நம் குரல்

அம்பேத்கரும் காந்தியும் அருந்ததிராயும்


அம்பேத்கரும் காந்தியும் எதிரெதிராகச் செயல்பட்டார்கள் என்பது நாடு அறிந்தது.
ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான தேவைகளையும் திட்டங்களையும் அம்பேத்கர் வகுத்தும் செயல்பட்டும் வந்தார்.
காந்தியை மகாத்மா, தேசப்பிதா என்று சொல்லுமிடத்து மட்டுமே இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறார். உண்மையில், அதற்கான எந்தத்தகுதியும் காந்திக்கு இல்லை.
குறிப்பாக, இந்துக்கள் அல்லாத தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த, பாரபட்சமில்லாத புரிதலை காந்தியால் இறுதிவரை ஏற்கவே முடியவில்லை. அவர்களையும் இந்துமதக் கட்டத்தில் கொண்டுவந்து வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்துவதற்கே போராடினார்.
அம்பேத்கரையும் காந்தியையும் ஒரே கோட்டில் வைத்துப் புரிந்துகொள்வது கூட மிகவும் அபத்தமானது.
இந்திய அறிவுசீவிகள், அல்லது இந்தியா உடைந்துவிடப்போகிறது என்ற போலியான பதட்டத்தைத் தாமே உருவாக்கி அதன் வெப்பத்தில் குளிர்காய்பவர்கள் முதலாயும் இறுதிவரையிலும் தொடர்ந்து செய்வது, அம்பேத்கரையும் காந்தியையும் ஒரே கோட்டில் வைத்து விவாதிப்பதும், அடுத்தடுத்து வைத்துப் பொருள் விளக்கம் கொடுப்பதும்.
அருந்ததிராய் 'சாதி ஒழிப்பு' நூலில் முன்வைத்திருந்த எழுத்திலும், இத்தகைய பதட்டத்தை உணரமுடிந்தது. காந்தியைச் சொல்லாது அம்பேத்கரை விளக்கினால், தான் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோம், தீண்டத்தகாத கருத்தியல்வாதியாகிவிடுவோம் என்ற திருகுமனநிலை அருந்ததிராய்க்கும் இருந்தது.
காந்தியின் திருகுமனநிலைகள், உண்மையில் இந்துத்துவ மதவெறியிலிருந்து உருவாகுபவை. தொடர்ந்து இதற்கு ஆதாரமான விடயங்களை தரவுகளுடன் முன் வைப்பது என்று இருக்கிறேன்.
உண்மையில், இந்தியாவை உடைக்கமுடியாது. இந்தியாவை உடைப்பது என்றால், அதைச் செய்வது இந்துத்துவ சக்திகளாக இருக்கும் அல்லது, செயலிலும் சொல்லிலும் சிந்தனையிலும் இந்துமத வாதத்தை முன்வைப்பவர்களாக இருக்கும்.

குட்டி ரேவதி

நண்பர்களே, ஆண்கள் தினமாம் இன்று!


வாழ்க்கையில் வெவ்வேறு நற்பங்குகளை ஏற்ற எல்லா ஆண்களுக்கும், ஆண்களாக இருக்கும் பொறுப்பேற்றமைக்கும் என் வாழ்த்துகள்.

உண்மையில், இத்தகைய இறுக்கமான சமூக அமைப்பில், ஆளுமையும் பண்பும் குன்றாத ஓர் ஆணாக இருப்பது என்பது சாதாரண விடயமே இல்லை.

தனித்தன்மையை எப்படிக்காப்பாற்றுவது என்பதற்கும் எங்கே சமூகப்பொறுப்பு எடுப்பது என்பதற்கும் இடையே மெல்லிய நூலிழை தான் விடயம்.

இதில் குழம்பிப்போன பல ஆண்களை நம் அன்றாட வாழ்விலும் பொதுவெளியிலும் காண நேரிட்டாலும், மோசமான 'ஆண்' என்று யாருமே இல்லை. அல்லது, அப்படியான மோசமான ஆண்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்ததில்லை.

ஒருவேளை, அப்படியான ஆண்களாகத் தம்மைத்தாமே வரிந்துகொண்டவர்கள் கூட, நேர்மையான வாழ்க்கையை மேற்கொள்வதில் உண்டாகும் நம் பயணத்தின் தகிப்பு தாங்காமல் தாமே உதிர்ந்தும் போய்விடுவார்கள் என்பது என் நம்பிக்கை.

பால்நிலை சமத்துவம் என்பதும் ஆண்களுக்கு எதிரானது அன்று. அப்படி நம்பிய ஆண்கள், இயல்பாகவே 'பெண் வெறுப்பை' தம் தேர்வாகக் கொண்டதும் ஒரு கெடுவாய்ப்பே.

ஆனால், இந்த எழுத்தின் பொதுவாழ்வில் அருமையான ஆண்களை எல்லாம் காண நேர்ந்திருக்கிறது, என்பதே நான் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புவதும்.

தான் பிறந்த குடும்பம் என்பதை மட்டுமே ஒரு சமூகப்பாதுகாப்பிற்கான அடையாளமாகக் கருதியிருந்தால், நல்ல ஆண்களை நான் கண்டிருக்க முடியாது.

குடும்பத்திலிருந்து பொது வாழ்வு நோக்கி நகர, நகர வன்முறையை ஓர் அடையாளமாகக் கருதாத ஆண்களையும், சமூகப்பொறுப்பான ஆண்களையும், ஆளுமையான ஆண்களையும் இயல்பாகவே சந்திக்க நேர்கிறது.


நீங்கள் அப்படியிருந்தமைக்காகவும், இருப்பதற்குத் தம்மைத்தாமே பணித்தமைக்காகவும் உங்கள் எல்லோருக்கும் என் நல்வாழ்த்துகள்!

குட்டி ரேவதி

உண்மையான முத்தப்போராட்டம் எப்படி இருக்கவேண்டும்?நான் முத்தங்களுக்கு எதிரானவள் இல்லை. பகிரங்கப் பொதுவெளி முத்தங்களும் வரவேற்கப்படவேண்டியவையே. 
பொதுவெளியில், கத்திக்குத்தும் வன்முறையும்  எல்லா ஊடகங்களாலும் தீவிரமாக விதைக்கப்படும் இக்காலக்கட்டத்தில், முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு சனநாயக அடையாளம்.

பொதுவெளி முத்தங்கள் அவசியமே.

ஆனால், போராட்டங்களை எப்படிக் கட்டமைக்கவேண்டும் என்பதில் இந்திய அளவில் நமக்கான பெரிய படிப்பினைகள் இருக்கின்றன.

முத்தப்போராட்டம், நிர்வாணப்போராட்டம், அரைநிர்வாணப்போராட்டம் என்பவை எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றன. புரட்சிகரமானவை போல் தான் இருக்கின்றன. ஆனால், நீண்ட கால அடிப்படையில் நமக்கு எந்த உரிமைகளையும் இவை பெற்றுத்தராது.  ஒரு முத்தத்தையும் கூட உரிமையாகப் பெற்றுத்தராது. காரணம், இவை எல்லாம் வெறும்  'எதிர்வினைப்' போராட்டங்கள் மட்டுமே. பதிலுக்குப் பதில் போராட்டங்களே. 

உண்மையில் போராட்டங்கள் என்றால், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மீனவப்பெண்களின் போராட்டம், மணிப்பூர் பெண்களின் நிர்வாணப்போராட்டம், இரோம் ஷர்மிளாவின் போராட்டம், அற்புதம் அம்மாளின் போராட்டம் போன்று இந்தியாவின் ஒடுக்குமுறை, மதவாதம், சாதிய அமைப்பு, சமூக அமைப்பு போன்றவற்றின் அடித்தளங்கள் அறிந்த போராட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கவேண்டும்.

என்னதான் பொதுவெளியில் முத்தங்களுக்காகப் போராடினாலும், நாம் இப்பொழுது போராடுவது போல் போராடினால் நீண்ட கால லட்சியத்தில் 'பொதுவெளி முத்தங்களை',  மனித உரிமையின் அடிப்படையான ஒரு விடயமாகக் கூட பெறமுடியாது.

நிர்பயாவுக்கான போராட்டம், 'பெண்கள் மீதான பாலியல் வன்முறை' குறித்த எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அது ஒரு தனிப்பெண்ணுக்கான போராட்டமாகவே சுருங்கிப் போனது. 

அதுபோலவும், இதுவும் ஒரு மேம்போக்கான போராட்டவடிவமாகவே இருக்கும்.

இது இந்துத்துவ பெண் - ஆண் பால் இடைவெளியை அகலப்படுத்தும் நோக்கத்திற்கு எதிரான போராட்டம் என்று வாதிடுவோர்களே கூட, இந்துப்புராணங்களையும் அது சார்ந்த படைப்புகளையும், எழுத்தாளர்களையும் கடுமையாக ஆதரிக்கும் மனநிலையும் இங்கே தான் இருக்கிறது. 
அத்தகைய படைப்புகளையும் அதை எழுதும் படைப்பாளிகளையும் விட, இத்தகைய  "இரண்டுங்கெட்டான மனநிலை" கொண்ட போராளிகள் தான் சமூகத்தில் ஆபத்தானவர்கள்.

உறுதியான திட்டங்களும் நோக்கங்களும் கொண்டு போராடுபவர்கள் நிலைத்தப் போராட்ட வடிவங்களைக் கொண்டிருக்கின்றனர். 
தொடர்ந்து நின்றும், உட்கார்ந்தும், நடந்தும் விடாப்பிடியாகப் பிடிவாதமாகப் போராடுகிறார்கள். 
அவர்கள், அவ்வப்பொழுதான உரிமைகளுக்காகவும், போராளி அடையாளங்களுக்காகவும் மட்டுமே போராடுவதில்லை.

அவ்வகையில் பார்த்தால், இன்று உண்மையில் மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள் எல்லாம் நீண்டகாலத்திட்டத்தை இலட்சியமாகக் கொண்டும், அடிப்படையான சமூக அமைப்பின் ஒடுக்குமுறைகளுடன் எந்த சமரசமும் கொள்ளாமலும் இருக்கின்றன.

மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.

நான் முத்தங்களுக்கு எதிரானவள் இல்லை. பகிரங்கப் பொதுவெளி முத்தங்களும் வரவேற்கப்படவேண்டியவையே. 

என் கவிதைகள் எங்கும் முத்தங்கள் இறைந்து கிடக்கின்றன.

ஆனால், பொதுவெளி முத்தங்களை சட்டப்பூர்வமான மனித உரிமையாக்க, மதவாதத்தை கடுமையாக எதிர்க்கவேண்டும். அதிலும், இந்துமதவாதத்தைத் தகர்க்கவேண்டும். 

இப்பொழுதைய போராட்டமுறை, நோக்கத்தை நீர்த்துப்போகச்செய்யும். ஒரு முத்தத்தையும் வழங்கமுடியாது.  வேடிக்கை பார்க்கலாம்.குட்டி ரேவதி

கதை எவருடையதோ, அவருடையதே திரைப்படமும்!நான் அறிந்த தயாரிப்பு நிறுவனங்களும், நட்பு நிலை தயாரிப்பு நிறுவனங்களும் கூட,
படம் தயாரிக்கக் கதைகளும், அதைச் சொல்லும் இயக்குநர்களும் வேண்டுமென்கிறார்கள்.

இயக்குநர்களும், கதையாசிரியர்களும் நாம் அறிந்த நிறுவனங்களுக்கே கூட கதை சொல்ல முன்வருவதில்லை.
அவர்கள் சொல்லும் ஒரே காரணம், கதையைக் கேட்டுவிட்டு,
கதை பிடிக்கவில்லை அல்லது வேறு காரணங்கள் சொல்லிவிட்டு, பின் அதே கதையைப் படம் எடுக்கும் 
திரைத்துறையின் 'வியாபாரத் தந்திரத்தை'த் தம்மால் சமாளிக்கமுடியாது என்பது தான்.

நம் வாழ்க்கையைய் திருடியது போக, நம் மக்களின் கதைகளையும் திருடி, நம் நாயகர்களாக மாறும் 'திடீர் நாயகர்களால்' மெல்ல மெல்ல நம் சமூகத்தின் நீதியும் கொல்லப்படுகிறது.
இவர்கள் நாயகர்களாக மாற, நம் கதைகளா?
நம் திரைத்துறையின் 'கதைப்பஞ்சமும்', 'ஏமாற்றுவித்தையும்', பணம், புகழ் மற்றும் அதிகாரத்தின் மீதான பேராசையில் எழுவது.
பணத்தை வைத்து மொத்த திரைத்துறையையும் அசைத்துவிட முடியும், 
ரசிகர் கூட்டத்தை வைத்து எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ள முடியும் 
என்ற கட்டப்பஞ்சாயத்து மனநிலை, திரைத்துறையையும் காவுகொடுக்கச்செய்துவிடுமோ 
என்ற எண்ணம் தோன்றுகிறது.

உண்மையில், மொத்த இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் இதற்கு எதிராக வெகுண்டெழுந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். 
இந்நிலை, இனியும் தொடராமல் இருக்கும்படியான, 
வழக்கத்தைத் திரைத்துறையில் கொண்டுவரவேண்டும்.

கதையைத் திருடி, படம் செய்து வெளிச்சத்தில் பதுங்கிக்கொள்ளல், மக்கள் துறையான திரைத்துறையைச் சூறையாடுதலாகும்.
சொந்தமாக ஒரு கதையை உருவாக்கமுடியாதவர்கள், திருடிப்படம் எடுக்கும் கலை வறட்சி உள்ளவர்கள், ஏன் படம் எடுக்கவேண்டும்?
கதை இல்லாமல், மற்றவர்களின் கதையைத் தாம் படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளல், முதுகெலும்பு இல்லாமை.
கதை எவருடையதோ, அவருடையதே திரைப்படமும்!குட்டி ரேவதி

பறை என்பது விழிப்பும் எழுச்சியும்!


'பறை' என்பது கடந்த நூற்றாண்டுகளின் ஒட்டுமொத்த இருளையும் தட்டி எழுப்பிய ஒரு பெருஞ்சத்தம்.பாடிப் பாடித் தெருவெலாம் அம்பேத்கரை எடுத்துச் செல்ல உதவிய பாட்டுக்கருவி.ஓர் அடையாளம், ஆயுதம், இணக்கம், அடங்கமறுத்தல்.ஊழலையும் ஆதிக்கத்தையும் வெளிச்சப்படுத்துவோர் கூட தத்தம் சாதிக்கடியில் ஒளிந்து கொள்ளும் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தும் வெளிச்சம்.பறை என்பது விழிப்பும் எழுச்சியும்.


இந்துமதத்தீண்டாமையைக் கண்டிக்கும் ஒரே அடிக்கோல்.

பறை என்பது பல நூறு ஆண்டுகளின் சப்தமின்மையை, குரல்நெரிப்பை உணர்த்தக் கிடைத்த ஒரே கருவி.உடலின், உள்ளத்தின், அடக்குமுறைக் காலங்களின் ஒட்டுமொத்தக் கொந்தளிப்பின் நெடிய அதிர்வு.பறை என்பது அம்பேத்கர். பறை என்பது தமிழ் இசையும். பறை என்பது சொல், தெளிவாய்ச் சொல், மீண்டும் சொல், அதையே சொல் என்பதுவும்.


எங்கே 'பறையை'த் தடைசெய்யுங்கள் பார்க்கலாம்!


குட்டி ரேவதிநூல்களை வாசித்தல்!நூல்களை வாசித்தல் என்பது தான் மனிதப் பழக்கங்களிலேயே மிகவும் சிறந்த பழக்கமாகத் தோன்றுகிறது.
நூல்களுக்கு சம்பந்தமே இல்லாத, எந்த வேலையைச் செய்பவராக இருந்தாலும், நூல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பது அவசியம்.

இந்த இணைய யுகத்தில், எல்லா அரசியல், சமூகப்பிரச்சனைகளும் அவற்றின் விபரீதங்களும் விளைவுகளும் அடுத்தடுத்த கணங்களிலேயே நம் முன் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன.
இதை அடிப்படையாகப் புரிந்து கொள்ள, சகமனிதர்களைவிட, நூல்களாலேயே உதவமுடியும். அதிலும், தத்தம் ஆளுமை, சமூகச்சூழல், நெருக்கடி, நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்து நூல்களைத் தேடி வாசிக்கும்பொழுது, நமக்குள் இருக்கும் தனிமனிதர் ஒரு சமூகமனிதராக மாறுவதை உணரமுடியும்.
நூல்களை எழுதுதல், விற்றல், உருவாக்குதல், காட்சிப்பொருளாக வைத்தல் எல்லாவற்றையும் விட வாசித்தல் உயர்ந்தது, முக்கியமானது.
ஒவ்வொருவரும் நூல் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்வதுடன், தம் வீட்டினரும் நூல் வாசிப்பதை உறுதிசெய்யவேண்டியது, ஆவன செய்யவேண்டியது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.
மனிதச்சிந்தனையின் எழுச்சி தான் காலந்தோறும் நூல்களாக உருவம் பெறுகிறது. சென்ற நூற்றாண்டுகளின் நூல்களும் சிந்தனைகளும் அது தொடர்பான திறமைகளும் இல்லையென்றால், மனிதக்கூட்டம் இன்றைய பல சாதனைகளையும் பண்புநலன்களையும் தக்கவைத்திருக்கமுடியாது!


குட்டி ரேவதி