நம் குரல்

பெண்ணின் பாலியல் மொழி



உடலும் பொருளும் - 1



இக்கட்டுரைத் தொடரை எழுதுவதற்கான நோக்கமென்பது பெண்ணெழுத்தின் பாலியல் மொழி என்பது இன்றைய நிலையில் எத்தகைய ஊக்கத்தையும் பொருத்தப்பாட்டையும் பெற்றிருக்கிறது என்பதை அறிவதாகும். நிறைய வகையான கருத்தியல் தளங்களைக் கடந்து வந்த தமிழக அரசியலில் பெண்ணிய பாலியல் மொழி எவ்வளவு தட்டையானதாக இருக்கமுடியும் என்பதற்கான உதாரணங்களையும் நாம் தற்பொழுது உணர்ந்தும் கண்டும் கொண்டிருக்கிறோம். அவ்வாறான தட்டையான மொழியை ஒரு பெண் படைப்பாளி கையாளும் போது, நுண் அரசியலை எடுத்தாள்வதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டியங்கும் நவீன தமிழ்க் கவிதையில் எந்தவிதமான அதிர்வையும் உருவாக்க முடியாமல் போகிறது என்பதையும் பேசாமல் இருக்க இயலாது.


உடல் மொழி என்பது உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி எழுதுவது மட்டுமே அன்று. உடல் உறுப்புகளை அவற்றின் உச்சமான வடிவில் உச்சரித்தாலும் அவை அர்த்தம் பெறாமல் போகும் அரசியலை சுமக்கத் தொடங்கிய காலகட்டத்தை நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பதும் அதற்கு உரிய விளக்கம் சொல்லும் பொறுப்பையும் ஏற்காத படைப்பாளிகளாகப் பெண்கள் இருப்பதும் சரியான பெண்ணியவாதத்தை முன்வைப்பதாக இருக்காது. ஏற்கெனவே நான் பலமுறை குறிப்பிட்டிருப்பது போல ‘பெண்என்ற ஒற்றை அடையாளம் மலிவாகி விட்டது இன்று. அதாவது சென்ற பத்தாண்டுகளில் தமிழக அரசியல், சமூக, இலக்கியத் தளங்களில் ஏற்பட்ட இயக்க மாறுபாடுகள் பெண்ணியக் கருத்தியலை வேறுவிதமாகச் செழுமையூட்டி இருக்கின்றன. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் எந்தப் பெண் என்றாலும் ‘பெண்என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடங்கக் கூடியவள் என்று வாதிடும் பெண்ணியம் காலாவதியாகி விட்டது. நானும் அத்தகைய ஒற்றை அடையாள நிலையிலிருந்து நகர்ந்தும் வளர்ந்தும் வந்து விட்டதுடன் மற்ற சமூகச் சூழலில் உள்ள பெண்களுக்கும் இதே மாற்றமும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளதை சமீப கால அரசியல் சமூக வளர்ச்சிகள் உறுதி செய்கின்றன.


கவிதை தனது ஒய்யாரக் கொண்டைகளுடனும் தாழம்பூக்களுடனும் ஆதிக்க சமூகத்தினரின் மடியில் இருந்த பொழுதெல்லாம் நவீன தமிழ்க் கவிதை தனது எலும்புகளால் முட்டி முட்டி உடைத்து நகர்ந்து வெளியே எம்பிக் குதித்திருக்கிறது. நவீன தமிழ்க் கவிதை என்பதன் முதல் எழுச்சியும் கருவும் அவ்வியக்கம் சார்ந்த கவிஞர்களே கூட தம் சுய சாதி அதிகார நிலைகளை எவ்வளவு எள்ளி நகையாடினார்கள் என்பதன் வழியும் தன் உடலை எந்த அளவுக்கு அதிகாரச் சிதைவுக்கு உள்ளாக்கினார்கள் என்பதன் வழியும் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மேலே குறிப்பிட்டிருப்பது ஆதிக்க சமூகத்திலிருந்து வந்த ஆண் கவிஞர்களின் முனைப்பு என்பதை முன்வைத்துத் தான். அப்பொழுது எழுத்து மொழி ஒடுக்கப்பட்டவருக்கு வந்து சேர்ந்திருக்க வாய்ப்பில்லை அது ஆண் என்றாலும் பெண் என்றாலும். ஆனால், ஒடுக்கப்பட்டவரின் குரலுக்கான செருமல்களையேனும் கொண்டிருந்த ஆதிக்க சமூக ஆண்படைப்பாளிகளின் பெயர்களைத்தான் இன்றைய நவீன தமிழ்க் கவிதை தன் வரலாற்றில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.



இந்நிலையில் பெண் கவிதை என்பது அவ்வரிசையில் இணைய வேறு உத்திகளையும் வடிவங்களையும் முனைப்புகளையும் கைக்கொண்டது. சாதி உணர்வைத் தன் நாடி நரம்பெல்லாம் பாய்ச்சலாகக் கொண்டிருக்கும் இந்தியாவில் பெண் கவிதையில் கையாளப்படும் உடல் கவிஞரின் உடல் என்றே வைத்துக் கொள்வோம். அது அக்கவிஞரின் குரல் என்றும் வைத்துக் கொள்வோம். இந்நிலையில் அந்த உடல் என்ன விதமான பாலியல் அங்கீகாரங்களுக்காக ஏங்குகிறது என்பதும் எந்த விதமான ஆண்களின் பாலியல் குற்றங்களை தனக்கான அதிகாரங்களாகவும் உரிமைகளாகவும் முன்வைக்கிறது என்பதும் இன்று நம்முன் தலையுயர்ந்து நிற்கும் கேள்விகள். அதாவது, அந்தக் கவிதையில் விளக்கப்படும் அர்த்தப்படும் பெண் கவிஞரின் உடல் சமூக பொருளாதார அரசியல் அதிகாரங்களைத் துய்த்த பின்பும் அதன் வழியாக பெறமாட்டாத பாலியல் அதிகாரத்தையே முன் வைக்கிறதா அல்லது எந்த அதிகாரத்தையும் இன்னும் பெற்றிடாத ஏன், கல்வி அல்லது எழுத்து மொழிக்கான வாய்ப்பைக் கூட பெற்றிராத ஒரு பெண்ணின் சார்பாய் நின்று அவள் உடலுக்கான அதிகாரங்களை அர்த்தப்படுத்தும் சொற்களுடன் உருவாகி வருகிறதா என்பது மிக மிக முக்கியம். இன்றைய நமது பெண்ணிய மைதானம் என்பது தாழ்த்தப்பட்ட பெண்கள், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்கள், பாலியல் நிலையை உறுதிப்படுத்தப் போராடும் அரவாணிகள் என்று முதல் முறையாக எழுத்தைத் தம் குரலாக்கும் பெண்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் பேசும் அரசியலுக்கான இயக்கங்களைக் கண்டடைந்திருக்கிறது. அவர்களின் மொழி அரசியலைப் புரிந்து கொள்வதும் அவற்றிற்கான அதிகார இழப்பைத் தனக்குத் தானே தன் உடலுக்குத் தந்து கொள்வதும் அல்லது அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர போராடுவதுமான மொழியைக் கவிதைகள் பாடுகின்றனவா என்பதும் நோக்கற்பாலது, தோழியரே? இந்தச் சவாலை ஏற்க பெண்ணியக் கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் தயாராக இருக்கிறோமா?



பாலியல் சுதந்திரமும் உரிமையும் அதிகாரமும் வேறு வேறு சமூகப் பின்னணியிலிருக்கும் பெண்களுக்கு வேறு வேறாக இருப்பதை உணர்கிறேன். அதாவது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஆண் கொண்டிருக்கும் மிகுதியான பாலியல் அதிகாரங்களையும் விடுதலைகளையும் கோரிப்பெறுவதாகவே உள்ளது. இத்தகைய சாதி அதிகாரம் மிக்கப் பெண்ணுக்கு தன்னையும் விட அதிகாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் பெண்ணின் பாலியல் உரிமை குறித்து சற்றும் கவலையோ அக்கறையோ இருப்பதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைச் சுகிப்பதற்கான உரிமையும் அதிகாரமும் மட்டுமே விடுதலை உணர்வு என்றாகி விடாது. அத்தகைய உரிமையும் அதிகாரமும் பெறாத கடைக்கோடிப் பெண்களுக்குக் கூட தன் எழுத்தும் அதன் பொருளும் எத்தகைய உரிமையையும் அதிகாரத்தையும் பேச முடியும் என்ற அக்கறையுடன் மலரும் எழுத்து சமூகத்திலிருந்து தனித்து நிற்காது. அத்தகைய அக்கறையுடைய எழுத்திற்கான சமூக எதிர்ப்பு என்பதும் விமர்சனப்பூர்வமானதே அன்றி அவதூறானதாக இருக்க முடியாது. அதுமட்டுமன்றி, பாலியல் விடுதலை என்பது தன்னுடலை பல ஆண்களுக்குக் கொடுப்பதற்கான விழைவும் அதற்கான உரிமையும் அதிகாரமுமே என்று ஓர் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண் எண்ணிக்கொண்டிருப்பதும் எந்த ஓர் அடிப்படையான சாதி அதிகாரமுமற்ற ஒரு பெண் பல நிலை அதிகாரங்களிலிருக்கும் ஆண்களிடமிருந்தும் அதாவது போலீஸ், அரசு, கலாசாரக் காவலர், கணவன், சமூகத்தின் பிற ஆண் அதிகாரிகள் போன்றோரின் வன்புணர்வுகளிலிருந்தும் தனது ஒற்றை உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபடும் யதார்த்தம் என்பதும் எவ்வளவு முரண்பாடாயிருக்கிறது பாருங்கள், தோழியரே!



எனது தோழி முத்தழகு கவிதைகள் எழுதுபவள். இன்னும் அவை தொகுப்பாக வெளிவரவில்லை. அவளைப் பற்றிச் சொல்வதென்றால் தன் உடலைத் தானே ஆள்பவள். காமம் சார்ந்த ஒழுக்கங்கள் உடையவள் அல்ல. ஆனால் தன் உடல் குறித்த ஒழுங்குகளும் அறங்களும் பயில்பவள். ஆணின் உடலுக்கும் பெண்ணின் உடலுக்கும் இடையே நிலவும் பாலியல் சமன்பாடுகளையும் அதிகார விதிகளையும் தகர்ப்பவள். தனது பாலியல் அதிகாரத்தை அடுத்தவர் மீது ஏவாதவள். பெண்ணின் பாலியல் நுகர்ச்சியையும் விடுதலையையும் ஒரே புள்ளியில் இணைப்பவள். உடலைத் தாவரப் புல்லாகவும் மாமிசப் பட்சிணியாகவும் மாற்றிப் பார்ப்பவள். ‘பெண்ணின் உடலுக்குள் ஆணின் உடலை உறங்க வைக்க இயலும். ஆணின் உடலுக்குள் பெண்ணின் உடல் அடங்காது என்பது இயற்கையின் கணிதம் என்பாள். எந்த ஆணுடன் என் உடல் இணைய விரும்புகிறது என்பதை வேறெந்த ஆணோ பெண்ணோ தீர்மானிக்க இயலாது என்பாள். சமூகத்தின் அடித்தளம் வரை அவள் உடல் ஈடுகொடுப்பதான புரிதலையும் அதற்கான மொழிகளையும் கொண்டவள். யோனி, குறி, முலைகள் போன்றவற்றிற்குச் சிறப்பான அர்த்தங்களையும் மொழி வடிவங்களையும் தருபவள். அவை நேரடியான சொற்களாக இல்லாமல் தற்கால அரசியல் அர்த்தங்களால் அவற்றின் வரைவடிவங்களைச் சொற்களாக்குபவள். உடல் மொழியும் பாலியல் மொழியும் வேறு வேறு என்பாள். உடல் மொழியினும் பாலியல் மொழி சமூக, அரசியலின் கவித்துவ வெளிகளைக் கண்டடையும் மொழி என்பாள். பாலியல் மொழி அரசியல் கருத்தியல்களைச் செரித்து உள்வாங்கிய உடலின் மொழி என்பாள். இது சரியாக இருக்கலாம்.


(மீண்டும் எழுதுவேன்)



குட்டி ரேவதி

4 கருத்துகள்:

adhiran சொன்னது…

பொட்டிலடிக்கும் ஆரம்பம். இன்னும் சற்று எளிய மொழியைப் பயன்படுத்தலாம் என்கிற தாழ்ந்த கருத்தை முன்வைக்கிறேன். முத்தழகு என்கிற எடுத்துக்காட்டும் அதற்கான உங்கள் கடைசி வரியான // இது சரியாக இருக்கலாம் // என்கிற multi posibiliy ஏற்புத்தனம் மும் தான் இதன் மொத்த அடித்தளமாய் இருக்க வேண்டும். நன்றி.

Shangaran சொன்னது…

நல்ல செறிவான பதிவு. மிகத் தீரமான‌ கருத்துக்கள்.
தொடர்ந்து எழுதவும்.

நன்றி,
சங்கரன்
http://shangaran.wordpress.com

மங்கை சொன்னது…

///பாலியல் சுதந்திரமும் .......வ்வளவு முரண்பாடாயிருக்கிறது பாருங்கள், தோழியரே!//

mmm...100% Unmai...ithaip patri naanum elutha vendum endru irundhean... ungal alavukku thelivaaaha elutha mudiyaaathu...nandri

tsekar சொன்னது…

கருத்து எவ்வளவு நன்றாக இருந்தாலும் -எளிய நடையில் சொன்னால் தான் -வெகு ஜன மக்களை உங்கள் கருத்து அடையும்!!!.


எளிய நடையில் சொல்லுங்கள் !

வாழ்த்துக்கள் !!!

த சேகர்