நம் குரல்

நானும் அவளும் வேறுவேறு


இன்று முழுக்க கோடையின் வியர்வையைப் போல அவனைத் தொடர்ந்தேன். அவன் நெற்றியெங்கிலும் துளிர்த்த வியர்வையின் பொன்துகள்கள் என் கண்களில் விழுந்து உறுத்திக்கொண்டே இருந்தன. தன்மீதே கருணையற்ற உழைப்பின் வெக்கை யாக்கையெங்கும் சூரியனாய் எரிந்து கொண்டிருக்கும் இந்நாட்களில் அவன் எனக்கு விந்துவின் நுரையாய் அடையாளம் பெறுவதே இல்லை. அவளின் குடை அவளைப் போன்றோருக்கு மட்டுமே நிழல் விரிக்குமாம். குடை பிடிக்க ஆள் வைத்துக்கொண்ட அதிகாரமும் பெற்றவள். நிழலை விலை பேசும் வேட்கையுடையவளாயும் இருக்கலாம். என் கைகளுக்குக் குடை பிடித்த வரலாறு இல்லை என்பதால் அப்படியானதொரு பொத்தல் குடையையும் தைத்துத் தந்தவனே தான் என் குடையிலும் ஒண்டிக்கொண்டான். சின்ன சின்ன சூரியன்களை சுமக்கத் தெரிந்த வானமாகிய குடையும் மழையின் நாரிழைகளை வியர்வையாக்கிய கோடையும் என்னையும் அவனையும் ஒருங்கே தெருவுக்கு அழைத்து வந்தன. ஒவ்வொரு கோடையும் நடந்து கொண்டே இருக்கிறோம் குடையும் நிழலுமாய்.

குட்டி ரேவதி

8 கருத்துகள்:

பிரவீண் சொன்னது…

வணக்கம். பொதுவாகவே உங்களது கவிதைகள், சுழலும் பருவங்களின் ,
நிலவெளிகளின் பின்னணியில் மனித உடலின் அதிர்வுகளை பிரதிபலிப்பதை உணரமுடிகிறது.இதில் கோடையும் வெயிலும் ஒரு ஆளுமையாகவும் மனோ நிலையாகவும் படிமமாகவும் உங்களது பல கவிதைகளில் திரளுவதை அறிய முடிகிறது.இந்த கவிதையில் கோடையின் கருணையற்ற வெளியில் உடலின் எல்லைகளைத் தாண்டி நிகழும் ஒரு வேட்கையின் தீவிர நிலையைக் காண முடிகிறது.”இந்நாட்களில் அவன் எனக்கு விந்துவின் நுரையாய் அடையாளம் பெறுவதே இல்லை.” என்ற வரியில் கவிதையின் விழிகள் திறந்துகொள்வதாகப் படுகின்றன.எப்போதும், எல்லா புனைவுகளில் இருந்தும் அன்பை விடுதலை செய்வதை நோக்கி அமையும் தங்களின் கவிதைப் பயணத்திற்கு எனது வணக்கமும் நன்றியும் ....

பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ். சொன்னது…

வணக்கம். பொதுவாகவே உங்களது கவிதைகள், சுழலும் பருவங்களின் ,
நிலவெளிகளின் பின்னணியில் மனித உடலின் அதிர்வுகளை பிரதிபலிப்பதை உணரமுடிகிறது.இதில் கோடையும் வெயிலும் ஒரு ஆளுமையாகவும் மனோ நிலையாகவும் படிமமாகவும் உங்களது பல கவிதைகளில் திரளுவதை அறிய முடிகிறது.இந்த கவிதையில் கோடையின் கருணையற்ற வெளியில் உடலின் எல்லைகளைத் தாண்டி நிகழும் ஒரு வேட்கையின் தீவிர நிலையைக் காண முடிகிறது.”இந்நாட்களில் அவன் எனக்கு விந்துவின் நுரையாய் அடையாளம் பெறுவதே இல்லை.” என்ற வரியில் கவிதையின் விழிகள் திறந்துகொள்வதாகப் படுகின்றன.எப்போதும், எல்லா புனைவுகளில் இருந்தும் அன்பை விடுதலை செய்வதை நோக்கி அமையும் தங்களின் கவிதைப் பயணத்திற்கு எனது வணக்கமும் நன்றியும் .... பிரவீண்

குட்டி ரேவதி சொன்னது…

பிரவீண், மண்ணுண்ணி, ராஜாஜி, ரவிச்சந்திரன், அருள், தேவா அவர்களுக்கு,

கவிதை பற்றிய உங்களின் நுட்பமான பார்வை எனக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கிறது. கவிதை இயங்கும் வெளியைத் துல்லியமாக அவதானிப்பதற்கு தொடர்ந்து கவிதைகளை வாசிப்பவர்களாகவும், சமூகத்தில் கவிதையின் பங்கை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். உங்களின் திசை நோக்கி எனது நன்றிகள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள். ப்ளீஸ்!

குட்டி ரேவதி சொன்னது…

அன்புமிக்க சாந்தி லெட்சுமணன்,

உங்களுக்கு ஏற்கெனவே பதில் எழுத வேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஒரு மாதத்திற்கு மேல் இடைவெளி. நீங்கள் தொடர்ந்து என் வலைப்பதிவை வாசிப்பதும் தொடர்ந்து எழுத வற்புறுத்துவதும் உங்களுடனான என் அன்னியோன்யத்தை உறுதியாக்கியுள்ளது.

தொடர்ந்து எழுத இயலாததற்கு என்ன விதமான பதில் சொன்னாலும் அதில் நியாயமிருக்காது என்பதை அறிவேன்.

நிறைய வேலைப்பளு. இரண்டு திரைக்கதைகளுக்கும் இரண்டு ஆவணப்படங்களுக்குமான பணிகள் ஒரே சமயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் சாந்தி லெட்சுமணனுடன் பகிர்ந்து கொள்ள கவிதைகளும் வார்த்தைகளும் இல்லாமல் இல்லை.

தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். அப்படி எழுதுவதற்கான சூழலை நோக்கித் தான் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நகர்த்திக்கொண்டே இருக்கிறேன்.

உங்களைப் பற்றி எனக்கு எழுதுங்கள்!
kuttirevathi@gmail.com இது தான் என் மின்னஞ்சல் முகவரி!

நன்றி!

குட்டி ரேவதி

Shangaran சொன்னது…

உங்களின் எழுத்து நடை ரசிக்கும் படி உள்ளது.

அன்புடன்
சங்கரன்

தமிழ்நதி சொன்னது…

"குடை பிடிக்க ஆள் வைத்துக்கொண்ட அதிகாரமும் பெற்றவள்":)

ஒரு நகைப்புக்குறியால் புரியும்படியாகப் பேசிவிட முடிவது வியப்புத்தான் இல்லையா?

குட்டி ரேவதி சொன்னது…

சங்கரனுக்கு நன்றி!

தமிழ்நதி,
அந்தரங்கமும் அங்கதமும் விமர்சனமும்
தொனிக்கவே கவிதை இல்லையா?