நம் குரல்

“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.





* ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், "இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?" என்று கேட்கின்றனர். ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா? பெண்ணியவாதிகளே பெண்ணியவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், என்று பதில் இட்டிருந்தார்.

* 'ஜிஷா', தலித் என்பதால் பொதுச்சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே, இந்தியப் பெண்ணியவாதிகளும், ஊடகங்களும் கூட வேடிக்கை பார்ப்பதுடன் கடந்தும் செல்கின்றனர்.
* நிர்பயா விடயத்தில் ஒருங்கிணைந்தது, போல் இதில் பெண் சமூகம் ஒருங்கிணைய சாத்தியமில்லை. அதில் வன்முறையை நிகழ்த்தியவர்கள் ஒடுக்கப்பட்ட ஆண்கள் என்பதால் தண்டனையைப் பெற்றுத்தருவதில், ஒடுக்கப்பட்ட ஆண்கள் மீதான வெறுப்பைச் செயல்படுத்துவதில் பெண்கள் வெற்றி கொண்டார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

* ஜிஷாவின் படுகொலையில் மட்டுமல்ல, சமீபத்திய சாதிஆணவப்படுகொலையாகட்டும், பள்ளி மாணவிகள் படுகொலையாகட்டும், எல்லா படுகொலைகளிலுமே வன்முறையை நிகழ்த்தும் விதத்தில், கரும்பை நுழைப்பது, முலைகளை அறுப்பது, குடலை உருவுவது என்று 'படுகொலை' ஒரு கேளிக்கையாவதை உணரமுடிகிறது. ஃபேஸ்புக்கில் நாம் எப்படி அவதூறுகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதில் சுவாரசியம் பெறுகிறோமோ அது போலவே.

* ஜிஷாவின் வன்கொலையில் எவ்வளவு காட்டுக்கத்தல் கத்தினாலும் நீதி என்பது ஒரு பிஸ்கெட் துண்டுக்குத் தான் சமானம். நிர்பயாவின் விடயத்தில் இல்லாத, பெரும் அமைதி நிலவும் இந்த நேரத்திலேனும் பெண்ணியவாதிகள் எல்லாம் பார்ப்பனீயமயமாகிவிட்டதை உண்மையான போராளிச்சமூகம் உணரவேண்டும்.
* பார்ப்பனீய பெண்ணியவாதிகள், காலங்காலமாக பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் 'பெர்சனல்' ஆதாயங்களைக் காரணமாக வைத்து, 'பிரித்துவிடுவது' ஒன்றே அவர்கள் ஆகச்செய்யும் சிறந்த வேலை, கலை. அப்படி பிரித்து வைத்திருந்தால் தான் இவர்களின் பார்ப்பன அடையாளங்களை, அதிகாரங்களை, அங்கீகாரங்களை இழக்காமல் இருக்கமுடியும். இது தான் அவர்கள் முன்வைக்கும் 'பெண்ணியம்'.

*பெண்கள் ஒருங்கிணைந்தால், பார்ப்பனீய பெண்ணியவாதிகள், தங்களின் சாதிய அங்கீகாரத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ( இவை தாண்டி, பார்ப்பனச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை அப்படி உணராத, தம் அடையாளங்களை தொடர்ந்து மறுக்கும் பெண்கள் யாரேனும் உண்டா, இங்கே)

* அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின், அதாவது சமூகத்தின் சாதிய விழிப்புணர்வின் மறு தூண்டலுக்குப்பின், இந்தியாவின் எந்த மூலையிலுமே பெண்கள் இயக்கத்தைக் கட்டைமைக்க முடியவில்லை. இது ஆய்வுப்பூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. எங்கெங்கு பெண்கள் இயக்கம் தோன்றினாலும், அங்கே சாதி அதிகாரப் பெண்கள் நுழைந்து சாதிமறுப்பு அமைப்புகளை 'ப்ளேட்' போட்டு கத்தரிக்கவே செய்திருக்கிறார்கள்.
* 'தலித்' என்றால், சாதிப்படிநிலைகளில் சேராது. ஒடுக்கப்பட்டவர்கள் என்றே பொருள். ஆனால், சமீபத்தில், பார்ப்பனீயச் சிந்தனைச் சாய்வால், மெல்ல, மெல்ல 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது.

* இந்த சாதிமயப்போக்கால், ஏற்கெனவே, 'தலித்' சமூகத்தின் மீதான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதி ஆதிக்க சமூகம், 'தலித் சாதிப்' பிரச்சனைகளை, வன்முறைகளை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவே தூண்டும்.
* 'சாதி ஒழிப்பு' நூலில், அம்பேத்கர் இரண்டு முக்கியமான விடயங்களை முன் வைக்கிறார். ஒன்று: அகமணமுறையிலிருந்து விடுபடுதல். இரண்டாவது: இந்த நாட்டின் நீதிமுறை என்பது பார்ப்பனீய நீதிமுறை என்பதை உணர்ந்து அதை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடருதல்.

* “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - என்று கதறுகிறார், ஜிஷாவின் தாய். இந்திய நீதிமுறை ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதியை ஒரு பொழுதும் வழங்கியதில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
* இப்பொழுது, 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது. சாதியத்தின் ஸ்பெஷல் தன்மை என்னவென்றால், நம் வீட்டில் வன்முறைகள் நிகழாத வரை, எல்லாமே நமக்கு வேடிக்கை என்ற குணாதிசயம் தான். யாரும் 'மூச்' விடமாட்டார்கள்.


குட்டி ரேவதி

நான் சாதியற்றவள்!


என்னிடம் உயர்சாதி, ஆணவக்கொலைகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டீர்கள். ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஓர் அறிக்கையில் என் பெயரையும் இணைத்துக்கொள்கிறீர்கள் என்பதாய் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.
இப்பொழுது உங்கள் இணையதளத்தின் தலைப்பில், ஆதிக்கசாதி, என்றும் என் புகைப்படத்தின் மீது உயர்சாதி என்றும் அச்சாகி இணையம் எங்கும் பரவிவருகிறது. ஒன்றுக்கொன்று முரணாக, எந்தக் கருத்தியல் தெளிவுமற்று வெளியாகியிருக்கிறது. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
மேலும், நீங்கள் உண்மையில் செய்திருப்பது ‘புகைப்படம்’ சார்ந்த பிரச்சாரம். அதில் என்னுடைய எந்தப்புகைப்படத்தை உபயோகிக்கப்போகிறீர்கள், அதன் மீது என்ன வரிகளை அச்சாக்கப் போகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. அந்த வரிகளையும் அந்தப் புகைப்படத்தையும் என்னிடம் அனுப்பி ஒப்புதல் வாங்கவில்லை.
நான் சாதியற்றவள். என் எழுத்து வாழ்வில் இதுவரை நான் உறுதிகொண்டு சம்பாதித்த நன்னம்பிக்கைகளை இந்தப்புகைப்படம் பிரச்சாரம் முழுமையாகச் சிதைத்துவிட்டது.
நீங்கள் பதிவிட்ட அன்று முழுநாளும் ஒரு பாடல் பதிவில் இருந்ததால், அதைக் கவனிக்கவில்லை. பின் மாலையில், நண்பர்கள் சிலர் அறிவித்ததன் பின்தான் அறிய நேர்ந்து என் மறுப்பைத் தெரிவிக்கமுடிந்தது.
ஆனால், அதற்குள்ளாகவே, எனக்கு எதிராக நீண்டநாட்களாகச் செயல்பட்டு வரும் நண்பர்கள் எல்லோரும் இதைத் தங்களின் நோக்கங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதியிருக்கவேமாட்டேன். இன்னும் என் புகைப்படம் ‘ ippodhu.com தளத்தில் நீக்கப்படாமல் இருப்பதும், அது மீண்டும் மீண்டும் சுற்றுக்கு வருவதும் அதிர்ச்சியையும், வேதனையும், கடுமையான மனஉளைச்சலையும் தருகிறது.
நான் உடன்படாத ஒரு செயலுக்கு நான் எப்படிப் பொறுப்பேற்கமுடியும். உடனே, அந்தப் புகைப்படத்தை உங்கள் செய்தித்தளத்திலிருந்து நீக்கவேண்டும். புகைப்படம் நீக்கியது குறித்த விளக்கத்தையும் உங்கள் இணையத்தளத்தில் பதிவிடவேண்டும்.
இன்னும் இருபத்திநான்கு மணிநேரத்தில் அதை நீக்கவில்லையெனில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்குவேன் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
குட்டி ரேவதி, கவிஞர்
(மார்ச் 25, 2016)

சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!

* 'நான் உயர்சாதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்டாமைத்தனத்துடனும், ‘நான் பெரிய முற்போக்காளராக்கும்' என்ற தொனியுடனும் ஓடிவந்து பதிவிடுபவர்கள் எவரிடமும் இதுகாறும் குறைந்தபட்ச சாதிமறுப்பு உணர்வைக்கூடப் பொதுவெளியில் நான் பார்த்தே இராததால் இதை எழுத வேண்டியிருக்கிறது.
*நான் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், எல்லோரும் நான் பிறந்து வந்த சாதியை அறிவார்கள் என்ற புரிதலுடன்தான் நான் இந்த உலகத்தில் வாழ்கிறேன். ஏனெனில், எல்லா சமூகத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் அந்த விழிப்புடன் தான் எல்லாமே அணுகப்படுகின்றன என்பது யாரும் அறியாதது அல்ல. நானும்.
* எந்த அளவிற்கு 'நான் இந்தச் சாதியுடையவள்' என்று ஒருவர் சொல்கிறாரோ, அந்த அளவிற்கு, 'நான் சாதியற்றவள்' என்று சொல்வதும் இந்த அவலமான உலகத்தில் ஒரு சுவாரசியமான புனைவு. அந்தப் புனைவை நானும் 'எனக்கு நானே' ஏற்படுத்திக்கொண்டு தான் வாழ்ந்துவருகிறேன். ஏனெனில், அப்படி சொல்லிக்கொள்வது என் வாழ்விலும் சமூக முற்போக்குத் தளங்களில் ஒரு சொகுசாக இருக்கிறது. அவ்வளவே. ஆனால், அது குறித்த பொதுவெளி உரையாடலுக்குக் கூட, நீங்கள் சாதிமறுப்பு நாட்டாமைகளின் கடவுச்சீட்டிற்குக் காத்திருக்கவேண்டும். உண்மையில் இதைப்பிற, பெண்ணிய விவாதங்களில் இதற்கு முன் எந்தப் பெண்ணியவாதியும் முன்வைத்ததில்லை. முன்வைக்கவும் முடிந்ததில்லை. அதற்கான வாய்ப்பையும் பெண்ணியவாதிகள் ஏற்படுத்திக்கொண்டதில்லை. மிகவும் வசதியாக ஒதுங்கிக்கொள்வார்கள், அல்லது மறந்துவிடுவார்கள். கடந்துசென்ற, ‘பெண்கள் தினத்திலேனும்' யாரேனும் முன்வைத்தார்களா, என்ன. அட, போங்கப்பா!
* எல்லாப்பெண்ணிய நாட்டமைகளும் ஓடிவந்து, நாட்டாமை தொனியிலேயே இதை என்னிடம் கேள்வி கேட்பது மிகவும் வியப்பானது, திகைப்பானது. இவ்வளவு காலம் உண்மையிலேயே இவ்வளவு சாதிய மறுப்பாளர்கள் பெண்ணியவாதிகளாய் இருந்திருக்கிறார்களா என்று அறிய நேர்ந்ததும் என் நல்வாய்ப்பே.
* பெண்ணியவாதிகளின் பசப்புகளும் பாசாங்குகளும் உலகம் அறிந்தது. ஓர் ஆணிடம் என்றால், அவர் ‘ஆணாதிக்கவாதி’ என்று முகத்திற்கு நேரேயே ஒரு கருத்தை முன்வைக்கமுடியும். எதிர்ப்பைப் பதிவுசெய்யமுடியும். ஆனால், பெண்ணியவாதிகள் அவரவர் வாடகைக்கு வாங்கிய சாதிக்குடைகளின் கீழ் ஒளிந்து கொண்டுதான் பெண்ணியவாதத்தையே நிகழ்த்துவார்கள். பெண்ணிய, முற்போக்கு ஒருமை இல்லாதவர்கள். அடுத்தடுத்த பெண்களை, ஆண்களின் அதே வன்மத்துடன் எதிர்கொள்வதில் ஈடுஇணை இல்லாதவர்கள். பாருங்கள். எல்லோரின் உரையாடலையும் சென்று மீண்டும் வாசியுங்கள். அவரவர் சாதிமுகங்கள் அதில் பளபளக்கும். அதிகாரமும் வியர்க்கும். அவரவர் கோட்டைகளும் எல்லைகளும் கூடத்தெளிவாகும்.
* சாதிய ஒழிப்பிற்கான, சர்வ அதிகாரத்தையும் அதற்கான தடிகளையும் யார் உங்களிடம் தந்தது. எந்தச் சாதி அதிகாரத்தின் பேரில் அதைக் கையில் எடுத்துக் கொண்டு பேசுகிறீர்கள்? அந்தத் தடியின் பின்னால், சாதி அதிகாரத்தை ஒழிப்பது குறித்த விவாதத்தையே நீங்கள் தான் மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருப்பது போன்ற தொனி, மிகவும் மிரட்டலாக இருக்கிறதே. உங்கள் இமேஜைக் கொஞ்சம் சரிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில், அதில் 'பார்ப்பனீய' வாடையும் இதுவரைப்பொத்தி வைத்திருந்த ஒற்றை அதிகாரமுகமும் வெளிப்படையாகிறது. இதில் நீங்கள் எங்கே சாதியற்றவர் ஆகிறீர்கள்? யார் உங்கள் கையில் 'அம்பேத்கரை' ஒரு சிலையாக்கிக் கொடுத்தது?
* சாதிமறுப்பு நடவடிக்கைகளை, தலித் மக்கள் மட்டுமே செய்யவேண்டும் என்றால், 'தலித் அல்லாத’ சாதி ஒழிப்பு நடவடிக்கையில் முழுமுனைப்புடன் ஈடுபடுபவர்களை, முற்போக்குப் பெண்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள். அம்பேத்கரைக் குத்தகை எடுத்திருப்பவர்கள் மட்டுமே சாதிய மறுப்பு நடவடிக்கைகள் செய்யலாம் என்றால், முதலில் நீங்கள் அம்பேத்கரை முழுமையாக வாசித்துவிட்டு வந்து பணியாற்றுவது தானே சிறப்பாக இருக்கும்.
* 'இப்போது.காம்' சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நீங்கள் தான் என்னை சாதி அடையாளத்துடன் பார்க்கிறீர்கள். ஏனெனில், இதுவரை நீங்கள் அப்படித்தான் பார்த்துவந்திருக்கிறீகள். பெண்களைச் சாதியாக பார்க்கும் மனம், பார்ப்பனீய மனம். அது என்னைச் சாதியில்லாதவள் என்று அம்பேத்கர் அறிவியலின்படிக் கூட ஏற்கத்தயங்குகிறது. உங்கள் மனதில் உள்ள சாதியத்தந்திரங்களும் மாய்மாலங்களும் ‘மேனிப்புலேஷன்களும்’ வெளிப்படையாகின்றன, என்பதை முழுமனதுடன் நீங்கள் இப்பொழுதாவது ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
* இதுவரை, படைப்பிலும் எழுத்திலும் நான் முன்வைத்துவந்த, என் சாதிமறுப்பு முன்மொழிதல்களை சமூகத்தின் எல்லா இடங்களிலும் கவனமாகப் புறக்கணித்துவிட்டு, இந்த இடத்தில்வந்து தங்களைச் சாதியமறுப்பாளராக முன்வைப்பது குறித்த உங்கள் பாசாங்குகளை நான் அறியும்போது உங்கள் ஒப்பனை ஒரு நீர்கோலம் அழிவதைப் போல கலைவதை உணர்கிறேன். வன்மையான கண்டனங்களை முன்வைக்கிறேன். வட்டத்தை வரைந்து கொண்டு, சமூகத்தளங்களில் வீறு கொண்டு எழுதி முன்னகரும் பெண்களை வட்டத்திற்கு வெளியே நிற்கச்சொல்லும், தங்கள் தங்கள் சாதிகளின் வன்முறைகளிலிருந்து வெளியேறத்துடிக்கும் பெண்களை ஒற்றைமுனை சாதிஅதிகாரத்தால் கண்டிக்கமுயலும், உங்களின் தடிகள், காவல்துறையின் தடிகளை விட வன்மம் நிறைந்தவை.
* சாதிஒழிப்பிற்கு, 'தலித்' பிரிவைச் சேர்ந்த கருத்தியலாளராகவோ அல்லது, 'சாதியற்றவர்' என்று கூக்குரலிட்டுக்கொள்வதோ மட்டுமே போதுமானது இல்லை. சமூகத்தின் குறுக்குவெட்டில் இறங்கி, சாதி நிறைந்த சமூகத்திடம் சாதிபற்றிய உரையாடல்களை நிகழ்த்தும் பெருமனம் இல்லாத, 'எக்ஸ்க்ளூசிவ்னெஸ்' சாதிமறுப்பு போலித்தனமானது, கண்டனத்திற்குரியது. தான் மட்டுமே தலைவராகவேண்டும் என்ற ஆசைகொண்டது. யாரையும் உள்ளடக்கிக்கொள்கிற, எவரையும் உள்ளடக்கிக் கொள்ளும் மனமற்ற, சிந்தனையற்ற போக்கு, அதே பார்ப்பனீய போக்கு தான் இன்னும் இன்னும் வன்முறைகளை அதிகப்படுத்துகிறது.
* இன்றைய தினத்தில், ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. படைப்பாளியும் அரசியல் தலைவருமான சிவகாமி அவர்களுடன் இரண்டு வருடங்கள் தொடர்ந்து களப்பணியில் பணியாற்றி வந்தக் காலத்தில், வம்படியாய் என்னை சிவகாமியிடமிருந்து பிரித்தார்கள். ஒரே காரணம், ‘தலித் அல்லாதவர்’ அந்தத் தலைவருடன் இணைந்து பணியாற்றத் தகுதியற்றவர் என்பது தான். இத்தனைக்கும் சிவகாமி அவர்களுடன் என்னுடைய களப்பணியும் உறவும், எந்தத் தரச்சோதனைக்கும் தயாரானது.
* இத்தனை வருடங்களும் எப்படிப் பெண்ணியவாதிகள், பார்ப்பனீய சிந்தனைப் பதிப்பகங்களுடனும், படைப்பாளிகளுடனும் ‘க்யூ’வில் நின்று தங்கள் பெண்ணியவாதத்தைத் தொடர்ந்தபோது, நான் மட்டும் எதிர்த்திக்கில் நின்று தொடர்ந்தேனோ அது போலவே இனியும் என் உரையாடல்களையும் விவாதங்களையும் தொடர்வேன். இப்படியான, ஒரு நகைமுரணான சம்பவம் (இப்போது.காம்) தரும் வாய்ப்பிற்காக நான் மிகவும் காத்திருந்தேன் என்று தான் சொல்லவேண்டும். 'பெண்ணியவிவாதமும்' அதன் பாசாங்குகளும் இதனால் வெளிச்சத்திற்கு வருகின்றன.
* நான் நாசமாகப் போவது இருக்கட்டும். (முதலில், 'நாசமாய்ப் போவது' என்று பேசுவது பகுத்தறிவு வாதமும் அன்று. உங்கள் பகுத்தறிவுவாதத்திற்கு அழகும் அன்று.) நான் ஒழிக்க முடியாது போன சாதிஆணவக் கொலைகளை நீங்களேனும் ஒழித்தால், ஒரு சாதாரணக் குடிமகளாக நான் உங்களுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.
* இந்த இலட்சணத்தில் ‘ஆண்'சாதிமறுப்பாளர்களின் குறுக்கீடுகள் வேறு.
வாருங்கள். உரையாடலைத் தொடர்வோம்.

~ குட்டி ரேவதி

வீரம் மிகு பெண், ஷீதல் சாதே!




ஷீதல் சாதே, இந்தியப் புவிப்பரப்பின், அம்பேத்கர் பூமியின் மிகவும் முக்கியமான பாடகி. "என் பாடல்களே என் எதிர்ப்பு வடிவம்!" என்று சொல்லும் இவரை, ஆனந்த் பட்வர்த்தனின் "ஜெய் பீம்" ஆவணப்படத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருக்கக் கூடும். உண்மையான வீரம், கேட்பவர்களின் எலும்புக்கூட்டை உலுக்கும் குரல் எனத் தனித்துவம் கொண்டது. இவர் மேடைகளில் பாடக்கேட்கையில் கண்ணீரும் வீரமும் ஊற்றெடுப்பதை உணராமல் இருக்கமுடியாது. இப்படியாக இந்தியா  சினிமா பாடகர்கள் மட்டுமில்லாமல் ஆங்காங்கே மேடைப்பாடகர்களையும் போராளிப்பாடகர்களையும் கொண்டிருப்பதால் தான் இசை என்பதன் தத்துவம், எல்லா சாதி, மதம், பால், வர்க்க அடையாளங்களையும் அழிப்பதாகவும் இருக்கிறது. மராத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்காக அவர் பாடும் பாடல்கள் இங்கே. மொழி புரியாமலேயே உணர்வுகளைக் கடத்திவிடும் குரல். கம்பீரம். பெருங்கருணை. விழிப்புணர்வு.





நன்றி: sabrangindia



தமயந்தியின் சிறுகதை உலகம் பற்றி பிரபஞ்சன்!




நடைபாதை ஓரத்தில் ஒரு பூ பூத் திருக்கிறது. நான் தினமும் நடக்கும் பாதை அது. நேற்று அது இல்லை. யாருக்காக அது பூத்துள்ளது? அந்த இருவருக்காக என்று தோன்றுகிறது. நேற்று சந்தித்து நட்புகொண்டு, நேசம் கொண்ட அந்த இருவருக்காக என்று நாம் நம்ப என்ன வழக்கு? பின் ஏன் பூக்க வேண்டும், பூ? அந்த இருவரின் சிநேகத்தில் மகிழ்ந்து அதைப் பாராட்டி வரவேற்கும் முகத்தான் அந்தப் பூ பூக்கிறது. உலகம் முழுக்க, மண் மேல் பூக்கள் ஆயிரம் ஆயிரமாய் ஏன் மலர வேண்டும்? அன்பின் நேச மனத்தைக் கொண்டாடத்தான். சரி. மலர்கள் ஏன் வாடி உதிர வேண்டும்? அந்த இருவர் ஒரு வரையொருவர் பகைத்துப் புண்படுத்தி விலகும்போதெல்லாம் மலர்கள் வாடுகின்றன. உதிர்ந்து போகின்றன.
மலர் உதிர்வது என்பது மனம் உதிர்வது. மனம் உதிரும்போதெல்லாம் பதைத்துப் போகிறார் தமயந்தி. ஏன் மனிதர்கள் பிணக்கு கொள்கிறார்கள்? இருவேறு தேசத்து ராணுவக்காரன் மாதிரி ஏன் பகைக்கிறார்கள்? பங்காளி கள் மாதிரி ஏன் வழக்கு பேசுகிறார்கள்? எதிரிகள் போல ஏன் வதை செய்ய வேண்டும்? சொற்களை எறிந்து ஏன் காயப்படுத்த வேண்டும்? புறக்கணிப்பு, அவமானம் என்பதெல்லாம் ஒரு கூரை யின் கீழ் தாம்பத்யம் என்ற பெயரில் நிலை பெற வேண்டும்தானா? தமயந்தி இந்தக் கேள்விகளோடு பயணம் செய்கிறார். எழுதும்போதும் இதையே எழுதுகிறார். எவையெல்லாம் அவரை இம்சிக்கிறதோ அவைகளை அவர் எழுதுகிறார். எனெனில் அவர் எழுத்தாளர்.
தமயந்தியை 1980-களின் கடைசிப்பகுதியில், அவர் கதைகளின் வழியே சந்திக்க நேர்ந்தது. அவசியம் படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதை முதல் சில சிறுகதைகளிலேயே நினைக்க வைத்தார். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். கணவன், மனைவி, காதலன், காதலி, தந்தை, மகள், நண்பர், நண்பி என்கிற உறவுகளின் பிணைப்பு, எவ்வாறு நாளடைவில் வன்மம் கொள்கிறது? வன்முறை ஒரு வாழ்க்கை நிகழ்வே போல எப்படி உருமாற்றம் அடைந்து பெண்களைச் சிதைக்கிறது என்கிற புலத்தைத் தமயந்தி அளவுக்குக் காத்திரமாகச் சொன்னவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே ஆவார்கள். அவருக்குக் கூடி வந்திருக்கிற கலைத் திரட்சியும், வடிவ நேர்த்தியும், மொழி ஆளுமையும் தனித்வம் பொருந்தியவை.

அண்மையில் வெளிவந்திருக்கும் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ என்கிற தமயந்தியின் சிறந்த கதைகளைக் கொண்டிருக்கும் தொகுதியில் ‘முகம்’ எனும் கதை இப்படி ஆரம்பிக்கிறது:
‘காலைல எழும்பி முகம் கழுவிவிட்டு பல் விளக்கி வாய் கொப்பளிச்சிட்டு கண்ணாடி பார்த்து தலையைக் கோதலாம்னு பார்த்தப்பத்தான் முகத்தைக் காணோம்னு புரிஞ்சுது. சட்டுனு ஏதோ ஒண்ணு பதைபதைக்க இன்னொரு முறை கெளரி கண்ணாடிய உத்துப் பாக் குறா. கண்ணு, மூக்கு, உதடு, நாடி எதுவுமே இல்லாம வெறும் சதைக் கோளமா இருக்கிற முகத்தை பார்த் தாலே மிரட்சியா இருந்துச்சு. கண்ணே இல்லாம எப்படி பார்க்க முடியுதுனு சத்தியமா இவளுக்குத் தெரியல...’
தமயந்தி கதைகளின் மையம் அல்லது அகம் இப்படி இருக்கிறது. என்ன பண்ண? முப்பது நாளில் சிவப்பழகு பண்ணிக்கொண்ட பெண்ணைப் பற்றி, சீவி சிங்காரித்து வாசலில் ஸ்கூட்டர் சப்தத்தை எதிர்பார்த்து நிற்கும் குமாரிகள் பற்றி, நேத்திக்கு வாங்கின புடவைக்கு மேட்சாக பிளவுஸ் பிட் கிடைக்காத கவலையில் தோய்ந்த திருமதிகள் பற்றி எழுத நிறைய பேர்கள் இருக்கிறார்களே!
தமயந்தி, பெரும்பகுதி நிஜமானப் பெண்களின் பிரதிநிதியாக எழுத வந்து, நிஜமான பிரச்சினைகளை எழுதுகிறார்.
பிடிக்காத பாடத்தை எடுக்கச் சொல்லிப் பெண்களை வற்புறுத்தி காலேஜில் சேர்த்துவிட்டு ஆசைகளைக் கருகச் செய்த அப்பன்களை யார் எழுதுவது? கடைசி செமஸ்டர் முடிக்கும் முன்பாக ‘இவன்தான் மாப்பிள்ளை’ என்று ஒரு கேனயனைக் கொண்டு வந்து நிறுத்திய தந்தைமார்களை யார் எழுதுவது?
‘பக்கி மவள… தூரம் பட்ட துணியை பேப்பர்ல சுத்தி யாருக்கும் தெரியாம கொண்டு போடு’ என்கிற மாமியாரை யார் எழுதுவது.
‘கனவுல சில்வியா ப்ளாத் தினமும் வர்றா. பாதி புரியுற ஆங்கில கவிதைகளச் சொல்றா. ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு. ஒரு தடவ பாலாஜியோட லேப்டாப்ல சில்வியா ப்ளாத்னு அடிச் சோன்ன இணையதளம் விரிய ஆரம் பிச்ச நேரம், அவன் பின்னந்தலைல தட்டி ‘‘என்ன பண்ணிட்டு இருக்க... டிபன் எடுத்து வை’’ன்னான். சில்வியா ப்ளாத் அவன் சொன்னதை இணையத்துலேர் ருந்து பார்த்துகிட்டே இருந்தா. அவ முகம் மாறின மாதிரி தோணுச்சு கெளரிக்கு.
அவளுக்குப் பாட ஆசை. வாயைத் திறந்தால் ‘‘என்னடி கரையுற காக்கா மாரி’’ன்பான் அவன். அதான் அந்த கேன யன்தான். அவனின் இன்னொரு பெயர் கணவன், இந்த தேசத்தில். இவர்களைத் தொழ வேண்டும் பெண்கள். தொழும் பெண்கள், பெய்யென்றால் மழை பெய் யும். ஆமாம் பெய்யும். பெய்யெனச் சொன்னால் மாடுகூடப் பெய்யாதே!
தமயந்தி கோபக்காரர் எல்லாம் இல்லை. அவர் கோபம் சமூகம் சார்ந்த கோபம். அந்தக் கோபம், கலாபூர்வமாக மாறி சிறுகதை இலக்கியமாகவும் மாறுவதால், அற்புதமான நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துவிடுகிறது. வன் முறைக்கு - சகலவிதமான வன்முறை களுக்குமான எதிர்குரலை, கதைகளின் ஊடாகவும் உள்ளோட்டமாகவும் மாற்றி நல்ல வாசிப்புக்கு வடிவம் தருகிறார் அவர். விடுதலையைத் தமயந்தி அவர் கண்ணோட்டத்தில் முன் வைக்கிறார்.

