நம் குரல்

ஆண் உடல் - 2

பெண்ணின் பாலியல் மொழி
ஆணுடலும் பெண்ணுடலும் ஒன்றையொன்று புத்தாய்வு செய்வதற்கான நோக்குடனும் இவ்வுலகம் எந்தக் கணத்திலும் அலுப்பூட்டாதபடி இருப்பதற்கும் உருவானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அடிப்படையில் இரண்டு உடல்களும் வேறு வேறு என்றாலும் இரண்டின் தேவைகளும் நிரந்தரமானவையாகவும் சமமானதாகவும் இருக்கின்றன. இந்நிலையில் ஆண் உடல் என்பது பெண்ணுரிமைகளுக்கும் பெண் விடுதலைக்கும் எப்படி எதிரானதாக மாறுகிறது என்பதை அறிவது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாகவும் ஒவ்வொரு வரலாற்றையும் கொண்டு ஆண் உடல் பெண் உடலுக்கு எதிரான ஆதிக்கம் பெறுகிறது. இயற்கையின் இயல்புகள் படி ஒன்றுக்கொன்று நிரந்தர ஈர்ப்பைக் கொண்டிருக்கும் இவ்வுடல்கள் சமூகம் சார்ந்த அதிகாரங்களைத் தன் மீது சுமத்திக்கொள்ளும் போது தான் மற்றைய உடலுக்கு எதிரானதாக மாறுகிறது.


உடலுறவில் இரு உடல்களும் ஒரே விதமான விசையுடன் இயங்கினாலும் அவ்வமயம் எந்த ஓருடல் கருத்தியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளதோ அந்த உடல் மற்ற உடலை ஒடுக்குகிறது. அது ஆணுடையதாகவும் இருக்கலாம் பெண்ணுடையதாகவும் இருக்கலாம். நமது பொதுச்சிந்தனை என்பதே கூட ஆதிக்கமும் அதிகாரமும் மிக்க உடலை ஆண் உடல் என்றே பழகி வந்திருப்பதால் இவ்விடத்திலும் அதிகாரம் மிக்கதை ஆதிக்கம் மிக்கதை ஒடுக்கவிரும்புவதை ஆணுடல் என்றே கூறுகிறோம். திரைப்படங்களும் விளம்பர உலகமும் பத்திரிகை உலகமும் இத்தகைய ஆணுடலுக்கான இலக்கணங்களைத் தொடர்ந்து படைத்தளிப்பது இன்னும் இன்னும் இத்தகைய ஆணுடல் உருவாவதற்கான மன அவசத்தையே சமூகத்திற்கும் ஏன் பெண்களுக்குமே கூட வழங்கி வருகிறது. பெண்கள் அத்தகைய ஆண்களையே தமக்குப் பொருத்தமான ஆண்களாகவும் கற்பனை செய்து வருகின்றனர். ஆண் உடல் என்றால் அதிகாரத்தை மற்றவர் மீது செயல்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற கருத்திற்கு நமது பிடரிமனமும் பழகியிருக்கிறது. அதிகாரம் என்பதையே ஆண்மை என்கிறோம். ஆளுமையை அன்று. இவ்வாறு பெண்ணுடல் ஆணுடல் குழப்பம் சமூகத் தளத்தில் நிகழ்ந்து விட்ட நிலையில் ஆண் உடல் என்பதைத் தற்பொழுது எழுத்து மொழியில் எப்படி வரையறுப்பது?


அரசு அதிகாரம், போர் அரசியல் போன்றவற்றைப் போலவே சாதிய வன்கொடுமையை நிகழ்த்துவதற்கான போர்க்களமாக பெண்களின் யோனி என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டு வருவது நாம் அறியாதது அன்று. கவிஞர் தில்லையின் கவிதையான ‘எரிந்தும் நூராத தணலுக்குள் போய் வருவோம் ஒரு முறை.
போரிட்டு மடிந்த பெண்ணுடலை
யுத்த நிலங்களில்
தழுவிப் புணர இழுத்துவருகிறான்
இராணுவ வீரன்
அவனுடைய
ஆண்குறி
19.99 கிலோ வெடிமருந்து
நிரம்பிய குண்டின்
வேகத்தை ஒத்ததாயிருந்தது
பெண்ணுடலில்
மீதமிருந்த ஆடைகளுமில்லை....
அடி..... கொல்லு...... என்ற சத்தம்
மட்டுமே அச்சமூட்டியது
அடுத்த கணமொன்றில்
யோனி தின்று நாக்குத்தொங்க
நகைப்புக் காட்டுகிறான்
இராணுவ வீரன்
அரையும் குறையுமென
ஒரு வீடியோ காட்சி
இணையங்களில் புகைப்படங்கள் என
நீள்கிறது
பெண்ணுடல் மீதான
ஆணாதிக்க கொடுமைகள்.
எமது கண்கள் முன்னே
இரத்தம் கசிய சிதைத்த
மனம்பேரியையும்
கோணேஸ்வரியையும்
சாரதாம்பாளையும்
கிருசாந்தியையும் கடந்து
பேரினவாத யுத்தத்தில்
எத்தனை பெண்போராளிகளை
வெடிமருந்து நிரம்பிய
ஆண்குறிகள்
தின்று தீத்திருக்கும்?
அதை நம்பமறுக்கும்
ஆணாதிக்க அரசியல்
இணையங்களில் கேவலமாய்
நம்பரும் வட்டமும் வரைந்து
பெண்ணுடலை
ஆய்வு செய்யும் கொடுமைகள்
ஆணாதிக்க பிசாசுகளே
நீங்கள் யாராக இருந்தாலும்
எரிந்தும் நூராத தணலாய்
இன்னும் ஏன் இருக்கிறீர்கள்
தூஊ நூர்ந்து போங்கள். (நன்றி: ‘பெண்ணியம்இணையத்தளம்)
மேற்கண்ட கவிதையில் வெடிமருந்து நிரம்பிய ஆண்குறிகள் என்று, கருத்தியலை கவிதை வெளிக்குக் கொண்டு செல்லும் தன் மொழியால் ஆணுடலை வருணிக்கிறார் தில்லை. இவ்விடத்தில், நாம் சில விஷயங்களை நினைவு படுத்திக்கொள்வோம்.


‘பெண்ணின் உடல் பார்க்கப்பட்டு புனையப்பட்டு எழுதப்பட்ட அளவிற்கு ஆணின் உடல் எழுதப்படவில்லை. ஆணே பெண்ணின் உடலை எழுதுபவனாக இருந்திருக்கிறான். பெண் தனது உடலை எழுத நேர்ந்தது என்பதும் ஆணின் கண்காணிப்பில் இருந்த உடலை தனது உடலாக மீட்டெடுக்கும் உத்தியாகிறது. ஆணின் உடல் அதிகாரப் பிரயோகங்களுக்காகவே இருந்திருப்பதால் முலைகள், யோனி போன்ற பெண்ணுடல் உறுப்புகள் அதிகாரமிழந்து எதிர்நிலைகளை அடைகின்றன. ஆண் – பெண் உடல் கலந்த மயக்க நிலை கொண்ட அரவாணிகளின் உடல் நிலையென்பதும் அதிகார எதிர்நிலைகளுக்கு வெளியே நின்று நாம் மேற்கொண்டிருக்கும் விவாதத்திற்கு அழகு கூட்டுகிறது. அதாவது, ஆண் உடல், பெண் உடல் என்ற இரு எதிரெதிர் உடலே இருக்க முடியும் என்ற கருத்தைத் தகர்க்கிறது


எழுத்து மொழியில் ஆண் உடல் என்பது என்னவாக இருக்கிறது? ஆதிக்கக் கருத்தியலாகவோ அதிகாரம் மிக்க செயலாகவோ இருக்கிறதே அன்றி ஆணின் உடல் இயல்பான நிலையில் எழுதப்படவே இல்லை. அல்லது அத்தகைய உடலை அறிவதற்கான உரிமையையும் வாய்ப்பையும் பெண்கள் பெறவே இல்லை. ஆணின் உடல் என்பது ஆண்களின் கருத்தியலுக்குப் பின் ஒளிந்து நிற்பதாகவும் பெண்ணின் உடலை விலகி நின்று கண்காணிப்பதாகவும் இருக்கிறது என்றும் கொள்ளலாம். ஆணின் உடல் என்பதை அறியும் வாய்ப்பு நமக்கு இல்லாமல் இருப்பதும் பெண்ணொடுக்குமுறைகளில் ஒன்றே. அத்தகைய உடல் ஒன்று எழுத்தானால் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டியிருக்கும் என்பதே ஆதிக்கம் பயில்வோரின் அச்சமாக இருக்கும்.


இவ்விடம் இந்திய மண்ணில் பிறந்த நமது ஆண் உடல் பெண்ணுடல் வேறுபாடுகள் எங்கு உருவாகின்றன என்று பார்க்கலாம்.
2006 ம் ஆண்டில் கயர்லாஞ்சியில் நிகழ்ந்த சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. என்றாலும் ஒரு முறை இங்கே நினைவூட்டிக்கொள்ளலாம். ‘2006, செப்டம்பர் 29ம் நாள். ஆதிக்க சாதியினர் கயர்லாஞ்சியில் வசித்து வந்த ஒரே தலித் குடும்பமான பய்யாலால் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வன்கொடுமையை நிகழ்த்தினர். அவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் ஆடைகளையும் உருவி உடம்பில் துண்டு துணியுமின்றி அவர்களை ஊரின் மையப் பகுதிக்கு இழுத்து வந்து மிகக் கொடூரமாகத் தாக்கினர். ஆதிக்க சாதியினர் ஆண் பெண் பேதமின்றி, அனைவரும் தாக்குதலில் ஈடுபட்டனர். அண்ணனையும் தங்கை பிரியங்காவையும் உடலுறவு கொள்ளச் சொல்லி துன்புறுத்தினர். மறுத்த ரோஷனையும் சுதிரையும் மிகக் கடுமையாகத் தாக்கியதுடன் அவர்களின் பிறப்புறுப்பு மீது அடித்து உதைத்து வெட்டி எறிந்தனர். இந்தக் கொடுமை ஒரு புறம் நடக்க, இன்னொரு புறம் தாய் சுரேகாவையும் மகள் பிரியங்காவையும் அனேகமாக அத்தனை ஆதிக்க சாதி ஆண்களும் வன்புணர்ச்சி செய்தனர். அதுவும் போதாதென, இரு உயிரும் பிரியும் வரை மாடு விரட்டப் பயன்படும் தொரட்டிக் குச்சியையும் மூங்கில் குச்சியையும் இருவரின் பிறப்புறுப்பிற்குள்ளும் குத்தினர். அடிபட்டுக்கிடந்த ரோஷனையும் சுதிரையும் மேலே பலமுறை தூக்கியெறிந்து கீழே விழச்செய்தனர்நன்றி: பூங்குழலி, தலித் முரசு.


தோழியரே, பிறப்புறுப்புகளுக்கு இச்சமூகத்தில் வேறு வேறு நோக்கங்களும் இருக்கின்றன இல்லையா? அதற்கு ஆண் – பெண் பேதமில்லை இல்லையா? இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஆண், பெண் அவர்களின் உடல் மீது வன்கொடுமை நிகழ்த்திய ஆண், பெண் இவ்விரண்டு நிலைக்கும் இடையே எவ்விடத்தில் நமது உடல் தன்னை அடையாளம் காண்கிறது. தில்லையின் கவிதையில் குறிப்பிட்டுள்ள இராணுவ வீரன், பய்யாலால் குடும்பத்தின் மீது வன்புணர்வு நிகழ்த்திய ஆதிக்க சாதியினர் இவ்விரு வகையினரை வேண்டுமானால் ஆணாதிக்கக் கருத்தியலின் படிமங்கள் என்று கொள்ளலாம். ஆனால், ஓர் ஆதிக்க சாதிப் பெண்ணை விட அதிகாரமும் வாய்ப்புகளும் அற்ற ஆண் உடலொன்று இந்தியாவில் இருப்பதற்கு சாத்தியம் என்பதை நமது பெண்ணெழுத்து மொழி கண்டடைந்திருக்கிறதா? பெண்ணின் யோனி என்பது ஆணாதிக்க அதிகார மயக்கருத்துகள் இயங்குவதற்கான உடலாகவே கருதப்பட்டிருக்கிறது. ஆதிக்கம் மிக்க உடலை ஆண் உடலாகவும் ஒடுக்கப்படும் உடலைப் பெண்ணுடலாகவும் அவதானிக்கும் அறிவுசார் விவாத்த்திற்கு நம்மை நாம் எவ்வளவு தூரம் தயார் செய்து கொண்டிருக்கிறோம்? ஆக, மேற்குறிப்பிட்டது போன்ற சூழ்நிலையில் தன்னுடல் வழியாக, தன் உடலைக் காரணம் காட்டி ஆதிக்கத்தைச் செலுத்தும் பெண்ணுடலையும் ஆணுடலாகக் கொள்ளலாம் தானே?
(மீண்டும் எழுதுவேன்)
குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: