தமிழ்ப் பெண்ணிய அறிவு ஜீவிகள் முக்கியமான இருவரின் கருத்தியல் மொழிகளை உள்வாங்கிக் கொள்வதில் நான் தீவிரமாயிருந்திருக்கிறேன். எழுத்தாளர் சிவகாமி மற்றும் வ. கீதா. தமிழகத்தில் நிலவும் அரசியலையும் அது சார்ந்த அதிகாரமயமான நிகழ்வுகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பெண்ணியக் கருத்தாக்கத்தை உருவாக்கி வளர்த்தெடுப்பதிலும் அதை விவாதத்திற்கு உட்படுத்துவதிலும் இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை எடுத்துள்ளனர். அறிவுத் தளத்தில் இவர்கள் இருவருமே சமூகத்தின் வேறு வேறு விஷயங்களைப் பேசினாலும் தனிமனித அளவில் தம் சிந்தனைச் செழுமையின் மீது தனியே நின்று தொடர்ந்து இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகக் கிராமங்கள் எங்கும் இரு வருடங்கள் சிவகாமியுடன் தொடர்ந்து பயணித்துப் பெண்களைக் கூட்டம் கூட்டமாகச் சந்தித்து பெண்ணுரிமை குறித்தும் பெண்கள் ஒருங்கிணைவதன் அவசியம் குறித்தும் பேசி வந்திருக்கிறோம். அவரின் சிந்தனையின் மூலம் எதுவாக இருந்தாலும் அது வெளிப்படும் அணுகுமுறை அழகியல் பூர்வமானது. நுட்பமானது. முழுமையானது. ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதால் தான் இத்தகைய ஆளுமையும் போராட்ட உணர்வும் அவருக்குச் சாத்தியப்பட்டதுடன் அவருடைய தொடர்ப்பணியும் அதற்குக் காரணம் என்று வியக்கிறேன். பொது வாழ்விற்கு வரும் பெண்கள் பெறும் விடுதலை உணர்வு, விடுதலை வெளிச்சத்திற்கு வராத பெண்ணினத்தின் மற்ற பகுதியினருக்கும் ஆதரவான குரலாக இருந்தால் தான் நாம் செல்லும் திசையை நோக்கி மற்ற பெண்களும் நகர்வர் என்று அவர் அடிக்கடி கூறுவார். அல்லது நாம் தொடங்கிய பாதையே நம்மைப் பின் தொடரும் எவரும் பயணிக்க லாயக்கற்று கல் முள் மூடிய வெளியாகிவிடும் என்பது அவர் முன்வைக்கும் செயல்பாட்டு மாதிரி. சாதியையும் அது ஒடுக்கும் பெண்ணின் உடலையும் இணைத்து நுணுக்கமான அரசியலாக்கிப் பேசியதில் இந்தியாவிலேயே அவர் அளவுக்கு யாரும் இருக்க முடியாது. அவரின் ‘உடலரசியல்’ என்ற நூலை வாசித்தவர்கள் அறிவர்.
வ. கீதா, பெண்களுக்கான எந்தப் போராட்டம் என்றாலும் அந்தக் குழுவில் ஒருவராய் முன்னணியில் நின்று அப்போராட்டத்திற்கான தர்க்கத்தை விளக்கி அதற்கான நியாயத்தைப் பேசுவதில் தயங்கமாட்டார். தொடர்ந்து பெண்ணிய வாதங்களை முன்வைத்துக் கொண்டே இருக்கும் அவர் இம்மண் சார்ந்த பெரியாரின் தத்துவத்தை அறிவுப்பூர்வமாகவும் களப்பூர்வமாகவும் உள்வாங்கியவர். மேற்குறிப்பிட்ட இருவருமே தாம் ஆற்றிய பல வருட களப்பணிகளுக்குப் பின்பே பெண்ணுரிமைக்காகப் பேசும் எழுச்சிமிக்க இடத்திற்கு நகர்ந்துள்ளனர். இத்தனைக்கும் சிவகாமி ஓர் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர். நவீன இலக்கியத்தின் நெருக்கமான தொடர்முனையில் இருந்து வருபவர் பின்னவர்.
ஆனால் இன்று பெண்ணியம் பேசுவோரும் பெண்ணியலாளர்களும் தகுந்த தத்துவப் பின்புலமின்றி வாதங்களில் ஈடுபடுவது ஏற்கெனவெ ஆணாதிக்கச் சிந்தனைமயமாக இருக்கும் சமூகத்திற்கு இன்னும் பலவீனமான பெண்ணிய முகத்தையே காட்டுவதாக இருக்கும். அது மட்டுமன்றி இது வரை பல காலங்களிலும் வேறு வேறு பெண்ணியலாளர்கள் வென்றெடுத்துத் தந்த விடுதலை உணர்வைத் தக்கவைத்தவாறே தான் அடுத்த கட்டங்களுக்கு நாம் நகரமுடியும். நமது பெண்ணியச் சிந்தனைகள், நம்மைப் போன்று சமூகத்தின் பொதுவெளிக்கு வந்து பகிர்ந்து கொள்ளாதவர்களுக்குமான குரல்கள் தான் என்று உணர்ந்து செயலாற்றும் கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. இல்லையெனில் தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும்.
இன்று இணையம் எங்கிலும் ‘உடலரசியல்’ பேசும் கவிதைகள் தீவிரமாக விமர்சிக்கப்படுகின்றன. ஏற்கெனவே இம்மாதிரியான கவிதைகளுக்கான அரசியலைப் பேசி வென்றெடுக்கும் நமது முயற்சி இன்னும் முதிராத நிலையிலும் அதற்கான விரிவான உரையாடல் மொழியை உருவாக்காத நிலையிலும் இம்மாதிரியான கவிதைகள் தமக்கு உரித்தான நியாயங்களை சரியான சிந்தனைப் பின்புலமில்லாமையால் பெறாமலேயே போகின்றன. பாலியல் விடுதலை உணர்வை மொழிவதும் அது குறித்த கவிதைகளை எழுதுவதும் அவரவர் உரிமை. பெண்ணியத்தின் எழுச்சியில் அவை நவீன வடிவங்கள் எடுத்துக்கொண்டே தானிருக்கும். ஆனால் அக்கவிதைகள் எழுதப்படும்பொழுதும் விமர்சிக்கப்படும் பொழுதும் அதை எதிர்கொள்ளும் அவரவர் சார்ந்த விவாதத்திற்கான வாதத்தையும் தர்க்கத்தையும் கூட முன் வைக்க வேண்டியிருக்கிறது. மேலும் வெறுமனே பெண் எழுத வருவதே ஒரு பெருத்த அடையாள மதிப்பீடாகக் கருதப்பட்ட சமூகக் காலகட்டம் முடிந்தே போய்விட்டது. பெண்ணிய அரசியலை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த ஆதிக்க சாதியினர் தங்கள் இடங்களையும் வெளிகளையும் புனைவுகளாய் குறுக்கிக் கொண்டதும், சமூக அரசியலுடன் பெண்ணின் இருப்பைப் பேசியதும் கூட மாறியதுடன் பல தரப்புகளில் அதாவது நமது எழுத்து, அதில் வெளிப்படும் விடுதலையின் மொழி, அதனுடன் நாம் கொண்டிருக்கும் தொடர் அறச் செயல்பாடுகள், அதை வெளிப்படுத்தும் தனி மனித ஆளுமை என எல்லாவற்றையுமே இன்றைய சமூகம் பெண்ணியலாளர்களிடம் எதிர்பார்க்கிறது.
இன்று அம்மாதிரியான தாக்குதலை எதிர்கொள்வதற்கான தனிமனித சிந்தனைப் புலமும் அதை ஆதரிப்பதற்கான செயல்பாட்டுத் தளமும் ஏற்கெனவே வெற்றிடமாகி இருக்கின்றன என்பது வெளிப்படையாகிறது.
குட்டி ரேவதி
3 கருத்துகள்:
ரேவதி,
பர்தா என்ற அரேபிய அபாயா உடை முறை மற்றும் முகத்தை மறைத்தல் போன்ற இஸ்லாமியச் சட்டங்கள் குறித்து இஸ்லாமியப் பெண்கள் தெரிவித்த கருத்துகளை , விஜய் டிவி ஒளிபரப்பக்கூடாது என்று தாலிபான்கள் ரேஞ்சில் இஸ்லாம்சங்கங்கள் தடுக்கின்றனவே இது குறித்து பெண்ணிய அமைப்புகள் ஏன் பேசுவது இல்லை?
