இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலில் இருந்து ஒரு நேர்காணல், சென்னையுடனான எனது தொடர்பு பற்றியும் உறவு பற்றியும். சில சமயங்களில் இம்மாதிரியான நேர்காணல்கள் சுவாரசியமான பகிர்தல்களைக் கொண்டிருக்கும். ஆனால் அது மிகவும் எதிர்பாராதது. எல்லா சமயங்களிலும் அப்படியே அமையும் என்றும் சொல்வதிற்கில்லை. நேர்காணல் செய்பவர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்களோ அதைப் பொருத்து விரிவாயும் நுட்பாயும் பதிவாகும். மேற்குறிப்பிட்ட நேர்காணல் அம்மாதிரியானதாக இல்லாமல் போனது.
என்றாலும் சென்னையுடனான என் உறவு கடந்த பத்து வருடங்களை மட்டுமே கொண்டது. நமது உடல் வேகமான மாற்றங்களுடன் வளர்ச்சியடையும் பருவத்துடன் தொடர்புடைய ஊர்களும் நகரங்களும் வீடுகளும் கட்டடங்களும் தாம் நமது புனைவுகளிலும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அவ்வாறு என் கவிதைப் பக்கங்களையும் ஆளுமையையும் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது சென்னை. தன்னுடலை ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்கப் புத்தாய்வு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதைப் போலவே தான் வாழும் நகரத்தையும். எந்தக் கணத்தில் உடலும் நகரமும் வேறு வேறாகக் கிளைக்கின்றன என்பதைக் கண்டறியாத ஒருமை உணர்வை அடைந்துவிடுகின்றன. பல சமயங்களில் இந்நகரத்தைப் பற்றி எழுதப் போய் அது என் உடலின் வெளியாகவும் உடலின் பண்பை எழுதப் போய் அது நகரமாகவும் முடிந்திருக்கிறது. அதாவது, எனது உடல் இரைச்சலுடைய ஒரு நகரம் என்றும் கடலுக்குள் எந்நேரமும் இறங்கக் காத்திருக்கும் நகரம் என்றும் இவை அர்த்தம் பெற்றிருக்கின்றன என் கவிதைகளில். உடலரசியலுக்கான கேள்விகளை நாள்தோறும் கிளறிக் கொண்டேயிருக்கும் தன்மைகளைக் கொண்டது, சென்னை. ஆணின் உடலும் பெண்ணின் உடலும் அவற்றின் தனித்தன்மைகளை இழந்து தட்டையாகும் தருணங்கள் நிறைய நிறைய. உடையில், உடல் மொழியில், இயக்க ஆற்றலில், இருப்பை நிறுவுவதற்கான போராட்டத்தில், படைப்பாக்க வெளிகளை நிர்மாணிப்பதில், அரசியல் மொழிதலில்... என ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே விதமான சவால்களை தட்டுகளில் பரிமாறுகிறது இந்நகரம்.
சென்னையில் ஒரு பெண் பலவகையான உறவுகளைக் கொண்டிருந்தாலும் தனியே வாழ இயலும். தனியே தன் ஆளுமையை வளர்த்தெடுத்துக் கொள்ள இயலும். விருப்பமில்லையென்றால் நகரத்தின் இரைச்சல்களுக்குள்ளும் இடிபாடுகளுக்குள்ளும் சென்று பதுங்கிக் கொள்ள இயலும். நாள் முழுக்க எந்த வேலையும் செய்யாமல் சென்னையெங்கும் சுற்றி வந்து இளைப்பாற இயலும். ஒரு கவிதைத் தொகுப்பு முழுவதையும் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் இயங்கும் சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் அமர்ந்து எழுத முடியும். பகலெல்லாம் தூங்கி இரவு முழுதும் பணியாற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்ற முடியும். எல்லா துயரங்களையும் கடலிடம் சென்று முறையிட முடியும். கோடையின் ஒவ்வொரு நாளையும் கடற்காற்றால் விசிறிவிட முடியும். ஆனால் இது மட்டுமே சென்னை அன்று. வட சென்னையை சென்னை என்னும் ஊர்ப்பெயர் தன் தோள்களில் சுமந்து வருவதே இல்லை. ஆனால் தென் சென்னையையும் மத்திய சென்னையையும் ஒளிரச்செய்வது வடசென்னை வாசிகளின் உழைப்பும் உற்பத்தி முறைகளும் தாம்.
சென்னையில் எவ்வளவு நாட்கள் பழகிய நண்பர்கள் என்றாலும் ஒவ்வொரு முறை அணுகும் போதும் அறிமுகமாகாத அந்நிய மனிதரைப் போலவே தோன்றுவர். விதையுடன் ஒட்டாத தோலாக மனிதர்கள் திரியும் நகரம் என்றும் சென்னையை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். சென்னையின் அரசியல் நகைச்சுவைக் காட்சிகள் நேரடியாக நம்மை வந்து தாக்குவதும் கூட சோகமானது. நடுநிசிகளில் இரயிலில் பயணிக்கும் பெண்கள் சாமான்யமானவர்கள் அல்ல என்று தோன்றினாலும் இதுவே தினப்படி வாழ்க்கை. இரவில் மேம்பாலங்களின் ஓரங்களில் அயர்ந்து உறங்கும் அழுக்கு மனிதர்களின் கற்பனையில் சென்னை என்பது என்னவாக இருக்கும் என்பதை அவர்களின் கற்பனைக்கே விட்டுவிடலாம்.
விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியிலிருந்து பெண்களுக்கான காலாண்டிதழ் ஒன்று, ‘பிடாரி’ எனும் பெயரில் வெளிவருகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் கு.உமாதேவியின் கவிதை இது:
உள்ளூர் அகதிகள்
கஷ்டத்த குத்தாத்தான் புளுவரன்னு அர்த்தம்
காத்தால ஊட்டாண்ட டக்குன்னு வந்துடு
கச்சிதமாக செவ்வியல் பேசும் தொண்டை நாடு
பறைமார்கள் துரைமார்களோடும்
துரைமார்கள் பார்ப்பனர்களோடும்
இனக்கலப்பு செய்த
குட்டி நாடு
மதராஸ் பட்டிணம்
பறையர் பட்டிணமென்றும்
மதராஸ் பட்டிணம்
பட்டம் சூடி திகழ்ந்தது
அது எங்கள் கந்தசாமி பாட்டன்
வெள்ளையர்களுக்கு
கறிசமைத்துக் கொடுத்த காலம்
- குட்டி ரேவதி
1 கருத்து:
//சென்னையில் எவ்வளவு நாட்கள் பழகிய நண்பர்கள் என்றாலும் ஒவ்வொரு முறை அணுகும் போதும் அறிமுகமாகாத அந்நிய மனிதரைப் போலவே தோன்றுவர்//.
உறவுகளே அப்படித்தான் ரேவதி!உங்களின் கட்டுரையே கூட ஆழ்ந்து அவதானித்தால் தான் புரிவது போலவும், பூடகமாகவும்.
கருத்துரையிடுக