நம் குரல்

இரு நிகழ்வுகளும் ஒரே பொருளும்

சென்ற வாரம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் வே. ஆனைமுத்து அவர்கள் ‘இட ஒதுக்கீடு’ பற்றி உரையாற்றினார். முதிர்ந்த பெரியாரியவாதியும் சாதி மறுப்பாளருமான அவர் ஆற்றிய இரண்டு மணி நேர உரை நிறைய உண்மைகளை மாணவர்க்கு நேரடியாக எடுத்துரைப்பதாக இருந்தது. பொதுவாக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் சாதி மறுப்பு பற்றி விவாதிப்பதும் எடுத்துரைப்பதும் புலிப்பால் கறக்கும் வித்தை தான். அப்பொழுது தான் கல்லூரியில் நுழைந்த வயதினரே என்றாலும் ‘சாதி’யை சமூகத்தில் இயக்குவதில் எல்லோரும் கைதேர்ந்தவராயிருப்பதும் கண்கூடாகத் தெரிகிறது. சாதியைக் கற்பிக்க பல்கலைக்கழகமேதும் தேவையில்லை. அந்த அளவிற்கு எல்லா குடும்பத்திலும் பெற்றோர் செவ்வனே அதைக் கற்பித்திருக்கின்றனர்.





ஆனைமுத்து அவர்கள் சாதி ஒடுக்குமுறையின் துல்லியமான வரலாற்றுத் தகவல்களோடும் அரசியல் போக்குகளோடும் உரையாற்றியதையே மிக முக்கியமான சமூக நடவடிக்கையாக உணர்ந்தேன். அவர் மேற்கொண்ட விவாத வடிவம் இன்றைய நவீன ஒடுக்குமுறைக்கு முற்றிலும் பொருத்தமானதாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் மாணவர்களை நோக்கி அவர் கேட்ட கேள்வி, ‘எத்தனை பேரின் தாய் பட்டப்படிப்பு முடித்திருக்கின்றனர்?’ என்று. எவருமே கை உயர்த்தவில்லை. பின், ‘எத்தனை பேரின் தாய் உயர்கல்வி முடித்திருக்கின்றனர்?’ என்று. ஒரு சிலர் தாம் கை உயர்த்தினர். இந்த கேள்விகளுக்குப் பின் ஏன் அவர்கள் பட்டப்படிப்பு பெற முடியாமல் போனது என்றும் இட ஒதுக்கீட்டுச் சட்டம் எவ்வாறு பார்ப்பனியத்தால் பந்தாடப்பட்டதும் என்று கூறினார்.


மார்க்ஸும் மெக்காலேவும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ‘மேல் வருணத்திற்குப் பணிசெய்வதே மோட்சத்திற்கு வழி என்று நம்பும் இந்தியாவில் அனுமான் என்ற குரங்கை வணங்கும் மூடர்கள் வாழும் நாட்டில் எப்படி ஒரு பண்பாட்டுப் புரட்சி எழும்’, என்று மார்க்ஸால் தான் சந்தேகத்தை எழுப்ப முடிந்தது. மனுநீதி மக்களின் மனநிலையை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருக்கிறது என்றால் மனுநீதிச் சோழன் என்ற பட்டத்தைப் பெறுவதற்காகவே சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற ‘சமூக நீதியை’ செயல்படுத்தியிருக்கின்றனர். இந்த ‘சமூக நீதி’ என்ற வார்த்தை அமைப்பு பார்ப்பனியத்தால் வடிவமைக்கப்பட்டது. சரிசமமாக எல்லோருக்கும் எல்லாமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பார்ப்பனிய வேண்டுகோள் சமூகம் பொருளாதாரம் அரசியல் என எல்லா தளங்களிலும் ஏற்றத்தாழ்வுகளை மறைக்கும், மனுநீதியின் சமூகநீதியைச் செயல்படுத்துவதாகும்.




ஏன் மீனவர்களோ தாழ்த்தப்பட்டவர்களோ பழங்குடிகளோ மற்ற சமூகத்தினரைப் போல கல்வியைப் பெறமுடியவில்லை என்ற சமூக நிலைக்கும் நீளவிளக்கம் தந்தார். கடலுக்குச் சென்று ஆண்கள் பிடித்துவரும் மீன்களை ஊர்ஊராகச் சென்று விற்கும் வேலையை பெண்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் குடும்பத்தையும் குழந்தைகளின் கல்வி இன்னபிற தேவைகளையும் நிறைவேற்ற முடியாத வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்கள் பொதுப்போட்டியில் பங்குபெறும் தகுதியைப் பெறமுடிவதில்லை.




இவ்வாறெல்லாம் பேசியவர் ‘இட ஒதுக்கீடு’ அதாவது இடத்தை சாதி வாரியாக ஒதுக்கிக்கொடுப்பது என்பதே பார்ப்பனிய அணுகுமுறை என்றும் அந்த வார்த்தை அதன் சரியான அர்த்தத்தில், ‘இடப்பங்கீடு’ என்றே இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதாவது ‘விகிதாச்சார பிரதிநிதித்துவம்’ என்பதே ஆளப்படவேண்டும் என்பதற்கான அவரது வரலாற்றுப் பூர்வமான நிறுவுமுறையும் அரசியல் தத்துவமும் அனைத்துப் பிரிவு மாணவருக்கும் எழுச்சியூட்டுவதாக இருந்தது. என்னுடைய பார்வையில் இன்றும் சாதி சமூகத்தில் இயங்கும் முறையை எல்லா படைப்பாளிகளும் குறிப்பாகப் பெண் எழுத்தாளர்களும் பேசவேண்டும். அதை அதன் எல்லா நிலைகளிலும் நசுக்குவதற்காகத் தொடர்ந்து பேசவேண்டும். அப்பொழுது தான் இந்திய மண்ணில் பெண்ணியத்திற்கான தத்துவத்தையும் கண்டடைய முடியும் என்பது என் அணுகுமுறை.




பொங்கல் அன்று விஜய் தொலைக்காட்சியில் நடிகர் ‘சூர்யாவின் ஒரு கோடி ஒரு தொடக்கம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் அவர் தனது அகரம் அமைப்பின் மூலம் ஏழை மாணவர்க்குக் கல்வி வழங்கும் திட்டமான ‘விதை’ பற்றிப் பேசினார். இரண்டு மணி நேரம். நிறைய மாணவ மாணவிகள் வரவழைக்கப்பட்டுத் தாம் உயர்கல்வி தொடர முடியாமல் போன வறுமை நிலையைப் பற்றிக் கூறும் படிக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். சூர்யாவும் இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பற்றி அநியாயத்திற்குக் கவலைப்பட்டார். ஆனால் எங்குமே நமது தற்பொழுதைய அந்நிலைக்கான காரணங்கள் விவாதிக்கப்படாமலேயே விடப்பட்டன. இந்தப் புரவலர்களும் மறைமுகமாகக் கல்லூரி நிறுவனர்களுக்குத் தான் உதவுகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்கள் மேல்வர்க்கத்தினரையும் மேல்சாதியினரையும் வரவேற்பதற்கே இருக்கின்றன என்பது யாரும் அறியாததா என்ன? மேலும் பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு அடிப்படையான காரணம் சாதிப் படிநிலையே என்பதை விளங்கிக் கொண்டாலும் அதைப் பொதுத்தளத்தில் பேசுவதற்கான தயக்கமென்ன? தமது சாதி அதிகாரத்தையும் அதன் வழியாகப் பெற்றுக் கொண்டிருக்கும் சமூக மதிப்பையும் இழக்க நேருமோ என்ற தயக்கமா? வழியெங்கிலும் அகற்றப்படாத முட்கள்.




இன்னொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன். மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியின் தத்துவத்துறை ஏற்பாடு செய்திருந்த, ‘சனநாயகத்திற்கான அறங்களும் நடத்தையியலும்’ பற்றிய இரு நாள் கருத்தரங்கு. அத்துறை மாணவர்கள் யாவரும் பாதிரியார்களாகப் போகிறவர்கள் என்றாலும் அத்துறைத் தலைவர் முனைவர். லூர்துநாதன் அவர்கள் இந்திய ஆன்மீகத் தத்துவங்கள் தீண்டாமை, சமூக விலக்கு, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எப்படி உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன என்பதையும் அவை எவ்வாறு மக்களின் மனோபாவமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பதையும் ஆராய்ந்து முற்போக்கான பார்வைகளை மாணவர்களுக்கு அன்றாடக் கல்வியாக்கிக் கொண்டிருப்பவர்.


