நம் குரல்

வன்முறையின் ஆட்டங்கள்


வசந்தபாலனின் ‘வெயில்படத்தில் ஒரு காட்சி வரும், ஒருவர் ஒரு பெரிய பாறாங்கல்லால் தரையில் அழுத்தப்பட்ட இன்னொருவரை ஓங்கி மண்டையில் அறையும் காட்சி. வன்முறையைச் சித்தரிக்கும் இதே காட்சியை ஒட்டி நூற்றுக்கணக்கான வன்முறைக்காட்சிகளைத் தமிழ்ச்சினிமாவிலிருந்து உருவி எடுத்து எடுத்துக்காட்டுகளாக முன் வைக்க முடியும். இலக்கியத்திலும் பிற நுண்கலை வடிவங்களிலும் கூட இத்தகைய வன்முறைப் பதிவுகளும் படிவுகளும் இயம்பப்பட்டாலும் அவ்வடிவ வகைகளின் நுட்பம் சார்ந்துதாம் அவை இயங்குவதால் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டிய வாசகர்கள், படைப்பாளிகளின் அதே அலைவேகத்திற்கும் ஆழத்திற்கும் செல்ல வேண்டியிருக்கிறது. மேலும், அந்த வன்முறையின் நிகழ்த்துதலை மனதில் பலமுறை நிகழ்த்திச் சலித்த படைப்பாளி அது தனக்களிக்கும் அதிர்ச்சியை வெல்லும் அல்லது அது தன்னையே எதிர்வந்து தாக்காதபடிக்குமான யுக்திகளைக் கையாளும் வகைமுறையினையும் அறிந்து வைத்திருக்கிறான். வன்முறையை உணர்த்தும் படிமங்களைத் திருகி வேறொன்றாக்கும் வார்த்தைகளையும் அவனால் கண்டறிய இயலும்.


காட்சி ஊடகத்தில் இயங்குவதற்குத் தேவைப்படும் பயிற்சிகள் வேறு வகையானவை. இந்த நூற்றாண்டில் நமது உணவு மேசை வரை வந்து சேர்கின்றன வன்முறை நிறைந்த காட்சிப்பதிவுகள். போர் நிலங்களில் நிகழ்த்தப் பட்டதோ, தனி மனித உறவுகளில் நிகழ்ந்ததோ நமது வீடு என்றாலும் நம்மால் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு நமது புலன்களை வந்து தாக்குகின்றன. கண்களை மூடிக்கொண்டாலும் காதுகள் அந்நிகழ்வுகளின் சப்தங்களால் வதையுறுகின்றன. காதுகளையும் பொத்திக்கொண்டாலும் தோலில் வந்து மோதுகின்றன தொலைக்காட்சிகளில் அக்கணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் வன்முறைக்காட்சியின் நினைவும் உணர்வும். அயராது இவற்றிலிருந்து தப்பியோட விரும்புகிறேன், நான். என் தோழி ஒருத்தி கூறினாள், நாம் அவற்றிலிருந்து தப்பிப்பதற்குப் பதிலாக அதைக் கண்டு நெஞ்சில் உரமேற்றிக் கொள்ளலாம் அல்லவா என்று. எதைக் கண்டு எதை ஏற்றிக் கொள்வது? கொள்ளிக்கட்டையால் முதுகு சொறிந்து கொள்வதைப் போல.


இன்னும் இன்னும் இத்தகைய படிமங்கள் காட்சிகள் நிகழ்வுகள் நினைவுகள் ஆகியவற்றிலிருந்து என்னை தொலைதூரம் இழுத்துக் கொண்டு ஓடுகிறேன். அவற்றின் மீள் நினைவுகள் கூட எனது செயல்களில் வாக்குகளில் நிழல்களாகப் பதிந்து விடுமோ என்ற அச்சமும் அழுத்தமும் என்னைத் துயருறச்செய்கின்றன. கண்கள் வழியாக ஒருமுறையே நுழைவதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தாலும் நாடி நரம்புகளில் எல்லாம் நிலையாகப் பதிந்து விட்ட நினைவு அதிர்வுகளை பின்பு ஒரு பொழுதும் நினைவறுக்க முடியாமல் போய்விடும் என்று நினைவுகளின் தொகுப்பான எனது மனிதத்தன்மை என்னை எச்சரிக்கிறது. தினந்தோறும் காலையில் மனிதர்களின் குரூர பேதலிப்புகளைச் சுமந்து வரும் செய்தித்தாள்களும் நமது அனுமதியைக் கேட்காமலேயே நமது கவனிப்பைக் கோராமலேயே நம்முன் காட்சியாகிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியின் துன்பியல் தொகுப்புகளும் அத்தகைய வன்முறைச் சம்பவங்களைத் தவிர நமக்கு வேறேதும் அள்ளிக்கொண்டுவருவதில்லை. இவற்றிலிருந்தெல்லாம் என்னை தற்காத்துக் கொள்வதை எனது மிகப்பெரிய கடமையாகவும் பயிற்சியாகவும் உணர்கிறேன். அத்தகைய பயிற்சிகளில் கவிதை எழுதுதலும் ஒன்றாயிருக்கிறது.


இன்றைய சமூகச்சூழலில் வன்முறை – அகிம்சை என்ற இரட்டை நிலைகளைத் தேர்ந்தெடுப்பது கலைஞர்களின் வேலையில்லை. இவை இரண்டுமே ஒப்பீட்டளவில் மட்டுமே இரண்டாய்ச் சிதைவுறுகின்றன. மூலை தோறும் குரூரம் தொனிக்கும் வாழ்வியலுக்கு எதிரான கதையைச் சொல்வது தான் படைப்பாளியின் விருப்பம் என்றாலும் வன்முறை நமது மனோவெளியில் அரூபமாய்ப் புதைந்து கிடப்பதை வெளிக்கொணரும் அதே சமயம் அதற்கு முற்றிலும் புறம்பான மனோவெளியை காட்சியாக வரைந்து காட்டுவதும் அத்தகைய மனோவெளியை வாசகனுக்கும் பார்வையாளனுக்கும் அறிமுகம் செய்வதும் கூட படைப்பாளியின் வேலை. சொல்லப் போனால் அதற்குத்தான் உச்சபட்ச படைப்பாற்றல் தேவைப்படுகிறது. ‘அங்காடித்தெருபற்றிய விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்து கொண்டே இருக்கின்றன. துன்பியல் கதையைச் சொல்லப் போய் ‘வெயிலைப் போன்றே இதுவும் முன் குறிப்பிட்டதைப் போன்றதொரு காட்சியைத் தன்னுள் கொண்டிருக்கலாம் எனும் யூகம் என்னை ஆக்கிரமிக்கிறது. அது எத்தனை ஆயிரம் குழந்தைகளின் கண்களில் நினைவுச்சித்திரங்களாக ஆகக்கூடும் என்பதும் கேள்வியாக இருக்கிறது. ‘அங்காடித்தெருவைப் பார்ப்பதை இன்னும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன்.



குட்டி ரேவதி

2 கருத்துகள்:

adhiran சொன்னது…

good post madam. I too feel like that. but I saw the movie 'angaadiththeru' which is expose someother kind of micro-terrorism.

thankyou.

settaikkaran சொன்னது…

பெரும்பாலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற ஒரு தீவிரமான உணர்ச்சிகளில் ஒன்றே வன்முறையும். தம்மால் முடியாததை அதிநாயகர்கள் செய்வதைப் பார்த்து அற்பநிறைவு கொண்ட காலகட்டம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, அதையே தான் நாமும் பின்பற்றவேண்டிய இயலாமையான நிலைக்குத் தள்ளப்படுகிறோமோ என்பதே இன்றைய கேள்வி. நல்ல பதிவு.