நீங்கள் அல்லது நீங்கள் சொல்லியுள்ள பெண்ணியவாதிகள் இது குறித்து அல்லது இஸ்லாம் சார்ந்த பெண்ணிய பிரச்சனைகள் குறித்து களம்கண்ட தகவல்கள் இருந்தால் பகிரமுடியுமா?
இஸ்லாமியப் பெண்களே அவர்களின் உடை குறித்தான கருத்துக்களை பொதுவெளியில் கூறமுடியவில்லை.
உங்கள் தகவல்களுக்காக...
காட்சி 1:
விஜய் டிவீ பர்தா நிகழ்ச்சி விளம்பரம்
http://video.yahoo.com/watch/6753138
காட்சி 2:
விஜய் டிவி அலுவலக முற்றுகை அறிவிப்பு
http://www.tntj.net/?p=9594
காட்சி 3:
விஜய் டிவி நிகழ்ச்சி வாபஸ்
http://www.tntj.net/?p=9622
விளக்கங்கள் 4:
முற்றுகை இல்லை.
http://www.onlinepj.com/vimarsanangal/vijay_tv/
****
குஸ்பூ சொன்ன கருத்துகளால் அவர் அலைக்கழிக்கப்பட்டபோது , ஜனநாயக மாதர் சங்கம் போன்ற அமைப்புகள்கூட தார்மீக ஆதரவு தரவில்லையே ஏன்?
சமுதாய, சாதி மத பயங்களுடந்தான் தமிழக பெண்ணியவாதிகள் இயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். சில கதைகள், கவிதை என்ற பெயரில் சில வார்த்தை மடக்கிய வரிகள் இதைத்தாண்டி ஏதும் பெண்ணியவாதிகள் செய்துள்ளதாக அறியமுடியவில்லை.
தேடி அறிதலில் எனது குறை இருக்கலாம். சுட்டிகள் கொடுத்தால் அறிந்துகொள்வேன்.
\\ இன்று பெண்ணியம் பேசுவோரும் பெண்ணியலாளர்களும் தகுந்த தத்துவப் பின்புலமின்றி வாதங்களில் ஈடுபடுவது ஏற்கெனவெ ஆணாதிக்கச் சிந்தனைமயமாக இருக்கும் சமூகத்திற்கு இன்னும் பலவீனமான பெண்ணிய முகத்தையே காட்டுவதாக இருக்கும்//
உண்மை..
\\நமது பெண்ணியச் சிந்தனைகள், நம்மைப் போன்று சமூகத்தின் பொதுவெளிக்கு வந்து பகிர்ந்து கொள்ளாதவர்களுக்குமான குரல்கள் தான் என்று உணர்ந்து செயலாற்றும் கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது//
அதே சமயம் ..இது போன்ற பெண்ணியவாதிகளின் வெளிப்படும் குரல்கள் எல்லாம் பொதுவெளிக்கு வந்து பகிர்ந்து கொள்ளாத நமக்குமானதும் , பின்னாளின் அதன் வெற்றியை சுவைக்கப்போகிறவர்கள் தாம் நாம் என்றும் பொதுவெளிக்கு வராதவர்களும் உணரவேண்டியது அவசியமென நினைக்கிறேன்.
I second kalvettu.
கல்வெட்டு சொன்னதை வழிமொழிகிறேன்.
The feminists of Tamil kind are great cowards, including Sivakaami and others. Why did not they talk about the subordination of women in Muslim community? Why did not they talk about thevars killing dalit brides in their inter caste marriages as happened recently in Tiruchy?
As kalvettu said, in such sharp and controversial issues, the Tamil feminists want to save their skin.
Religion, not only Islam, but also Hinduism treats women as slaves. Even today, you can see brahmin widows tonsuring their heads. Initiating a women into widowhood, on the very day of her husband's death, is horrendous and the mantras utterly reduce her to an evil. Women of other communities women wearing white sarees; and subjected to variety of taboos like not showing their faces when a marriage is solemnized. Women cant enter Sabaraimalai.
என்ன செய்தார்கள் இந்தப் பெண்ணியவாதிகள்? ஏன் இவர்களால் மதவாதிகளையும் அரசிய்ல்வாதிகளையும் ஜாதிவெறியர்களையும் எதிர் நோக்க முடியவில்லை?
கருத்துரையிடுக