ஓர் அழகிய கதை ஒன்றைப் பார்ப்போம். சமூக அக்கறையும் மனித நேயமும் கொண்ட அவள் செய்தி சேகரிக்கக் கிராமம் செல்கிறாள். வசந்தி என்கிற பெண் பேசுகிறாள். எங்கள் ஊருக்கு அருகில் ஒரு காடு. அது எங்களுக்குத் தாய். அதில் ஏதோ ஆராய்ச் சிக்கூடம் கட்ட நினைக்கிறது அரசு. பழனி அண்ணன் தலைமையில் ஊர் போராடுகிறது. போராட்டக்காரர்களைப் போலீஸ் கடுமையாகத் தாக்கிச் சிறை பிடிக்கிறது. தலைமறைவான பழனியண் ணனுக்குக் குடிக்க நீர் கொடுக்கிறது வசந்தி குடும்பம். மாபெரும் குற்றம் அல்லவா அது? பழனியைத் தேடி வந்த காவலர்கள், அவள் தந்தையைக் கொல்கிறார்கள். அவளை இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி… வசந்தியின் கர்ப்பப்பையே கிழிகிறது. வசந்தி தன் அனுபவத்தை கேட்பவள் மனம் பதறச் சொல்லிக்கொண்டு போகிறாள். இதனுடே, அந்த ஏழைக் குடும்பம் வெளிப்படுத்தும் விருந்தோம்பல் அற்புதமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவள், எழுந்து தரையில் அமரப் போகிறாள். அவசரமாகப் பாய் விரிக்கப்படுகிறது. ‘‘நீங்க கறி மீன்லாம் சாப்பிடுவீங்களா?’’ என்கிறாள் ஒரு பெண்.
இதற்கிடையில் செய்தி சேகரிப்புப் பெண்ணுக்குக் காதில் இன்னொரு குரல் - முரளியின் குரல் ஒலிக்கிறது.
‘‘ஊரு சுத்தப் போயிட்டியா?’’
கணவன்தான்.
‘‘ஊருக்கு நியாயம் கெடைக்கச் செய்வாளாம்... வீட்ல இட்லிகூட கெடைக்க வைக்க முடியலையே.’’ அலைபேசி சிணுங்கியது.
‘‘என்ன போனை எடுக்க மாட்டியா? உனக்கென்ன கவலை... நாங்க இருந்தா என்ன செத்தா என்ன? மெள்ள வா...’
டிராவல் பண்ணாதனு சொல்றாங்க டாக்டர். சனியன். லீவு போடறியா..? சாதாரணமா வத்தக் குழம்பு சுட்ட அப்பளம்னு உள்ள பொண்டாட்டியைக் கட்டியிருக்கணும்...
தட்டு இட்லியோடு பறந்தது...
வசந்தியின் கதையோடு, அதே தரத் தில் இன்னொரு, அதே வன்முறைக்கு ஆளான செய்தி சேகரிப்பாளர் கதையும் இணைகிற ரசாயனம் அருமையாக இணைந்த, தமிழில் முக்கியமான கதை இது.
அன்பைத் தேடி அன்பைத் தவிர வேறு எதுவும் புழங்காத ஓர் உலகத் தில் ஒரு குழந்தையாக அலைய விரும்புகிறார் தமயந்தி. கிடைத்திருக்கும் இந்த அழகிய உறவை, அழகிய வாழ்க்கையை ஏன் விகாரப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்.
உண்மைதான். எத்தனை அழகியது இந்தக் குளிர் காலை, இந்த அருவி, இந்த நதி, இந்த நிலவு... இந்த அழகுகளோடு மனித குலம் ஏன் இணைந்துக்கொள்ளக் கூடாது என்கிறார் தமயந்தி. ஆமாம். ஏன் நாம் அழகாகக் கூடாது?
தமயந்தியின் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ சிறுகதை தொகுப்பை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

- நதி நகரும்…

நன்றி: "தி இந்து"


கடவுளை இல்லாமல் ஆக்கினேன்


எல்லாம் அறிந்தவனான ரோஹித்தும் அந்த நீலக்கயிற்றின் சுருக்கில் தலையை இறுக்கிக் கொண்டான் நட்சத்திரங்களைக் கண்களிலிருந்து உதிர்த்துவிட முடிவெடுத்தவன் சில நட்சத்திரங்களைத் தந்து போகப் போராடினான் செட்டைகளைத் தன் மீதே மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டான் உடலுக்கும் இதயத்திற்கும் இடையே பயணம் தூரமாகிப் போக அவன் சூரியனைத் தன் தலைமீதே சுமந்து நடந்தான் விடுதலையின் பதாகை வானமாகி மேலே எழும்பிக் கொண்டேயிருந்தது
ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு அவன் கனவுக்கோட்டை எதையும் வாங்கவிரும்பவில்லை புதிய வீடும் சாளரங்களும் கட்டவிரும்பவில்லை கடனும் பசியும் சில நூல்களும் அவன் தனக்கான கூரையைத் தேடினான் உயரமான கூரைக்கு ஏறிப்போக ஏணியைத் தேடினான் ஏணியின் மீதேறும்போதெல்லாம் கூரை மேலெழும்பிச் சென்றது எழும்பி மேலே சென்று கொண்டே இருந்தது ஏணியின் தேவையின்றி கூரையின் கீழ் வாழ்ந்தவர்கள் அவனுக்கு ஏணி அவசியமற்றது என்றனர் ஏணியைப் பறித்து மடித்து உடைத்தனர்
கூரை உடையவர்களுக்கு ஏணி அவசியப்படாதவர்களுக்கு கடவுள் எதுக்கென அவனை இல்லாமல் ஆக்கினேன்
(ரோஹித் வெமூலாவிற்கு)
குட்டி ரேவதி


* (சென்னையில் சனவரி 24, 2016 அன்று, Pranjya ஒருங்கிணைத்திருந்த Zero Apologies கவிதை வாசிப்பு நிகழ்வில் வாசிக்கப்பட்டது.)