நம் குரல்

நான் ஒரு வெகுசன எழுத்தாளர் அல்லேன்! - நேயர்களுக்கு ஒரு கடிதம்

நான் ஒரு வெகுசன எழுத்தாளர் அல்லேன். வெகுசனங்களுக்கான கனவுகளையும் புனைவுகளையும் மட்டுமே சொல்ல வேண்டிய அவசியத்தை நான் சிந்திப்பதில்லை. ஆனால் வணிகச் சந்தையில் தங்கள் கருத்துகளை சமரசம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆகவே அப்படியான வாசகர்களும் இருக்கிறார்கள். சிற்றிதழ்ப் பண்பாட்டில் வேர்விட்ட எழுத்தாளரான எனது பார்வைகளையும் எழுத்துக்களையும் தமிழ்மணத்தில் முன்வைப்பதும் அதற்கான வாசகரைக் கண்டடைவதும் சிரமம் என்று எண்ணியிருந்தேன். என்றாலும் நான் எழுதிய ஒவ்வொரு பத்தியையும் கூர்மையாக வாசித்து உடனுக்குடன் கருத்துரை வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
ஒவ்வொருக்கும் உடனடியாக மதிப்புரை வழங்க இயலவில்லை. மூன்று நாட்கள் பயணத்தில் இருந்தவாறே பதிவுகளை இடவேண்டியிருந்தது. இருப்பினும் பதில் எழுதிய ஒவ்வொருவரின் கருத்தையும் நான் மிகவும் மதிக்கிறேன் என்றும் ஒவ்வொருவரையும் அவரவர் கருத்துரை வழியாக நன்கு அறிந்து வைத்திருக்கிறேன் என்றும் எழுதிக்கொள்கிறேன். இன்னும் ஒரு நாள் நட்சத்திரப்பதிவராக இருப்பேன். அதற்குப் பின்னும் என்னுடைய வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவேன். தோழியரும் தோழர்களும் தொடர்ந்து தங்கள் கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்தும் வெளியாக அதைப் பயன்படுத்தலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


பொங்கல் விழாவின் உண்மையான மகத்துவத்தை நகரத்தை நோக்கி நகர நகர இன்னும் பெருவாரியாக உணரமுடிகிறது. முற்றத்தில் பொங்கலிட்டு மகிழும் காலத்திலிருந்து நகர்ந்து சமையலறையில் பொங்கலைப் பொங்க விடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரு காலத்திற்கு நாம் நாகரிகமடைந்து விட்டது எதையோ இழந்துவிட்டது போல் இருக்கிறது. தொலைக்காட்சியில் செல்வராகவன், தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் என்று மாறிமாறித் தோன்றி தமிழர்களுக்கு அருள்புரிந்துகொண்டே இருந்ததின் அலுப்பு மறைய நல்ல வேளையாக நிறைய நூல்கள் இருந்தன. அந்த நான்கு நாட்களும் தொலைக்காட்சிகளுக்கும் விடுப்பு கொடுத்துவிட்டால் நன்றாயிருக்கும். சென்னையின் புறநகர்ப்பகுதிகள் இன்னும் கிராமங்களாய் இருப்பதன் அடையாளமாய் பொங்கலின் தொடர்க்கொண்டாட்டங்களை அங்குள்ள மக்கள் வடிவம் மாறாமல் கொண்டாடித் தீர்ப்பதிலிருந்து அறிய முடிந்தது. பண்டிகைகள் தாம் தனிமனிதனை சமூகத்துடன் இசைவான வகையில் பின்னுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.


ஏற்கெனவே எழுதியிருந்தது போல் நிலக்கோட்டையில் நடந்த மனித அவலமும் திருநெல்வேலியில் எல்லோர் முன்னிலையிலும் காவல்துறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் கொலை செய்யப்பட்ட நிகழ்வும் இவ்வருடத்தின் கறை படிந்த படிமங்களாய்ப் பதிந்திருக்கின்றன். என்ன மாதிரியான நாடு, அரசு, மக்கள் என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள சமயம் எடுத்துக்கொள்ளலாம். இது போன்ற படிமங்களை மாற்றியமைக்க தனிமனித இடத்திலிருந்து சிறிது உழைக்கலாம். இது போன்ற பண்டிகைகளின் அர்த்தம் இன்னும் மிகுந்திடும். அதுவே மிகச் சிறந்த சமூகப்பணி!

குட்டி ரேவதி

3 கருத்துகள்:

கள்ளபிரான் சொன்னது…

நிலக்கோட்டையில் நடந்ததே சமூக அவலமாகும். சேரன்மகாதேவி SI வெற்றிவேல் கொலை சமூக அவலமாகும் என்று எப்படிச்சொல்கிறீர்கள? அது தனிப்பட்ட நபர்கள், தங்கள் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகச்செய்த்து. ஆள் அடையாளத்தில் குளறுபடியால் அவர் கொல்லப்பட்டார்.

சமூக அவலமென்றால், மிஸ் ரேவதி, அது ஒரு சமூகக்காரணம் ஒன்று இருக்கும். இங்கு இல்லையே!

அதே வேளையில், தலித்து மலம் தின்ன செய்யப்பட்டது, ஒரு சமூக அவலம். இன்னும் தலித்து சமூகத்தில் இடம் பெறாமல், ஒதுக்கி வைக்கப்பட்டு அவமான்ம் செய்யப்படுகிறான்.

நிலக்கோட்டையில் என்ன நடந்த்தது. ஆர் காரணம்? என்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்தால்தான் நான் உள்ளெ நுழைந்து வாதிட முடியும். பத்தரிக்கைகள் ஊடகங்கள் அனைத்தையும் sensationalise பண்ணும். ஏமாறாதீர்கள்.

அது கிடக்க.

இன்ஸ்பெக்டர் கொலை, ப்ரவலாகத் தெரிந்த்து. அமைச்சர்கள் வேடிக்கை பார்த்த்தால். அரசியலாக்கப்பட்டது. இதைப்போல பல கொலைகளுக்கு நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்கள் பேர் போனவை.

எனக்கு இதுவொன்றும் வியப்பல்ல.

மஞ்சூர் ராசா சொன்னது…

கள்ளபிரான் கூறும் கருத்தே என் கருத்தும்.

||| Romeo ||| சொன்னது…

உண்மையை சொல்லவேண்டும் என்றால் நட்சத்திரப்பதிவராக நீங்க எழுதிய பதிவுகளில் நன்றாக புரிந்த பதிவு இது. இந்த நடை ரொம்ப அழகாக இருக்கிறது. அந்த கொலை சம்பவத்தை பார்த்ததும் ரொம்ப வேதனைப்பட்டேன்.