நம் குரல்

அரசியல்வாதி, சினிமாவாதி, இலக்கியவாதி

அரசியல்வாதி, சினிமாவாதி, இலக்கியவாதி என எல்லா வகையான கேரக்டர்களுக்கும் பொருத்தமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே நடிகன் 'வடிவேலு' என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா?
ஒவ்வொரு அரசியல், சினிமா, இலக்கிய ரியல் கேரக்டருக்கும், வடிவேலுவின் ஒவ்வொரு சினிமா கேரக்டர் பொருந்திப்போகிறது!
இதை, பப்ளிக்ல அவிழ்த்து விட்டா, எப்பவும் போல ' வடிவேலுக்கு'த்தான் செம அடி விழும். அதனால, அடக்கமா வச்சிக்குவோம். tongue emoticon
குட்ட

கேரளநாடும் தமிழ்நாடும்

கேரள நண்பர் ஒருவரிடம், நலம் விசாரிப்பாகத்தான் கேட்டேன்.
'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று.

'கேரள நாட்டை எப்படி தனியாகப் பிரிப்பது என்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன்.'
'செய்யுங்கள். எங்களுக்கும் வசதியாக இருக்கும்!' என்றேன்.
'இப்படியான மோடி ஆட்சி தொடர்ந்தால், நாம் விரும்புவதெல்லாம் சில வருடங்களில் சிரமமின்றித் தானாகவே நடந்துவிட வாய்ப்பிருக்கிறது!' என்றாரே பார்க்கலாம்.


குட்டி ரேவதி

தனிமை


தனிமையும் மகிழ்ச்சியும் ஒன்றாக வாழ்வதில்லை.
ஆனால், தனிமையும் நிம்மதியும் ஒன்றாகத்தான் 

உறங்குகின்றன.


காதல், தனிமையை விரும்புவதில்லை.
தனிமை, காதலை எதிர்ப்பதில்லை.
தனிமைக்கு நாவுகள் கிடையாது என்று நம்புகிறோம்.
நம்முடன் பேசுவோரின் நாவுகளை எல்லாம் கடன் வாங்கிவருகிறது, தனிமை.
தனிமைக்குக் கடிகார முட்கள் கிடையாது.
காலத்தின் தோழி, எப்பொழுதும் தனிமை தான்.
எலும்புகளில் உறைந்திருக்கிறது தனிமை.
எலும்புகளைத் தசையுடன் தின்னும் மண்ணாக வருகிறது காலம்.

குட்டி ரேவதி

நவீன இலக்கியவாதிகள் யார்?

இன்று காலை இரண்டு இலக்கியவாதிகள் என்னை அழைத்தார்கள்.
சீரியசான இலக்கிய நிகழ்வு ஒன்று வடிவமைக்கவேண்டும், பத்து இலக்கியவாதிகளின் பெயர்களைத் தரமுடியுமா என்று கேட்டார்கள்.

நான் சொன்ன பெயர்களையெல்லாம் கேட்டு,
'இவர்களை எல்லாம் எப்படி இலக்கியவாதிகள் என்று சொல்கிறீர்கள்?' என்று அதிர்ந்தார்கள்.

ஏன்,
ரவுடித்தனம் செய்பவர்கள், சாதிக்குறியீடுகள் - சடங்குகள் செய்பவர்கள், குரு - சீடர் வழிபாடு கொண்டவர்கள், விருதுகள் பெற்றவர்கள், தன் பெயரில் விருதுகள் வழங்குபவர்கள், வெளிநாடு சென்றவர்கள், தொலைக்காட்சியில் தொடர்ந்து பேசுபவர்கள், யாரையேனும் புகழ்ந்துகொண்டே இருப்பவர்கள் அல்லது ஒருவரையேனும் அவதூறுசெய்தவர்கள், வீடு புகுந்து அடித்தவர்கள், ஃபேஸ்புக்கில் 500 லைக்குகளுக்குக் குறையாதவர்கள், பொதுவெளியிலும் எழுத்திலும் பெண்களை இழிவாகப் பேசுபவர்கள், புத்தகக்கண்காட்சியின் முகப்பில் ஆளுயரத்தட்டி வைத்தவர்கள்.....
இவர்கள் பெயரைச் சொன்னால் தான் 'இலக்கியவாதி' என்று ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டதும்,
கப்-சிப் என்று பெயர்ப்பட்டியலை வாங்கிக்கொண்டு ஃபோனை வைத்துவிட்டார்கள்.

ஃபோனைத் துண்டிக்கும் முன், சென்னை வந்தால், உங்களை நேரில் சந்திக்கமுடியுமா என்றும் கேட்டுவைத்தார்கள்.
பயமில்லாதது போல் காட்டிக்கொண்டாலும், கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. tongue emoticon








கு





கு

வீடு என்றால் அது மரத்தடியாக இருக்கவேண்டும்!




எங்கள் வீடு முதல் தளத்தில் உள்ளது என்றாலும் கிழக்கிலும் மேற்கிலும் சில மரங்கள் வீட்டின் சுவர்களைத் தழுவிக்கொண்டிருக்கின்றன. ஒரு மாமரம், இரு தென்னைமரங்கள், வில்வமரம், வேப்பமரம் என. பக்கத்துவீட்டில் இருக்கும் மரங்களும் எங்கள் வீட்டுச் சுவர்களில் சாய்ந்து கொள்கின்றன.

பத்துவருடங்களாக, சுற்றிச்சுற்றி இந்தப்பகுதியிலேயே நாங்கள் வீடு தேடி இருப்பதற்குக் காரணம், இங்கு போல் கோடம்பாக்கத்தின் வேறெங்கிலும் குறைந்த சுற்றில் அதிக மரங்கள் இல்லை. அத்தி, ஆல், அசோகமரம், மாமரங்கள், புங்கமரங்கள், வாகை மரங்கள். பன்னீர் மரங்கள், வாதாம் மரங்கள் இன்னும் பலவகையான காட்டுமரங்களும் கூட. குறுங்காடு போல் இருக்கும்.


ஐந்து வருடங்களுக்கு முன் இன்னும் அதிகமான மரங்கள் இருந்தன. அதிக மழையில் கால் ஊன்றி நிற்க முடியாத சிமெண்ட் தளங்களினால் அவை தலைசரிந்தன.
நாங்கள் கோடையின் வேதனையை முறையிடுவதை மறந்து இருக்க, இந்த மரங்களின் அன்பு தான் காரணம். வருடத்திற்கு வருடம், கோடை உக்கிரமெடுக்கிறது. அனலாகிறது. சில வேப்பங்கன்றுகளை நட்டாலே, வேகமான அதன் வளர்ச்சியால், இரண்டாவது வருடமே நாம் நிழலும் குளுமையும் பெறக்கூடும்.

ஆனால், மனிதனின் சிறப்பான குணம், குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பது. குற்றத்தைக் கண்டறிந்து நீக்குவது இல்லை என்பதை உணர, 'கோடை' எளிய முன்னுதாரணமாகிறது.
பகல் பொழுதுகளை வீட்டிற்குள் வேலை செய்தும் எழுதியும் படங்கள் பார்த்தும் கழித்து விட்டு, சந்திப்புகளையும் வெளிவேலைகளையும் மாலைகளில் வைத்துக் கொள்கிறோம்.

குட்டி ரேவதி

புனைவு என்பது......

புனைவுகளுக்குப் பின் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

புனைவுகள் உண்மைகளை மெய்ப்பிப்பதற்காக, வருவதில்லை. பொய்களையும், கற்பனைகளையும் இட்டு நிரப்பவும் அவை முயற்சிப்பதில்லை. மனிதனாகக் கிடைத்த வாய்ப்பில், இந்தப் பிரபஞ்சத்தையும் சிந்தனைகளையும் எவ்வளவு தூரத்திற்கு நுரையீரல் வெடிக்க ஊதிப்பருக்கவைக்கமுடியும் என்பதில் தீவிரமாக இருக்கின்றன.

யதார்த்தத்தை அப்படியே கிழிப்பதிலோ, கீறல்கள் ஏற்படுத்துவதிலோ புனைவுகளுக்கு அக்கறை ஏதும் இல்லை. பட்டுத்துணியின் உராய்வில் சதை மீது பரவும் கணநேர மின்சாரம் போன்ற உணர்வைச் செயல்படுத்திச் செல்கின்றன. 
ஆகச்சிறந்த கதை என்று பிரசுரமாவதை எல்லாம், இதழ்களில் குப்பையாக்கிச் சாதிக்கும் தருணங்களில், மனித மனங்களின் உன்னதம் என்பவை யாதாக இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

உன்னதம் என்றால், புனிதம் மட்டுமே இல்லை. அழுக்கையும் வலியையும் சீழையும் துயரநொதியையும் எந்தத் திறனால், ஒரு தனிமனிதன் சரியாகச் செரித்துக்கொள்ளமுடிகிறது என்பதுவும் தான். உன்னதம் என்றால் புனிதம் இல்லை. உடலின் அகநோக்கங்கள், பிரபஞ்சத்தின் எல்லைகளையும், காலமுடிவுகளையும், மனிதவரையறைகளையும் மீறியவை. தன்னையே, தன் உடல் வழியாகக் கடந்து செல்ல முடியும் வீரம். 

எங்கே இப்படி ஒரு புனைவு எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

குட்டி ரேவதி

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை - இது, பட விமர்சனம் அன்று!




இப்படம் குறித்து விவாதிக்கவும் விரிவாக உரையாடவும் நிறைய அரசியல் விடயங்கள் உள்ளன. அதற்கு வேறு சந்தர்ப்பம் எடுத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
ஆனால், படம் தொடக்கம் முதல் முடிவு வரை எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது, பெண் இயக்கவாதியையும் உடன் செயல்படும் போராளிகளையும் காட்டியிருக்கும் விதம் தான்.

தமிழகம், பல வகையான சமூக அரசியல் இயக்கங்களையும், அதில் தீவிரமாக ஈடுபட்டு பல மாற்றங்களை சாத்தியப்படுத்திய பெண் செயல்வீரர்களையும் களம் கண்டது. அதற்கான, சமீபத்திய அனுபவமும், சாட்சிகளும் கூட நிறைய உண்டு.
இயக்கங்களுக்குத் தம் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த நிறைய பெண்களையும் அவர்களின் தீவிரத்தையும் நான் அறிவேன்.

இயக்குநர் ஜனநாதனே கூட, இவ்வியக்கங்களையும் போராளிகளையும் நன்கு அறிந்தவர்.
இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருக்கும், போராளிகளிடம் காணப்பட்ட உடல்மொழியும், உரையாடலும் அந்நியத்தன்மையையும் சங்கடத்தையும் கொடுத்துக்கொண்டே இருந்தது. கதையின், படத்தின் நோக்கத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தது.
தமிழக இயக்கங்களின் சமூக உழைப்பை, மக்களிடம், ஊடகங்களிடம் கொண்டு சேர்ப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது.

தமிழகத்தின் பெண் போராளிகள் எல்லோரும் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டார்களா, அவர்களின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.
சமூகப்பொறுப்புணர்வு என்பது வெறும் நடிப்பினால் மட்டுமே வெளிப்படுத்திவிடக்கூடிய ஒரு விடயமில்லை போல!

குட்டி ரேவதி

பத்தாம்வகுப்பும் சீனிவாசனும்!


அப்பொழுதே எனக்கும் 'சீனிவாசன்' என்ற பெயருக்கும் ஆகாது. எட்டாம் வகுப்பு வரை என்னுடன் சீனிவாசன் என்றொரு பையன் படித்தான். இருவரும், திருச்சி, கைலாசபுரம் Y.W.C.A மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தோம். என் வாழ்வின் பொற்காலம் அந்தப் பள்ளியில் படித்த காலமே.

மாணவ, மாணவியருக்கிடையே பாரபட்சம் காட்டாத பள்ளி. என் தந்தையோ, தாயோ எதன்பொருட்டு ஆசிரியர்களைச் சந்தித்தாலும், அப்படியானதொரு மரியாதையுடன் நடத்தப்படுவர். சீனிவாசனுக்கும் எனக்கும் வகுப்பில் கடுமையான போட்டி இருக்கும். எவ்வளவு தான் முயன்றாலும், என்னைவிட சில மதிப்பெண்களேனும் அதிகமாகப் பெற்றுவிடுவான். வகுப்பில் முதலாவதாக, வந்துவிடுவான். படிப்பைத்தவிர, வேறு எதிலும் கவனத்தைச் சிதறடிக்காதவன்.


அந்தப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை தான் என்பதால், ஒன்பது, பத்தாம் வகுப்புக்கல்விக்கு நான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். அவனும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றுவிட்டான். இடையில், இருவரும் சந்திக்கும் வாய்ப்பே இல்லையென்றாலும், பத்தாம் வகுப்பில் அவனை முறியடிப்பது என்பதே என் இலக்காக இருந்தது.

பத்தாம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வந்து இருவரும், ஒரே நாளில், Y.W.C.A மெட்ரிக்குலேசன் பள்ளியின் தலைமை ஆசிரியை ரூபி கனகராஜுக்கு, இனிப்பு வழங்கச் சென்றிருந்தோம். மொத்த மதிப்பெண்ணில், அவனை விட ஒரு மதிப்பெண் நான் அதிகமாகப் பெற்றிருந்தேன்.

தற்செயலாக, இது நினைவிற்கு வருகிறது. இன்று இது பொருளற்ற ஒன்றாக இருந்தாலும், நினைத்துப்பார்க்க இனிமையாக இருக்கிறது. இந்த அனுபவத்தின் இனிமை, சீனிவாசனைப் பற்றியது என்பதை விட, அந்தக் குறிப்பிட்ட பள்ளிவெளியுடன் இணைத்து சீனிவாசனை நினைத்துப் பார்ப்பது தான்.
அந்தப்பள்ளியில் பெற்ற நிழலையும் குளுமையையும் நம்பிக்கையையும் உடைமை உணர்வையும், பின் எந்தக்கல்வி நிறுவனத்திலும் என்னால் உணரமுடிந்ததே இல்லை.

குட்டி ரேவதி

அருண் ஷான்பாக்






அருண் ஷான்பாக் பற்றி நிறைய பதிவுகள். எல்லாவற்றையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே அழுகாச்சிப் பதிவுகள். கொஞ்சம் எரிச்சலாகவும்,  சங்கடமாகவும் கூட இருக்கிறது.

ஒரு பெண்மீதான பாலியல் வன்முறையை கூட, இன்னும் நாம் சரியாக அலச, ஆராயக் கற்றுக்கொள்ளவில்லை. 

பிரச்சனை இது தான்: தனி நபர் மீதான பிரச்சனையாக, தனி நபர், ஒரு பெண்ணின் மீது காட்டிய வன்முறையாக மட்டுமே பார்ப்பதால் தான், இது இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது.  ஒரு குறுகிய பார்வையுடனேயே முடிந்துபோகிறது.

இந்தப்பிரச்சனையை, நாளுக்கு நாள், மிகவும் தவறான இடத்தில் இருந்து கொண்டே பார்ப்பதால், இந்த வன்முறையும் நாளுக்கு நாள் அதிகமாகத் தான் போகிறது. 

இந்த சிஸ்டம் அப்படி. சாதிய ஏற்றத்தாழ்வுகளால் விளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வன்முறையை வெளிப்படுத்தும் எல்லா தூண்டுதல்களையும் கொண்டிருக்கிறது.

'எந்த வகையிலும் வன்முறை கூடாது!. ஏனெனில், இந்தியா என்பது அகிம்சை இந்தியா' இதுவே ஒரு புரட்டு. 

வன்முறை கூடாது, ஆனால், வன்மங்களை அமைதியான, திட்டமிட்ட நடவடிக்கைகள் வழியாகச் செயல்படுத்தலாமாம். இது, வன்முறையினும் கொடுமையான வன்முறை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

சிந்தனைகளில் வன்முறை இருக்கலாம், செயல்களில் இருக்கக்கூடாதாம். 

ஊதிப் பெரிதாக்கப்பட்ட வன்முறைகள் மீதே நம் பரிவும், அக்கறையும் குவிவது என்பது, மனிதனின் வாயூரிஸ்டிக் மனநிலையின் எதிரொளி தான். 

உண்மையில், அருண் ஷான்பாக்கை விட, 'வெஜிடபிள்களாக' இலட்சக்கணக்கான பெண்கள் இந்தியாவில் வாழ்ந்து மடிகின்றனர். 

அருண் ஷான்பாக்கின் விடயத்தில், அறம் மீறாமல் இருக்க அந்த மருத்துவமனை முயன்றது ஒரு சிறப்பான நிலைப்பாடு.

ஆனால், இது வெறுமனே ஆண் X பெண் பிரச்சனை என்று பார்ப்பது ஓயாதவரை, பிரச்சனைக்கும் தீர்வில்லை. இப்படி, 42 வருடங்கள் ஒரு பெண்ணை 'வெஜிடபிளாக' வைத்துக்கொள்வதும் தீர்வில்லை.


குட்டி ரேவதி

“பார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது!” மு.வி.நந்தினி

நேபாள பூகம்பம்

திருச்சி வந்திருக்கிறேன். அம்மா முழு நேரமும் வானொலியின் அருகில் அமர்ந்து செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நேபாளம் குறித்த செய்திகளை, கவலையுடனும் அக்கறையுடனும் கேட்கிறார்.
தற்செயலாகத் தான் நாம் எல்லோரும் உயிருடனும், நம் உறவுகளுடனும் இருக்கிறோம் என்பதை உணரநேரும்போது இப்பூமியில் நம் வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையும் புரிகிறது.
நேபாளத்தின் சில வீடியோ பதிவுகளைக் காண நேரிட்டது. இந்தப்பூமியில், இந்தக்காலக்கட்டத்தில் வாழ, மனிதனுக்கு அசாதாரணமான துணிவு வேண்டும் என்று தோன்றுகிறது.
இதையெல்லாம் அறிந்தாலும், மனிதன் மாறுவதாக இல்லை. இலட்சோப இலட்ச வருடங்கள் மனிதனை ஆட்கொண்ட, அடிமைகொண்ட மனித மரபணுக்களின் குரல்களைப் பரிசீலிக்க அவனால் முடிவதே இல்லை.
தன்னைத் தவிர எதுவுமே முக்கியமில்லை என்று நம்புவது இந்தக்காலத்தில் எவ்வளவு முட்டாள்தனமான நம்பிக்கை என்றும் தோன்றுகிறது.

குட்டி ரேவதி

காற்றுவெளிப் பாடல்கள்


முன்பதிவு எதுவும் செய்யாமல், அன்று ஓடிப்போய் பேருந்தைப் பிடித்தேன். கோடை விடுமுறை என்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. பொதுவாக, ஸ்பீக்கர்களில் பாடல்களை அலறவிடும் பேருந்துகளில் ஏறுவதில்லை. பயண அமைதியை விலை கொடுத்துக் கெடுத்துக்கொள்ளவேண்டாமே என்று நினைப்பேன்.
அந்தப்பேருந்தில், பழைய திரை இசைப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. குறிப்பாக, கேவி மகாதேவன், எம்எஸ் விசுவநாதன் ராமமூர்த்தி முற்காலப்பாடல்கள். வாகன ஓட்டுனர், தேர்ந்த இசை ரசனையுடன் பாடல்களைக் கோர்த்திருந்தார். ஒவ்வொரு பாடலின் வரிகளையும் இசையையும் அவை தரும் உணர்வுகளையும் ரசித்தபடியே, முந்தைய நாள் பெய்த மழையில் நிலம் வீசும் குளிர்க்காற்று பரவ, கேட்கக் கேட்க புதுமையாக இருந்தது. கருமையான இரவிற்கு, நட்சத்திரப்பந்தல் இட்டது போன்ற இரவு. எவ்வளவு நேரம் விழித்திருந்தேன் என்றே தெரியவில்லை.
ஏஆர் ரஹ்மானிடம் பணிபுரியத்தொடங்கிய பின்பு, வெளியாகும் அத்தனை பாடல்களையும் அப்பாடல்களில் பதிவாகும் புதிய பண்பாட்டுச்சொற்களை அறிவதற்காக ஒரு முறையேனும் கேட்டுவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறேன். மற்றபடி, காதுகளில் ஒயர்களைத் தொங்கவிட்டுப் பாடல்களைக் கேட்கும் வழக்கம் கிடையாது. கவிதைகள் வழியாக மொழியை நுகரமுடியும் அளவிற்குப் பாடல்களில் வாய்க்கவில்லை.
எங்கள் வீட்டில், கஜல் மற்றும் விதவிதமான நுட்பமான இசை கொண்ட பாடல்களைக் காலையிலேயே சீனி ஒலிபரப்பத்தொடங்கிவிடுவதால், அதுவே போதுமானதாக இருக்கிறது. தமயந்தியின் சிறுகதைகளில், ஆங்காங்கே இளையராஜாவின் பாடல்கள், மிகையின்றி கதாபாத்திரங்களின் குணாம்சங்களுடன் கலந்து வருவதை, தேநீர் அருந்தியபடியே புத்தகம் வாசிப்பதைப் போல ரசிக்கலாம்.
இந்தப்பேருந்து அனுபவம் தந்த உணர்வுகளையே, வங்காள மூலத்தில் மைத்ரேயி தேவி எழுதிய 'கொல்லப்படுவதில்லை' நாவலிலும் உணர்ந்தேன். மிக அருமையான பெண் மன ஓட்ட நாவல். மையமான பெண்கதாபாத்திரம், தாகூரின் மொத்தமான கவிதைகளையும் வாசித்து ரசித்து, எழுபது வயது தாகூருடன் உரையாடும் அனுபவம் பெற்றவள். அந்நாவலை வாசிக்கும் போது, அந்தப்பெண்ணிற்குப் போலவே, கடுந்தேனின் இயல்புடைய தாகூரின் கவிதைச் சொற்கள் நம் உடலில் ஊர்ந்தேறுவதை உணரமுடிகிறது.
இப்படியாக, கவிதைகள், பாடல்கள் உடலெங்கும் ஏறிப்படரும் அனுபவம், திரை இசைப்பாடல்கள் மிகையான போற்றுதலாலும், மிகை நுகர்தாலும், புறக்கணித்தலாலும் கிடைக்காமல் போகின்றனவோ என்று தோன்றுகிறது.
கர்நாடக இசை, ஆதிக்க இசையாக எல்லா கலைவெளிகளிலும் இடம் பிடிக்க முண்டியடித்தாலும், நம் தமிழ் திரை இசை தான், நம் எதிர்ப்பு இசை. காடுமேடெல்லாம், வெட்டவெளியெல்லாம், சேரிகளிலெல்லாம், மலைமுகடுகளிலெல்லாம் சளைக்காமல் கடந்து சென்று சேர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனாலென்ன, அகம் அல்லது புறம் என்ற பாங்கில் அவை இருமுனைப்பாடல்களாக இருக்கின்றன. அதன் வடிவ பலத்திற்கேற்ற்றாற் போல, நாம் இன்னும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஒன்றைத் தெளிவாக்கிக் கொள்கிறேன், கவிதைகள் வேறு, பாடல்கள் வேறு. கவிதைகளைப் பாடல்களாக்கும் முயற்சியும் வேறு.


குட்டி ரேவதி