நம் குரல்

உயிர்நிலம் - 2


நீலவேணியின் இருபத்தியொராவது பிறந்த நாளன்று அசோக்கைச் சந்தித்தாள். மீனாவை தன் வீட்டில் கொண்டுவந்து விட வந்தவன் அவளுக்கும் மென்மையாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தான். அசோக் அவள் தோழி மீனாவின் சகோதரன். மழை கொட்டிக் கொண்டு இருந்த ஒரு நாள் மீனா தன் வீட்டிற்கு வந்த போது தவறவிட்டுச் சென்ற குறிப்பு நோட்டை எடுத்துச் செல்ல வந்திருந்தான். மழை வலுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அவனிடம் வீட்டிலிருந்த அனைவரும் பரவாயில்லை, மழை குறைந்ததும் போகலாம் என்று கூறியதும் தான் அவனுக்குப் பருக காபி தந்த போது அவன் தயக்கத்துடனும் அவசியமில்லையே என்ற பாவனையுடனும் வாங்கி வேகவேகமாகக் குடித்தான். இருப்புக் கொள்ளாமல் தவித்த அவனது இருப்பு எனக்கு மழையில் வெயிலாய் நீண்ட நாட்களுக்கு என்னுள் சுடர்விட்டுக் கொண்டே இருந்தது. பின்னாட்களில் அவனுக்குள் பற்றிக்கொண்ட காதலை அவன் பலமுறைகளில் தோழியின் நோட்டுப் புத்தகத்தில் கடிதங்களாக மறைத்து வைத்தும் அவள் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சைக்கிளில் திரும்புகையில் காத்திருந்து அவனும் சைக்கிளில் உடன் வந்தும் தன்னை அவளுக்குள் செலுத்திக்கொண்டே இருந்தான். நீலவேணி அதை ஏற்றுக்கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. அது இருவர் வீட்டிற்கும் தெரிந்தால் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.


அவர்கள் வாழ்ந்த அந்த ஊர் சிறு நகரத்தை ஒத்தது. எல்லோரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தனர். ஊர் சதுர வடிவில் சாலைகள் நான்கு முனைகளிலும் முட்டிக் கொள்வதுடன் இரு கரைகளிலும் வளைந்த முதுகுகளையுடைய மரங்களையும் கொண்டிருந்தன. சதுரத்தின் ஒரு மூலையில் அம்மன் கோயில் ஒன்று அதிக அளவில் பெண்கள் கூடுவதாயும் எப்போதும் இரைச்சலுடனும் இருக்கும். மற்ற பகுதிகளில் மரங்களில் வந்தமர்ந்து ஆக்கிரமிக்கும் பறவைகளின் இரைச்சலை தவிர பெரிய சப்தஙக்ளையோ கூச்சலையோ காணமுடியாது. மாலை விரைவிலேயே அந்த ஊருக்குள் வந்து விடுவது போல மரங்கள் அந்த ஊரை கூரையிட்டுக் கொண்டு இருக்கும். இளவயது பெண்கள் வேலை நிமித்தமும் படிப்பு நிமித்தமும் வெளியே செல்பவர்கள் விரைவில் திரும்பிவிடுவர்.


கல்லூரிப்படிப்புக்குப் பின் ஒரு சிறிய நிறுவனத்தில் உடை வடிவமைப்பாளராகச் சேர்ந்தாள் வேணி. அவளுக்கு அதுவே பிடித்தமான பணியாக இருந்தது. அதில் அவளே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஈடுபாடுடையவளாகி விட்டாள். பணியிலிருந்து வீடு திரும்ப எட்டு மணி ஆகிவிடும். ஊர்ச்சதுரம் இருட்டிலும் மரங்களின் அடர்ந்த கருப்பிலும் உறைந்து போய்விடும். அம்மாதிரியான மாலைகளை அசோக் தனதாக்கிக் கொண்டான். ஏதோ மரத்தின் பின்னிருந்து பாய்ந்து இழுத்து மறைவில் வைத்து முத்தமிடுவதில் அசுரனாய் இருந்தான். ஒவ்வொரு நாளும் அம்மாலையை நோக்கியே நகர்ந்தது. அல்லது மாலையில் தான் அந்த நாள் தொடங்குவதாக இருந்தது அவளுக்கு. அன்றைய இரவு முழுதும் அவள் பெற்ற முத்தம் என்ன வகை என்பதாயும் அதன் தித்திப்பு எவ்வளவு ஆழமானது என்பதாயும் படுக்கையில் புரண்டு புரண்டு யோசிக்க இனிமையானதாயும் உடலெங்கும் கவனமான பாதிப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. உடலின் வேறு பகுதிகளை தொடுவதற்கான அவனுடைய ஆவல் அங்குலம் அங்குலமாய் வளர்ந்து கொண்டிருந்தது என்பதை நீலா கவனிக்கத் தவறவில்லை. அசோக் மட்டும் தான் அவளை நீலா என்று அழைப்பான்.

காமத்துக்கும் காதலுக்குமான வேறுபாட்டை அறியாத பரவச வெளியாக மட்டுமே இருந்திருக்கிறது. திடீரென வெட்கை வீசும். எதிர்பாராத கணத்தில் மழையடிக்கும். எல்லோரின் தொடுகையிலிருந்தும் தூரத்தில் இருக்கும். பொதுவாக வீட்டில் யாருமே தொட்டுப் பேசுவதே இல்லை. வயது வந்த பெண்ணிடமிருந்து உலகமே விலகி இருப்பது போல தோன்றும். விடலையான மனம் கொண்ட உறவினர்கள் செய்யும் சில்மிஷங்கள் வீட்டினர் அறியாமல் தன் மீது பாயும் போதோ உடல் தன் மீது ஏதோ பறவையின் எச்சம் விழுந்து விட்ட எரிச்சலைக் கொடுக்கும். மற்ற படி உடலே சிந்தனையை முழுக்க முழுக்க மூடிக்கொள்ளும். உடல் அல்லாததை மனம் சிந்திப்பதே இல்லை எனும் அளவிற்கு இருந்த உடலை அசோக் அற்புதமான முன் தயாரிப்புகளுடன் தொட்டான். பரபரவென கூரையைப் பிரிப்பது போல அவசரப்படவில்லை. செடிக்கு நீரூற்றும்போது ஒவ்வொரு இலையையும் நீரால் கழுவி நீவி விடுவது போல் நடந்து கொண்டான். மனித கைகளின் ஆதரவான தொடுகையையே அறியாத உடல் அவன் பிடிகளில் தன் உணர்நரம்புகளை எல்லாம் வேகமாக நீட்டிக்கொண்டு வளர்ந்தன.

ஒரு ஞாயிறு மாலை அவன் அப்பா திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார் என்று வீட்டிற்கு வந்து கூறினாள் மீனாவிற்கும் வேணிக்கும் தோழியான குண்டு கனகா. வேணியும் தன் அப்பாவுடன் செய்தி அறிந்த பத்து நிமிடத்திற்குள் மீனாவின் வீட்டிற்குச் சென்றனர். மீனா வேணியைப் பார்த்ததுமே அவளின் இதயம் வெடிக்கும் படியாக ஓலமிட்டு அழுதாள். அவளுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ எனும்படியாக அவள் அழுவதும் மயங்கிவிழுவதுமாக இருந்தாள். மீனாவின் அம்மா தலைவிரி கோலமாக இறந்தவர் உடலைப் பார்த்தவாறே சுவர்சாய்ந்து இருந்தார். அசோக் வேணியின் கண்களைச் சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்தான். அவன் கண்கள் ஏற்கெனவே சிவந்த கரைகளை உடைய கலங்கிய குளமாக இருந்தது. வீட்டை இருள் அப்பிக் கொண்டது. உறவினர் வரும்வரை இறுதிச்சடங்குகளுக்குக் காத்திருக்க வேண்டும் என்று மீனாவின் தாய் மாமா முடிவெடுத்திருந்தார். வீட்டினை ஓலம் சுழன்று சுழன்று வந்தது. கூட்டம் வாயிலையும் சாலைகளையும் அடைத்துக் கொண்டது. மீனா வேணியின் கைப்பிடியை விடவே இல்லை. அவளின் நிலைமையைக் கண்டு வேணியின் கண்களில் அவளை அறியாமலேயே கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அங்கு பரவிய இறந்தவர் உடலிலிருந்து புறப்பட்ட மணமும் அறையில் கமழ்ந்த ஊதுவர்த்தி வாசனையும் சேர்ந்து அது ஒரு பழக்கமில்லாத வாசனையாகி வயிற்றைப் பிரட்டியது. மீனாவை அந்நிலையில் விட்டுவிட்டு நகர வேணிக்கு இயலவே இல்லை.


நடுநிசிக்குப் பின் நெருங்கிய சில உறவினர் மட்டுமே இறந்தவர் உடலைச் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். மீனா முழுதுமாய் மயங்கிப் போய்க் கிடந்தாள். மீனாவின் அத்தை ஒருவர், அவரை கரிசல் குளம் அத்தை என்றே அழைப்பார்கள். மீனாவின் தந்தை மீது மிகவும் பாசம் உடையவர். அவர் தான் பழைய நினைவுகளை எல்லாம் கூறிக் கூறிப் புரண்டழுதார். எல்லோரும் சேர்ந்து அவரைக் கட்டுப்படுத்தி வேறு ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

வீட்டின் பின்னாலிருந்த கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற வேணியை அசோக் இருளுக்குள்ளிருந்து கையை நீட்டி இழுத்தான். அவளை இறுக்கிக் கொண்டு கண்ணீரா எச்சிலா என்றறியாத அளவிற்கு அவள் முகத்தை ஈரமாக்கினான். வேணி அவன் நிலைமையால் எல்லாவற்றிற்கும் அவனை அனுமதித்தாள். பின் அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு இடப்புறமாய் திறந்த அறைக்குள் அவளை அழைத்துச் சென்று கதவுகளைத் தாழிட்டு அவளுடைய உடலுக்குத் தன்னை முழுதுமாகப் பரிச்சயப்படுத்தினான். மரணத்தின் அச்சமும் அது தந்த கலக்கமும் அவனை அதை செய்யத் தூண்டியிருக்கவேண்டும் என்று வேணி நினைத்தாள். வேணியும் மழைக்குத் திறந்து கொடுக்கும் காட்டைப் போல முழுமையாகத் தன் உடலை நனைய அனுமதித்தாள். அது காமமா, காதலின் வெளிப்பாடா, மரணத்துயரைப் பகிர்ந்து கொள்வதற்கான அனுசரனையா என்றெல்லாம் யோசித்தாலும் அது அவளின் அத்தகையதொரு முதல் அனுபவமாய் அவளுக்குள் பதிந்துவிட முற்றிலும் தகுதியானதாக இருந்தது.
*

1 கருத்து:

தமிழ்ப்பெண்கள் சொன்னது…

தமிழ்ப்பெண்கள் : பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை Center for Tamil Female Bloggers www.tamilpenkal.co.cc