நம் குரல்

பெண் கலைஞரும் பாலியல் விசாரணையும்



ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் தவறாகக் கைது செய்யப்படும் ஒரு பெண் கலைஞரைப் பற்றிய போலாந்து படம், இது. கதாநாயகி டோனியா, ஒரு காபரே நடனக்காரி.

தற்பொழுதைய ஆட்சிக்கு எதிரான அதிகாரியுடன், முன்பு எப்பொழுதோ உறவு கொண்டிருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணை செய்யப்படுகிறாள், டோனியா. முழுப்படமும் அவள் எம்மாதிரியாக உறவு கொண்டாள் என்று விசாரணை செய்வதும் அவளைத் துன்புறுத்துவதும் தான்.

டோனியா, தன் முழு பலத்தாலும், தான் தவறு செய்யவில்லை என்ற ஒற்றைநம்பிக்கையாலும் தொடர்ந்து போராடுகிறாள். தொடர்ந்த பாலியல் வன்முறை , அவமானப்படுத்துதல், தனிமைப்படுத்துதல், அச்சுறுத்துதல் எனப் பலவழியில் அவளிடம் விசாரணை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு கணத்திலும், தான் தவறு இழைக்கவில்லை என்ற நம்பிக்கையின் தூணின் மீது துணிவாக எழுந்து நிற்கிறாள், டோனியா. எப்படி ஒரு பெண்ணின் அந்தரங்க வெளியும் பாலியல் உறவுகளும், அதிகாரத்தின் பொதுவெளியிலும், கண்காணிப்பின் சிறைவெளியிலும் விசாரணையாக்கிப் பரிகசிக்கப்படுகின்றன என்பது தான் இப்படத்தைக் கலைப்பூர்வமாக்குகிறது.

அவளுக்கு சாட்சியாக இருந்த நன்னம்பிக்கைகள் அத்தனையும் அவளுக்கு எதிராகத் திரும்புகின்றன. அவள் கணவனே கூட அவளைத் திரும்பவும் பார்க்கவிரும்பவில்லை என்று கூறிச்செல்கின்றான். அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். கெடுவாய்ப்பாக, அப்பொழுது காப்பாற்றப்படுகிறாள். துன்பத்திலிருந்து அவள் தப்பிக்கக்கூடாது என்பதே சிறையின் விதி.

சிறை அதிகாரி ஒருவர், அவள் ஆளுமையாலும், உண்மை உணர்வாலும் கவரப்பட்டு அவள் மீது காதல் கொண்டு உறவும் கொள்கிறார். அவளுடனான நேர் அன்பைக் கொள்ளமுடியாத சிறை அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்தும் போகிறார். 

துப்பாக்கி அவள் நெற்றிப்பொட்டிற்கு நேரே நீட்டப்படும் தருணத்திலும் அவள் சலனமுறுவதில்லை. ஒரு பெண்ணின் முழு பலத்தையும் தொடர்ந்த போராட்டத்தையும் அன்பின் மீதான அயராத நம்பிக்கையும் அவள் கதாபாத்திரத்தின் தன்மை ஆக்கியிருப்பார் இயக்குநர். 

கதையின் முடிவில் டோனியா விடுதலையாகி தன் வீட்டின் மாடிப்படிகளில் ஏறும் போது தான் நாமும் கொஞ்சமேனும் ஆசுவாசம் கொள்வோம். டோனியா என்ற கிறிஸ்டினா ஜாண்டா என்ற நடிகை, கான் படவிழாவில் சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.

இப்படத்தைப் பார்க்கும் போது ஏனோ எனக்கு, "இடிந்தகரை சுந்தரி" அவர்கள் எழுதிய 'சிறைபடாத போராட்டம்' நூலில் விவரித்திருக்கும் போராட்ட வரலாறு நினைவுக்கு வந்தது.

இரண்டுமே உள்ளடக்க அளவிலும், போராட்டத்தை எதிர்த்து நிற்கும் வலிமையிலும், ஆண் அதிகார அமைப்பைச் சவால் விடும் தருணங்களிலும் ஒன்றுக்கொன்று நிகரானவை தான்.

பெண்களின் பாலியல் ஆற்றல் மீதும் அன்பின் மீதும் நம்பிக்கையும் ஆழமான உறவும் கொண்ட படைப்புகள் விசாலமான அளவில் புரிதல்களை ஏற்படுத்துகின்றன. தொடக்கத்தில், போலந்தில் இப்படம் தடைசெய்யப்பட்டது.

திருட்டு வீடியோ கேசட்டுகள் மூலம் மறைமுகமானத் திரையிடல்கள் தொடர்ந்து இப்படம் புகழ்பெற்றது.


குட்டி ரேவதி

'யரலவழள' திரைக்கட்டுரைத் தொகுப்பிலிருந்து.

இந்தித்திணிப்பு குறித்து!







இந்தித்திணிப்பு, உடனே நினைத்த வேகத்தில் அவ்வளவு எளிதாக நம்மிடம் செல்லாது என்பது என் நம்பிக்கை. அந்த அளவிற்கு, பெரியார் நம் மொழித்தேரை வெகுதூரம் இழுத்து வந்திருக்கிறார். சமூகமயமாக்கியிருக்கிறார்.



ஆனால், பாடத்திட்டத்தின் வழியான அரசின் கட்டாயத்தால், நான்கைந்து வருடங்களில் ஊடகங்களும் இந்தியால் பீடிக்கப்பட்டு நிலைமை மாற வாய்ப்பிருக்கிறது.



மொழி உணர்வும், பற்றும் மட்டுமே மொழியைக் காக்கப் போதாது என்பதைக் கடந்த ஐம்பது வருட அரசியல் வழியாக நாம் புரிந்து கொள்ளமுடியும். சுயபாடம்.

இன்னும் சொல்லப்போனால், இப்பொழுது ஆங்கிலம் தான் நமக்கு மிகவும் அவசியப்படுகிறது. தமிழும் ஆங்கிலமும் இணைந்த இரு மொழிப்புலமை, தமிழின் இலக்கிய மாண்பையும் பண்பாட்டு மாண்பையும் உலக அளவில் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

அதுமட்டுமன்று, நம் இன இருப்பின் நியாயங்களையும் நம் மீதான ஒடுக்குமுறைகளையும், கலை இலக்கியச் செல்வங்களையும் நாம் ஒரு பகுத்தறிவுக்கூட்டம் என்பதையும் உலகுக்கு அறிவிக்க ஆங்கிலம் தேவைப்படுகிறது. 

அது இல்லாமல் தான் கடந்த கால சமூகநியாயத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல, நம்மால் இயலாமல் போனது.

தமிழின் இன்றைய அறிவுத்துறை சான்றோர்கள் பலர், ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் தேவையான தமிழ் அறத்தை நன்கு அறிந்து தேர்ந்தவர்கள். தமிழின் பழமையிலிருந்து புதுமைப்படுத்த வல்லவர்கள்.

இளைய தலைமுறை அவர்களின் ஆற்றலைப்புரிந்துகொள்வதற்கான சமூக வாய்ப்புகள் மிகக்குறைவு.

ஆங்கிலம் இன்மையாலும், இயல்பாகவே தமிழர் மீது காட்டப்படும் இன ஒடுக்குமுறையினாலும் அவர்களின் அறிவுப்புலம், எல்லை தாண்டி அறியப்படுவதில்லை. பயன்பாட்டுக்குரியது ஆகவில்லை.

மேலும், தமிழர்கள், இந்தியாவின் ஒரு மாநிலத்திற்குள் வரையறுக்கப்பட்ட ஒரு கூட்டமாக தம்மை நினையாமல் உலகின் வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் ஓர் இனமாகத் தன்னை உணரும் போது தான் தமிழ் நமக்கு எத்தகையதொரு தொடர்பு ஊடகமாக இருக்கக்கூடும் என்பது புரியக்கூடும்.

இல்லையெனில், நாம் வதியும் நிலப்பரப்பிலிருந்து நாம் விரட்டியடிக்கப்பட்டுக்கொண்டே இருப்போம்.

தமிழர் தத்துவம், மருத்துவம், தொல்லியல், இசை, உடல் அறம், இலக்கியம், வானவியல் உலோகவியல் கலைமுறைகள் மற்றும் இன்ன பிற அறிவியல் துறைகள் என நிறைய வகையிலான நம் மொழியின் அறிவுமுறைகளை, காலமும் அரசியலும் தின்னக்கொடுத்துவிட்டோம், அல்லது அவற்றை முற்றிலுமாக மறந்து விட்டோம்.

தனிப்பட்ட மனிதர்களின் உழைப்பும், அதே சமயம் குழுவாக இணைந்து பணியாற்றலும் என தமிழ் மொழியின் அறிவு மற்றும் கலைத்துறைகளை நாம் நவீனப்படுத்த இயலும்.

தமிழ் வெறும் மொழி மட்டுமே இல்லை. அறத்தைச் சிந்திப்பதற்கும் பயில்வதற்கும் பயிற்றுவிப்பதற்குமான ஒரு சிந்தனை மரபு, வாழ்வியல் யுத்தி. அறம் கூர் மொழி.

நாம், நம் பலத்தை உணர்ந்தால் மட்டுமே போதாது, அதை நிரூபிக்கவும் வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

இதையெல்லாம் பொருட்படுத்தவில்லையெனில், நம்மீதான இன்னோர் இனப்படுகொலை திட்டமிடப்படும்.

குட்டி ரேவதி



போரும் காதலும் - 'With You Without You' படத்தை முன் வைத்து!





"உன்னுடன் இருப்பதும் நீ இல்லாமல் இருப்பதும்" படத்தை மையமாக வைத்து
"With You Without You"

பிரசன்ன விதானகே என்ற சிங்கள இயக்குநரின் தமிழ்ப்படம்.

முன்பு சிங்கள இராணுவத்தில் இருந்து, இப்பொழுது அங்கிருந்து வெளியேறி ஓர் அடகுக்கடை வைத்திருக்கும் சிங்கள ஆணுக்கும் தன் இரண்டு சகோதரர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ்ப்பெண்ணுக்கும் இடையே உள்ள உறவின் இயங்கியலை மிகவும் நுட்பமாகவும் ஒற்றைக்கயிற்றில் நடக்கும் எச்சரிக்கையுடனும் சொல்லியிருக்கிறார்.

தாஸ்தாயேவ்ஸ்கியின். 'அடக்கமான பெண்' என்ற நாவலை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டு எடுக்கப்பட்ட கதை.

இந்தத்திரைக்கதையை படம் உருவாகும் முன்பே வாசிக்கும் வாய்ப்பு நண்பன் மாமல்லனாலும் இயக்குநர் பிரசன்ன விதானகேயினாலும் கிடைத்தது. அப்பொழுது மனக்கற்பனையில் உருவாகிய கதாபாத்திரங்களின் மன இருள் கூட படத்தில் அப்படியே வெளிப்படையாகி இருக்கிறது.

'எங்கள் எனத்தைக் கொன்றழித்த ஓர் இனத்துடன் எப்படி நான் வாழமுடியும்?' என்று அந்தத்தமிழ் மனைவி கேட்கும் பொழுதும், 'உன் கனவுகள் என்னவென்று கூட நான் அறிந்து கொள்ளவே விரும்பவில்லை. ஏனெனில் அவை என் கனவுகளைக் குறிக்கிடும் என்று நான் பயந்ததால்' என்று அந்தச் சிங்களக் கணவன் சொல்லும் போதும் சிங்கள இனத்தின் அடக்குமுறை குறித்த விசாரணையும் மனிதர்களின் குற்றவுணர்வுகளும் ஆண் பெண் அதிகார முறைமைகளும் நீருக்கடியே அழுத்தி வைக்கப்பட்டிருந்த பந்துகளைப் போல மேலே வருகின்றன.

அதே 'சமயம், தமிழ் மனைவியும் சிங்களக்கணவனும்' என்ற குடும்பம் ஒரு குறியீடாகி இருக்கிறது. அது போலவே, இரு வேறு கடவுளரும் கூட குறியீடாகி இருக்கின்றனர். இதனால், இன அதிகாரமும், அதன் வழியான வன்முறைகளும் தெள்ளத்தெளிவாக, எந்தச் சமரசமுமின்றி, எந்தத்தயக்கமும் குழப்பமுமின்றி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

ஶ்ரீகர் பிரசாத் தான் படத்தொகுப்பு பணியைச் செய்திருக்கிறார். கதையின் போக்கு பலவாறான குறுக்கு வெட்டுகள் கொண்டு சொல்லப்படும்போது, இன்னும் பலவாறான அர்த்தப்புரிதல்களையும் கதாபாத்திரச்செறிவையும் கொடுப்பதுடன், ஒரு கொடுங்கோன்மையான வரலாறு இரு இனத்தின் மனிதர்களை எங்கெங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

இப்படியாக, தமிழ்ப்பண்பாட்டின் அரசியலை அடையாளம் காட்டும், படமாக்கும் வாய்ப்பை, நேர்மையை நம் தமிழ் இயக்குநர்கள் யாருமே எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனையான ஒன்று. அப்படிப்பார்க்கையில், முதன்மையான இயக்குநர் ஆகிறார், பிரசன்ன விதானகே.

தமிழ் மனஓட்டங்கள் எப்படியாக இருக்கும் என்பதையும் அவற்றின் பதைபதைப்புகளையும் ஒரு 'தமிழ்ப்பெண்' கதாபாத்திரத்தின் வழி தீட்டும் அரசியல் புரிதலையும், கலை நேர்மையையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை. தமிழ்நாட்டில் தான் பெண்கள் மீது என்னவொரு வெறுப்பு மேலோங்கியிருக்கிறது!

சமயம் வாய்க்கும் போது, இந்தப்படத்தை முன் வைத்து, தமிழ் அரசியல் மற்றும் கலைப்படங்களில் என்ன பிரச்சனைகள் மலிந்திருக்கின்றன என்ற ஒரு நூலையே எழுதிவிட முடியும் என்று தோன்றுகிறது.

படம், ஒரு வீட்டை விட்டு வெளியேறாத கதையையும், அதே சமயம் ஓர் அகண்ட போரை நினைவில் கொண்ட தருணங்களும் என நகர்கிறது. தமிழ்ப்பெண், 'மன்னிப்பாயா?' என்று பாடலைப் பாடுகையில், அதன் உள்ளார்த்தம், 'எல்லா வரலாற்றுத் தருணங்களையும் மறந்து விட்டு, உன்னை என்னால் அன்பு செய்யாது, என்னை மன்னித்துவிடு' என்று கேட்பது போல் உள்ளது.

செயல்படுத்திய இன ஒடுக்குமுறைகளை, நம் நனவோட்டத்திலிருந்தும் நினைவுகளிலிருந்தும் அழிக்கவே நூற்றாண்டுகளாகும் என்பதை இந்தப்படம் ஒரு பெண்ணின் மனம் வழியாக வலியுறுத்துகிறது.

படம், திரையரங்கில் குறைந்த நாட்களே ஓடும் வாய்ப்பிருக்கிறது. வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேனும் பார்த்துவிடுங்கள்.

ஒரு கலைப்படைப்பு என்றால் மனித வன்முறையின் நோயை ஆற்றவேண்டும் அல்லது நோயை அம்பலப்படுத்தவேனும் வேண்டும். இந்தப்படம் செய்திருக்கிறது!




குட்டி ரேவதி

A Joint Statement by Tamil Women Writers against Writer Jeyamohan's male chauvinistic statements!

Writing, as an art, demands its own morality. Masters like Karl Marx changed the course of history and human thought through their writings. When writing becomes a mere weapon in the hands of reactionaries, the society is in danger of becoming morally corrupt. The irresponsible statements of some literary personalities have made the Tamil literary space vulnerable to such corruption.  

The literary policing of Jeyamohan is almost unspeakable. Pro-establishment, pro-Hindutva, anti-minority, intolerance towards other religions, hatred towards left intellectuals, manipulation of history to suit  his political standings and male-chauvinist high-handedness are among his major traits, as can be gleaned from his writings. His vicious statements against women stem from a deeply rooted patriarchal mindset that
believes men are superior. We understand his psychological need to stay in the limelight forever – something that has been well-established when he has courted controversy through his statements on Tamil fonts etc. But we will be failing in our duty to
society if we don’t protest his intellectual violence against women.

Jeyamohan claims to always look for for greater and greater women writers; In his obit to one of the most respected writer R Choodamani, he writes thus: “I think
Choodamani’s short stories has very little literary value. She cannot be approached as a relevant literary personality today. She has no role in Tamil short story or novel.” And thus he rejects Choodamani’s contribution to Tamil literature. By calling her a
“kalaimagal type writer’, he also seeks to limit her space. In doing so, Jeyamohan also tries to establish himself as self-appointed regulator of Tamil literary scene. We chose not to react, reposing our faith in the democratic spirit of criticism.

 When writer Kamala Das passed away, Jeyamohan writes thus: “She became famous by her descriptions of the scent of a young friend’s semen”. He also says that Kamala das was overrated because  her son was the editor of Mathrubhumi. His compliments to Kamala Das are strikinglyleft-handed. He says: “Kamala’s problems have the same root.
She was not good-looking. She was fat, dark and almost ugly. She had an insatiable thirst for publicity and kept promoting herself.” He says it is evident from her autobiography that because of her ugly looks and consequent inferiority complex, Kamala das became a nymphomaniac.  Obviously Jeyamohan seeks to establish that any activity by women including their writings is largely based on their looks and bodies.

Curiously Jeyamohan refrains from finding out what inspires male writers or what good looks (or absence of such) do to them. Such chauvinism and arrogance has to be denounced unequivocally.

His deep hatred for women writers is evident, despite the several masks he juggles with. His article titled women 1: Women’ love makes the following points. “Many of our young women readers develop distorted perspectives thanks to the screams of  stupid feminists and have never ventured into the literary world. They are unaware of true
literary experiences.” 

“I have been noticing women writers who claim to be feminists. They do not have the basic reading required for a writer. Why, they have not been able to do anything beyond creating a ripple. That’s also the reason why they have not been able to produce anything significant. The feminism they talk is a simple self-defence technique used to
shield their shoddy works against the challenge posed by a discerning reader.”

“Ignoring these petty voices, Tamil is waiting for women writers who
can boast of real creative talent and pride.” 

What kind of hatred, vengeance and allergy would have gone into crafting such statements! It is shocking that Jeyamohan has such hatred for   women deep down. Jeyamohan, like many others, has misconstrued feminism as hatred for men. He consistently tries to make out arguments try to a case against women writers claiming they have not been writing anything meaningful, shear them of identity and therefore conclude that they cannot stake claim to Tamil literary space. Like Goebbels, he keeps claiming that women do not have deep reading. Looks like we have to get a certificate from Mr Jeyamohan on our own scholarship or otherwise, whether we qualify
to be a writer at  all.

In his write up titled “Aishwarya Rai and Arundhathi Roy”, his misogyny finds expression in following statements.

“I have met Aishwarya Rai once. Had chatted with her for half hour. Beautiful woman. Unlike beautiful women in general, she was intelligent too.”

A Beautiful woman is an idiot is one of his many pre-conceived notions. It is shameful that Tamil literary space celebrates him as a father figure. In the same write up, he says Arundhathi Roy is not an activist, but a ‘mere media creation.’ He says Roy’s booker winning novel lacks depth and a disappointment to readers. That could be passed off as a critique. But his deep hatred for the woman called Arundhathi Roy reveals itself in
the ugliest possible way in his write up My India (July 2, 2012).

And he says:  “It is very surprising that a bird-brained person like Arundhathi Roy who lacks the basic historical perspective and balance gets undue importance in the media today.”
Some of us do accept that the western media make much of  Arundhathi Roy. But by the same token to call fellow human beings as lame, bird-brained and monster is  nauseating.  For an established writer to use such terms and for some people to still acknowledge him as a writer can only be seen as an act against one’s own conscience. There is not much difference between killing someone physically and mentally.

Jeyamohan’s misogyny extends beyond Tamilnadu. On writer Nanjil Naadan’s recent list of promising young writers, Jeyamohan has this to say:

“All the male writers in the list are extraordinary writers. I expect more from them. But the women have not written anything significant and have used various tactics to become media images. It beats me why Nanjil calls many of them as writers or poets.”

“This is very important. Today, men have to write to establish themselves. But women merely have to present themselves as women to get the necessary space. And If they are feminists, many of them will back off.” (June 9, 2014)

It is impossible to denigrate women writers more. Misogyny is in full flow in such comments. This is a slap on women's independence; an insult that cannot be tolerated. While questions like whether Jeyamohan has read all that has been written by women naturally arise, what is important is his insinuation that they have used their
physique to their advantage. An outrageously sexist remark – something for which he can be sued in fact.

 Jeyamohan, who willingly courts controversies, perhaps coveting notoriety goes on to say in his next post (Women writings, June 11, 2014)

“Aren’t the male writers important? Not even a single one? Has anyone been mentioned in any magazine? This is the first time they have appeared even as stamp size photograph.” One wonders if Jeyamohan reads all the magazines that he buys or whether he uses them as a pillow to rest his head on and sleep.

“They create their own news” he says. What witches and publicity maniacs these women are! The women writers are probably much more villainous than those that appear in the mega serials! “They cannot write a few pages without making mistakes. They don’t have the patience to write ten pages together” says the writer who
made mistakes in the very post where he denigrates women writers. Is it not an irony that he is trying to teach us grammar? Only time should teach him that quality of literature is not measured by pages but by its depth and aestheticism.

It is better to write one immortal poem and stay in history than write thousand pages of trash and pose threat to rainfall.


In another self explanatory note, Jeyamohan heaps on more insults:

“If the stupidly feminist works of these women have to be approved because they are feminists, we need to approve all campaign trash written in the name of Marxism and environmentalism.” 

Jeyamohan’s anger can only be construed as pain and disappointment over women writers who are determined to stop men from writing their histories. He poses a challenge: “Let them – those who want to engage in a dialogue over this – ponder over the work that gave them a complete reading experience after Krithika. Let them figure out which work written by a woman has become a talking point in the last thirty
years.”

Thus he makes a very stupid argument that the last thirty years of Tamil literature has been filled only by men. Writers like Ambai who encouraged feminist thought through her writings and other women have no place in Tamil literary history, it looks like. or is it that male chauvinism simply seeks to erase their names from history?

 Who else but Jayamohan can wield the male chauvinist whip sitting atop a blind horse riding on the road to Tamil literary history? 

Jeyamohan cannot be in isolation though. He is the focus of this joint statement only because we want to make an example of him and warn other similarly mean-minded that we are not going to keep quiet when derided.

By raising questions of the character of women who differ from their views, by spreading rumors about the women, by using vulgar terms, these writers seek to restrain women from participating in social/literary space.

We have been a witness to the fact that some publishers and literary personalities have been indulging in individual assaults and character assassinations. Some of them gang up to periodically malign women writers from some platform or other. For want of space we refrain from naming them all.

We have decided to hold regular  dialogues in future on the stands taken by such personalities.

To use a term discovered by Jeyamohan, social media has become an expanded space for abuse. It would not suffice to make words dance, Jeyamohan should understand that primary human values is to respect a fellow human being.

Everyone knows how difficult it is for a woman to write given the pressures from a male chauvinist society and heavily lopsided institution called family. Yet the women do not demand any concessions, favours. They do not seek any allowance in criticisms. We
only demand that we should not be demeaned simply because of our gender.   We have been dragging ourselves forward, hurting and bruising ourselves even as the chains of female slavery pull us back. 

Your literary masks poorly cover up your male chauvinistic vitriol. We can return the compliment, but don’t out of reasons of decency. We believe that like women, fellow male writers too have theresponsibility of questioning the dangers that stem from Jeyamohans’s chauvinist,elite mindset. But many remain mute . Or they probably rejoice in private over such statements of Jeyamohan. This is perhaps the time for every writer to question their own conscience. A real human being is someone who responds to the question posed by their conscience, rising above such considerations as friendship or public persona, influences that can fetch awards.

More and more  Jeyamohan sounds like an insecure dictator, looking for
enemies in every corner and fighting them. We place on record our strongest condemnations against Jeyamohan’s vitriolic, chavunistic  statements against women  who have defied many odds to arrive.


Attested by:

Ambai, Kutti Revathi, Sukirtharani, Dhamayanthi, Kavitha Muralidharan, Se. Brindha, A. Vennila, Salma, Perundevi, Thamizhaci Thangapandiyan, Monika, Jeevasundari Balan, Uma Sakthi, Tharmini, Kavitha Sornavalli, Vinothini Sachidanandam, Kavin Malar, Mayoo Mano, Sakthi Jothi, Tamilnathy, Living Smile Vidhya, Swathi Sa. Muhil, Aarthi Vendhan, Narumugai Devi, Mubeen Sadhika, Bharathi Selva, Rama Inba Subramaniam, Shaheeda, Kotravai, Parameswari, Sabitha Ibrahim, Sa. Vijayalakshmi, Uma Mohan, Hemavathy, Prashanthi Sekaram, Nachimagal Suganthi, Jeevasundari Balan, Padmaja Narayanan, Geetha Ilangovan, Bala Bharathi, C. Pushparani, Banubharathi, Bhavani Dharma, Ilamathi, Kirthika Dharan, Nilavumozhi Senthamarai, Su. Thamizh Selvi, Nandhamizh Mangai, Kalpana Karunakaran, C. Meena, Jenny Dolly, Priyamvadha, Indhiragandhi Alangaram, Thamizhpen Vilasini, Ku. Umadevi, Thenammai Lakshmanan, Abdul Haq. Lareena, Geetha Narayanan, Fayisa Ali, Penniyam Website team (Thillai, Keshayini, Suganthi, Veronika, Saravanan), Latha Saravanan, Jeevalakshmi, Shilpa Charles, Akalya Francis, Rag Suga, Sasikala Babu, Subhashini Thirumalai, Nivedha Udhayan, Kothai, Shanthi, Prema, Nila loganathan



பெண் படைப்பாளிகள் மீதான ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண் செயற்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை!

வணக்கம்

எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல்
மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின்
சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய
சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக
அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு
இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாக சில
இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள்,
ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை.
அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல்,
பிறமதங்கள்பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது. காலாகாலமாக ஆண்களே இந்தச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர்கள் என்ற ஆண்மையவாதத்திலிருந்தபடி தொடர்ந்து பெண்களுக்கெதிரான நச்சு வார்த்தைகளை இறைத்துவருகிறார். எழுத்துரு மாற்றம் இன்னபிற விடயங்களில் தனது “மேலான” கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளின்மூலம் “மஞ்சள் ஒளி வட்ட“த்தில் இருந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிற அவரது மனச்சிக்கலைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், எழுதும் பெண்கள்மீது அவரால் பிரயோகிக்கப்படும் கருத்து வன்முறையை இனியும் புறந்தள்ளிக் கடந்துசெல்வதற்கில்லை.

‘பெரிதினும் பெரிதினை’த் தேடுவதாகத் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும்
ஜெயமோகன், தமிழிலக்கிய வாசகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆர்.சூடாமணி
இறந்தபோது எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“சூடாமணியின் கதைகளில் இலக்கியமதிப்பு மிகக்குறைவு என்றே நான்
எண்ணுகிறேன். சூடாமணியை இன்றைய நிலையில் வாழும் இலக்கியகர்த்தாவாக
அணுகமுடியாது. தமிழ்ச்சிறுகதை, நாவல் ஆகியவற்றின் பரிமாணத்தில்
அவருக்குப் பங்கேதும் இல்லை”எனக் கூறியதன் மூலம், தமிழின் முன்னோடிகளுள் ஒருவரான
சூடாமணியின் இலக்கியப் பங்களிப்பையே தடாலடியாக நிராகரித்திருக்கிறார்.
மேலும், அவருக்கு ‘கலைமகள் பாணி எழுத்தாளர்’என்று பெயர் சூட்டிக்
குறுக்குகிறார். (பார்க்க: ஆர்.சூடாமணி, நவம்பர் 02, 2010) இங்ஙனம்
எழுதுவதன்மூலமாக தமிழிலக்கியத்தின் அறிவித்துக்கொள்ளப்படாத தரநிர்ணயக்
கட்டுப்பாளராக தன்னைத் தான் நியமித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வாசகனாக,
படைப்பாளியாக அவ்விதம் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்ற
ஜனநாயகத்தின் அடிப்படையில் அதைப் பொறுத்துக்கொண்டோம்.

கேரள இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ்
மறைந்தபோது, அவரைக் குறித்து எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில், (பார்க்க:
அஞ்சலி: கமலா சுரையா, ஜூன் 01,2009) “இளவயதுத் தோழனின் விந்துவின் வாசனை
பற்றிய வர்ணனைகள் அவரைப் புகழ்பெறச் செய்தன”என்று சற்றும் கூச்சமின்றி
எழுதுகிறார். மேலும், மாதவிக்குட்டியின் மகன் மாத்ருபூமி ஆசிரியராக
இருந்த காரணத்தினாலேயே அவர் மிகையாகப் புகழப்பட்டார் என்றும்
எழுதுகிறார். அவர்பாலான தன்னுடைய அசூசை வெளித்தெரிந்துவிடக்கூடாதென்
பதற்காக சற்றே புகழ்ந்துவிட்டு, “கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுமுகம்
ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான
பெண். தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பரவெறியும்
கொண்டவர் கமலா.”என்கிறார். ‘மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்துக்
கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியினால், தாளாத காம இச்சை கொண்டிருந்தார் என்பதை
அவரது சுயசரிதை வழி அறியமுடிகிறது’ என்றும் கீழ்மைப்படுத்துகிறார். ஆக,
படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களது
தோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன்
நிறுவமுற்படுகிறார். மேலதிகமாக, தமிழ்கூறும் நல்லுலகில் அறியப்பட்ட
படைப்பாளியாக இருக்கக்கூடிய ஜெயமோகனின், அழகு பற்றிய வரைவிலக்கண
இலட்சணமும் நமக்குத் தெரிந்துபோகிறது. இந்தப் பாரதத் திருநாட்டில்
விசித்திரமான நடத்தைகளோடும் பேச்சுக்களோடும் உலவும் சில ஆண்
இலக்கியவாதிகளை எவ்வுணர்ச்சி செலுத்தியது என்பதைக் குறித்து ஜெயமோகன் ஏன்
எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதை, அவரது உள்ளொளிதான்
அவருக்கும் நமக்கும் விளக்கிச்சொல்லவேண்டும். இத்தகைய நவீன மனுக்களின்
ஆசாடபூதித்தனங்கள், பக்கச்சாய்வுகள் பொதுவெளியில்
அம்பலப்படுத்தப்படவேண்டியவை.


பெண் படைப்பாளிகள்மீது இவருக்கு ஆழமான வெறுப்பு இருப்பதை அவர்
எழுத்துப்பூச்சினால் என்னதான் மறைக்கமுயன்றாலும் அவரையும் மீறிக்கொண்டு
அந்த வெறுப்புணர்வு வெளிப்பட்டுவிடுகிறது. “பெண்-1, பெண்களின் காதல்”
(அக்டோபர் 22, 2012) என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“இன்று இளம்வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால்
ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே
முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம்
என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.”

“இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து
வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான்
பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத்
தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும்
இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே.
இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற
சவாலைச் சந்திக்கமுடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புக்களைப்
பொத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் ஒரு எளிய தற்காப்புமுறை மட்டுமே”

“இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கிவீசிவிட்டு வரும் உண்மையான
படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட
பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது.”

எத்தனை வன்மம், காழ்ப்புணர்வு, ஒவ்வாமை இருந்தால் இப்படி எழுதமுடியும்!
ஒருவருக்குள் இத்தனை மன இருட்டும் வெறுப்புணர்வும் மறைந்திருப்பது
அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. பெண்ணியம் என்ற சொல்லின் பொருள்,
‘ஆண்கள்மீதான வெறுப்பு’ என்ற தவறான புரிதலையே ஜெயமோகனும்
கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்தச் சொல்மீது இத்தனை செருப்படி
விழுகிறது. மேலும்,‘தமிழ் காத்திருக்கிறது’என்று மொழிவதன் மூலம் அவர்
சொல்ல எண்ணுவது ஒன்றுதான்: இங்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுள் யாருமே
குறிப்பிடத்தக்க அளவில் எழுதவில்லை, அவர்கள் அடையாளமற்றவர்கள், ஆகவே,
தமிழிலக்கியத்தில் பங்குதாரர்களாக உரிமை கொண்டாடும் பாத்தியதை அற்றவர்கள்
என்பதையே அவர் தன் ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிறுவ
முயற்சிக்கிறார். மேலும், ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்
அதை உண்மையென நம்பவைக்கும் உத்தியை, ‘பெண்களுக்கு ஆழமான வாசிப்பு
கிடையாது’என்று சொல்வதன் மூலம் இன்றுவரை அவர் செய்துவருகிறார். எழுதுகிற
பெண்களது வாசிப்பின் ஆழத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியப் பிதாமகர்களிடத்தில்
அடிக்கடி சென்று நிரூபித்துச் சான்றிதழ் பெற்றுவருவதன் சாத்தியங்கள்
குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

திருவாளர் ஜெயமோகன் சில முடிந்த முடிபுகளைக் கொண்டிருக்கிறார். அவர்
இரவும் பகலும் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தால், தலையைத் தூக்கி அவற்றை
மீள்பரிசீலனை செய்ய அவருக்கு நேரம் இருப்பதில்லை. ‘ஐஸ்வர்யா ராயும்
அருந்ததி ராயும்’ (டிசம்பர் 08, 2010) என்ற கட்டுரையில்
பெண்வெறுப்புத்தாரை கீழ்க்கண்டவாறு பொழிகிறது.

“ஐஸ்வர்யா ராயை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அரைமணி நேரம்
பேசிக்கொண்டிருந்தேன். அழகான பெண். அழகான பெண்கள் வழக்கமாக இருப்பதுபோல
அல்லாமல், புத்திசாலியும்கூட”என்கிறார்.

ஆக, அழகான பெண்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற முடிந்த முடிவினை அவர்
கொண்டிருக்கிறார்.  இவரைத்தாம் தமிழ்
வாசகப்பரப்பு இலக்கியகர்த்தா என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்ற நிலை
அவமானகரமானது. அதே கட்டுரையில், “அருந்ததி போராளி அல்ல, வெறும்
ஊடகப்பிரமை மட்டுமே!”என்று சொல்கிறார். புக்கர் பரிசுபெற்ற
அருந்ததிராயின் நாவல் ஆழமற்றதும் இந்திய வாசகர்களுக்கு ஏமாற்றமளித்ததும்
என்கிறார். அது ஒரு படைப்பினை விமர்சனம் செய்யும் உரிமையின்பாற்பட்டது.
ஆனால், அருந்ததி ராய் என்ற பெண்மீது, அந்த ‘ஊடகப் பிரமை’மீது ஜெயமோகன்
கொண்டிருந்த காழ்ப்புணர்வானது ‘எனது இந்தியா’ (ஜூலை 02, 2012) என்ற
கட்டுரையில் மிகக் கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது.

“அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற
குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்று பெறும் அதீத முக்கியத்துவம் மிக மிக
ஆச்சரியமானது” என்கிறார் ஜெயமோகன்.

அருந்ததிராயின் நாவல்மீது, அவர் மேலைத்தேய ஊடகங்களால் அளவுக்குமீறித்
தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்ற விமர்சனத்தின்மீது எங்களிற் சிலருக்கும்
உடன்பாடு உண்டு. ஆனால், ஒருவரை, அவரது தோற்றத்தினை முன்வைத்து இகழும்
அற்பத்தனத்தை எக்காரணங்கொண்டும் மன்னிக்கமுடியாது. நொண்டி என்றும்,
குரூபி என்றும், குருவிமண்டை என்றும், சல்லிக்குரல்கள் என்றும் சகமனிதரை
வசைபாடுவது அருவருப்பின் உச்சம். அதையொரு அறியப்பட்ட படைப்பாளி
செய்வதென்பதும் அதைச் சகித்துக்கொண்டு, ‘என்றாலும் அவர் நன்றாக
எழுதுகிறார்’என்று சிலர் குழைந்து பின்செல்வதும் மனச்சாட்சிக்கு விரோதமான
செயலாகும். படுகொலைகளுக்கும் மனக்கொலைகளுக்கும் அப்படியொன்றும் பெரிய
வித்தியாசங்கள் இல்லை.

ஆக, இவரது பெண்வெறுப்பு தமிழகத்தையும் தாண்டி அகில இந்தியாவெங்ஙணும்
விரிந்துபரந்துசெல்கிறது. அண்மையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
அவர்களால், ஆனந்த விகடனில், ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’என்று சுட்டப்பட்ட
படைப்பாளிகளது பட்டியலைக் குறித்து ஜெயமோகன் கீழ்க்கண்டவாறு தன் “மேலான“
கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக
எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.
ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள்
மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது
கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான்
நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம்
கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள்
‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?’என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.”

–‘நாஞ்சில் நாடன் பட்டியல்’(ஜூன் 09,2014)

எழுதுகிற பெண்களை இதைவிடக் கேவலப்படுத்திக் கீழிறக்க முடியாது. பெண்ணியம்
பீறிடுகிறதோ இல்லையோ, ஜெயமோகனுள் படிந்து கிடந்த பெண்வெறுப்பு மேற்கண்ட
வாசகங்களில் பீறிட்டுப் பாய்ந்திருக்கிறது. இது சகித்துக்கொள்ள இயலாத
இழிவுபடுத்தல், அவமானம், எழுந்தமானத்தில் கருத்துரைக்கிற
 அறிவீனம், பெண்களது தன்மானம்மீது விழுந்திருக்கும்
ஆணாதிக்கத்தின் மிலேச்சத்தனமான அடி. பெண்களால் எழுதப்பட்ட அனைத்துப்
படைப்புக்களையும் ஜெயமோகன் வாசித்துவிட்டாரா? என்ற கேள்விகளெல்லாம்
ஒருபுறமிருக்கட்டும். ‘உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்கள் ஆனவர்கள்’என்பதன்
பொருள்தான் என்ன? உத்தி என்பது உடலைக் குறிக்கிறதா? வளைந்து நெளிந்து
செய்யும் சாகசங்களையும் சமரசங்களையும் குறித்ததா? இத்தகைய
இழிவுபடுத்தலுக்கு, பாலியல் நிந்தனைக்கு பதிலடி கொடுக்கும்முகமாக
ஜெயமோகன்மீது பொதுநல அவதூறு வழக்குக்கூடத் தொடுக்க இயலும்.

சர்ச்சைகள்மூலம் என்றென்றைக்குமாகத் தனது இருப்பினை
ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் ஜெயமோகன், வழக்கம்போல கேள்வியும்
பதிலுமாக அடுத்த பதிவில்-‘பெண்களின் எழுத்து’ (ஜூன் 11,2014)- வந்து சப்பைக்கட்டு விளக்கமொன்றை
அளித்திருக்கிறார்.

“இந்த ஆண் எழுத்தாளர்களில ஒருத்தர்கூடவா முக்கியமில்லை? ஒருத்தரோட
பேட்டியோ படமோ எங்கியாவது வந்திருக்கா? பலரோட முகமே இந்த ஸ்டாம்பு சைஸ் போஸ்டரிலதான வந்திருக்கு. ஏன்?”என்று தனது பாலினம் சார்ந்து
‘தர்க்க’ரீதியாகக் கேள்வியெழுப்புகிறார். ஜெயமோகன் தன்னால் வாங்கப்படும்
சஞ்சிகைகளை வாசிக்கிறாரா அன்றேல் எழுதியநேரம் போக அவற்றின்மீது படுத்து உறங்கிவிடுகிறாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

“செய்திகளை அவங்களேகூட திறமையா உருவாக்கிக்கிறாங்க” என்கிறார்.
பெண்கள்தான் எத்தகைய சூழ்ச்சிக்காரிகளாகவும் விளம்பரமோகிகளாகவும்
இருக்கிறார்கள்! நெடுந்தொடர்களில் வரும் (அபத்தமான) வில்லிகளைக்
காட்டிலும் படுபயங்கரமானவர்களாயிருக்கிறார்
கள் இந்தப் பெண் படைப்பாளிகள்!

“சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர்.
உட்கார்ந்து பத்துப் பக்கம் தொடர்ந்து எழுதக்கூட
பொறுமையற்றவர்கள்”என்கிறார். பெண் படைப்பாளிகள்மீது காழ்ப்புணர்வுகொண்டு எழுதிய குற்றச்சாட்டுக் கட்டுரையிலேயே எழுத்துப்பிழை விட்ட புத்திசாலி, பெண்படைப்பாளிகளுக்கு இலக்கண வகுப்பெடுப்பதை காலக்கொடுமையன்றி வேறென்னவெனச் சொல்வது? எழுதுகிற பக்க எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அது அதன் செறிவிலும் சாரத்திலும் அழகியலிலும் வடிவத்திலும் இருக்கிறது என்பதை காலந்தான் அவருக்குக் கற்பிக்கவேண்டும். ஆயிரம் பக்கக் குப்பைகளை எழுதி காடழித்து மழைவீழ்ச்சியைக் குறைப்பதைப் பார்க்கிலும், காலத்தால் அழியாத
ஒரேயொரு கவிதையை எழுதி வரலாற்றில் நிற்பவர் மேல்.

பெண்ணியவாதிகள்மீது இவருக்கு இருக்கும் எரிச்சலை, அண்மையில் வலையேற்றிய தன்னிலை விளக்கக் கட்டுரையிலும் வெளிப்படுத்துகிறார்.

“இந்தப் பெண்களில் பலர் எழுதும் அசட்டுப் பெண்ணியப்படைப்புகளை
பெண்ணியமென்பதற்காக அங்கீகரிக்க வேண்டுமென்றால், இதேபோல மாக்ஸியம், சூழியல் என எதையாவது வைத்து எழுதப்படும் எல்லாப் பிரச்சாரக்
குப்பைகளையும் அங்கீகரிக்கவேண்டியதுதானே?”என்கிறார்.

பெண்ணெழுத்தையும் சேர்த்து ஆணே எழுதிக்கொண்டிருக்க அனுமதியாது அலையலையாக எழுதக் கிளம்பியிருக்கும் பெண்களைக் குறித்த ஆற்றாமையாகவும் பதட்டமுமாகவே ஜெயமோகனின் கோபத்தைக் கொள்ளவேண்டியிருக்கிறது.

“உண்மையிலேயே இவ்விசயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில்
கிருத்திகாவுக்குப் பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள்
முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும்.
பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில்
பேசப்பட்டது என்பதைக் கணக்கிடட்டும்”என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

ஆக, கடந்த முப்பதாண்டு காலத் தமிழிலக்கியம் ஆண்களால் மட்டுமே
நிறைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிமுட்டாள்த்தனமான வாதத்தினைச்
செய்திருக்கிறார். அம்பை போன்று தமிழில் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தமது
படைப்பின்வழி வித்திட்டவர்களுக்கும், அந்த முப்பதாண்டு காலப்பகுதியில்
எழுதிக்கொண்டிருந்த, எழுதிக்கொண்டிருக்கும் இதர பெண் படைப்பாளிகளுக்கும்
தமிழிலக்கியச் சரித்திரத்தில் இடமில்லை என்று சொல்கிறார்.

அவர்களெல்லோரும் ஆணாதிக்கத்தின் துர்க்கந்தத்தில் கற்பூரம்போல கரைந்து
போயிருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சொல்லிவருவதன் மூலமாக,
இலக்கியத்தில் பெண்களுக்குப் பங்கில்லை, அவர்கள் தொடர்ந்தும்
அடையாளமற்றவர்களாகவே நீடித்திருக்கிறார்கள் என்ற வாசக மனப்பிம்பத்தைக்
கட்டியெழுப்ப  ஜெயமோகன் பெரிதும் முயன்றிருக்கிறார்.
தமிழிலக்கிய வரலாற்றின் பாதையில், கண்களில் பட்டை கட்டப்பட்ட
குதிரையின்மீதேறி ஆண் சார்புச் சாட்டையோடு விரைந்து வந்துகொண்டிருப்பது
ஜெயமோகனாகவன்றி வேறு எவராக இருக்கவியலும்?

