நம் குரல்

தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள்

19th Step திரைப்படத்திற்காகத் திரைக்கதை ஆக்கத்தில் ஈடுபடும் வாய்ப்பும் அனுபவமும் முதன்முதலாகக் கிடைத்த போதுதான் திரைத்துறைக்கான எனது ஆர்வத்தை வெளிப்படுத்த முடிந்தது. 1995 முதலே சர்வதேசத் திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு உலகத்திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்டிருந்த எனக்கு திரைப்படத்தில் கதை சொல்லல் திரைக்கதைக் கட்டமைப்பு குறித்த வேறுபட்ட பார்வைகளும் உருவாகிக்கொண்டே இருந்தன. சென்ற நூற்றாண்டில் மனிதனை மிகவும் அசரச்செய்த ஊடக வடிவம் சினிமாகவே இருந்திருக்கிறது. ஒரு பிரமாண்ட படமாக உருவெடுக்க இருந்த 19th Step சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் என் பணிகள் உதவி இயக்குநராகவும், திரைக்கதை ஆக்கத்தில் உதவியாளராகவும் பாடல் எழுதுபவராகவும் இருந்தன. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இரு பாடல்களும் பதிவு செய்யப்பட்டன. அப்பட வேலையின் போது எனக்கேற்பட்ட அனுபவங்கள் என்னை இன்று அத்துறையில் தொடர்ந்து ஈடுபடத்தூண்டியிருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்கள் குறித்த எனது விமர்சனப் பார்வைகள் கடுமையானவையாகவும் அவற்றைப் பற்றி பல சமயங்களில் விமர்சிப்பதே அபத்தம் என்றும் விலகியிருந்திருக்கிறேன். சினிமா என்பதன் பரிமாணமே தெரியாதவர்களும் திரைப்படங்களைப் பார்க்கவும் அணுகவும் ஊக்கமற்றவர்களுமே கதை வசனம் எழுதுபவர்களாக மாறியிருப்பது கூட இன்றைய தமிழ் சினிமாவின் பெருஞ்சோகம். வெற்றி பெற்ற திரை இயக்குநர்களாக மதிக்கப்படும் அமீர், பாலா போன்றவர்களின் சமூக அவதானிப்பில் இருக்கும் பொத்தல்களையும் திரையில் உணராமல் இருக்க முடியவில்லை. சீமான் போன்றவர்களின் படங்களில் ஒரே காட்சியில் வலமிருந்து இடம்வரை இடம்பெறும் தேவர், பெரியார், சேகுவேரா, அம்பேத்கர் படங்களையும் ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடின்றி இருப்பதையும் எண்ணி நொந்து கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. ஆயிரம் ஆயிரம் உதவி இயக்குநர்கள் மண்டியிருக்கும் கோடம்பாக்கத்தில் வெற்றி பெற்ற இயக்குநர்கள் கொண்டிருக்கும் சமூக அளவீடும் அக்கறையுமோ மிகவும் மேம்போக்கானவை, மேலோட்டமானவை. ஒரு காலத்தில் இவர்களும் உதவி இயக்குநர்களாய் கோலிவுட்டை வலம்வந்தவர்கள் தாம் என்றாலும் இயக்குநர்கள் ஆவதற்காகவே வந்தவர்கள். திரைப்படங்களை ஆக்குவதற்கு வந்தவர்கள் அல்ல.

அதாவது, சமூகத்தை ஊன்றிக் கவனித்தலும் உள்ளார்ந்த சமூக ஓட்டங்களைப் படம் பிடித்தலுமே திரைப்படம் என்பதின் பயன்பாடாக இருக்கமுடியும். கலைவெளிப்பாடாக இருக்கமுடியும். பாலா, சசி, அமீர் போன்றவர்களின் வெற்றிப்படங்களைப் பார்த்த பின்பு கலைப்படங்கள், வணிக ரீதியான படங்கள் என்ற எனது வகைப்பாட்டிற்கான வரையறைகள் குறித்த நீண்ட நாள் தேடல் முடிவுக்கு வந்தது. தங்களின் மனோவெளியில் சமூகவாசிப்பைத் தொடர்ந்து நிகழ்த்தாதவர்களால் திரைப்படங்களை கலை ஊடகமாகக் கையாள முடிவதில்லை. அதனால் ஏற்பட்ட கோழைத்தனமே தான் ஒரு கமெர்ஷியல் படம் எடுக்க விரும்புவதாகப் பறைசாற்றிக்கொள்வது. இவை இரண்டுமே வேறுவேறு படவகைகள் இல்லை. தங்கள் மூளையைக் கசக்காமல் மற்றவர்களின் பாக்கெட்டுகளைக் கசக்கி பணம் பிடுங்கும் வேலையை இன்றைய தமிழ்சினிமா தொழிற்சாலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அதாவது, சமூக அக்கறையுடன் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணும் இவர்கள் எவரும் சமூகத்தின் ஆழம் வரை தங்கள் புரிதல் எட்டுவதை அனுமதிப்பதில்லை. தங்கள் மூளை வளர்ச்சியைத் தாங்களே கத்தரித்துக்கொள்வார்கள் போல. இத்தகைய சமூகப்புரிதலுக்கான உழைப்பை தொடர்ந்த ஒரு பயிற்சியாக இவர்கள் மேற்கொள்ளாத நிலையில் இவர்களின் திரைப்படங்களும் என்ன தான் வெற்றிப் படங்களாயிருந்தாலும் சமூகச்சாரம் அற்ற படங்களாகவும் கலைப் படைப்பாகாதப் படங்களாகவும் இருக்கின்றன. சமூகத்தின் போக்கை ஆழமாக வாசிப்பவர்களின் பிரக்ஞை எப்போதும் தொட்டனைத்தூறும் மணற்கேணியாக இருந்து தாகமாற்றக் கூடியதாக இருக்கும். ஊனமுற்றவர்கள் மீதும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் அக்கறையுடனிருக்கிறேன் பார்! என்று வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து நிற்காது அல்லது, குடும்பம் மதம் சாதி அரசு போன்ற நிறுவனங்களின் அதிகார அடக்குமுறையையே திரைப்படங்கள் வழியாகச் வழிமொழியும் கைக்கூலி வேலையையும் செய்யாது. ஆனால், இவர்கள் சமூக அக்கறையுடைய படங்களை இயக்கப்போவதாக செயற்கையான கதைகளையும் கதை மாந்தர்களையும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான கருத்துகளையும் சித்தரிக்கின்றனர். அவை மக்களின் பொதுப்புத்திகளுக்கு நல்ல மேய்ச்சல் வெளியாகின்றன. தியேட்டர் அரங்கங்களுடன் தமது வெளிச்சத்தை முடித்துக் கொள்கின்றன. அடிப்படையில் இயக்குநர்களின் மனநிலையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்பது இப்போதைக்கேனும் தங்கள் பொதுப்புத்தியை கழற்றி வைத்து விடுவதே என்று தோன்றுகிறது.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: