நம் குரல்

மின்வெளி




திரைப்பரப்பை ஒளியூட்டி கடவுச்சொற்களை அனுப்பியதும்
மெல்லிய முனகலுடன் அவ்வுலகின் கதவுகள் திறந்து கொள்ளுகின்றன
தட்டையான உடலுடைய சிட்டுக்குருவிகள்
பறந்து பறந்து கொத்தித்தின்னும் தானியச்சொற்கள்
விளம்பரமாகின்றன


உடலை எப்பொழுதோ அவ்வெளியில்
மிதந்தலைய விட்டிருந்தேன்
நீள்வட்டப்பாதைகளில் இயங்கும் பால்வெளிக்கோளைப்போல
ஓயாத துடிப்புடன்
எந்தவொரு எரிநட்சத்திரத்தையும் தின்றுச் செரித்துவிடும்
வேட்கையுடன் மினுமினுப்புடன்


பசுமாட்டின் கனத்த முலைகளைப் போல
விரல்களால் காமம் கறப்பதற்காய் மட்டும்
தொழுவத்தில் தொங்கவில்லை
ஆண் பெண் இரு சுனைகளையும்
எனதேயாக்கி என் பிரக்ஞை சுடர்விட்டெரிய


மிதந்தலைகிறேன் ஒரு பால்வெளிக்கோளென


நீ வேவு நோக்கும் செயற்கைக் கோளின் காமராவில்
என் புகைப்படமோ என் பூங்குரலோ கூட
பதிவாவதேயில்லை. தனித்த கிரகம்.
என் உடலின் வேகம் கீறலை
உன் முகத்தழும்பாக்கிக் கடக்கும்


தானியச் சொற்களை மீண்டும் மீண்டும்
கொத்தியலையும் அசீரணச் சிட்டுக்குருவிகள் இருந்தனவே
அவற்றின் சிற்றுடலை காண நேர்ந்ததைப் போல
நீயெனைக் கண்டடைய முடியாது.
உன் முழுவாழ்விற்குமான
குற்றவுணர்வினாலும் மறதியினாலும்


பால்வெளியில் விண்கோள் என மிதந்து சுழல்கிறேன்.


இன்னொரு பிரபஞ்சத்தின் எரிகோள் நான்.
சுடர் பெருக எரிகிறேன்.
ஆழ்கடலுக்குள் குதித்த சூரியனை
இரவெல்லாம் மூச்சடக்கித் தேடாதே தேடாதே


குட்டி ரேவதி

பதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர் ஆவணப்படம்


‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’





அரசு தபால்களை அனுப்பும் போது அதன் மீது, ‘கமுக்கம்’ என்று அச்சிட்டுத் தருவார்கள். அதாவது அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான ரகசியம் பொதிந்தது என்று பொருள்படும். அடித்தட்டுப் பெண்களிடமும் அத்தகைய சில சிறப்பான குணங்கள் உண்டு. துயரங்களை கமுக்கமாக வைத்துக் கொண்டு அந்தத்துயரத்தின் எல்லைகளை தாமே தனியே நின்று அசாதாரணமாகக் கடந்துவிடுவார்கள். மத்தியதர வர்க்கத்துப் பெண்களைப் போலவோ மேல்தட்டுப்பெண்களைப் போலவோ, ஆதிக்கசாதிப் பெண்களைப் போலவோ பெருங்கூச்சலுடன் ‘இதோ பார்! தாவுகிறேன் பார்!’ என்று கூவுதல் அவர்களிடம் கிடையாது. அவர்கள் பெற்றிருந்த கல்வியும் சூழல்களும் அப்படி அவர்கள் கூக்குரல்கள் எழுப்பினாலும் பொதுத் தளங்களைச் சென்றடையும் வாய்ப்புகளை அவர்கட்கு வழங்குவதே இல்லை. இதைப் பெண்ணிய விவாதத்தின் ஒரு முக்கியமான புள்ளியாக வைத்துக் கொண்டு பேசினால் தான் பெண்ணியம் என்பதின் குறுக்குவெட்டுகள் புலப்படும்.



‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ எனும் ஆவணப்படம் பதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுப் பதிவு. இதற்கான பணிகளை சென்ற ஏப்ரல் மாதம் தொடங்கினேன். என்னுடன் பணியாற்ற கோகிலா, கணேசன், சூர்யா, ஆட்டோ ராஜா ஆகியோரும் இணைந்து கொண்டனர். இந்தியாவின் சிகப்பு மாயக்கம்பளமாக இருக்கும் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் சுவர்களுக்குள்ளே நடக்கும் அநீதியைப் பற்றியது இது. இங்கு வேலைபார்க்கும் கடைநிலை ஊழியர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்துவதில் அரசு நிறுவனம் எவ்வளவு தூரம் தேங்கிப்போயிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முயற்சியும்.


இந்நிறுவனத்தைச் சேர்ந்த கடை நிலை ஊழியர்கள் பணியில் இருக்கும்பொழுதே விபத்தாலோ பிற காரணங்களாலோ மரணம் எய்தினால், அதற்குப் பின் அவர்களின் குடும்பத்தினரை அந்நிறுவனம் என்ன மாதிரியான மரியாதைகளுடன் நடத்துகிறது என்பது அந்நிறுவனத்தின் பெயருக்குச் சற்றும் பொருத்தமில்லாதது. அதாவது, அந்த பணியாளர் உயிருடன் இருக்கும் பொழுது மற்ற பணியாளர்கள் அவருடன் ஒரு வேளை தேநீரையாவது பகிர்ந்திருப்பார். அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் மனைவி மக்களின் கையால் விருந்து உண்டு மகிழ்ந்திருப்பார். ஆனால் அவர் இறந்த பின்பு தன்னை நண்பராக மதித்த அந்தப் பணியாளரின் மனைவியை அதே அலுவலகத்தில் ‘கருணை வேலை’ என்ற பெயரில் கழிப்பறைத் தூய்மை செய்பவராகப் பணியில் அமர்த்துகின்றனர். அந்தப் பணியை நிரந்தரப்படுத்துவதற்குக் கூட எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் அவர் குடும்பம் என்னென்ன கஷ்டங்களைக் கடக்கிறதோ அதற்குக் கொஞ்சமும் கருணை முகம் காட்டாது கணவனை இழந்த பெண்ணையும் தந்தையை இழந்த மகளையும் மகனையும் இன்னுமின்னும் இழிநிலைக்குத் தள்ளும் நெறியற்ற வேலையையும் செய்கின்றனர். இந்தக் கழிவறைத் தூய்மை செய்யும் பணியும் நிரந்தரப்படுத்தப்படாமல் இருபத்து மூன்று வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படுகிறது.



இந்தப் பணிக்குச் செல்லும் பெண்களின் கடந்த காலக் கதைகள் வழமையாகப் பெண்களுக்கு திணிக்கப்படுவதைப் போன்ற திருமண வாழ்க்கையே. குறைவான கல்வித் தகுதியுடன் குறுக்கப்பட்டு குடும்பவாழ்வை நோக்கி அனுப்பப்படுகின்றனர். கணவனுக்கான பணிவிடையிலும் பிள்ளைகளே கதி என்ற வாழ்க்கையிலும் திருப்தி கொண்ட பெண்களாய் வாழ்ந்த இவர்களை, திடீரென்று நிகழும் கணவனின் மரணம் கண்ணைக் கட்டிக் காட்டில் விடுகிறது. அவர்களுக்கு உரிமையான கருணைப் பணி வழங்கப்படும்போது அதை ஒரு முதன்மையான ஆதரவாக எண்ணித்துணிந்து அவ்வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வழங்கப்படும் வேலை கழிவறைகளைத் தூய்மை செய்வதே. கணவன் எத்தகைய மேலான பணியில் இருந்தாலும் கழிவறைப் பணியே கருணை வேலையாக வழங்கப்படுகிறது. பெண்ணென்றாலே தூய்மைசெய்தல், அதிலும் தாழ்த்தப்பட்ட பெண்கள் என்றால் கழிவறைத் தூய்மை என்று அரசு நிறுவனங்களும் சாதிய ஒடுக்குமுறையைச் செயல்படுத்துகின்றன. இவர்களில் ஒருவர், படிக்காததினால் தானே தனக்கு இந்த வேலை என்று மிகவும் சிரமப்பட்டுப் பயின்று மேலும் தன் கல்வித்தகுதியை உயர்த்திக் கொண்ட போதும் இன்னும் அதே வேலையைத் தான் அவர் செய்யவேண்டியிருக்கிறது.



இந்தப்பட உருவாக்கத்தில் ஈடுபட்ட அனைவருக்குமே அவர்களின் தன் வரலாற்றுப் பதிவு என்பது வேதனை நிறைந்ததோர் அனுபவமாக இருந்தது. கணவனை இழந்த இப்பெண்கள் துயர் மிகுந்த ஏழைமையான காலத்தைத் தம் முதுகின் மீது சுமந்தவாறே தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு தம் இருண்ட மனக்குகையிலிருந்து வெளியேறுகின்றனர். திருமணத்தினாலும் அதன் கட்டுப்பாடுகளாலும் தாங்கள் இழந்த சுயத்தை மீண்டும் வருவித்துக் கொள்ளும் பயணமாகவும் இது இருக்கிறது. கணவனை இழந்த இவர்கள் தமக்குப் பாரமாகிவிடுவார்களோ என்று இவர்களின் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் படக்குழுவினரைப் பார்த்ததும் பெறும் உற்சாகம் அளவிலாதது. ஒவ்வொரு நாளும் எவருடைய வீட்டில் படப்பிடிப்பு நடக்கிறதோ அங்கு தான் எங்களுக்கு உணவு. அவர்களுடைய உணவுதான் எங்களுடைய உணவும்.



கேமராவை இயக்கத் தொடங்கினாலே அவர்களின் நினைவுச் சக்கரம் கடந்த காலத்தை நோக்கி இயங்கத் தொடங்கிவிடும். அவர்களால் கட்டுப்படுத்த முடியாத கண்ணீரின் கடல் அவர்களின் கதைச்சுருளாய் பெருக்கெடுத்துப் பாயும். கதை நிறைவுக்கு வருகையில் படப்பிடிப்புக்குழுவினர் அனைவரின் கண்களையும் அக்கதை கண்ணீர் அலைகளால் மூழ்கடித்திருக்கும். அதிகாரத்தின் நாவுகள் அவற்றிற்கான இச்சைகளை உச்சரிக்கும் போதெல்லாம் அது தனது சொற்களை சாதி ஆதிக்கத்தின் பெயரால் தான் பொருள் விளங்கிக் கொள்கிறது என்பதை ஏர் இந்தியாவின் அனுபவம் மட்டுமல்ல எந்த ஓர் அரசு நிறுவனமும் இதே விதமான அதிகார ஒழுங்குகளைத் தான் கொண்டிருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.



‘நல்லா தான இருக்க. புருஷன் போனதுக்கு அப்புறம் ஒனக்கெதுக்கு காசு தேவைப்படுது’ என்று சொல்லும் போதும் சரி, ‘ஒங்களுக்கு என்ன ஆபீஸ் வேலை கேக்குது. போய் டாய்லெட்டை க்ளீன் பண்ணுங்க’ என்று சொல்லும் போதும் இந்தியாவின் சாதிய பாலின ஒழுங்கு முறையை இப்பெண்கள் தனித்து நின்று குலைக்கமுடியாத இயலாமையை மறைக்க முடிவதில்லை. இரண்டு தலைமுறைகள் தொடர்ந்து துயர் தாங்கிய இப்பெண்கள் இழந்தவை, கற்பனைக்கெட்டாதவை. விமானத்தில் பறக்கும் ஒரு வாய்ப்பை இழந்தது போன்றதோர் அற்பமான சுகம் மட்டுமேயன்று.



இந்தப் படத்தை நான் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே முதலில் திரையிட எண்ணியுள்ளேன். பகிரங்க உரையாடல்கள், திரையிடல்கள் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த ஆவணப் படத்தைப் பார்க்க விரும்பும் பத்திரிகை நண்பர்களுக்கு இப்படத்தினை திரையிட்டுக் காட்ட விரும்புகிறேன். தனித்த ஒருவருக்கு என்றாலும். தனித்திரையிடல்கள் என்றாலும் எனக்குச் சம்மதமே. இப்படம் 33 நிமிடங்கள் ஓடக்கூடியது. ஒளிப்பதிவு: ஆர். கணேசன், படத்தொகுப்பு: பி. தங்கராஜ், உதவி இயக்கம் மற்றும் கருத்தாக்கம்: கோகிலவாணி, தயாரிப்பு: ஓஹோ புரொடக்‌ஷன்ஸ், வடிவம் & இயக்கம்: குட்டி ரேவதி.



இப்படத்தை நீங்கள் ஒரு முறையேனும் பார்ப்பது என்பதும் உங்கள் நண்பர்களுக்கு இப்பிரச்சனையை முன்வைப்பது என்பதும் அவர்கள் துயரத்தில் நீங்களும் பங்கு கொள்வது என்பதாய் இருக்கலாம். அல்லது அவர்களுடன் இணைந்து அவர்களின் துயர் களைவதற்கான உங்களுடைய முனைப்பாயும் இருக்கலாம். அவர்களின் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை உங்களுக்கும் பிறருக்கும் ஏற்படுத்திக் கொள்வதாய் இருக்கலாம். அதிகார அமைப்பைக் குலைக்கும் ஒற்றை முயற்சி, சமூகத்தின் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் தொடங்கலாம். இப்படத்தினுடனான எனது தனிப்பட்ட உரிமை என்பது பெயரளவில் மட்டுமே.


தொடர்பு மின்னஞ்சல்: kuttirevathi@gmail.com


குட்டி ரேவதி


பின் குறிப்பு: ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ - கவிஞர் பிரமிளின் கவிதை வரி

கடலும் உடலும் மகோன்னதமிக்க பொக்கிஷங்கள்

(குட்டி ரேவதியின் “உடலின் கதவு” கவிதைத் தொகுப்பு. வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம், 137(54), இரண்டாம் தளம், ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014, விலை ரூ.80.)


விட்டு விடுதலையாதல் என்பது மானுட உரிமை சார்ந்தது மட்டுமல்ல, ஒரு கவித்துவ அம்சமாக அனைத்து வித எழுத்துகளிலும் எடுத்தாளப்பட்டு வருகிறது. குட்டி ரேவதியின் “உடலின் கதவு’ கவிதைத்தொகுப்பில் ஆதிக்கத்திலிருந்து பிதுங்கி வெளியேறத்தவிக்கும் தவிப்பின் குரல்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் கனன்று கொண்டிருப்பதைக் காண முடியும். அதே சமயத்தில் பெண்மையின் கம்பீரம் கூச்சங்களை முறியடித்து விட்டு வீறுநடை போடுவது ஊடுபாவெனப் பின்னி ஒரு சரித்திரத்தை நெய்வதாகத்தான் தோன்றுகிறது.


இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகளில் கடல், உடல், விதை, கனி போன்ற சொற்கள் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருக்கின்றன. கடலும் உடலும் விதையும் கனியும் மானுட வாழ்வின் மகோன்னதமிக்கப் பொக்கிஷங்கள். மனிதனுக்கு அவை வழங்கிய அழகுகள் எண்ணிலடங்காதவை. சிதைப்பது இதன் செயல்நோக்கம் என்ற வகையில் அழகுகளை அனுபவிக்கத் தெரியாமல் சிதிலங்களில் திளைக்கிறது. சிதைவுகளை எண்ணித் தளர்ந்து விடாமல் அழகுகளைச் சிருஷ்டிக்கும் கலையில் கவனமுடனும் கலகத்தன்மையுடனும் முகிழ்க்கிறது உடல்.


இவற்றை போர், உடல், திணை, யுத்தத்தின் கொதிப்பு, மற்றும் கடலை வரைந்தவள் கவிதைகளில் காணலாம். உடல் குறித்த பிரயோகங்கள் மானுட ரகசியங்களிலிருந்து பகிரங்கமாக வெளியேறி அமைப்பாக்கம் பெற்றாலும் பெண்மையின் வாசனையை சொற்களினுள் ஒளித்து வைத்துள்ளன.


மெத்தென தமது உடலைப் பஞ்சணைக்கு எப்பொழுதோ விரித்தவை – என்னும்போது ஓர் ஒடுக்குதலின் துயரம் பீறிடுவதை வார்த்தை வெளி நமக்குள் காட்சிப்படுத்தி விடுகிறது. வெளவாலின் பிடிவாதமாய் ஒவ்வொரு உடலாய்த் தாவியமர்ந்து தாகமாற்றும் – என்று சொல்லும் போது, முழுநிலவின் இரவுகளில் உடலைப் பிணமெரியும் வாசனையோடு மலர்த்தினாள் என்று சொல்கிற பொழுதும் ஒரு திடுக்கிடலும் அச்சம் கலந்த துயரமும் அவலத்தின் பின்னணியை நமக்குக் காட்சிரூபமாக விளக்கிவிடுகிறது. சமூகக்கட்டமைப்பு மீதான ஒரு பெண்ணிய அடையாளம் தாக்கம் பெறுவதைக் காணமுடிகிறது.


கடந்த வரலாற்றில் தொலைந்த உடலை இன்றைய போரில் மீட்டெடுப்போம் – இது ஒரு நம்பிக்கையின் குரலாக ஒலிக்கிறது. விதைக்கவோ வளர்க்கவோ யாருமேயிலாது பாழ்நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது உடல் – என்ற இடத்தில் ஒரு துயரத்தின் குரலாக மாறுகிறது. நீ என் உடல் திறந்த கணம் வீறிட்டு அழுதது பனி – இந்த இடத்தில் ஒரு பிரவாகம், ஒரு முகிழ்த்தல் என கவிதையின் குரல் அழுகிறது.


இது ஒரு விரிவாக்கப்பட்ட விரிவாகப் பரந்த மொழியின் ஒரு தொலை தூரத்தோற்றம். அது அர்த்தங்களை உற்பத்தி செய்வதற்காக வேர்நிலைச் சாத்தியப்பாடுகளை வழங்குகிறது. இவற்றில் ஒரு கவித்துவத்தை, ஓர் உடைந்த கவித்துவச் சொல்லாடலைக்காண நேரும்பொழுது ஒரு விமர்சன ரீதியான பெண்ணிய வரலாற்றையும் படைத்து விடுகிறது. இங்கு எழுத்தின் எல்லைகள் மீறப்படுவதோடு திறந்த வடிவங்கள் உடைக்கப்படுகின்றன. அனுபவமும் தொலைதூரப்பார்வையும் மாறும் பொழுது வடிவங்களும் மாறுதல் அடைகின்றன. கவிதையின் சுய தர்க்கம் அமைப்பாக்கம் பெறும் இடம் இது. பெண்ணிய மனதும் உடலும் பன்முகப் பரிமாணம் கொள்ளும்பொழுது இக்கவித்துவ மொழி மலர்கிறது.

இங்கு உடல் திணை கவிதை,
கடலின் கொந்தளிப்புக்குள் தவறி வீழ்ந்த பின்னர்
ஒரு தோணியாக அலைகளையெல்லாம் வரிக்க முடியும்
உடலெங்கும் விளையும் கதைகளைப்
பருவம் மாற மாறப் பொலபொலவென்று உதிர்த்து
முதுமையின் நீர்மையை நுனிவிரல்களால் தொட்டுணர்ந்தவாறே
ஒரு நீர்த்தாவரமாய் உள்ளிறங்கி
அதன் பரப்பெங்கும் பல்கிப் பெருகவும் முடியும்

என நிறைவு பெறுகிறது. உடல் ரீதியான எல்லைகள் தாண்டி மொழியியலாக, உளவியலாக, கலாச்சாரமாக பிரவகிக்கும் பெண்மையின் நர்த்தனம் ஒவ்வொரு வரியிலும் ஊக்கம் பெறுவதைக் காண முடிகிறது. பெண்மையின் அழகியல் ஒரு கலைப்படைப்பாக உருவெடுக்கிறது.

ஓர் அதிகாரத்துவ மனப்பாங்கு, சமூக பெளதீக அரசியலாக மாறும் வித்தையை ஸில்வியா பிளாத்தின் கவிதைகளில் பார்த்திருக்கிறோம். குட்டி ரேவதி வேறு பல எல்லைகள் தாண்டி பெண்மையின் உண்மையை நமக்கு விவரிக்கிறார். எனது உடல் அவர்களுக்கு ஒரு கூழாங்கல் என பிளாத் கூறுவார். ஆனால் இங்கு உடலின் கதவைத்திறந்து பொக்கிஷங்கள் காண்பிக்கப்படுகின்றன. எப்படியிருந்தாலும் உள்ளீடு ஒரு விடுதலை தான் என கவிஞர் அறிவித்து விடுகிறார்.


உடல் குறித்த கவிதைகள் ஓர் ஒழுக்கவியலாக, ஒரு நேர்மையாக ஒரு திறந்த நிலையின் பொருத்தமான பாணியாகக் கட்டுடைக்கப்படுகின்றன. உணர்வதும் அரூபமானதுமான இரட்டை நிலைகள் பின்பற்றப் படுகின்றன. இவை ஒரு முரண்பாடு மிக்க தேவையாக உள்ளன. இருத்தலிலிருந்து விடுதலை பெறும் விருப்பத்தைக் காட்டிலும் இருத்தலை மென்மையானதாக மாற்ற விரும்புவதே சிறந்ததாக உடல் பற்றிய கவிதைகள் பேசுகின்றன.

இங்கே ஒரு கவிதை,
கடலை வரைந்தவள்
அவளுக்குள்
உயிருள்ள கடலொன்றை வரைந்திருக்கிறாள்.
எதிர்நோக்காப் பொழுதொன்றில் கொந்தளித்து
உறங்கும் நகரத்தின் கரைகளை விழுங்கிவிடுகிறது
கூந்தலின் அலைக்குள்
மீன்கள் குதூகலமாய்க் கொந்தளிக்கின்றன
பவளப்பாறைகளின் மடிப்புகளில்
புனைவுகளில் விளையும் காலம் உறங்குகின்றது
அவளது இதழ் நீலஒளி கீறிய புன்னகையுடன்
இரவினை முத்தமிடுகின்றது
உடலெங்கும் படர்ந்திருக்கிறது
பெளர்ணமியின் ஈரஒளி
அவளின் வனாந்தரத்தில்
சங்குப்பூச்சிகள் மேய்கின்றன
காலத்தின் சிந்தனையேயிலாது
கடல் ஆமைகள் ஊமைப்பெண்களாய்
அழகு சிந்த நோக்குகின்றன
பார்வைக்குள் அடக்கியிருக்கும் பாடல்களை
விடுவிக்க முடியாத ஏக்கம் ததும்ப
அவளது கடலுக்குள் ஏகி
எண்ணிக்கை மீறுகின்றன காலையும் மாலையும்
ஒரு பார்வையில்
கடலையே அவளால் சுருட்டிக்கொள்ள முடியும்
கம்பளத்தைப் போல
ஆனால் நெருப்பின் கங்குவளையத்தினூடாக ஒரு பயணம்
தகிக்கும் சூரியனைத் தலையில் சுமத்தைப் போல
ஓய்தலின்றித் தவிக்கிறாள்
அவளுக்குள் ஒரு கடலையல்லவா எழுப்பியிருக்கிறாள்.


இந்தக் கவிதைத் தொகுப்பின் உஷ்ணத்தை இந்த ஒரு கவிதை மட்டுமே தன் மடியில் கட்டிக் கொண்டிருக்கிறது. இதை ஒரு வகைமைப்பாடாகச் சிறுமைப்படுத்திவிட முடியாது. ஒரு நிரந்தரமற்ற மொழியின் செழிப்பான சுவையை உணர்வது ஒரு புறம் இருக்கட்டும். இந்தக் கவிதையின் ஒரு சமன்செய்யும் செயலைக் கவனிக்கலாம்.


ஒரு மாபெரும் பிரக்ஞையின் வெளிப்பாடு ஒரு மெய்மையின் ஒளி அலையை மிக மிக மென்மையாகத் தூவுகின்றது. ஒரு நீல ஒளி கீறிய புன்னகையும், நெருப்புக் கங்குவளையத்தினூடாக ஒரு பயணமும் என வாழ்வையும் மரணத்தையும் அவலத்தையும் குதூகலத்தையும் நல்லதையும் தீயதையும் உடல் மற்றும் கடல் போன்ற பிம்பங்களின் நிதர்சனத்தையும் நிச்சயமின்மையையும் ஒரு சமன் செய்யும் போக்காக கவிதையின் மொழி வீறிடுவதையும் மெளனம் வகிப்பதையும் ஒரு புதிய பிரத்யேகத்தை நோக்கிச் செல்வதையும் காண முடிகிறது.


மோகன ரவிச்சந்திரன்
நன்றி : உள்ளுறை


கூழாங்கல் கவிதைகள்

என் உயவுநோய்


முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
! ஒல்! எனக் கூவுவேன் கொல்!
அலமர அசைவு வளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே

(குறுந்தொகை 28:பாலை)

ஒளவையாரின் பாடல்.

சுழற்காற்று மரங்களை அலைக்கழிக்கும் இவ்விரவில் என் தனிமைத் துயரை அறியாமல் உறங்கும் இவ்வூரை முட்டுவேனா தாக்குவேனா என்ன செய்வதென்று அறியாமல் ‘ஆ’ ‘ஓ’ என்று கூச்சலிடுவேனா!’ என்று தொனிக்கும் இக்கவிதை, தன் சொற்களுக்குள்ளும் கூச்சலைக் கொண்டிருக்கும் கவிதை.


வெவ்வேறு தருணங்களில் அதன் அர்த்தச் சுவை கருதி ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுப் பேசியிருந்த போதும் அது தரும் உவகையின் மீதான போதம் தீராதது.


தன் காதலை இவ்வாறு உரக்கச் சொல்லும் பெண் மொழி எப்பொழுதுமே நிலவி வந்திருக்கிறது என்பதற்கான சாட்சி.


முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!’, ’! ஒல்! எனக் கூவுவேன் கொல்!’, ’உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே’ என்ற மூன்று வரிகளிலும் வழியும் ஆங்காரம் ஒரே வேகத்துடன் வெளிப்பட்டிருப்பதுடன் ஒரு நேர்க்கோட்டின் இரு துருவங்களும் ஒன்றிணைந்து வட்டமாகும் தன்மையும் அடைந்தது. இத்தன்மையின்றி கவிதை இல்லை.


பாலை நிலப்பரப்பை மொத்தமாய் தன் கண் முன்னால் விரித்து பழியை அதன் மீது வீசியெறியும் பெண்ணின் குரலும் அந்நிலத்துக்கே உரிய அன்றாட நிகழ்வுமான பிரிவும் ஒன்றொடொன்று தோய்ந்த கவிதை.


சொல்ல வந்த காதலின் உச்சம் கொப்புளிக்க வெளிப்படுத்தும் வல்லமை ஒளவையாருக்கே ஆனது. ‘என்றும் கிழியாதென் பாட்டு’ என்பது போல.

குட்டி ரேவதி

நிகழ மறுத்த இயக்கம்


இன்று ஒரு பெண் கவிஞர் தொலைபேசியில் என்னை அழைத்து தமிழகத்தில் சக எழுத்தாளர்கள் ஏன், பெண் எழுத்தாளர்களே கூட நடந்து கொள்ளும் விதம் பற்றி அங்கலாய்த்துக் கொண்டார். (அவர் பெயரை இங்குக் குறிப்பிடாமல் இருப்பது எனக்கும் அவருக்கும் நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.) அவர் தனித்து விடப்பட்டதும் அவரின் சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவும் எவ்வளவு தான் எதிர்த்துக் கொண்டே இருப்பது என்றும் அவரின் சீற்றம் வளர்ந்து கொண்டே இருந்தது.


அவர் கூறியது பெண் எழுத்தாளருக்கான பிரச்சனையாக மட்டுமே எனக்குத் தோன்றவில்லை. எல்லா கவிஞர்களின் பொதுவான பிரச்சனை இது! பல முறை இதை யோசித்து நானே சில முடிவுகளுக்கு வந்திருப்பதால் எனக்கு இது புதிதாகத் தோன்றவில்லை.


என்றாலும் அவர் முன்வைத்த ஆதங்கம் மிகவும் நேர்மையானதாகவும் அறியாமைகள் நிறைந்ததாகவும் இருந்தது என்பது எனக்குக் கவலையைக் கொடுத்தது. அவர் தரப்பு நியாயங்களைப் பேசுவதற்கு இன்னும் வாய்ப்புகளைத் தேடி அவர் போகக் கூடும் என்றும் தோன்றியது.


நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ மறுத்த இயக்கம் என்று கவிதை இயலையும் விமர்சனத்தையும் சொல்லலாம்.


பெண்களோ சிறுபான்மையினரோ ஏன் ஒடுக்கப்பட்ட எவர் எழுத வந்த போதும் அது ஓர் இயக்கமாக மாறாமல் பார்த்துக் கொண்ட தீவிரமான எழுத்தாளர்கள் கைகளில் தான் இன்றும் நவீன இலக்கியம் என்று சொல்லப்படுவது உருவழிந்து கொண்டிருக்கிறது.


தனக்குப் பிடித்த கவிஞர்களை முன்மொழிவதும் அவர்களை விதந்தோதுவதும் நன்று தான். பிடிக்காத கவிஞர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் (இங்கே கவனிக்கவும், பிடிக்காத கவிதைகளை அல்ல) வாரித்தூற்றுவதற்குப் போதுமான தமது மொழி வளங்களை விரயப்படுத்தியுள்ளனர். இங்கு விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியின் அந்தரங்கத்தைத் தூற்றுவது தான் நவீன நாகரிகம். ஏற்கெனவே அந்தப் படைப்பாளியுடன் நட்புறவில் இருப்பது இன்னும் ஆதாயம் தேடித்தரும்.


