நம் குரல்

வீடு என்றால் அது மரத்தடியாக இருக்கவேண்டும்!




எங்கள் வீடு முதல் தளத்தில் உள்ளது என்றாலும் கிழக்கிலும் மேற்கிலும் சில மரங்கள் வீட்டின் சுவர்களைத் தழுவிக்கொண்டிருக்கின்றன. ஒரு மாமரம், இரு தென்னைமரங்கள், வில்வமரம், வேப்பமரம் என. பக்கத்துவீட்டில் இருக்கும் மரங்களும் எங்கள் வீட்டுச் சுவர்களில் சாய்ந்து கொள்கின்றன.

பத்துவருடங்களாக, சுற்றிச்சுற்றி இந்தப்பகுதியிலேயே நாங்கள் வீடு தேடி இருப்பதற்குக் காரணம், இங்கு போல் கோடம்பாக்கத்தின் வேறெங்கிலும் குறைந்த சுற்றில் அதிக மரங்கள் இல்லை. அத்தி, ஆல், அசோகமரம், மாமரங்கள், புங்கமரங்கள், வாகை மரங்கள். பன்னீர் மரங்கள், வாதாம் மரங்கள் இன்னும் பலவகையான காட்டுமரங்களும் கூட. குறுங்காடு போல் இருக்கும்.


ஐந்து வருடங்களுக்கு முன் இன்னும் அதிகமான மரங்கள் இருந்தன. அதிக மழையில் கால் ஊன்றி நிற்க முடியாத சிமெண்ட் தளங்களினால் அவை தலைசரிந்தன.
நாங்கள் கோடையின் வேதனையை முறையிடுவதை மறந்து இருக்க, இந்த மரங்களின் அன்பு தான் காரணம். வருடத்திற்கு வருடம், கோடை உக்கிரமெடுக்கிறது. அனலாகிறது. சில வேப்பங்கன்றுகளை நட்டாலே, வேகமான அதன் வளர்ச்சியால், இரண்டாவது வருடமே நாம் நிழலும் குளுமையும் பெறக்கூடும்.

ஆனால், மனிதனின் சிறப்பான குணம், குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பது. குற்றத்தைக் கண்டறிந்து நீக்குவது இல்லை என்பதை உணர, 'கோடை' எளிய முன்னுதாரணமாகிறது.
பகல் பொழுதுகளை வீட்டிற்குள் வேலை செய்தும் எழுதியும் படங்கள் பார்த்தும் கழித்து விட்டு, சந்திப்புகளையும் வெளிவேலைகளையும் மாலைகளில் வைத்துக் கொள்கிறோம்.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: