அப்பொழுதே எனக்கும் 'சீனிவாசன்' என்ற பெயருக்கும் ஆகாது. எட்டாம் வகுப்பு வரை என்னுடன் சீனிவாசன் என்றொரு பையன் படித்தான். இருவரும், திருச்சி, கைலாசபுரம் Y.W.C.A மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தோம். என் வாழ்வின் பொற்காலம் அந்தப் பள்ளியில் படித்த காலமே.
மாணவ, மாணவியருக்கிடையே பாரபட்சம் காட்டாத பள்ளி. என் தந்தையோ, தாயோ எதன்பொருட்டு ஆசிரியர்களைச் சந்தித்தாலும், அப்படியானதொரு மரியாதையுடன் நடத்தப்படுவர். சீனிவாசனுக்கும் எனக்கும் வகுப்பில் கடுமையான போட்டி இருக்கும். எவ்வளவு தான் முயன்றாலும், என்னைவிட சில மதிப்பெண்களேனும் அதிகமாகப் பெற்றுவிடுவான். வகுப்பில் முதலாவதாக, வந்துவிடுவான். படிப்பைத்தவிர, வேறு எதிலும் கவனத்தைச் சிதறடிக்காதவன்.
அந்தப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை தான் என்பதால், ஒன்பது, பத்தாம் வகுப்புக்கல்விக்கு நான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். அவனும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றுவிட்டான். இடையில், இருவரும் சந்திக்கும் வாய்ப்பே இல்லையென்றாலும், பத்தாம் வகுப்பில் அவனை முறியடிப்பது என்பதே என் இலக்காக இருந்தது.
பத்தாம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வந்து இருவரும், ஒரே நாளில், Y.W.C.A மெட்ரிக்குலேசன் பள்ளியின் தலைமை ஆசிரியை ரூபி கனகராஜுக்கு, இனிப்பு வழங்கச் சென்றிருந்தோம். மொத்த மதிப்பெண்ணில், அவனை விட ஒரு மதிப்பெண் நான் அதிகமாகப் பெற்றிருந்தேன்.
தற்செயலாக, இது நினைவிற்கு வருகிறது. இன்று இது பொருளற்ற ஒன்றாக இருந்தாலும், நினைத்துப்பார்க்க இனிமையாக இருக்கிறது. இந்த அனுபவத்தின் இனிமை, சீனிவாசனைப் பற்றியது என்பதை விட, அந்தக் குறிப்பிட்ட பள்ளிவெளியுடன் இணைத்து சீனிவாசனை நினைத்துப் பார்ப்பது தான்.
அந்தப்பள்ளியில் பெற்ற நிழலையும் குளுமையையும் நம்பிக்கையையும் உடைமை உணர்வையும், பின் எந்தக்கல்வி நிறுவனத்திலும் என்னால் உணரமுடிந்ததே இல்லை.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக