நம் குரல்

புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகின்றன?










புத்தகங்கள் நம்முடன் வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால், அவை நம் இளம்பருவத்திலேயே நம்மைத் தொற்றிக் கொள்கின்றன என்று தான் நினைக்கிறேன். சாருண்ணிகளைப் போல நம்முடனேயே வாழ்வதில் அவை கொள்ளும் அதே களிப்பைத் தான் நானும் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். புத்தகங்கள், அறிவுஜீவித்தனம் மிக்க உயிரிகள். இன்னும் சொல்லப்போனால், மனித அறிவுஜீவிகளைப்போல் அல்லாமல் தான் எத்தகையதொரு வாக்குமூலங்களை சொல்கின்றனவோ அதிலிருந்து நழுவாமல், சமரசம் கொள்ளாமல் எப்பொழுதும் தம் நிலைப்பாட்டில் ஒற்றைக் காலில் நிற்கக்கூடியன.





என்னுடைய வாழ்க்கையிலும், எல்லோருக்கும் போலவே, அழுக்கடைந்த தெருநாய்க் குட்டிகளைப் போலவோ, அல்லது எவரோ நழுவ விட்ட காதல் கடிதத்தைப் போலவோ என்னை வந்து சேர்ந்திருக்கின்றன சில புத்தகங்கள். ஆனால், அவை வந்து சேரும் போதே ஓர் உறவின் அடித்தளத்தை என்னுள் அமைக்கும் அத்தனை ஏற்பாடுகளுடனும் தான் வந்து சேர்ந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். யாரோ ஒருவர் உங்களிடம் ஒரு புத்தகத்தைப் பற்றி விசாரிக்கலாம்! நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் உங்களுக்கு ஒரு நூலைப் பரிசளிக்கலாம்! அல்லது, நீங்கள் நீண்ட நாளாக படிக்க விரும்பி, வாங்கும் வழியின்றி தவித்த நூல் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க நீங்கள் திருடியெடுத்து, உங்கள் பைக்குள் திணிக்க, அந்தக் குட்டிநாய்க் கத்தி குரல் காட்டிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் அள்ளிவரலாம்! முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படித்தப் பின்னும், அதை உங்கள் கைப்பையிலிருந்து இறக்கமுடியாமல், பிரிய முடியாமல் ஒரு காமத்தை உங்கள் சுவாசத்திற்கு தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கலாம்! எந்த ஒரு நூலுமே வாழ்க்கைக்குள் நுழையும் போது, ஓர் உறவின் சீரிய தொடக்கத்தை நிகழ்த்தவே வருகின்றன என்பதை உணர, இன்றைய என் வயதொத்த ஆயுள் பிடித்திருக்கிறது!





நட்பில் பெருத்த நம்பிக்கை இன்று வரை ஏற்படவில்லை. காரணம், எதனுடனான தன் ஒப்பந்தத்தையும் எளிய சமரசங்களால் நண்பர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடிக் கலைத்துவிடுவது தான்! தன் சமரசமின்மையால், நம் நெஞ்சுக்குள், தம் உறவின் வழியாக நெருப்பில் தகிக்கும் ஓர் இரும்புக்கம்பியை, ஆழமாகப் பாய்ச்சும் தகுதி உள்ளவர்கள் தாம் நண்பர்கள் என்பது என் இலக்கணம்! ஆனால், புத்தகங்கள் கூட்டி வரும் மனிதர்கள், நம் மன இடுக்குகளில் ஓர் ஆலமரத்தின் விதையை எச்சமாய் இட்டுச்செல்கிறார்கள். பின் நீங்கள், அவர்கள் கொண்டு வந்த சாபமூறிய அந்தப் புத்தகங்கள் விரும்பிய ஆலமரத்தை உங்களுக்குள் சுமந்தபடி வளர்ப்பதற்குத் தயாராகிவிடுகிறீர்கள்!





நானும் என் நண்பரும், சென்னை வந்து இது வரை பத்து வீடுகளுக்கு மேல் எங்கள் புத்தகங்களைச் சுமந்து இடம்மாறியிருக்கிறோம்! ஒவ்வொரு முறை, வீடு மாறும்போது, அந்தப் புத்தகங்கள் மலைப்பையும் திகைப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன! எங்களின் ’எட்டுத் திக்கிலும் மதர்த்து எழுந்து நின்று’ (தேவதேவனின் வரி), அவை அமானுஷ்யமாய் எழுந்து நிற்கும் அந்தத் தருணங்களில், வீடுமுழுக்க அவை இறைந்து கிடக்கையில் மனம் கொள்ளும் பேதலிப்பு எந்த இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை!





என் நண்பருக்கு, ஓர் அசாதாராண திறன் இருக்கிறது. எல்லா நூல்களையும் வகைப்படுத்தி அடுக்கி வைப்பதுடன், அவர் வெளியூர் சென்றிருக்கும் நாட்களிலோ அல்லது, வீட்டிற்கு வெளியே இருக்கும்போதோ ஒரு நூல் அவசரமாகத் தேவைப்பட்டால், எந்த அடுக்கில், எந்த வரிசையில் எந்த நிற அட்டையுடன், என்ன தன்மையான அட்டையுடன் அது இருக்கிறது என்பது வரை அவரால் சொல்லிவிடமுடியும்! நாங்கள் விரும்பிப் படித்த நூல்கள் மட்டுமே எங்கள் அறைகளில் நிறைந்திருக்கும்! அல்லாத நூல்களை, உடனே குப்பைத் தொட்டிகளில் போட அவரோ நானோ தயங்கியதே இல்லை! இது கூட, அவரின் நினைவுத்திறனுக்கு ஒரு காரணம்! அம்மாதிரியாக அடுக்கப்பட்ட நூல்களில், நீங்கள் தேடும் நூலை விரும்பும் போது உருவி எடுத்துப் படித்து, மகிழும் சுகம் போல் வேறேதும் இல்லை! இல்லையென்றால், இந்த சென்னை வாழ்க்கையில் என்னால் நிச்சயமாக இவ்வளவு கூட எழுதியிருக்க முடியாது என்பதே என் அபிப்ராயம்.





நல்ல புத்தகங்கள் என் வாழ்க்கையில் காதலைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. புதிய உறவுக் கண்ணிகளை ஏற்படுத்துவதில் மூர்க்கமாய் பிடிவாதமாய் இருந்திருக்கின்றன. நூல்கள் பற்றிய கவிதைகள் என் தொகுப்புகளில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயும் இருக்கின்றன! அவை, மழை நாள்களில் என் நூல்கள் கொள்ளும் குளிரையும் விறைப்பையும் குறித்த கவலையாகவே பெரும்பாலும் இருக்கும்! சென்னை போன்றதொரு நகரத்தில், நூலைப் பாதுகாக்கும் கவலை நம் எல்லாவிதமான இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிடுகிறது. புத்தகங்களின் மீதான கையாட்சியை, உடைமை அதிகாரத்தைப் பேணுவதே ஒரு மனநோய் தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!




ஒவ்வொரு நூலும் அடர்த்தியான சிந்தனையின் எழுச்சியை மூச்சாய்க் கொண்டு அவ்விடம் உறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நூலும், அல்லது ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது இயக்கம் சார்ந்த  சிந்தனைகளில் தீவிரமாய் உழலும்போது, அந்தக் குறிப்பிட்ட சிந்தனையை வலுவூட்டி மேற்கொண்டு நான் கயிறு பிடித்து ஏறும்படியான துணிவைத் தந்த நூல்கள் ஏராளம். இன்றும் அவற்றை, என் காதலனை நேசிப்பது போலவே நேசிக்கிறேன். இன்று தனிமனிதராய்க் கடந்து வந்த தூரத்தையும், ஏறிவந்த துயரமான மலைகளையும் திரும்பிப் பார்க்கையில் புத்தகங்கள் தாம் அவற்றைக் கடக்கக் கைப்பிடித்துக் கூட்டி வந்திருக்கின்றன என்பதை இப்போது உணரமுடிகிறது.



இந்தப் புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப்போகின்றன என்ற ஆவலுடனும் புதிர்த்தன்மை நிறைந்த எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறேன். வேறு எந்தத் திசையில் சென்றிருந்தாலும், நான் விரும்பாத என்னை அது உருவாக்கியிருக்கலாம்! அப்படி நூல்களிலிருந்து விலகிச் சென்றோர் அடைந்த திசைகள் அவர்களைக் கொடுமையான தனிமைக்கும், வாழ்க்கையின் சிறைக்கும் பழிவாங்கலின் வன்மத்திற்கும் கொண்டு சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் தேவையானதொரு நூல் கிடைத்திருப்பின் அவர்கள் இந்தக் கொடுஞ்சிறைகளிலிருந்தெல்லாம் வெளியே வந்திருக்கமுடியும் இல்லையா? ஒரு நண்பனை விட, உற்ற உறவாய் நூல்கள் ஆற்றுகின்ற பணியை வேறெவரும் செய்வதில்லை.






குட்டி ரேவதி


நன்றி: ’புத்தகம் பேசுது’

குறியீட்டுக் கவிதைகள்








1.
தாமரை மலர் நீட்டம்

தடாகத்தில் கண்ணகியின் உடல்
ஒரு செந்தாமரையாகித் தவிக்கக் கண்டாள்
காமத்தின் நீர் மட்டம் உயர உயர
தன் தாமரையின் ஒற்றைக்காலில் நின்ற
தவ வேளையும் உயரக்கண்டாள்
சேற்றின் வேகாத மண்ணில் நின்று தவித்த
தன் தாளாத இலை உடலை
அந்நீரில் விரித்து சூரியன் பரவக் கொடுத்தாள்
சூரியனோ அவளைக் காணாமல் கடக்கிறது
தணலாய்த் தகித்தது உள்ளும் புறமும்
நீர்த்தடாகம் அவளைச் சுற்றிப்
பெருகிக் கொண்டே இருந்தது
தன் இலையுடல் நோவும் கனத்த மலராகத்
தான் இருப்பதை அவள் விரும்பாமலும் இல்லை
சுற்றிப் பறக்கும் தேனீக்களுக்குத் தேன் கொடுக்க
விரியும் தன் முகத்தை முத்தமிட்டு முத்தமிட்டுச்
சிரிக்கின்றன தேனீக்கள்
தடாகம் தரை தங்காமல் கரையெட்டித் தளும்ப,
மலருடன் வாடும் முன் எனைக் கொய்யச் சொல்லுங்கள்
இல்லை, தடாகத்தைக் கடந்து போகும் சூரியனைக்
கண நேரம் என்னில் பரவச்சொல்லுங்கள்
எனக்கூவுகிறாள் விடிகாலைப் பொழுதுகளில்.




  
2.
இனி வேட்டை என்முறை

அது ஒரு வேட்டையின் கணம் என்று
சொல்லத் தேவையில்லை
அவன் என்னுடல் நிலத்தின் மேலிருந்தான்
அவன் எடையின் அழுத்தமும்
மூச்சின் விசைக்கும் கீழிருந்தேன்
நானங்கே நரம்புகளால் நாண் இழுத்த வேகத்தில்
அவன் மல்லாந்து எதிரே விழுந்தான்
இப்பொழுது வேட்டையின் என் முறை
நான் அவனை மூர்ச்சிக்கச் செய்தேன்
அம்புகள் தீர்ந்து போயிருந்த  அம்பாரியில்
மூர்ச்சிக்கச் செய்யும் முத்தங்களின் கனிகளுடன்
நிணம் பெய்யும் வானத்தைப் போல  இருந்தேன்
ஒரு மிருகமாய் மாற்றி அவனைத் தூக்கிச்சுமந்து
வனத்தைச் சுற்றி வந்தேன்
இனி இறைச்சியின்றி ஒரு கணமும்
என் வேட்கை தணியாது


 



3.
மதுத்தாழி

என் உடலொரு மதுத்தாழி
நுரைத்த மதுவை விளிம்பின் தருணம் வரை
நிறைத்து வைத்திருப்பவள்

தேனடையாய்த் தொங்கும் நிலவினும்
கனம் நிறைந்த அதன் போதத்தைத்
தூக்கிச் சுமக்கும் இனிய பருவம் என் இரவு

மரத்தின் தேகத்தில் தனியே தொங்கும்
அணிலின் நீண்ட நேர காத்திருப்பில்
என் மதுத்தாழி நிறையும்

தாழிக்குள் அடைந்து கிடக்கும் ஆழியை
குடிக்க முடியாதெனும் திகைப்பில்
அணில் நீண்ட நேரம் தனியே தலைகீழே

மதுத்தாழி நிறையட்டும்
போதையை ஏற்றிக்கொள்ள முடியாத அணில்
தலைகீழே தொங்கட்டும்

உருவத்தை ஒரு பகையாக்கி
அணில் எனைப் பார்த்தவண்ணமே
மண் கிடந்ததொரு கொட்டையை எடுத்துக்
கொறித்துக் கொண்டிருக்கிறது







4.

விதை முளையும் யோனி

விதையுடன் கூடிய சிறு செடியொன்று
யோனியில் முளைத்து வந்த அம்முத்திரையை*
வரலாறு தன் அகண்ட பூமியின் வயிற்றிலிருந்து
எமக்கு எடுத்துக் காட்டியது எதேச்சையானது அன்று
சூரியன் தன் பழுக்கக் கொதித்த நரைத்த கரங்களை
வரலாற்றின் மண் கிளறி நம் காட்சிக்கு
ஒரு சித்திரம் வரைந்து கொடுக்கிறது
அதைத் தொடரச் சொல்கிறது
மறைதொனியில் இச்சிக்கிறது நம் தேடலை
காலத்தின் பாதையைத் திறந்து கொடுக்கிறது
இன்னும் உறையாத இரத்தத்தை
அது தன்னில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
இன்னொரு நாளை எப்படித் தொடங்குவது
என்று அந்தக் காட்சி நினைவுறுத்துகிறது
சூரியனை நிதம் தின்று செரிக்கும் கலை கற்ற
தாவரத்தைப் பிரசவிக்கும்
பலமுலைப் பெண்கள் நாமென்று
 
தன் இரு கைகளால் தொடைகளின் இடுக்கிலிருந்து
அத்தாவரத்தைப் பெயர்த்துத் தனியே எடுக்க

அவள் கைகளில் சிரிக்கிறது ஒற்றைச்செடி.




சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரை வடிவம்





  
5.
அணிலாகி நின்ற மரம்

அதிகாலை மரத்தில் தன் குரல் சப்தத்தை
கிளையெங்கும் பூத்துக்குலுங்கும் பூக்களாக்கிய
அணில் ஒரு மழையால் அடங்கியது

வானம் தன் இசையை ஒரு பெருமழையாக்க
பூக்களை உதிர்த்த கிளையிலும் இலையிலும்
வந்து தங்கியது நீரின் குரல்

அணிலாகி நின்ற மரத்தில்
எப்பொழுது பூக்கள் மீண்டும் குலுங்குமென
எல்லோரும் காத்திருக்க
சுள்ளென்று வெயில் வந்து மர உச்சியில் அமர,
காலம் ஒரு மரமாய் நின்றது

பூக்களற்ற மரம்
மதிய வேளையின் சாபம்.





  
  
6.

சோழிகள் ஆக்கிய உடல்

உருட்டிவிடப்பட்ட சோழிகளால் ஆன
இப்பெருஉடலின் நற்சோழிகள் உமது
நீவிர் உருட்டி விளையாட
உருண்டோடி விளையாடும் நண்டுகளின்
மத்தியில் நவ சோழிகளின் பொலிவு
உம் கண்களைத் திருடும்
கைப்பற்றி உருட்டி விளையாட இம்சிக்கும்
சோழிகளை அலை வந்து கலைக்க
வழி மறந்து திணறி நீருக்குள் உருளும்
சோழிகளற்ற கடலாகா கரையை
என் உடலென்று ஆக்கினால்
தன்னைத் தானே இயக்கும் மகிழ்ச்சியறியா
கூழாங்கற்களே மிஞ்சும் உமக்கு




குட்டி ரேவதி
நன்றி: ’சாளரம்’ இலக்கிய இதழ்