உடலைப் பற்றிய குறிப்புகள்
காபி குடித்ததும் உடலில் இரத்தம் இடம் வலமாயும் வலம் இடமாயும் மாறி மாறிக் குழப்பத்துடன் சுழலத் தொடங்குகிறது. உடல் புயலின் மையத்தில் அகப்பட்டுத் துடிப்பதைப் போல. அவ்வாறே தமிழ்ப்படங்களின் அளவிலாத வன்முறையும் உடலைத் துடிக்கச் செய்கிறது. எந்த உடலின் மீது இறங்கும் காமமும் காதலும் தன் உடல் மீது இறங்குதல் போலவே வன்முறையும் என்னுடல் மீது இறங்கி நசுக்கிறது. என் இரத்தத்தை உடலின் நாலா திசையும் அலைபாயச் செய்கிறது. துடிக்கும் இதழ்கள் தேடும் வார்த்தைகளைக் கண்டடையும் துணிவு இன்மையால் இன்னும் சில்லிடுகின்றன. கைகள் பனி பொழியும் இரவுகளின் வெளியைத் ஆதரவுக்காய்த் துழாவுகின்றன. இல்லாத ஒரு வெளி நோக்கித் தப்பித்து ஓடத் தவிக்கிறது உடல். குழப்பமானதொரு இரவைத் தொடங்கி வைக்கிறது வன்முறை மிகுதியானதொரு திரைப்படம். காபி பருகியதும் உரையாட ஒரு நண்பனைத் தேடும் மேஜையைப் போல் இத்திரைப்படங்களும் உலகத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கின்றன. கடைசியாக காபியென்றெண்ணி தினந்தோறும் ஒரு கோப்பைக் குருதியைக் குடித்துக் கொள்கிறது தமிழகம்.
குட்டி ரேவதி
4 கருத்துகள்:
இன்றுதான் உஙகள் ப்ளாகைப் பார்த்தேன்.
மிகவும் சிறப்பு. உடலரசியல் குறித்து மிக நுட்பமான விவாதங்களை எழுப்பியுள்ளீர்கள். தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து ஆணாதிக்க மன நிலையை விற்கின்றன. பெண்ணுடல் மீதான ஆதிக்கத்தை பல வடிவங்களிலும் செயல் படுத்துகின்றன. இச்சூழலில் தங்களது விவாதங்கள் தீவிரம் பெறுகின்றன.
ஜவகர்.
நண்பரே, தங்கள் கருத்துரைக்கு நன்றி.
நீங்களும் விவாதத்தில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். இது இவ்விவாதத்தில் ஈடுபடும் அனைவரையும் ஆக்கப்பூர்வமான பாதையில் அழைத்துச் செல்லும். வாழ்த்துகள்!
நீங்கள் ப்ளாக் எழுதுவது இப்போதுதான் தெரிந்து கொண்டேன்,தொடர்ந்து படிக்கிறேன். followers போட்டால் உடனுக்குடன் படிக்க வசதியாய் இருக்குமே? பார்க்கலாம்
இளமுருகன்
நைஜீரியா
கருத்துரையிடுக