முன்பதிவு எதுவும் செய்யாமல், அன்று ஓடிப்போய் பேருந்தைப் பிடித்தேன். கோடை விடுமுறை என்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. பொதுவாக, ஸ்பீக்கர்களில் பாடல்களை அலறவிடும் பேருந்துகளில் ஏறுவதில்லை. பயண அமைதியை விலை கொடுத்துக் கெடுத்துக்கொள்ளவேண்டாமே என்று நினைப்பேன்.
அந்தப்பேருந்தில், பழைய திரை இசைப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. குறிப்பாக, கேவி மகாதேவன், எம்எஸ் விசுவநாதன் ராமமூர்த்தி முற்காலப்பாடல்கள். வாகன ஓட்டுனர், தேர்ந்த இசை ரசனையுடன் பாடல்களைக் கோர்த்திருந்தார். ஒவ்வொரு பாடலின் வரிகளையும் இசையையும் அவை தரும் உணர்வுகளையும் ரசித்தபடியே, முந்தைய நாள் பெய்த மழையில் நிலம் வீசும் குளிர்க்காற்று பரவ, கேட்கக் கேட்க புதுமையாக இருந்தது. கருமையான இரவிற்கு, நட்சத்திரப்பந்தல் இட்டது போன்ற இரவு. எவ்வளவு நேரம் விழித்திருந்தேன் என்றே தெரியவில்லை.
ஏஆர் ரஹ்மானிடம் பணிபுரியத்தொடங்கிய பின்பு, வெளியாகும் அத்தனை பாடல்களையும் அப்பாடல்களில் பதிவாகும் புதிய பண்பாட்டுச்சொற்களை அறிவதற்காக ஒரு முறையேனும் கேட்டுவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறேன். மற்றபடி, காதுகளில் ஒயர்களைத் தொங்கவிட்டுப் பாடல்களைக் கேட்கும் வழக்கம் கிடையாது. கவிதைகள் வழியாக மொழியை நுகரமுடியும் அளவிற்குப் பாடல்களில் வாய்க்கவில்லை.
எங்கள் வீட்டில், கஜல் மற்றும் விதவிதமான நுட்பமான இசை கொண்ட பாடல்களைக் காலையிலேயே சீனி ஒலிபரப்பத்தொடங்கிவிடுவதால், அதுவே போதுமானதாக இருக்கிறது. தமயந்தியின் சிறுகதைகளில், ஆங்காங்கே இளையராஜாவின் பாடல்கள், மிகையின்றி கதாபாத்திரங்களின் குணாம்சங்களுடன் கலந்து வருவதை, தேநீர் அருந்தியபடியே புத்தகம் வாசிப்பதைப் போல ரசிக்கலாம்.
இந்தப்பேருந்து அனுபவம் தந்த உணர்வுகளையே, வங்காள மூலத்தில் மைத்ரேயி தேவி எழுதிய 'கொல்லப்படுவதில்லை' நாவலிலும் உணர்ந்தேன். மிக அருமையான பெண் மன ஓட்ட நாவல். மையமான பெண்கதாபாத்திரம், தாகூரின் மொத்தமான கவிதைகளையும் வாசித்து ரசித்து, எழுபது வயது தாகூருடன் உரையாடும் அனுபவம் பெற்றவள். அந்நாவலை வாசிக்கும் போது, அந்தப்பெண்ணிற்குப் போலவே, கடுந்தேனின் இயல்புடைய தாகூரின் கவிதைச் சொற்கள் நம் உடலில் ஊர்ந்தேறுவதை உணரமுடிகிறது.
இப்படியாக, கவிதைகள், பாடல்கள் உடலெங்கும் ஏறிப்படரும் அனுபவம், திரை இசைப்பாடல்கள் மிகையான போற்றுதலாலும், மிகை நுகர்தாலும், புறக்கணித்தலாலும் கிடைக்காமல் போகின்றனவோ என்று தோன்றுகிறது.
கர்நாடக இசை, ஆதிக்க இசையாக எல்லா கலைவெளிகளிலும் இடம் பிடிக்க முண்டியடித்தாலும், நம் தமிழ் திரை இசை தான், நம் எதிர்ப்பு இசை. காடுமேடெல்லாம், வெட்டவெளியெல்லாம், சேரிகளிலெல்லாம், மலைமுகடுகளிலெல்லாம் சளைக்காமல் கடந்து சென்று சேர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனாலென்ன, அகம் அல்லது புறம் என்ற பாங்கில் அவை இருமுனைப்பாடல்களாக இருக்கின்றன. அதன் வடிவ பலத்திற்கேற்ற்றாற் போல, நாம் இன்னும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஒன்றைத் தெளிவாக்கிக் கொள்கிறேன், கவிதைகள் வேறு, பாடல்கள் வேறு. கவிதைகளைப் பாடல்களாக்கும் முயற்சியும் வேறு.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக