரு பெருத்த அடையாள மதிப்பீடாகக் கருதப்பட்ட சமூகக் காலகட்டம் முடிந்தே போய்விட்டது. பெண்ணிய அரசியலை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த ஆதிக்க சாதியினர் தங்கள் இடங்களையும் வெளிகளையும் புனைவுகளாய் குறுக்கிக் கொண்டதும், சமூக அரசியலுடன் பெண்ணின் இருப்பைப் பேசியதும் கூட மாறியதுடன் பல தரப்புகளில் அதாவது நமது எழுத்து, அதில் வெளிப்படும் விடுதலையின் மொழி, அதனுடன் நாம் கொண்டிருக்கும் தொடர் அறச் செயல்பாடுகள், அதை வெளிப்படுத்தும் தனி மனித ஆளுமை என எல்லாவற்றையுமே இன்றைய சமூகம் பெண்ணியலாளர்களிடம் எதிர்பார்க்கிறது.


இன்று அம்மாதிரியான தாக்குதலை எதிர்கொள்வதற்கான தனிமனித சிந்தனைப் புலமும் அதை ஆதரிப்பதற்கான செயல்பாட்டுத் தளமும் ஏற்கெனவே வெற்றிடமாகி இருக்கின்றன என்பது வெளிப்படையாகிறது.
குட்டி ரேவதி

முழுநிலவு



முழுநிலவின் நீர்த்தேக்கத்தை உள்ளங்கையால் அள்ளி
அதன் நீர்மை உணரும் அவாவினைப் போலவே
காதலுணர்வும் ஒவ்வொரு பருவமும் சீண்டிப் பார்க்கிறது
நிலவு எனைத் தொடரும் பயணமும் மூர்க்கமானது
சதைத்த முகத்துடன் முழங்கால்களுக்கிடையே
துக்கம் புதைத்த இளம்பெண்ணைப் போல
அதை அடையாளம் கொண்ட நாள் முதல்
அது கிளர்த்தும் தாபம் காதலுக்கானதை விட அதிகம்
உயர்ந்த இருள்தாங்கும் கிளைகளுக்கிடையே அதன் தனிமை
இருளால் விளைந்ததில்லை
மனிதக்கைகளின் சமைதலுக்கு அப்பாற்பட்ட அழகாலும்
உயிர்களின் துயரடர்ந்த உறக்கத்தாலும்
கொஞ்சமும் கனம் குறையாத கனவை
ஒரு பாதரசக் குமிழியாக்கி மிதக்க விட்டேனா நான்
உனக்குமானது அதன் கன்னக் குமிழி முத்தமிடு முத்தமிடு
நிலவு தோள்களில் யுகம்யுகமாய்ச் சுமக்கும்
நாகரீகத்தின் கண்ணீர்
குடமாகித் தளும்பி என் கண்களின் விளிம்பைத் தேடுகிறது
உறக்கமிலா நிலவின் குருதி
அணையாத நெருப்பாகி என்னுடலை இரவெல்லாம் சுடும் சுடும்
அதன் எரிவெளிக்குள் ஒரு கிழவி முடங்கிக்கிடப்பதான
நமது கதைகளெல்லாம் அவளுக்குப் புனைவுகளல்ல



*



நிலவின் மதுவைக் குடிப்பவள் நான்
அதன் வெறியூட்டு விளையாட்டில் இரவைக் கழிப்பவளும் யானே
இரவெனும் வயல்வெளியின் நீள அகலங்களைப்
பொருட்படுத்தாத
ஒரு மீனாகிய அதன் நீச்சல் நீர்த்திவளைப் பிழையாது
விரிகிறது பாரேன்
உறக்கத்தை சதுரங்களாய்த் துண்டிக்கும் கனவுக்குள்
பால்வெளியை வரையும் போது
நீ உன் கண்களை அந்நிலவொளியால் தான் நிரப்பிக்கொள்கிறாய்
காமரசம் நிலவூறி
உன் கண்ணில் சொட்டுச்சொட்டாய் சொட்டுகிறது அரசனே
தாங்கவொணா வெறிகொண்டலையும் என்னுயிர்க் குட்டிகள்
கானகத்தின் தொலைந்த திசைகளாகி
காற்றைத் துணைக்கு அழைக்கும் வேளையில்
நிலவென்று வந்து முலையூட்டும் மூதாதையாய் வந்திறங்குகிறது
நீர்ப்படிகக் குளத்தின் நடுவே
ஆகவே கேட்டுக் கொள்
என் பிரக்ஞையை அதனுடலுக்குக் கடத்தும் வேளையில் மட்டுமே
மரணத்துடன் சமரசம் செய்து கொள்வேன்.






குட்டி ரேவதி

சரோஜா என்றொரு பெண்

சரோஜாவைப் பற்றி நிறைய எழுதலாம் என்றாலும் அவளைப் பற்றிய இந்த ஓர் அறிமுகமே போதுமானது. அவள் எனக்கு என்ன உறவு என்பது கூட முக்கியமில்லை. அவள் என் வயதொத்த ஒரு பெண் என்பது மட்டுமே அவளை அறிமுகப்படுத்தப் போதுமானது. சென்னையில் நானும் அவளும் தனியே சில வருடங்களைக் கழிப்பது என்று முடிவெடுத்தோம். நான் என் தொழில் நிமித்தமும் அவள் அவளின் கலை நிமித்தமும். அவள் ஒரு ரஷிய பாலே நடனக்காரி. ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்நடனத்தைக் கற்றுக் கொண்டதுடன் குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியருக்கும் சென்னையில் உள்ள ஒரு நடனப்பள்ளியில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நடனத்தின் மீது அவளுக்கு இருந்த விருப்பும் ஈர்ப்பும் தீராதது என்பதை நான் அறிவேன்.


காலையில் அவள் எழுந்ததுமே பாவாடையை அள்ளி முழங்கால்களுக்குள் இடுக்கிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து முந்திய நாள் வாங்கி வந்த ஆப்பிள் பழங்களைத் தின்னத் தொடங்குவாள். பல் துலக்குவது அன்றைய காலைக் கடனின் கடைசிப் பணியாக இருக்கும். சில ஆப்பிள்கள் உள்ளே இறங்கியதும் அன்று உடுத்த வேண்டிய ஆடைகளுக்கான தேர்வில் ஈடுபடுவாள். அதில் பீரோவில் இருக்கும் மொத்த துணியும் தரைக்கு வந்து அறையை நிரப்பியிருக்கும். பின் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்குப் பொருத்தமான உள்ளாடைகளைத் தேடி எடுக்கும் போது பெரும்பாலும் அவை அழுக்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. அவற்றை சோப்பு நீரில் அலசி வீட்டின் பின்னாலிருக்கும் வாகை மரத்தின் கீழே கட்டப்பட்டிருக்கும் கொடியில் மிகுதியான வெயில் படும்படியாக உலரப் போட்டுவிட்டு வந்து டிவியின் முன்னமர்ந்து சில திரைப்படப் பாடல்களைக் கேட்கத் தொடங்குவாள். பார்ப்பாள். உற்சாகம் பீறிட்டு நடனமும் ஆடத் தொடங்குவாள். மற்றவரின் இருப்பு குறித்த பிரக்ஞையே அவளுக்குப் பெரும்பாலும் இருக்காது என்று தான் தோன்றும். அதற்குள் நான் புறப்பட்டு வெளியே வந்திருப்பேன்.


எனக்கு அவளைக் குறித்த கவலை மேலிட பத்து மணி வெயிலின் சாலையில் என் இரு சக்கர வண்டியினை ஓட்டத் தொடங்குவேன். நிறைய சம்பாதிப்பாள். எந்தப் பொறுப்பும் எடுத்துக் கொள்ள மாட்டாள். அவள் குடும்பத்திலிருந்து யாரேனும் தானே முன்வந்து அவளிடம் பேச முற்பட்டாலோ அவர்களுக்கு நிறைவளிக்கும் சில உற்சாகமான பதில்களை அளித்து விட்டு முடித்துக் கொள்வாள். இந்த உலகில் அவள் தனியாக வாழ்வதைப் போன்ற நிலையை முழுமையாக நிலைநிறுத்திக் கொள்பவள் போன்ற பிரமையும் மயக்கமும் அவளைச் சூழ்ந்திருக்கும். பின் அந்த நாளைய அலுவல்கள் என் கழுத்தை இறுக்க அவளை முற்றிலும் மறந்து போயிருப்பேன்.


வீட்டுக்கு களைப்புடனும் இரவு உணவுக்கு ஏதேனும் சமைக்க வேண்டுமென்ற திட்டத்துடனும் வாயிற் கதவைத் திறந்த ஒரு நாள் வரவேற்பறையில் ஐந்தாறு முயல்கள் ஒவ்வொன்றும் சில கேரட் துண்டுகளுடன் ஆங்காங்கே சிதறி ஓடின. நான் வீறிட்ட உணர்வில் இருந்தேன். என்ன நடந்திருக்கிறது என்று நானே யூகிப்பதற்கு சில நிமிடங்கள் எடுத்தன. சரோஜா மாலை நேரத்தில் வீட்டிற்கு அந்த முயல்களை வாங்கி வந்திருக்கிறாள். பசிக்குக் கொறிக்க கேரட் துண்டுகளையும் போட்டு விட்டு மீண்டும் வகுப்பெடுக்கப் போயிருப்பாள். அவள் வர இரவு பத்து மணிக்கு மேலாகும். அவள் வரும் வரை ஒன்றும் செய்ய ஓடாமல் அந்த முயல்குட்டிகளைப் பார்த்த வண்ணமே கழித்தேன். முயல் குட்டிகள் ஏற்படுத்தும் கவிச்சை அந்த அறையை நிறைத்திருந்தது. ஜன்னல் கதவுகளைத் திறக்கவும் பயமாக இருந்தது. ஏற்கெனவே வீட்டுச் சொந்தக்காரிக்கு எங்கள் மீது ஒரு ஜாக்கிரதை உணர்வும் தீவிரக் கண்காணிப்பும் இருந்தது. இரு பெண்கள் தனியே வாழ்வது அவளுக்கு எப்பொழுதுமே கேள்விக்குறியான விஷயமாகவும் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் எங்களைத் துருவித் துருவிக் குடைந்து எங்கள் அன்றாடப் பணிகளை அறிந்து கொள்வதும் அந்த அம்மாவுக்கு கைவந்த கலையாக இருந்தது. சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்த முயல்குட்டிகள் பின்பு ஏதோ அவற்றின் இடத்தில் நான் ஒண்ட வந்த்து போல என்னைப் பொருட்படுத்தாது கேரட்டைக் கொறித்துக் கொண்டும் ஒன்றையொன்று கொஞ்சிக்கொண்டும் இருந்தன. எனக்கு எரிச்சலாகவும் அசெளகரியமாகவும் இருந்தது. என் மனதிலிருந்து அவற்றின் நினைப்பை உதறி விட்டுப் பணியில் ஈடுபட முடியும் என்று தோன்றவில்லை. அன்றைய நாளின் பணிச்சுமை கூடியதாயும் இன்னும் முடியாததாயும் உணர்ந்தேன்.


இம்மாதிரியான வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிப்பதற்கான பக்குவம் எனக்கு எப்பொழுதுமே இருந்ததில்லை. நினைத்த பொழுது நினைத்த ஊருக்குக் கிளம்பிச் செல்லும் பழக்கம் இருந்ததுடன் நான் அப்படி வாழவே மிகவும் விருப்பமுடையவளாக இருந்தேன். இதற்கிடையில் என்னால் இம்மாதிரியான பிராணிகளை கவனிப்பதென்பதோ ஏன் ஒரு தொட்டிச் செடியை வளர்ப்பதென்பதோ கூட மிகவும் சிரம்மாமன விஷயமாக இருந்தது. சரோஜாவின் நிலை இன்னும் மோசம். காலை பத்து மணிக்குக் கிளம்பிச்சென்றாளானால் இரவு பத்து மணிக்கு மேல் தான் வருவாள். இந்நிலையில் எதற்கு இம்மாதிரி வேண்டாததையெல்லாம் தலையில் இழுத்துப் போட்டுக் கொள்கிறாள் என்று என் எரிச்சல் பொங்கியது.


நானும் அவளும் அதிகமாக உரையாடிக்கொள்ள நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தோம். சனி, ஞாயிறுகளில் கூட தோழிகளைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு மாலையில் கிளம்பிப் போய் இரவில் நடுநிசியில் ஆட்டோவில் வந்து இறங்குவாள். அக்கறையின் பேரில் அவளிடம் ஏதாவது கேட்டால் கூட என்ன பதில் கிடைக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். என்னை அவள் மதித்தாலும் அவள் விஷயங்களில் யார் மூக்கை நுழைப்பதையும் அவள் விரும்பியதே இல்லை.





ஒரு முறை செஞ்சிக்கோட்டைக்கு இருவரும் சுற்றுலா செல்லலாம் என்று கிளம்பிச் சென்றோம். போய்ச் சேரும் வரை பேருந்தில் தூங்கிக் கொண்டே வந்தாள். இறங்கியதுமே ஒரு ஹோட்டலைத் தேடி உணவை முடித்துக் கொண்டோம். பின் செஞ்சிக்கோட்டையின் அடிவாரத்தில் இருந்தப் பெரிய புளிய மரத்தினடியில் பாறைகளில் தலை சாய்த்து உறங்கிப் போனாள். அவள் தூக்கம் விழிக்கும் வரை நான் மரத்தினூடான வானத்தை அளந்து கொண்டிருந்தான். பின் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எழுந்ததும் பசிக்கிறது என்றாள். உணவகம் சற்று சொலைவில் இருந்ததால் நடப்பதற்கு மாச்சப்பட்டுக் கொண்டு அங்கேயே அருகில் கிடைத்த மாங்காய்த் துண்டுகளை வாங்கிக் கடித்தாள்.


மென்று விழுங்கியவாறே, ‘காதலைப் பத்தி நீ என்ன நெனைக்கிற?’
‘யாரப்பத்தியாவது நெனக்குறதுன்னா நெனைக்கலாம். காதலைப் பத்தி என்ன நெனைக்குறது?’.
‘’கடிக்காத....என்ன சொல்லு?’ என்றாள்.
‘இன்னும் வரல எனக்கு. அதுக்கு நேரமே இல்லாம சந்தர்ப்பமே இல்லாம இருக்கே’
‘எனக்கு வந்துருச்சு போல இருக்கு’
‘யார் மேல?’
‘நேத்து நானும் அவரும் ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டோம்’ என்றாள்.


எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அல்லது அவளும் அதைப் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தது எனக்கு ஒரு வித ஏமாற்றத்தைத் தந்த்து.




நான் வீட்டு வாசலுக்கு வந்து வீட்டின் முன் நீளும் தெருவின் முனை வரை வந்து அவள் வருகிறாளா என்று காத்திருந்தேன். அந்தத் தெரு வெறிச்சோடி சில நாய்கள் ஆங்காங்கே நடுத்தெருவில் அயர்ந்து கிடந்தன. எனது அணக்கத்தில் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு ’நீதானா?’ என்ற அர்த்தத்தில் மீண்டும் தரைக்கு தலையைக் கிடத்தின. அந்தத் தெருவில் எல்லோருக்கும் சரோஜா மிகவும் பிரசித்தம். எவ்வளவு தாமதமாக வந்தாலும் எந்த வீட்டின் உள்ளிருந்தோ குரல் கேட்கும், ‘என்ன சரோஜா? இப்பத் தான் வர்றியா? ஒரு வாய் சாப்பிட்டுப் போ?’, என்று. நாய்கள் வாலை ஆட்டி அவள் பின்னால் வரும். மிக நிச்சயமாய் ஒரு பாக்கெட் பிஸ்கெட் வாங்கி வருவாள் என்று அவை அறிந்திருக்கும். இன்னும் வரவில்லை. எனக்குக் கவலை மேலிட்டது. அந்தத் தெருவின் வளைவைக் கடந்து அடுத்த தெருவின் தொடக்கத்திற்கு வந்திருந்தேன். ‘மாம்பூவே, சிறு மைனாவே, மச்சானின் பச்சைக்கிளி’ என்று கொஞ்சம் அதிகமான குரலுடன் பாடிக்கொண்டே வந்தாள். இருட்டில் அவள் குரல் மட்டும் கேட்டதே அன்றி அடையாளம் தெரியவில்லை. பாடல் தொடர்ந்தது. மெல்ல குரல் அருகில் கேட்டது. அவள் கையில் ஒரு கூண்டு கிளியுடன் ஆடிக்கொண்டிருந்த்து. அதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு முட்டிக் கொண்டுவந்த்து.




தோன்றுவதையெல்லாம் செய்து பார்ப்பதில் அவளுக்கு நிகர் அவள் தான். அவை ஒரு பொழுதும் சாகசங்களாகத் தோன்றியதேயில்லை. அவள் சூழலுடன் ஒரு விதமான கிறக்கம் கசியும், உண்மை ஊற்றெடுக்கும் உறவை மட்டுமே தக்கவைத்துக் கொண்டிருந்தாள். அவளை யாருமே கடிந்து ஒரு வார்த்தைப் பேசமுடியாத அளவுக்கு பிரியத்தையும் அதற்கான நேர்மைகளையும் வைத்திருந்தாள். தனிமையுடனான இயற்கையின் சம்பந்தங்களையும் அவள் கற்றுத் தேர்ந்திருந்தாள். அது புறவயமான வெளிப்பாடாக இல்லாமல் அவளது ஆளுமையின் உடையாக மாறியிருந்தது. சமூகத்தின் சட்டைகளைக் கழற்றி விடுகிறாளோ என்று தோன்றும் அளவிற்கு அசாத்திய இருப்பாக அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.




திருமணத்திற்குப் பின் சில வருடங்கள் கழிந்து தோளில் குழந்தையுடன் கொட்டும் மழை, அவள் குழந்தையின் மீது போர்த்தியிருந்த துண்டை நனைத்திருந்ததுடன் என் வீட்டு வாயில் வந்து நின்றாள்.
‘ஒன்னோட கொஞ்ச நாள் வந்து தங்கிக்கலாமா?’ என்றாள்.


நான் பதில் சொல்லும் முன்பே என் கைகள் அவள் குழந்தையை வாங்கிக் கொள்ள நீண்டன. அவளையும் இந்த வாழ்க்கை பரிசோதனை செய்யத் தொடங்கிவிட்டது என்பது உறுதியாயிற்று.






குட்டி ரேவதி

வாசகனும் எழுத்தாளனும்: புத்தகக் கண்காட்சி



வழக்கம் போல சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒரு கொண்டாட்டமான நிகழ்வு தான். கண்காட்சியின் பொழுது அரிதாகவே புத்தகம் வாங்குவேன். ஆனால் ஒவ்வொரு பதிப்பகமும் என்னென்ன புத்தகங்களை வெளியிட்டுள்ளது, ஒவ்வோர் எழுத்தாளரும் என்னென்ன புதிதாக எழுதியுள்ளனர் என்பதை முழுதுமாகத் தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த நாட்களைப் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வகையில் ஆயிரக்கணக்கிலான பக்கங்களை உடைய நூல்களை எழுதுவதும் ஒரே எழுத்தாளரே பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிடுவதும் அவற்றில் பெரும்பாலும் அந்த எழுத்தாளரின் வலைப்பதிவில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பாய் இருப்பதும் புத்தகக்கண்காட்சி முடிவதற்குள் கடைகளில் இடம்பெற வேண்டுமென்ற அவசரக் கோலத்தில் வடிவம் பெறுவதுமென இருந்தது இந்தப் புத்தகக் கண்காட்சி. ஒவ்வொரு பதிப்பகமும் காலப்போக்கில் அவ்வவற்றிற்கான தனித்தன்மையைக் கண்டடைந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் புரிந்தது. அதாவது முழுக்க முழுக்க அரசியல் அல்லது இலக்கியம் அல்லது அரசியல் இலக்கியங்கள் என வேறு வேறு வகைமையான நூல்களையே தொடர்ந்து பதிப்பிப்பதால் அவ்வகையான நூல்கள் தேவைப்படும்போது அந்தந்தப் பதிப்பகத்தில் போய்ப் பெற்றுக் கொள்வது வசதியாக இருக்கிறது.
வடிவமைப்பிலும் நூல் நேர்த்தியிலும் நவீன இலக்கிய பதிப்பகங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் அடையாளம், க்ரியா, ஆழி, தமிழினி போன்றவை அந்நூலின் உள்ளடக்கத்தினை வெளிப்படுத்தும் புற அழகையும் தன்மையையும் சேர்ப்பதில் அதிகக் கவனமும் அக்கறையும் எடுத்துக் கொள்வது அந்நூல் சொல்லும் படைப்புக்குள் நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்வது போன்றதாக இருக்கிறது. இது, அந்த நூல் ஒரு புனைவு எனில் அதைத் தொகுக்கவும் திருத்தவும் படைப்பாசிரியரினும் இன்னொருவர் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம். அவசர கதியில் நூல்கள் வரும்போது அவற்றின் அழகும் கருத்தும் சிதறுண்டு இருப்பதாகத் தோன்றுகிறது.
அபூர்வமாகத் தான் எழுத்தாளர்களைச் சந்திக்கிறேன். அதிலும் சந்திக்க எளிமையானவர்களை நேரடியாகக்சென்று நெருங்கிப் பேசுவேன். எழுத்தாளர் அழகிய பெரியவனை அவ்வாறு சந்தித்தேன். அவரை எங்குச் சந்தித்தாலும் அணுகுவதும் பகிர்ந்துகொள்வதும் மிகவும் இலகுவான அனுபவமாக இருக்கும். எல்லா எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் கூட அவரை நேரில் சந்திப்பதென்பது இத்தகைய அனுபவமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். எழுத்தாளர்களில் என்னைப் பொறுத்தவரை பிரபலமானவர் பிரபலமற்றவர் என்ற வரைமுறை கிடையாது. சமூக இறுக்கங்களினின்று விடுபடுவதற்கான வழிமுறைகளைச் சொல்லுபவர்கள் நல்ல எழுத்தாளர்கள். அதனுடன் தானும் சமரசமாகி வாசகர்களையும் சமரசம் செய்யத் தூண்டி அதற்கான மயக்க மருந்தை எழுத்தாக்கி அளிப்பவர்கள் மோசமான எழுத்தாளர்கள். எழுத்தாளர்கள் தமது பிரபலத்தை, வாசகர்களின் எண்ணிக்கையைக் கொண்டும் விற்கப்படும் தமது நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டும் அளவிடுவது அபத்தம் என்றே தோன்றுகிறது. அதையெல்லாம் மீறி படைப்பாளி ஒரு வாசகனுக்குத் திறந்து விடும் கதவுகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் வைத்து அளவிடலாம். ஆனால் அத்தகைய அளவீடோ சாத்தியமில்லை.
பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தினர் தாம் புத்தகங்கள் மீதான பெருத்த அபிமானத்துடன் வருகின்றனர். அவர்களின் அன்றாடச் செலவில் புத்தகங்களுக்கும் பணம் ஒதுக்கும் அவர்களின் ஊக்கத்தைக் காணமுடிந்தது. தான் வாசிக்க, தன் குழந்தைக்கு இந்தப் புத்தகம் அவசியம் எனப் பெண்களும் வந்து குவிந்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை இக்கண்காட்சி, வீடு, உறவினர் வீடு, பேருந்து நிலையம், அலுவலகம், காய்கறிச் சந்தை போன்ற மற்ற இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வெளியாகவும் எழுத்தாளர்களுடனான நேரடி அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பாகவும் இருக்கின்றது. தீவிரமான சில பெண் வாசகர்கள் பின்னாளில் மெல்ல மெல்ல தன்னையும் படைப்புத் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டதை நானறிவேன்.
எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாசகர்கள் ஏமாற்றம் அடைவதான குறிப்பை நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். வாசகர்களுக்கு மட்டுமன்று. எழுத்தாளர்களுக்கும் இதே அனுபவம் தான். இப்புத்தகக் கண்காட்சியில் எனக்குப் பிடிக்காத அனுபவமும் இல்லாமல் இல்லை. சில பல வருடங்களுக்குப் பின் ஒரு கவிஞரை இப்பொழுது தான் இப்புத்தகக் கண்காட்சியில் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் எனக்கான இரு விஷயங்களைப் பேச இரண்டு கொடுக்குகளைப் போல வைத்திருந்தார். ‘ஒன்று: என் நூல்களின் அட்டை ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கின்றன? இரண்டு: அந்தக் குறிப்பிட்ட நடிகருக்கு நீங்கள் உதவியாளராக வேலை பார்க்கிறீர்களாமே?’. என்னிடம் தெளிவான பதில்கள் இருந்தன. ‘உங்கள் பார்வைக்கு என் அட்டைகள் அப்படித் தோன்றியிருக்கலாம். என்றாலும் அட்டையை விட உள்ளடக்கம் முக்கியமில்லையா? மேலும், அந்த நடிகருக்கு நான் உதவியாளராக வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு வேலை பார்க்க அவரது மனைவி இருக்கிறார்’ என்றேன். ஏற்கெனவே என் மீதான கடுப்புகளை தனது விஷக்கொடுக்குகளில் சேமித்து வைத்திருந்தார் போலும். எனது நூல் அட்டைகள் மோசமானவையாக இல்லாமல் பார்த்துக் கொள்வதில் வெகுவாக மெனக்கெடுவேன். நூலை வாசித்தவர்கள் அறிவர். ஒரு புத்தகத்தைத் தொடுகையில் அதன் உயிர்ப்பை அந்தப் புத்தகத்தின் அட்டை தக்கவைத்திருக்க வேண்டும். இன்னொன்று ஒருவரைக் கேள்வி கேட்கும் அணுகுமுறை. எவ்வளவு தவறான கேள்விகளாய் இருந்தாலும், அதற்கான முறையும் பக்குவமும் இருக்கின்றன என்பதும் என் பார்வை. அந்த எழுத்தாளர் மீது எனக்கு மிகுந்த பரிதாபம் ஏற்பட்டது, அந்த விஷத்தை அவர் தன்னுள் எவ்வளவு காலம் சேமித்துச் சுமந்து வைத்திருந்தாரோ என்று. ஓர் எழுத்தாளன் எதையும் எவரையும் வாசக மனோபாவத்துடன் அணுகும் முறை உடையவராய் இருக்கவேண்டும். ஒரு நல்ல படைப்பாளி என்பவர் முழுமையான வாசகனும் கூட. ‘நாம் எழுதிய நூல்களுக்கு வெளியிலும் நமது வார்த்தைகள் உலவுகின்றன’, என்பதை கவிஞர் தேவதேவனிடம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.



குட்டி ரேவதி

கண்ணகி - அவள் ஒரு நினைவுச்சுழல்


கண்ணகி என்பவள் நம்மிடையே வாழ்ந்து மறைந்த பெண்ணாகவே தோன்றும் அளவுக்கு ஓர் உயிருள்ள கதாபாத்திரமாகவே நமது நினைவில் நிற்கிறாள். சிலப்பதிகாரத்தின் கட்டுக் கோப்பான இலக்கிய வடிவத்திற்கு இணையானதோர் இலக்கிய ஆக்கம் இன்று வரை தமிழில் இல்லை எனும் அளவிற்கு நுட்பமான செய்வினைகளை கதைக்கூற்றுக்கு வெளியேயும் ஆற்றும் படைப்பாக இருக்கிறது. எவ்விடத்தில் இது உண்மை எவ்விடத்தில் புனைவு என்று கண்டுபிடிக்க முடியாததாகவும் படைக்கப்பட்டுள்ளது. நிறைய வரலாற்று உண்மைகளையும் மானுடப் போக்குகளையும் படைப்பிலிருந்து நுகரும்படியானதாகவும் இருப்பது அதன் சிறப்பு. ஆனால் என்னை ஈர்ப்பது கண்ணகி எனும் பெண் கதாபாத்திரம் நம்மிடையே எடுத்துள்ள சமூகப் பங்கும் அவள் எழுப்பியுள்ள உருவகங்களும்.

அதாவது கண்ணகி என்ற பெண்ணொருத்தி உண்மையிலேயே இருந்தாள் எனும் அளவிற்கு நமது சமூக நம்பிக்கைகளில் அவள் ஓர் அன்றாடக் கதாபாத்திரமாக ஆகிவிட்டாள். மனைவியர், அன்னையர், மகள்கள் ஆகியோரின் வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கும் அளவிற்கும், அவளை ஒரு மாதிரியாக ஆக்கி அதையே பின்பற்றும் அளவிற்கும் நமது மரபின் நினைவலைகளில் என்றென்றும் உருண்டு கொண்டிருக்கும் தென்னங்காயாய் அவள் ஆகியிருக்கிறாள் என்பதை நம் எல்லோரின் தனிமைஅடர்ந்த வாழ்க்கையிலும் உணர முடியும். அவள் நம் வீட்டின் கருமையான இருளடர்ந்த அறை மூலைகளில் நமது நம்பிக்கைகளைக் கட்டமைக்கிறாள். நம்மை மறு கேள்வி கேட்க முடியாத ஒரு விசையாகி வீச்சாகி அனலாகித் தீயாகி எழுந்து நிற்கிறாள். தமிழர்களின் சிந்தனைகளில் எப்படிக் காலந்தோறும் அவள் கடத்தப் படுகிறாள் என்பதும் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். இன்றும் கண்ணகி என்ற பெயரைத் தனது பெண்ணுக்குச் சூட்டத் தயங்கும் பெற்றோர் நம்மிடையே உண்டு. அது தீராத துயரை அந்தப் பெண்ணுக்குக் கொண்டு வரும் என்பது ஐதீகம்.

சிலப்பதிகாரத்தில் மனிதனின் அன்றாடத்திற்குச் செழுமையூட்டும் ஒரு பெண்ணாக அறிமுகமாகிக் கண்ணகி வாழ்ந்து வருகிறாள். தனது கணவனுடனான பாலியல் அன்னியோன்யம் மறுக்கப்பட்ட கண்ணகியின் முலை முகத்தில் எழுந்த தீ எரிந்து கொண்டிருக்க அவள் காத்திருக்கிறாள் என தமிழ்ச் சான்றோர்கள் கூறுகின்றனர். கணவன் தன்னுடைய செல்வம் உட்பட எல்லாவற்றையும் இழந்து திரும்புகையிலும் கூட கண்ணகியிடம் அவனை அவன் இழப்புகளிலிருந்து மீட்டெடுக்கும் அறம் சார்ந்த வாழ்க்கை நெறியும் துணிவும் இருக்கிறது. மானுட வாழ்விற்கான வழி எப்பொழுதும் திறந்திருக்கிறது, அறம் பாராட்டும் பெண்ணிடம், அறம் பேணும் பெண்ணிடம் என்பது நிரூபணமாகிறது. அது சமூக அநீதியை எதிர்க்கும் துணிவையும் ஆற்றலையும் தருகிறது என்பது தான் கண்ணகி தன் சித்திரம் வாயிலாகச் சொல்ல விரும்பிய செய்தி. ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது என்னைப் பொறுத்த வரை மேலோட்டமான அர்த்தங்களைக் கிளறிவிடும் வாசகமே. அதையும் மீறிய மிகுதியான அர்த்தப் பொருளுடைய உறவைத் தான் ஓர் ஆணுடன் பெண்ணும் பெண்ணுடன் ஆணும் மேற்கொள்கின்றனர். ஆணுடன் தான் கொண்டிருக்கும் உறவிற்கான முழுமையைக்காணும் அர்ப்பணிப்பையும் அறநெறிகளையும் துய்க்கிறாள் பெண். மாதவி போன்று கணிகையாராகி உறவு துய்ப்பதும் தவறு அன்று. ஆனால் ஓர் உறவோ அல்லது பல உறவுகளோ, உறவுக்கான இணைப்பைத் தொடங்கிவிட்ட பின் அவ்வுறவின் நலனுக்கான கடினமான அற ஒழுங்கையும் கூட மேற்கொண்டே ஆகவேண்டும் என்பதைத் தான் கண்ணகியும் மாதவியும் சொல்கின்றனர். அதாவது இதைக் குடும்பம் என்னும் இறுக்கமான கட்டத்தை நினைவில் வைத்து நான் எழுதவில்லை. அதையும் மீறியதானது பெண் – ஆண் உறவு.

சங்ககாலத்தின் இறுதிக் காலத்திலிருந்து ஒரு நினைவாயும் ஒரு கதாபாத்திரமாயும் வாழ்மாந்தராயும் ஊழின் பெருவலியாயும் அறம் பிசகாத ஒரு சத்தியமாயும் அநீதிப் பிறழ்ந்த இடத்து நகரை எரிக்கும் தீயாயும் தன்னுள் காமமாய் கிளர்ந்தெழுந்தும் மூண்டும் கனன்றும் கொண்டேயிருந்த கொங்கைத் தீயாயும் காலந்தோறும் கடந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்யும் இந்தக் காலத்தையும் தீண்டியிருக்கிறாள் கண்ணகி. திராவிட முன்னேற்றக் கழகம் கண்ணகியை ஏந்தி நிற்கும் காரணம் முற்றிலும் வேறு. ஆண் – பெண் உறவுகளில் வேறு வேறு நிலைகளை எடுக்கும் கண்ணகி, மாதவி, கோவலன் ஆகியோரில் கண்ணகியே தமிழ்ச்சமூகத்திற்கான படிமமாகத் தூக்கிப் பிடிக்கப்படுகிறாள். அவள் தான் ஆணாதிக்கச் சமூகத்திற்கு வசதியானவளாகவும் கணவன் மீது செலுத்தப்பட்ட அநீதிக்காக நின்று போராடும் பெண்ணாகவும் கருதப்படுகிறாள். இன்று எல்லா பெண்களும் அவ்வாறான பெண்ணாகவே எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். வெகுமக்கள் உளவியலுக்குத் தேவையான வடிவில் கண்ணகியின் சித்திரத்தைத் திருகி மாற்றியமைத்துக் கொண்ட அரசியல் நடவடிக்கைகளுக்குப் பின்பு அவளின் ரூபம் வெகுவாக மாறிவிட்டது.

கண்ணகி, தன் கணவன் தனக்கு எவ்வளவு துயர் கொடுத்த போதும் தாங்கிக் கொள்ளும் மனைவியாக இருந்ததும் அவன் திரும்பிவந்ததும் எந்தக் கேள்வியுமின்றி அவனை ஏற்றுக் கொண்டதும் எல்லா மனைவியரையும் கணவர்கள் அவ்வாறு நிர்ப்பந்திக்கும் ஓர் எதிர்மறையான செயல்பாட்டுக்கே கண்ணகி எனும் உவமை திருப்பியிருக்கிறது. சமூகத்திற்கு முன் மாதிரியான ஒரு பெண்ணாகவும் அதே சமயம் எதிரெதிர் நிலைகளை எடுத்து ஆதிக்கம் பெறும் பெண்ணாகவும் இவ்வாறான இரட்டை நிலைகளையும் பூர்த்தி செய்யும் பெண்ணாகவும் மாறினால் தான் ஒரு பெண் பத்தினித் தெய்வமாக முடியும் என்ற அரசியல் மொழியப்படுகிறது. ஆனால் இந்த நினைவுச் சுழலுக்குள்ளிருந்து சிலம்பு எனும் தன் கால் அணிகலனின் சப்தம் வழியாகப் பேசும் வேறு சில கண்ணகிகளும் இருக்கிறார்கள்.

குட்டி ரேவதி

தமிழ்மணம் நேய நண்பர்களே!

தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராக இந்தப் பொங்கல் வாரம் முழுதும் எழுதுகிறேன். என் போன்றவர்களுக்கு இது போல் எழுதப் பக்கங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி தான். தமிழ்மணத்திற்கு நன்றி. கண்ணகியைப் பற்றியும் அவளைச் சூழ்ந்த பெண்ணிய பிம்பங்களையும் அர்த்தங்களையும் விரித்து எழுத விரும்பியிருக்கிறேன். இந்த ஏழு நாட்களும் கண்ணகியைப் பற்றிச் சிந்தித்திருக்கலாம் என்ற எண்ணம். கதை வலைகளால் நெய்யப்பட்டவள் அல்லவா கண்ணகி? தொடர்ந்து உரையாடலில் நீங்களும் பங்கெடுக்கலாம். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

வலைப்பதிவு தொடங்கிய பின் எந்தப் பத்திரிகையையும் சார்ந்திருந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் ஆகிவிட்டது. எழுதி முடிக்கும் பொழுதெல்லாம் பிரசுரிப்பதும் உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதும் வசதியாகிவிட்டது. அதனால் எழுதுவது என்பது எனது அன்றாட ஒழுக்கமும் ஆகிவிட்டது.
நிறைய முரண்களுடைய சமூக நிகழ்வுகளினூடே நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டம் ஆரோக்கியமில்லாமல் போகும் போதெல்லாம் எவரோ எங்கிருந்தோ உயிர்ப்புடன் எழுதும் ஒரு கவிதை தெம்பு தருவதை நான் உணர்ந்திருக்கிறேன். அதற்குத் தான் எழுத்து என்றும் நம்புகிறேன். நீங்களும் இதை ஆமோதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதத் தொடங்குகிறேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.

குட்டி ரேவதி

பாழ்வெளி

குறிகளின் அடையாளம் போதாத
மானுடக் காலமூர்ந்து சேர்ந்திருக்கிறோம்
உடலின் பாழ்வெளியில் எப்பொழுதேனும்
தொடவியலா தூரத்தில் ஓர் ஒற்றைப் பறவை
விடுதலையின் குறியாய் நீந்திக் கொண்டிருக்கிறது
நானும் நீயும் நமது குறிகளை மாற்றி
அடையாளம் அழித்துக் கொண்டதும்கூட
உடைகளை மாற்றிக்கொண்டது போலே
யோனியை வாடகைக்கோ எவரும் வசிக்கவோ
மாடிவீட்டுப் பெண்களால் வழங்கவியலாது
எதிர்வீட்டுக்குத் தன்முகக் கண்ணாடியால்
சூரியனை வரவழைத்தற் போலதை ஆட்டலாம்
பிணங்களோடு வாழ நேர்ந்த இரவுக்குப் பின்
விஷவித்துகள் வெடிகுண்டுகளாய் நிறைக்கப்பட்டு
யோனிகள் பறிமுதல் செய்யப்படும் பெண்களிடமோ
விடுதலை எப்பொழுதும் யானையின் துறட்டியாக.







குட்டி ரேவதி

கானகம் உண்ணும் புலி

கானகத்தின் மீது ஏறும் சூரியன் நீட்டிய நிழற் கிளைகளில் உறங்குகிறது கானகப்புலி. கண்கள் தீங்கங்குகளாயும் அதன் நகர்வு நிழல் அலைகளாயும். புலியின் கண்கள் இலைகளாகி இலையின் சருகுகளாகிக் கானகத்துள் புயலாகி இரையும். நிகரற்ற வேட்கையுடன் கானகத்தின் மெளனத்தைக் கலைத்துப் பார்க்கும். அதன் வெளியெங்கும் வெயில் வெறிக்கும் பார்வையுடன் கானலாகிக் காத்திருக்கும். புலி அயராது துரத்தி அடித்துச் சாய்த்த மானைப் போல பகல் மூச்சிளைக்க மடியும். இரவின் முறையில் கானக எல்லை அழியும். இருளடர்ந்த கானகம் புலியாகி நகரும் வேளையே அந்தி என மிருகங்கள் சங்கேதங்களால் பரிமாறிக் கொள்ளும். புதராகி அமர்ந்த பொழுதும் புலியாகி எழுந்த பொழுதும் உயிரின் காற்றழுத்தம் மூச்சடைக்கும். புலி தின்ற கானகம் நான். கானகமாகி நின்ற புலியும் நான்.








குட்டி ரேவதி
நன்றி: ‘கல் குதிரை’

இரண்டடுக்குச் சிந்தனை - 2

மிகப் பெரிய மருத்துவமனைகளின் இரவு நேரப் பொழுதுகள் அவசரங்களாலும் அழுகைகளாலும் நிறைந்தவை. விடியும் பொழுது நோயாளிகளின் உடன் வந்தவர்களின் இமைகள் தடித்துப் பழுத்துப் போயிருக்கும்.

குழந்தைகளின் உலகில் பயம் குறித்த கற்பனையோ பயிற்சியோ இல்லை என்பதால் அவர்கள் தொடர்ந்து சாகசங்களை உருவாக்கிய வண்ணமே இருக்கிறார்கள்.

எப்பொழுதும் அருகருகே இருந்தாலும் அடுத்தவர் சிந்தனை ஓட்டத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ளமுடியாத புதிர் நிலை, மானுடத்தை வன்முறையின்றி புத்துயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக.

அவரவர்க்குப் பிடித்தமான உணவு அவரவர் உடல் இயல்பைப் பற்றிச் சொல்கிறது.

முப்பரிமாண கற்பனைவெளிதான் சினிமாவை மனிதனுக்கு முற்றிலும் விந்தையானதொரு வடிவாக்குகிறது.


இப்படியாக நிகழ்ந்து விட்டதே என்ற புலம்பலில் ஏன் அப்படி நிகழ்ந்தது என்பது புலப்படாமல் போகவே ஓர் அனுபவத்திற்கான ரேகையை இழந்துவிடுபவர்கள் எவருமே வேடிக்கைக்கு உரியவர்கள்.

யாரிடமுமே தன்னை முழுமையான உண்மையுடன் வெளிப்படுத்திக் கொள்ள முடியாத வாய்ப்பின்மையால், தான் என்ன விதமான எண்ண மாற்றங்களால் நெய்யப்பட்டவள் என்பதை ஒரு பொழுதுமே அறியாமல் போகிறாள் பெண்.


ஒரு வாசகர் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரைச் சந்திக்கும்பொழுதெல்லாம் தன்னிலும் நேர்மையான ஒரு வாசகரையே சந்திக்கிறாரே அல்லாமல் எந்த வகையிலும் அந்த வாசகரையும் விட உசத்தியானவரையன்று.


ஒரே ஓர் ஆணுடன் அல்லது ஒரே ஒரு பெண்ணுடன் தான் வாழ்க்கை முழுதுமாய் வாழ்வதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களின் நிறைய எண்ண நிலைகள் வழியாகவெல்லாம் வாழ்ந்து வெளியேறிய பின் நிறைய மனிதர்களுடன் ஒரே சமயத்தில் வாழ்ந்து தீர்த்த மனோநிலையைத் தான் வந்தடைந்திருக்கிறோம். வாழ்க்கை அத்தனை இலட்சம் எண்ண நிலைகளினினும் நீளமானது.

காடு என்பது முற்றிலும் கற்பனையானதொரு திணைவெளி. இல்லையெனில் உங்களின் கற்பனையில் காடு வேறாயும் என் கற்பனையில் பிறிதொன்றாயும் இருப்பது எப்படித்தான் சாத்தியம்!

ஃபேஷன் ஷோ பெண்களின் உடலசைவுகள் மிருகங்களின் உடல் மொழிகளால் நவீனம் பெறுகின்றன. மனிதப் பரிணாமத்தின் திசைஎதிர் வடிவம்.



குட்டி ரேவதி

குளிர்கால ரயில்பயணம்

அன்றாட வாழ்வில் ரயில் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார வசதிகள் பயணநேரத்தைக் குறுக்கும் விமானப்பயணத்திற்கு அனுமதிப்பதில்லை. நேரத்தை நீட்டித்தும் மெளனத்தைத் திடப்படுத்தியும் தொடரும் இரயில் பயணம் மிகவும் எனக்கு வழக்கமானதாகவும் அதனாலேயே பிடித்தமானதாகவும் ஆகிவிட்டது. சமீபத்தில், டில்லி வரையிலும் பின்பு அங்கிருந்து சண்டிகர் வரையிலும் பயணிக்க வேண்டித் தொடர்ந்த ரயில் பயணத்தில் குளிர் என்ற ஒரு புதிய நண்பரையும் உடன் கூட்டிச் செல்ல வேண்டியதாக இருந்தது. ஆரம்பத்தில் சில நச்சரிப்புகளோடும் குற்றங்குறைகளோடும் தொடங்கும் நட்பு சில பரிமாறல்களுக்குப் பின் புரிதல்களுக்குப் பின் பொருள்விளக்கங்களுக்குப் பின் நெருக்கமானதாகி விடுவது போன்று இருந்தது. என்றாலும் குளிரைப் பழக்கப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. மூன்று டிகிரி செல்ஷியஸைத் தொடும் அக்குளிர், இருபத்தைந்திலிருந்து முப்பது டிகிரி செல்ஷியஸ் கோடையின் வெப்பத்தை ஒரு கதாபாத்திரமாகவும் அன்றாட வாழ்க்கையாகவும் ஏற்றுக் கொண்ட நமக்கு முற்றிலும் மொழி புதிதான புரியாத ஒரு நண்பன் தான்.
கூதலுடன் பனிப் போர்வையினூடே நகரும் ரயில் கற்பனையானதொரு வெளிக்குள் நம்மை நகர்த்திச் செல்வது போலவே தோன்றுகிறது. பனிப்படலங்கள் விரிந்த வெளிக்குள் தோன்றும் கருவேல் உடை மரங்களும் பருத்தத் தெருநாய்களும் நீர்நிலைகளை கரை அலங்காரமாக்கிய வயல்வெளி வடிவமைப்புகளும் அதிகாலைத் தேநீர்க்கடைகளின் முன் தடித்தப் போர்வைகளுக்குள் புதைந்து தேநீரின் வெப்பத்தைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் கடந்து செல்லும் சிறு ரயில் நிலையங்களும் குளிர்காலத்தின் தீவிரத்தையும் சொல்லித் தொலையாத நேரமாயைகளின் கவர்ச்சியையும் பற்றிய கதைகளை நமக்குச் சொல்லத் தொடங்குகின்றன. பெட்டிகளாளான ரயில் இக்கதைகளினூடே நம்மைச் சுமந்து செல்வது ஒரு விநோதமான அனுபவம் தான்.



எந்தப் பருவத்தையும் நிந்திப்பது மனிதனின் பொது வியாதி. கோடை என்றால் ‘மண்டையைப் பிளக்குற வெயில்!’ என்றும், குளிர் என்றால், ‘முதுகெலும்ப முறிக்குற குளிர்!’ என்றும் சலித்துக் கொள்வது அந்நிய நிலம் பற்றிக் குறிப்பு வரையும் பொதுவான மனித மனோபாவம் தான். ஆனால் அந்தச் சூழ்நிலைக்குப் பழகிக் கொள்ள அங்கங்கு நிலவும் வாழ்வியலின் அடித்தளப் பழக்க வழக்கங்களைப் பழக்கிக் கொள்ளும் போது அந்த விசித்திர பருவம் தனது கதைகளையெல்லாம் சொல்லத் தொடங்கி விடுகிறது. மூன்று நாட்களாகியும் டில்லியைச் சென்றடையாத தொய்வடைந்த ரயில் பயணத்தை, இது வரை படிக்காது விட்டு வைத்திருந்த நாவல்களைப் படிப்பதற்கான வேளையாக வைத்துக் கொண்டேன். இந்நேரங்களில் கதை சொல்லிகளாகி நாவலாசிரியர்கள் நம்முடைய இருக்கைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். மானுடத்தின் தீராத பயணங்களைக் கதையோட்டமாகக் கொண்ட அந்நாவல்களைப் படித்த பின்பு ஏனோ உடலும் மனமும் தடித்த உணர்வும் புலனுணர்வுகள் கூர்மையடைந்த தேர்ச்சியும் ஏற்பட்டதான ஓர் அனுபவம். அந்த ரயில் பயணத்தின் உடை தைக்கப்பட்ட தன்மையுடனும் நிறத்துடனும் அந்த நாவல்களின் கதையோட்டம் இன்னும் நெஞ்சுக்குள் நெளிந்து கொண்டிருக்கிறது.



குட்டி ரேவதி