நம் குரல்

'தி இமிடேஷன் கேம்' - கடிக்கப்பட்ட ஆப்பிளும் ஹோமோசெக்சுவலின் வரலாறும்!



இரண்டாம் உலகப்போரின் பொழுது, கணிதவியலாளன் ஆலன் டூரினின் அசாதாரண செயலை அவருடைய வாழ்க்கையினூடாகப் பார்க்கும் ஒரு படம். ஹோமோசெக்சுவலாக இருந்த ஆலன் டூரின், ஹிட்லர் போருக்குப் பயன்படுத்திய குறியீடுகளின் அர்த்தங்களை ஆராய்ந்து கண்டறிந்ததே, இந்தப்படத்தின் ஒட்டுமொத்தக்கதை.
கதையினூடாக, ஆலன் டூரினின் வாழ்வும், ஹோமோசெக்சுவலாக இருந்ததால் உண்டான போராட்டங்களும் சொல்லப்படுகிறது. அதேசமயம், இந்த நூற்றாண்டின் மனிதக்கண்டுபிடிப்புகளில் முதன்மையானதும் முக்கியத்துவம் உடையதுமான, கணினி உருவாக்கத்தில் ஆலன் டூரினினின் பங்கு முழுமையும் இந்தப்படத்தின் வழியாக உணரப்படுகிறது.

நாஜிக்களின் படைகள், பிரிட்டன் மீது எங்கு எவ்வாறு குண்டுகள் இடப்படவேண்டும் என்பதை, குறியீட்டுத்தகவலாகப் பரிமாறிக்கொண்டிருந்த பொழுது, அந்தக் குறியீடுகளைப் பிரித்து அறியும் சாதனையைச் செய்கிறார், டூரின். இந்தத்தனிமனிதரின் செயலால், இரண்டு வருட காலப் போர் குறைப்பு நிகழ்ந்ததாகவும், லட்சக் கணக்கான மக்களின் உயிரும் வாழ்வியலும் பாதுகாக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். ஒரு மனிதனின் அறிவு, வரலாற்றையும் அரசியலையும் நல்வழியில் புரட்டிப்போடமுடியும் என்பதற்குக் காலகாலமான ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது, ஆலன் டூரினின் வாழ்வு. ஒரு தனிமனிதனின் பாலியல் போராட்டமும், அறிவார்ந்த சவாலை எதிர்கொள்ளும் விதமும், இருபக்கக் கதைகளாக இப்படத்தில் விரிகின்றன.

அப்பொழுது, பிரிட்டனில், ஹோமோசெக்சுவலாக இருப்போர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஆலன் டூரினின் பாலியல்பின்புலம் அறியநேர்ந்த அரசு, அவருடைய சாதனைகளையும் மறந்து சிறை தண்டனை அல்லது, ஈஸ்ட்ரோஜென் என்ற பெண்ணய ஹார்மோனை உடலுக்குள் செலுத்துதல் என்ற இரண்டு தண்டனைகளைப் பரிசீலித்தபொழுது, ஆலன் டூரின் ஹார்மோனை உடலுக்குள் செலுத்தும் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
ஆனால், குறைந்த காலத்திலேயே அவர் நஞ்சூட்டப்பட்ட ஆப்பிளைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார் அல்லது, அது சயனைட் தடவப்பட்ட ஆப்பிளை தற்செயலாகக் கடிக்க நேர்ந்ததில் நிகழ்ந்த விபத்து என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. ராணி எலிசபெத், அவரது ஹோமோசெக்சுவல் அடையாளத்தைத் தண்டித்ததற்காக, மரணத்திற்குப் பின்பான அரசு மன்னிப்பை அறிவித்தார்.
இன்று புகழ்மிக்க, ஆப்பிள் மற்றும் ஐஃபோன்களின் லோகாவாக இருக்கும், 'கடிக்கப்பட்ட ஆப்பிள்' என்பதை ஸ்டீவன் ஜாப்ஸ், ஆலன் டூரின் இறக்கக் காரணமான அந்த நஞ்சூறிய ஆப்பிளிலிருந்து தான் எடுத்துக்கொண்டார் என்ற தகவல் உண்டு.

கணிதவியலாளன் ஆலன் டூரினின் வாழ்வு, ஒரு கவிஞனின் வாழ்வைப் போன்றே குறியீடுகளுடனும் வெளிப்படையான அரசியலுடனும், அறியாமைகளுடனும் இருப்பதாக உணர்ந்தேன். இந்தப்படத்தில், கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தில், சூழும் சமூகப் பாதிப்புகளை எல்லாம், தன் மார் மீதே வாங்கிக்கொள்ளும் ஒரு கலைஞனாக ஆலன் டூரின் நிமிர்ந்தெழும் பரவசத்தைப் படம் காணும்பொழுது உணரமுடியும்.
அதே சமயம், ஒரு சரியான சினிமா எப்படி தன் கலைவாய்ப்பை ஒரு சாக்காகக் கொண்டு, மனிதஇனத்தின் சாதனைகளையும் அவற்றின் துல்லியங்களையும் அழகாகப் பதிவுசெய்துவிடுகிறது என்பதையும் இப்படத்தில் உணரமுடிகிறது.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: