நம் குரல்

அந்தத்தாய் ஒரு கொலை செய்தாள்
அந்தப் பெண்ணுக்கு முப்பது வயதுக்குக் குறைவாகத் தான் இருக்க வேண்டும். உடல் மெலிந்து இரத்த சோகையுடன் கண்களும் முகமும் வெளுத்து காணப்பட்டாள். நேற்று இரவு தான் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள். இனி அவளால் ஓரடியும் எடுத்து வைக்க முடியாது என்னும் அளவிற்கு அவள் தரையில் கிடந்து இழுபட்ட நைந்த துணியைப் போல் இருந்தாள். அவள் கண்கள், கல் வீசினால் கேட்கமுடியாத கிணற்றின் ஆழத்தில் தளும்பும் நீர்மேட்டை ஒத்திருந்தன. முகவாய் சட்டென்று கண்டுணர முடியாத ஒரு மிருகத்தை ஒத்திருந்தது போலும் தோன்றியது. அவள் தன் வாயைத்திறந்து பேசுவதற்கான சக்தியை சேமிக்கவே இன்னும் ஒரு வாரம் எடுக்கும். அவளுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சை முறையை அளிப்பதென்றால் கூட அவளுக்கு நிறைய ஊட்டச்சத்தையும் ஓய்வையும் அளிக்க வேண்டியிருக்கும். அந்த இடைவெளிக்குள் மீண்டும் ஒரு குழந்தை உருவாகிவிடக் கூடாதே என்ற கவலையை நகைப்பாய் வெளிப்படுத்தினார் அந்த முதுநிலை மருத்துவர். ஆகவே மாறாக அவளின் கணவனுக்கு அந்தச் சிகிச்சையை அளிக்கும்படிக் கட்டளையிட்டார்.
நான்கு தொடர் ஆண் குழந்தைகளுக்குப் பின் மூன்றாவது பெண் குழந்தை நேற்றையது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மறு நாளே ஈரத்துணிகளை அந்தக் குழந்தையின் உடல் முழுவதும் அடுக்கடுக்காய் சுற்றி வைக்க அது வலிப்பு வந்து நுரை தள்ளி இறந்தது. நேற்று பிறந்த பெண் குழந்தை எந்த வித பணத்தொகையையும் பெற்றுக் கொள்ளாமல் ஒரு பணக்காரக்குடும்பத்திற்குத் தத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. சில வரிகளாலான ஒப்பந்தம் போதுமானதாயிருந்தது இருவர் தரப்பிலும். ஒரு நாள் கூட நிறைவெய்தாத அக்குழந்தை என்னவிதமான உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும்? ஒவ்வொரு பிரசவத்திற்குப் பின்னும் மருத்துவர் அவளுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்திய போது அவள் பிடிவாதமாக மறுத்திருக்கிறாள். அந்த நாட்களில் அவளின் கணவன் வேறு பெண்ணைத் தேடிப் போய்விட்டால்? கணவனும் அதையே ஆமோதித்தான். அவளால் முன்பைப் போல தனக்குத் தினமும் திருப்தி அளிக்க முடியாமல் போய்விட்டால்?வறுமையும் அறியாமையும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. அந்தப் பெண் மீண்டும் மீண்டும் மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள். அவளை விட்டு விலகி வந்தேன். சேலத்தின் கோடையினும் அந்தப் பெண்ணின் உடலில் படர்ந்திருந்த தாங்கவியலா வேதனையும் பலவீனமும் மரணத்துக்கு மிக அருகில் இருந்த அவளின் நினைவுகளும் கொதிப்பைத் தந்தன. மரணத்தை ஏந்தி இருக்கும் கோப்பை போல அவள் உடல் காட்சியாகியது. பின் வெளியே வந்தேன். மனோ தனது நண்பர்களுடன் காத்திருந்தான். பல கிலோமீட்டர் தூரம் நானும் அவனும் எந்தவித முனைப்பும் இன்றி கால்கள் ஓய நடந்தது சேலத்தின் மாலைத் தெருக்களை அலங்கரித்தது போல இருந்தது. மேற்கிலிருந்து எழும்பி வந்த கருநீலப் புகையைப் போன்ற மேகவிரவல் மழையாய் இறங்காமலேயே போயிற்று. இரவு இன்னும் அதிகமாய் வெக்கையாக இருக்கிறது. எந்தவொரு மரத்தின் ஒற்றையிலையும் மூச்சுவிடும் தன் அசைவைக் காட்டாமல் இறுக்கமாய் இருக்கிறது. முழு நிலவு மேகங்களுக்கிடையே வேகமாய் ஊர்கிறது, இவையெல்லாம் தனக்கு மிகவும் பழக்கம் தான் என்பதைப் போல. ஒருவேளை அந்தத் தாய் தன் வாழ்க்கையின் அவலம் அந்தக் குழந்தையின் வழியாய் பிரதிபலிப்பதை விரும்பாமல் தான் அதைக் கொலையைச் செய்திருப்பாளோ?
குட்டி ரேவதி

1 கருத்து:

மங்கை சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்....:(