நம் குரல்

இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புனைவு என்பது......

புனைவுகளுக்குப் பின் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

புனைவுகள் உண்மைகளை மெய்ப்பிப்பதற்காக, வருவதில்லை. பொய்களையும், கற்பனைகளையும் இட்டு நிரப்பவும் அவை முயற்சிப்பதில்லை. மனிதனாகக் கிடைத்த வாய்ப்பில், இந்தப் பிரபஞ்சத்தையும் சிந்தனைகளையும் எவ்வளவு தூரத்திற்கு நுரையீரல் வெடிக்க ஊதிப்பருக்கவைக்கமுடியும் என்பதில் தீவிரமாக இருக்கின்றன.

யதார்த்தத்தை அப்படியே கிழிப்பதிலோ, கீறல்கள் ஏற்படுத்துவதிலோ புனைவுகளுக்கு அக்கறை ஏதும் இல்லை. பட்டுத்துணியின் உராய்வில் சதை மீது பரவும் கணநேர மின்சாரம் போன்ற உணர்வைச் செயல்படுத்திச் செல்கின்றன. 
ஆகச்சிறந்த கதை என்று பிரசுரமாவதை எல்லாம், இதழ்களில் குப்பையாக்கிச் சாதிக்கும் தருணங்களில், மனித மனங்களின் உன்னதம் என்பவை யாதாக இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

உன்னதம் என்றால், புனிதம் மட்டுமே இல்லை. அழுக்கையும் வலியையும் சீழையும் துயரநொதியையும் எந்தத் திறனால், ஒரு தனிமனிதன் சரியாகச் செரித்துக்கொள்ளமுடிகிறது என்பதுவும் தான். உன்னதம் என்றால் புனிதம் இல்லை. உடலின் அகநோக்கங்கள், பிரபஞ்சத்தின் எல்லைகளையும், காலமுடிவுகளையும், மனிதவரையறைகளையும் மீறியவை. தன்னையே, தன் உடல் வழியாகக் கடந்து செல்ல முடியும் வீரம். 

எங்கே இப்படி ஒரு புனைவு எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

குட்டி ரேவதி

இலக்கிய முஸ்தீபுகள்






விருதுகள் பெயரில் நடக்கும் அட்டகாசங்கள்,  எழுத்துப்பணியை முட்டுச்சந்தில் கொண்டு போய் நிறுத்தும் என்பது எழுதுபவர்களுக்கும் தெரியாமலா இருக்கும்? (எழுத்துப் பணி என்றால், தலையணை அளவுக்கு நூல்கள் எழுதுவது என்றும், ஃபேஸ் புக், டிவிட்டர், பிளாக் இன்னபிற சமூகத்தைப்பின்னும் வலைத்தளங்களில் தங்களின் விசிட்டர் எண்ணிக்கைகளையும் கமெண்ட்டுகளின் எண்ணிக்கைகளையும்  விருத்தி செய்துகொள்வதும் தினமும் எப்படியும் அப்டேட் செய்தே தீருவேன் என்ற அடம்பிடித்தலும் தான் என்ற மூட நம்பிக்கைகளைக் குறிப்பிடவில்லை, நான்!)




இப்படியான மன நெருக்கடியில் சிக்கிக் கொண்டவர்கள் மீள வழியும் இருக்கிறது. யாராவது விரும்பினால் முயன்று பார்க்கலாம். படிக்கவேண்டிய நூல்களை வரிசைப்படுத்திக் கொண்டு அவற்றை வாசித்து முடித்துவிடுவது என்று வாசிப்பதில் ஈடுபடுவது தான். நிறைய வாசிப்பது, அபத்தமாக எழுதுவதைக் குறைக்கும். எழுத்தின் தரத்தையும் ரசனையின் தரத்தையும் கூட்டும்.



எழுத்தாளர்களைப் பட்டியலிடும் வேலையை எழுத்துலகப் பிதாமகர் ஒருவர் தான் தொடங்கி வைத்தார். (அவரது பெயரை என் வலைத்தளப் பக்கத்தில் உபயோகப்படுத்தி, இதை அழுக்காக்கிக் கொள்ள விரும்பவில்லை, மன்னியுங்கள்!)  அது அவருக்கு, இலக்கியத்தின் நிபுணத்துவ அந்தஸ்தைப் பெறுவதற்கும், பரமார்த்த குருவின் சீடர்களை உருவாக்குவதற்கும் தேவைப்பட்டது. இந்தப் ‘பட்டியல் கலாச்சாரம்’ இன்று வரை தொற்று நோயைப் போல பற்றிக் கொண்டு விட்டது. இப்பொழுது சர்வே எடுக்கிறார்கள், உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யாரென்று! இந்த ‘சர்வே கலாச்சாரத்’தால் உண்மையிலேயே ஆர்வம் இருப்பவர்களைத் தவிர புதிதாய் எவரும் இலக்கியத்தை வாசித்துவிடப்போகிறார்களா என்ன? தன்னைத் தானே கூவி விற்கும் வியாபாரத்தந்திரம் தான், ‘சர்வே’, ‘பட்டியல்’ இவை பின்னாடி கண்சிமிட்டுகிறது!




‘பெயரில்லா’ என்று பெயரிட்டு எனக்கு வரும் கருத்துரைகளையும் மின்னஞ்சல்களையும் நான் பொருட்படுத்தப் போவதும் இல்லை. அவற்றைப் பிரசுரிக்கவும் விரும்பவில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அந்த அளவிற்குக் கூட நெஞ்சுரம் இல்லாதவர்கள் பின் ஏன் என் வலைப்பக்கத்தை வாசிக்கிறார்களாம்? போகிற போக்கில் என் பக்கத்தைப் புரட்டியவர்களாக இருக்கும் போல!




பால் நியூமேனின் விவகாரம் சூடுபிடித்து, எழும்பிய வேகத்தில் அணைந்து விட்டது. அது தொடர்பான இலக்கியப்பத்திரிகை பற்றிய குறிப்போ இது என்று யாரும் ஆர்வமடைய வேண்டாம். பால் நியூமேனின் மறுப்புக் கடிதம் வலிமையானதொரு மொழியில் எழுதப்பட்டிருந்தது தான் குறிப்பிடத்தக்க சேதி! உண்மையிலேயே சிறந்ததொரு கடிதம்! மனிதனின் மனோபாவங்களும் நடத்தை முறையும் தான் அவன் ஆளுமைக்கு அழகு கூட்டுகின்றன.




‘அரசுக்கு எதிராகத்’ தாங்கள் கலை இலக்கியப் பணியை ஆற்றுபவர்கள் என்ற கற்பிதத்துடன், கற்பனையையும் கொண்டிருப்பவர்கள் சுவருடன் தன் முஷ்டியால் மோதும் காட்சியை எனக்குப் பரிசளிக்கிறார்கள். அரசியல் புரியாதவர்கள்! சமூகச்சீர்திருத்தமே அரசியலைத் திருத்தம் செய்யும் அடிப்படையான பணி என்று அம்பேத்கர் சொன்னதை ஒரு முறை அவர்களை நினைவுபடுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன்! அல்லது, அத்தகையதொரு அருமையான பணியைத் தாங்கள் ஆற்றும் போது நானும் ஏன் அப்பணியிலேயே என்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.  உங்கள் கூட்டமே ஒரு நூற்றாண்டுப் புரட்சிக்குப் போதுமானது! இதில் நான் வேறா? (என் மின்னஞ்சலுக்குத் தொடர்ந்து கடிதம் எழுதும் பெயரில்லா மனிதருக்கு இப்பதில்!)    சேகுவேரா, மார்க்ஸ் அச்சிட்ட பனியனை அணிந்தாலே புரட்சி நடந்துவிடும் என்ற உங்களின் மூடநம்பிக்கை பலித்தால் எனக்கும் மகிழ்ச்சியே!




குட்டி ரேவதி

வாசகனும் எழுத்தாளனும்: புத்தகக் கண்காட்சி



வழக்கம் போல சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒரு கொண்டாட்டமான நிகழ்வு தான். கண்காட்சியின் பொழுது அரிதாகவே புத்தகம் வாங்குவேன். ஆனால் ஒவ்வொரு பதிப்பகமும் என்னென்ன புத்தகங்களை வெளியிட்டுள்ளது, ஒவ்வோர் எழுத்தாளரும் என்னென்ன புதிதாக எழுதியுள்ளனர் என்பதை முழுதுமாகத் தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த நாட்களைப் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வகையில் ஆயிரக்கணக்கிலான பக்கங்களை உடைய நூல்களை எழுதுவதும் ஒரே எழுத்தாளரே பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிடுவதும் அவற்றில் பெரும்பாலும் அந்த எழுத்தாளரின் வலைப்பதிவில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பாய் இருப்பதும் புத்தகக்கண்காட்சி முடிவதற்குள் கடைகளில் இடம்பெற வேண்டுமென்ற அவசரக் கோலத்தில் வடிவம் பெறுவதுமென இருந்தது இந்தப் புத்தகக் கண்காட்சி. ஒவ்வொரு பதிப்பகமும் காலப்போக்கில் அவ்வவற்றிற்கான தனித்தன்மையைக் கண்டடைந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் புரிந்தது. அதாவது முழுக்க முழுக்க அரசியல் அல்லது இலக்கியம் அல்லது அரசியல் இலக்கியங்கள் என வேறு வேறு வகைமையான நூல்களையே தொடர்ந்து பதிப்பிப்பதால் அவ்வகையான நூல்கள் தேவைப்படும்போது அந்தந்தப் பதிப்பகத்தில் போய்ப் பெற்றுக் கொள்வது வசதியாக இருக்கிறது.
வடிவமைப்பிலும் நூல் நேர்த்தியிலும் நவீன இலக்கிய பதிப்பகங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் அடையாளம், க்ரியா, ஆழி, தமிழினி போன்றவை அந்நூலின் உள்ளடக்கத்தினை வெளிப்படுத்தும் புற அழகையும் தன்மையையும் சேர்ப்பதில் அதிகக் கவனமும் அக்கறையும் எடுத்துக் கொள்வது அந்நூல் சொல்லும் படைப்புக்குள் நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்வது போன்றதாக இருக்கிறது. இது, அந்த நூல் ஒரு புனைவு எனில் அதைத் தொகுக்கவும் திருத்தவும் படைப்பாசிரியரினும் இன்னொருவர் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம். அவசர கதியில் நூல்கள் வரும்போது அவற்றின் அழகும் கருத்தும் சிதறுண்டு இருப்பதாகத் தோன்றுகிறது.
அபூர்வமாகத் தான் எழுத்தாளர்களைச் சந்திக்கிறேன். அதிலும் சந்திக்க எளிமையானவர்களை நேரடியாகக்சென்று நெருங்கிப் பேசுவேன். எழுத்தாளர் அழகிய பெரியவனை அவ்வாறு சந்தித்தேன். அவரை எங்குச் சந்தித்தாலும் அணுகுவதும் பகிர்ந்துகொள்வதும் மிகவும் இலகுவான அனுபவமாக இருக்கும். எல்லா எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் கூட அவரை நேரில் சந்திப்பதென்பது இத்தகைய அனுபவமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். எழுத்தாளர்களில் என்னைப் பொறுத்தவரை பிரபலமானவர் பிரபலமற்றவர் என்ற வரைமுறை கிடையாது. சமூக இறுக்கங்களினின்று விடுபடுவதற்கான வழிமுறைகளைச் சொல்லுபவர்கள் நல்ல எழுத்தாளர்கள். அதனுடன் தானும் சமரசமாகி வாசகர்களையும் சமரசம் செய்யத் தூண்டி அதற்கான மயக்க மருந்தை எழுத்தாக்கி அளிப்பவர்கள் மோசமான எழுத்தாளர்கள். எழுத்தாளர்கள் தமது பிரபலத்தை, வாசகர்களின் எண்ணிக்கையைக் கொண்டும் விற்கப்படும் தமது நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டும் அளவிடுவது அபத்தம் என்றே தோன்றுகிறது. அதையெல்லாம் மீறி படைப்பாளி ஒரு வாசகனுக்குத் திறந்து விடும் கதவுகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் வைத்து அளவிடலாம். ஆனால் அத்தகைய அளவீடோ சாத்தியமில்லை.
பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தினர் தாம் புத்தகங்கள் மீதான பெருத்த அபிமானத்துடன் வருகின்றனர். அவர்களின் அன்றாடச் செலவில் புத்தகங்களுக்கும் பணம் ஒதுக்கும் அவர்களின் ஊக்கத்தைக் காணமுடிந்தது. தான் வாசிக்க, தன் குழந்தைக்கு இந்தப் புத்தகம் அவசியம் எனப் பெண்களும் வந்து குவிந்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை இக்கண்காட்சி, வீடு, உறவினர் வீடு, பேருந்து நிலையம், அலுவலகம், காய்கறிச் சந்தை போன்ற மற்ற இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வெளியாகவும் எழுத்தாளர்களுடனான நேரடி அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பாகவும் இருக்கின்றது. தீவிரமான சில பெண் வாசகர்கள் பின்னாளில் மெல்ல மெல்ல தன்னையும் படைப்புத் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டதை நானறிவேன்.
எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாசகர்கள் ஏமாற்றம் அடைவதான குறிப்பை நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். வாசகர்களுக்கு மட்டுமன்று. எழுத்தாளர்களுக்கும் இதே அனுபவம் தான். இப்புத்தகக் கண்காட்சியில் எனக்குப் பிடிக்காத அனுபவமும் இல்லாமல் இல்லை. சில பல வருடங்களுக்குப் பின் ஒரு கவிஞரை இப்பொழுது தான் இப்புத்தகக் கண்காட்சியில் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் எனக்கான இரு விஷயங்களைப் பேச இரண்டு கொடுக்குகளைப் போல வைத்திருந்தார். ‘ஒன்று: என் நூல்களின் அட்டை ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கின்றன? இரண்டு: அந்தக் குறிப்பிட்ட நடிகருக்கு நீங்கள் உதவியாளராக வேலை பார்க்கிறீர்களாமே?’. என்னிடம் தெளிவான பதில்கள் இருந்தன. ‘உங்கள் பார்வைக்கு என் அட்டைகள் அப்படித் தோன்றியிருக்கலாம். என்றாலும் அட்டையை விட உள்ளடக்கம் முக்கியமில்லையா? மேலும், அந்த நடிகருக்கு நான் உதவியாளராக வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு வேலை பார்க்க அவரது மனைவி இருக்கிறார்’ என்றேன். ஏற்கெனவே என் மீதான கடுப்புகளை தனது விஷக்கொடுக்குகளில் சேமித்து வைத்திருந்தார் போலும். எனது நூல் அட்டைகள் மோசமானவையாக இல்லாமல் பார்த்துக் கொள்வதில் வெகுவாக மெனக்கெடுவேன். நூலை வாசித்தவர்கள் அறிவர். ஒரு புத்தகத்தைத் தொடுகையில் அதன் உயிர்ப்பை அந்தப் புத்தகத்தின் அட்டை தக்கவைத்திருக்க வேண்டும். இன்னொன்று ஒருவரைக் கேள்வி கேட்கும் அணுகுமுறை. எவ்வளவு தவறான கேள்விகளாய் இருந்தாலும், அதற்கான முறையும் பக்குவமும் இருக்கின்றன என்பதும் என் பார்வை. அந்த எழுத்தாளர் மீது எனக்கு மிகுந்த பரிதாபம் ஏற்பட்டது, அந்த விஷத்தை அவர் தன்னுள் எவ்வளவு காலம் சேமித்துச் சுமந்து வைத்திருந்தாரோ என்று. ஓர் எழுத்தாளன் எதையும் எவரையும் வாசக மனோபாவத்துடன் அணுகும் முறை உடையவராய் இருக்கவேண்டும். ஒரு நல்ல படைப்பாளி என்பவர் முழுமையான வாசகனும் கூட. ‘நாம் எழுதிய நூல்களுக்கு வெளியிலும் நமது வார்த்தைகள் உலவுகின்றன’, என்பதை கவிஞர் தேவதேவனிடம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.



குட்டி ரேவதி