நம் குரல்

கவிதை ஒரு மோகனமான கனவு

எனது ஐந்தாவது கவிதைத் தொகுப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். பூனையைப் போல அலையும் வெளிச்சம், முலைகள், தனிமையின் ஆயிரம் இறக்கைகள், உடலின் கதவு ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் வரும் இத்தொகுப்பு என்னை அதிகமும் வேலைவாங்குவதாக உணர்கிறேன். முதல் மூன்று தொகுப்புகளும் மூன்றாவது பதிப்பையும் நான்காவது தொகுப்பு இரண்டாவது பதிப்பையும் அடைந்துள்ளன. முதல் இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்கும் வெளியீட்டு விழாவை வைத்த நான் அதற்குள்ளாகவே தமிழக நவீன இலக்கியத் தளத்தில் நிகழும் வெளியீட்டு விழாக்களின் அரசியலையும் அதிலும் குறிப்பாக கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கான இடமின்மையையும் உணர்ந்திருந்தேன். அச்சுக்குப் பின் நேராக தொகுப்புகள் கடைகளுக்குச் சென்று விடும். அங்கிருந்து ஒவ்வொன்றாக வெளியேறும். எழுதித் தொகுப்பதுடன் சரி அதற்குப் பின் அந்நூலின் வியாபாரத் தளங்களில் என் அக்கறையைக் கிஞ்சித்தும் செலவிட்டதில்லை.

ஆனால் கவிதைகளைத் தொகுத்து நூலாக்குவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான வேலை. அதற்கான முழுப்பயிற்சியையும் எனது முந்தைய பதிப்பாளரும் நண்பருமான வேணுகோபால் அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதாவது என் மனோவெளி அது இயங்கும் தளத்தின் எல்லையை எட்டும் வரை என் கவிதைகளைத் தொகுப்பாய் ஆக்கும் எண்ணம் எனக்கு எழுவதே இல்லை. அத்தகைய எண்ணம் உருவாகும் வரையிலும் நான் தீவிரமாய்க் காத்திருக்கிறேன். பின்பு, அந்தக் காலகட்டக் கவிதைகளை மட்டுமே எடுத்து வேணுகோபால் அவர்களுடன் அமர்ந்து வரிசைப்படுத்துவேன். அவற்றினிடையே கோர்வையையும் அர்த்தப்பாட்டையும் நாவலின் உள்ளே ஓடும் சரடைப் போலவே மையமான கருத்து மற்றும் சந்த லயத்தைக் கண்டு அதன் படி அடுக்கிமுடிப்பேன். முன் பின்னாக கவிதைகளின் கால மைல்கள் மாறி விழும். இன்னும் தயவு தாட்சண்யமின்றி அந்த சிறப்பான லயத்தில் பொருந்தாத அர்த்தம் தொனிக்காத கவிதைகளைத் தூக்கி எறிந்து விடுவேன். அது வரை அத்தொகுப்பிற்கு இருவருமே தலைப்புகளை நியமித்திருக்க மாட்டோம். பின்பு அத்தொகுப்பின் மையமான கவிதையின் தலைப்பையோ அல்லது சாராம்சத்தின் சாணை தீட்டப்பட்ட சொற்கோர்வையையோ தொகுப்பின் தலைப்பாய்ச் சூடுவேன். இதில் எங்கள் இரண்டு பேருக்கும் வெகுநாளைய வாக்குவாதமும் கருத்துவேறுபாடும் முரண்பாடுகளும் ஓடிப்பின் ஓரிடத்தில் அதன் சுழலுக்குள் இருவரும் சிக்கித் தலைப்பை ஆமோதிப்போம்.

தொகுப்பு தயாரானதும் அதன் தலைப்பிற்குப் பொருத்தமான அட்டை வடிவமைப்பை என் நண்பர் சீனிவாசன் செய்து தருவார். தலைப்பின் கருப்பொருளுக்கான அக அழகியலின் புற வெளிப்பாட்டைச் சென்றடைவதற்கான உத்தி இது. இதற்குள்ளாக அந்தக் குறிப்பிட்ட தொகுப்பு என்பது என்னுள் ஒரு முழுவடிவினை எய்தி நீந்தத்தொடங்கி இருக்கும். அதன் மொழிஅசைவுகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டு நழுவிச்செல்லும் நாட்களின் மீதான மோகனத்துடன் அத்தொகுப்புப் பணிகள் நிறைவை எய்தும். ஆனால் இந்தத் தொகுப்பை ஆக்கும் பணியை நான் தனியே செய்யவேண்டியிருக்கிறது. கவிதைகளின் அந்தரங்க உலகத்தில் நான் மட்டிலுமே மீண்டும் மீண்டும் மூர்க்கமாய்ப் பயணிக்க வேண்டியிருக்கிறது. என்னிலிருந்து உருவானவை என்றாலும் என் மனோவெளியின் கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் நான் மிகுந்த எச்சரிக்கையான உணர்வுகளுடன் நுழைய வேண்டியிருக்கிறது. மாயாஜாலக் கதைகளில் வரும் குகைக்கதவுகள் மூடப்படும் வரையிலுமே குகைகளின் ரகசியங்களை அறிந்திடும் அவகாசத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் போன்ற சம்பவங்களைப் போல கவிதையைத் தொகுப்பதும் ஆகிவிடுகிறது எனக்கு.


குட்டி ரேவதி

குறிப்பு: கவிதை ஒரு மோகனமான கனவு என்பது புதுமைப்பித்தனின் வரி.

2 கருத்துகள்:

பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; அருள்,தேவா,ஜெயகணேஷ். சொன்னது…

ஐந்தாவது தொகுப்பு வெளிவர இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி..வரலாற்றின் வழி வந்த,மொழியின் தொடுகைகளால் புனைவேறிய, பண்பாட்டுக் கட்டமைவான இந்த மனித உடலை அதன் உயிரியல்புக்கும் ஆதித் தன்மைக்கும் குழந்தைமைக்கும் அழைத்து செல்லும் விடுதலையை உங்கள் கவிதைகள் சாத்தியமாக்குகின்றன.மேலும் நிலவு,மழை, இலை,மரம், பறவை முதலிய கவித்துவத்தின் நிரந்தர படிமங்கள் உங்கள் கவிதைக்கு தனித்துவமான அழகையும் அமைதியையும் தந்துள்ளன. நன்றி..சங்கர ராமசுப்பிரமணியன், லக்‌ஷ்மி மணிவண்ணன் , உங்கள் கவிதைகளில் அரசியலும் கவிதையும் முயங்கும் அற்புத ரசவாதம் நிச்சயமாக நமது சிறுபத்திரிகைக் கவிதை மரபில் புதிய எதிர்திசை.
உங்களது தொகுப்புத் தலைப்புகள் ஒரு படிமமாகவும் தொகுப்பின் சாரமான மனநிலையைச் சுட்டுவதாகவும் இருந்துள்ளன.என்ன தலைப்பு உத்தேசித்துள்ளீர்கள்.உடலின் கதவு தொகுப்பிற்கு பிரமிளின் ஓவியம் நல்ல தேர்வு.
//என் நினைவுகள் தொன்மங்களாகும் வரை அப்படியே விட்டுவிடுகிறேன்//--
என்ற வரி உங்கள் கவியுலகை அணுக ஒரு முக்கியத் திறப்பாக அமையும்..தொகுப்பின் தலைப்பு தேர்வு குறித்தும் இது சூசகமாக சொல்கிறதோ.. பிரவீண்

குட்டி ரேவதி சொன்னது…

நண்பர்களே,

கவிதைகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

பணி முடிந்ததும் தெரிவிக்கிறேன்.
தங்களின் அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றிகள்.