நம் குரல்

உடலைப் பற்றிய குறிப்புகள் - 1



உடல் மேயும் கனவுகள்

கனவுகளை அவசரக்கோலத்தில் தின்னுகிறது, உடல். கனவுத்திரள்களைத் தொடர்ந்து உற்பத்தியும் செய்கிறது. அசீரணமாகும் கனவுகள் நாற்றமெடுக்கின்றன. கனவை உற்பத்தி செயும் வேலை உடலினது. பல சமயங்களில் பாதி வழியில் அறுபட்டுத் தொங்குகின்றன கனவுகள், முடிவு அறியாமல். இன்னொரு உடலைத் தன்னுடலுடன் கோர்க்கும் வழியறியாமல் வகையறியாமல். மூட்டைப் பூச்சிகளைப் போல அக்கனவுகள் உடலை மேயும் போது உடலைத் தனியே கழற்றிவைத்து விடலாம் போல. சில கனவுகள், பகலை இன்னும் வெளிச்சமாக்குவதாயும் சில பகலின் விழிப்புணர்வை இன்னும் தொல்லை செய்வதாயும் பிறக்கின்றன. கனவுகளின் வெளிகளுக்குள் நாகரிகத்தின் சிற்றிழையும் கிடையாது எனினும் மனித அறம் பிறழாமல் எல்லாமும் நிகழ்கின்றன. பெரும்பாலும் அவை வார்த்தைகளற்ற ஓவியமாய் நீர்மை கொண்டலைகின்றன. அவனையும் கனவு வடிவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என் உழைப்பு. தோற்றுப் போக விரும்பாது மீண்டும் மீண்டும் கற்பனை செய்து பார்க்கிறது அவன் அதரச்சுழிப்பை. சிறிய நேரப் புன்னகையுடன் அவன் தொலைதூரத்தில் மறைந்து போகிறான். நேற்றைய கனவை இன்றைய கனவு துவைக்கிறது. இன்றைய கனவை நாளைய கனவு மிதிக்கும். நீர்த்துளிகளாய் உடலெங்கும் முளைத்துக் கிடக்கும் கனவுகளைத் துடைக்கும் மரணத்தின் பூந்துண்டுக் கைகள். எண்ணத்தின் இருளடர்ந்த அறையிலோ, இதயத்தின் கனிந்த பார்வை துளைக்காத மூளையின் இயந்திரக்கலனிலோ அவை தம்மை மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்த்துக்கொள்கின்றன. அதன் இரும்புக் கைகள் என் கழுத்தை நெரிக்க, உயிர்பிழைக்கும் ஓலக் குரலெழுப்ப முயன்று சத்தம் வராத தொண்டையில் கனவுகளை அதக்கியபடி பதறி விழிக்கிறேன்.




குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: