நம் குரல்

ஓர் உரைக்கான குறிப்புகள்



எனது ஓர் உரைக்கான குறிப்புகள் இப்படியான சிறு வாக்கியங்களாகவும் தெறிப்புகளாகவும் இருந்தன. பின்பு அவற்றை நீட்டிக்கொள்ளும் வாய்ப்பையும் சமயத்தையும் எடுத்துக்கொண்டேன். கன்னியாகுமரியில் நிகழ்ந்த ‘வேறொன்றுமில்லைகூட்டத்தில் கவிதை குறித்து ஆற்றிய உரைக்கானது இக்குறிப்புகள்.

கவிதை: எல்லா எனது கண்டுபிடிப்புகளும் நினைவுகளுக்கும் நினைவூட்டல்களுக்கும் எதிரான திசையில் பயணப்படுவது – நாவல், சிறுகதையைப் போலன்று – வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் முற்றிலும் வேறானதொரு சிறப்புத் திறனைக் கோரும் இலக்கிய வகை – நினைவுகள்/ஞாபகங்கள் பிரக்ஞைக்கு எதிராக நின்று பிரக்ஞையை மூடிக்கவிழ்த்துக் கொள்கின்றன – கவிதை என்பது அதிகப்பட்ச பிரக்ஞையை மொழியில் இயக்குவது – சுயநிழல் அற்றது.

என் நினைவுகள் தொன்மங்களாகும் வரை அப்படியே விட்டுவிடுகிறேன் - தொடர்ந்து இந்த உடலுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் பயணிக்க வேண்டியிருப்பது அலுப்பூட்டுகிறது - தொட்டியிலிருக்கும் ஒரு மீன்குஞ்சைப் போல - சொற்கள் உதவுமா இந்தத் தொட்டிக்குள்ளிருந்து வெளியே குதிக்க என்று முயல்கிறேன் – அறியேன் வெளியே மரணத்தைப் போன்ற ஒன்று காத்திருக்கிறது என்பதை – ஒரு பெண்ணும் ஆணும் புணர்வதைத் தவிர வேறென்னவெல்லாம் செய்யமுடியுமென்று யோசிக்கிறேன் – புணர்வதனூடாகவும்.

கவிஞன்: எந்த ஒரு புராணக்கதாபாத்திரமும் கற்பனையும் அவனுக்கு வெறுப்பூட்டும் சித்திரம் – இவையெல்லாவற்றிலும் உலவும் தத்துவக் கதாபாத்திரங்களை மீறிய கதாபத்திரங்களையே உருவாக்க விரும்புபவன் – தனது உடலோடு பிணையும் சித்தாந்தங்களால் தாம் இந்தக் கதாபாத்திரங்கள் உருப்பெற இயலும் என்று நம்புபவன் – நிகழ்வுகளிலிருந்து தப்பியோடும் கடவுளை கனவுகளிலும் கற்பனைகளிலும் கவிதைகளிலும் தடுமாறிவிழச் செய்யத்துடிப்பவன்.

கவிதை மொழி: புரியாததற்குக் காரணம் தனி மனித முற்போக்கான சிந்தனைகளுக்கும் சமூகத்தின் அடக்குமுறை வடிவங்களுக்கும் இடையே நிலவும் இடைவெளி – முதலில் அது சொற்களாகத் தான் வெளிப்படும் – வெகுசன பொழுது போக்கு வடிவங்களுக்கும் சமூகச்சிந்தனை வடிவங்களுக்கும் இடையே அல்லாடும் வடிவமாகிவிட்டதில் கவிதை மொழி தன் பலத்தை இழந்த நிலை.

கவிதை வடிவம்: அரசோ சமூகமோ தனிமனிதனோ... அதிகாரமயத்திற்கு எதிரான வடிவமாகப் பயன்படுவது – அதிகாரத்துடனான சமரசங்களைச் செய்து கொண்ட பிரக்ஞையே வடிவமாக மாறும் – அதற்குப் பின் எல்லா வார்த்தைகளும் அதிகாரத்தின் வேர்களால் தாம் உயிர்வாழும் – நடுவாந்திரமான ரசனையும் அரசியலும் கூட வடிவமாகிறது.

உடல்மொழி: எல்லோரையும் அவரவரின் தனித்த உடல் தான் இயக்குகிறது – சமூக இயந்திரங்கள் எல்லாம் இந்த உடலை தமது அதிகாரத்தையும் ஆணையையும் இயக்கிக் கொள்ளப் பயன்படுத்துகின்றன – இதுவே உடலுக்கு ஓர் இனவரைவியல் தன்மையைக் கொடுக்கிறது – ஒவ்வொரு உடலுக்குமான தனிச்சிறப்பையும் யதார்த்தத்தையும் மொழிவது – இதை முற்றிலுமாக எதிர்க்கிறது இந்து மதம்.




குட்டி ரேவதி

2 கருத்துகள்:

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown சொன்னது…

//வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் முற்றிலும் வேறானதொரு சிறப்புத் திறனைக் கோரும் இலக்கிய வகை //

அப்படியா? இல்லை, பல கவிஞர்கள் சொற்களை மாற்றியமைத்து கவிதை என்கிறார்கள்.....

//ஒரு பெண்ணும் ஆணும் புணர்வதைத் தவிர வேறென்னவெல்லாம் செய்யமுடியுமென்று யோசிக்கிறேன் – புணர்வதனூடாகவும்.//
பெண்ணும் ஆணும் அல்ல ஆணும் பெண்ணுமே புணர இயலும். ..

//அரசோ சமூகமோ தனிமனிதனோ... அதிகாரமயத்திற்கு எதிரான வடிவமாகப் பயன்படுவது – அதிகாரத்துடனான சமரசங்களைச் செய்து கொண்ட பிரக்ஞையே வடிவமாக மாறும்//
கவிஞர்களுடன் சமரசம் செய்ய அதிகார மையத்திற்கு என்ன தேவை வந்தது.... ? கவிஞர்களுக்கு வேண்டுமானால் ... அதிகார வர்க்கத்தை புகழ்ந்து அடிவருடி காரியங்களை சாதிக்க வேண்டி இருக்கலாம்....


//ஒவ்வொரு உடலுக்குமான தனிச்சிறப்பையும் யதார்த்தத்தையும் மொழிவது – இதை முற்றிலுமாக எதிர்க்கிறது இந்து மதம்.//

எல்லா மதமும் என்று சொன்னால் ... எல்லா சமுகமும் என்று சொன்னால் சரி... இந்து மதம் என்று மட்டும் சென்னால் ... உங்களின் பார்வையில் இருக்கும் இந்து மத எதிர்ப்பு மட்டும் பதிவாகிறது.. உண்மை பதிவாக்வில்லை....