நம் குரல்

கண்ணகி - அவள் ஒரு நினைவுச்சுழல்


கண்ணகி என்பவள் நம்மிடையே வாழ்ந்து மறைந்த பெண்ணாகவே தோன்றும் அளவுக்கு ஓர் உயிருள்ள கதாபாத்திரமாகவே நமது நினைவில் நிற்கிறாள். சிலப்பதிகாரத்தின் கட்டுக் கோப்பான இலக்கிய வடிவத்திற்கு இணையானதோர் இலக்கிய ஆக்கம் இன்று வரை தமிழில் இல்லை எனும் அளவிற்கு நுட்பமான செய்வினைகளை கதைக்கூற்றுக்கு வெளியேயும் ஆற்றும் படைப்பாக இருக்கிறது. எவ்விடத்தில் இது உண்மை எவ்விடத்தில் புனைவு என்று கண்டுபிடிக்க முடியாததாகவும் படைக்கப்பட்டுள்ளது. நிறைய வரலாற்று உண்மைகளையும் மானுடப் போக்குகளையும் படைப்பிலிருந்து நுகரும்படியானதாகவும் இருப்பது அதன் சிறப்பு. ஆனால் என்னை ஈர்ப்பது கண்ணகி எனும் பெண் கதாபாத்திரம் நம்மிடையே எடுத்துள்ள சமூகப் பங்கும் அவள் எழுப்பியுள்ள உருவகங்களும்.

அதாவது கண்ணகி என்ற பெண்ணொருத்தி உண்மையிலேயே இருந்தாள் எனும் அளவிற்கு நமது சமூக நம்பிக்கைகளில் அவள் ஓர் அன்றாடக் கதாபாத்திரமாக ஆகிவிட்டாள். மனைவியர், அன்னையர், மகள்கள் ஆகியோரின் வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கும் அளவிற்கும், அவளை ஒரு மாதிரியாக ஆக்கி அதையே பின்பற்றும் அளவிற்கும் நமது மரபின் நினைவலைகளில் என்றென்றும் உருண்டு கொண்டிருக்கும் தென்னங்காயாய் அவள் ஆகியிருக்கிறாள் என்பதை நம் எல்லோரின் தனிமைஅடர்ந்த வாழ்க்கையிலும் உணர முடியும். அவள் நம் வீட்டின் கருமையான இருளடர்ந்த அறை மூலைகளில் நமது நம்பிக்கைகளைக் கட்டமைக்கிறாள். நம்மை மறு கேள்வி கேட்க முடியாத ஒரு விசையாகி வீச்சாகி அனலாகித் தீயாகி எழுந்து நிற்கிறாள். தமிழர்களின் சிந்தனைகளில் எப்படிக் காலந்தோறும் அவள் கடத்தப் படுகிறாள் என்பதும் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். இன்றும் கண்ணகி என்ற பெயரைத் தனது பெண்ணுக்குச் சூட்டத் தயங்கும் பெற்றோர் நம்மிடையே உண்டு. அது தீராத துயரை அந்தப் பெண்ணுக்குக் கொண்டு வரும் என்பது ஐதீகம்.

சிலப்பதிகாரத்தில் மனிதனின் அன்றாடத்திற்குச் செழுமையூட்டும் ஒரு பெண்ணாக அறிமுகமாகிக் கண்ணகி வாழ்ந்து வருகிறாள். தனது கணவனுடனான பாலியல் அன்னியோன்யம் மறுக்கப்பட்ட கண்ணகியின் முலை முகத்தில் எழுந்த தீ எரிந்து கொண்டிருக்க அவள் காத்திருக்கிறாள் என தமிழ்ச் சான்றோர்கள் கூறுகின்றனர். கணவன் தன்னுடைய செல்வம் உட்பட எல்லாவற்றையும் இழந்து திரும்புகையிலும் கூட கண்ணகியிடம் அவனை அவன் இழப்புகளிலிருந்து மீட்டெடுக்கும் அறம் சார்ந்த வாழ்க்கை நெறியும் துணிவும் இருக்கிறது. மானுட வாழ்விற்கான வழி எப்பொழுதும் திறந்திருக்கிறது, அறம் பாராட்டும் பெண்ணிடம், அறம் பேணும் பெண்ணிடம் என்பது நிரூபணமாகிறது. அது சமூக அநீதியை எதிர்க்கும் துணிவையும் ஆற்றலையும் தருகிறது என்பது தான் கண்ணகி தன் சித்திரம் வாயிலாகச் சொல்ல விரும்பிய செய்தி. ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது என்னைப் பொறுத்த வரை மேலோட்டமான அர்த்தங்களைக் கிளறிவிடும் வாசகமே. அதையும் மீறிய மிகுதியான அர்த்தப் பொருளுடைய உறவைத் தான் ஓர் ஆணுடன் பெண்ணும் பெண்ணுடன் ஆணும் மேற்கொள்கின்றனர். ஆணுடன் தான் கொண்டிருக்கும் உறவிற்கான முழுமையைக்காணும் அர்ப்பணிப்பையும் அறநெறிகளையும் துய்க்கிறாள் பெண். மாதவி போன்று கணிகையாராகி உறவு துய்ப்பதும் தவறு அன்று. ஆனால் ஓர் உறவோ அல்லது பல உறவுகளோ, உறவுக்கான இணைப்பைத் தொடங்கிவிட்ட பின் அவ்வுறவின் நலனுக்கான கடினமான அற ஒழுங்கையும் கூட மேற்கொண்டே ஆகவேண்டும் என்பதைத் தான் கண்ணகியும் மாதவியும் சொல்கின்றனர். அதாவது இதைக் குடும்பம் என்னும் இறுக்கமான கட்டத்தை நினைவில் வைத்து நான் எழுதவில்லை. அதையும் மீறியதானது பெண் – ஆண் உறவு.

சங்ககாலத்தின் இறுதிக் காலத்திலிருந்து ஒரு நினைவாயும் ஒரு கதாபாத்திரமாயும் வாழ்மாந்தராயும் ஊழின் பெருவலியாயும் அறம் பிசகாத ஒரு சத்தியமாயும் அநீதிப் பிறழ்ந்த இடத்து நகரை எரிக்கும் தீயாயும் தன்னுள் காமமாய் கிளர்ந்தெழுந்தும் மூண்டும் கனன்றும் கொண்டேயிருந்த கொங்கைத் தீயாயும் காலந்தோறும் கடந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்யும் இந்தக் காலத்தையும் தீண்டியிருக்கிறாள் கண்ணகி. திராவிட முன்னேற்றக் கழகம் கண்ணகியை ஏந்தி நிற்கும் காரணம் முற்றிலும் வேறு. ஆண் – பெண் உறவுகளில் வேறு வேறு நிலைகளை எடுக்கும் கண்ணகி, மாதவி, கோவலன் ஆகியோரில் கண்ணகியே தமிழ்ச்சமூகத்திற்கான படிமமாகத் தூக்கிப் பிடிக்கப்படுகிறாள். அவள் தான் ஆணாதிக்கச் சமூகத்திற்கு வசதியானவளாகவும் கணவன் மீது செலுத்தப்பட்ட அநீதிக்காக நின்று போராடும் பெண்ணாகவும் கருதப்படுகிறாள். இன்று எல்லா பெண்களும் அவ்வாறான பெண்ணாகவே எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். வெகுமக்கள் உளவியலுக்குத் தேவையான வடிவில் கண்ணகியின் சித்திரத்தைத் திருகி மாற்றியமைத்துக் கொண்ட அரசியல் நடவடிக்கைகளுக்குப் பின்பு அவளின் ரூபம் வெகுவாக மாறிவிட்டது.

கண்ணகி, தன் கணவன் தனக்கு எவ்வளவு துயர் கொடுத்த போதும் தாங்கிக் கொள்ளும் மனைவியாக இருந்ததும் அவன் திரும்பிவந்ததும் எந்தக் கேள்வியுமின்றி அவனை ஏற்றுக் கொண்டதும் எல்லா மனைவியரையும் கணவர்கள் அவ்வாறு நிர்ப்பந்திக்கும் ஓர் எதிர்மறையான செயல்பாட்டுக்கே கண்ணகி எனும் உவமை திருப்பியிருக்கிறது. சமூகத்திற்கு முன் மாதிரியான ஒரு பெண்ணாகவும் அதே சமயம் எதிரெதிர் நிலைகளை எடுத்து ஆதிக்கம் பெறும் பெண்ணாகவும் இவ்வாறான இரட்டை நிலைகளையும் பூர்த்தி செய்யும் பெண்ணாகவும் மாறினால் தான் ஒரு பெண் பத்தினித் தெய்வமாக முடியும் என்ற அரசியல் மொழியப்படுகிறது. ஆனால் இந்த நினைவுச் சுழலுக்குள்ளிருந்து சிலம்பு எனும் தன் கால் அணிகலனின் சப்தம் வழியாகப் பேசும் வேறு சில கண்ணகிகளும் இருக்கிறார்கள்.

குட்டி ரேவதி

6 கருத்துகள்:

Sangkavi சொன்னது…

கண்ணகி மறக்கக்கூடிய பெயரா? வீரத் தமிழ் மங்கை அல்லாவா அவள் மறக்கமுடியமா?

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

கண்ணகி பற்றிய அறிமுகம் நல்லாருக்கு

vittalan சொன்னது…

பெண் என்னும் ஆளுமை காலந்தோறும் தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது
சம கால வாழ்வில் பெண்களின் வளர்ச்சிகள் நன்றாக உள்ளது ..
உங்கள் பதிவில் எனக்கு பிடித்த வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.
எனது வலைத்தளம் http://vittalankavithaigal.blogspot.com/

தேவராஜ் விட்டலன்
இந்திய ராணுவம்
அஸ்ஸாம்
"ஒரு பெண் பத்தினித் தெய்வமாக முடியும் என்ற அரசியல் மொழியப்படுகிறது. ஆனால் இந்த நினைவுச் சுழலுக்குள்ளிருந்து சிலம்பு எனும் தன் கால் அணிகலனின் சப்தம் வழியாகப் பேசும் வேறு சில கண்ணகிகளும் இருக்கிறார்கள்".

-குட்டி ரேவதி

பெயரில்லா சொன்னது…

இன்றைய உலகிற்கு கண்ணகியோ, மாதவியோ முன்மாதிரியாக இருக்கத் தேவையில்லை.பிரிந்து போதும் உரிமையும், தன் வாழ்வை தீர்மானிக்கும் உரிமையும்,அதற்கு ஒத்திசைவான சூழலும் போதும்.
அன்று கண்ணகிக்கு திருமணமாகும் போது வயது 12, கோவலனுக்கு 16.
இன்று இது சட்டப்படி குற்றம்.காலம்
மாறிவிட்டது. சிலப்பதிகாரத்தையும், சங்க இலக்கியங்களையும் படிக்கலாம்.இன்றைய வாழ்க்கைக்கு அவை பயன்படா.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ஏங்க கொஞ்சம் பத்தி பிரிச்சு இடம் விட்டு எழுதுங்களேன்.. கண்ணைக்கட்டுது...

கண்ணகி சித்திரம் சொல்ல விழைஞ்ச செய்தின்னு சொல்லி இருக்கும் இடங்கள் மிக நன்றாக இருக்கிறது..

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

"எல்லா மனைவியரையும் கணவர்கள் அவ்வாறு நிர்ப்பந்திக்கும் ஓர் எதிர்மறையான செயல்பாட்டுக்கே கண்ணகி எனும் உவமை திருப்பியிருக்கிறது."

என்பது எவ்வளவு அவலமாக எமது சமூகத்தைப் பீடித்திருக்கிறது