நாஞ்சில் நாடனது சர்ச்சையைக் கிளப்பிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘வகை
மாதிரி’களில் ஒருவராகவே இந்தக் கண்டனக் கூட்டறிக்கையில் ஜெயமோகன் மையமாக வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழிலக்கியச் சூழலிலும் இணையவெளியிலும் ஆணாதிக்கவாதிகளும் கலாச்சாரச் சாட்டையேந்திய காவலர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் காட்டமுடியும்.மாற்று அரசியற் கருத்துக்களை முன்வைக்கும் பெண்களது ஒழுக்கங் குறித்து கேள்வியெழுப்புவதன் மூலமும், அவர்களைக் குறித்து அவதூறுகளைப்
பரப்புவதன்மூலமும், பாலியல்ரீதியான வக்கிரச் சொல்லாடல்கள் மூலமும்
பெண்களைப் பின்னடிக்கச்செய்வதே அவர்களது அரசியல் விவாதமாக
இருந்துவருகிறது. தனிமனிதத் தாக்குதல்களில் பதிப்பாளர்களோ (சிலர்)
அன்றேல் இலக்கியவாதிகளோ (சிலர்) சளைத்தவர்களல்ல என்பதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். அவர்களிற் சிலர் குழுவாகச் சேர்ந்துகொண்டு
பெண்களுக்கெதிரான தங்களது எள்ளல்களை, இழிவுபடுத்தல்களை, அவதுாறுகளை ‘நிறுவனமய’ப்படுத்தி வருகிறார்கள். இக்கூட்டறிக்கையின் கனதி மற்றும் விரிவஞ்சி அவர்களது பெயர்களை விலக்கியிருக்கிறோம்.
இனிவருங்காலத்தில் அத்தகையோரின் நிலைப்பாடுகள் குறித்து தொடர் உரையாடல்களை நிகழ்த்தவுள்ளோம். ஆக மொத்தத்தில், ஜெயமோகனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வார்த்தையொன்றில் சொல்வதானால், இணையம் ஒரு விரிந்த ‘வசைவெளி’யாக மாறிவருகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவரே அதனைப் பிரயோகிப்பவருமாயிருக்கிறார். இலக்கியத்தில் அறம் என்றும், அழகியல் என்றும், உள்ளொளி என்றும் சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடினால் மட்டும் போதாது; சகவுயிரை மதித்தலே மனித விழுமியங்களில் முதன்மையானதாகும் என்பதை முதலில் ஜெயமோகன் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் குடும்பம் என்ற பாரபட்சங்கள் நிறைந்த
அமைப்பினுள் இருந்தபடி எழுதுவதென்பது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை,
அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் அனைவரும் அறிவர். எனினும், அதற்காக
பெண்கள் தங்கள் எழுத்தின்மீது மென்சாய்வு காட்டுங்கள் என்று கோரவில்லை;
விமர்சனங்களில் கருணைகூர்ந்திடுங்கள் என்று கையேந்தி நிற்கவில்லை.
இத்தகைய அவதூறுகளை, இழிவுபடுத்தல்களை சகவுயிரிகளாகிய எங்கள்மீது
செய்யாதீர்கள் என்பதே எங்களது வேண்டுகோள். எத்தனையோ நூற்றாண்டுகளாக பெண்ணடிமைத்தனம் என்ற ஈயக்குண்டை எங்கள் கால்களில் இழுத்தபடி நகரமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்தபடி உங்கள் பிற்போக்குவாத எச்சிலை இங்கு வந்து கொட்டாதீர்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். உங்களைக் குறித்த
மிகைபிம்பங்களைக் கட்டியெழுப்ப ஆயிரக்கணக்கிலான வழிகளுண்டு.
அவற்றையெல்லாம் விடுத்து, உங்கள் ஆணாதிக்க ‘அறிவாயுதங்களை’ எங்கள்மீது
கூர்தீட்டிப் பார்க்க முற்படாதீர்கள்.

ஜெயமோகனது மேட்டிமைத்தனத்திலிருந்து முகிழ்த்தெழும் அபவாதங்களைத்
தட்டிக்கேட்கும் பொறுப்பு, பெண்களைப்போலவே சக ஆண் எழுத்தாளர்களுக்கும்
உண்டு. எனினும், அவர்களிற் பலர் அதைக் கண்டுகொள்ளாததுபோலவே
கடந்துசெல்கிறார்கள். அல்லது, அவரது நிலைப்பாட்டினையே அவர்களும்
கொண்டிருந்து அவரது வார்த்தைகளில் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். ஒவ்வொரு
படைப்பாளியும் தத்தம் மனச்சாட்சியைக் கேள்வி கேட்கவேண்டிய நேரமிது. சக
எழுத்தாளர், நண்பர், முன்னுரை எழுதித் தருகிறவர், விருதுகளுக்குப்
பரிந்துரைத்தவர், பரிந்துரைக்கவிருக்கிறவர் என்ற சமரசங்களையெல்லாம்
பின்தள்ளி மனச்சாட்சியின் குரலுக்கு செவிமடுத்து எழுபவரே மனிதர்! அவரே
உண்மையான படைப்பாளி!

தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும்
சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு
வளைத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலையையே ஜெயமோகன் தற்போது கொண்டிருக்கிறாரோ என ஐயுறுகிறோம். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிராக, இந்த அறிக்கையினூடாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம்
அம்பை, குட்டிரேவதி, சுகிர்தராணி, தமயந்தி, கவிதா முரளிதரன், சே.பிருந்தா, அ.வெண்ணிலா, சல்மா, பெருந்தேவி, தமிழச்சி தங்கபாண்டியன், மோனிகா, ஜீவசுந்தரி பாலன், உமா சக்தி, தர்மினி,  கவிதா சொர்ணவல்லி, வினோதினி சச்சிதானந்தம், கவின்மலர், மயு மனோ, சக்தி ஜோதி, தமிழ்நதி, லிவிங் ஸ்மைல் வித்யா, ஸ்வாதி ச.முகில், ஆர்த்தி வேந்தன், நறுமுகைதேவி, முபீன் சாதிகா, பாரதி செல்வா, ரமா இன்பா சுப்ரமணியம், ஷஹிதா, கொற்றவை, பரமேஸ்வரி, சபிதா இப்ராஹிம், ச.விஜயலட்சுமி, உமா மோகன், ஹேமாவதி, பிரசாந்தி சேகரம், நாச்சிமகள் சுகந்தி, ஜீவசுந்தரி பாலன், பத்மஜா நாராயணன், கீதா இளங்கோவன், பாலபாரதி, சி.புஷ்பராணி, பானுபாரதி, பவானி தர்மா, இளமதி, கிர்த்திகா தரன், நிலவுமொழி செந்தாமரை, சு.தமிழ்ச்செல்வி, நந்தமிழ்நங்கை, கல்பனா கருணாகரன், சி.மீனா, ஜென்னி டாலி, ப்ரியம்வதா, இந்திராகாந்தி அலங்காரம்,தமிழ்ப்பெண் விலாசினி, கு.உமாதேவி, தேனம்மை லஷ்மணன், அப்துல் ஹக். லறீனா, கீதா நாராயணன், ஃபாயிஸா அலி, பெண்ணியம் இணையத்தளக் குழு (தில்லை, கேஷாயணி, சுகந்தி,வெரோனிக்கா, சரவணன்), லதா சரவணன், ஜீவலக்ஷ்மி, ஷில்பா சார்லஸ், அகல்யா பிரான்ஸிஸ், ராஜ் சுகா, சசிகலா பாபு, சுபாஷினி திருமலை, நிவேதா உதயன், கோதை, சாந்தி, பிறேமா, நிலா லோகநாதன்

(எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்)

பிற்குறிப்பு:
இந்தக் கண்டனக் கூட்டறிக்கையோடு உடன்படுகிற ஆண் படைப்பாளிகள்,கலைஞர்கள் இந்தப் பதிவின்கீழ் தமது ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.