இக்கருத்தரங்கில் கிறிஸ்துதாஸ் காந்தி அய்.ஏ.எஸ் அவர்களும் ஆவணப்பட இயக்குநர் அமுதன் அவர்களும் ஆற்றிய உரைகள் தத்துவவியல் துறை மாணவர்க்கு முறையே அம்பேத்கர் வரையறுத்த சனநாயகம் மற்றும் ஊடகங்களின் சனநாயமும் அறமுறைகளும் என்பதாய் இருந்தன. எனது உரை இந்தியாவின் பெண்ணியத் தத்துவம் என்பதைப் பற்றியதாய் இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட சான்றோர்களின் இரு நாள் கருத்துரைகளுக்குப் பின்னும் மாணவர்களின் கேள்விகள், ‘அது அவர்களின் பிரச்சனை. அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?’, ‘அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்குறாங்க. எப்படிங்க சாதி ஒழியும்?’ ‘காந்தி அவர்களைக் கடவுளின் குழந்தைகள் என்றல்லவா குறிப்பிட்டிருக்கிறார். வேறென்ன அவர்களுக்கு வேண்டும்?’ என்கிற அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்குமே அந்தச் செய்தி வந்து சேர்ந்திருந்தது, முந்தைய நாள் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை என்ற ஊரில் உள்ள பெரிய கோவில்பட்டி என்ற கிராமத்தில் ஒருவர் வாயில் மலம் திணிக்கப்பட்டிருந்தது. இனி பேச வந்தக் கருத்தை எங்கிருந்து தொடங்குவது, நீங்களே சொல்லுங்கள்?




குட்டி ரேவதி

5 கருத்துகள்:

பதி சொன்னது…

பகிர்விற்கு நன்றி.
திரு. ஆனைமுத்து அவர்களின் குறிப்பிட்ட உரையின் முழுவடிவம் எங்கே கிடைக்கும் என அறியத் தருகின்றீர்களா?

passerby சொன்னது…

//குறிப்பாகப் பெண் எழுத்தாளர்களும் பேசவேண்டும். அதை அதன் எல்லா நிலைகளிலும் நசுக்குவதற்காகத் தொடர்ந்து பேசவேண்டும். அப்பொழுது தான் இந்திய மண்ணில் பெண்ணியத்திற்கான தத்துவத்தையும் கண்டடைய முடியும் என்பது என் அணுகுமுறை.//

Wov...Ms Revathi. Well done.

பெண் சிந்தனையாளர்கள் இப்படிப்பட்ட விடயன்களிலும் பேச வேண்டும் என்பதை நான் எப்போதுமே கூறிவந்திருக்கிறேன். நன்றி.

passerby சொன்னது…

//லூர்துநாதன் அவர்கள் இந்திய ஆன்மீகத் தத்துவங்கள் தீண்டாமை, சமூக விலக்கு, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எப்படி உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன என்பதையும் அவை எவ்வாறு மக்களின் மனோபாவமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பதையும் ஆராய்ந்து முற்போக்கான பார்வைகளை மாணவர்களுக்கு அன்றாடக் கல்வியாக்கிக் கொண்டிருப்பவர். //

இஃதை இந்துக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் சொல்வது யாதெனில்,

இந்து மதம் எவரையும் ஏற்றத்தாழ்வு எனற அடைக்குள் வைத்துப்பார்ப்பதில்லை. தீண்டாமை போன்றவையெல்லாம், இந்துமத்தத்தை தன்வளர்ச்சிக்காக பயன்படுத்த சூழ்ச்சிசெய்த சில குறும்பர்களால் வந்ததே. அஃது தமிழகக்த்தில் நிறைய இருந்ததைக்கண்ட இராமனுஜர் போன்றவர்களால் அடையாளம் காட்டப்பட்டு சீர்திருத்தம் செய்யப்பட்டது. அந்தோ...அவர் முயற்சியும் முழுக்கமுழுக்க வெற்றி பெறவில்லை.

சுருங்கச்சொல்லின், மதக்கோட்பாடுகளுன் குறையில்லை. அப்படியே சில இருப்பினும், அவை, மனிதன் வடித்த அனைத்தும் 100/100 முழுப்பெற்றதாக இருக்காது. ஆங்காங்கே சிலசில குறைகள் இருக்கலாம்’ என்ற common wisdomத்தில் வரும்.

மனிதர் உணவை மனிதன் பறித்தால், அந்த உணவு செய்த தவறா மிஸ் ரேவதி!

இப்பதிவில் பல கருத்துகள் ஒருதலைப்பட்சமாகவே இருக்கின்றன என்பது என் பார்வை.

PRABHU RAJADURAI சொன்னது…

இந்திய அரசியலமைப்புச் சட்டவரைவுக் குழு விவாதங்களைப் படித்தாலும்....இட ஒதுக்கீடாக அல்ல் இடப்பங்கீடாகவே பார்க்கப்பட்டிருப்பது புரியும்/

http://marchoflaw.blogspot.com/2006/12/6.html

செல்வநாயகி சொன்னது…

பகிர்விற்கு நன்றி.