நம் குரல்

பெண்ணுடல் ஓர் இயந்திரம் - 3



பெண்ணின் பாலியல் மொழி

பாலியல் சொற்கள் பெண்களுக்கு எங்குமே உதவுவதில்லை, ஆண்களுக்கு உதவும் அளவிற்குக் கூட. பெண்களை வர்ணிக்கவும் வசவிற்கும் பெண் பாலியல் சொற்களை ஆண்கள் பயன்படுத்தும் அளவிற்குக் கூட பெண்கள் மருத்துவரிடம் தங்கள் நோயைச் சொல்லவோ தோழிகளிடம் அல்லது பெற்ற அன்னையிடம் உடல் இன்னலைச் சொல்லவோ கூட பயன்படுத்துவதில்லை. அந்த அளவிற்கு இந்தச் சொற்கள் பாலியல் சுமையையும் அரசியல் பளுவையும் ஏற்கின்றன. பண்பாட்டுச் சுமை என்று சொல்ல முடியாது. பண்பாட்டு ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தச் சொற்கள் அள்ளித் தெளித்தாற் போலும் இலை மறை காயாகவும் விரவிக் கிடக்கின்றன. தனது பால்நிலையை அரசியல் பூர்வமாகவும் சமூகப் பூர்வமாகவும் அறிந்த எந்த ஒரு படைப்பாளியும் அந்தச் சொற்களை அதே அரசியல் மற்றும் சமூகத்தின் ஆழம் தெரியாமல் பயன்படுத்த மாட்டார்.


இன்றைய காலகட்டத்தில் பெண்ணின் உடல் என்பது முற்றிலும் ஓர் இயந்திரமே. மேலும் அதன் உறுப்புகளை ஓர் இயந்திரத்தின் பாகங்களைப் போலவே அணுகுவது என்பதை, நவீன படைப்பிலக்கியத்திலும் சரி அறிவியல் தளத்திலும் சரி ஒரு நேர்மையான போக்காகவும் நவீனப் பார்வையாகவும் தெரிவது தான் பெருத்த சோகம். உடலின் முழுமையைப் பேசிய மெய்யியல் அறிவுமரபின் தொடர்ச்சியில் வந்தவர்கள் நாம். நமது உடலின் தனிப்பட்ட பாலியல் சொல்லுக்கு எந்தத் தனித்த பாலியல் சுமையும் இல்லை. அந்தச் சொற்கள் உச்சரிக்கப்படும் பொழுது அவை தன்னுடன் இழுத்து வரும் அரசியல் சமூக பண்பாட்டு அர்த்தங்கள் எல்லாமும் தான் முக்கியமானவை. அத்தகைய சொற்கள் புணர்புழையாகவோ யோனிமடலாகவோ கருத்தரிப்பின் ஆதாரத் திணையாகவோ தாம் எழுச்சி கொள்கின்றன. சொற்களின் இணைப்பாகவே உச்சரிக்கப்படுகின்றன. இயந்திரத்தின் பாகங்களைப் பெயரிட்டு அழைப்பதைப் போல இச்சொற்களையும் உதிரிகளாக அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பது, ஒரு பெண் தன்னுடைய நோய் தீர்க்க ஒரு பெண் மருத்துவரை அணுகினாலும் சொல்ல இயலாத சமூகநிலை நீடிப்பதைத் தொடரவே செய்யும். அது பெண்ணினத்திற்கு எதிராகவே முடியும். பெண்ணினத்துக்கு எந்த வித நன்மையும் பயக்காது.


பெண்ணின் உடலை ஒரு பாலியல் பிரதியாகவே பார்க்கலாம். சமூகத்தின் எல்லா வகையான வன்மங்களையும் வக்கிரங்களையும் புதைத்து வைத்துக்கொள்ள, எழுதி வாசித்துக் கொள்ள, வெளிப்படுத்திக்கொள்ள என பெண்ணின் உடலை ஒரு பாலியல் பிரதியாக நீலப்படத்தின் ஒரு சுவரொட்டியாகவே மாற்றிக்கொள்கிறது இச்சமூகம். உறுப்பு ஒவ்வொன்றையும் அலங்காரப்படுத்திக்கொள்வதிலும் அதன் வழியாக உடல் மொழியை வெளிப்படுத்துவதிலும் கூட இதே வகை குரூரங்கள் தாம் வெளிப்படும் படியாக வற்புறுத்துகிறது. அவ்விதமாகத் தான் யோனியையும் முலையையும் கூட நமது சிந்தனையில் ஓர் உறுப்பாக இருத்துகிறதே அன்றி அதை ஒரு இயக்கத்திற்கானதாக ஆக்குவதில்லை.



இன்றைய தமிழ்ச்சமூகத்தில் பெண்ணின் பாலியல் உடல் என்று ஒன்றை மொழி வழியாக உருவாக்குவதில் ஈடுபட்டால் அது எத்தகையதாக இருக்கும்? தட்டையான மொழிப் பகிர்வுகள், செயற்கையாக ஊசியால் செலுத்தப்பட்ட மருத்துவச் சிந்தனைகளால் பெருத்த உடல் மொழிகள், உடலுக்கும் வாழ்க்கைக்கும் பொருந்தா அந்நிய பாணி உடைகள், பாலியலின் வளம் அற்ற பெண்ணுடல், அதனால் உருவான நோய்களால் பாலிமையைப் பற்றிய பேச இயலாமை, சப்பென்று இருக்கும் பாலிமை உணர்ச்சிகளால் ஆகிய உடல் அல்லது தீவிரமான பாலிமை என்பதை முரட்டுத் தனமான இயைபு அற்ற உணர்ச்சிகளால் வெளிப்படுத்துதல் என பெண்ணின் உடல் தீவிரமான பரிசோதனைகளுக்குப் பெண்களாலேயே உட்படுத்தப்படுவதாய்த் தான் இருக்குமோ என்ற சந்தேகமே தோன்றுகிறது.



எனது கணிப்பில் இன்றைய நூற்றாண்டில் பெண்கள் அதிகமும் இழந்திருப்பது அவர்களின் பாலிமைச் செழுமையைத்தான். பாலிமையை வெறுமனே பெண்மை என்ற ஒற்றைச் சொல்லால் வரையறுக்க முடியாது. இந்த உடலுக்கு ஊக்கமும் புத்துணர்வும் தரும் பிரத்யேகமான இயங்கியல் கொண்ட உறுப்புகளுடனான உறவை, பெண்கள் தரம் குறைந்த தமது ரசனைகளால் முறித்துக் கொண்டனரோ என்ற இரக்கம் மேலிடுகிறது. நிறைவாக, பெண்ணியச் சிந்தனை என்பதே பெண்ணுடலின் பால்வினை உறுப்புகளுடனான இயல்பான ஆரோக்கியமான மேம்பட்ட உறவுகளால் உருவாவதே என்பதை எப்படி நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்? இயற்கையின் புத்துருவாக்கத்தை மறுப்பதெல்லாம் அதிகாரமயமானதாக ஆதிக்கமயமானதாக ஆண்மையென்பதாகக் கருதப்படும்போது இயற்கையின் ஓரம்சமான பெண் பாலிமையை முழுமையான அளவில் புத்துருவாக்கம் செய்வது தானே பெண்ணியச் சிந்தனையாக இருக்க முடியும்? இயல்பான காம ஊக்கத்தை ஆரோக்கியமற்ற பால்வினை உறுப்புகளால் ஒரு பொழுதும் தர இயலாது என்பதைப் போலவே ஆரோக்கியமற்ற பாலியல் சொற்பயன்பாடுகளும் சமூகச்செயல்பாடுகளுக்கு இயல்பூக்கம் அற்றவையாகத் தான் இருக்கும்.



பாலியல் கவிதையின் மொழி என்பது தன்னுடலை அன்றாடம் பேணும் பெண்ணுடலின் பால்வினைச் சுரப்பியுடன் நேரடியான உணர்வுப் பகிர்வு கொண்டதாக இருக்கும். ஆண் – பெண் பொதுப் பாலிமைக்கான கூட்டுறவை மொழிபெயர்க்கும் சொற்களுடையதாக இருக்கும். ஆதிக்க அரசியல் பொதிந்த பாலிமைச் சொற்களின் அர்த்தங்களுக்கு புது விளக்கம் தரும். எத்தகைய மலிவான வசவில் பயன்படுத்தக் கூடிய பாலியல் சொல் என்றாலும் கவிதையில் அதற்கு இடமிருக்கிறது என்றாலும் அதே வினையை கவிதை வழியாக அது ஆற்ற முடியாது தானே!

(மீண்டும் எழுதுவேன்)

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: