இருபத்தியோராம் நூற்றாண்டின் கவிதைச் செல்நெறிகள் என்ற பொருளில் ஒரு நாள் கருத்தரங்கை கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் சாகித்ய அகாடமியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரவிச்சந்திரன் அவர்களின் அழைப்பின் பெயரில் நானும் சென்றிருந்தேன். பேசப்பட வேண்டிய பொருளும் காலகட்டமும் பொருத்தமானதாக இருந்தாலும் ஏனோ அங்கு அதன் தொடக்கத்தைக் கூட நிகழ்த்திட முடியாத ஒரு சூழலைத் தான் வானம்பாடிகள் ஓங்கியிருந்த அந்த அரங்கம் கொண்டிருந்தது.
வானம்பாடிகளின் கவிதை இயக்கத்திற்கு இணையாகவும் எதிராகவும் மறுத்தும் நிறைய இயக்கங்கள் தோன்றி செழுமையான மொழியையும் அரசியலையும் எட்டிவிட்ட இக்காலக்கட்டத்தில் வானம்பாடிகள் என்ற இயக்கம் முதுமையை எய்துவிட்ட ஓர் இயக்கமாகவே தோன்றுகிறது. வெளிப்படையாகப் பேசுவோம், வெடிப்புறப் பேசுவோம் என்ற முழக்கங்களோடு இருந்தாலும் கவிஞன் என்ற ஆளுமையையும் கவிதையின் அர்த்தப்பாட்டையும் கவிதையின் சமூகப் பங்கெடுப்பையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மனோநிலையை இன்றும் அவர்களிடம் காண நேர்ந்தது அவர்களின் அவலநிலைக்கு ஒரு சான்று. முற்போக்கான கருத்துகளைக் கொண்ட கவிதைகள் என்ற அடைமொழியுடன் அவர்கள் எழுதுவது எனக்கென்னவோ தினமலரில் இடம்பெறும் துணுக்குக் கவிதைகளைப் போன்று தாம் இருக்கின்றன. அதுமட்டுமன்றி, ஒருவரின் கவிதையில் இடம்பெற்ற ‘வாடகைத் தாய்’ என்ற சொல்லுக்கு மேடையில் இருந்த புவியரசு அவர்கள் கொல்லென்று சிரிக்க அரங்கத்திலிருந்தோரும் சிரித்து வைக்க ஓர் அந்நியமாதலை என்னால் உணர முடிந்தது.
வானம்பாடிகள் கவிதை இயக்கமும் என்னைப் பொறுத்த வரை ஒரு கவிதைப் போக்கு அவ்வளவே. அது மாதிரியான வேறு வேறு நவீன சிந்தனைப் போக்குகளுடன் கிளர்ந்தெழுந்த கவிதை இயக்கங்கள் எல்லாம் இன்று தீவிரப்பட்டிருக்கையில் ஓய்ந்து போனதே வானம்பாடிகள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அதே சமயம் அன்று நவீனக் கவிதை என்று சொல்லப்பட்ட இடத்திலேயே அது நிற்கவில்லை. மொழியை பரிசோதனை வடிவத்தில் கையாண்டு கவிதை படைத்தளித்தப் போக்கும், மொழியை அக மலர்ச்சிக்குப் பயன்படுத்திப் புறஎழுச்சியை உருவாக்கிய கவிதைப் போக்கும் ஒரே சமயத்தில் இணையாகச் செயல்பட்டுள்ளன. மொழியை ஒரு சொகுசாகக் கருதிய இடத்திலிருந்து நகர்ந்து அதை ஒரு சமூக அசைவாக நோக்கிய இடத்திற்கு நகர்த்தி வந்த படைப்பாளிகள் எல்லோருமே அந்த வானம்பாடிகள் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாகித்ய அகாடமியின் மைய நாற்காலியில் அமர்ந்து கொண்டதாலே தங்களின் சித்தாந்தத்தை அங்கிருந்தே திணித்துவிட முடியும் என்ற ஒற்றை நம்பிக்கையில் இன்னும் அந்த இயக்கம் பாடிக்கொண்டிருப்பது வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய விஷயம்.
மற்ற மாநிலங்களில் இது போல இல்லை. தங்களின் மொழியில் நிகழும் நவீனத்தையும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் முதன்மையாகப் பறைசாற்றிக்கொள்வதில் அவர்கள் பின் தங்குவதில்லை. அதுமட்டுமல்லாமல் சாகித்ய அகாடமி விருதுபெற்று மற்ற இந்திய மொழிகளுக்கு ஆக்கம்பெறும் தமிழ்ப் படைப்புகளை வாசித்து அவற்றின் தரம் குறித்து எள்ளி நகையாடுவார்கள் என்பதும் ஐயமில்லை.
நூறு பேருக்கும் மேலான மாணவர்கள் நிறைந்த அரங்கில் கவிதை என்பதற்கு வழங்கப்படும் முகவுரையும் செல்நெறிகளும் அவையில்லை என்பதே என் ஆதங்கம். பழமொழிகளைப் புரட்டிப்போட்ட வரிகளோ, ஒரு சிந்தனையின் புதிய ஆனால் மலிவான பதிவையோ எந்த வகையான ஒரு சொல் அல்லது நடை லயமும் அற்ற வடிவத்தில் எழுதி வாசிப்பது, அரசியல் அரங்கங்களின் வடிவங்களாய்ப் பொதியப்பட்ட தொலைக்காட்சி கவியரங்கங்களில் இடம்பெறும் அதே தொனியில் இரண்டிரண்டு முறைகள் வாசிக்கப்படும் வரிகள், திரைப்பாடலாசிரியர்கள் எழுதுவதே கவிதை வரிகள் என்ற சராசரி மனிதனின் சமரசங்களை ஏற்ற மொழியின் பதிவு, என்ற ரீதியில் கவிதை என வழங்கப்பட்டதும் கவிதையாக நம்பப்படுவதும் காலத்தின் தேக்க நிலை போல தோன்றியது.
வானம்பாடிகள் குறிப்பிடும் புரட்சி என்பது வெறுமனே பேச்சளவில் இருப்பது. செயளவிலும் இயக்க அளவிலும் அவை வடிவுறாமல் இருப்பதற்குக் காரணமாக இதில் ஈடுபடும் ஒவ்வொருவரும் எவ்வாறு தத்தம் புகழுக்காக அங்கீகாரத்திற்காக அதிகாரத்திற்காக சமரசங்களுக்குச் சரணடைந்தார்கள் என்பதை வரலாறு அறியும் அல்லது அவர்கள் பெற்ற விருதுகள் வழியேயும் அறியக்கூடும். இவர்களின் ஆளுமையின் குறைபாடாகவே இவர்களின் குரல்கள் ஒலித்ததாகத் தோன்றுகிறது. அரங்கில் ஒலிக்கும் தற்காலிக சபாஷ்களுக்காகவும் ‘உச் உச்’களுக்காகவும் கவிதை வாசிக்கும் இவர்கள் கோவையைப் பீடித்த நோய்களைப் போன்று தோன்றினர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலென்று தங்களைக் கூறிக்கொள்ளும் இவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்று தம்மை முன்மொழியும் இவர்கள் தம்மைக் கூவிக்கூவி இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு சமூகப்பிரக்ஞை அழுத்தமாக இல்லை. மேலோட்டமான பொருள் விளையாட்டுகள் தாம் இருக்கின்றன. பிரச்சார முழக்கங்களைப் போலவும் இன்றைய சுவரொட்டிகளில் ஒலிக்கும் கோஷங்களைப் போலவுமே இருக்கின்றன.
அன்றைய நிகழ்வு குறித்த எனது சில எதிர்வினைகள்:
1.புவியரசு அவர்கள், ’நாங்கள் இப்படித்தான் எழுதுவோம், பூடகமாய் எழுதவேண்டிய அவசியம் எமக்கில்லை’ என்று மேடையில் கையடித்துப் பேசியது மாணவர்களை எதிரிகளாகக் கருதியா அல்லது அழைக்கப்பட்டிருந்த கவிஞர்களான சுகுமாரன், உமா மஹேஷ்வரி, என்னைப் போன்றவர்களை எதிரிகளாகக் கருதியா என்று தெரியவில்லை
2.எல்லோர் சொல்லிலும் விளையாடிய இறுமாப்பு கவிஞர்களின் ஆளுமைக்குப் பொருத்தமானது என்பதை உருவாக்கியது திராவிட இயக்கமா அல்லது அதன் மரபைத் தூக்கிச் சுமக்கும் வானம்பாடிகளுக்கே உரியதா?
3. மாணவர்கள் வானம்பாடி இயக்கத்தின் போக்கைப்பற்றித் துளியும் அறியாதவர்கள் என்பதும் ஏன், நவீனக் கவிதை குறித்த எந்தப்பரிச்சயமுமே அவர்களுக்குத் துறையிலிருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் தெளிவானது.
4. 1971 –ல் கோவையில் தொடங்கி இன்னும் ஓர் நோயைப் போல இலக்கியத்தையும் சமூகத்தையும் பீடித்துக் கொண்டிருக்கும் வானம்பாடியை வளர்த்தெடுப்பதைக் காட்டிலும் வேறு பணிகளை சாகித்ய அகாடமி கையிலெடுக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
5. மேடையில் ஓய்ந்து போன குரலில் உணர்ச்சி வயப்பட்ட வானம்பாடிகளைப் பார்க்கும்போது அக்கவிஞர்களின் உடல் நலம் குறித்தும் அவர்களைக் கவிஞர்களாகக் கொண்ட நமது சமூக நலம் குறித்தும் அநியாயத்திற்குக் கவலை கொண்டேன்.
6. எல்லாவற்றிலும் வேதனையானது, பாரதியார், பாரதிதாசன் பெயரைச் சொல்லிச்சொல்லி இவர்கள் தம்மை அவர்களின் வாரிசுகளாக ஆக்கிக் கொண்டது தான்.
என்றாலும் கோவைக்கு மேற்கொண்ட பயணம் விரயமாகவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சூழல் இயற்கையின் அழகுகள் அசையக் கூடியது. கண் முன்னே மயில்கள் பறந்து திரிவதையும் சாலைகளை முயல்கள் கடப்பதையும் புதருக்குள்ளிருந்து குயில்கள் பறந்து வெளியேறுவதையும் நேரடியாகக் காணலாம். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் ’தோற்றுப்போனவர்களின் பாடல்’ கவிதைத் தொகுப்பை வாசிக்க நேரம் கிட்டியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர் முத்துக்குமாரைச் சந்திக்க முடிந்தது. வேறென்ன வேண்டும், என் போன்றவர்க்கு?
குட்டி ரேவதி
1 கருத்து:
வணக்கம். முத்துக்குமார் எழுதுவது.
இன்றுதான் உங்கள் வலைதளத்தைக் கண்டேன். ஒரு நிகழ்வில் ஏற்ப்படும் உணர்வுகளை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும். பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இனி தொடர்ந்து உங்கள் வலைதளத்தைப் படிக்கிறேன்..
எழுதுகிறேன்.. கவிஞர் தமிழ் நதியின் உங்களுடனான நேர்காணல் வாசித்தேன்.
என்றும் அன்புடன்,
கு.முத்துக்குமார்
கருத்துரையிடுக