நம் குரல்

'தேரா மன்னா!’ என்றாள் கண்ணகி.





ரேணுகாவின் கணவர் ஜமதக்னி முனிவர்.ஒவ்வொரு நாளும் கணவர் செய்யும் பூஜைகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஆற்றின் மண்ணைக் குழைத்து அன்றன்று செய்யப்படும் பானையில் நீர் கொண்டு வரவேண்டும். அவ்வாறு ஒரு நாள் ஆற்றங்கரை நிற்கையில் அதன் கண்ணாடி போன்ற நீர்ப்பரப்பில் வானில் மேகங்களூடே மிதந்து சென்ற தேவனின் பிம்பத்தைக் காண்கிறாள். அவனின் அழகில் ஒரு கணம் மயங்கிய அவள் பின் தெளிந்து பானை செய்ய ஈடுபடுகையில் பானை செய்ய வரவில்லை. இதை தனது பிரக்ஞையால் அதாவது தனது ஞான திருஷ்டியால அறிந்த அவளுடைய கணவர் ஜமதக்னி முனிவர், தனது மகன் பரசுராமனிடம் அவன் அம்மாவின் தலையை வெட்டி வரும்படி உத்தரவிட்டார். பரசுராமனும் என்ன் ஏதென்று கேட்காது உடனே சென்று ரேணுகாவின் தலையை வெட்டுகிறான். தன் மகன் தன் ஆணையை உடனே நிறைவேற்றியது கண்டு மகிழ்ந்து என்ன வரம் வேண்டுமெனக் கேட்கிறார் ஜமதக்னி. தன் தாய் உயிருடன் வேண்டுமென்று கேட்க வரமளிக்கப்படுகிறது. இக்கதையின் ஊடே நெய்யப்பட்டுள்ள செய்தி, ‘இன்னொரு ஆணின் புற அழுகைக் கண்டு ரசித்தாலும் உனக்கான மந்திர சக்தியான அல்லது பானை வனையும் இயல்பான திறன் என்றாலும் அது அழிந்து போகும். நீ என்னிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் இந்த எச்சரிக்கை நிறைந்த பிரக்ஞையுடன் இருக்கவேண்டும். என் மகனென்றாலும் அவனும் இவ்விதிகளின் வாரிசு தான். உன் தலையை வெட்டி வா என்றாலும் கொண்டு வருவான்’, என்பதே. இது ஒரு கதை. பெண் சமூகத்தின் மீதே விடுக்கப்படும் எச்சரிக்கை. இது போன்று ஆயிரக்கணக்கான கதைகள் உரையாடல்களூடேயும், புனைவுகளூடேயும், கற்பனைகளூடேயும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு பெண்களின் பிரக்ஞையில் விதைக்கப்பட்டிருக்கின்றன. இவை மற்ற தாய்வழிச் சமூகக் கதைகளையும் பெண்ணை முதன்மைப்படுத்திய கதைகளையும் கூட தாக்கின.


இன்றைய நமது நம்பிக்கைகள் நினைவுகளின் குவியல்களாய் இருக்கின்றன. புனைவுகளோ, கேள்விப்பட்டவையோ, கற்பனைகளோ, கனவுகளோ ஏன், நம் ஆசைகளோ கூடத்தான் நம்பிக்கைகளாக மாறி நம்மிடம் தங்கிப் போகின்றன. அப்படித்தான் கற்பு பற்றியதும். பல சமயங்களில் சாத்தியங்கள் அற்றவையாகக் கூட இருக்கின்றன அப்படி நாம் சேர்த்து வைக்கப் பணிக்கப்பட்ட நம்பிக்கைகள். ‘பெய்க மழை, பெய்க!’ என்று கூறும் போது பெய்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இம்மாதிரியான மிகைகளோடு பெண் வாழ்வை இணைக்கும் கதைகள் பத்தினித் திறத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டவை. அவை சனாதனத்தின் விதிகளைப் பெண்களும் தமது வாரிசுகளும் மீறாமல் இருப்பதற்காகக் கற்பிக்கப்பட்டவை.


கண்ணகியின் முக்கியமான பிம்பமான, அநீதியின் போது கோபமாய்ச் சீறிய தலைவிரி கோலமான பெண் என்பது மறைக்கப்பட்டு கோவலன் மாதவியிடம் தன் முழு செல்வத்தையும் இழந்து வரும்வரை பொறுத்திருந்ததும் அவள் பத்தினித் தெய்வமானதும் தான் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. இளங்கோவடிகள் இக்காப்பியத்திற்கு பத்தினித் தெய்வம் என்று பெயரிடவில்லை. சிலப்பதிகாரம் என்று தான் பெயரிட்டிருக்கிறார். ஒரு பெண்ணின் வர்க்க அடையாளமான சிலம்பை வைத்தே நீதிக் கேட்கும் கதைப்பாங்கை உருவாக்கியிருக்கிறார். அநீதி இழைத்த அரசு அதிகாரத்திற்கு எதிராக ஒரு சாதாரணப் பெண் நீதிக் கேட்கப் பொங்கியெழுந்த திறம் தான் கதையின் கயிறு. அது மட்டுமன்றி சிலப்பதிகாரம் தொடக்கத்திலிருந்தே சோழ அரசின் புகழைப்பாடி வந்ததுடன், இடையிடையே அந்நாட்டு மக்களின் இயல்பையும் அறத்தையும் பேசியதாகவும் இருந்தது. பாண்டியன் மண்ணைச் சேர்ந்ததும் முற்றிலும் எதிரான சூழ்நிலை விவரிக்கப்படுகிறது. கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலனுள்ளம் கவர்ந்தன என்று தன் ஊடலுள்ளம் உள்கரந்தொளித்துத் தலை நோய் வருத்தந் தன் மேலிட்டுக் குலமுதல் தேவி கூடாதேக....(சிலப்பதிகாரம்) என்ற நிலையை எதிர்கொள்கின்றனர் கண்ணகியும் கோவலனும். கோவலன் கொலையுண்டதும் அரற்றும் கண்ணகியின் பக்கம், தன் நாட்டு மன்னனால் ஒரு கொடுமையைச் சுமக்க நேர்ந்த பெண்ணின் பக்கம் தாமும் நிற்பவராக மதுரையின் மக்கள் கூடியிருக்கின்றனர். கண்ணகி தான் அறிந்த அறங்களுக்கெல்லாம் அந்நியமானதாகப் பாண்டிய மன்னனின் ஆட்சிமுறையைக் உணர்கிறாள். அறம் பேசுகிறாள். ‘ஆராய்ந்து அறியாத மன்னனே, நான் யாரென்று கூறுகிறேன்!’ என்று மன்னனை முறையிட அழைக்கிறாள்.


இப்படிப் பேச, வழக்குரைக்க கற்புக்கரசியாக, பத்தினித் தெய்வமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முறையான நீதி நெறிமுறைகளை, அறங்களை அறிந்திருத்தலும் அதைப் பேசும் திறமுமே போதுமானது. ஆக, மேற்சொன்ன ரேணுகா போன்றோரின் கதையை கண்ணகி போன்றோரின் கதைகளுடன் பொருத்திப் புரிந்து கொள்ள வற்புறுத்தும் ஆண்களின் வாதம் தான் பத்தினித் தெய்வமும் கற்பும். அரசனின் அதிகார நிழலிலேயே நடந்துசெல்ல விரும்பும் கோழைகளின் வாதம் தான் பத்தினித் தெய்வமும் கற்பும். அவ்வாதங்கள் எல்லாம் அழிந்து போகும்படியாக ஒலிக்கட்டும் எண்திக்கும், ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்ற கண்ணகியின் அறச்சீற்றம்!


குட்டி ரேவதி

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன் !
கற்பிழந்த முனிவரின் மனைவிகள்
கற்பழித்தக் கடவுள்கள் !

கண்ணகிகளாகப் பெண்கள் மட்டும்
பல பெண்கள் தேடும் ஆண்கள்
படித்திருந்தாலும், பதவிலிருந்தாலும்
பெண் பெண் தான் ஆணுக்கு அடிமை

இதெல்லாம் மறைந்து நண்பர்களாக இணையர்களாக வாழ்வோம் என
அனைவரும் சிந்திப்போம் செயல் படுவோம்,மகிழ்வுறுவோம்.

பெயரில்லா சொன்னது…

ஆனல் இந்த "கற்ப்பு" என்ற உணர்வுகள்தான் நமது பண்பாட்டையும், கணவன், மனைவி, குழந்தைகள் என்ற ஒரு கட்டுகோப்பான வாழ்க்கையும்/கோட்ப்பாடான் வாழ்க்கையையும் நடத்தி மற்ற உலக நாடுகல் வியக்கும் அளவிற்க்கு நமது பண்பாடு எடுத்துக்காட்டாக திகழ்கிறதை மறுக்கமுடியாது..ஆனல் சில மூட பழக்கவழக்கங்களை கலைவது, பெண்களை மதிப்பது, கண்டிப்பாக வேண்டும். எனது உறவினர் பெண், டி.வி. பார்க்கும்போது, கேட்டகேள்விக்கு, இவள் யாதார்த்த்மாக "சரஸ்வதி" என்று பதில் கூற, அருகில் இருந்த மாமியார்,மகனிடம் எனது பெயரை உனது மனைவி என் எதிரே எப்படி கூறலாம்...காலில் விழுந்து மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று சண்டைப்போட்டு மன்னிப்பு கேட்க்கவைத்த கொடுமையை என்னஎன்று கூறுவது...இத்தனைக்கும், வேலைப்பார்க்கும் மாமனார்,மாமியார், பொறியியல் படித்த மகன். இந்தமாதிரி மனிதர்களை எப்படி கூறுவது.. இருக்கையில் இவள் இருக்க கூடாது.தரையில்தான் இருக்க வேண்டும். இதனைக்கும் இவள் நன்கு படித்த திறமைசாலி பெண்..இதற்க்கு உங்கள் கருத்தை பகிரலாமே.

பெயரில்லா சொன்னது…

இந்த ஆண்கள் தான் பெண்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு சாதகமாகவே, கவிதைகளும், கதைகளும்,புராணங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன என்று கூரும் நீங்கள், நான் முன்பு எழுதிய மாமியாரின் போக்கைப்பார்த்தால் பெண்களே பெண்களுக்கு எதிரி என்பது நிருபணம் ஆகிறதல்லவா,.. இது ஒரு உதாரணத்துக்கு...அவள் தனது மாமியாரல் அவமதிக்கப்படுவது...எவ்வளவோ..

KarthigaVasudevan சொன்னது…

அடிமைச் சமுதாயம் அடிமைச் சமுதாயம் என்று சொல்கிறார்களே! சில விதிவிலக்குகள் தவிர்த்துப் பார்த்தால் பெண்ணே இவ்வுலகின் முதல் அடிமையாக்கப் பட்டவள்,புராணங்களும் இதிகாசங்களும் வலிந்து போதிக்கின்றன நீ அடிமையாயிருக்க விதிக்கப் பட்டவளென.கடவுளர்களிடம் வரம் பெற தபஸ் செய்யத் தான் முனிவர்கள் வனம் சென்றார்கள்,அந்த கடவுளோ அல்லது கடவுளின் பிரதிநிதிகளோ தான் (பெரும்பாலும் இந்திரன்) அந்த முனிவர்களின் மனைவிகளை மோகிக்க முயல்கிறார்கள்,இந்த முரணை தகுந்த காரணங்களுடன் விளக்க எவரேனும் உண்டோ?பிறகென்ன இந்திரனுக்குப் பூஜைகள் !!!