மேலும் கவிதை விமர்சகர்கள் என்பவர்கள் பெரும்பாலும் சகக்கவிஞர்களே என்றபடியால் அவர்களின் விமர்சனங்கள் மீதான நம்பகத்தன்மை மிகவும் குறைவு. எந்தக் கவிதைக் கோட்பாடும் இயலும் அவர் அறிந்திருக்க நியாயமில்லை, சகக்கவிஞர்களைப் போலவே. எவ்வளவுக்கெவ்வளவு அதிகாரமோ அவ்வளவுக்கவ்வளவு விமர்சனம் காரசாரமாகும்!


அதிரடிக்கவிதைகளில் கவித்துவம் என்பதே மருந்துக்கும் இல்லாமல் போய் கவிதை இயக்கம் சிதைவுற்றதையும் காண முடிகிறது.


சமூக வெளியில் புதிதாய் ஒரு கவிதை முளைக்கும் போதெல்லாம் இங்கு பீடங்களில் இருந்த எல்லா முதன்மையான எழுத்தாளர்களும் ‘அது கவிதையே இல்லை’ என்று தன் இருப்பு குறித்த பாதுகாப்பின்மை உணர்வால் சொல்லவும், அந்த எழுத்துக்கான உந்துதல் தொடராமல் இருப்பதற்கான தேர்ந்த சொற்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பரப்பி, ‘அது தொடரவில்லையே!’ என்றும் உறுதிசெய்து கொண்டனர்.


இதனால் நிகழ்ந்தது ஒரு சரியான கவிதை இயக்கத்தை நவீன இலக்கியம் முன்னெடுக்காமல் போனது. இழப்பு கவிஞர்களுக்குப் போலவே வாசகர்களுக்கும்.


மேலும் உரைநடையில் தீவிரமாக இயங்கியவர்கள் தாம் கவிஞர்களின் பட்டியலையும் கவிதைகளின் தரங்களையும் நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கவிதை விமர்சனம் குறித்த எந்தத் தனிப்பட்ட பயிற்சிக்கும் தங்களை உட்படுத்திக் கொள்வது கிடையாது.


வெறுமனே தனது சுய, மேலோட்டமான இலக்கிய அரசியலை ஊதிஊதிப் பெருக்கச் செய்து மேலே பறக்கவிட்டு அதன் கீழ் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள்.


இன்றைய நவீன இலக்கியத்தின் குத்துச்சண்டைகளில் வென்றவர்களால் நிறைய விருதுகளையும் வெளிநாட்டுப்பயணங்களையும் வெகுநிச்சயமாய் பெற்று விட முடியும் என்றாலும் தன்னைத் தானே விலைபேசிய தருணங்களை அவர்களால் ஒரு போதும் மறக்கமுடியாத நினைவாற்றலையும் கூட தன்னிடம் கொண்டிருப்பார்கள் என்று நிச்சயமாய் நம்புகிறேன்.


இந்நிலையில் கவிதை இயலையும் கவிதை விமர்சனத்தையும் விரிவாகவும் மையமாகவும் வைத்துப் பேசும் ’உள்ளுறை’ போன்ற இதழ்கள் நிறைய வெளிவரவேண்டும்.


இயன்ற வரை உரைநடையாளர்களை கவிஞர்களிடமிருந்து தொலைவில் நிறுத்த வேண்டும். வசனம் என்பதை உரைநடை என்று தப்பார்த்தம் செய்து கொண்டார்கள் போலும்.


இந்த உரைநடையாளர்கள் கவிஞர்களை தம் கைப்பாவைகளாகப் பயன்படுத்த இயலாத படிக்கு கவிஞர்கள் தம் எழுத்துப் பணியில் தீவிரமாகவும் ஆளுமை நிறைந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.


கவிதையின் முதல் வாசகராயும் கடைசி வாசகராயும் எழுதுபவரே இருந்து விட்டுப் போவதில் குறையொன்றுமில்லை. தற்போதைய நிலையும் அது தானே!


சமரசமற்ற எழுத்தை எவருமே பேச முன்வராத நிலையில் அதுவே அதற்குக் கிடைத்த பெருத்த அங்கீகாரமாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் ஏற்கெனவே இது போல பலமுறை இலக்கிய வரலாற்றில் பலமுறை நிகழ்ந்துள்ளதை நினைவுபடுத்திக் கொள்வதும் நன்று. இப்போதைக்கு இவ்வளவு தான் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியும்.



குட்டி ரேவதி